ஆண்,பெண் உயிர்மொழி !


உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி நூலை வாசித்து முடித்தேன். நூற்றுக்கு சற்றே அதிகமான பக்கங்கள் இருக்கும் இந்த நூலை படித்து முடிக்கும் பொழுது பரிணாமத்தின் வளர்ச்சியில் நடக்கும் ஆண்-பெண் இருவருக்கும் இடையேயான போராட்டத்தின் பிரமிப்பை உணர்வீர்கள். 

தங்களுக்கான இணையை தெரிவு செய்கிற உரிமை பெண்களிடமே ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் அதை ஆண் பறித்துக்கொண்டான். பொனோப்போ என்கிற மனிதர்களோடு இரண்டு சதவிகிதம் அளவுக்கே வித்தியாசமுள்ள ஜீன் கட்டமைப்பை கொண்டுள்ள வானர இனத்தில் தாயே தலைமை தாங்குகிறாள். சிம்பன்சிக்களிலும் அப்படியே. தாய் தெய்வங்களே ஆரம்ப கால தெய்வங்களாக உலகம் முழுக்க அதிகமாக காணப்படுகின்றன. பண்டைய இலக்கியங்களும் அப்படியே வழிமொழிகின்றன. 

ஆண்கள் பாலியல் ரீதியான உணர்வுகளை தாயின் ஸ்பரிசத்தில் இருந்தே முதன்முதலில் பெறுகிறார்கள் என்பதை ஹாரி ஹார்லோ சிம்பன்சி குட்டியை தன்னுடைய தாயிடம் இருந்து பிரித்து வைத்திருந்த குட்டி பெண் மோகமே இல்லாமல் இருந்ததன் மூலமும்,மோரிஸ் என்பவரும் தன்னுடைய மனைவியின் அரவணைப்பில் வளர்ந்த குட்டி அவ்வாறே இருப்பதை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். மீனி என்கிற அறிஞர் தாயால் நக்கப்படாத எலி கலவியலில் சரி வர இயங்குகிற இணைப்புகளை பெற முடியாமல் போனதை கண்டறிந்து மேலும் அதிர்ச்சி சேர்த்தார். இவ்வாறு மரபணு முன்னேற்றத்துக்கு அன்னையின் பங்களிப்பு தேவை. 

தாயின் கருவில் ஆரம்ப காலத்தில் இருக்கிற பொழுது எல்லாருமே பெண்ணாக தான் முதலில் இருக்கிறோம். அதற்குபின்னரே எக்ஸ் குரோமோசோம் வெளிப்பட்டு ஆணாக மாறுகிறார்கள் சிலர். ஆண்களின் வீரியத்தை பரிணாமத்தின் ஆரம்பகாலத்தில் அறிந்து கொண்டு பெண்கள் தெரிவு செய்ய பயன்படுத்தியது ஆணின் கலவி வீரியத்தையே. அதற்கு ஈடுகொடுக்க பாக்குலம் என்கிற எலும்பை துறந்து ஆண்கள் ஈடு கொடுத்தார்கள். அதற்கு பின்னர் வேட்டுவ குணம் முன்னிலைப்பட அதில் வென்ற ஆணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதற்கு பின்னர் ஆயுதம் ஏந்தி போராடி வென்றவன் தெரிவில் முன்னணியில் இருந்தான். பின்னர் அதுவும் போய் அறிவாளி தேர்ந்தெடுக்கப்பட்டான். பெண் உடலுறவில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க ஆணே அதிகம் இயங்க வேண்டியது ஆயிற்று. உருவம் அறிந்து பொருந்தும் திறன் அவனுக்கு அதிகம் தேவைப்பட்டது. அதற்காக உருவம் அறிந்து பொருந்தும் குணமான stereognesis வளர்ந்தது. அது பிற துறைகளிலும் அவனை பெரிதாக இயங்க வைத்தது. அதே சமயம் அவனின் பேச்சு,உணர்வுகளை உணரும் திறன் ஆகியன மங்கின. கண்களைத்திறந்து கொண்டே ஒரு பெண் கலவியில் இன்பமுற்றால் மட்டுமே அவனுடைய உடலில் பரவசமூட்டும் சுரப்பிகள் சுரந்தன. பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு ஸ்பரிசத்தை உணர்தலை செய்தார்கள். 

ஆரம்பத்தில் சொன்ன மரபணு முன்னேற்றத்துக்கு பிறகு குட்டியை அதன் போக்கில் தன்னுடைய சந்ததியை பெருக்கும் ஜீன்களை கொண்டிருக்கும் இணையை தேடி நகர்வதற்கு அன்னை அனுமதிப்பதே எல்லா விலங்குகளிலும் வழக்கம். 

ஆனால்,மனித பெண்கள் இதை பெரும்பாலும் செய்வதில்லை. காரணம் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் இருந்து வெகு காலத்துக்கு முன்னரே பறிக்கப்பட்டு விட்டது. சீதை எப்படி ராமனை தேர்வு செய்தாள் என்பதை பார்த்தாலே அவ்வுரிமை நிலவி இருக்கிறது என்பது புலப்படும். பெண்கள் கல்வி கற்க முடியாத முட்டாள்கள்,கடவுள் உன்னை ஈனமாகவே படைத்தார் என்கிற பொய்கள்,அவர்கள் வெளியே வரக்கூடாது,கற்பை போற்றி அவர்கள் இயங்க வேண்டும்,கணவனை மீறக்கூடாது என்று அவளை திட்டமிட்டு ஆணினம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தன்னுடைய பாலியல் தேவைகளை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனக்கு பிறக்கும் ஆண் வாரிசுகளை கொண்டு பெண்கள் தீர்க்க ஆரம்பித்தார்கள். அப்படி உண்டாகி நிற்பது தான் அம்மா செண்டிமெண்ட்,மருமகளிடம் மகனை சேரவிடாமல் தடுக்கும் அம்மாக்கள்,பையனை திருமணம் பக்கம் ஒதுங்கவே விடாமல் தடுக்கும் தாய்மார்கள். ஆணுக்கு தான் பேச்சிலும்,உணர்வுகளை கப்பென்று பிடித்துக்கொள்வதிலும் சாமர்த்தியமில்லையே ? அதனால் அவனை வேலைகள் செய்ய விடாமல் தடுத்தும்,அம்மா செண்டிமெண்ட் மூலமும்,குரலை மாற்றியும் பெண்கள் தங்களின் ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது. 

விகடன் பிரசுரம் 
பக்கங்கள் :128
விலை : எழுபது