டெண்டுல்கர் VS கோலி! சச்சின் ரசிகர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளப் பயப்படுகிறார்களா?
ஆஸ்திரேலியாவை கோலி அடித்துத் துவம்சம் செய்த, 82 (51) ரன்களை அள்ளிய ஆட்டம் மீண்டும் டெண்டுல்கர், கோலி இருவரில் யார் மேலானவர்? என்கிற விவாதத்தை உயிர்ப்பித்து உள்ளது. சார்ஜாவில் 1998-ல் கங்காருக்களுக்கு மரணபயத்தைச் சச்சின் காட்டிய ஆட்டத்துக்குச் சற்றும் சளைத்தது இல்லை இந்த ருத்ர தாண்டவம். அதே சமயம், மேலும் விவாதத்தைத் தொடர்வதற்கு முன் ஒரு எச்சரிக்கை அவசியம் தேவை. சச்சின், கோலி இருவரையும் ஒப்பிடுவது பல்வேறு காரணங்களுக்காகச் சரியான ஒன்றல்ல. இருவரும் வெவ்வேறு சகாப்தங்களில் ஆடியவர்கள். அந்தக் காலங்கள் ஓரளவுக்கு ஒன்றிப்போயின என்றாலும் அவர்களின் காலங்கள் வேகமாக மாறும் கிரிக்கெட் விதிகள், ‘கிரிக்கெட் ஆட்டம்பற்றி மனநிலை’ ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தனித்துவமானவை. T-20 யின் வருகை கிரிக்கெட்டின் எல்லைகளை, அடித்து அடையும் ஸ்கோர்களை, நொறுக்கித் தீர்க்கும் பாணியை, அடையக் கூடிய இலக்குகளை ஏற்றிக்கொண்டே போகிறது.
அதனால் என்ன? இந்த ஒப்பீடு நியாயமற்றது என்பதற்காக, அந்த ஒப்பீடு நிச்சயம் பிரபலமற்றது இல்லை. நாம் அனைவரும் ஒப்பீடுகளை விரும்புகிறோம். நமக்குப் பிடித்த கிரிக்கெட் நாயகனுக்குச் சாதகமாக இந்த ஒப்பீடு அமையும் என்றால் பெருத்த அலப்பறையைக் கொடுப்போம். நம்முடைய இதய நாயகருக்குச் சாதகமாக ஒப்பீடு இல்லையென்றால் மட்டுமே ஒப்பீட்டை நாம் தவிர்ப்போம். அப்பொழுது கூட, பல்வேறு சாதனைப்பட்டியல்களைத் தோண்டித் துழாவி நம்முடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் ஒரே ஒரு ஆதாரத்தையாவது தந்துவிடத் துடிப்போம். நாம் தேடிக் கண்டடையும் புள்ளிவிவரங்களில் நாம் விரும்புவதை அழுத்தமாய்ச் சொல்லும் மறைமுக நோக்கம் உள்ளது. கிரிக்கெட் எனும் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்டத்தில் புள்ளிவிவரங்கள் அவரவரின் தேர்வுக்கு ஏற்ப பயன்படுத்துவது இயல்பான ஒன்றுதானே?

இப்பொழுது குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வருவோம்! டெண்டுல்கர் ரசிகர்கள் மாய உலகத்தில் மறுதலிப்பில் வாழ்கிறார்களா? தேர்வு செய்யும் சூழல்கள், புள்ளிவிவரங்கள் இரண்டுமே முக்கியம் என அறிந்திருக்கும் நமக்குக் கோலி சச்சினை விட முழுமையான, மேலான ஆட்டக்காரர் என்பது புரியவில்லையா? கோலி பெரிய ஸ்கோர்களைச் சேஸ் செய்யும் ஆட்டங்களில், ரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் அழுத்தம் மிகுந்த ஆட்டங்களில் அற்புதமாக வெளிப்படுகிறார் என்பதும், அத்தகைய சூழல்களில் சச்சின் சொதப்புவது அடிக்கடி நிகழ்ந்த ஒன்று என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லையா? அணிக்காக ஆடுவதை விடத் தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக ஆடுகிறார் என்கிற கூர்மையான விமர்சனத்தைச் சச்சின் தன்னுடைய காலத்தில் எதிர்கொண்டார் அல்லவா? இது ஒற்றைத் தரப்பின் குரலாக இருந்தாலும் அப்படிப்பட்ட குறைபாடு கோலியிடம் இருப்பதாகக் கூட யாரும் எண்ணுவதில்லை.

