பலே பலே ஃப்ளாஷ்பேக் !


‘தேர்வுகள் நெருங்கிவந்திருச்சே’ என லேசாக உதறல் இருக்கிறதா? இதோ, பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து சில ‘எக்ஸாம் பூஸ்டர்’ செய்திகள்…

ஆங்கிலத்தில் தோற்ற ஆர்.கே.நாராயணன்

பள்ளிக் கல்வி முடித்த, ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்ற ஆர்.கே.நாராயணன், பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார்.  நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனார். ஆனாலும், தொடர்ந்து முயன்று, மகாராஜா கல்லூரியில் இடம் பிடித்தார். அங்கேயும் ஒரு வருடம் கூடுதலாக எடுத்துக்கொண்டே பட்டம் பெற்றார். ஓயாத உழைப்பு, வாசிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் என்று அவர் கலந்து உருவாக்கிய கதைகள், ஆங்கில இலக்கிய உலகில் இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

பெரிதினும் பெரிதாக அப்துல் கலாம்

கல்லூரியில் வினாத்தாள் லீக் ஆனதால், பட்டம் பெற ஓர் ஆண்டு கூடுதலாகக் காத்திருக்க நேர்ந்தது. விமானிகள் தேர்வுக்குச் சென்ற கலாமுக்கு ஒரே ஒரு கிரேடு அதிகம் வந்திருந்தால், விமானி ஆகியிருப்பார்.  கண்ணீர் மல்க, கங்கையில் குளித்துவிட்டுப், புதிய உத்வேகத்தோடு புறப்பட்டார். விண்ணோடு நேசம் பூண்டார். இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை ஆனார்.

 தாமதமாக வென்ற டிராவிட்

டிராவிட், பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் ஆட நிறைய நேரம் செலவு செய்தார். இதனால், ‘படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்’ என்று பெற்றோர் பயந்தார்கள். தலைமை ஆசிரியர்தான் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார். விளையாடிவிட்டு டிராவிட் வந்ததும் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவினார்கள். அழகாகப் படித்துத் தேறினார். கிரிக்கெட்டிலும் ஐந்து வருட உழைப்பு, பல்வேறு தடைகளுக்குப் பின்னரே இந்திய அணிக்குள் நுழைந்தார்.  இப்படிப் பிற்காலத்தில் சொன்னார்… ”கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது, தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை.”

 நிராகரிப்பில் ஈஃபிள்

அலெக்ஸாண்டர் குஸ்டவ் ஈஃபிள் (Alexandre Gustave Eiffel) படிக்க ஆசைப்பட்டு, பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப்பம் போட்டார். கணக்கில் மட்டும் இன்றி, எல்லாவற்றிலும் பையன் வீக் என்று சொல்லி, கல்லூரியில் இடம் தர மறுத்தார்கள். அழுகை அழுகையாக வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு வெளியேறினார். நம்பிக்கை, கவனித்தல், கட்டடங்களின் மீதான ஆசை என எல்லாமும் சேர்ந்து, அவரை சாதனையாளர் ஆக்கியது. அவர் படைத்த அற்புதங்கள்தான் ஈஃபிள் கோபுரம், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

மதிப்பெண் குறைந்த ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன், இளம் வயதில் கணிதத்தின் மீது காதல்கொண்டது, தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்ற பிறகுதான் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். கணிதத்தில் அவரது நண்பன் சாரங்கபாணி, 45-க்கு 43 வாங்கியிருந்தார். ராமானுஜன், அவரைவிட ஒரு மதிப்பெண்தான் குறைவாக வாங்கினார். அதனால், கல்லூரி மாணவர்கள் படிக்கும் கணிதப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். லோனி (Loney)  எழுதிய ‘மட்டத் திரிகோணவியல்’ என்கிற நூலையும் கார்(carr)எழுதிய ‘சினாப்சிஸ்’ நூலையும் படித்தார். அதன் உள்ளடக்கங்கள் தந்த உத்வேகத்தில் தீவிரமாக இயங்கினார். விரைவிலேயே கணிதத்தில் சாதனைகள் படைத்து, கணித மேதை என்று புகழப்பட்டார்.

தேர்வைத் தவறவிட்ட ரபேல்

ரஃபேல் நடால், டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆடுவதில் இளம் வயதிலேயே புலி. தொடர்ந்து கலக்கிக்கொண்டு இருந்தவரை, ”ஒழுங்காகப் பாடங்கள் படி” என்றார் அப்பா. இவரும் நல்ல பையனாக அப்படியே படித்தார். ஒரு தேர்வு நேரத்தில் விமானத்தில் புத்தகங்களோடு சென்றபோது, அவற்றைத் தவறவிட்டார். வருத்தத்தோடு இருந்த ரஃபேலிடம் அவரது தந்தை, ”மகனே, அந்தத் தேர்வு இருக்கட்டும். டென்னிஸ் உலகம் காத்திருக்கிறது கிளம்பு” என்றார். இப்போது, மிகவும் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர், ரஃபேல்.

