காந்தியும், ராணுவமும்:


ராஜ்மோகன் காந்தியின் ‘FOUNDING FATHERS’ எனும் நூல் காந்தி, நேரு, அம்பேத்கர், படேல், போஸ் எனும் இந்தியாவின் மகத்தான தலைவர்கள் குறித்த பல்வேறு கேள்விகள், அவதூறுகள், சந்தேகங்கள் சார்ந்த தெளிவை தர முயல்கிறது. இதில் குறிப்பிட்ட சில தலைப்புகள் குறித்து மட்டும் இரு பாகங்களாக எழுத உள்ளேன்.
இந்த நூலின் முதல் பாகம் இரு முக்கியமான கேள்விகளை எடுத்துக் கொள்கிறது. காந்தியால் தான் இந்தியா சீனப்போரில் தோற்றது என்பது முதல் வாதம். இரண்டாவது காந்தி பிரிவினைக் காலத்தில் இஸ்லாமின் பெயரால் நடத்தப்பட்ட வன்முறையைச் சரியாக விமர்சிக்காமல் இருந்தார் என்பது இரண்டாவது வாதம். இவை இரண்டும் ஒரு சாதுவால் முன்வைக்கப்பட்டவை.
காந்தி எப்படி அகிம்சை முறையில் போராட வேண்டும் என்று சொல்லித் தந்தார். ஆனால், அவர் எப்படித் திருப்பித் தாக்குவது எனச் சொல்லித்தரவில்லை. மேலும், ஒரு ராணுவ வீரன் ‘போரில் எதிராளியைக் கொல்வது பாவம், அதனால் காற்றில் சுட்டேன்.’ என்று சீனப்போர் அனுபவத்தை அந்தச் சாதுவிடம் சொல்கிறான். காந்தியால் வந்த வினை தானே இது என்று அவர் ராஜ்மோகன் காந்தியிடம் கேட்கிறார்.
ப்ரூக்ஸ்-பகத் அறிக்கை இந்தியா சீனப்போரில் தோற்றதற்கான காரணங்களை விவரிக்கிறது. அதில் இந்தியா தன்னுடைய ராணுவ வலிமையைப் பெருக்காதது, உளவுத்துறை சீனா தன்னுடைய பகுதிகள் என்று சொன்னவற்றை நோக்கி முன்னேறினால் ஒன்றும் செய்யாது என்கிற ஐ.பி.யின் தவறான கணிப்பு ஆகியவற்றால் தான் இந்தியா தோற்றது என்கிறது.
காந்தி தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் ராணுவம் வேண்டாம் என்று சொன்னதில்லை. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீரில் நுழைந்த பொழுது இந்திய ராணுவத்தை விமானத்தில் அனுப்பியதை மனதார ஆதரித்தவர் அவர். ‘ராணுவம் ஒரு தேசத்தின் வலிமையின் அளவுகோல் இல்லை’ என்பது அவரின் கருத்தாக இருந்தது. 6-7-1947 –ல் இந்தியா பாகிஸ்தான் ஒருவரை இன்னொருவர் தாக்குவார் என்று அஞ்சிக்கொண்டு ராணுவத்துக்கு மட்டுமே செலவழித்துக் கொண்டிருந்து கல்வி முதலிய அடிப்படைத் தேவைகளைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று காந்தி பேசியிருந்தார்.

அதே சமயம், பிரிவினையால் டெல்லியில் கலவரங்கள் மிகுந்த பொழுது ஆர்.எஸ்.எஸ் முதலிய பல்வேறு குழுக்களைச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காந்தி கேட்டுக் கொண்டார். அதே சமயம், காவல்துறை அதைக் கவனித்துக் கொள்ளும் என்றே காந்தி சொன்னார்.
1899, 1906 வருடங்களில் ஆங்கிலேய அரசு தென் ஆப்ரிக்காவில் நிகழ்த்திய போர்களில் ஆம்புலன்ஸ் சேவை பிரிவுகளில் காந்தி இயங்கியிருக்கிறார். முதலாம் உலகப்போர் சமயத்தில் குஜராத்தின் கேடா பகுதியில் அவர் ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் திரட்டினார். முழு அமைதி விரும்பி என்று காந்தியை எண்ணுவது முட்டாள்தனம். வன்முறையால், அச்சத்தோடு அதைக் கையாள்வதன் மூலம் ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்க்க முடியாது என்கிற புரிதல் காந்திக்கு இருந்தது.