டெண்டுல்கர் சொதப்பித் தள்ளுபவராக இருந்தார். டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்க்ஸ்களில், பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில், மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்கையில், இக்கட்டான சூழலில் எல்லாம் சச்சின் ரசிகர்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேசமயம், கிரிக்கெட்டின் மகத்தான திருவிழாவான உலகக்கோப்பையில் மற்ற அனைவரை விடவும் அதிகமான ரன்களை அடித்தவராக எட்டுவதற்கு அரிய இடத்தில் சச்சின் நிற்கிறார். சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 2008–ல் அவர் நான்காவது இன்னிங்க்ஸ் விளாசிய 103* கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது இன்னிங்க்ஸில் அடிக்கப்பட்ட அற்புதமான சதங்களில் ஒன்று. அதே வருடம் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் போட்டிகளில் அடுத்தடுத்துச் சிட்னியில், பிரிஸ்பேனில் அவர் விளாசிய 117*, 91 ரன்கள் இந்தியாவை வெற்றி பெற வைத்தன. சச்சினின் மகத்தான சாதனைகள் கொண்ட நெடிய பட்டியல்கள் குறித்தும் அவர் தலையில் சுமந்த ஆட்டம் அவர் விக்கெட் விழுந்த பின்னர் என்ன ஆனது என்பதைக் குறித்தும் பேசிக்கொண்டே இருக்கலாம். டெண்டுல்கர் ஓபனிங் பேட்ஸ்மேன், அவர் ஆட்டத்தை முடித்து வைப்பவர் அல்ல என்பதையும் சொல்லவேண்டும். அதே சமயம், கோலியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை. அவர் மூன்றாவதாகக் களமிறங்கி தூள் கிளப்புகிறார். கோலி மனித பலவீனங்களை ஓரங்கட்டிவைத்தவர் போல லாவகமாக ஆடி தன்னைச் சுற்றியிருக்கும் சவால்களைச் சாய்த்து சிரிக்கிறார்.
சச்சின் பலவீனங்களால் ஆனவர் தான். ஆனால், அந்தப் பலவீனங்கள் தான் அவரை முழுமையானவர் ஆக்கியது. அவரின் பின்னங்கால் கவர் டிரைவ், லெக் ஃப்ளிக்கைப் போலவே அவரின் பலவீனங்கள், காயங்கள் ‘டெண்டுல்கர்’ என்கிற புலப்படாத புதிரை
முழுமையாக்கின. ஒரு மகத்தான வீரர் அவரின் வெற்றிகளை விடத் தோல்விகளாலேயே நினைவுகூரப்படுகிறார் என்பது சச்சினின் புகழ்பாடுபவர்களின் வாதமாக இருந்து வந்திருக்கிறது. பயங்கரமான வக்கார் யூனுஸின் பந்தை ரத்தம் கொட்டும் மூக்கோடு எல்லைக் கோட்டுக்கு விரட்டியது, 2003 உலகக்கோப்பையில் டர்பனின் கிங்க்ஸ்மீட் மைதானத்தில் ஐந்தடி ஐந்து அங்குலம் உயரம் கொண்ட சச்சின் நின்று கொண்டிருந்தார். அவரைவிட ஒரு அடி கூடுதல் உயரம் கொண்ட ஆண்ட்ரூ காடிக்கின் பவுன்சரை சிக்சருக்கு விரட்டினார் சச்சின். இப்படி எத்தனை மறக்க முடியாத நினைவுகள்.

