தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்
இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)
தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?
இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை, பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும், இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.
(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )
“பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்
அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.
அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.
கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.
கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?
அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.
நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?
அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.
கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?
அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.
RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும் சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.
கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?
அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.
கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?
அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.
கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?
அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.
நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள் தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.
கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.
. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில் LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)
கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?
அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).
கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்
அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.
ஹார்வர்ட் பல்வேறு அரிய வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.
எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?
அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?
அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:
2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.
இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.
மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.
கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.
கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?
அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.
உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
அனுராக்: நன்றி
இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.
டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார். காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை. பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.
திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன் அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும். அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார்.
புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
சேஷனின் நூலிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.
சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.
அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார். அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.
மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.
சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார். தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார். சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.
தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது. உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.
அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார்.
அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார்.
அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன் அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார். ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.
சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.
தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.
சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995. சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும் 87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.
சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.
சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.
‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் பஞ்சமி நிலங்கள் – இளங்கோவன் ராஜசேகரன்
“அவர்கள் மிக மோசமான
ஊட்டச்சத்து பற்றாக்குறையோடே எப்போதும் வாழ்கிறார்கள், எதோ கந்தல் துணியையே உடுத்திக்கொண்டு இருக்கிறார்கள், தொழுநோயோ, பிற மோசமான நோய்களோ அவர்களைத் தின்கிறது, அவர்கள் பன்றிகளைப் போல வேட்டையாடப்படுகிறார்கள், கல்வி மறுக்கப்பட்டு, கவனிப்பாரற்று இருக்கிறார்கள்…இந்த மக்கள் சமூகத்தைப் பரம்பரையாகத் தொடரும் அடிமை முறைகளில் இருந்தும், சட்ட ரீதியான தடைகளில் இருந்தும் ஆங்கிலேய அரசு மீட்டிருக்கிறது என்றாலும், இன்னமும் சமூகச் சீர்குலைவில் சிக்கி கடைமட்டத்தில் கிடக்கிறார்கள் இம்மக்கள்.”
—James Henry Apperley Tremenheere, செயல் ஆட்சியர், செங்கல்பட்டு, 1891.
அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் தலித்துகளின் மோசமான நிலையை இப்படி விவரித்த செயல் ஆட்சியர் அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதிலும் குறிப்பாக அவர்களுக்கு நிலங்களை ஒதுக்க வேண்டும் என்பது திரமென்ஹீரின் பரிந்துரையாக இருந்தது. அவருடைய பரிந்துரையை ஏற்று, 1010/1010A , 30-9-1892 என்கிற ஆணையை வருவாய்த்துறை பிறப்பித்தது. அது ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சட்ட மசோதா 1892-ஐ அமலுக்குக் கொண்டு வந்தது. பன்னிரெண்டு லட்சம் ஏக்கர் நிலங்களைப் பஞ்சமர்கள் எனப்பட்ட தலித்துகளுக்கு ஒதுக்கியது அந்த மசோதா. இதையே பஞ்சமி நிலங்கள் என அழைத்தார்கள்.
அதற்கு முன்னர் வரை மிராசு வகுப்பினர் எனப்பட்ட பிராமணர், வேளாளர் முதலிய திருச்சி, மதுரை, திருநெல்வேலி பகுதியில் வசித்து வந்தவர்களே நிலங்களுக்குப் பெரும்பாலும் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். வன்னியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் மிராசு அல்லாத வகுப்பினர் எனக் கருதப்பட்டார்கள். திரமென்ஹீர் தன்னுடைய அறிக்கையில் சேரிப்பகுதி நிலங்களையும் மிராசிதாரர்கள் கையகப்படுத்திக் கொள்வதைக் கடுமையாக எதிரக்கிறார். இது நிலங்களைக் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திற்குள் தள்ளுகிறது, பறையர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுக்கிறது என்றும் அவர் பதிவு செய்தார். மிராசுக்கள்பயிர்காரர்கள் என அழைக்கப்பட்ட சாதி இந்து விவசாயிகள் சிறிய நிலங்களில் விவசாயம் செய்வதை எதிர்க்கவில்லை. தீண்டப்படாத மக்கள் தான் நிலமில்லாமல் நின்றார்கள்.