எதற்கும் அசராத ரெய்மான்

பல்கலையின் பேராசிரியருக்கான தேர்வு அது. பெர்னார்ட் ரீமென் (Bernhard Riemann) காத்திருந்தார். வானையே பார்க்காமல், எந்த நட்சத்திரம் எங்கே தோன்றும் என்று கணக்குப் போட்டே சொன்ன மாமேதை, காஸ்(Gass)வந்தார். மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை ரீமெனுக்குத் தரவேண்டும். அப்போது, மிகக் கடினமான துறையாகப் பார்க்கப்பட்ட வளைபரப்புகள் சார்ந்த தலைப்பை அவருக்குத் தந்தார் காஸ். அசராமல் ஆய்வுகள் செய்து, அந்தத் தேர்வில் வென்றார் ரீமென். அதன் அடிப்படையில் எழுந்ததுதான் சார்பியல் தத்துவம்.

 சவாலை சந்தித்த மைக்கலாஞ்சலோ

மைக்கலாஞ்சலோ (Michelangelo) இத்தாலியின் பெரிய சிற்பி. போப் திடீரென்று அவரை அழைத்தார். ”ரோம் நகரில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேற்கூரையில் பைபிள் காட்சிகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும்” என்று உத்தரவு போட்டார். அது, மிகவும் சவாலான பரீட்சை. ஒப்புக்கொண்டார் மைக்கலாஞ்சலோ. கண்களை நெருக்கி, கடினப்பட்டு ஓயாமல் உழைத்து, ஓவியங்களை வரைந்தார். அன்றைய இத்தாலியின் தலைசிறந்த ஓவியரும், ஏஞ்சலோவைப் போட்டியாளராகக் கருதிய ரஃபேல், அவற்றைப் பார்த்தார். ”இத்தனை சிறப்பான ஓவியங்களைப் பார்த்ததே இல்லை. கண்ணீர் கோத்துக்கொள்கிறது ஏஞ்சலோ, உன் திறமைக்குத்  தலைவணங்குகிறேன்” என்றார்.

 

நடால் எனும் நாயகன் !


நான் அடிப்படையில் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகன். ரபேல் நடாலின் ஆட்டம் அற்புதமானதாக இருந்தாலும அவரைப்பற்றி எழுதவேண்டும் என்றோ,வாசிக்க வேண்டும் என்றோ எண்ணியதில்லை. திடீரென்று நடாலின் சுயசரிதையை காண நேரிடவே வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். அப்படியே நடாலின் ரசிகனாக அவரின் வாழ்க்கையை படித்ததும் மாறிவிட்டேன் என்பதே உண்மை. RAFA என்று பெயரிடப்பட்டு இருக்கும் நூலை இரண்டு பாணியில் நகர்த்துகிறார்கள். நடால் தன்னுடைய அனுபவத்தை ஒரு அத்தியாயத்தில் சொன்னால் அடுத்த பகுதியில் ஜான் கார்லின் அவரைப்பற்றிய சுவையான சங்கதிகள்,அவரை ஆக்கிய ஆளுமைகள் ஆகியவற்றை இணைத்து பேசுவார். இப்படியே நூலை நீங்கள் விறுவிறுவென்று வாசித்து விடலாம். 

நடாலின் இளமைக்காலத்தில் அவருடைய ஆர்வமெல்லாம் கால்பந்தின் மீதே இருந்திருக்கிறது. அவரின் உறவினர் ஒருவர் பார்சிலோனா அணியில் ஆடிக்கொண்டு இருந்தாலும் இவரின் குடும்பமே தீவிர ரியல் மாட்ரிட் ரசிகர்கள். கால்பந்தில் தோற்கப்போகிற போட்டியில் கூட வென்றுவிடுவோம் என்று இறுதி வரை நம்பிக்கொண்டு ஆடும் உற்சாகம் மிகுந்த இளைஞனாக நடால் இருந்திருக்கிறார். டென்னிஸ் பக்கம் மாமா டோனியால் வந்திருக்கிறார்.
அங்கே அண்டர்-12 டென்னிஸ் போட்டியில் எட்டு வயதில் வென்றதும் டென்னிஸ் காதல் ஈர்த்திருக்கிறது. அடுத்து அண்டர் 14 போட்டிகளில் பங்கு பெற தயாராகி இருக்கிறார். கையில் ஒரு விரல் உடைந்த நிலையில் அதற்கு கட்டுப்போடாமலே ஆட்டத்துக்கு அனுப்பியிருக்கிறார் டோனி. அதோடு ஆடியே இறுதிப்போட்டியிலும் வென்று சாம்பியன் ஆனார் நடால். 