டெண்டுல்கர் எனப்படும் பெருங்கதை நீடித்துக்கொண்டே இருந்தது. கிரிக்கெட்டின் கடவுள் என்கிற பட்டம் சச்சினுக்குப் புராண நாயகர்களைப் போல வழங்கப்பட்டது ஒன்றும் எதேச்சையான ஒன்றில்லை. மரியாதை புருஷோத்த ராமன் தன்னுடைய குறைபாடுகளோடு கொண்டாடப்படுவதைப் போலவே சச்சினும் குறைபாடுகளோடு திகழ்ந்தார். சச்சின் ஆடிய காலம் அவரின் ஆட்டத்தைப் புதிரான ஒன்றாகக் காட்டியது. பொருளாதாரத் தாராளமயமாக்கல், வருமான வளர்ச்சி, டிவி பெட்டிகளின் பெருக்கம் என்று பல அதற்குத் துணைபுரிந்தன. டிவி செட்களின் பெருக்கம் இரண்டு காவியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அவை பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம், சச்சின் எனும் காவிய நாயகனின் மகத்தான ஆட்டம் ஆகிய இரண்டுமே ஆகும். மகாபாரதம் இந்தியாவின் புராண கலாசாரம், விழுமியங்களில் இருந்து பெறப்பட்டது என்றால், சச்சினின் எழுச்சி வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகத்துக்கு ஏற்றபடி தன்னைத் துரிதமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் இந்தியாவின் தாகத்தைக் கண்முன்னால் நிறுத்துகிற ஒன்றாக இருந்தது. அந்தத் தொலைக்காட்சி தொடரைவிடச் சச்சின் நீடித்து நின்றார்.
ஒருமுறை என்னுடைய முகநூல் டைம்லைனில் இப்படி எழுதினேன்: ‘ டான் பிராட்மன் கூடுதலான சராசரியை கொண்டிருக்கிறார், லாரா நெடிய இன்னிங்க்ஸ் ஆடி அசத்துகிறார், ராகுல் திராவிட் கூடுதல் நம்பகத்தன்மையைத் தருகிறார், விவ் ரிச்சர்ட்ஸ் இன்னமும் வேகமாக அடித்து ஆடினார், கேரி சோபர்ஸ் இன்னமும் முழுமையான கிரிக்கெட் வீரராக இருந்தார். எனினும், இந்தியா என்கிற ஏழை தேசத்தின் மக்களை இவர்கள் யாரும் சச்சினை விட அதிகமாகப் பெருமிதம் மிகுந்தவர்களாக, பணக்காரர்களைப் போல மகிழ்ச்சியுடைவர்களாக உணரவைக்கவில்லை!’ இதைவிடச் சுருக்கமாக ஹர்ஷா போக்லே ‘சச்சின் நன்றாக ஆடினால், இந்தியா நிம்மதியாகத் தூங்கப் போகிறது.’ என்றார். மும்பையில் 26/11 தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட பிறகு அவர் அடித்த சத்தம் காயப்பட்ட தேசத்துக்குச் சச்சின் எனும் கடவுள் தடவிய மருந்தை விட வேறென்ன மகத்தான ஆறுதல் இருக்க முடியும்?

