வானைத்தொட்ட பெண்களின் கதை !


ராஷ்மி பன்சாலின் எழுத்தில் உருவான ,”FOLLOW EVERY RAINBOW” நூலை வாசித்து முடித்தேன். வெற்றிகரமான இருபத்தி ஐந்து பெண் தொழில் முனைவோர் பற்றிய நூல் இது. அதிலிருந்து நெஞ்சை நிறைத்த சில பெண்மணிகள் பற்றிய தொகுப்பு மட்டும் இங்கே !
வசூலி என்கிற அமைப்பின் மூலம் பெண்களை கொண்டே 

மென்மையாக பேசி கடன்களை திரும்பப்பெறும் கதையில் நிமிர்ந்து உட்கார்ந்தால் மார்வாரி குடும்பத்தில் பிறந்து ராஜஸ்தானின் சேரிகளில் வாழும் மக்களுக்கு உதவபோய் அவர்களின் நீல பானை செய்யும் முறையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற பிரான்சுக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் லீலா போர்டியா அது தோற்றதும் மெக்சிகோ வரைப்போய் தரமான பானைகள் தயாரிக்கும் முறையை கற்றுவந்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். 

எவரெஸ்ட் சிகரத்தை ஏற பெண்களுக்கு முப்பத்தி ஐந்து வயது வரை மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டு இருக்கும் நாற்பத்தி ஏழு வயது பிரேமலதா அகர்வால் தனக்கு முப்பத்தி ஐந்து வயது என்று சொல்லி எவரெஸ்ட் நோக்கி போகிறார். உச்சியை தொட கொஞ்சம் உயரம் இருக்கும் பொழுது நீரிழப்பு அதிகமாகி விடுகிறது. பசி வேறு ; மரணத்தின் வாசலில் நிற்பது போல உணர்கிறார். தன் கணவருக்கு போனில் அழைக்க ,”என்றாவது சாகத்தான் போகிறோம் ; நாளைக்கே கூட சாலை விபத்தில் மரணம் உண்டாகலாம் ! சாதித்துவிட்டு செத்துப்போ !” என்று சொல்ல உத்வேகம் பொங்க எவரெஸ்டை தொட்டு சாதித்தார் அவர் 

ஜாசு சில்பி எனும் பெண் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை அவர் யாருமற்றவர் என்று தெரிந்தும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். அவருடன் பத்தொன்பது ஆண்டுகள் நிறைவான வாழ்வு. ஒரு சிறிய சண்டை கூட இல்லை. அவர் இவருக்காக மதம் மாறியிருக்கிறார். இவர் வெண்கல சிற்பங்கள் வடித்து முடித்துவிட்டு வந்த பெண் வெந்நீர் வைத்து கால்களில் ஒத்தடம் கொடுப்பார் அவர். ஒருநாள் கேன்சரால் அவர் இறந்து போக தானே தைரியமாக நின்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கல சிலைகள் செய்கிற ஆர்டரை எல்லாம் ஒற்றை ஆளாக பிடித்து தன் கணவர் தான் எப்படி சிறகடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படியே பரந்த ஜாசு இந்த நூல் அச்சுக்கு போவதற்கு இருநாட்கள் முன் மாரடைப்பால் இறந்து போனார் ! 

தென் ஆப்ரிக்காவில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட தன் மகளை எல்லாரின் எதிர்ப்பையும் மீறி அன்போடு பார்த்துக்கொண்ட சோனா இப்படி துன்பப்படும் எண்ணற்ற பிள்ளைகள் அமருவதற்கு ஏற்ற இருக்கைகளை சோனுகுவிப் என்கிற பெயரில் வடிவமைத்து நாடு முழுக்க விற்று பலரின் வலியை போக்கியிருக்கிறார் 

வீட்டை விட்டு மாலைக்கு மேல் போகவிடாத பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த நினா லெகி மாலை ஐந்து மணிக்கு கல்லூரி முடிந்ததும் வீடு அடைந்து இரண்டு ஆண் தையல் காரர்களுடன் இணைந்து அற்புதமான பேக்குகளை BAGGIT என்கிற பெயரில் தயாரித்து அதை பலகோடி மதிப்புள்ள பிசினஸ் ஆக்கியிருக்கிறார். 

