காந்தியார் சாந்தியடைய : நூல் அறிமுகம்


2009-ம் ஆண்டின் இறுதி கணங்கள் அவை. வெறுப்பும், அசூயையும், சென்னை மாநகர் தந்த பதற்றமும் என்னை விழுங்கி கொண்டிருந்த படப்படப்பான கணங்கள் அவை. காந்தியை ஏதேதோ காரணங்களுக்காக வெறுக்கப் பழகியிருந்தேன். அவர் குறித்து ஒரு வார்த்தை நல்லதாகக் கேட்டாலும், கடுமையான மொழியை, பதட்டம் நிறைந்த விமர்சனங்களை, கண்மூடித்தனமான காழ்ப்பை கொட்டிய காலம். ஊருக்கு போக வேண்டிய சூழலில் கன்னிமாரா நூலகத்தில் இருந்து காந்தியார் சாந்தியடைய எனும் நூலை எடுத்துக் கொண்டேன். நூலின் தலைப்பில் ‘தடை செய்யப்பட்ட எழுத்தும், காலமும்’ என்கிற தலைப்பு இருந்தது ஈர்ப்புக்குக் காரணம்.

பேருந்தில் ஏறிக்கொண்டேன். உட்கார இடமில்லை. நடக்கிற பாதையில் கால் வலிக்க உட்கார்ந்து விட்டேன். அப்படியே தூங்கி விடலாம் என்று கூடத் தோன்றியது. மருவத்தூர் வரும் வரையில் ஓட்டுவோம் என்று பைக்குள் கைவிட்டு எடுத்ததும் இந்த நூல்தான் கையில் கிடைத்தது. கொஞ்ச நேரம் படிப்போம் என்று கையில் எடுத்து உட்கார்ந்தேன்.
மெதுவாகவே வாசிக்கிற பழக்கம் கொண்ட நான், நான்கு மணிநேர பேருந்து பயணம் முழுக்க அந்த நூலில் மூழ்கிப்போனேன். அந்த எழுத்து நடை, வரலாற்றை நெருக்கமாகக் கண் முன் நிறுத்தும் மொழி, காந்தியோடு வகுப்புவாத களத்துக்கு அழைத்துப் போகும் நூல் பகுப்பு எல்லாமே அசரடித்தன.

காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று பெரியார் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், காந்தியின் படுகொலைக்கு அடுத்து, பெரியார் உணர்ச்சிவசப்பட்டார். இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தி என்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்குக் காந்திஸ்தான் என்று பெயரிட வேண்டும் என்று கூட வலியுறுத்தினார். எந்தக் காந்தி ஒழிய வேண்டும் என்று ஓயாமல் இயங்கினாரோ, அதே காந்திக்கு திராவிட இயக்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன. ‘காந்தியார் சாந்தியடைய’ என்கிற பன்னிரெண்டு பக்க நூலை ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதினார். மதவாதிகளை மிகக்கூர்மையாக எதிர்கொண்ட அந்த நூல் தடை செய்யப்பட்டதோடு, நூல் ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்டத்தவறினால் கடுங்காவல் தண்டனைக் காலம் கூட்டப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. சிறையில் அவருக்கும், நூலை வெளியிட்டவர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் அட்டைப்படமாக வெளிவந்தது.

இந்தப் பதட்டமும், எதிர்ப்பும் மிகுந்த பிரிவினை, காந்தி படுகொலை காலத்தை இந்துஸ்தான், பாகிஸ்தான், காந்திஸ்தான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நூல் அலசுகிறது. ஒரே ஒரு நூல், மனதில் அப்பிக்கிடந்த அத்தனை வெறுப்பையும் அடித்துக் கொண்டு போகக்கூடும் என்பதைக் கண்டடைந்த நாள் அது. நீங்களும் மதவாதத்தைக் காந்தி எதிர்த்த அந்த மகத்தான வரலாற்றை, அதில் திராவிட இயக்கமும் கைகோர்த்துக் கொண்ட காலத்தைப் படித்துணருங்கள். நூல் வெகு காலத்திற்குப் பிறகு மறு பதிப்புக் கண்டிருக்கிறது.

