மறக்க முடியாத மருத்துவர்கள்


ஒரு மருத்துவரை ஏன் கடவுளாகக் கொண்டாடுகிறோம்? தமிழகத்தின் மறக்க முடியாத மருத்துவர்களின் கதைகளைக் கேட்போமா? சேவை என்பது தியாகமில்லை என இவர்களின் கதைகள் சொல்லும். பத்தாண்டுகள் தவங்கிடந்து துறைகளை உருவாக்கி உயிர்கள் காப்பாற்றியவர்களின் கதை இது. லட்சங்களை நாடாமல் லட்சியங்களைத் துரத்தியவர்களின் கதை இது. காதலும், கனவுகளும் இணைந்து பயணித்த மருத்துவ ஜோடிகளின் கதை இது. எத்தனை துயரத்திலும், போதாமையிலும் உயிர் காக்கும் உன்னதர்களின் கதைகள் இவை. இது ஒரு வகையில் தமிழ்நாட்டு மருத்துவர்களின் கதையும் கூட. காது கொடுங்கள்!

This talk delivered in Madras Medical college runs through lives of unforgettable doctors. It emphasises that Service is not sacrifice. Emotional, provoking, heart moving stories of monumental achievements awaits you. These stories are not of Persons who came from affluent backgrounds. Its about Ordinary souls achieving extraordinary things. Do hear. Stories of love, pain, endurance, tears, joy will flash and fill your eyes.

திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி- சாதனைகள், சறுக்கல்கள்


திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. அது சமூகநீதியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. சமூக நலத்திட்டங்களைக் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் மருந்து விநியோக-கொள்முதல் முறை உலக வங்கிக்கு மாதிரியாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த மருத்துவச் சேவை தமிழகத்தில் தரப்படுவதாக அமர்த்தியா சென் புகழாரம் சூட்டுகிறார்.

சாதி அடுக்கை வலிமையாகக் காக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களை வலிமைப்படுத்தும் சடங்குகள், புரோகிதர் ஆகியவற்றை நீக்கிய சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டது. கோயில்களை அரசுகள் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறநிலையத்துறை, முன்மாதிரிச் சட்டங்கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் துவங்கப்பட்டு விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அரசுகளால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. இவை இந்தியாவுக்கு முன்மாதிரி ஆகின (காண்க சுஹ்ரித் பார்த்தசாரதியின் கட்டுரை). இந்து பொதுச்சட்டத்தில் பெண்களுக்குப் பரம்பரைச்சொத்துக்கள், Coparcenary rights ஆகியவற்றைத் தருவதற்கு ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. தமிழகம் அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அதைச் செய்து முடித்திருந்தது. (காண்க: Leila Seth – Talking of justice) பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு எண்பதுகளில் தரப்பட்டு விட்டது.

மண்டைக்காடு போன்ற சில சம்பவங்களைத் தவிர்த்துத் தமிழகத்தில் மதக்கலவரங்கள் என்பதில்லை. அதற்கு அந்தந்த ஊரின் கலாசாரமே காரணம் என ஒரு குழு கிளம்பும். அவர்கள் தமிழகத்தில் என்ன மாதிரியான சூழல் விடுதலைக்கு முந்திய காலத்தில் நிலவியது என அறியாதவர்கள் எனலாம். அரசியல் அறிஞர்கள் வலுவான சமூக, அரசியல் அமைப்புகள் மத வெறியை குலைக்கவோ, கூட்டவோ இயலும் என வாதிடுகின்றனர். (காண்க அஷூடோஷ் வர்ஷனே)
பிராமண எதிர்ப்பு என்பதும் அடிநாதமாக இருந்த திராவிட இயக்க முன்னெடுப்பில் மதச்சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் இணைக்கப்படுவது சாதிக்கப்பட்டது. (காண்க: Being Hindu and being secular.)

