அவர் ஒரு அற்புதம்-பிராங்க் சினாட்ரா !


வாழ்க்கை அடித்து நொறுக்குகிறதா ? எல்லாமே உங்களுக்கு எதிராக இருப்பதாக தோன்றுகிறதா ? பிராங்க் சினாட்ராவின் வாழ்க்கை கதை உங்களை நிச்சயம் உத்வேகப்படுத்தும். சிசிலியில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்திருந்த இவரின் பெற்றோர் இவருக்கு பரிசளித்தது கண்ணீர்,வறுமை,சோகம் மட்டுமே. தீயணைப்பு துறையில் இருந்த அப்பா வீட்டு பக்கம் வந்து இவர் பார்த்ததே இல்லை. அம்மாவோ சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் மையத்தை நடத்தி வந்தார். அடிக்கடி அவர் ஜெயிலுக்கு போக தனிமை மட்டுமே இவருக்கு கிடைத்தது.

பள்ளியில் படிப்பே ஏறவில்லை ; மிகப்பெரிய ரவுடி என்கிற பட்டம் தான் வந்து சேர்ந்தது. ஐம்பது நாட்கள் கூட மொத்தமாக பள்ளிப்பக்கம் ஒதுங்காத அவர் செவிவழியாக கேட்ட இசைக்கோர்வைகளால் ஈர்க்கப்பட்டு பாட வந்தார் அவர். அவரின் குரல் இனிமையாக இல்லாமல் கரடு முரடாக இருந்தாலும் அதற்கென்று ரசிகர்கள் உண்டாகிப்போனார்கள். இசைக்குறிப்புகளை வாசிக்கவே முடியாது என்றாலும் அவர் பாடிய பாடல்கள் பல லட்சம் பேரை கட்டிப்போட்டன.

இசை என்பது மகிழ்விக்க மட்டுமில்லை என்று உறுதியாக உணர்ந்திருந்த
சினாட்ரா தன்னுடைய பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்டு,சுரண்டப்பட்ட கறுப்பின மக்களுக்காக பாடினார். ஒரு குறும்படத்தில் அவர்களின் வலிகளை சொல்லி அவர்களை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிற வகையில் நடித்தார். கோல்டன் க்ளோப் விருது வந்து சேர்ந்தது.

இரண்டு வருடங்கள் நடித்துவிட்டு இசைத்துறை பக்கம் வந்தால் கண்டுகொள்ள கூட ஆளில்லை. மேடையேறி பாடினால் ரசிகர்கள் பழைய சினாட்ரா இல்லை இவர் என்று கிளம்பினார்கள். தொண்டை நரம்பு அறுந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.டாக்டர்கள் சிகிச்சை செய்து ஒய்வு எடுக்க சொன்னார்கள். வருத்தம் தாங்காமல் கேஸ் அடுப்பை திறந்து கார்பன் மோனாக்சைட் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று அதுவும் முடியாமல் கதறி அழுதார். சிலர் மட்டுமே நம்பிக்கை தர ஃபிரம் ஹியர் டு எட்டர்னிட்டி’ என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தது.

உள்ளுக்குள் எல்லா மௌனத்தையும் தேக்கி இசையாக ஒரு வாய்ப்பு கிடைத்ததும் கொட்டினார் அவர். மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. அவர் பாடிய பாடல்கள் மீண்டும் ஹிட் ஆகின. கறுப்பின மக்களுக்காக அவர் பாடிய பாடலைக்கேட்டு மார்ட்டின் லூதர் கிங் கண்ணீர் விட்டு அழுதார். கிராமி விருதுகளை அள்ளிக்கொடுத்தார்கள். எழுபத்தி ஏழு வயதில் அவர் பாடிய பாடல்களைக்கூட இளைஞர்கள் கொண்டாடினார்கள். பத்துக்கும் மேற்பட்ட கிராமி விருதுகள்,மூன்று ஆஸ்கர்,மூன்று கோல்டன் க்ளோப் விருதுகளை பெற்ற அவர் அத்தனை சிக்கல்களில் இருந்து மீண்டு சாதித்தது பற்றி கேட்ட பொழுது ,”நான் பாடுகிற பொழுது நேர்மையாக இருந்தேன் ; நம்பினேன் ! மாயம் நிகழ்ந்தது !” என்றார்.