https://www.commonfolks.in/books/d/gandhiyar-saanthiyadaiya-parisal

பக்கம் 158 விலை 160
காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
நூலை பெற 9382853646/8778696612

திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி- சாதனைகள், சறுக்கல்கள்


திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. அது சமூகநீதியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. சமூக நலத்திட்டங்களைக் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் மருந்து விநியோக-கொள்முதல் முறை உலக வங்கிக்கு மாதிரியாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த மருத்துவச் சேவை தமிழகத்தில் தரப்படுவதாக அமர்த்தியா சென் புகழாரம் சூட்டுகிறார்.

சாதி அடுக்கை வலிமையாகக் காக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களை வலிமைப்படுத்தும் சடங்குகள், புரோகிதர் ஆகியவற்றை நீக்கிய சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டது. கோயில்களை அரசுகள் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறநிலையத்துறை, முன்மாதிரிச் சட்டங்கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் துவங்கப்பட்டு விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அரசுகளால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. இவை இந்தியாவுக்கு முன்மாதிரி ஆகின (காண்க சுஹ்ரித் பார்த்தசாரதியின் கட்டுரை). இந்து பொதுச்சட்டத்தில் பெண்களுக்குப் பரம்பரைச்சொத்துக்கள், Coparcenary rights ஆகியவற்றைத் தருவதற்கு ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. தமிழகம் அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அதைச் செய்து முடித்திருந்தது. (காண்க: Leila Seth – Talking of justice) பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு எண்பதுகளில் தரப்பட்டு விட்டது.

மண்டைக்காடு போன்ற சில சம்பவங்களைத் தவிர்த்துத் தமிழகத்தில் மதக்கலவரங்கள் என்பதில்லை. அதற்கு அந்தந்த ஊரின் கலாசாரமே காரணம் என ஒரு குழு கிளம்பும். அவர்கள் தமிழகத்தில் என்ன மாதிரியான சூழல் விடுதலைக்கு முந்திய காலத்தில் நிலவியது என அறியாதவர்கள் எனலாம். அரசியல் அறிஞர்கள் வலுவான சமூக, அரசியல் அமைப்புகள் மத வெறியை குலைக்கவோ, கூட்டவோ இயலும் என வாதிடுகின்றனர். (காண்க அஷூடோஷ் வர்ஷனே)
பிராமண எதிர்ப்பு என்பதும் அடிநாதமாக இருந்த திராவிட இயக்க முன்னெடுப்பில் மதச்சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் இணைக்கப்படுவது சாதிக்கப்பட்டது. (காண்க: Being Hindu and being secular.)

தமிழகத்தின் வளர்ச்சிக்கதை உற்பத்தித் துறையில் தனித்துவமானது. அது இந்தியாவிற்கே முன்மாதிரியாகும் என்கிறார் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன். காங்கிரஸ் ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி பிரமாதம் அது திராவிட ஆட்சியில் வீழ்ந்தது என்பது ஒரு வாதம். பொருளாதாரப் பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத் தன்னுடைய ‘SURGE: TAMILNADU’S GROWTH STORY’ நூலில் அதற்கு முக்கியக் காரணம் மத்தியில் ஆண்ட இந்திராவின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணம் என்கிறார். MRTP துவங்கி லைசென்ஸ் பெர்மிட் ராஜ்யம் வரை பெட்டியைத் தள்ளி, லாபி செய்யத்தெரிந்தவர்களே அப்பொழுது சிறக்க முடிந்தது.(காண்க. Political economy of reforms in India) தமிழகம் பொருளாதாரம் திறந்து விடப்பட்டதும் அடித்து ஆடியது. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, உள்கட்டுமானத்தில் தமிழகம் சிறப்பாக இயங்கி உள்ளது என்பது பல்வேறு மத்திய அரசு அறிக்கைகளின் சான்றிதழாகும்.