தமிழகத்தின் வளர்ச்சிக்கதை உற்பத்தித் துறையில் தனித்துவமானது. அது இந்தியாவிற்கே முன்மாதிரியாகும் என்கிறார் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன். காங்கிரஸ் ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி பிரமாதம் அது திராவிட ஆட்சியில் வீழ்ந்தது என்பது ஒரு வாதம். பொருளாதாரப் பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத் தன்னுடைய ‘SURGE: TAMILNADU’S GROWTH STORY’ நூலில் அதற்கு முக்கியக் காரணம் மத்தியில் ஆண்ட இந்திராவின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணம் என்கிறார். MRTP துவங்கி லைசென்ஸ் பெர்மிட் ராஜ்யம் வரை பெட்டியைத் தள்ளி, லாபி செய்யத்தெரிந்தவர்களே அப்பொழுது சிறக்க முடிந்தது.(காண்க. Political economy of reforms in India) தமிழகம் பொருளாதாரம் திறந்து விடப்பட்டதும் அடித்து ஆடியது. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, உள்கட்டுமானத்தில் தமிழகம் சிறப்பாக இயங்கி உள்ளது என்பது பல்வேறு மத்திய அரசு அறிக்கைகளின் சான்றிதழாகும்.

பிராமணிய எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாக நின்று விட்டது. 69% இட ஒதுக்கீட்டில் பெரும்பான்மையாகப் பின்தங்கியுள்ள தலித்துகளுக்கு 18% இட ஒதுக்கீடு மட்டுமே தரப்பட்டு உள்ளது. 50% ஐ பொருளாதார, சமூக அடுக்கில் ஒப்பீட்டளவில் நன்றாக முன்னேறியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs)பெறுகிறார்கள். தமிழ் வழிக்கல்வி தரம் குறைந்ததாய் இருந்து ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித்துகள் இடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவிலேயே மிக அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். நிலமில்லாத ஊரகத் தலித்துகளின் எண்ணிக்கை 92%. இந்திய சராசரி 61%. (http://m.timesofindia.com/elections-2016/tamil-nadu-elections-2016/news/Mind-the-Dalit-OBC-gap-in-TN/articleshow/52103820.cms). தலித்துகள் மீதான வன்முறைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட எந்த விசாரணை கமிஷன் அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்காத மாநிலம் தமிழகம். ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை ஏற்க மறுத்த வெகுசில மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இந்தியாவில் மிகக் குறைவான கலப்புத்திருமணங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் ஒன்று.

உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருப்பது ஒருபுறம். இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகக் கபளீகரம் செய்வது இன்னொருபுறம். ஊழல் மிகுந்து இருப்பதும், வாரிசு அரசியலும் பரவலாக விவாதிக்கப்படச் சாபக்கேடுகள். தேர்தல் அரசியலில் பணத்தை வாரியிறைப்பதில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை எனத் தேர்தல் ஆணையம் மெச்சும் பெருமைக்குரியது தமிழகம். உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிப்போட்டு இருக்கிறது தமிழக அரசு. பகிர வேண்டிய 22 அதிகாரங்களில் மூன்று தான் உள்ளாட்சி அமைப்புகள் வசம் உள்ளது. கடந்த காலப்பெருமைகள் காலத்துக்கும் உடன் வராது. அவ்வளவே.

ஒரு முன்னோக்கிய பயணம் என்பது விமர்சனங்களை உள்வாங்குவது. மட்டையடியாக மறுப்பது அல்ல. கொடுக்கிற இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டே சமூகநீதி பேசுவது முரண்பாடான ஒன்று. ‘நாங்கள் போட்டது. போதாதா?’ எனக் கேட்கையில் ஆதிக்கத்தின் குரல் அது என ஏன் புரிய மறுக்கிறது? ஒரு மதத்தை விட்டு வேண்டுமானால் வெளியேறுங்கள் என்பவர்கள் எந்த மதமும் மனிதர்களாக மதிக்கத் தவறுவதை வசதியாக மறக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட மேம்பட்டவர்கள் எனப் பேசிக்கொண்டே இருப்பது என்ன மாதிரியான அரசியல்? கண் முன்னே முகத்தில் அறையும் அநீதிகள், சமத்துவமின்மைகள், வன்மங்கள் எல்லாவற்றையும் ‘இதுவே அதிகம்’ என்கிற தொனியில் கடப்பது வீழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினில் இன்னொரு அடியே. நன்றி கெட்டவர்கள் எனப் பேசுவதே ஒரு ஆதிக்கத் தொனி தான். தேர்தல் அரசியலின் எல்லைக்குள் இவ்வளவு செய்தோம், இன்னமும் செய்திருக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஏற்பு கூட இல்லாத சமூக நீதி அறமற்றது, ஆகாதது.