திரமென்ஹீருக்கு முன்னரே தலித்துகளுக்கு நிலம் பெற்றுத்தரும் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த வில்லியம் கவுடி, ஆடம் ஆன்ட்ரூவ் முதலிய பாதிரியார்கள் தலித்துகளுக்குக் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிலங்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். மெட்ராஸ் மிஷனரி மாநாட்டின் அறிக்கை இம்மக்கள் அடிமை முறையில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டியது. ஒரு மிராசிடம் இருந்து மிராசுக்கு நிலம் கைமாறிய போது அதில் வேலைபார்த்த ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்த பண்ணையாட்களும் கைமாறுவது நிகழ்ந்தது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அம்மக்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அந்த அறிக்கையைச் செங்கல்பட்டு ஆட்சியர் கரிசனத்தோடு அணுகினாலும், வருவாய் துறை, அந்த அறிக்கையை மிகைப்படுத்தப்பட்டது என்று நிராகரித்தது.
இதற்கு முன்னரே தலித்துகள் ரயில்வே, ராணுவ பகுதிகளில் நிலங்களை வாங்கினார்கள் என்று “A Century of Change: Caste and Irrigated Lands in Tamil Nadu, 1860s-1970s” என்கிற கட்டுரையில் ஜப்பானிய ஆய்வாளர் ஹருகா யானகிசாவா கவனப்படுத்துகிறார். 1817-ல் இருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தலித்துகள் போராட்டங்களை நிகழ்த்தி வந்தார்கள். அதிலும் ராமநாதபுரத்தின் பள்ளர் மக்கள் சாதி இந்துக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், 1858-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான ஒத்துழையாமை போராட்டங்களையும் நடத்தினார்கள். எனினும், ஆங்கிலேய அரசின் கவனத்துக்கு இவர்களின் கவலைக்குரிய நிலை குறித்த கவனப்படுத்தல் திரமென்ஹீர் அறிக்கையாலே சாத்தியமானது.
அந்த உத்தரவில் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அரசிடம் பெறப்பட்ட நிலத்தைப் பத்தாண்டுகளுக்கு விற்க தடை, அதற்குப்பிறகு விற்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே விற்க வேண்டும். மேற்கூறிய விதியை மீறி மற்ற வகுப்பினர் நிலத்தை வாங்கினால் எந்த இழப்பீடும் தராமல் அரசே நிலத்தை மீண்டும் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் பிரிவுகள் நீண்டன. 1918 -1933 காலத்தில் நிலங்கள் பிரித்து வழங்கப்பட்டன. எனினும், இப்படிப்பட்ட சட்டரீதியான பாதுகாப்புகளை மீறி தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பன்னிரெண்டு லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் மற்ற சாதியினரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. ஒரு ஆய்வு, ‘ஒரு கூடை கேழ்வரகு, மக்காசோளத்துக்கு நிலங்கள் விற்கப்பட்டன’ என்று அதிரவைக்கிறது.
விடுதலைக்குப் பிறகு மேற்கு வங்கம், கேரளாவை போல அல்லாமல் தமிழகத்தில் நில சீர்திருத்தங்கள் ஏட்டளவில் நின்றன. காங்கிரஸ் அரசு ஹரிஜன கூட்டுறவு சங்கங்களைத் துவங்கியது, நில சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியது என்றாலும் உண்மையில் உழுதவர்களுக்கு நிலத்தை அது வழங்கவில்லை. தலித் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுவதைப் போலக் காங்கிரஸ் ‘மிட்டா, மிராசுதாரர்களின் கட்சி’யாகத் திகழ்ந்தது.
