சோவியத் ரஷ்யா உடைந்த தினம் !


சோவியத் ரஷ்யா உடைந்த தினம் இன்று. இரண்டாம் உலகப்போருக்கு பின் சோவியத் ரஷ்யாவும்,அமெரிக்காவும் பல்வேறு முனைகளில் பல்வேறு தளங்களில் பனிப்போரை நடத்திக்கொண்டு இருந்தன . ஸ்டாலின் காலத்தில் 1930 களில் கோர்பசேவின் இரு தாத்தாக்களும் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சைபீரியாவுக்கு நாடு
கடத்தப்பட்டிருந்தனர் .

அப்பா அறுவடை இயந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் ; கோர்பசேவ் சட்டம் படித்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் . எளிய பின்னணியில் இருந்து வந்த இவர் மிகக்குறுகிய காலத்தில் ரஷ்யாவில் மூன்று மூத்த தலைவர்கள் மறையவே,ரஷ்ய புரட்சிக்கு பிந்தைய காலத்தில் பிறந்த கோர்பசேவ் வசம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பதவி வந்து சேர்ந்தது
.பதவிக்கு வந்த பொழுது இவருக்கு வயது 54 .

சில வெளிநாடுகளுக்கு கட்சிப்பணிகள் காரணமாக பயணம் போனார் . மேலும் மக்களுக்கு விடுதலை,ஜனநாயகத்தை அறிமுகப்படுத்துதல்,தேக்கமடைந்து இருந்த
பொருளாதாரத்தை சீர்திருத்துதல் ஆகியன அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆயின.பீர் மற்றும் வோட்காவின் மீதான விலையை ஏற்றினார் ;அதை மிகக்குறைந்த அளவிலேயே அரசாங்கம் உற்பத்தி செய்யும் என்றார் . மது கிடைக்காமல் மக்கள் வாடினார்கள் ;கள்ள சந்தை கொழிக்க ஆரம்பித்தது . இதனால் அரசுக்கு பில்லியன் டாலர்களில் நட்டம் உண்டானது ,28 வருடங்களாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவரை வீட்டுக்கு போங்க என அனுப்பி வைத்தார்

.அமெரிக்காவை நோக்கி நட்புக்கரம் நீட்டினார் ;அணு ஆயுத குறைப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .கூடுதலாக ஆப்கானை விட்டு 28,000 வீரர்களை இழந்திருந்த சோவியத் படைகளை வெளியேற்றினார் . பெர்லின் சுவரை கடந்து மக்கள் போக ஆரம்பித்த பொழுது அமைதி காத்தார் .கிழக்கு ஐரோப்பாவில் தான் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக்கொள்வதாக அவர் அறிவித்த பொழுது உலகமே கொஞ்சம் ஸ்தம்பித்து தான் போனது . அங்கே இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகள் அப்படியே சீட்டுக்கட்டு போல சரிந்தன .

எழுபது வருடங்களாக மறுக்கப்பட்ட பேச்சுரிமை,எழுத்துரிமையை மக்களுக்கு வழங்கினார் ;அரசாங்க அமைப்புகளை விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் கிடைத்தது . தனியார் நிறுவனங்களை முக்கியமான துறைகளில் களமிறக்கினார் ;ஆனால்,மக்கள் ஒரு வேலை உணவுக்கே அலைய வேண்டிய நிலை உண்டானது . ரேசன் முறையில் உலகப்போர் சமயம் போல சாப்பாடு போட வேண்டியதாயிற்று .ஜனநாயகத்தை அமைப்புகளில் கொண்டு வந்தார் ;போரிஸ் யெல்ஸ்டின் மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக உருவாகிக்கொண்டிருந்தார்

கருத்துரிமை கிடைத்ததும் எப்படியெல்லாம் மற்ற நாட்டு மக்களின் குரல் நசுக்கப்பட்டிருந்தது என அவர்களுக்கே புரிய ஆரம்பித்தது . அது வரை அடங்கி இருந்த தேசிய உணர்ச்சி எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது ;மக்கள் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்தார்கள் . நிலைமை ரொம்பவும் மோசமாகி இவரே மூன்று நாள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். தங்களை சோவியத் யூனியனில் இருந்து விடுவித்து கொள்வதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டன .

மண்டேலாவிடம் அவரின் தேசத்தைதாண்டி கவர்ந்த ஆளுமைகள் யார் என்று கேட்ட பொழுது ,”காந்தியை எல்லாரையும் நேசித்து அமைதி வழியில் இணைந்து செயல்படவைக்கும் வழியை சாதியப்படுத்தியதற்காக பிடிக்கும். எந்த கொள்கையினுள்ளே தான் இத்தனை காலமாக வாழ்ந்தோமே அந்த கொள்கையை உள்ளிருந்தே கேள்வி கேட்டு அதன் தவறுகளை ஒத்துக்கொண்டு மாற்றங்களை முன்னெடுத்த கோர்பசேவையும் பிடிக்கும்” என்றார் 

சோவியத் ரஷ்யா இதே தினத்தில் சிதறுண்டது . கோர்பசேவ் பதவியை விட்டு விலகினார் ;அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது . எத்தனையோ பாடங்கள் இவர் வாழ்வில் இருந்து கற்க முடியுமென்றாலும் மிக முக்கியமானது இதுவாகத்தான் இருக்கக்கூடும் -நோயாளி அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாத பொழுது கத்தியை வைத்தால் கோரமான மரணம் தான் முடிவில் கிட்டும்