பலே பலே ஃப்ளாஷ்பேக் !


‘தேர்வுகள் நெருங்கிவந்திருச்சே’ என லேசாக உதறல் இருக்கிறதா? இதோ, பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து சில ‘எக்ஸாம் பூஸ்டர்’ செய்திகள்…

ஆங்கிலத்தில் தோற்ற ஆர்.கே.நாராயணன்

பள்ளிக் கல்வி முடித்த, ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்ற ஆர்.கே.நாராயணன், பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார்.  நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனார். ஆனாலும், தொடர்ந்து முயன்று, மகாராஜா கல்லூரியில் இடம் பிடித்தார். அங்கேயும் ஒரு வருடம் கூடுதலாக எடுத்துக்கொண்டே பட்டம் பெற்றார். ஓயாத உழைப்பு, வாசிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் என்று அவர் கலந்து உருவாக்கிய கதைகள், ஆங்கில இலக்கிய உலகில் இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

பெரிதினும் பெரிதாக அப்துல் கலாம்

கல்லூரியில் வினாத்தாள் லீக் ஆனதால், பட்டம் பெற ஓர் ஆண்டு கூடுதலாகக் காத்திருக்க நேர்ந்தது. விமானிகள் தேர்வுக்குச் சென்ற கலாமுக்கு ஒரே ஒரு கிரேடு அதிகம் வந்திருந்தால், விமானி ஆகியிருப்பார்.  கண்ணீர் மல்க, கங்கையில் குளித்துவிட்டுப், புதிய உத்வேகத்தோடு புறப்பட்டார். விண்ணோடு நேசம் பூண்டார். இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை ஆனார்.

 தாமதமாக வென்ற டிராவிட்

டிராவிட், பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் ஆட நிறைய நேரம் செலவு செய்தார். இதனால், ‘படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்’ என்று பெற்றோர் பயந்தார்கள். தலைமை ஆசிரியர்தான் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார். விளையாடிவிட்டு டிராவிட் வந்ததும் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவினார்கள். அழகாகப் படித்துத் தேறினார். கிரிக்கெட்டிலும் ஐந்து வருட உழைப்பு, பல்வேறு தடைகளுக்குப் பின்னரே இந்திய அணிக்குள் நுழைந்தார்.  இப்படிப் பிற்காலத்தில் சொன்னார்… ”கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது, தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை.”

 நிராகரிப்பில் ஈஃபிள்

அலெக்ஸாண்டர் குஸ்டவ் ஈஃபிள் (Alexandre Gustave Eiffel) படிக்க ஆசைப்பட்டு, பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப்பம் போட்டார். கணக்கில் மட்டும் இன்றி, எல்லாவற்றிலும் பையன் வீக் என்று சொல்லி, கல்லூரியில் இடம் தர மறுத்தார்கள். அழுகை அழுகையாக வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு வெளியேறினார். நம்பிக்கை, கவனித்தல், கட்டடங்களின் மீதான ஆசை என எல்லாமும் சேர்ந்து, அவரை சாதனையாளர் ஆக்கியது. அவர் படைத்த அற்புதங்கள்தான் ஈஃபிள் கோபுரம், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

மதிப்பெண் குறைந்த ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன், இளம் வயதில் கணிதத்தின் மீது காதல்கொண்டது, தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்ற பிறகுதான் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். கணிதத்தில் அவரது நண்பன் சாரங்கபாணி, 45-க்கு 43 வாங்கியிருந்தார். ராமானுஜன், அவரைவிட ஒரு மதிப்பெண்தான் குறைவாக வாங்கினார். அதனால், கல்லூரி மாணவர்கள் படிக்கும் கணிதப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். லோனி (Loney)  எழுதிய ‘மட்டத் திரிகோணவியல்’ என்கிற நூலையும் கார்(carr)எழுதிய ‘சினாப்சிஸ்’ நூலையும் படித்தார். அதன் உள்ளடக்கங்கள் தந்த உத்வேகத்தில் தீவிரமாக இயங்கினார். விரைவிலேயே கணிதத்தில் சாதனைகள் படைத்து, கணித மேதை என்று புகழப்பட்டார்.