#DravidianRule50
இது சார்ந்து முகநூலில் நடந்த விவாதத்தைப் படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=1425856567445415&id=100000632559754

பிரமிக்க வைக்கும் போபி சினேட்சிங்கரின் வாழ்க்கை


போபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால் உண்டு. என்னலாம் ஆசை இருக்கோ பண்ணி முடிச்சிடுங்க மேடம்.’ என்று சுரத்தே இல்லாமல் மருத்துவர் முணுமுணுத்தார். ஐம்பது வயசெல்லாம் சாகிற வயசா என்று போபிக்கு ஆயாசமாக இருந்தது.

லியோ பர்னெட் எனும் விளம்பர பட வித்தகரின் மகளாகப் பிறந்தார் போபி. ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைகள் விரிந்தன. கல்லூரி முடிப்பதற்குள் திருமணம் நடந்து முடிந்திருந்தது. நான்கு பிள்ளைகள், அப்பாவின் எக்கச்சக்க சொத்து என்று வாழ்க்கை தன்போக்கில் அவரை இழுத்துக் கொண்டு போனது. இந்த வாழ்க்கையை விட்டு ஓடிவிடலாமா என்று தன்னுடைய மனகொதிப்பை கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் என்று மருத்துவர்கள் உதட்டை பிதுக்கிய நிலையில் போபி கண்ணீர் வடிக்கவில்லை. தன்னுடைய தோழியின் உந்துதலால் ‘பறவை நோக்கல்’ எனும் ஆர்வம் கொஞ்சமாகத் தொற்றிக்கொண்டு இருந்தது. முதன்முதலில் blackburnian warble  எனும் கருங்குருவியை ஓயாத தேடலுக்குப் பிறகு கண்ட பொழுது அவரின் கண்கள் விரிந்தன. பறவைகள் உலகினில் பாடித் திரிய வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு வாழ்க்கை விதித்த ‘மரணத் தண்டனை’யின் மூலம் அதிகமானது.

ஒரு பைனாகுலர், தொலைநோக்கி, புகைப்படக்கருவி ஆகியவற்றோடு பயணம் போய்ப் பல்வேறு பறவைகளைக் கண்டறிவது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. வாழ்க்கையின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் அதைச் சாகசமாக மாற்றிக்கொண்டார். மனதில் இதுதான் வாழ்க்கையின் இறுதிக்கணம் என்கிற வேகம் இருக்கிறது. செலவுக்கு அப்பாவின் பணம் இருக்கிறது. போதாதா?

No automatic alt text available.

உற்சாகமாகச் சுற்றிச்சுழன்றார் போபி. கவலைகள் இல்லாமல்
சுற்றிக்கொண்டு இருந்த பறவைகளைக் கவனிப்பது, திடீரென்று அரிய பறவையைக் காண்பது ஆகியவை வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருந்த அவரின் வாழ்க்கையில் புது உற்சாகத்தைத் தந்தன. ஆறு மாதங்கள் அலாஸ்காவில் சுற்றி
பறவைகளை நோக்கிவிட்டு மருத்துவரிடம் போனால் புற்றுநோய் மட்டுப்பட்டு இருக்கிறது என்று புருவம் உயர்த்தினார்கள்.

ஐம்பது வயதில் துவங்கிய அந்தச் சாகசம் அடுத்தப் பதினெட்டு ஆண்டுகள் நீண்டது. எதுவும் அவரை அசைத்துப்போடவில்லை. பல சமயங்களில் உடல் முழுக்க அடிபடும். பல்வேறு கண்டங்களில், ஆபத்தான நிலப்பகுதிகளில் தைரியமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். பல்வேறு உள்ளூர் நோய்கள் வேறு தாக்கின. மலேரியா சுரம் கண்டு படுத்த காலங்கள் உண்டு. கைகளை உடைத்துக்கொண்டும் அசராமல் பயணத்தைத் தொடர்ந்த கதைகள் உண்டு. மொத்தமாக ஒரு கை முடமாகிப் போன பொழுது கூட அவரின் தேடல் நின்றதே இல்லை.

