
நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி
இந்தியாவின் சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் முதலானோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஓர் அடிப்படையான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. நவீன காலங்களில் இந்தியர்களை இணைப்பது எப்படி? அவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய, ஒப்பான அறங்கள், கடமைகள் ஆகியவற்றை எப்படிக் கண்டடைவது… அதன்மூலம் இந்தியர்களுக்கான பொதுவாழ்க்கையை எப்படி வரையறுப்பது ஆகியவையே அவர்கள் முன்னால் சவால்களாக எழுந்து நின்றன.
இந்தச் சவால்கள் நம்முடைய அறிவியக்க, அரசியல் வரலாற்றின் ஆழமான, பரந்துவிரிந்த தேடல்களாக இருந்தன. எனினும், இந்தியர்களை ஒரு பொதுவான அடையாளத்துக்குள் ஒன்றுசேர்க்கும் தேசியத்தின் கதைக்குள் இந்தச் சவால்மிகுந்த முயற்சிகள் அடங்கிவிட்டன. ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தேசியத்தின் தேடல், முற்றுப்புள்ளியை நெருங்கியதும், வேறுசில கேள்விகள் நம்மைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தன. அரசியல் வாழ்க்கை எனப்படும் பொதுவாழ்க்கையை எப்படி உருவாக்குவது, எப்படி அறம் சார்ந்த அரசியல் வாழ்க்கையைத் தோற்றுவிப்பது, எப்படி அதை நிலைநிறுத்துவது என்கிற அடிப்படையான, இயல்பான கேள்விகள் எழும்பின. இந்தக் கேள்விகளின் வரலாற்றை நாம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.
நாம் தாகூர், காந்தி, நேரு ஆகியோரின் சுயவிமர்சனங்களில், அவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட பெரும் விவாதங்களில், ஒரு நவீன அறநெறிக்கான தேடலைக் காண முடிகிறது. (இந்தப் பட்டியலில் எண்ணற்ற தலைவர்களின் கருத்துகளைச் சேர்த்துப் பேச முடியும். நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின் கருத்துகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.) ஓர் அரசாங்கத்தின் குடிமக்களாகப் பொதுவாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் இந்தியர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்ட, தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் இந்தத் தேடல்களை மேற்கொண்டார்கள்; இந்த அரசியலோடு தொடர்புடைய பொதுவாழ்க்கைக்கான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிய முயன்றார்கள்; பொதுவாழ்வில் பகுத்தறிவுக்கான ஒரு மரபை அவர்கள் உருவாக்கினார்கள்; இந்த மரபில் அறநெறிகள், ஒழுக்கங்களுக்கான ஓர் அறிவுவெளியை உருவாக்கினார்கள். இப்படிப்பட்ட அறங்கள், ஒழுக்கங்களால் உண்டாகும் அரசியல் தேர்வுகள்குறித்து விவாதித்தார்கள்; மறு ஆய்வு செய்தார்கள்; முடிவெடுத்தார்கள். இந்த விவாதங்களின் மிகச்சிறந்த தருணங்களில் இதன் தேசியம், தேசியவாத சிந்தனையின் குறுகிய எல்லைகளைக் கடந்தன. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த விவாதங்களை ஏன் நினைவுகூர வேண்டும்? அவர்களின் அறிவார்ந்த லட்சியங்கள், குறுகிய மனப்பான்மையோடு மட்டும் இந்திய தேசியத்தையோ, அதன் அடையாளத்தையோ அணுகவில்லை என்பதைப் புலப்படுத்துவது அவசியமாகிறது. அவர்கள் பெருங்கேள்விகளை எழுப்பினார்கள்; அந்தக் கேள்விகளுக்கு லட்சியவாதம் மிக்க பதில்களை எதிர்பார்த்தார்கள்.