தேர்வைத் தவறவிட்ட ரபேல்

ரஃபேல் நடால், டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆடுவதில் இளம் வயதிலேயே புலி. தொடர்ந்து கலக்கிக்கொண்டு இருந்தவரை, ”ஒழுங்காகப் பாடங்கள் படி” என்றார் அப்பா. இவரும் நல்ல பையனாக அப்படியே படித்தார். ஒரு தேர்வு நேரத்தில் விமானத்தில் புத்தகங்களோடு சென்றபோது, அவற்றைத் தவறவிட்டார். வருத்தத்தோடு இருந்த ரஃபேலிடம் அவரது தந்தை, ”மகனே, அந்தத் தேர்வு இருக்கட்டும். டென்னிஸ் உலகம் காத்திருக்கிறது கிளம்பு” என்றார். இப்போது, மிகவும் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர், ரஃபேல்.

எதற்கும் அசராத ரெய்மான்

பல்கலையின் பேராசிரியருக்கான தேர்வு அது. பெர்னார்ட் ரீமென் (Bernhard Riemann) காத்திருந்தார். வானையே பார்க்காமல், எந்த நட்சத்திரம் எங்கே தோன்றும் என்று கணக்குப் போட்டே சொன்ன மாமேதை, காஸ்(Gass)வந்தார். மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை ரீமெனுக்குத் தரவேண்டும். அப்போது, மிகக் கடினமான துறையாகப் பார்க்கப்பட்ட வளைபரப்புகள் சார்ந்த தலைப்பை அவருக்குத் தந்தார் காஸ். அசராமல் ஆய்வுகள் செய்து, அந்தத் தேர்வில் வென்றார் ரீமென். அதன் அடிப்படையில் எழுந்ததுதான் சார்பியல் தத்துவம்.

 சவாலை சந்தித்த மைக்கலாஞ்சலோ

மைக்கலாஞ்சலோ (Michelangelo) இத்தாலியின் பெரிய சிற்பி. போப் திடீரென்று அவரை அழைத்தார். ”ரோம் நகரில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேற்கூரையில் பைபிள் காட்சிகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும்” என்று உத்தரவு போட்டார். அது, மிகவும் சவாலான பரீட்சை. ஒப்புக்கொண்டார் மைக்கலாஞ்சலோ. கண்களை நெருக்கி, கடினப்பட்டு ஓயாமல் உழைத்து, ஓவியங்களை வரைந்தார். அன்றைய இத்தாலியின் தலைசிறந்த ஓவியரும், ஏஞ்சலோவைப் போட்டியாளராகக் கருதிய ரஃபேல், அவற்றைப் பார்த்தார். ”இத்தனை சிறப்பான ஓவியங்களைப் பார்த்ததே இல்லை. கண்ணீர் கோத்துக்கொள்கிறது ஏஞ்சலோ, உன் திறமைக்குத்  தலைவணங்குகிறேன்” என்றார்.

 

கணிதத்தின் கலக்கல் கதை இது !


கணிதத்தின் கதை என்கிற அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். இரா.நடராசனின் எழுத்தில் மலர்ந்திருக்கும் எளிய வாசகனுக்கும் புரியும் எளிய நூல் இது. கணிதம் உண்மையில் குகையில் வாழ்ந்த மனிதனோடு துவங்கியது ; இந்தியாவின் பத்துக்கும்,மெசொபடோமியாவின் அறுபதின் அடுக்கில் நீளும் செக்ஸாஜெசிமல் முறையும் ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி போட்டன. இறுதியில் இந்தியாவின் முறையே நின்றது. 

ஆனாலும்,அறுபதின் தாக்கத்தில் தான் அறுபது நொடி,அறுபது நிமிடம் என்கிற பகுப்பு ஏற்பட்டது. அல்ஜீப்ரா அரேபியர்களின் கைவண்ணம் ; அந்த பெயரே அதைதான் குறிக்கிறது. இந்தியாவின் கணித முறையை அரேபிய மற்றும் ஐரோப்பிய வியாபாரிகள் மேற்குக்கு கொண்டு சென்றார்கள். இந்தியர்கள் இல்லாமல் பூஜ்யம் என்பதற்கு குறியீடு இல்லாமல் வெற்றிடம் இடுகிற பழக்கமே வெகுகாலம் உலகில் இருந்திருக்கிறது. 