நகர்ப்புறங்களுக்கு நில உரிமையாளர்களாகத் திகழ்ந்த பிராமணர்கள் குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இடத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிராமங்களில் எடுத்துக்கொண்டார்கள். நிலத்தின் உரிமையாளர்கள் மாறினாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் மோசமானதாக, ஒடுக்குமுறைகள் மிகுந்ததாக மாறியது. தலித்துகளின் நில உரிமைகளை வலியுறுத்தி 1-10-1941-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.2217, 12-12.1946-ல் அரசு ஆணை எண் எம்.எஸ்.3092 முதலியவை இயற்றப்பட்டும் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. குறுக்கு வழிகளில் தலித்துகளின் நிலங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கைப்பற்றிக்கொண்டார்கள். அறக்கட்டளைகளை ஏற்படுத்துவது, பயிரிடுபவர்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெயருக்கு நில உரிமையை மாற்றுவது முதலிய வழிகளின் மூலம் நிலங்களைத் தங்கள் வசமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வைத்துக்கொண்டார்கள். இப்படி இவர்கள் கைவசம் இருக்கும் நிலங்களின் அளவு மூன்றரை லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என்கிறார்கள். எனினும், இந்த மலைக்க வைக்கும் கையகப்படுத்தலை நிரூபிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை.
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நில ஆவணங்களைக் கர்ணம் எனப்படும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளே, பரம்பரை பரம்பரையாக நில ஆவணங்களைக் காப்பவர்களாக இருந்தார்கள். இவர்கள் நிலங்களைப் பதிவு செய்யும் போதும், கைமாற்றும் போதும் அவற்றை மாற்றி எழுதியும், தில்லுமுல்லு செய்தும் ஆதிக்கச் சாதியினருக்கு உதவினர். இந்தப் பழைய ஆவணங்களையே இப்போதும் அதிகாரிகள் சார்ந்திருக்கிறார்கள்.
தமிழக அரசு 1979 ஜூன் 1-ல் இருந்து 1987 ஏப்ரல் 30-க்குள் “Updating Registry Scheme’’ (UDR) என்கிற திட்டத்தின் கீழ் நிலங்களை வகைப்படுத்தி, அளவை செய்யும் பணியைச் செய்து முடித்தது. அதனால் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அது பட்டா நிலங்கள், பொறம்போக்கு நிலங்கள் என்று பஞ்சமி நிலங்களை மாற்றவே வழிவகுத்தது என்கிறார் சாமுவேல் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் .
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 2006-ல் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நில நிர்வாக ஆணையர் அலுவலகம், பஞ்சமி நிலங்கள் 1,26,113 ஏக்கர்களுக்கு இருப்பதாகவும் அவற்றில் தலித் அல்லாதவர்கள் 10,619 ஏக்கர்கள் நிலத்தைத் தங்கள்ம வசம்ட்டு வைத்திருப்பதாகவும் பதில் தந்தது. அருள்தாஸ் தொன்னூறுகளில் கேட்டிருந்த கேள்விக்கு 1,04,494.38 ஏக்கர்கள் பஞ்சமி நிலம், அதில் 74,893 ஏக்கர்கள் தலித்துகள் வசம் இருப்பதாகவும் பதில் தரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் கே.மெய்யாரின் தொடர் முயற்சிகளால் 2015-ல் 2,843 ஏக்கர்கள் பஞ்சமி நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அவை தலித்துகள் வசம் இல்லை என்பது தான் சோகமானது.