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று களமிறங்கி தென் அமெரிக்கா போகிற பொழுது ஓரிரு வாசகங்களை உச்சரிப்பு என்ன என்று கூட தெரியாமல் கற்று அற்புதமாக பதில் சொல்லி ஈர்த்த நள்ளிரவில் ஹோட்டலில் தாங்கும் பொழுது ஆண்கள் உள்ளே நுழைய முயன்ற பொழுது கணவருக்கும் போலீசுக்கும் அழைத்து தன்னை காத்துக்கொள்ளும் பெண் இன்னமும் ஆர்வம் மாறாமல் சாதிப்பது நமக்கான அற்புதமான பாடம் ! 

நீதி தாஹ் எனும் பெண் இருபத்தி ஆறு வயதிலேயே பழங்குடியின மக்களின் கைத்திறமையை பயன்படுத்தி அவர்களுக்கு வருமானம் பெருக்க அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை விற்கும் கடை ஆரம்பித்து அதிலிருந்து பல லட்சங்களை அவர்களுக்கு பெற வழிவகுத்திருக்கிறார். 

குடிகார கணவனின் அத்தனை தொல்லைகளுக்கு நடுவிலும் பீச்சில் காபி விற்க ஆரம்பித்து பின்னர் துறைமுகத்தில் ஹோட்டல் என்று நகர்ந்து இறுதியில் ஒரே நாளில் இரண்டு லட்சம் வருமானம் தருகிற உணவகம் நடத்துகிற அளவுக்கு நகர்ந்த தமிழகத்து பெட்ரிசியா மற்றும் பி ஜெ பி தொழிற்சாலை என்கிற பெயரில் கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிற அளவுக்கு தன் ஒற்றை ஆளின் உழைப்பால் உயர்ந்த தமிழகத்து பெண் அமீனாவின் கதையும் அற்புதம் (அமீனாவின் கதையில் மட்டும் ஆங்கிலம் அநியாயத்துக்கு பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 
!

எலா பட்டின் கதை தான் உச்சம் ! சேவா என்கிற பெண் சுய தொழிலாளர் அமைப்பை தொடங்கி பதினேழு லட்சம் குப்பை பொறுக்கும்,காய்கறி விற்கும்,பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேலை உறுதி,சம்பள உயர்வு,சமூக பாதுகாப்பு,இன்சூரன்ஸ் என்று ஏகத்துக்கும் சாதித்திருக்கும் வாழ்க்கையில் நடுத்தெருவில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசிய பொழுது அதுவரை ஆதரித்த தொழிலாளர் சங்கம் கைவிட்ட பொழுதும் சேவாவை வெற்றிகரமாக எளிய பெண்களின் உதவியோடு நடத்தி இருக்கிறார். கணவன் உணவருந்தும் இடைவெளியில் வேலை செய்து வருமானம் ஈட்டி அடிவாங்கிய பெண் ஒரு காலத்துக்கு பிறகு அவரே மதிய உணவு கொண்டு வருகிற அளவுக்கு சாதிக்கிற பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலையில் பட்டம் பெற்ற பெண்,ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று எல்லாமும் விட்டுவிட்டு சேவாவில் சேவை செய்ய வந்தவர்களின் கதையோடு நூலை முடிக்கிற பொழுது நாமும் ஏதேனும் வானவில்லை துரத்த வேண்டும் ,அதை துரத்துகிற பெண்களுக்கு ஊக்குவிப்பை தரவேண்டும் என்றே தோன்றுகிறது 

ஆசிரியர் : ராஷ்மி பன்சால் 
பக்கங்கள் : 360 
விலை : 250
WESTLAND வெளியீடு