கணிதத்தில் சாக்ரடீஸ் தோன்றிய கிரேக்க மண் எல்லாவற்றையும் கேள்வி கேட்டே ஏற்றுக்கொண்டது. கோட்பாடு அதற்கான ஃப்ரூப்,உட்கூறுகள் என்று எதையும் பிரித்து பார்த்துவிடும் பழக்கம் அவர்களாலே அறிவியலில் உண்டானது. தேல்ஸ் என்கிற அறிஞர் தான் வட்டத்தின் நடுவே போகும் கோட்டுத்துண்டுக்கு டையாமீட்டர் என்று பெயரிட்டார். இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ளே மிகக்குறைந்த தூரமே ஒரு கோடு என்று சொன்னதும் அவரே. அவர் எகிப்து போய் பாடம் படித்துவிட்டு வந்த பின்னர் சூரிய கிரகணம் எப்பொழுது ஏற்படும் என்று துல்லியமாக சொன்ன பொழுது அவரை சூனியம் கற்றவர் என்று பயந்தார்கள் அவர் நாட்டில். ஐம்பது வருடங்களை பையின் மதிப்பை கண்டுபிடிப்பதில் மட்டுமே கிரேக்கர்கள் செலவிட்டு இருக்கிறார்கள் என்கிற அளவுக்கு கணித வெறி அவர்களிடம் இருந்தது. 

கிரேக்கத்திலே எக்லேக்டிக் என்றொரு கணித குழு இருந்தது ; அது எல்லாமும் இறைவனோடு தொடர்புடையது என்ற இன்னொரு பள்ளியை தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதன் முக்கிய ஆளுமை ஷேனோ ஒரு ஆமை ஆர்சில்லஸ் எனும் மனிதனை விட ஒரு அடி முன்னதாகவே எப்பொழுதும் செல்கிறது. அவன் எப்பொழுது அதை முந்துவான் என்று கேட்டார். இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என்றாலும் எதையும் ப்ரூப் மூலமே நிரூபித்து பழகிய கிரேக்க குழு பல ஆண்டுகள் மண்டையை உடைத்துக்கொண்டது ! நாற்பது வருடங்கள் வடிவியலின் அதுவரை வந்த எல்லா படைப்புகளையும் தொகுத்த யூக்லிட் அதன் தந்தை என்று பெயர் பெற்றார். 

வடிவியல் தெரியாவிட்டால் என் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்று பிளேட்டோ எழுதுகிற அளவுக்கு கணித பித்து வடிவியல் பித்தாக கிரேக்கத்தில் மாறியது. அபோலினஸ் கோனிக்ஸ் எனும் துறையில் அற்புதமான பங்களிப்புகளை தந்தார். ஒரு உருளையில் முழுமையாக அடங்கக்கூடிய கோளத்தின் கொள்ளளவு அதில் பாதி அளவு இருக்கும் என்று கண்டுபிடித்து சொன்னதை தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக நம்பிய ஆர்கிமெடிஸ் தன் கல்லறையின் மீது அந்த இரு உருவங்களை வைக்கச்சொன்னார். சூரிய கண்ணாடியை கொண்டு எதிரி கப்பல்களை எரித்தது,பல்வேறு அடுக்குகளின் மீது ஏறி கப்பலை நெம்புக்கோல் கொண்டு தூக்கியது என்று நீண்ட அவர் சாதனைகள் ஒரு கணக்கை முடிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்ட கணத்தில் பொறுமை இல்லாத ஒரு வீரனால் போனது. 