அறநெறி சார்ந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டபோது, அவர்கள் ‘ஓர் இந்தியன் என்ன செய்ய வேண்டும்’ என்றோ, ‘ஓர் இந்துவோ, முஸ்லிமோ என்ன செய்ய வேண்டும்’ என்றோ கேள்விகள் எழுப்பவில்லை. ஓர் அறநெறிமிக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்… அறத் திறன்மிக்க ஒரு மனிதன், எதைச் செய்வது சரியாக இருக்கும் முதலிய கேள்விகளை அடுக்கினார்கள். இப்படிப்பட்ட உலகப் பார்வையைக் கொண்டிருந்தாலும், தாங்களும், தங்கள் சகாக்களும் காலனிய ஆட்சியால் அடிமைப்பட்டிருக்கிறோம் என்கிற சூழலையும், பழைமைவாதம் மக்களைப் பிடித்திருக்கிறது என்கிற நெருக்கடியான நிலைமையையும் உணர்ந்திருந்தார்கள். இதனால், அவர்களின் மகத்தான கனவுகளைச் செயல்படுத்துவது எளிமையான ஒன்றாக இருக்கவில்லை. இப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தாலும், அவர்கள் விசாலமான கண்ணோட்டங்களை நோக்கிய தேடலை நிறுத்திவிடவில்லை. தற்கால அரசியல், அறம் சார்ந்த சிந்தனைகளில் மகத்தான பெருங்கனவுகளும், உடனடித் தேவைகளும் பிரித்தே கையாளப்படுகின்றன. இவர்களோ, உலகத்துக்கான லட்சியங்களை, தாங்கள் வாழும் தனித்துவமான சூழல்களோடு இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது எனத் தொடர்ந்து போராடினார்கள்.
தாகூர், காந்தி, நேரு வெவ்வேறு வகையான, வேறுபட்ட கருத்துகளைக்கொண்டிருந்தார்கள் என்பதையோ, அவர்கள் அடிக்கடி முரண்பட்டார்கள் என்பதையோ மறுக்கவில்லை. அதே சமயம், இந்திய வரலாற்றில் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் நவீன அறநெறிகளை அவர்கள் ஒருங்கே அறிமுகப்படுத்த முயன்றார்கள். ஓர் அறம் சார்ந்த, முழுமையான வாழ்க்கையை நவீன காலத்தில்
எப்படி வாழ்வது… அறநெறிக்கும், தனிநபர் அடையாளத்துக்கும் என்ன தொடர்பு… அறநெறிசார்ந்த எப்படிப்பட்ட பொதுவிதிகளை ஏற்பது… பொதுமக்களின் செயல்பாட்டுக்கான அற வடிவங்களை உருவாக்க எதை நாடுவது… அந்த அற வடிவங்களை எங்கே தேடுவது… நவீன அரசியலின் அமைப்பான அரசு, எப்படி அறநெறிப் பாதையிலிருந்து விலகாமல் அறக் கனவுகளை எட்டுவது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். அந்தத் தேடல்களை நோக்கித் தங்களுடைய அறிவாற்றலைச் செலவிட்டார்கள். இப்படிப்பட்ட பொதுவான சவால்கள், இக்கட்டுகள் நோக்கித் தங்களுடைய பார்வையைச் செலுத்தினார்கள்.
காந்தி, தாகூர், நேரு ஆகிய மூவரும், இந்தியாவில் அரசியல் எப்படி மேலும்மேலும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பதையும், பொதுவாழ்க்கையில் வலிமையான ஊடகமாக அது எப்படி மாறப்போகிறது என்பதையும் உணர்ந்தார்கள். அரசியலில் தொடர்ந்து தலையிடுவதையும் செயல்படுவதையும் இவர்கள் மூவரும் மேற்கொண்டார்கள். எனினும் அரசியல், மக்களின் வாழ்க்கையில் நீக்கமற கலக்கும்போது, பொதுவாழ்வு ஊழல்மயமாகும் என்பதை அறிந்திருந்தார்கள். அரசியல் வெறும் சொத்துக் குவிக்கிற கேவலமான தேடலாக மாறக்கூடும் என்பதையும், அது பேரழிவைத்தரும் விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் உணர்ந்தே இருந்தார்கள். மதம் பொதுவாழ்வைவிட்டு விலகிக்கொண்டிருந்த மேற்கிலும், பல்வேறு வகையான மத நம்பிக்கைகள்மிக்க இந்தியாவிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ, நம்பிக்கை முறையோ அனைவரும் ஏற்கும்படியாக இருக்காது என்கிற புரிதல் அவர்களுக்கிருந்தது. பல்வேறு நம்பிக்கைகள்கொண்ட எல்லாரும் ஒரே அறநெறியைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் உணர்ந்திருந்தார்கள். மதத்தின் தாக்கம் குறைவதாலோ, பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றுவதாலோ, ஒரு பொதுவான, அனைவரும் ஏற்கும் மத நம்பிக்கை சாத்தியமில்லை. மதம், தன்னுடைய மரபான சிந்தனைகளோடு அனைவருக்கும் உகந்ததாகத் தன்னை அறிவித்துக்கொள்ள முடியாது. அறம் சார்ந்த நம்பிக்கைகள் சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது. இதனால், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புதுமைமிக்க அறவழக்கங்கள், பொறுப்புகளைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இதை நியாயமாகவும், அனைவருடனும் உரையாடுவதன் மூலமே சாதிக்க முடியும். இப்படி உரையாடுவதன்மூலம் அனைவரும் ஏற்கக்கூடியவை எவை… பலதரப்பும் பொருந்திப்போகும் அற அர்ப்பணிப்புகள் எவை… இவற்றை எப்படி மேலும் விரிவுபடுத்துவது ஆகியவைகுறித்த தெளிவு, இப்படிப்பட்ட விவாதங்களால் மட்டுமே சாத்தியம்.