பிராமணிய எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாக நின்று விட்டது. 69% இட ஒதுக்கீட்டில் பெரும்பான்மையாகப் பின்தங்கியுள்ள தலித்துகளுக்கு 18% இட ஒதுக்கீடு மட்டுமே தரப்பட்டு உள்ளது. 50% ஐ பொருளாதார, சமூக அடுக்கில் ஒப்பீட்டளவில் நன்றாக முன்னேறியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs)பெறுகிறார்கள். தமிழ் வழிக்கல்வி தரம் குறைந்ததாய் இருந்து ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித்துகள் இடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவிலேயே மிக அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். நிலமில்லாத ஊரகத் தலித்துகளின் எண்ணிக்கை 92%. இந்திய சராசரி 61%. (http://m.timesofindia.com/elections-2016/tamil-nadu-elections-2016/news/Mind-the-Dalit-OBC-gap-in-TN/articleshow/52103820.cms). தலித்துகள் மீதான வன்முறைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட எந்த விசாரணை கமிஷன் அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்காத மாநிலம் தமிழகம். ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை ஏற்க மறுத்த வெகுசில மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இந்தியாவில் மிகக் குறைவான கலப்புத்திருமணங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் ஒன்று.

உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருப்பது ஒருபுறம். இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகக் கபளீகரம் செய்வது இன்னொருபுறம். ஊழல் மிகுந்து இருப்பதும், வாரிசு அரசியலும் பரவலாக விவாதிக்கப்படச் சாபக்கேடுகள். தேர்தல் அரசியலில் பணத்தை வாரியிறைப்பதில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை எனத் தேர்தல் ஆணையம் மெச்சும் பெருமைக்குரியது தமிழகம். உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிப்போட்டு இருக்கிறது தமிழக அரசு. பகிர வேண்டிய 22 அதிகாரங்களில் மூன்று தான் உள்ளாட்சி அமைப்புகள் வசம் உள்ளது. கடந்த காலப்பெருமைகள் காலத்துக்கும் உடன் வராது. அவ்வளவே.

ஒரு முன்னோக்கிய பயணம் என்பது விமர்சனங்களை உள்வாங்குவது. மட்டையடியாக மறுப்பது அல்ல. கொடுக்கிற இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டே சமூகநீதி பேசுவது முரண்பாடான ஒன்று. ‘நாங்கள் போட்டது. போதாதா?’ எனக் கேட்கையில் ஆதிக்கத்தின் குரல் அது என ஏன் புரிய மறுக்கிறது? ஒரு மதத்தை விட்டு வேண்டுமானால் வெளியேறுங்கள் என்பவர்கள் எந்த மதமும் மனிதர்களாக மதிக்கத் தவறுவதை வசதியாக மறக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட மேம்பட்டவர்கள் எனப் பேசிக்கொண்டே இருப்பது என்ன மாதிரியான அரசியல்? கண் முன்னே முகத்தில் அறையும் அநீதிகள், சமத்துவமின்மைகள், வன்மங்கள் எல்லாவற்றையும் ‘இதுவே அதிகம்’ என்கிற தொனியில் கடப்பது வீழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினில் இன்னொரு அடியே. நன்றி கெட்டவர்கள் எனப் பேசுவதே ஒரு ஆதிக்கத் தொனி தான். தேர்தல் அரசியலின் எல்லைக்குள் இவ்வளவு செய்தோம், இன்னமும் செய்திருக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஏற்பு கூட இல்லாத சமூக நீதி அறமற்றது, ஆகாதது.

#DravidianRule50
இது சார்ந்து முகநூலில் நடந்த விவாதத்தைப் படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=1425856567445415&id=100000632559754

ஜெயலலிதா-புனைவில் புலப்படும் அரசியின் வாழ்க்கை!