டார்டாக்லியா எனும் அறிஞர் நான்கின் அடுக்கில் வரும் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டிருந்ததை தான் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்த பொழுது அதை அவரிடம் இருந்து நைசாக பெற்ற கார்டனோராஸ் அதை வெளியிட்டாலும் உலகுக்கு அதன் உண்மையான சொந்தக்காரர் பெயரை ஆணித்தரமாக சொல்லவும் செய்தார். அவரின் மாணவர் பெரராரி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தீர்வுகள் பெற்ற பொழுது அதை காசாக்க அவர் மறுத்ததால் சொந்த அக்காவாலே விஷம் வைத்துக்கொல்லப்பட்டார். கணிதத்தின் இயற்கணித சூத்திரத்தை வடிவியலோடு இணைக்கிற அற்புதத்தை நிகழ்த்திய டெஸ்கிரேட்ஸ் அவர்களிடம் கணிதம் கற்றுக்கொள்ள எண்ணற்றோர் விரும்பினார்கள். ஸ்வீடன் ராணி படை அனுப்பி அவரை மிரட்டி கூட்டி வந்தார். ஆஸ்துமா இருந்தபடியால் தினமும் காலை பதினொரு மணிக்கு எழும் அவர் அவளுக்காக காலை ஐந்து மணிக்கு எழுப்பபட்டார். பதினோரே வாரத்தில் சுரம் கண்டு இறந்துபோனார் அவர். கணிதம் கொல்லவும் செய்யும் போல !

ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ,எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார். 

காஸ் எனும் மேதை ரெய்மான் எனும் தன்னுடைய மாணவன் பேராசிரியர் ஆக முனைந்த பொழுது மிகக்கடினமான வளை பரப்புகள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை தருமாறு ஜாலியாக சொல்லி மாட்டிவிட பார்த்தார். ரெய்மான் அதில் கலக்கி எடுத்தார். அதன் அடிப்படையில் தான் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு எழுந்தது.

கோயிலில் பாதிரியாராக போயிருக்க வேண்டிய யூலரை கடினப்பட்டு மீட்டு வந்தார் பெர்னோலி. ஒரு எண்ணூறு கணித புததகங்களை எழுதினார் அவர் ! ராமனுஜன் இங்கிலாந்தில் இருந்த பொழுது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருந்த பொழுதெல்லாம் அவரைத்தேற்றி காப்பாற்றிய ஹார்டி கணிதத்தின் கடைசி சக்கரவர்த்தியின் பெருமையை உலகம் உணர உதவினார். பட்டம் எதுவும் பெறாத ராமானுஜனின் பெயரால் உலகின் தலைசிறந்த மூன்று பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் இருக்கை இருக்கிறது !
பாரதி புத்தகாலயம் வெளியீடு 
ஆசிரியர் :இரா.நடராசன்

கண்டுபிடித்தது எப்படி ?


கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ் அவர்கள் எழுதிய கண்டுபிடித்தது எப்படி பாகம் 2 ஐ வாசித்து முடித்தேன். மின்னியல் துறையின் முன்னோடிகள் பற்றி இத்தனை சுவாரசியமான,எளிமையான நூல் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. எழுதப்பட்டிருப்பது அறிவியல் நூல் தான் என்றாலும் அதன் ஊடாக தன்னம்பிக்கை,அடக்கம் ததும்பும் சம்பவங்கள்,ஓயாத உழைப்பை வலியுறுத்தும் சம்பவங்கள் இயல்பாக நூலில் காணக்கிடைக்கின்றன. நூலில் இருந்து சில சுவையான தகவல்கள் இங்கே :

மிகவும் சிக்கலான மின் அமைப்புகள் எல்லாவற்றையும் எளிய முறையில் வரைந்து காட்டிவிடும் சர்க்யூட்டை உலகுக்கு தந்தவர் கிர்ச்சாஃப். விண்கலமே ஆனாலும் அது நேர்த்தியாக இயங்குமா என்பதை பகுத்தறிய உதவுகிற அற்புதம் அவர் உருவாக்கிய அந்த கட்டமைப்பு. 

மின்னழுத்தத்தை கண்டுபிடித்த வோல்ட்டா தவளைகளில் மின்சாரம் ஓடுகிறது என்று சொன்ன கால்வானோவின் கூற்றை பொய்யாக்கும் பொருட்டு களமிறங்கி தனி பேட்டரி உருவாக்கினார். மின்சாரம் சார்ந்த ஆய்வுப்பணிகள் மீத்தேன் வாயு மற்றும் இக்னிஷன் உண்டாவதற்கான விதிகள் ஆகியவற்றை அவரால் கண்டறிய முடிந்திருக்கிறது. 
மின்னழுத்தம்,மின்னெதிர்ப்பு,மின் ஓட்டம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை சமன்பாட்டை மிகக்குறைவான ஆய்வுக்கருவிகளோடு எட்டாண்டு கால உழைப்பில் உருவாக்கித்தந்திருக்கிறார் ஓம். அவரின் கண்டுபிடிப்பை முதலில் அறிவியல் உலகம் அவரால் கணித ரீதியாக நிரூபிக்க அவரால் முடியாமல் போனதால் ஏற்க மறுத்தாலும் பின்னர் மிக உயரிய கோப்லே விருதை வழங்கியது. 

