இந்தியாவைச் சுற்ற எண்பது ரயில்கள்


மோனிஷா ராஜேஷ் எனும் பிரிட்டனில் வாழும் பெண்ணுக்கு ஒரு வித்தியாசமான ஆசை துளிர்க்கிறது. உலகைச்சுற்றி எண்பது நாட்கள் என்கிற ஜீல்ஸ் வெர்னே நாவலைப்போல இந்தியாவை 80 தொடர்வண்டிகளில் கண்டடைய முடிவு செய்கிறார். பிரிட்டனில் இந்தியா முழுக்கச் செல்லுபடியாகும் சிறப்புப் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்கிறார். கூடவே நார்வே நாட்டைச் சேர்ந்த இன்னொருவரை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

தொடர்வண்டியின் இரவுகளில் அவரை நோக்கி பாலியல் சீண்டல் முயற்சிகள் நடக்கின்றன. விளக்கை ஒளிரவிட்டால் தன்னுடைய பெட்டியை எடுப்பதைப் போலப் பாவனைச் செய்கிற நபர்களைக் கடக்கிறார். இந்தியர்கள் ஆங்கிலத்தை வெவ்வேறு வகைகளில் கொலை செய்வது அவரைக் கடும் அயற்சிக்கு ஆளாக்கியிருப்பதை நூலில் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவில் வாழ பிரிட்டனில் இருந்து கிளம்பி வந்த மோனிஷாவின் குடும்பம் பல்வேறு வருத்தங்கள், அதிர்ச்சிகளால் நாட்டை விட்டு வெளியேறுகிறது. கடந்த கால வெறுப்புகளை ஒரு பெரும்பயணம் எப்படி அடித்துச் செல்லும் என்பதை மோனிஷாவின் நூல் அழகாய் வெளிப்படுத்துகிறது.

பெரிதாக மத நம்பிக்கை இல்லாத மோனிஷா தான் இந்து என்பதை முற்றாகத் துறக்க முடியாமல் பயணத்தைத் துவங்குகிறார். தீவிர நாத்திகரான நண்பர் ‘நீ ஏன் ஏமாற்றுக்கார சாமியாரான சத்ய சாயிபாபாவின் படத்தை வைத்திருக்கிறாய்? உன் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதிகளை எளிதாகக் கடக்கிறாய்.’ என்கிறார். ‘என் தந்தையின் நம்பிக்கை அது. இந்தத் தனிமையான பயணத்தில் நான் தந்தையின் கதகதப்பை பற்றிக்கொள்ளும் வழி அது. அம்மா கொடுத்த சிறிய பிள்ளையார் சிலையும் அவ்வாறே. இவை அவர்கள் என் மீது வெளிப்படுத்தும் அக்கறையின் அடையாளம்’ என்கிறார் மோனிஷா.

Image may contain: text

பயணங்கள் தொடர்களில் இந்து மதம் எப்படிப் பெண்களைப் பாகுபடுத்துகிறது எனக் கண்ணுறுகிறார். ஆன்மீகம் எப்படி வியாபாரமாகக் கடை பரப்பப்படுகிறது எனக் கண்டு கொதிக்கிறார். கடவுள் இருக்க வேண்டிய ஆலயங்களில் கயமைகளின் பல்வேறு முகங்கள் அவரை வந்தடைகின்றன. மத நம்பிக்கையில் இருந்து விலகி புத்தரின் விபாஸானவை பற்றிக் கொள்கிறார்.

ஒரு பெட்டியில் மூன்று ஆண்கள் பெண்ணான மோனிஷாவுடன் இருக்கையைப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். ஒரு தெரிந்த ஆணாவது உடனிருக்க வேண்டும் எனும் ரயில்வே விதி ஆச்சரியம் தருகிறது. பல்வேறு தொடர்வண்டிகள் கதை முழுக்கப் பயணிக்கின்றன.