சமகால அரசியல் கதைகள் பெரும்பாலும் புனைவு வடிவம் பெறுவதில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நாவலாக அரிதிலும், அரிதாகவே வந்திருக்கின்றன. சினிமாவுக்குப் போன சித்தாளு எம்ஜிஆரை குறிப்பிடுவது என்பார்கள். வெட்டுப்புலி நாவலில் திராவிட இயக்க அரசியல் இழைந்து நகரும். சமகாலத் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ் பரணிகளாகவே அமைகின்றன. ஆங்கிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் மிகச் சொற்பம். அண்ணா குறித்து ஒரு நூல், மறைமலையடிகள் குறித்து ஒரு நூல் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இருவர் படத்தை எக்கச்சக்க நண்பர்கள் சிலிர்ப்போடு புகழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு வாஸந்தியின் சிறுநூல் வெளிவந்தது. அவருடைய வாழ்நாளில் நீதிமன்ற தடையை அவர் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் ஆங்கிலத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அனிதா சிவக்குமரன் ‘The Queen’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே எழுதிய நாவலை தற்போது தான் வெளியிட்டு உள்ளார். நாவல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி என்றுவிட முடியாது.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

கலையரசி என்கிற நாயகி தமிழ் வேர்கள் கொண்டவராகக் காட்டப்படுகிறார். அவரின் மேற்படிப்புக் கனவுகள் பொசுங்குகிற கணத்திலும், தாத்தா என்று வாட்ச்மான் நெஞ்சில் சாய்ந்து அழ மருகுகிற அன்புக்கு ஏங்கும் இளம் நடிகையாகப் பதிய வைக்கப்படுகிறார் கலையரசி. ‘பின்க்கியை தவிர எனக்குத் தோழிகள் இல்லை’ என்கிற கலையரசியின் மனக்குரல் ஜெயலலிதாவின் தனிமை மிகுந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

முழுக்கப் பி.கே.பி என்கிற எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தின் நிழலில் வளர்கிற ஒருவராகக் கலையரசி இல்லை. அவரின் திரைப்படங்களை அவரின் முகத்துக்கு நேராக விமர்சிக்கிறார்.’வசனம் பேசியே வில்லன்களைத் திருத்துறீங்க. அவங்க உடனே திருந்தி உங்க காலில விழறாங்க. ..நீங்க ஒரு சாக்கடை பக்கமா வரீங்க. நீங்க அதில கால் வைக்கக் கூடாதுனு ஒருத்தன் நீட்டுவாக்கில விழறான். என்ன சினிமா இது?’ என்கிற கணத்தில் தனித்த ஆளுமை வெளிப்படுகிறது.

கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்பின்னாகப் பயணித்து வாசிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. புனைவு என்கிற வெளியின் சுதந்திரத்தோடு ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியும் கதைப்போக்கை அமைக்கிறார் அனிதா. ஆகவே, தெரிந்த கதை தானே என்கிற சலிப்போடு நூலை வாசிக்க முடியாது.

விமர்சனங்கள் பெரும்பாலும் இல்லாமல் ரத்தமும், சதையுமாகக் கலையரசியின் வாழ்க்கை கதையாக விரிந்தாலும் தருணங்களில் கூர்மையான வரிகள் கவனிக்க வைக்கின்றன. ‘இந்த ஆடம்பரமான கல்யாணத்தைப் பத்திய இந்தக் கட்டுரையை எடிட்டர் வெளியிட மாட்டார். அவர் ஒன்னும் மோசமான மனுஷனில்லை. ஆனா, அவர் அலுவலகத்தைக் கட்சி குண்டர்கள் உடைக்கிறதை விரும்ப மாட்டார். அவமதிப்பு வழக்குல உள்ள போய் மிதிபட அவர் தயாரில்லை. அவர் மனைவி முகத்தில் ஆசிட் அடிக்கிறதை அவர் எப்படித் தாங்க முடியும்?’