அர்ஜென்டினாவின் எம்.ஜி.ஆர். எவா பெரோன்


எவா பெரோன் -முப்பது வயதுக்குள் அந்த பெண் தொட்ட உயரங்கள் சொல்லில் அடங்காதவை . அர்ஜென்டினாவின் சின்ன நகரத்தில் பிறந்த அவளுக்கு கூட பிறந்தவர்கள் ஐவர் . அவரின் தந்தைக்கு இரண்டாவது சட்டப்படியான மனைவி என்கிற அங்கீகாரம் பெறாதவராகவே இவரின் அம்மா இருந்தார். அப்பாவின் மரணத்தின் பொழுது வெளியே நிற்க வைக்கப்பட்டு அவமானத்தை சுவைக்க வேண்டி வந்தது . எவா கொஞ்சமாக அழுதார் ; வேலை தேடி நாட்டின் தலை நகருக்கு வந்தார் 

கையில் இருந்தது முப்பது பெசோக்கள்; கொஞ்சம் நம்பிக்கை . ஏகத்துக்கும் அலைந்தார் . நாடகங்கள்,ரேடியோ ஷோக்கள் என என்னென்னமோ பண்ணி பார்த்தார் . ஹிட் அடிக்க முடியாமலே இருந்தது . நடுவில் அழகைக்கூட்டி கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொள்ள பணம் சேர்த்து வைத்திருந்தார் . உறவுக்காரர் ஒருத்தருக்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த பல நாள் உழைப்பில் கிடைத்த பணத்தை முழுக்க கொடுத்துவிட்டு வந்தவருக்கு வாழ்க்கை புன்னகையை பரிசளிக்க காத்துக்கொண்டு இருந்தது 

பிரபலமான பெண்மணிகளின் வேடத்தில் வானொலியில் தோன்றி ஒரு தொடரில் நடிக்க அது சக்கைப்போடு போட்டது . நாட்டில் ஸ்டார் ஆகிவிட்டார் . அப்பொழுது தான் அரசியல் ஆளுமையாக நாட்டில் வளர்ந்து கொண்டிருந்த பெரோனை சந்தித்தார் . இருவருக்கும் வயது வித்தியாசம் பத்தொன்பது . சில சில சந்திப்பில் காதல் அரும்பி சீக்கிரம் திருமணம் செய்துகொண்டார்கள் . 

நாட்டில் வேறொரு சர்வாதிகாரி ஆண்டு கொண்டிருந்தார் ; அவரின் ஆட்சியை பெரோன் கோஷ்டி தூக்கி எறிந்து விட்டு ஆட்சிக்கு வந்தது . பெரோன் ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று சொல்லி தொழிலாளர் நலத்துறையை வாங்கிக்கொண்டார் . அதற்கு கீழ் தான் ராணுவ சங்கம் இருந்தது .

இந்த காலத்தில் தான் எவா நாடு முழுக்க பயணம் செய்தார் ; எளியவர்களின் வீட்டில் தங்கினார் . அவர்களின் வலிகளை காதுகொடுத்து கேட்டார் . அவர்களுக்காக பேசினார் ; கொஞ்சம் கண்ணீரும் விட்டார் . எவா தோன்றினாலே மக்கள் ஆரவாரம் செய்தார்கள் . அப்பொழுது தான் அது நடந்தது . ஒரு நாள் பெரோனை ராணுவம் கைது செய்தது , சிறை அடைத்தார்கள் . ஆட்சி நமதே என கொக்கரித்தார்கள் 

எவா நடுவில் நின்றார் . மக்கள் கூட்டத்தை,தொழிலாளர் சங்கங்களை திரட்டினார் . நான்கு லட்சம் பேர் அளவுக்கு கூடி பொங்கினார்கள் . ஞானத்தாய் என்கிற அளவுக்கு மக்கள் எவாவை கொண்டாட ஆரம்பித்தார்கள் . மேல்சட்டையை தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளர்கள் பெரோனுக்கு குரல் கொடுக்க விடுதலையானார் அவர் . நான்கு மாதத்தில் நடந்த தேர்தலில் ஜனாதிபதி ஆனார் 

எவாவுக்கு ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது . சட்டப்படி மனைவியாக இல்லாதவர்களின் பிள்ளைகளுக்கு உரிமைகள் இல்லை என்பதை மாற்ற வைத்தார் . பெண்களுக்கு வாக்குரிமை வாங்கித்தந்தார் . அவரை மானே தேனே என புகழ்ந்து எனும் பத்திரிக்கைகளுக்கு மட்டும் தான் நாட்டில் இடம். மற்றது எல்லாம் கிளம்ப வேண்டியது தான் .இதெல்லாம் நடந்தது முப்பது வயதுக்குள் ! தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார் . துணை ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டியது ; விதி முந்திக்கொண்டது 