அந்த சாம்பியன்ஷிப்பை வென்றதும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருக்கிறார் இவர். மாமா டோனி போன் போட்டு அப்படி ஜெயித்த இருபத்தைந்து பேரில் வெறும் ஐந்து பேர் மட்டுமே டென்னிஸ் உலகில் மின்னியதை சொல்லிவிட்டு ,”ரொம்ப குதிக்காதே தம்பி !” என்று தலையில் தட்டியிருக்கிறார். 

நடாலுக்கு சாக்லேட் மற்றும் ஆலிவ் என்றால் ரொம்பவும் இஷ்டம். கிரான்ட்ஸ்லாம் போட்டிகள் நடக்கும் பொழுது எக்கச்சக்க உணவு கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டாலும் திருட்டுத்தனமாக வெளியே போய் சாக்லேட் மற்றும் பல பாட்டில் ஆலிவ் வாங்கிக்கொண்டு வந்து தின்று வயிற்றை கெடுத்துக்கொள்வது அவரின் பழக்கம். தோல்வி என்பதை இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளாத ஒரு ஆக்ரோஷ மனோபாவம் உண்டு என்பதையும் ஒத்துக்கொள்கிறார் நடால். சீட்டுக்கட்டு ஆடும் பொழுது தோற்றுவிட குடும்பத்தினர் ஏமாற்றிவிட்டார்கள் என்று இந்த வயதிலும் சீரியஸாக சண்டை போடுகிறேன் நான் என்று வருத்தப்படுகிறார். 

நடாலின் கோச்,குரு எல்லாமும் டோனியே. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஐந்து செட்களுக்கு பிறகு பெடரரிடம் விம்பிள்டன் போட்டியில் தோற்றதும் நடால் ஷவரில் தலையை நனைத்துக்கொண்டு அரை மணிநேரம் கதறி அழுதார். அப்பொழுது எப்பொழுதுமே ஆறுதல் சொல்லி பழக்கமில்லாத டோனியும் ஆறுதல் சொன்னார். அடுத்த விம்பிள்டன் வந்த பொழுது எப்படி வென்றார் நடால் என்பதை பற்றிய விவரணையே ஒரு நஎழுபது பக்கம் அளவுக்கு நீள்கிறது என்றால் அந்த போட்டியை எந்த அளவுக்கு அவர் ரசித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். 

பெடரர் பற்றி நடால் எழுதும் வரிகள் அற்புதமானவை: “நாங்கள் எல்லாரும் காயத்தால் அவதிப்படுகிற பொழுது அவர் மட்டும் எதோ தனியொருவர் போல அவற்றில் இருந்து தள்ளியே நிற்கிறார் ; அவரின் ஆட்டத்தில் இருக்கும் அதிபயங்கர துல்லியம் அபாயமானது. நானும் அவரும் நல்ல நண்பர்கள் ; அவரின் ஆட்டத்தை மற்ற கணங்களில் ரசித்தாலும் நாங்கள் மோதுகிற பொழுது அவரை தவற செய்ய வைக்கவே முனைகிறேன். காட்சிப்போட்டிகளில் அவரைக்கண்டால் சிரித்து கால்பந்து பற்றி பேசுகிற நான்,கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அப்படி நடிக்க முடியாமல் இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொள்கிறேன் !” என்று விவரிக்கிறார். 

தங்கையின் மீதான் அவரின் பாசம் அளவிட முடியாது. அனுதினமும் எங்கிருந்தாலும் கால் செய்து பேசுவது,நெட்டில் சாட்டிங் என்பதோடு அவருக்கு ஒன்று என்றால் அன்றைக்கு முழுக்க தலைவர் அப்செட் ஆகிவிடுவாராம். அதனால் ஊசி போட்டுக்கொண்டால் கூட இவரிடம் வெளியே போட்டி காலங்களில் இருக்கிற பொழுது சொல்வதில்லை இவரின் தங்கை. 

