லீலா சேத்


இன்று காலையில் இருந்து செய்தித்தாள் வாசிக்கவில்லை. லீலா சேத் இறந்துவிட்டார் என்று இப்பொழுது தான் தெரிந்தது. மனம் கனத்து இருக்கிறது. அவரின் ஒரே ஒரு நூலை வாசித்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். லண்டனில் பார் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் லீலா. ‘போயும் போயும் ஒரு பெண் முதலிடம் பெற்று விட்டார்’ என்று அந்தச் சரித்திர சாதனையை லண்டனின் செய்தித்தாள்கள் எதிர்கொண்டன.

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தார் லீலா. பெண் வழக்கறிஞர்கள் பெண்கள் சார்ந்த வழக்குகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற பொது விதியை மீறி சாதித்தார். நீதிமன்றத்தில் வரிகள் சார்ந்த வழக்குகள், கிரிமினல் வழக்குகள் என்று அனைத்திலும் கலக்கி எடுத்தார். டெல்லி உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதியாக ஆனார். ஹிமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றார். நிற்க.

லீலா சேத் அவர்களின் ‘TALKING OF JUSTICE’ நூலில் பெண்களின் சம உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருப்பார். எப்படிப் பெண்கள் குறித்து நீதிமன்றங்கள் பிற்போக்கான பார்வையைக் கொண்டிருந்தன என்பதையும், எப்படி நீதிபதிகள் அடையாளங்கள், முன்முடிவுகள் தாண்டி இயங்க வேண்டும் என்று அற்புதமாக விளக்கி இருப்பார். உலகளவில் புகழ்பெற்ற நீதித்துறை வல்லுநர்கள், உள்ளூர் வழக்குகள், எளிமையான எடுத்துக்காட்டுகள் என்று முன்பின்னாகப் பயணித்து அந்த நூலில் நீதி எப்படி மனித நேயத்தோடு, சமூகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் பங்களிக்க வேண்டும் என்பதை விளக்கி இருப்பார். சிறைக்கூடங்கள் சித்திரவதை கூடங்களாக இருப்பதை கவலையும், கரிசனமும் கலந்து குறித்திருப்பார்.

18221895_1491618317535906_3971248867486467767_n.jpg

அம்பேத்கர்-நேரு இணைந்து கொண்டு வந்த இந்து சிவில் சட்டத்தில் பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் உரிமை என்கிற பிரிவு இருந்தது. எனினும், அடிப்படைவாதிகளின் எதிர்ப்பால் இந்து சிவில் சட்டம் பல்வேறு பாகங்களில் நேருவால் பிரித்து நிறைவேற்றப்பட்டது. எனினும், நேரு பரம்பரை சொத்தில் பெண்களுக்குப் பங்கு என்கிற பிரிவை மீண்டும் சேர்க்கவில்லை. ஐம்பது வருடங்கள் கழித்து அந்தச் சட்டப்பிரிவை மீண்டும் சேர்ப்பதற்கான சட்ட வரைவை லீலா அவர்களே உருவாக்கினார். ஐம்பது வருடங்கள் கழித்துப் பரம்பரை சொத்தில் பெண்களுக்கு உரிமை என்பது சாத்தியமானது. அதற்கு இருபது வருடங்களுக்கு முன்னரே மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் நிறைவேற்றின என்றும் தன்னுடைய நூலில் பதிவு செய்கிறார்.

லீலாவின் மகன்களில் ஒருவர் ஒரு பால் சேர்க்கையாளர். அவர்களுக்குக் கூடுதல் அன்பு தேவைப்படுகிறது என்றவர் உச்சநீதிமன்றம் 377 சட்டப்பிரிவு செல்லாது என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதிய ஆவணத்தை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும். India: You’re Criminal If Gay

நிர்பயா வழக்கிற்குப் பிறகு வன்புணர்வு சார்ந்த வழக்குகளை மறு ஆய்வு செய்யும் நீதியரசர் ஜெ.எஸ்.வர்மா குழுவில் அவர் உறுப்பினராக இணைந்தார். 80000 பரிந்துரைகளைக் குழுவினரோடு இணைந்து பரிசீலித்தார். கொலைக்குற்றத்துக்கு ஏற்கனவே இந்திய குற்றச்சட்டத்தில் மரணத் தண்டனை இருப்பதால் தனியே வன்புணர்வுக்குத் தூக்குத் தண்டனை வேண்டாம் என்று குழு பரிந்துரை செய்தது.

