மாமேதை மாக்ஸ்வெல் !


இயற்பியல் உலகில் ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் ஆகிய இருவருக்கும் இணையாக புகழப்பட வேண்டிய இன்னொரு மேதை மாக்ஸ்வெல். பதினாறு வயது நிரம்புவதற்குள்
அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிற அளவுக்கு அவர் மேதையாக இருந்தார். மாக்ஸ்வெல் காம்ப்ரிட்ஜ் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார்.

மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்று ஏற்கனவே அறிவியலில் புரிதல் இருந்தாலும். அவைப்பற்றி விதிகளும்
இருந்தன. என்றாலும் இவை இரண்டையும் இணைக்கிற பணியை மாக்ஸ்வெல் அவர்களின்
நான்கு சமன்பாடுகள் செய்தன.

மின்சாரம்,காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என்பதை அவரின் சமன்பாடுகள் காட்டிய பொழுது இயற்பியல் உலகம்
நிமிர்ந்து உட்கார்ந்தது. மேலும் வெளியில் பரவும் மின்காந்த அலைகளின் திசை வேகத்தை அவர் கண்டறிந்து சொன்னார். அது ஒளியின் திசை வேகத்தை
ஒத்திருப்பதை கண்டு ஒளியும் மின்காந்த அலைகளால் ஆகி இருக்கிறது என்று அறிவித்தார். ஒளியில் இருந்து சற்றே மாறுபட்ட அலைநீளமும்,அதிர்வெண்ணும்
கொண்ட மின்காந்த அலைகள் இருக்கும் என்று அவர் ஊகமாக தெரிவித்ததை அவருக்குப்பின் வந்த ஹெர்ட்ஸ் தன்னுடைய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தினார்.

ஆப்டிக்ஸ்,வெப்ப இயக்கவியல் துறையிலும் மகத்தான ஆய்வுகளை செய்த மாக்ஸ்வெல் சனிக்கோளின் வளையம் தூசிகளால் ஆனது என்றும்,மூன்று அடிப்படை
வண்ணங்கள கொண்டு புகைப்படத்தில் எண்ணற்ற வண்ணங்களை கொண்டுவர முடியும் என்றும் மாக்ஸ்வெல் நிரூபித்தார்.

ஹெர்ட்ஸ் மின்காந்த அலைகளை உருவாக்கியும்,அவற்றின் பண்புகளையும் தெளிவாக சொன்ன பொழுது அவரை எல்லாரும் புகழவே ஹெர்ட்ஸ் தன்னடக்கமாக ,”இதெல்லாம்
மேக்ஸ்வெல் எனும் மாமேதையின் சாதனைகள். அதை மீண்டும் இவை நிரூபிக்கின்றன. நான் செய்திருப்பது ஒரு சிறு துளியே !” என்று தன்னடக்கமாக சொன்னார். மாக்ஸ்வெல் புற்றுநோயால் நாற்பத்தி எட்டு வயதில் மரணமுற்றாலும் அவரின் பங்களிப்புகள் அறிவியல் உலகின் செயல்பாடுகளை பல்வேறு தளங்களுக்கு இட்டுச்செல்கிறது.