பப்புவா நியூ கினியா நாட்டில் உப்பங்கழியில் நின்று கொண்டு பறவைகளை நோக்கிக்கொண்டு இருந்தவரை கடுமையாகத் தாக்கி ஐந்து பேர் வன்புணர்வு செய்தார்கள். தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிய போபி மீண்டும் அதே இடத்துக்கு வந்து தான் விட்டுப்போன பணியை முடித்தார். உலகம் முழுக்கச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பறவை இனங்களை நோக்கி பதிவு செய்தார்.

Birding on Borrowed Time

சோதனைகள் தொடரவே செய்தன. எத்தியோப்பியாவில் அவரைக் கடத்திக் கொண்டு போன சம்பவம் ஒன்று நடந்தது. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்று பறவையைப் போலச் சுற்றி திரிந்ததில் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ‘கூண்டில் அடைய விரும்பாத பறவை’ எனத் தன்னுடைய மகளை மெச்சிய அவரின் அம்மா புரிந்து கொண்டிருந்திருப்பார். ஆசைமகளின் திருமணத்திலும் இருக்க முடியாத அளவுக்குத் தேடல் தொடர்ந்தது. ‘புதுசா இன்னொரு பறவையைப் பார்த்தாச்சு’ என்று அழகாக விரல் தூக்கி அப்பொழுதும் சிரிப்பார் போபி.
Image result for Phoebe Snetsinger with birds
.

மடகஸ்காரில் ஒரு வேனில் பறவைகளைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தார். வேன் விபத்துக்கு ஆளாகி, நொறுங்கி சம்பவ இடத்திலேயே போபி இறந்து போனார்.சாவதற்கு முன்னால் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டு இருந்த Red shouldered Vanga எனும் அரிய பறவையைக் கண்டிருந்தார். மரணத்தின் வாசலில் இருந்து எது சாகசத்தின் கதவுகளைத் திறந்ததோ அதே பறவை நோக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவரின் வாழ்க்கை முடிந்தது எத்தனை மகத்தான முடிவு?

 

டெஸ்ட்டின் டான் லாரா !


டெஸ்ட் போட்டியின் இணையற்ற நாயகன் அந்தஸ்துக்கு சொந்தக்காரரான பிரைன் சார்லஸ் லாராவுக்கு பிறந்தநாள் இன்று. 131 டெஸ்ட்களை விளையாடியுள்ள பிரையன் லாரா 11,953 ரன்களை 52.88 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார் .34 சதங்கள் 48 அரை சதங்கள் அதில் அடக்கம். அணியே சொதப்புகிற காலத்தில் அவர் மட்டுமே தனியொருவராக போராடுவார். அவரின் அணி தோற்ற அறுபத்தி மூன்று போட்டிகளில் அவர் ஆடியுள்ளார் என்பதே அதைக்காட்டும்.

உலகின் ஒரே ஒரு ஐநூறு ப்ளஸ் டெஸ்ட் ஸ்கோர் இவரிடம் தான். 501 நாட் அவுட் எனும் முதல் தர ஆட்டத்தில் அடித்த ஸ்கோரே அது. முதல் டெஸ்ட் சதம் வந்ததது அவருக்கு மறக்க முடியாத ஒன்று ; ஆஸ்திரேலியா அணியுடன் ஆடிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அந்த சதத்தை அவர் அடித்தார் .அதனால் தொடரை 2-1 என்று அவர் அணி வென்றது .அதற்கு பின்னர் பிறந்த தன் மகளுக்கு ஆட்டம் நடந்த சிட்னி நகரின் பெயரையே வைத்தார் . நெடுங்காலம் நிலைத்து இருந்த கேரி சோபர்சின் அதிகபட்ச 365 டெஸ்ட் ஸ்கோர் சாதனையை கூட ஒரு பத்து ரன்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகம் அடித்து இவர் அடைந்தார். 

