கலைக்கொரு மைக்கேலாஞ்சேலோ !


பிப்ரவரி 18: மைக்கேலாஞ்சேலோ நினைவு தின சிறப்பு பகிர்வு
 
Posted Date : 08:06 (18/02/2014)Last updated : 08:12 (18/02/2014)

டேவிட் எனும் பைபிள் நாயகனை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? பைபிளில் கோலியாத் எனும் பெரிய பலவானை தோற்கடித்து மக்கள் கூட்டத்தை காக்கும் இளைய சிறுவன் அவன் .கவணும், கல்லும் கொண்டு சாய்த்து வென்ற கதை பலருக்கு தெரிந்து இருக்கும் .

அந்த டேவிட் (தாவீத் ) உருவத்தை சிலையாக வடிப்பதாக கலையில் ஓங்கி சிறந்து இருந்த ப்ளோரன்ஸ் நகரத்தில் பைபிளில் வரும் வெவ்வேறு கதாபாத்திரங்களை வடிக்க முடிவு செய்யப்பட்ட முதலில் டெர்ரகோட்டாவில் சில வடிவங்களை செதுக்கியும் முடித்தார்கள் ; பின் டேவிட் சிலையை வடிக்கும் பொறுப்பு இரண்டு தேர்ந்த சிற்பிகள் கைக்கு போய் அது முடிக்கப்படாமல் போய் இருபத்தி ஆறே வயதான மைக்கேலாஞ்சேலோ தன் சாமர்த்தியத்தால் அதற்கான அனுமதியை பெற்று மூன்று வருடத்திற்கும் குறைவான காலத்தில் சிலையை செதுக்கி முடித்தார்.

பெரும்பாலும் அமைதி ததும்பும் சொரூபமாக உருவாக்கப்பட்ட டேவிட் சிலைகளில் இருந்து மாறுபட்டு எதையோ சாதிக்க அல்லது எதிர்கொள்கிற பார்வையோடு டேவிட் நிற்பதாக வடித்ததோடு ,கூடவே அவன் புஜத்தில் கவண் இருப்பது போலவும் வடிவமைத்தார் .இந்த சிலையே அவரின் மாஸ்டர் பீஸ் ஆகா உலக வரலாற்றில் பதிவானது . அதன் பல்வேறு மாதிரிகள் உலகம் முழுக்க செய்யபட்டாலும் டேவிட் சிலை நிமிர்ந்து நிற்கிறது ;இதை முதலில் ப்ளோரன்ஸ் நகரத்து தேவலாயத்தில் வைக்க முயற்சித்து சாளரத்தின் உயரம் போதாமல் இடம் மாற்றி வைக்கபடுகிற அளவுக்கு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது இந்த சிலை .

இந்த மாதிரி எண்ணற்ற சிலைகளை வடித்திருந்த மைக்கேலாஞ்சேலோவுக்கு ஒரு பெரிய சோதனை வந்தது ;போப் அவரை அழைத்தார் . சிஸ்டைன் தேவாலயத்தில் எண்ணற்ற பைபிள் காட்சிகளை ஓவியங்களாக மேற்கூரையில் வரையும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார் . இளம் வயதில் ஓவியம் பயின்றதோடு சரி அதை அதற்குப்பின் கண்டுகொண்டதே இல்லை அவர். .ஆனால்,மகாகணம் பொருந்திய போப்பின் கட்டளை ;ஏற்றுக்கொண்டு வந்துவிட்டார் .

மேற்கூரையில் கண்ணை மிக அருகே வைத்துக்கொண்டு பல நாட்கள் தூக்கம்தொலைத்து பைபிளின் காட்சிகளை வரைந்து முடித்தார் .நிலைமை மிகவும் மோசமானது எந்த அளவுக்கு என்றால் புத்தகங்களை கிட்டே வைத்தால் கண் தெரியாத அளவுக்கு !சில அடிகள் தூர வைத்து தான் எதையுமே பார்க்க முடிந்தது .

என்ன வரைந்திருக்க போகிறார் என நக்கலடித்தவர்கள் எண்ணற்ற பேர் ;அவரை வாழ்நாள் முழுக்க போட்டியாளராக பார்த்த அப்பொழுதைய தலைசிறந்த ஓவியரான ரபேல் ஓவியங்களை அன்று வந்து பார்த்தார் .அப்படியே ஏஞ்சலோ முன் மண்டியிட்டு ,”இத்தனை சிறப்பான ஓவியங்களை பார்த்ததே இல்லை ;கண்ணீர் கோர்த்துக்கொள்கிறது ஏஞ்சலோ .தலைவணங்குகிறேன் என்றார் .டேவிட் சிலை மற்றும் சிஸ்டைன் மேற்கூரை ஓவியங்களை உருவாக்கிய உன்னதக்கலைஞன் ஏஞ்சலோ மறைந்த தினம் இன்று.