பட்டியல் சாதி மக்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டியவர்களும், அதில் குடியிருப்போரும் தொடுத்த வழக்கில் நீதிபதி சந்துரு வரலாற்றுச் சிறப்புமிகுந்த தீர்ப்பை வழங்கினார். பஞ்சமி நிலங்களை நிபந்தனைகளோடு தான் அரசு தந்திருக்கிறது. நிபந்தனைகள் மீறப்பட்டது என்றால் நில உரிமை கைமாற்றப்பட்டதை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ளலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பத்தாண்டுகளுக்கு வேறு யாருக்கும் கைமாற்றக்கூடாது. அதற்குப்பிறகு அந்நிலத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ விரும்பினால் தலித்துகளிடம் மட்டுமே செல்ல வேண்டும். என்று தீர்ப்பு வழங்கினார்.
இத்தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா உறுதி செய்தார்கள். பாப்பய்யா எதிர் கர்நாடக மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996-ல் அளித்த தீர்ப்பை நீதிபதி சந்துருவை போலவே இந்த அமர்வு மேற்கோள் காட்டியது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 46 பொருளாதார நீதிக்கு வழிகோலுகிறது. மேலும், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 39(பி), அரசு தன்னிடம் இருக்கும் நிலங்களைப் பொதுநலன் கருதி பிரித்து வழங்க வேண்டும் என்கிறது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு பொருளாதார நீதி சமூக அந்தஸ்து, வாய்ப்பு, விடுதலைகளைப் பெற அடிப்படை உரிமையாகும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.
1991-ல் தர்மபுரியின் கரகட்டஹல்லியில் தலித்தின் நிலத்தைத் தலித் அல்லாதோர் ஆக்கிரமித்து இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றைத் தலித்துகளிடம் ஒப்படைக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 85,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பாதிவழியில் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. 2011-ல் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் மூன்று பேர் கொண்ட குழுவை இப்பணிக்காக நீதிபதி மருதமுத்து தலைமையில் திமுக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அக்கமிட்டி கலைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மூன்று உறுப்பினர் குழு இப்பணிக்கு அமைக்கப்பட்டது. எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்று தலித் செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நில உரிமையாளர்கள் குறித்த கணக்கெடுப்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவை விடக் குறைந்த தலித்துகளே நில உரிமையாளர்களாக இருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் ரவிக்குமார் சுட்டிக்காட்டுகிறார். “ ஆந்திரா 11,00,000 ஹெக்டேர், கர்நாடகா 10,74,000 ஹெக்டேர், மகாராஷ்டிரா 13,03,000 ஹெக்டேர் நிலங்கள் தலித்துகள் வசமுள்ளன. தமிழகத்தில் 8,84,000 தலித்துகள் வசம் 5,03,000 நிலங்கள் இருந்தன. 2010-2011-ல் 8,73,000 தலித்துகள் 4,92,000 ஹெக்டேர் நிலத்துக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அதாவது ஐந்தாண்டு இடைவெளியில் 11, ௦௦௦ தலித்துகள் 11,௦௦௦ ஹெக்டேர் நிலங்களை இழந்திருக்கிறார்கள். இரு திராவிட கட்சிகளே
இந்த நிலைக்குக் காரணம் என்று ரவிக்குமார் குற்றஞ்சாட்ட தயங்கவில்லை. “மாநில அரசு நியாயமாக நடந்து கொண்டிருந்தால் நில சீர்திருத்தம் முழுமையாக நிறைவேறியிருக்கும். இல்லாதவர்கள் வலிமை பெற்றிருப்பார்கள். சாதி வன்முறைகள் தடுக்கப்பட்டிருக்கும்.” என்கிறார். நிலங்கள் மறுக்கப்பட்ட தலித்துகள் நூறு நாள் வேலை வாய்ப்பு வலையில் சிக்கிக்கொள்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார்.