முப்பத்தி மூன்று வயதில் புற்றுநோயால் இறந்து போனார் எவா . நாடே ஸ்தம்பித்தது . இருபது லட்சம் பேர் வரிசையில் நின்று ஏழை வீட்டில் இருந்து வந்து எளியவர்களுக்காக கண்ணீர் சிந்திய தங்களின் மகளை பார்த்து அழுதார்கள் . ஒருவருக்கு அரை நிமிஷத்துக்கும் குறைவான நேரமே பார்க்க கிடைத்தது . நாடு முழுக்க எல்லாமும் நின்று போனது ; மலர்க்கடைகள் காலியாகி இருந்தன . ஒரு குவளை தண்ணீரே கிடைக்க பாடுபட வேண்டியிருந்தது . எவா நம்மூர் எம்ஜிஆர் போல அந்நாட்டில் அசைக்க முடியாத பிம்பம் அவர் . அவரை ஆராதித்தால் மக்கள் உங்களையும் கொண்டாடுவார்கள் . அறுபது வருடங்கள் ஆகியும் மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் அவர் . அவரின் பிறந்தநாள் மே ஏழு

ஹீத் லெட்ஜர் எனும் ஜோக்கர் நாயகனின் வலி மிகுந்த வாழ்க்கை !


ஹீத் லெட்ஜெர் பிறந்த நாள் என்று நண்பன் பரிதி சொல்லித்தான் தெரியும். நடிப்புலகின் உச்சம் இவர் என்று உலகம் சொல்வதற்கான கணம் வருவதற்கு முன்பே மரணத்தின் உதடுகள் இருபத்தி எட்டு வயதில் பற்றிக்கொண்ட நாயகன் அவர்.

ஆஸ்திரலியாவில் பிறந்த லெட்ஜெருக்கு ஹீத் என்கிற பெயர் வுதரிங் ஹைட்ஸ் படத்தின் ஆண்டி-ஹீரோவின் நினைவாக வைக்கப்பட்டு இருந்தது. அவரின் வாழ்க்கையிலும் சோகம் விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அப்பொழுதே பெற்றோர் உணர்ந்திருந்தார்களோ என்னவோ ?

பத்து வயதை தொட்ட பொழுது இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்திருந்தன. அவரின் அப்பாவும்,அம்மாவும் பிரிந்திருந்தார்கள். இரண்டு வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து அன்பின் சுவடுகள் அவருக்கு என்ன என்றே தெரியாமல் போயின. வகுப்பில் சமையல் அல்லது நடிப்பு ஆகிய இரண்டில் ஒன்றை பாடமாக தெரிவு செய்ய வேண்டும் ! சமையலில் இருந்து தப்பித்தால் போதும் என்று தான் நாடகத்தின் பக்கம் வந்தார் அவர்.

செஸ் மற்றும் மோட்டார் விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருந்த லெட்ஜரை இரண்டாவது விஷயத்தில் ஈடுபடுத்தி பெரிய ஆள் ஆக்கலாம் என்று தந்தை விரும்பினார். விடுங்கள் என்னை என்று பதினாறு வயதில் பள்ளியை விட்டு நீங்கி நண்பனோடு நடிப்புலகில் தனக்கான இடத்தை தேடி சிட்னி நகருக்கு சில சென்ட்களோடு வந்து சேர்ந்தார்.

அங்கே டி.வி.சீரியல்களில் வேடங்கள் கிடைத்தன. “நன்றாக நடிக்கிறாய் நீ !” என்று சொன்னதோடு நில்லாமல் ஹாலிவுட் போய் பார் என்று உடனிருந்தவர்கள் ஊக்கப்படுத்த அமெரிக்காவுக்கு வந்தார். சில படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக கவனம் பெறாமல் போயின. ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு முறை பண்ணிய வேடத்தின் சாயலில் இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் லெட்ஜெர்

h“10 Things I Hate About You,” படத்தில் ரொமாண்டிக்கான ரோலில் பின்னியிருந்தார் அவர். அதே மாதிரி வேடங்கள் ஒருவருடம் முழுக்க வந்த பொழுது அவற்றை ஏற்க மறுத்தார் அவர். அமெரிக்காவின் விளம்பரப்படுத்தும் யுக்திகள் அவருக்கு கைவரவே இல்லை. வெறும் டாப் ரேமன் நூடுல்ஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்றோடு பணமில்லாமல் தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் படத்துக்காக காத்திருந்தார் அவர். “பணம் உங்களுக்கு முக்கியமில்லையா ?” என்று கேட்கப்பட்ட பொழுது ,”என் ஊரில் இருந்து கிளம்பி வந்த பொழுது என்னிடம் பணம் எதுவும் இல்லை. இப்பொழுதும் பணம் எனக்கு முக்கியமாகப்படவில்லை. !” என்று அழுத்தமாக சொன்னார் அவர்.