இதுவரை நான், தாகூர், காந்தி, நேரு ஆகியோருக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு பேசினேன். இதன்மூலம் அவர்கள் அனைவரையும் ஒரே பொதுப் பகுத்தறிவு மரபின் அங்கமாகக் காட்டினேன். இப்போது அவர்கள், எப்படித் தங்களுக்குள் முரண்பட்டார்கள் என விளக்கப்போகிறேன். இதன்மூலம், நேருவின் நம்பிக்கை எப்படித் தனித்துவமானது என்கிற புரிதல் ஏற்படலாம்.
தாகூர், காந்தி மற்ற இந்தியர்களிடமிருந்து ஒரு முக்கியமான புள்ளியில் மாறுபடுகிறார்கள்; மதத்தை, அதன் மரபான பார்வையில் அப்படியே ஏற்றுக்கொண்டால், அது அனைவரும் ஏற்கக்கூடிய நம்பிக்கைக்கோ, அறநெறிக்கோ அடிப்படையாக அமையமுடியாது என உணர்ந்திருந்தார்கள். இதனால், காந்தி மீண்டும் மீண்டும் மத மரபுகளைப் பெருமளவில் போராடித் தகர்த்தார். அவற்றைத் தன்னுடைய தொடர் முயற்சிகளால் மறுகட்டமைப்புச் செய்தார். இதனால் ஏற்பட்ட அற உணர்வை மரபான இந்து மதத்தின் பார்வையில் புரிந்துகொள்ள முடியாது. தன்னுடைய தேடலை இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதத்தின் நாட்டார் வடிவங்கள் நோக்கிச் செலுத்தியதன்மூலம், அவைகுறித்து திறந்தமனதோடு அணுகியதன்மூலம் தன்னுடைய தனித்துவமான அறநெறிப் பாதையைக் காந்தி உருவாக்கினார். அவரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கைகளைப் பெருமளவில் மரியாதையோடு அணுகி, இவற்றையும் தாண்டிப் பயணித்தது. தாகூர், பக்தி மிகுந்த பழைமைவாதியின் மதமாகவும் அல்லாமல், ஓர் ஆன்மிகவாதியின் மதமாகவும் அல்லாமல் ‘கவிஞனின் மதம்’ ஒன்றைத் தோற்றுவித்தார். இது, மத மரபுகளின் உள்ளேயும், வெளியேயும் பயணித்துத் தனித்துவமான ஆன்மிக நம்பிக்கையை உருவாக்க முயன்றது. இந்த மதத்தை, ‘மனிதனின் மதம்’ எனத் தாகூர் அழைத்தார். இது, மனிதாபிமானத்தை நம்புவதாக, மனிதனின் ஆற்றல்களின் மீது நம்பிக்கைவைப்பதாக இருந்தது. அதேபோல அனைத்தையும் கடந்த கலையின், அழகியலின் ஆற்றலை நம்புவதாக இருந்தது.