அம்பேத்கர் சொன்னது இன்றைக்கும் பொருந்துகிறது: “எங்களிடம் நிலமே இல்லை. ஏனெனில், மற்றவர்கள் எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டார்கள்.” பறையர்கள் குறித்த தன்னுடைய குறிப்பை திரமென்ஹீர் அம்பேத்கர் பிறந்த 1891-ல் எழுதினார், “கொஞ்சம் நிலமும், ஒரு குடிசையும் பெறவும் , எழுதவும், படிக்கவும் தெரிந்து கொண்டு, தன்னுடைய உடல் உழைப்பை தான் விரும்பியபடி செய்ய, சுய மரியாதையைப் பெற்று, சாலையிலும் மதிக்கப்படும் நிலையைப் பறையர்கள் எய்தவே அவர்களுடைய இன்றைய துயர்மிகுந்த நிலையை நான் விளக்கி கூறவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.” அப்போதில் இருந்து தலித்துகளின் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை!
எதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை?
உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்
நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?
இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.
குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.
நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.
சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.
தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.
தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.
நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.
பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?
ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.
ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு
பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர். உமாதேவியின் கடிதம்:
அன்புள்ள பிரதமருக்கு,
உங்களின் பெயரை முதன்முதலில் கேள்விப்பட்ட நாள் எதுவென்று எனக்கு நினைவில் இல்லை. நான் என் கிராமத்துக்கு அருகில் இருந்த கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த பொழுது குஜராத் கலவரங்கள் நடைபெற்ற 2002-ல் தான் உங்களின் பெயர் என் காதுகளில் முதலில் விழுந்தது.
நான் தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முப்பது வயது கவிஞர். நான் கவிதை என்னுடைய தொழில் என்று குறிப்பிடுவது பெயருக்காக அல்ல, அதையே நான் பெரும்பாலான நேரம் மேற்கொள்கிறேன். அதுவும் கடந்த சில மாதங்களாக நான் வீட்டில், வேலை எதுவுமில்லாமல் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். எனினும், கடந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டு. நான் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டத்தை அப்பொழுது தான் பெற்றேன்.
அதற்கு முந்தைய ஆண்டில் மெட்ராஸ் திரைப்படத்தில் நான் எழுதிய பாடல்களுக்காக நான்கு விருதுகளைப் பெற்றேன். ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி திரைப்படத்தில் என்னுடைய பாடல்கள் பயன்படுத்தப்படலாம்.
என்னுடைய சொந்த கிராமம் திருவண்ணமலைக்குப் பக்கத்தில் உள்ளது, அங்கே ஒரு தலித் குடும்பத்தில் நான் பிறந்தேன். நான் என்னுடைய தலித் குடும்பம் என்பதை அழுத்திச் சொல்ல காரணம், என் பால்யம், பள்ளிக்காலம், கல்லூரி வாழ்க்கை என்று எப்பொழுதும் இந்த அடையாளம் என்னைவிட்டு நீங்கவேயில்லை. என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்து பிறரைப் போல ஒரு வேலை வாங்கவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய கனவாக இருக்கவில்லை. ஆதிக்க ஜாதியினர் அதிலும் குறிப்பாக வன்னியர்களின் கொடுமைகளில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று நான் ஏங்கினேன். வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியின் கீழ் அணி திரண்டிருக்கிறார்கள். ஆமாம்! உங்களின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதே பாமக தான்!
ஒவ்வொரு முறை கலவரங்களைத் தூண்டிவிடுகிற பொழுதும், அவர்கள் எங்களின் வீடுகளை முதலில் எரிப்பார்கள், அடுத்து எங்கள் கால்நடைகளைக் கொல்வார்கள். அடுத்து எங்களின் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தை நான் கடக்க நேரிடுகிற பொழுது என் மீது அவர்கள் கற்களை வீசிய நினைவுகள் இப்பொழுது மனதில் அலையடிக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி எனும் தலித் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவனின் கரங்களை எங்கள் கிராமத்துக்கு வந்த பொழுது நான் பற்றிக்கொண்ட தருணம் தோன்றுகிறது. அதுவே ஒரு அரசியல்வாதியுடனான என் முதல் சந்திப்பு. அவர் எங்களுக்கு அளவில்லாத நம்பிக்கையை ஊட்டினார்.
