டோரத்தி ஹாட்கின் எனும் உன்னத ஆய்வாளர்


டோரத்தி ஹாட்கின் என்கிற பெயர் உயிரி வேதியியல் துறையில் எப்பொழுதும் தனித்து நிற்கிற ஒரு பெயர். எகிப்தில் இங்கிலாந்து தாய் தந்தைக்கு பிறந்தவர் அவர். பெற்றோர் அங்கே அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். விடுமுறை காலத்தில் இங்கிலாந்துக்கு தங்க வந்தவர் உலகப்போரால் இங்கேயே தங்கிவிட்டார். அப்படியே இங்கிலாந்தில் கல்வி பயில ஆரம்பித்தார் 

கேம்ப்ரிட்ஜ்,ஆக்ஸ்போர்ட் என்று நீண்ட அவரின் கல்விக்காலத்திலேயே அவரின் கவனம் படிகவியல் துறை பக்கம் திரும்பியது. படிகங்களின் வழியாக எக்ஸ் கதிர்களை செலுத்தி மூலக்கூறுகளின் உருவத்தை கண்டுபிடிப்பதில் அவரின் ஆர்வம் நகர்ந்தது. அப்படி அவர் முதன்முதலில் ஆய்வு செய்தது செரிமானத்துக்கு உதவும் பெப்சினை ! 

முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் அவருக்கு கைகள் எரிய ஆரம்பித்தன. சோதித்து பார்த்ததில் RHEUMATOID ARTHRITIS இருப்பது தெரிந்தது. வீல்சேரில் தான் வாழ்க்கை என்று ஆன சூழலில் அப்படியே டோரத்தி தேங்கி விடுவார் என்று பலர் நினைத்தார்கள் அப்பொழுது அயல்நாட்டில் நடந்த கருத்தரங்கிற்கு வீல்சேரில் போய் வந்து தான் துவண்டு விடவில்லை என்று உலகுக்கு அறிவித்தார். கொழுப்பின் வடிவத்தை எக்ஸ் ரே படிகவியலின் மூலம் கண்டறிந்தார் அவர். எட்டு வருட உழைப்புக்கு பின்னர் விட்டமின் B 12 இன் உருவத்தை கண்டறிந்தார். 

அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அன்றைய சூழலில் நோபல் பரிசு பெற்ற மூன்றாவது பெண்மணி ஆனார் அவர். அத்தோடு அவர் ஓய்ந்திருக்கலாம். டி.என்.ஏ.வின் உருவத்தை எக்ஸ் ரே படிகவியல் முறையின் மூலம் வாட்சன் க்ரிக் ரோசாலின்ட் ஏற்படுத்திய அடிப்படைகளின் மூலம் கண்டிருப்பதை அறிந்து காரில் பல பேரோடு ஆக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து கேம்ப்ரிட்ஜ் வரை கிளம்பிப்போய் பார்த்துவிட்டு வந்தார். இன்சூலினை ராபின்சன் அவருக்கு அறிமுகப்படுத்தி இருந்தார். அதன் உருவத்தை கண்டுபிடிக்க தன்னுடைய இளம் வயதில் இருந்தே அவர் முயன்று கொண்டிருந்தார். ஒரு வருடம் இரண்டு வருடமில்லை முப்பத்தைந்து வருடகால உழைப்புக்கு பின்னர் அந்த இன்சூலினின் சிக்கலான உருவம் அவருக்கு புலப்பட்டது. “என் வாழ்வின் நெகிழ வைக்கும் சிறந்த தருணம் இது !” என்று கண்ணீரோடு பதிவு செய்தார் அவர். பெனிசிலினின் உருவத்தையும் அவர் கண்டறிந்தார் . இந்த கண்டுபிடிப்புகள் மருந்துகளின் செயல்வேகத்தை அதிகப்படுத்த உதவின . 

கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக பாடுபட்டார் அவர். அவரின் சோவியத் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக அவர் அமெரிக்காவுக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்தது அமெரிக்கா. அவர் ஹங்கேரியை அநியாயமாக சோவியத் ரஷ்யா தாக்கியதும் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சிப்பதவியை துறந்தார். “நான் வேதியியல் மற்றும் படிகங்கள் ஆகியவற்றில் மூழ்கி ஆனந்தப்பட படைக்கப்பட்டவள் !” என்ற அவர் தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் நிம்மதியை கொண்டுவந்தார் அவர் என்றால் மிகையில்லை. அவரின் பிறந்தநாள் இன்று.