தி லைப் ஆப் பை படமெடுத்து ஆங் லீ இரண்டு கௌபாய்களுக்கிடையே ஏற்படும் ஓரினச்சேர்க்கை உறவும் பிரிந்து மீண்டும் அவர்கள் சந்திக்கிற பொழுது உண்டாகும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்ட படத்தில் இவரை ஒரு கௌபாயாக நடிக்க வைத்தார். அந்த ப்ரோக்பாக் மவுண்டென் படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு அந்த சிறுகதையை எழுதியவர் ,”என் கதையை இப்படிக்கூட நடிப்பால் இன்னமும் ஒரு படி மேலே கொண்டு போய் விட முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை !” என்று சிலிர்த்துப்போய் சொன்னார். அந்த படத்துக்கு சிறந்த நடிகருக்கான அகாடமி விருது நூலிழையில் கிடைக்காமல் போனது.

ஓரிரு காதல்கள் உடைந்த பிறகு மிச்செல் உடன் காதல் கைகூடி இருந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்தது. அன்பெனும் அற்புதம் லெட்ஜரின் வாழ்க்கையில் வீச ஆரம்பித்தது. “ஆறு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறோம் நாங்கள் !” என்று பேட்டியெல்லாம் கொடுத்தார்கள். திடீரென்று ஒரு நாள் பிரிந்தார்கள். ஹெராயின் பழக்கம் தொற்றிக்கொண்டது.

நோலன் The Dark Knight படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடிக்க இவரை புக் செய்த பொழுது பலர் அதிர்ந்தது உண்மை. “இந்த வேடத்தில் லெட்ஜரை எல்லாம் யோசித்து கூட பார்க்க முடியவில்லை. படத்தை கண்டிப்பாக நான் பார்க்கப்போவதில்லை !” என்றொரு விமர்சகர் எழுதினார். நான்கு மாதங்கள் தனியாக ஒரு அறையை அமெரிக்காவில் எடுத்துக்கொண்டு தனிமையில் மூழ்கி,தூக்கம் தொலைத்து,டைரியில் ஜோக்கருக்கு பிடித்த விஷயங்களால் நிரப்பி அவர் தயாராகி இருந்தார். 

படத்தின் கதாப்பாத்திரத்தை இப்படி விவரித்தார் அவர் :”psychopathic, mass-murdering, schizophrenic clown with zero empathy.” இரண்டே மணிநேரம் மட்டுமே தூங்கி,தன்னை வருத்திக்கொண்டு ஜோக்கராகவே மாறியிருந்தார் அவர். எப்பொழுதும் செட்டில் ஒவ்வொரு ஷாட்டிலும் தானே முழுமையாக இயக்கம் நோலன் இவரை சில காட்சிகளை இயக்க சொல்கிற அளவுக்கு அசத்திக்கொண்டு இருந்தார் ஹீத் லெட்ஜர். ஜோக்கர் கை தட்டுகிற காட்சி படத்தின் ஷூட்டிங்கின் பொழுது அந்த கணத்தில் இவரே தன்னிச்சையாக செய்தது. அதோடு ஹான்ஸ் ஜிம்மரின் இசை சேர்ந்து என்னவோ செய்தது ரசிகர்களை ! 

படத்தின் எடிட்டிங் நடந்து கொண்டிருந்த பொழுதே தன்னுடைய அறையில் அதீதமாக தூக்க மருந்தை எடுத்துக்கொண்டதால் உடலில் ஆடையின்றி இறந்து கிடந்தார் லெட்ஜர். படம் வந்த பிறகு அவருக்காகவே பல கோடி பேர் படத்தை பார்த்து கொண்டாடி கண்ணீர் விட்டார்கள். ஆஸ்கர்,கோல்டன் க்ளோப்,பாஃப்டா உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை ஜோக்கர் வேடத்துக்காக வென்ற லெட்ஜர் மரணத்துக்கு முந்தைய தினம் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ? தன்னுடைய இரண்டு வயது மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார் !!