Image result for founding fathers rajmohan

19௦9-ல் வெவ்வேறு சம்பவங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியர்களால் கொல்லப்பட்டார்கள். காந்தி இந்தப் படுகொலைகளைக் கடுமையாகக் கண்டித்தார். “நாம் எப்படிப்பட்ட ஆட்சியை விரும்புகிறோம்? ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறை மிகுந்த ஆட்சிக்குப் பதிலாக இன்னொரு கொலைகாரர்களின் ஆட்சியை நோக்கி பயணிக்கிறோமா? கருப்போ, வெள்ளையோ கொலைகாரர்களின் ஆட்சியால் எந்தப் பயனும் இல்லை. சுயாட்சி என்பது கொலைகாரர்களை மாற்றுகிற ஒன்று அல்ல.’ என்று கடுமையாகக் காந்தி சாடி எழுதினார். ஆழமான புரிதல்கள் இல்லாத ஆயுதம் ஏந்தல் ஆபத்தானது என்பதே அவரின் புரிதல்.

பகத் சிங்கும், அவரின் தோழர்களும் ஆயுதமேந்தி போராடிய பொழுது, ‘அவர்களுடைய வீரம், தியாகம் ஆகியவற்றின் முன்னால் ஒருவர் தலைவணங்குவர். அர்கே சமயம், ஆயுதம் ஏந்தி போராடுவது வறுமையிலும், தெளிவான வழியும், புரிதலும் இல்லாத இந்நாட்டின் நொறுங்கிப் போன, அறிவற்ற மக்களை விடுவிக்குமா? ..ஒருவருக்கொருவர் கொன்று கொல்வது தான் நீதி பரிபாலனம் என்று எண்ணுகிறோமா?” என்று நவஜீவன் இதழில் காந்தி கண்டித்தார்.

காந்தி ராணுவத்துக்கோ, ஆயுதத்துக்கோ எதிரியில்ல. அரசுகள் பற்றியும், அவற்றின் ஒடுக்குமுறையும் பற்றியும் ஆழமான புரிதல் கொண்டவரே அவர். எனினும், வன்முறையைக் கையில் ஏந்துகிற பொழுது அரசுகள் அதை எளிதில் ஒடுக்குகிற வலிமையைப் பெற்று இருப்பதையும், வன்முறை உரையாடலுக்கான. உண்மையான மாற்றத்துக்கான திறப்பை அடைத்து விடுவதையும் உணர்ந்தவராக அவர் இருந்தார்.

சிறியன சிந்தியாத நேரு


நேரு மரணமடைந்து வருகிற மே 27 உடன் ஐம்பது வருடங்கள் முடிவடைகிறது. சீனப்போரில் தோற்றவராக,காஷ்மீர் சிக்கலை தவறாக கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலானஅவலங்களுக்கு காரணமானவராக காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் ? நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? இந்த இதழ்THE WEEK பத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகளின் கட்டுரைகளின் மூலம் படம் பிடித்திருக்கிறது. 

நேரு ஆண்ட பதினேழு வருடத்தின் ஆகச்சிறந்த தாக்கம் எதுவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ,”என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் இருக்கும் !” என்று அவர் சொல்லியிருந்தார். அதுவே நடந்தது. உலகப்போருக்கு பின் விடுதலையடைந்த பெரும்பாலான நாடுகள் எப்படி ஜனநாயகத்தை கைவிட்டன என்பதை கவனித்தால் நேருவின் சாதனை புரியும். முதல் தேர்தலில் அவர் இந்தியாவின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களை சந்தித்து ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

அரசியலில் மதம் கலப்பதை நேரு சற்றும் ஆதரிக்கவே இல்லை என்பதே உண்மை. மதவாதமும்,வகுப்புவாதமும் ஆபத்தானவை. அவை இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தலை அனுமதிக்க முடியாது. அவற்றை ஓட்டுக்களை பெற பயன்படுத்துவதை விட அவமானமில்லை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று முழங்கிய தலைவர் அவர் கேரளாவில் பாதிரியார்கள் அவருக்காக ஓட்டு சேகரிக்கிறார்கள் என்று அறிந்ததும் அப்படி செய்வது தவறு என்று கடுமையாக கண்டித்தார் அவர். 

