‘தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற தலைவர்கள் காலங்கள் செல்ல செல்ல கடுமையாக வெறுக்கப்படுவது நிகழும்’ என்கிற ராமச்சந்திர குஹாவின் வரிகள் கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். வாரிசு அரசியல், ஊழல், ஈழப்போர் என அவரின் அரசியல் வாழ்வை இளைய தலைமுறை அடையாளம் காண்கிறது. அதேசமயம், அது மட்டும் தானா அவர்? திராவிட இயக்கம் திருடர்களின் இயக்கம் என்று ஒரு தரப்பு
சொல்லித்திரிவது எத்தனை உண்மை? இந்த நூல் நல்ல துவக்கப்புள்ளி.

மாநில சுயாட்சி சார்ந்த கருணாநிதியின் முழக்கம் எப்படிப் பஞ்சாப், அசாம், கர்நாடகம் எனப் பலமுனைகளில் ஒலித்தது ஏன் அது இலங்கை வரை சென்றது என்கிற வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதிகார பரவலாக்கம் கேட்பவர்களைத் தேச விரோதிகள் எனக் கருதிய தேசியத்தின் தேர்தல் அரசியல் உச்சகாலத்தில் எழுந்த ராஜ மன்னார் அறிக்கை ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என நூலில் பல மாநில ஆளுமைகள் விளக்குகிறார்கள். மூன்றாவது பட்டியலை மாற்ற வேண்டும், பொதுப்பட்டியல் மத்திய அரசுக்கு மட்டும் அதிகாரம் தருவதாக அமையக்கூடாது, நிதி நிர்வாகம், பெரும்பான்மை அதிகார பங்கீடு எனப் பல முனைகளில் இக்குரல்கள் பேசுகின்றன. கூட்டணியாட்சி கூட்டாட்சி நோக்கிய பயணம் என இன்று அரசியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி முன்மொழிந்தார் என்பது ஆச்சரியம் தரலாம்.
பிரேர்ணா சிங், அமர்த்திய சென், யோகேந்திர யாதவ் முதலியோரின் கட்டுரைகள் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகளைக் கணக்கில் கொள்கின்றன. யோகேந்திர யாதவ் பீகாரில் வெற்றி பெறாத சமூகநீதி ஏன் தமிழகத்தில் சிறப்பாக இயங்கியது என விளக்குகிறார். துணை தேசியம் எப்படி ஒற்றுமை, உள்ளடக்கிய வளர்ச்சியை ஒருங்கே சாதிக்கிறது எனும் பிரேர்ணா சிங்கின் கட்டுரை இரண்டு பக்கங்களில் முடிந்தாலும் முக்கியமான ஒன்று.
மே தினம் சார்ந்த விடுமுறை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், மத்திய அரசிற்கு முன்பே கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது, நில உச்சவரம்பு சட்டத்தைச் செயல்படுத்தியது, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33% இட ஒதுக்கீடு, தலித் மக்கள் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டம் முதலிய சட்டரீதியான சாதனைகளை நீதிபதி சந்துரு அடுக்குகிறார்.
பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அரிசியியல் எனும் கட்டுரையின் மூலம் வட்டிக்குப் பணம் வாங்கிச் சாப்பிட்ட வறுமையை விட்டுத் தமிழகத்தை வெளியே கொண்டு வரும் உணவு அரசியலை பொருளாதார மேதைகள், மத்திய அரசின் ஏளனங்களுக்கு இடையே தமிழகம் எப்படி முன்னெடுத்தது எனப் புரிய வைக்கிறார்.
நீர்ப்பாசன திட்டங்களைத் திராவிட இயக்கம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனும் பரப்புரை ஆதாரங்களோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சார்ந்த சாதனைகளில் திராவிட அரசுகளின் தொலைநோக்கு கவனப்படுத்தப்பட்டு உள்ளது.
சித்திர ஓவியங்களின் மூலம் பரப்புரை புரிந்தது. இளைஞர்களை ஊடகம், மேடைப்பேச்சு, திரைப்படம், படிப்பகம் எனப் பல முனைகளில் அரசியல்படுத்திய திராவிட இயக்கம் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு அதை முன்னெடுப்பதில் காட்டிய சுணக்கம் நூலில் கவனம் பெறவில்லை.
சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எப்படிச் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும், மக்களுக்காகப் போராட வேண்டும், விவாதங்களுக்கு மெனக்கெட வேண்டும், கருத்துரிமையை மதிக்க வேண்டும் என்பதற்குக் கருணாநிதியின் சட்டசபை செயல்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் பாலபாடமாகத் திகழ கூடும். இடதுசாரி இயக்கங்களைப் போல அல்லாமல் தனிமனித உரிமைகளை மதிக்கும் வெளியை எப்போதும் திராவிட இயக்கம் கொண்டிருக்கும் என்கிற கருணாநிதியின் வாக்கு சாதிய சக்திகளின் முன்னால் மங்கி நிற்கிறது என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சாதிய கூர்முனையை முறிக்கத் திராவிட இயக்கம் தவறிவிட்டது, அதிகார போதை மக்களை விட்டு தள்ளி நிற்க வைக்கிறது முதலிய விமர்சனங்களைப் பால் சக்கரியா முன்வைக்கிறார். உயர்கல்வியைக் கூடுதல் வருமானம் ஈட்டும் மூலமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றியதை சாடுகிறார் அனந்நகிருஷ்ணன். ஈழப்போரில் கருணாநிதியின் செயல்பாடு குறித்த விமர்சனம் ஓரிரு பத்திகளில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. தலித் நலன்களில் பெரிய கவனமில்லாமல் இருக்கிறது என்கிற கேள்வியைக் கி.வீரமணி தடுமாற்றத்தோடு தான் எதிர்கொள்கிறார். ஊழல் குறித்த கேள்விகளை இந்தியாவில் எங்குத் தான் இல்லை, தண்டிக்கப்படுபவர்களின் சாதியப்பின்புலம் பெரிய பங்காற்றுகிறது எனக் கடப்பது இயக்கம் வலிமையோடு நீடித்திருப்பதற்கு உதவுவதாக அமையாது. குடும்ப அரசியல் எப்படித் திமுகவை வலுவிழக்க வைத்தது என்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி காத்திரமான ஒப்பீடுகளோ, கேள்விகளோ வேறெங்கும் இடம் பெறவில்லை. முதல்வரையும் அரசு ஊழியர் என்கிற வரையறைக்குள் 1973லேயே கொண்டு வந்த திமுக ஊழல் தடுப்பில் பெருமளவில் சுணங்கி இருப்பதைக் கவனத்தில் கொள்ள நூலில் பேசியவர்கள் தவறிவிட்டார்கள்.
முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆட்சியில் எப்படித் தமிழகத்திலும் மாற்றாந்தாய் மனோபாவத்தோடு அணுகப்பட்டார்கள், அது திமுக ஆட்சியில் தான் பெருமளவில் மாறியது என்பது மதவெறி தமிழகத்தில் தலையெடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைப் புலப்படுத்துகிறது.
பெரியாரியமும், அம்பேத்கரியமும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவையைத் திருமாவளவன் பேசுகிறார். கருத்தொருமிப்பு அரசியல் என்பது தேர்தல் அரசியலில் தாராளவாதத்தை முன்னெடுக்க அவசியம் என ராஜன் குறை கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். திமுகத் தொண்டர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நேர்முகங்கள், புகைப்படங்கள் நூலில் உண்டு. அதேசமயம், விமர்சனங்கள் ஆங்காங்கே தூவிக்கிடந்தாலும் மு.கருணாநிதி என்கிற ஆளுமையின் எழுச்சி, இயக்கம், அரசியலை திராவிட இயக்கத்தின் தேவையோடு இணைத்து உணரவும், தமிழ் நிலத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை இன்னமும் கனிவோடு தற்காலத் தலைமுறை அணுகுவதற்கான திறப்பாக இத்தொகுப்பு அமையும். தெற்கிலிருந்து இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை புரிந்து கொள்ள, ஆய்வு செய்ய ஊக்கமும், உற்சாகமும் தரும் திமுக மீது மென்மையான அணுகுமுறை கொண்ட முக்கியமான நூல் இது.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
208 பக்கங்கள்
200 ரூபாய்
தமிழ் திசை பதிப்பக வெளியீடு