முன்முடிவுகளாலான மனிதர்களாய் இந்தியர்கள் திகழ்வதை அவரின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. மனிதர்களைத் திறந்த மனதோடு அணுகும் மாண்பு ஐயங்கள், வேறுபாடுகள் மிகைத்த நாட்டில் அரிதாக நடப்பதை அவர் பயணம் நமக்குப் புரிய வைக்கிறது. ஆங்கிலேயர்களைப் பிரங்கிகள், அங்கிரேஸிக்கள் என இழிவாக இந்தியர்கள் அழைப்பதை, ‘கோஹினூர் கொள்ளையர்கள்’ என்பதை எல்லாம் மோனிஷா எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஒரு தொடர்வண்டியை மருத்துவமனையாக மாற்றிய ஒதுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்யும் லாசரஸ், ‘வண்டியில் எதிரே நின்றபடி பேசுபவரை ‘உட்காருங்கள்’ எனச்சொல்லத் தெரியாத சுயநலவாதிகள் ஆங்கிலேயர்கள்’ என உணர வைக்கும் எளிய மனிதர் எனப்பலர் கையசைத்து கடக்கிறார்கள். தனிமை வாட்ட பொற்கோயிலில் வீட்டு ஞாபகம் வழிய மோனிஷா நிற்கிறார். லட்சம் பேருக்கு உணவிடும் அன்னசாலையில் அனாதையாகக் கசிகிறார். அவரின் பையை எடுத்து தரும் முதிய பணியாளர் அதை உணர்கிறார். தன் உணவை முழுக்க அவர் தட்டில் வார்த்து மகள் போல உணரவைத்து நகர்கிறார்.

Image result for monisha rajesh

அசாமிய கடத்தல்காரர் ‘ஏன் கொல்கிறோம்? ஏன் கடத்துகிறோம்? அப்படியாவது எங்கள் குரலை இந்தியா காது கொடுத்து கேட்காதா எனும் நப்பாசை தான். புரட்சி எல்லாம் சாத்தியமில்லை எனத்தெரியும்’ என்கிறார். நூல் முடிகையில் மோனிகாவின் முன்முடிவுகள் தென் மேற்கு பருவக்காற்று வாரிக்கொள்ளும் வெம்மை போலக் காணாமல் போகின்றன. குறைகள் நிறைய இருந்தாலும் பிரியமும், கனிவும், எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர்களும், தொடர்வண்டிகளும் அவரை நிறைக்கின்றன. நூலின் ஒரு போதாமை சமயங்களில் அயர்ச்சி தரும் நெடிய வர்ணனைகள். சாதியோ, கிராமப்புற வாழ்வோ, இந்தியாவின் சமத்துவமின்மையோ நூலில் எதிரொலிக்கவில்லை. எனினும் மோனிகாவின் பயணம் துணையற்று துணிச்சலாகத் தனியாக நீள்கிறது. பயணங்கள் போ தோழி என்கிற தட்ட முடியாத குரல் நூலை முடிக்கையில் ஆழ்மனதிலிருந்து கேட்கும்.

பக்கங்கள் 248
விலை 235
LOTUS ROLI books

எப்பொழுது விழிக்கும் நம் மனசாட்சி?-கடைக்கோடி குடிமக்களின் கதைகள்


எதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை?
உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்

நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?

இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.


Image result for fatal accidents of birth
குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.

நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.

சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.

தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.

Image result for fatal accidents of birth

தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.

நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.

Image result for fatal accidents of birth

பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?

Image result for fatal accidents of birth

ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.

ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு

 

சிவந்த சீக்கிய தேசம்-தடதடக்கும் வரலாறு !


ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. 

மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவிகளில் போதிய இடமில்லை” என்பதையும் இணைத்து போராடினார்கள். 

ஆனால்,அப்பொழுதைய சூழலை ஆய்ந்த பல்தேவ் ராஜ் நய்யார் எனும் சமூகவியல் அறிஞர் இந்திய ராணுவத்தில் இருபது சதவிகிதம் சீக்கியர்களே இருந்தார்கள்,மேலும் தாங்கள் இந்திய மக்கள் தொகையில் இருந்த அளவுக்கு இரு மடங்கு அதிகமாக அரசாங்கப்பதவிகளில் சீக்கியர்கள் நிறைந்து இருந்தார்கள் என்கிறார். பின்னர் என்ன காரணம் என்றால்,தொடர்ந்து தேர்தல்களில் காங்கிரஸ் அங்கே வென்று கொண்டிருந்தது.