அதே போல வன்புணர்வு என்பது இரு பாலரையும் உள்ளடக்கியதாக, வன்புணர்வில் பாதிக்கப்பட்டவர்கள் பகுப்பில் பெண்களோடு, ஆண்கள், மாற்றுப் பாலினத்தவர் ஆகியோரையும் இணைக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரை செய்தது. இவை இரண்டையும் அரசு ஏற்கவில்லை.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவன் பாலியல் வன்புணர்வில் கொடூரமாக ஈடுபட்டதால் சட்டத்தை மாற்றி அமைத்து பதினாறு வயது நிறைந்தவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கலாமா என்பதை அக்குழு கவனத்தில் கொண்டது. ஒரு பதினெட்டு வயதுக்கு உட்பட்டவரின் மூளையின் நரம்பியல் வளர்ச்சி, வளர்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தது. மூளை போதுமான வளர்ச்சி அடையாத காலம் என்பதோடு, ஐநாவின் குழந்தைகளுக்கான உரிமைகள் சொல்வதைப்போலச் சிறையில் சிறுவர்களைத் தள்ளுவது கொடூரமான குற்றவாளிகளை உருவாக்கும் என்பதையும் கருத்தில் கொண்டார்கள். சிறார் சீர்திருத்தப்பள்ளிகளைப் பெருமளவில் மாற்றியமைக்க வேண்டும் என்று குழு பரிந்துரை செய்தது. பதினெட்டு வயது வரம்பை குறைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. பதினாறு வயதாக வயது வரம்பு பின்னர் நாடாளுமன்றத்தால் குறைக்கப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட வன்புணர்வு சார்ந்த சட்டங்களில் ஆணாதிக்கப் பார்வை மிகுதி. கள்ளக்காதலில் பெண்கள் ஈடுபட முடியாது எனவே அவர்களுக்கு அவற்றில் தண்டனை இல்லை என்பதன் பின்னால் பெண்ணுக்கு தன்னுடைய உடலின் மீது எந்த உரிமையும் இல்லை என்கிற எண்ணம் இருக்கிறது. இதனுடைய இன்னொரு பரிமாணமாக இங்கிலாந்தின் அக்காலத்து ‘COMMON LAW OF COVERTURE’ பெண்ணுக்குத் திருமணம் ஆனது முதல் தன்னுடைய கணவன் எப்பொழுது எல்லாம் விரும்புகிறானோ அப்பொழுது எல்லாம் கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டும் என்றது. இங்கிலாந்து அந்தப் போக்கில் இருந்து நகர்ந்து விட்டாலும் இந்தியா இன்னமும் திருமண உறவில் இருக்கும் வன்புணர்வை தண்டிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் திருமண உறவில் இருக்கும் கணவன் மனைவியை விருப்பமின்றி வன்புணர்வு செய்வது கிரிமினல் குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் லீலா சேத்.

அந்தக் குழு திருமண வன்புணர்வை தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற சொன்னது. கணவன் என்பதற்காக வன்புணர்வுக்கான தண்டனை அளவு குறைக்கப்படக் கூடாது என்றும், திருமண உறவு என்பது வன்புணர்வை, பாலியல் அத்துமீறலை நியாயப்படுத்தும் காரணம் அல்ல என்றும் குழு பரிந்துரை செய்தது. எனினும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட தன்னுடைய மனைவியோடு கணவன் கொள்ளும் உடலுறவு, புரியும் பாலியல் செயல்கள் வன்புணர்வில் அடங்காது என்று இந்திய குற்றச்சட்டம் பிரிவு 375 ல் உள்ள விதிவிலக்குப் பேசுகிறது. லீலா சேத் வருங்காலத்தில் திருமண உறவில் செய்யப்படும் வன்புணர்வு குற்றத்துக்குரிய தண்டனையாக மாறும் என்று நம்புவதாகச் சொல்வதோடு, ‘திருமண உறவு ஒன்றும் மனைவியின் சட்டரீதியான, பாலியல் ரீதியான சுயத்தை அழிக்கும் கருவி அல்ல.’ என்கிறார். டீனேஜ் ரொமான்ஸ், மனம் ஒத்த உடலுறவு ஆகியவற்றில் பதினாறு வயதுக்கு மேற்பட்ட யார் ஈடுபட்டாலும் குற்றத்தண்டனை வேண்டாம் என்கிற பரிந்துரை வழங்கப்பட்டது. அரசு அதையும் ஏற்கவில்லை.

ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து தொல்லை தருபவன் யார் என்று தெளிவாக இவர்கள் பரிந்துரையில் வரையறுக்கப்பட்டது. மேலும், பெண்ணை இணையம், மின்னஞ்சல், மின்னணு தொடர்புகள் மூலம் விருப்பமில்லாத பெண்ணைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்கிற பரிந்துரை ஏற்கப்பட்டது. அமில வீச்சு ஒரு தனிக் குற்றமாக இணைக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு சட்டப்பணிகளில் ஈடுபட்ட லீலா சேத் நீதித்துறையில் மனிதமும், சட்டத்துறை பேரறிவாலும் பிரமிக்க வைத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக பழிவாங்குவது அல்ல சட்டத்தின் இலக்கு, மேம்பட்ட சமுதாயத்தைச் சமைப்பதே ஆகும் என்பதை உளமார உணர்ந்தவராக இருந்தார். தன்னுடைய உடலையும், உடல் உறுப்புகளையும் தானம் செய்துவிட்ட அம்மாவுக்குக் கண்ணீர் நிறைந்த அஞ்சலிகள். நீதி குறித்து மேலும் பேசுவோம் அன்னையே!