நேருவின் ஆகப்பெரிய சறுக்கல்களில் ஒன்றான காஷ்மீர் சிக்கலில் அவர் ஒரு கனவுலகத்தில் வாழ்ந்தவராகவே இருந்தார். ஐ.நா சபைக்கு மவுன்ட்பேட்டன் பேச்சைக் கேட்டுக்கொண்டு போய் சர்வதேச அரசியலில் சிக்கிக்கொண்டார். சீனாவின் சிக்கலில் நேருவை தொடர்ந்து வில்லனாக்கும் போக்கு இன்றைக்கு ஹெண்டெர்சன் அறிக்கையால் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால்,ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் வகுத்த கோட்டை ஏற்க மாட்டேன் என்று அடம்பிடித்த மாவோ தனக்கு சாதகமாக மஞ்ச்சூ பகுதியை அதே ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வழங்கிய பொழுது ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் சீன அக்சாய் சின்னில் சாலை அமைத்தது என்பதற்கு எழுந்த கடும் கண்டனத்துக்கு பிறகே நகரும் முடிவை நேரு எடுத்தார். 

சீனாவிலும் மூன்று கோடி மக்கள் மரணத்தால் தனக்கு விழுந்து கொண்டிருந்த செல்வாக்கை மாவோ நிலைநாட்ட வேண்டிய சூழல் இருந்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து பிரிக்க நேரு எண்ணுகிறார் என்கிற தவறான எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால் நேரு சீனாவை ஒரு எதிரி என்று இறுதிவரை நம்ப மறுத்தார். 

ராஜஸ்தானில் பேசுகிற பொழுது பளிங்குகளை கோயில் கட்ட பயன்படுத்துவதை மறைமுகமாக அவற்றை வெளிநாட்டில் கழிப்பறைகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று அவர் சாடினார். புராண நூல்களை நல்ல இலக்கியங்கள் என்றவர் அவற்றை உண்மை என்று ஏற்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். மதம் நம்பமுடியாததாக இருக்கிறது என்று தீர்க்கமாக சொன்ன மதச்சார்பின்மைவாதி அவர். 

வடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாரளுமன்ற உறுப்பினர்களை தன்னுடைய செயலாளர்கள் ஆக்கி இந்தியாவை விட்டு வடகிழக்கு வெளியேறுவதை அவர் தடுத்தார். ஆதிவாசிகளிடமும் பரிவோடு அவர் நடந்து கொண்டார். நேருவின் பொருளாதார கொள்கைகள் பெருந்தோல்வி என்று இன்றைக்கு நாம் சொன்னாலும் வலிமையான அறிவியல் பீடங்கள் அவற்றால் உண்டாகின. நீர்ப்பாசனம்,நிலங்களை ஒழுங்காக பகிர்ந்தளித்தல்,அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தாமல் போனது அவரின் தோல்விகள் 

பாரளுமன்ற ஜனநாயகத்தை முழுவதும் மதித்த நேரு எதிர்கட்சிகள் பலமில்லாத காலத்திலும் தீவிரமான விவாதங்களை முன்னெடுத்தார். அவரின் கட்சி நபர் சபை கட்டுப்பாட்டை மீறியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அவரே கொண்டு வந்தார் அவரின் முதல் ஐந்து வருடத்தில் 677 முறை கூடி அவை 319 சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த நாடளுமன்றமோ 332 முறை கூடி 247 சட்ட மசோதாக்களை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. 

நேருவுக்கு பின்னர் யார் என்று அவரின் மரணத்துக்கு சில காலம் முன்னர் கேட்ட பொழுது ,”எனக்கு தெரியாது !” என்று சொல்கிற அளவுக்கு வாரிசு அரசியலை எதிர்த்தவர் அவர். இந்திராவை ஓரங்கட்டியே பெரும்பாலும் அவர் வைத்திருந்தார். இஸ்லாமியர்களை பரிவோடு அணுகிய அவரால் இந்தியாவில் ஒரு பதினைந்து ஆண்டுகாலம் மதக்கலவரங்கள் ஏற்படாமல் இருந்தன. நாடு எல்லாருக்குமான தேசம் ஆகியது. 