கெய்ரோன் கோலோச்சி கொண்டிருந்தார் ; வளர்ச்சி,கல்வி,விவசாயம் என்று கலக்கி எடுத்தார். எதிர்ப்பு குரல் எழுந்தால் தூக்கி உள்ளே போடுவதை சாவகசமாக செய்தார். கூடவே குடும்பத்துக்கு என்று சொத்தும் சேர்த்துக்கொண்டார். நேரு விசாரிக்க வேண்டும் அவரை என்ற வேண்டுகோள் அழுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விசாரணைக்குழு ஒன்று அமைப்பதோடு அமைதி காத்தார். என்ன ஆனாலும் கெய்ரோன் மற்றும் காங்கிரஸ் அசைக்க முடியாத சக்திகளாக இருந்தார்கள். 

இந்தி மட்டும் போதும் என்று பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்த இந்துக்கள் சொன்னார்கள்,குருமுகி வரிவடிவம் கொண்ட பஞ்சாபியும் தேவை என்று சீக்கியர்கள் முழங்கினார்கள்,தாரா சிங்குக்கு பதிலாக பதே சிங் சிரோன்மணி அகாலிதள தலைவர் ஆகியிருந்தார்; மத ரீதியான தனி மாநில கோரிக்கையை மொழிரீதியான கோரிக்கையாக மாற்றியிருந்தார். காங்க்ரா என்கிற பகுதி மக்கள் ஹிமாச்சல பிரேதசத்தில் இணைய விரும்பினார்கள். இந்தி பேசும் மக்களுக்கு ஹரியானா,பஞ்சாபி பேசியவர்களுக்கு பஞ்சாப் மற்றும் காங்க்ரா ஹிமாசல பிரேதசம் போய் சேரட்டும் என்று 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும் பிரித்து தந்தார். 

1972 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் வென்றது. அடுத்த தேர்தலில் தோற்றதும் மீண்டும் சிக்கலை கையில் எடுத்தார்கள்.அனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அதில் பாதுகாப்பு,அயல்நாட்டு உறவு மற்றும் நாணயம் ஆகியவற்றை தவிர மற்ற எல்லாவற்றையும் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் என்கிற சுயாட்சி கோருகிற தீர்மானம் எழுந்திருந்தது. கூடவே,தீர்மானத்தின் முதல் பக்கத்தில் தனி நாடு கிடைத்தாலும் பரவாயில்லை என்றொரு வரியை அமைதியாக சேர்த்திருந்தார்கள். 

எமெர்ஜென்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பெருவெற்றியோடு சிரோன்மணி அகாலிதளம் பிடித்தது. நடுவே காலிஸ்தான் கோரிக்கை வேறு மீண்டும் துளிர்த்து இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன்னர் மின்டோ-மார்லி முன்னர் எழுப்பப்பட்ட கோரிக்கை அது. 

1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் என்கிற நாடு பஞ்சாபியர்களுக்கு உருவாக உள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதற்கு பாகிஸ்தான் வேறு ஆசீர்வாதம் செய்திருந்தது. ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தோல்வி என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார். அவரின் தளபதி பல்பீர் சிங் சந்து பஞ்சாபில் இருந்தவாறு அதே அறிவிப்பை வெளியிட்டார். கூடவே தனி நாணயம் மற்றும் ஸ்டாம்புகள் வெளிவந்தன. இந்திரா அரசு கண்டும்,காணமல் இருந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சிக்கலைப்பு நிகழ்த்தி இந்திரா அரசு தேர்தல் நடத்தியது. அதற்கு அது பிந்த்ரன்வாலேவை பஞ்சாபில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தது. 

குர்பச்சன் சிங் என்பவர் நிரங்காரிகள் என்கிற மதப்பிரிவை துவங்கி சீக்கிய மதத்தை சுத்தம் செய்வதாக சொல்லி இந்து மதத்தோடு இணைந்து விட வேண்டும் என்று அவர் முழங்கினார். முடியை,தாடியை மழித்து விட்டு,டர்பனை கழட்டிவிட்டு சுத்தமாக அவர் அழைக்க அதை எதிர்த்து அகண்ட கீர்த்தனி என்கிற அமைப்புன் களமிறங்கியது. அதன் தலைவர் ஃபௌஜா சிங் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மோதலில் இறந்து போனார்கள். கோர்ட் குர்பச்சன் சிங் நிரபராதி என்று விடுவித்தது. 