கூலூம்ப் காந்த ஊசியைக்கொண்டு வெற்றிகரமாக பயணிப்பதை உறுதிசெய்த அதே கணம்,காந்த சக்தியும் மின்சக்தியும் வெவ்வேறு இல்லை என்று அடித்து ஆரம்பகாலங்களிலேயே சொன்னவர். லாப்லஸ் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர். அவரின் பங்களிப்பில் வானியல் கோட்பாடுகள் இயக்கங்கள் எல்லாவற்றையும் கணிதத்தை கொண்டு விளக்கும் கணித வானியல் பிரிவு உண்டானது ; காலத்தை சார்ந்து இயங்கும் இயக்கங்களை பகுத்தறிவது சாத்தியமானது. கருந்துளை பற்றி முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே குறித்தவர் அவர் ! 
வெகுகால உழைப்புக்கு பின்னர் காந்தவியலும்,மின்னியலும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்தவை என்றாய்ந்து அறிந்த ஆம்பியர் அதை உலகுக்கு சொல்லிவிட்டு ஆனாலும் எனக்கு முன்னரே இதைப்பற்றி குறிப்பிட்ட பாரடேவுக்கு தான் இதைக்கண்டறிந்த பெருமை சேரும் என்று அறிவித்து வியக்க வைத்தார். அவர் தந்ததே மின்இயக்கவியல் துறை. 

புத்தக பைண்டிங் செய்யும் வேலையில் வறுமையால் ஈடுபட்டு அங்கே வரும் நூல்களை படித்து அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பாரடே மின் பகுப்பை உலகுக்கு தந்தார். மின் பகுப்பு கோட்பாடுகள் தந்தார். மின்னோட்டத்தை சுற்றி காந்த அலைகள் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதை பாரடே நிரூபிக்க எடுத்துக்கொண்ட ஆண்டுகள் அதிகமில்லை-இருபத்தி ஏழு ! உலகின் முதல் ஜெனரேட்டரும் அவர் தந்ததே.

மூன்று அடிப்படை வண்ணங்கள கொண்டு புகைப்படத்தில் எண்ணற்ற வண்ணங்களை கொண்டுவர முடியும் என்று நிரூபித்த மாக்ஸ்வெல் சனிக்கோள் வளையம் தூசால் ஆனது என்று பெரிதாக அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே சொன்னார் இவர். 
மின் காந்த அலைகளையும்,அவற்றின் பண்புகளையும் அறுதியிட்டு கண்டறிந்த ஹெர்ட்ஸ் அதைக்கொண்டு மேக்ஸ்வெல் சொன்ன சமன்பாடுகளில் போதிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தார். என்றாலும் ,தன்னுடைய உழைப்பை ஓரமாக வைத்துவிட்டு ,”இதெல்லாம் மேக்ஸ்வெல் எனும் மாமேதையின் சாதனைகள். அதை மீண்டும் இவை நிரூபிக்கின்றன. நான் செய்திருப்பது ஒரு சிறு துளியே !” என்று தன்னடக்கமாக சொன்னார். 

மாறுமின்சாரத்தை வெகுதூரம் கொண்டு போகிற அற்புதத்தை மின்னழுத்த மாற்றத்தின் மூலம் சாதித்த டெஸ்லா வெகுகாலத்துக்கு முன்னரே எக்ஸ் ரேவை கண்டுபிடித்து இருந்தார். இறக்கைகள் அற்ற மின் காற்றாடிகள்,ரேடார்,வானொலி என்று சகலமும் கண்டறிந்த டெஸ்லா தன்னை எங்கேயும் முன்னிறுத்தி கொள்ளாமல் பொருள் ரீதியாக இயங்காமல் அறிவியல் மக்களுக்கே என்பதில் உறுதியாக இருந்தார். 