அந்தப் பகைமை அதோடு முடியவில்லை. உங்களுடைய கூட்டணிக் கட்சியினர் தருமபுரியில் எங்கள் மீது வன்முறையைப் பலமுறை நிகழ்த்தினார்கள். அதோடு நிற்காமல் என் ஊருக்கு அருகில் உள்ள விழுப்புரத்திலும் அவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தன.
என்னுடைய குடும்பத்தில், ஏன் என்னுடைய ஊரிலேயே முதன்முதலாக முறையாகக் கல்லூரி சென்று கல்வி கற்ற பெண் நான் தான். எங்கள் ஊரிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் நானே. இப்பொழுது நான் முனைவர் பட்டமும் பெற்றுவிட்டேன். இத்தனை வெற்றிகளுக்கும் என் பெற்றோர் அதிலும் குறிப்பாக என் தந்தை குப்பன் போற்றுதலுக்கு உரியவர். அவர்தான் என்னைக் கல்விக்காக நகரத்துக்கும், சென்னைக்கும் அனுப்பி வைத்தார். என் கிராமத்தார் அவற்றை எதிர்த்த பொழுது கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல, விடுதலையடைவதே என்று அவர் விளக்கினார். கல்வி, கடின உழைப்பால் நான் ஒரு வேலையைப் பெற்றுவிடுவேன் என்று அவர் நம்பினார். நான் மகிழ்வோடும், அவர் அனுபவித்த கொடுமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவளாகவும் வாழவேண்டும் என்று மட்டுமே விரும்பினார்.
நான் ஏன் ஒரு வேலையின்றி இருக்கிறேன் என்று உங்களிடம் சொல்லப்போகிறேன். நான் உடைந்து போயிருக்கிறேன். இந்தியாவில் உங்களின் திறமையை விடத் திரவியமே ஒருவரைக் காப்பாற்றும் என்று இப்பொழுது உணர்ந்திருக்கிறேன். நான் தேசிய தகுதித் தேர்வில்( NET) 2006-ல் வெற்றிப் பெற்றேன். இதற்கிடையில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் நான் தமிழ் விரிவுரையாளராக நான்கு வருடங்கள் பணியாற்றினேன். இந்தாண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நிரந்தரப் பணிகளுக்கான தேடுதலில் ஈடுபட்ட பொழுது நான் நிராகரிக்கப்பட்டேன். அந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் NET தேர்வில் வெற்றி பெற்றிருக்கவில்லை, முனைவர் பட்டமும் ஈட்டியிருக்கவில்லை, அவர்கள் தேவையான கற்பித்தல் அனுபவம் என்கிற தகுதியையும் பெற்றிருக்கவில்லை. பின்னர் ஏன் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை? ஒரு பணியிடத்துக்கான விலை இருபது லட்சம் என்று என்னிடம் சொன்னார்கள்.