இறந்து போன ஃபௌஜா சிங்கின் மனைவி களத்தில் குதித்தார் அவருக்கு ஆதரவாக சீக்கியர்கள் சுத்தமாக வேண்டும்,இந்தியாவில் இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று முழங்கிய பிந்த்ரன்வாலே களத்துக்கு வந்தார். சிரோன்மணி அகாலிதளம் கட்சியை தோற்கடிக்க வேண்டிய சூழலில் இந்திரா அவரோடு கைகோர்த்து மேடையேறினார். மூன்று தொகுதிகளில் காங்கிரசுக்கு ஆதரவாக பிந்த்ரன்வாலே பிரச்சாரம் செய்தார். தீவிரப்போக்கை கைக்கொள்ள இளைஞர்களை அழைத்தார் ; தனிப்பிரிவு நான்கள் என்பதோடு காலிஸ்தான் நோக்கியும் பயணம் நகரும் என்பதை கோடிட்டு காட்டினார். 

அங்கே இருந்த பிந்த்ரான்வாலேவின் உடனிருந்தவர்கள் கொலைகள் செய்ய அஞ்சவே இல்லை. இவர் பேச்சுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பதினைந்து பேர் இறந்து போனார்கள் அவரின் தீவிரவாதப்போக்கை கண்டித்து எழுதிய பஞ்சாப் கேசரி ஆசிரியர் ஜக்ஜித் நாராயண் கொல்லப்பட்டார். அதற்கு காரணம் பிந்த்ரன்வாலே என்று எல்லாருக்கும் தெரியும். களம் புகுந்தது போலீஸ். அவரைக்கைது செய்யாமல் கொஞ்சம் இருங்கள் என்று ஹரியானா வரை போன போலீசுக்கு உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் உத்தரவு போட்டார். நானே இரண்டு வாரத்தில் சரண்டர் ஆகிறேன் என்று சொன்ன பிந்த்ரான்வாலேவை கைது செய்ய போலீஸ் போனதும் கலவரம் உண்டாகி அவரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் பதினோரு போலீஸ்காரர்கள் பலியானார்கள். அடுத்து ஒரு விமானம் கடத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது ; கோர்ட் போதிய ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டார் என்று விடுதலை செய்தது. 

அதுவரை அவரை வெறுத்த சீக்கியர்கள் மத்தியில் கூட அவர் நாயகர் ஆனார். சிரோன்மணி அகாலிதள தலைவர் லோங்கோவால் பொற்கோயில் வந்து தங்கிக்கொள்ள அவருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஏற்கனவே சிரோன்மணி கட்சியினர் 83 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தங்களின் சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். பிந்த்ரன்வாலேவும் கிளம்பினார். காலிஸ்தான் கோரிக்கைக்கு அமெரிக்கா,கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து நிதி குவிந்தது ஒரு புறம். எக்கச்சக்க ஆயுதங்களோடு உள்ளே காத்துக்கொண்டு இருந்தார்கள். காங்கிரஸ் கூட்டாளி பிந்த்ரன்வாலே இப்பொழுது கட்சி மாறியிருந்தார். 

பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இந்திரா முயற்சித்தார். இரண்டு நதிகளை பிரிவினையின் பொழுது இழந்து விட்டோம்,இருக்கிற மூன்று நதிகளை மற்ற இரு மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம் அதெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை,ஹரியானா மற்றும் பஞ்சாபுக்கு பொதுவாக இருக்கும் சந்திகர் எங்களுக்கு மட்டும் வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொடுத்தார்கள். வன்முறையும் எகிறிக்கொண்டு இருந்தது. இந்துக்கள் மீதும்,எதிர்த்த சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன,பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு இடங்களில் கொள்ளை நடைபெற்றது. பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அப்பாவி மக்கள் சுடப்பட்டு இறந்தார்கள் ; பயம் பஞ்சாபை பீடித்தது. 