சச்சினின் பெருங்கதை என்றுவிட்டு சச்சினின் பலவீனங்களை மட்டுமே நான் குறிப்பாகப் பேசுவதாகச் சிலர் நினைக்கலாம். சச்சினின் குறைபாடுகள், பலவீனங்கள் அவரின் காவிய கதையை ஆச்சரியப்படும் வகையில் முழுமையாக்கின என்பதையே சுட்டிக்காட்டுகிறேன். இதனால் அவரின் வெற்றிக்கு ஆர்ப்பரித்த தேசம், அவரின் தோல்விகளுக்குக் கண்ணீர் வடித்தது. ஒரு மகத்தான எழுச்சியால் இருக்கையில் முழுமையாகப் பிணைக்கப்பட்டு ஆட்டத்தை ரசித்த அதே ரசிகர்கள், தீரா வேட்கையோடு அவரின் வெற்றிக்காகப் பிரார்த்தனைகள் செய்வதும் நிகழ்ந்தது. அவர் கடல் போன்ற நம்பிக்கையாளர்களை உருவாக்கினார். அவரின் முழுமையின்மை இதற்கு ஒரு முக்கியக் காரணம். கச்சிதம் என்பது ஒற்றைப்படையாக மாறி, ரசிகனை சிரிக்கவும், அழவும் வைக்காமல் சலிப்புக்கு ஆளாக்குகிறது. இந்தக் குறைபாடுகளோடு கூடிய சச்சினின் பயணம் அவரையும், ரசிகரையும் இணைக்கிற மாயத்தை நிகழ்த்தியது.
இந்தக் கதை, நம்பிக்கைகள் எல்லாம் முழுக்கவும் கற்பனையான ஒன்றோ, மூட நம்பிக்கைகளால் மட்டுமே ஆன ஒன்றோ அல்ல. இவை எந்தப் பயனும் அற்ற வீணான கதைகளும் இல்லை. இவை சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றன. சஞ்சீவ் சன்யால் சொல்வதைப் போல, ‘பழங்கதைகள் பண்பாட்டின் நினைவுகள்- எண்ணங்களின் நினைவுகள், தத்துவங்களின் விவாதங்கள், மக்களின் மிக ஆழமான அச்சங்கள், அளவில்லாத ஆனந்தங்கள் ஆகியவற்றின் தொகுப்பு அது. பழங்கதைகளை முழுமையாகத் துறக்கிற சமூகம் உதிர்ந்து, அழிந்து போகிறது.’ கோலியும் சச்சின் என்கிற பெருங்கதையை நம்புகிற ஒருவராக இருந்தார். மற்றவர்களைப் போல அவருக்கும் சச்சினே ஆதர்சமாக இருந்தார். அவரைப்பற்றிப் பேசுகிற பொழுது தான் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுவதாகக் கோலி வாக்குமூலம் தந்தார். சச்சினை அவரின் இறுதி உலகக்கோப்பையின் பொழுது தன்னுடைய தோள்களில் கோலி தாங்கிக் கொண்டு கம்பீரமாக நடந்தார். இதற்கு முன்னால் ஈடன் கார்டனில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைச் சதம் விளாசிய பொழுது சச்சினை நோக்கி தலை வணங்கி மரியாதை செலுத்தினார்.

இத்தனை பலவீனங்களைத் தாண்டியும் கோலியை விடச் சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமடங்கு மேலான இடத்தில் இருக்கிறார். நல்ல கிரிக்கெட் வீரருக்கு அடையாளமாக டெஸ்டில் ஐம்பது என்கிற சராசரியை நான் எல்லைக்கோடாகக் காண்கிறேன். கோலி அதனை எட்டத் தவறியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் ஒரு மகத்தான வீரரின் நெஞ்சுரத்தை முழுமையாகச் சோதிக்கிறது என்பதைப் பலரைப் போல நானும் நம்புகிறேன். டெண்டுல்கரை விட ஒருநாள் போட்டிகள், டிவென்ட் ட்வென்டிகளில் கோலியின் ஆட்டம் சிறப்பானதாக இருக்கிறது என்றாலும், அவர்கள் ஆடிய காலமும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இன்றைய காலத்தில் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரோடு ஒப்பிடக்கூடிய பந்து வீச்சாளர் யாரும் என் கண்ணுக்கு புலப்படவில்லை. இந்த வெவ்வேறு காலங்களில் ஆடியவர்கள் என்கிற வேறுபாடு இருந்தாலும் சச்சினின் ஒரு நாள் சாதனைகளைத் தகர்க்க கோலி பத்து வருடத்துக்கும் மேல் தொடர்ந்து 1,100 ரன்களை அடிக்க வேண்டும். வேறுவகையில் சொல்வதென்றால் நாற்பது வயதைக் கடந்தும் அவர் ஆடுவார் என்றால் கிட்டத்தட்ட 900 ரன்களை வருடாவருடம் விளாச வேண்டும். கோலி ஆடவந்ததில் இருந்து ஒவ்வொரு வருடமும் 950 ரன்களைச் சராசரியாக விளாசி இருப்பதோடு, எப்பொழுதும் எதிராளிகளைச் சுட்டெரிக்கும் சூரியனாக ஒளிர்கிறார்.