ஒரு சம்பவத்தை சொன்னால் சரியாக இருக்கும் வாஜ்பாய் ஜனதா அரசில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனதும் அவர் அலுவலக அறையில் இருந்த நேருவின் படத்தை அதிகாரிகள் அகற்றினார்கள். வாஜ்பாய் தடுத்து அந்த படத்தை மீண்டும் அங்கே வைக்க சொல்லி அவரை வணங்கினார். நேருவால் தான் இந்தியா உயிர்த்தது என்று அவருக்கு தெரியும் ! சிறியன சிந்தியாதான் நேரு ! அவரைப்பற்றி அறிய இந்த இதழ் தி வீக்கை வாங்குங்கள்

 
 

RAW அமைப்பில் ஒரு ரவுண்ட் !


குகன் அவர்கள் எழுதியிருக்கும் இந்திய உளவுத்துறை ரா எவ்வாறு இயங்குகிறது ? என்கிற நூலை படித்து முடித்தேன். ரா என்கிற இந்திய உளவு அமைப்பைப்பற்றி இத்தனை ஆழமான அதே சமயம் சுருக்கமான நூல் இதுவரை தமிழில் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும் . அறுபத்தி ஐந்தின் போருக்கு பின்னர் உருவான ரா அமைப்பு வங்கதேச உருவாக்கத்துக்கு தேவையான ராணுவ பயிற்சி,தகவல் சேகரிப்பு,பிரசாரம் ஆகியவற்றை செய்து சாதித்தது. 

கங்கா என்கிற விமானத்தை பாகிஸ்தானில் வெடிக்க விட்டு அதன் மூலமும் இரு பாகிஸ்தான் பகுதிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படாமல் சாதித்திருக்கிறார்கள். கவ்ஹாடாவில் பாகிஸ்தான் அணுசக்தி சார்ந்து இயங்குவதையும் இந்தியா அறிந்து வைத்திருந்தது. சீனாவை கவனிக்க வைக்கப்பட்ட அமெரிக்க உதவியுடன் தயாரான கருவி காணாமல் போனது திகிலான பக்கம். மாலத்தீவில் உமா மகேஸ்வரன் ஆட்சியை கைப்பற்ற முயன்ற பொழுது அதை இந்தியா ராவின் உதவியுடன் முறியடித்தது சுவையான பக்கம் என்றால் அப்படி நடக்க ப்ளான் போட்டு கொடுத்ததே ரா தான் என்கிற வாதத்தையும் சேர்த்தே நூல் பதிவு செய்கிறது. அந்த மீட்பின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து விலகி மாலத்தீவை இந்தியா பக்கம் சேர்க்கும் கச்சிதமாக நிறைவேறியது !

இந்திரா படுகொலை,ராஜீவ் படுகொலை,மும்பை குண்டுவெடிப்புகள்,கார்கில் யுத்தம்,மும்பை தாக்குதல் ஆகியவற்றில் கோட்டை விடுகிற வேலையையும் ரா செய்திருக்கிறது என்பதையும் நூல் விருப்பு வெறுப்பில்லாமல் சொல்கிறது நூல் . 

சியாச்சினில் பாகிஸ்தானுக்கு முன்னர் முந்திக்கொண்டு போய் நின்றது,இரண்டாவது முறை சீக்கிய பொற்கோயில் உள்ளிருந்து தீவிரவாதிகள் எடுத்துக்கொண்ட பொழுது தொடர் முற்றுகையில் கோயிலை அசுத்தப்படுதவிட்டு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்து காலிஸ்தான் இயக்கத்தின் போராட்டத்தை பிசுபிசுக்க வைத்தது,போக்ரான் குண்டு வெடிப்பை அமெரிக்காவுக்கு தெரியாமல் நிகழ்த்தியது என்று நீளும் ராவின் சாதனைகள் இந்தியா ஒரு நாடாக நீடித்திருக்க அவசியம் என்று அழுத்தமாக பதிவு செய்து நூல் முடிகிறது 
ஆசிரியர் : குகன் 
விலை : தொன்னூறு
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு 
பக்கங்கள் :128