வாடிவாசல் – நிலைத்து நிற்கும் ஏறு தழுவல்!


சி.சு.செல்லப்பா சல்லிக்கட்டு களத்தை வைத்து எழுதிய வாடிவாசல் குறுநாவல் செல்லாயி சல்லிக்கட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது. காளையின் திமிலை அணைந்து, அதன் கொம்புகளைப் பிடித்து அதனை மூன்று தவ்வு வரை நிறுத்தும் தமிழர் விளையாட்டினை பரபரப்பான மொழிநடையில் ஆசிரியர் வார்த்திருக்கிறார். கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்களே கதை முழுக்க வருகிறார்கள். ஜமீந்தார் துவங்கி காளை பிடிப்பவர்கள் வரை அனைவரும் அந்த சாதியினரே. எனினும், அதிலும் வேறுபாடுகள் குடிபடைக்காரன், ஜமீந்தார், காணியாளன் என்று வழங்கி வந்ததையும் செல்லப்பா காட்டுகிறார்.

பெயர் தெரியாத ஒரு கிழவரின் ஊடாக சல்லிக்கட்டு எப்படி மக்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்து இருக்கிறது என்பது புலனாகிறது. பிச்சி எனும் இளைஞன் உசிலனூர் என்று கேள்விப் பட்டதும் பரவசம் பொங்க அங்கே கருவில் இருந்து வெளியே வரும் பிள்ளைகள் கூட சல்லிக்கட்டை நினைத்துக் கொண்டு தானே இருக்கும் என்று சிலிர்க்கிறார் கிழவர். எட்டணா, காலணா மதிப்புள்ள உருமா துணி மட்டுமே காளையை அடக்கினால் கிடைக்கும் என்றாலும், காளையை அடக்கியவன் என்கிற பெருமிதத்துக்காகவே பலரும் களத்தில் ஏறு தழுவதலில் விருப்பத்தோடு ஈடுபடுவது புரியவைக்கப்படுகிறது.


களத்தில் மனிதனுக்கும், மிருகத்துக்கும் தான் போர் என்றாலும் மிருகம் இதில் இறப்பதில்லை, அதன் ரத்தமும் சிந்த அனுமதிக்கப்படுவதில்லை. மனிதனின் ரத்தம் சிந்தியாது காளையை தழுவ வேண்டும் என்பது மரபாக இருக்கிறது. டூர்ர் என்கிற சத்தத்தைக் கேட்டவுடனே சீறிப்பாயும் காளைகள் ரத்தத்தை சூடேற்றுகின்றன. அப்படி சீறாத காளைகளின் புட்டத்திலும், வேறு பாகங்களிலும் கம்பால் அடிப்பதும், சமயங்களில் கண்களில் மண்ணை வாரி இறைப்பதும் வழங்கி வந்திருக்கிறது.

காரி என்கிற காளை பற்றிய வர்ணனை தான் இக்கதையை ஆக்கிரமிக்கிறது. அதை அடக்க முயல்வாரே இல்லை என்கிற அளவுக்கு அது அடங்காத காளையாக இருக்கின்றது. அதை கிட்டத்தட்ட அடக்கிய அம்புலி என்பவற்றின் குடலை கிழித்து அவரின் உயிரை வாங்கிய அந்த காளையை அடக்க வேண்டும் என்று அவரின் மகனிடம் தன்னுடைய இறுதி கணத்தில் வாக்குறுதி பெறுகிறார் அவர்.

எப்பொழுதும் காளைகளை அடக்கியவன் என்கிற பெயரோடு இருந்த அம்புலி மொக்கையத் தேவனின் காளையால் உலுப்பப்பட்டான் என்கிற அவச்சொல்லே இறுதியில் நின்றது என்று வலியோடு கிழவன் சொல்கிறான். பில்லைக் காளையை அடக்க முடியுமா என்கிற சவாலை அசலூர்காரனான நாயகனை நோக்கி வீசுகிறான் சமீன்தாரின் ஆளான முருகு. அந்த காளையை அடக்க முயன்று முருகு தோற்கையில், அதனை அடக்கும் நாயகனும், அவன் நண்பனும் உருமாத்துணியை அவிழ்த்துக் கொள்ளுமாறு சொல்லி முருகுவிடம் கூறுவது வீரத்துக்கும், பண்பாட்டுக்கும் ஆன நெகிழவைக்கும் சான்று.
தன்னுடைய தந்தையின் நினைவுகளை கிழவன் சொல்லக்கேட்டு பிச்சி கண்களில் நீர் ததும்ப நிற்கையில்.’மனுஷனும் சரி, மாடும் சரி வாடிவாசல்ல கண்ணீர் சிந்தப்பிடாது. மறச்சாதிக்கு அது சரியில்ல’ எனக் கிழவன் சொல்கிறான். கொராலு காளையை பெருத்த போராட்டத்துக்குப் பின்னர் அடக்கிய நாயகன் அடுத்து காரியை அடக்க முனைகிறான்.

‘வாடிபுரம் காளை, கருப்பு பிசாசு, ராட்சச காரி’ மனிதனின் மனவோட்டத்தை உணர்ந்ததாக இருக்கின்றது. அது அடுத்தடுத்து பிச்சி என்ன செய்வான் என்பதை உணர்ந்து சாமர்த்தியமாக இயங்குகிறது. அதனைத் தழுவும் கணத்தில் நாவல் உச்சத்தை எட்டுகிறது. இரண்டு பவுன் தங்கமோ, பட்டு உருமாத்துணியோ காளையை அடக்குவதற்கானஉந்துதல் இல்லை, அது மக்களின் மதிப்பை பெறும் ஒரு வாய்ப்பு என்பது கடத்தப்படுகிறது.

பிச்சி காளையை அடக்கினானா என்பதை விட, அடுத்து நாவல் முடியும் தருணத்தில் வரும் ‘மனுஷனுக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு. என்ன இருந்தாலும் அது மிருகம் தானே?’ என்கிற வரியில் மனிதனும், மிருகமும் ஒரே புள்ளியில் சந்திக்கும் சீற்றமிகுந்த வாடிவாசல் கண்முன் நிலைத்து விடுகிறது.
வாடிவாசல்
பக்கங்கள்: 88
விலை: 80
ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
காலச்சுவடு வெளியீடு