அணுக்கள் வாயுக்களில் உள்ளன என்றும் வாயுக்களின் செயல்பாட்டை பற்றி போல்ட்ஸ்மேன் மாறா எண்ணை தந்த போல்ட்ஸ்மேனின் ஆய்வுகள் அவர் காலத்தில் நிராகரிக்கப்பட்டன. அவற்றை கேலி பேசினார்கள். தற்கொலை முயற்சிகளில் பல சமயம் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும் வெகுகாலம் கழித்து அவர் சொன்னவை அத்தனையும் சரி எட்ன்று அறிவியல் உலகம் ஆய்ந்து கொண்டாடியது. 

திபெத்திய சாது பியாசி சிர்ரஸ் என்கிற நட்சத்திரம் வானில் தோன்றுவதையும் அது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பது சார்ந்தும் குறிப்புகளை தொலைநோக்கியை கொண்டு கண்டு உலகுக்கு சொல்லிவந்தார். காஸ் எனும் கணிதத்தின் உச்சபட்ச மேதை வானை நோக்காமல் வெறும் சமன்பாடுகளின் மூலமே காணாமல் போன அந்த நட்ச்சத்திரம் இங்கே தான் தோன்றும் என்று துல்லியமாக சொன்ன பொழுது சாது வியந்து எப்படி மேலே பார்க்காமலே உங்களால் சொல்ல முடிந்தது என்று கேட்ட பொழுது த தன்னுடைய தலையை தடவிக்காண்பித்து எல்லாம் இங்கே இருக்கிறது என்றாராம் ! காஸ் எத்தனையோ மகத்தான பங்களிப்புகளை உலகுக்கு தந்திருந்தாலும் எதையும் தன் யாருக்கும் சொல்லித்தராமல் போகவே அறிவியல் உலகில் அவருக்கு பின் அவரின் எண்ணங்களை,வழிமுறைகளை கடத்த பெரிய வழி இல்லாமல் போனது ! 

சிலிகான்,செலெனியம்,சிரியம்,லித்தியம்,வெனடியம் கண்டறியா காரணமான பெர்செலியஸ் எல்லா தனிமங்களும் ஹைட்ரஜனால் ஆனவை என்கிற நம்பிக்கையை தகர்த்தார். தனிமங்களுக்கு குறியீடுகள் தந்ததும் அவரே. கரிம பொருட்களை தனித்து பிரித்து காண்பித்தார் அவர். புரதம் என்கிற சொல்லை தந்ததும் அவரே, 
சாராயம் காய்ச்ச தந்தை கட்டாயப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் வெப்பம் சார்ந்த அற்புதமான ஆய்வுகளை செய்தவர் ஜூல். மின்சாரம் பாய்கிற பொழுது கருவி சூடாகிறது என்பதை சமன்பாடுகளோடு தந்த மேதை அவர். 

ஒலியின் திசைவேகம்,மைக்ரோபோன்,மின்சாரம் பாயும் வேகம்,ஒளியியலின் அதிகபட்ச பங்களிப்பான ஸ்பெக்ட்ரோமீட்டர்,பைனாகுலர் எல்லாமும் தந்த மாமேதை வீட்ஸ்டோன் ! அவரின் தந்தி பதியும் முறையையே மோர்ஸ் மேலும் மேம்படுத்தினார்.

பைபோகல் லென்ஸ்,சிறுநீர் கழிக்க துன்பப்படும் மக்களுக்கு உதவும் கேதீட்டர்,கப்பலின் நீர்புகா அறைகள்,இடிதாங்கி என்று எண்ணற்றவை தந்தவர் பெஞ்சமின் பிராங்கிளின். 
அலுமினியம் தங்கத்துக்கும் மேலே விலைமதிப்பு கொண்டிருந்த காலத்தில் முறையில் கிரியோலைட்-அலுமினியம் ப்ளோரைட் கலவையுடன் அலுமினியம் ஆக்சைட் தூளை கலந்து கரைத்து மின்பகுப்புக்கு உள்ளாக்கி அலுமினியம் உற்பத்தியை பலமடங்கு அதிகப்படுத்தி மலிவு விலை பொருளாக அதை மாற்றிய சாதனை சார்லஸ் மார்ட்டின் ஹால் அவர்களுக்கு உரியது ! 

விகடன் பிரசுரம் 
விலை : ரூபாய் எழுபது (இரண்டாம் பதிப்பு )