நடால் இளம்வயதில் இருந்தே கட்டுப்பாட்டோடு தான் அவரின் குடும்பத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறார். போட்டி முடிந்ததும் எதிராளியை நோக்கி புன்னகைத்து கரம் குலுக்கி விடை பெறுகிற பழக்கத்தை அவர் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும்,குடித்துவிட்டு வெளியே ஆட்டம் போடுகிற மற்ற பிள்ளைகளை போல இருக்க கூடாது அவர் என்பதிலும் தெளிவாக இருந்திருக்கிறார்கள். அப்படி நீ இருந்திருந்தால் நீ ஆடுகிற போட்டிகளுக்கு எல்லாம் வந்து உற்சாகப்படுத்த மாட்டோம் நாங்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். நடுவில் பள்ளிப்படிப்புக்காக டென்னிஸ் போட்டிகளை முழுக்க மூட்டை கட்டை வைத்துவிட்டு இவரை பட்டம் பெற எல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். விமானத்தில் பாடப்புத்தகங்கள் தொலைந்து மீண்டும் டென்னிஸ் என்று வந்திருக்கிறார் இவர். 

டேவிஸ் கப் இறுதிப்போட்டிக்கு இவரும் அணியில் பத்தொன்பது வயதில் சேர்க்கப்பட்டு போட்டிக்களம் புகுந்தார். ஆண்டி ரோடிக் உடன் அதற்குமுன் நடந்திருந்த போட்டிகளில் தோல்வியையே சுவைத்து இருந்தார் நடால். அன்றைக்கு கார்லஸ் மோயா தான் அவருடன் ஆடுவதாக இருந்தது. திடீரென்று உடம்பு முடியவில்லை என்று அவர் கைவிரித்துவிடவே நடால் பெயரை கேப்டன் தெரிவு செய்திருக்கிறார். நடால் முடியாது என்று ஏகத்துக்கும் மறுத்துப்பேசி சீனியர்கள் ஆடட்டும் என்று சொன்னாலும் உள்ளுக்குள் உற்சாகத்தால் துள்ளியிருக்கிறார். போட்டி வந்ததும் 27,000 ஸ்பெயின் மக்களும் ஆர்ப்பரித்து இவருக்கு தந்த உற்சாகத்தோடு வெறித்தனமாக ஆடி வென்று சாதித்தார். அணி கோப்பையை தூக்கியது. அதற்குமுன் வரை என்ன நடந்து இருந்தாலும் போர்க்குணம் அன்றைய ஆட்டத்தை மாற்றலாம் என்று நடால் அழுத்தமாக உணர்ந்த தருணம் அது !

விம்பிள்டனை பெடரரிடம் இருந்து தட்டிப்பறித்த பின்னர் தான் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. என்னவென்று சோதித்து பார்த்தால்,இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால். 

அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்னரே நிக் நிறுவனம் வடிவமைத்து இருந்த ஷூ அவரின் கால் எலும்பு சிக்கலுக்கு தீர்வு தந்திருந்தது ; அந்த அழுத்தம் மற்ற பகுதிகளுக்கு கடத்தப்படுவதால் அவை அடிக்கடி பிடித்துக்கொள்வது இன்றுவரை நடக்கிறது !

வெர்டாஸ்கோ உடன் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெர்டாஸ்கோ ஒரு டபுள் பால்ட் செய்யாமல் போயிருந்தால் தான் வென்றிருக்க முடியாது என்று ஒத்துக்கொள்ளும் நடால் அப்பொழுதும் அழுதார். அடுத்தடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சொதப்பினார் நடால். முதல் இடத்தை பெடரரிடம் இழந்தார். காரணம்,முப்பது வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு அன்பு மிகுந்த பெற்றோர் பிரிந்து இருந்தார்கள். தூக்கமே வராமல் சாப்பிடாமல் அந்த கவலை தின்ன போட்டிகளில் தோல்வியை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்த நடால் வலிகளில் இருந்து வலிமை பெறுவது என்று டோனியின் உதவியுடன் களம் புகுந்தார். கேரியர் கிராண்ட்ஸ்லாமை மிக இளம் வயதில் சாதித்தவர் என்கிற சாதனை புரிந்தார். 

“நான் எதையும் மறைக்க தெரியாதவன். தொடர்ந்து என்னுடைய சிறந்த ஆட்டத்தை தராவிட்டால் எனக்கு தூக்கம் வராது ! இப்பொழுதும் கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு ஒரு மணிநேரம் முன்னர் டென்சனில் மணிக்கு நான்கு,ஐந்து முறை சிறுநீர் கழிக்கிறேன் ! ஆனாலும்,ஆட்டம் என்று வந்தால் அடித்து விளையாடிவிட வேண்டும் ! அதுதான் என் பாணி !” என்று பேசும் நடாலின் டென்னிஸ் காதலும்,உண்மையான காதலும் இன்னமும் வேகமாக போய்க்கொண்டே இருக்கிறது. டென்னிஸ் காதலர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல்.
ஸ்பியர் வெளியீடு 
விலை : நானூறு 
பக்கங்கள் : 304