அடுத்தது அதை ஹைடன் ஜிம்பாப்வே அணியுடன் 380 ரன்கள் அடித்து உடைத்த பொழுது சிரித்துக்கொண்டே மீண்டும் இங்கிலாந்துடன் நானூறு ரன்கள் அடித்து அந்த சாதனையையும் தன் வசமாக்கி கொண்டார் . ஒரே ஓவரில் அதிகபட்ச ரன்கள் டெஸ்டில் இவரால் தான் அடிக்கப்பட்டு உள்ளது .ராபின் பீட்டர்சன் ஓவரில் லாரா இருபத்தி எட்டு ரன்கள் அடித்து உள்ளார் .

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆன முரளிதரனை ஒரு டெஸ்ட் தொடரில் போட்டு பின்னி எடுத்தார் .அந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 650 ரன்களை அடித்தார் .அணி தான் 3-0 எனத்தோல்வி கண்டது .இவரின் அணி தோல்வியடைந்த அறுபத்தி மூன்று போட்டிகளில் இவர் ஆடியுள்ளார் என்பதே எவ்வளவு நிலைமை மோசம் என்பதை விளக்கும் .எனினும் லாரா மட்டும் விடாமல் போராடுவார் .

பெரும்பாலும் கிரீசுக்கு வெளியே நின்றே பந்துகளை எதிர்கொண்டு அவர் அந்த தொடரில் துவம்சம் செய்திருந்தார் ..லாராவின் பாணி அலாதியானது ,அவரின் கவர் டிரைவ் மற்றும் ஹூக் ஷாட் வெகு இயல்பாக கச்சிதமாக இருக்கும் .அவருக்கு இன்னொரு பழக்கம் பெரும்பாலும் அரை சதம்,சதங்களை பவுண்டரி மூலமே அடைவார் .அவரின் அம்மா கேன்சரால் இறந்து போனார் ;ஆகவே தானே ஒரு சேவை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நிதி திரட்டி எண்ணற்ற மக்களுக்கு உதவி வருகிறார் .

கடைசி போட்டியின் பொழுது ,”உங்களை நான் மகிழ்வித்தேனா ?”என ரசிகர்களை நோக்கி கேட்டார் .விண்ணை முட்டும் சந்தோஷ ஆரவாரம் எழுந்தது /அதைவிட பெரும்பேறு என்ன இருக்க முடியும் ?

wallவாங்கு வாழ்க திராவிட் !


இன்று: ஜன.11 – ராகுல் டிராவிட் எனும் இணையற்ற ஆட்டக்காரரின் பிறந்த
நாள். அவரைப்பற்றிய பதிவுகள் பதினைந்து :

* ஜனவரி பதினொன்று 1973 இல் இந்தோரில் பிறந்த இவரின் முழுப்பெயர் ராகுல் சரத் டிராவிட். அப்பா ஜாம் உருவாக்கும் கம்பெனியில் வேலை பார்த்ததால் செல்லமாக ஜாமி என அழைக்கப்பட்டார்.

* டிராவிட் முதலில் ஆடிக்கொண்டு இருந்த விளையாட்டு ஹாக்கி. அதில் மாநில அணியில் இடம்பிடித்து இருந்தார். அதற்கு பிறகே கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டார்.

* ஓயாத பயிற்சிதான் ஒரு சொத்து. இளவயதில் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆனதும் அதே திசையில் ஆயிரம் பந்துகளை அடித்து ப்ராக்டிஸ் செய்தார் அவர்.

* இவர் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். முதல் எட்டு
போட்டிகளில் மொத்தமாக டிராவிட் அடித்த ரன்கள் 63. எனினும் இங்கிலாந்துடன் கங்குலி அறிமுகமான டெஸ்டில் 95 ரன்கள் அடித்தார்.

*டிராவிட் ஒரு தொடர் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்தே பயிற்சி செய்ய தொடங்கி விடுவார். வியர்வை சொட்ட சொட்ட பயிற்சி செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமானது.

