இந்திய தொழிற்துறையின் தந்தை ஜாம்ஷெட்ஜி டாட்டா !


ஜாம்ஷெட்ஜி டாட்டா நினைவு தினம் இன்று .எண்ணற்ற கனவுகள் காண்பது எல்லாருக்கும் உரிய பண்பு ;எனினும் அதை நிஜமாகும் தீர்க்கம் மற்றும் தெளிவு மிகச்சிலருக்கே வாய்க்கிறது . அப்படி ஒருவர் இவர் .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது . இருபதே வயதில் பார்சி குடும்பத்தில் பிறந்த இவர் அவர்கள் மதக்கோயிலின் அங்கமாக போகாமல் அப்பாவின் வழியில் வியாபாரத்தில் நுழைந்தார் . ஒன்றுக்கும் உதவாது என கைகழுவப்பட்ட எண்ணெய் ஆலை ஒன்றை வாங்கி அதை பருத்தி ஆலை ஆக்கி நல்ல லாபம் சம்பாதித்தார் .

தாமஸ் கார்லைல் எனும் இங்கிலாந்து அறிஞரின் பேச்சை கேட்டு இந்தியாவில் உருக்காலை ஒன்றை உருவாக்க வேண்டும் என கனவு கண்டார் .நாக்பூரில் பருத்தி,ரயில் நிலையம்,நீர் ஆகியன அருகருகே உள்ள இடத்தில் பருத்தி ஆலையை தொடங்கினார் .லட்சத்துக்கு வருமானம் உயர்ந்தது .

வெறும் பணம் சேர்க்கிற தொழிலாக அதை பார்க்காமல் ஜே என் டாட்டா அறக்கட்டளையை உருவாக்கி வெளிநாடு சென்று படிக்க இந்திய மாணவர்களுக்கு உதவினார் . இந்தியர்களும்,நாய்களும் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாது என வெளியே அறிவிப்பு பலகைகள் ஹோட்டல்களில் இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு அனுமதி தரும் நல்ல ஹோட்டல் ஒன்றை கட்ட வேண்டும் என முன்னெடுப்பு எடுத்தார் .

இந்தியாவிலேயே முதன்முதலில் மின்சார வசதி கொண்டதாக தன் ஹோட்டலை மாற்றினார் ;அமெரிக்க மின்விசிறிகள்,ஜெர்மன் லிப்ட்கள்,துருக்கிய குளியலறைகள் என அந்த ஹோட்டலை இழைத்தார் ,அது தான் தாஜ் ஹோட்டல் . கப்பல் பயணத்தில் விவேகானந்தரை சந்தித்த பொழுது அறிவியல் முன்னேற்றம் நாட்டுக்கு அவசியம் என உணர்ந்து ,முப்பது லட்ச ரூபாய் முதலீடாக தந்து இந்திய அறிவியல் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார் .

இந்திய தொழில்துறையின் தந்தை என அன்போடு அழைக்கப்படும் அவரின் பெயரால் தான் ஜாம்ஷெட்பூர் உருவானது .”இருப்பதை என்றைக்கும் இழந்துவிடாதீர்கள் ;சரிதலை நோக்கி நம் பயணம் அமையக்கூடாது .எல்லையில்லா ஆர்வமும்,உழைப்பும் உங்களை முன்னே கொண்டு செல்லட்டும் .இந்தியர்கள் பொருளாதார தன்னிறைவை நோக்கி பயணிக்க வேண்டும் !”என்ற அவரின் நினைவுநாள் இன்று

கார் தந்த ஃபோர்ட்


ஹென்றி ஃபோர்டு… அமெரிக்காவில் இன்று எல்லாரும் கார் வைத்து இருப்பதற்கான அச்சுப்புள்ளி இந்த மனிதரால்தான் போடப்பட்டது. ஒற்றை டைம் பீஸ் பரிசை அக்குவேறு ஆணிவேராக பிரித்துப் போட்டு சேர்த்ததில் தொடங்கிய இயந்திரக் காதல் வாழ்நாள் முழுக்க இந்த ஃபோர்ட் எனும் மேதைக்கு தொடர்ந்தது.

ஒரு நகரும் ட்ராக்டரை முதன்முதலில் பார்த்து வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டார் அவர். நீராவி இயந்திரங்களை கழட்டி சேர்ப்பது அவற்றை பழுது பார்ப்பது என்று இயங்கிக்கொண்டு இருந்த அவர் ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தது திருப்பம். அதை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தது தான் திருப்பம்.

உதிரிப் பாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார்.

ப்ரேக் இல்லாத பின்னோக்கி செலுத்த முடியாத அந்த வாகனத்துக்கு quadricycle என்று பெயரிட்டார். அந்த வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட பணிகள் முடிந்த பின்னர் அவர் முனைந்த பொழுது தான் வாசல் குறுகலாக இருக்கிறது என்று அவருக்கு புரிந்தது. சில நொடிகளில் ஆயுதத்தை எடுத்து சுவற்றை உடைத்து நொறுக்கிவிட்டு அதே வேகத்தோடு பெட்ரோல் வாகனத்தில் பயணம் போனார்.

எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை. அடுத்தடுத்து பலபேர் ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை அதிவேகமாக உருவாக்கி சாதித்தார். அவரின் கார் சில நூறு டாலர்களில் கிடைக்க அமெரிக்காவில் கார் இல்லாத ஆளே இல்லை என்கிற சூழல் உண்டானது. கஸ்டமரின் ரசனையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளவர் அவர். “என்னுடைய கஸ்டமரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால்,’ இன்னமும் வேகமாக ஓடும் குதிரை வேண்டும் !’ என்று தான் கேட்டிருப்பார். நான் தான் அவர்களை ஈர்க்கும் கார்களை உற்பத்தி செய்யவேண்டும்”

தன் மனைவியை வைத்துக்கொண்டு தான் உருவாக்கிய புத்தம் புது மாடலை சோதித்து பார்த்தவர் இவர். அதிக விற்பனை, அதில் தொழிலாளர்களுக்கும் அதிக சம்பளம், டீலர்களையும் மதித்து நடத்துவது என இவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு முன்னோடி. தான் வாழ்ந்த க்ரீன்பீல்ட் கிராமத்தை அப்படியே அருங்காட்சியமாக மாற்றியவர். அம்மா மீது தீராத அன்பு கொண்டவர்.

சிகரெட் பழக்கத்துக்கு எதிராக அமெரிக்க முழுக்க பிரபலங்களிடம் கையெழுத்து பெற்று விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயன்றவர். போர்ட் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி அறக்காரியங்களுக்கு எக்கச்சக்க பணம் செலவிட்டார் போர்ட். போருக்கு எதிராக நின்றவர் என பல அற்புதமான முகங்களும் அவருக்கு இருக்கச் செய்தது. ஆனால் தன் மகனின் இறப்புக்கு பின் பொறுப்பேற்றபோது, கம்பெனியை லாபத்தில் இயங்க வைக்கமுடியவில்லை. இறந்தபோது மாபெரும் வலியோடுதான் விடைபெற்றார்.

“If you think you can do a thing or think you can’t do a thing, you’re
right ” எனச் சொன்ன ஹென்றி ஃபோர்ட் நினைவுநாள் இன்று.