ஆண்களால் மட்டுமே சூழப்பட்ட அரசியலில் தனக்கு என்று ஒரு இரும்பு கூண்டை கட்டிக்கொண்ட கலையரசியின் வாழ்க்கைக்குள் வீடியோ கடை நடத்தும் செல்வி நுழைந்த பின்பு எப்படி ஊழல்மயமாகி போகிறது வாழ்க்கை என்பது எளிய, விறுவிறுப்பான நடையில் புலப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று, ‘அதிகாரப்பூர்வமாக அவரின் சம்பளம் ஒரு ரூபாய் ..ஆனால், அவரால் எதையும் தனதாக்கி கொள்ள முடியும். விரலைக் கூடத் தூக்க வேண்டியதில்லை. பண மழை பொழிந்தது. ஒரு நோயுற்ற மனிதன் பல்வேறு நோய்களைச் சேர்ப்பது போல அதிகாரத்தில் இருந்தபடி அவர் சொத்துக்களைக் குவித்தார்.’

எனினும், இறுதியில் கலையரசி கைது செய்யப்பட்ட பின்பு வரும் விவரிப்பில்
கலையரசி மீது அனுதாபம் ஏற்படுகிற தொனியிலேயே ஆசிரியரின் நடை அமைகிறது. கருணாநிதியின் அரசியல் ஓரிரு கணங்களில் கூர்மையாக விமர்சிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளின் மூலம் நடத்தப்படும் அரசியல், சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ் படலம் ஆகியவையும் உண்டு.

படிப்படியாக அரசியலின் ஆழ அகலங்கள் புரிந்து கொள்ளும் கலையரசி எப்படி அரசி ஆகிறார் என்பதைச் சில கணங்களில் இயல்பாக நாவல் புரிய வைக்கிறது. குறிப்பாக மேடைப்பேச்சில் எப்படித் தனக்கான பாணியைக் கண்டடைகிறார் என்பது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி. சர்வாதிகாரியாக உருமாறும் கலையரசியின் வாழ்க்கை பக்கங்கள் 2005-யோடு முடிந்துவிடுவது வாசகருக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.

நாவலின் பெரிய பலவீனம் கோட்பாட்டுத் தளத்தில் பயணிக்க மறப்பது. ஏன் பல்லாயிரம் பேர் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை இன்னமும் செறிவாக நம்ப வைக்காமல் கடப்பது. ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி அல்ல இந்த நாவல். அதன் தாக்கம் வெவ்வேறு இடங்களில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கலையரசியின் ஆழ்மனப்போராட்டங்கள் இன்னமும் நெருக்கமாகப் பதியப்பட்டு இருக்கலாம். எனினும், முக்கியமான முயற்சி.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

The Queen
Anita SIvakumaran
Juggernaut Books
பக்கங்கள்: 280
விலை: 350

தமிழகத்தில் மேடைப்பேச்சு!


அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.

மேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.


சைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.
மேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உரையாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).

கல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”

Image result for பெரியார் மேடை

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.

Image result for அண்ணா பேச்சு

 

மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.

எம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.

Image result for அண்ணா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா? இல்லை. ஊழல் செய்தேனோ? இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

வைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.

Image result for வைகோ

தமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.

தவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.

திராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

பக்கங்கள்: 11௦
விலை: ரூபாய்.9௦

வெட்டுப்புலி-நூல் அறிமுகம்


தமிழ்மகன் அவர்களின் வெட்டுப்புலி நாவல் படித்துவிட்டு அது தந்த தாக்கம் அகலாமலே இந்த பதிவை பதிகிறேன். ஒரு எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா,திராவிட இயக்கத்தின் தாக்கம்,வெட்டுப்புலி எனும் சிறுத்தையை கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் தாங்கிய தீப்பெட்டியின் மாற்றம் தேடி போகும் பேரன் ஆகியவற்றைக்கொண்டு எந்த திணிப்பையும் மேற்கொள்ளாமல் மனதுக்கு மிகநெருக்கமான ஒரு நாவலை உருவாக்கி இருக்கிறார் ஆசிரியர். 