பகுத்தறிவின் ஆற்றல் என்ன, அதை எந்த அளவுக்கு மதிப்பது, அதன் தேவை என்னவென்பது குறித்து காந்தியும், தாகூரும் மோதிக்கொண்டார்கள். இந்த மோதல், பீகார் நிலநடுக்கத்தில் (1934) தெளிவாக வெளிப்படுகிறது. காந்தி, ‘பீகார் நிலநடுக்கத்தைத் தீண்டாமை என்கிற பாவத்தைத் தொடர்ந்து பின்பற்றியதற்காக, மக்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை’ என நாட்டு மக்களிடம் விளக்கம்கொடுத்தார். ‘இதைப் பெருந்தவறு’ எனத் தாகூர் கருதினார். இறைவன் நல்லவர், சமூகம் தீய செயல்களில் ஈடுபடும்போது ,அவர் தண்டிப்பவர், என நம்பிக்கொண்டு காலம்காலமாக நடக்கும் இந்த விவாதத்தின்போது தாகூர் இப்படி எழுதினார்: ‘தங்களைப் போன்ற சக மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் தள்ளி நிற்பவர்களை இன்னமும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இந்த நிலநடுக்கத்தில், அப்பாவி குழந்தைகளும், தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மடிந்திருக்கிறார்கள். ஒரு நாகரிகம் மிகுந்த மனிதன் இப்படிக் கண்மூடித்தனமாக விளக்கங்கள் தரமாட்டான்.’ மதத்தின் பெயரில், இறைவன் என்கிற சக்தி மக்களைக் கொல்லும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளலாம் என்கிற அங்கீகாரத்தைக் காந்தியின் பார்வை தருவதைத் தாகூர் கண்டார். இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளை விளக்க பகுத்தறிவும், அறிவியலுமே பிரதானம் எனத் தாகூர் கருதினார். காந்தியைவிட, தாகூர் பகுத்தறிவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார். அதேசமயம் காந்தி, மரபுகளை… பகுத்தறிவை கூர்மையான ஆய்வுக்கும், விமர்சனத்துக்கும் தொடர்ந்து உட்படுத்தினார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
பகுத்தறிவை மதிப்போடு அணுகியவகையில் தாகூர், காந்தியைவிட நேருவுக்கே நெருங்கியவராகத் தோன்றுகிறார். தாகூர் இறந்து சிலகாலம் கழித்து அகமது நகர் சிறையில் இருந்து கிருஷ்ண கிருபாளினிக்கு நேரு எழுதிய கடிதத்தில், ‘காந்தி, தாகூரைப்போல வேறு யாரும் முரண்பட முடியாது’ என எழுதினார். அதேசமயம், அவர்கள் இருவரும் ‘ஒரே ஊற்றின் ஞானம், சிந்தனை, கலாசாரம் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்றார்கள்’ என்றும் நேரு பதிவுசெய்தார். தனிப்பட்ட அளவில் தாகூரைவிட காந்தியிடமே நேரு கூடுதல் பிணைப்பு, நெருக்கம்கொண்டிருந்தார். நேருவுக்குக் காந்தி தந்தையைவிட மேலானவர். ஒருவகையில், காந்தி நேருவின் வாடகைத் தாய் போன்றவர். ஆனால், அறிவுரீதியாக இந்த நெருக்கம் தலைகீழானது. ‘ஆன்மிகரீதியாக நான் குருதேவுடன் (தாகூருடன்) நெருக்கமாக உணர்கிறேன்’ என்றார் நேரு. தாகூர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நேரு, ‘அவரின் வாழ்க்கை மீதான காதலை, எல்லாவற்றிலும் அழகைக் கண்டுணர்வதைக் காதலித்தேன். நான் அவரை வழிபடுபவன்’ என எழுதினார்.

அறிவியலின், அறிவியல் சார்ந்த தேடல்களின் எல்லைகளைத் தாகூர் கூர்மையாக உணர்ந்திருந்தார். அறிவியல் எண்களிலும், புள்ளிவிபரங்களிலும் கேள்விகளை அணுகுவதையும், அதன் தர்க்கம் நிகழலாம், நிகழாமலும் போகலாம் என்று நிகழ்தகவாக (probabilistic) இருப்பதையும் அவர் கண்டார். அறம்சார்ந்த கேள்விகள் இப்படி, அப்படி என்று தள்ளாடுகிற பதில்களை ஏற்காது, அவை துல்லியமாக இருக்க வேண்டும் என்று தாகூர் உணர்ந்திருந்தார். நேருவைப் பொறுத்தவரை, அறம்சார்ந்த வாழ்க்கை தொடர் பயணம். பகுத்தறிவின் துணையோடு அதனைத் தொடர்ந்து சோதனைக்கும், மறு ஆய்வுக்கும் உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மைமிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர், தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை‘ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நேருவின் நினைவு தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.