“காங்கிரசின் ஆட்சி முகலாயர் ஆட்சியை போன்றது ; நாற்பது சீக்கியர்களால் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்ள முடிந்தது என்றால் நம்மால் முடியாதா ? அமைதி என்பதே நமக்கு இங்கே சாத்தியமில்லை. தனி நாடே இலக்கு “,என்றும்,”இந்துக்கள் உங்களை தேடிக்கொண்டு வந்தால் அவர்களின் தலைகளை டிவி ஆண்டெனாக்களை கொண்டு நசுக்குங்கள் !” என்றெல்லாம் பேசி பேசி வன்முறையை தூண்டிவிட்டார். இந்திரா எப்படியும் அமைதியாக முடித்துக்கொள்ளலாம் என்று இறுதிவரை பேச்சுவார்த்தைகள் நடத்திப்பார்த்தார். எதுவும் சாத்தியமில்லை என்று சொல்வது போல டி.ஐ.ஜி கொல்லப்பட்டார். ஜனாதிபதி பொற்கோயிலுக்கு போன பொழுது அவர் காதை உரசிக்கொண்டு குண்டு சென்றது. ராணுவம் நுழையலாம் என்று சிக்னல் தரப்பட்டது. ஜூன் மூன்றில் பொற்கோயில் சுற்றி வளைக்கப்படுவதற்கு முன்னர் லோங்கோவால் நிலவரி,தண்ணீர் மற்றும் மின்சார் பில்கள் கட்ட மாட்டோம்,மாநிலத்தை விட்டு தானியங்களை அனுப்பமாட்டோம் என்றெல்லாம் முழங்கினார். ஒரே நாளில் வேலை முடிந்துவிடும் என்று மிஷின் கன்களோடு போனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் துப்பாக்கிகள் நீட்டிக்கொண்டு இருந்தன. மறைவிடங்கள்,சுட்டிவிட்டு தப்பிக்கும் வழிகள் என்று அனைத்தும் தெளிவாக இருந்தது. கூடவே குறுகிய இடைவெளிகளில் புகுந்து தாக்கிவிட்டு தண்ணி காட்டிகொண்டு இருந்தார்கள். எறிகுண்டுகள் வேறு பயமுறுத்தின. பஞ்சாபியான பிரார் வழிகாட்டிக்கொண்டு இருந்தார் எந்த சுபேக் சிங்குடன் இணைந்து வங்கதேச விடுதலையை சாதித்தாரோ அவர் எதிர் முகாமில் தலைமை தாங்கிக்கொண்டு இருந்தார். 

துப்பாக்கிகள் போதாது என்று வெகு செக்கிரம் புரிந்தது. டேங்குகள் தேவை என்று டெல்லிக்கு சொல்லப்பட்டது. பதிமூன்று டேங்குகள் வந்து சேர்ந்தன. அஅவர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்கள். இறுதியில் நான்கு அதிகாரிகள்,79 வீரர்கள் மற்றும் 492 தீவிரவாதிகள் இறந்து போனதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால் சில ஆயிரங்களில் இருக்கும் இறப்புகள் என்பது பொதுவான கருத்து.. 

கூடவே,ஹர்மீந்தர் சாஹிப் மற்றும் அகால் தக்த் என்கிற சீக்கியர்களின் புனிதமான பீடங்கள் சேதப்படுத்தப்பட்டு அவர்களின் புனித ஆலயமான பொற்கோயில் ரத்த நிலமாக மாறி ஆறாவடுவை உண்டாக்கி இருந்தது. அரசியல் பகடையில் முன்னேறி மேலே போன பிந்த்ரன்வாலே கூடவே மாணவர் அமைப்பின் தலைவர் அம்ரீக் சிங் இறந்து கிடந்தார்கள். சுபேக் சிங் வாக்கி டாக்கியோடு இறந்து கிடந்தார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் முடிந்தது. அப்பொழுதைக்கு சிக்கல் ஓய்ந்தது போல இருந்தாலும் அமைதி திரும்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டது. நடுவில் பின்விளைவுகளாக இந்திரா காந்தியின் படுகொலை,சீக்கியர்கள் மீதான கலவரங்கள்,படுகொலைகள்  ஆகியன காத்திருந்தன. அரசியல் ஆடுகளத்தில் உயிர்கள் எத்தனை மலிவாக போயின என்பதன் நிகழ்கால உதாரணம் பஞ்சாப் சிக்கல்