குறத்தி முடுக்கு – மௌனத்தின் பேரொலி!


ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கின் தெருக்களில் ஒருமுறை நின்றதற்கே மனது பதைக்கிறது. மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்று குறிப்பிடும் ஆசிரியரின் இந்த நாவல் விலைமகளிர் வசிக்கும் பகுதியாக நெல்லையில் வள்ளி குறத்தி முடுக்கு எனும் கற்பனை இடத்தை ஆக்குகிறார்.

தங்கம், மரகதம், செண்பகம், தேவயானை, பெயரே இறுதிவரை சொல்லப்படாத நாயகனான பத்திரிக்கையாளன் என்று இவர்களைக் கொண்டு மனித மனதின் வெவ்வேறு தளங்கள், ஆசைகள், வலிகள், கனவுகளைத் தொட்டுக் காண்பிக்கிறார். நாயகன் தங்கத்திடம் முதல்முறை இன்பம் துய்க்க போகையில் அவள் வெகு வாஞ்சையோடு நடந்து கொள்ள அது மேலும் பணம் பிடுங்கவோ என்று அவன் மனம் அலைபாய்கிறது. அவனை அவள் வருடும் பொழுது அவனின் கையோ பேன்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறது.
இந்தக் கதையில் வரும் விலைமகளிர் மனதில் அத்தனை ஆழமானவர்களாக இருக்கிறார்கள்.

செண்பகம் தனக்கொரு மகள் வேண்டும் என்று கருவை சுமக்கிறாள். ஐந்து நிமிடத்தில் இச்சை தீர்க்கும் ஒரு மிருகத்திடம் அவளின் கெஞ்சலும், கனவும் என்னானது என்பதை மெல்லிய வார்த்தைகளால் மனத்தைக் கீறுகிற வகையில் ஆசிரியர் படைத்துவிடுகிறார். ‘அவன் முகத்தில் பிரசவ வேதனை தாண்டவமாடியது’ என்கிற வரியில் தான் எத்தனை முரண்?

தங்கத்திடம் ஆசை கொண்டு அதைக் காதல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறான் நாயகன். அவளுக்கு ஏற்கனவே நடராஜன் என்பவனுடன் திருமணம் ஆகியிருந்ததையும், அவன் பல்வேறு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்ததையும் சொல்லும் தங்கத்தை அவ்வப்பொழுது அவன் சந்திக்கிறான். நாயகன் போலீசில் மாட்டிக் கொண்ட அவளைக் காப்பாற்ற அவள் சொன்னபடியே தான் தங்கத்தைத் திருமணம் செய்துகொள்ள உள்ளவன் என்று சாட்சி சொல்கிறான். அதற்குப் பிறகு தங்கம் திருமணம் செய்ய மறுக்கிறாள்.

திடீரென்று காணாமல் போகும் தங்கத்தை வேறொரு ஊரில் குழாயடியில் தண்ணீர் தூக்கியபடி கண்டெடுக்கும் நாயகனும், அவளும் மேற்கொள்ளும் உரையாடலில் எந்தப் பெருத்த ஆரவாரமோ, உணர்ச்சிக் கொந்தளிப்போ வெளிப்படையாக இல்லை என்றாலும் அடுத்தடுத்த பக்கங்களில் நமக்குத் தரப்படும் அதிர்ச்சியும், நிராசையோடு கூடிய மனதுக்கு இனியவனுடனான வாழ்க்கையின் கனவுகளுமாகத் தங்கம் அவலத்தின் உச்ச நாயகியாக முழுமை பெறுகிறாள்.
சாவதற்கு முயன்று அதற்கு வழியில்லாமல் கீழே விழுந்து அடிபடும் தேவயானையின் கதையோடு முடியும் நாவலில் சமூகத்தால் அணு அணுவாக அழிக்கப்படும் பெருவலியின் மவுன ஓலம் ஒலிக்கிறது. வள்ளி குறத்தி முடுக்கில் உண்மையான தேவயானைகளா வந்து சிக்குவார்கள்? என்று நாகராஜன் கேட்கும் கேள்வி நம் சமூகத்தின் மனவெளியில் சலனம் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
காலச்சுவடு கிளாசிக் வெளியீடு

விலை: 100
பக்கங்கள்: 80

Advertisements