கோலி சச்சினை விட மரபை மீறாமல் ஆடும் ஆட்டக்காரராகத் தெரிகிறார். சச்சின் கிரிக்கெட்டின் பயிற்சி பக்கங்களில் உள்ள ஷாட்களை அற்புதமாக ஆடினாலும் பெடல் ஸ்வீப், அப்பர் கட் என்று தனக்கே உரிய ஷாட்களையும் அவர் உருவாக்கினார். அவர் தோனிக்கு முன்னரே ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடினார் என்றாலும் அதைத் தோனி தனதாக மாற்றிக்கொண்டார். மரபை மீறி பல்வேறு வகையான ஷாட்களை வில்லியர்ஸ் முதலியவர்கள் ஆடுகையில் கோலி அவற்றால் ஈர்க்கப்படவில்லை. வில்லியர்சை விட, ஏன் சச்சினை விடத் தன்னுடைய விக்கெட்டை கோலி அதிகம் மதிப்பதாகத் தெரிகிறது. அதனாலேயே அவரால் பல்வேறு ஆட்டங்களை மூன்றாவதாகக் களமிறங்கி முடித்து வைக்க முடிகிறது.
கோலியின் இந்த நிலையான ஆட்டம்-குறிப்பாக ஒருநாள், T-20 போட்டிகளில் அவரின் ஆட்டம் பொறாமைப்படும்படி இருக்கிறது. சச்சினை எட்ட அவருக்கு நெடுங்காலம் ஆகும் என்றாலும் இவரைப் போல நிலையான ஆட்டத்தைச் சச்சின் வெளிப்படுத்தவில்லை. சச்சின் களமிறங்கிய காலத்தில் சுமாரான அணியே அவருக்குக் கிடைத்தது. வெளிநாட்டில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதே தலையால் தண்ணீர் குடிக்கும் காரியமாக இந்திய அணிக்கு இருந்தது. டெண்டுல்கர், ராகுல் திராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண், வீரேந்திர சேவாக் ஆகியோரால் அது மாறியது. டெண்டுல்கர் கொடுத்த நல்ல துவக்கத்தை யுவராஜ் சிங், தோனி ஆகியோர் ஜடேஜா, அசாரூதினை விடச் சிறப்பாக, மேலான வகையில் வெற்றியாக மாற்றினார்கள். கோலி ஆடவந்த மூன்றே வருடத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்கிற அளவுக்கு அது வளர்ந்திருந்தது. சச்சினால் துவக்கப்பட்ட உருமாற்றத்தின் உச்சக்கட்டத்தில் அணிக்குள் கோலி வந்து சேர்ந்தார்.

இங்கே தான் டெண்டுல்கர், கோலி ஆகியோரை ஒப்பிடுவதன் அடிப்படை தவறு நிகழ்கிறது. சச்சின் கொண்டுவந்த மாற்றங்களின் விளைச்சலே கோலி. சச்சின் எனும் பெருங்கதையின் தொடர்ச்சியே கோலி. அந்தக் கதையைக் காப்பதும்,அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் கோலியின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதை அவர் அற்புதமாகச் செய்கிறார்.
திரு. குணால் சிங் ‘Livemint’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
ஆங்கில மூலத்தின் சுட்டி:

தமிழில் : பூ.கொ.சரவணன்