எதையும் திருடிக்கொண்டு வந்துவிடும் படவேட்டான்,சாதி மாறி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அதை சாதிக்க இருக்கும் மன மற்றும் சமூகத்தடைகளை உணரும் லட்சுமணன்,பெரியாருக்கும்,காமராஜருக்கும் இருந்த நெருங்கிய பந்தத்தை மூன்று பார்வையில் காட்டும் நுணுக்கம்,திராவிட இயக்கத்தில் கணவனும்,அதிமுகவில் மனைவியும் இணைந்து இறுதியில் அன்னையின் பக்தர்களாக இருவரும் மாறிநிற்கும் வேடிக்கை என்று பல ரசமான பின்னல்கள். 

“எம்.ஜி.ஆர் ஒழுங்கா செய்ஞ்ச ஒரே விஷயம் பெரியாரோட எழுத்து சீர்திருத்தத்தை அமல்படுத்தினது தானே ?”
“பெரியார் ரொம்ப பிரக்ரசிவ் ! அவர் சொன்னதுக்கு ஈடா வேற யாரும் சிந்திச்சது இல்லை ? எங்களை எதிர்த்த அவர் இன்னைக்கு இருந்திருந்தா நீங்க பண்ணுற வேலைகளை பார்த்து உங்களைத்தான் முழுமூச்சா எதிர்த்திருப்பார் ! உண்மையில் பெரியார் இந்து மதத்துக்குள் இருந்து தானே எதிர்த்தார். அவர் மற்ற மதங்களை எதிர்க்கலையே ? இந்த மதத்தை மாற்ற வந்த முனிவர் அவர் ” என்று பிராமணர்களின் பார்வையாக பதிவு செய்யப்படும் வரிகள் எல்லாமே கைதட்டல் போடவைக்கும் ராகம் 

வண்ணத்திரை இதழில் இடைப்பக்கத்தை வளமான படங்களால் நிறைக்கும் திராவிட இயக்க வாரிசு என்று நகரும் நாவலில் சினிமாவின் போக்கும் அது ஏற்படுத்திய தாக்கமும் கூடவே கடத்தப்படுகிறது. தியாகராஜ பாகவதர்,லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு,எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கு,பாலச்சந்தர்,ரஜினி,கமல் ஆகியோர் மேற்கொண்ட ப்ரவேசம்,ஈழத்தமிழர் போராட்டம் எல்லாமும் உண்டு. ஆனால்,எதுவுமே தனித்து தெரியாது. கதைப்போக்கில் வெகு இயல்பாக அவை உங்களை பயணம் கூட்டிப்போகும் 

திராவிட இயக்கத்திலேயே ஊறிப்போனவர்களுக்கு இது ஒரு நினைவுக்குறிப்பை போலவே தோன்றும். தமிழகத்தின் சமூக மாற்ற வரலாற்றை அறியாதவர்கள் இந்த நாவலை படித்தால் அது தரும் தூண்டுகோலில் இன்னமும் தீவிர வாசிப்புக்கு போவார்கள். “ஒருத்தன் பக்கத்தில் வெட்டுப்பட்டு செத்துக்கிடக்க நிம்மதியா எப்படி தான் தூங்கறீங்களோ?” என்று கேட்கிற நாவலின் இறுதிவரிகள் திராவிட இயக்கத்தின் அடிப்படைகள் அரசியல் நுழைவில் காலப்போக்கில் கைகழுவப்பட்டதை நினைவுபடுத்தியபடியே நாவலை முடிக்க வைக்கிறது
உயிர்மை வெளியீடு 
ஆசிரியர் : தமிழ்மகன்
370 பக்கங்கள் 
ரூபாய்.240