* முக்கியமான பல இன்னிங்க்சில் டிராவிடின் ஆட்டம் கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. அன்வர் 194 அடித்த போட்டியில் டிராவிட் 107 ரன்கள் அடித்தார். 2001 லக்‌ஷ்மன் கொல்கத்தாவில் 281 அடித்த பொழுது இவர் அடித்த 180, பாகிஸ்தான் உடன் தொடரில் சேவாக் 309 அடிக்க, ராவல பிண்டியில் இவர் அடித்த 270 மறக்கப்பட்டுவிட்டது.

* ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்
வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக
இவருக்குத்தான். (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின்
இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான். இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.

*டிராவிட் பந்துவீசி விக்கெட்டுகளை கழற்றி இருக்கிறார். ஒரு நாள்
போட்டிகளில் மொத்தம் நான்கு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்

* அணியே சொதப்புகிற பொழுதெல்லாம் தடுப்பு சுவர் போல நிற்பார் அடிலேய்ட் மைதானத்தில் 85-4 என இருந்த பொழுது களம் கண்டு 233 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துப்போனார். இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் அணியே
ஆடாத பொழுது ஒற்றை ஆளாக 3 சதங்கள் அடித்தார் அவர். 1999 உலகக் கோப்பையில் தொடரின் அதிகபட்ச ரன்கள் (461) அவராலேயே அடிக்கப்பட்டது. மற்றவர்களின் மோசமான ஆட்டத்தால் அணி அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை.

*ஈகோ பார்க்காமல் பாராட்டுகிற குணமும் அவருக்கு உண்டு. அதேபோல இன்னொரு வீரரின் ஆட்ட நுணுக்கம் பிடித்திருந்தால் அவரிடம் கேட்டு
கற்றுக்கொள்வார். மைக்கேல் வாகன் சுழல்பந்து வீச்சாளர்களை அற்புதமாக அடித்து நொறுக்கிய பொழுது அவரிடம் போய் பாடம் படித்துவிட்டு வந்தார்

*புத்தகங்கள் மீது எக்கச்சக்க காதல் உண்டு அவருக்கு. கார்டஸ் என்கிற
புகழ்பெற்ற கிரிக்கெட் எழுத்தாளரின் புத்தகம் இங்கிலாந்தின் ஒரு தெருவில் கிடைக்கிறது என்கிற செய்தி கேள்விப்பட்டதும் அங்கே போனார் அவர். அத்தனை புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்

* ஒரு தொடரில் அதிகபட்ச சராசரி பெற்ற இந்திய வீரர் டிராவிட்தான்.
ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் 432 அவரின் சராசரி. உலகில் எல்லா டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கும் ஒரே வீரர் அவர் தான். டெஸ்டில் அதிகபட்ச கேட்சுகள் அவர் வசமே – 270. அதிகபட்ச பந்துகளை சந்தித்ததும் அவரே – 31,258. அதிக முறை போல்ட் – 55 – மூன்றும் உலக
சாதனைகள்.

* மெக்ராத், ஆஸ்திரேலியா அணிக்குள் நேரடியாக தகுதியுள்ள ஒரே அயல்நாட்டு வீரர் என புகழ்ந்துள்ளார். கவுரவம் மிகுந்த “BRADMAN ORATION” நிகழ்த்திய ஒரே அயல்நாட்டு வீரர் டிராவிட். ஸ்டீவ் வாக் சுயசரிதை எழுதிய பொழுது
அதற்கு முன்னுரை எழுத கேட்டுகொண்டது டிராவிடைதான்.

*ஒய்வு பெறுகிற அன்று தங்களை மிகவும் காயப்படுத்தும் விஷயம் எது என்று கேட்ட பொழுது ,”ஆட்டத்தின் பொழுது கேட்ச்சை விடுவது தான் !” என்று சொல்கிற அளவுக்கு விளையாட்டை நேசித்தார் அவர்.

* “எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது. சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை” என ஓய்வு
பெற்றபொழுது டிராவிட் சொன்னார். எல்லாரும் படிக்க வேண்டிய பாடம் அது!