என்னுடைய எல்லாத் தகுதிகளைத் தாண்டி, நான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் ஒரு பட்டியல் ஜாதி பறையர் இனப்பெண் என்பதால் எனக்கொரு வேலை மறுக்கப்பட்டது. இது கவலை தரும் விஷயமில்லையா? இந்தாண்டு எனக்குக் கொடுமையான ஒன்றாக இருக்கிறது. என்னுடைய இரண்டாம் கவிதை தொகுப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால், என்னுடைய தற்போதைய நிலையை நினைத்து, நினைத்து நான் உறக்கமற்றுத் தவிக்கிறேன். அரசியல்வாதிகளும், அரசும் மக்களுக்குச் சேவை செய்யவே இருக்கிறார்கள். ஆனால், மக்களை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்தித் தங்களின் அடிமையாக்குகிறார்கள். சென்னை வெள்ளத்தின் பொழுது அரசியல்வாதிகள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எப்படி நிவாரணப் பொருட்களின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்று நீங்கள் வாசித்திருக்கலாம். .தேசிய அளவிலும் நிலைமை ஒன்றும் சுமுகமாக இல்லை. உங்களின் அரசாங்கம் நீங்கள் செய்வது சரியா, தவறா என்று தெளிவாகப் பேசும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளை மதிப்பதில்லை என்று உங்களின் முகத்துக்கு நேராகவே சொல்கிறேன். தங்களின் விருதுகளைத் திருப்பித் தருவது எத்தனை வலிமிகுந்த ஒன்றாக அவர்களுக்கு இருந்திருக்கும். தமிழகத்தில் பெருமாள் முருகன், இன்னபிற எழுத்தாளர்களுக்கு நடந்ததும் சற்றும் வேறுபட்டதில்லை. அவர்கள் ஜாதி அமைப்புகளால் துன்புறுத்தப்பட்ட பொழுது, மாநில அரசு மாட்சிமை பொருந்திய உங்களைப் போல மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது. ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து அமைப்புகளுக்கு மட்டும் தனியான கடவுள் ஒருவர் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கட்சியினரும், அரசும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளுக்கு எந்த மரியாதையும் தரவில்லை என்று தெரிந்த பொழுது அவர்களுக்காக நீங்கள் பேசினீர்களா? நான் இன்னமும் அப்படிப்பட்ட ஒன்றை என்னுடைய பிரதமரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.
உங்களைத் தனிப்பட்ட முறையில் நான் சந்திக்க முடிந்தால் இவற்றைச் சொல்லியிருப்பேன்: தலித்துகளாகிய எங்களுக்குத் தரப்படும் இட ஒதுக்கீடு தற்போதைய பட்டியல் ஜாதியினர், பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்கள் வாழ மேம்பட்ட உலகுக்காக, சமத்துவத்துக்காகப் பாடுபடும் எத்தனையோ ஆத்மாக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமத்துவத்துக்கான தூதர்களைக் கவுரவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கரின் பெயரால் ஒரு சர்வதேச விருது ஏற்படுத்தப்பட வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து இருப்பதைக் கவலையோடு காண்கிறேன். தேசிய ஒருமைப்பாடு, அரசமைப்பு சட்ட விழுமியங்கள் ஆகியவற்றைக் காக்க நீங்கள் என்ன செயதீர்கேல் என்பதற்கான ஆதாரத்தைக் கேட்பேன். எனினும்,அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
நவம்பர் 26-ஐ அரசமைப்பு சட்ட நாளாக அறிவித்தற்கும், அம்பேத்கருக்கு 150 அடி சிலை வைக்க முடிவு செய்திருப்பதையும் நான் பாராட்டுகிறேன்.
மேலும், ஒரு பாலியல் வன்புணர்வு நகரத்தில் நடந்தால் பொதுமக்கள் பெரும் கொதிப்புக்கும், கோபத்துக்கும் உள்ளாவதை காண்கிறோம். கிராமங்களில் பாலியல் வன்புணர்வை அனுபவிப்பவர்களின்
நிலை என்ன என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா? நகர வன்புணர்வு, கிராம வன்புணர்வு என்கிற பாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ளப் பொதுச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட வழக்குகளை உணர்வுப்பூர்வமாக அணுகாமல், சமூகவியல் பார்வையில் அணுக உங்களை வேண்டிக்கொள்கிறேன். நான் மரணத் தண்டனையை எதிர்க்கிறேன், தண்டிப்பதை விட
சீர்த்திருத்தம் மேலானது என நான் உளமார நம்புகிறேன். நாம் குற்றாவளிகளை மாற்றமுடியும் என்று உலகுக்கும் காட்டுவோம். கண்ணுக்குக் கண் என இயங்குவது இந்த நாட்டைக் குருடாக்கும்
என நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
அற்புதமான ஆண்டாக இவ்வருடம் உங்களுக்கு அமைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.