ரம்மியமான ராணி !


Queen The Film பார்த்தேன். திரையரங்குக்கு போய் பார்க்கும் முதல் இந்தி படம் என்பதால் சப் டைட்டிலோடு பார்க்க இன்றைக்கு போனேன். திடீரென்று காதலனின் முடிவால் நின்று போகிறது திருமணம். நாயகி ஹனிமூனுக்காக போகவேண்டிய இடங்களுக்கு தனியே போவதற்கு முடிவு செய்து கொண்டு கிளம்புகிறாள். சாலையைக்கூட ஒழுங்காக கடக்க தெரியாத,கட்டுப்பெட்டியாகவே இருந்து பழகிவிட்ட ராணி எனும் நாயகி பாரீஸ்,ஆம்ஸ்ட்ர்டாம் என்று நகரங்களில் சுற்றித்திரிகிற பொழுது அவள் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறாள். அவர்கள் தருகிற உணர்வுகள்,ஏற்படுகிற அனுபவங்கள்,உறவுகள் எல்லாமும் அவளை மாற்றிப்போடுகின்றன. இதுதான் கதையின் அவுட்லைன். 

விஜயலட்சுமி எனும் பாரீஸ் ஹோட்டலில் பணியாற்றும் பெண்ணுடன் தான் முதலில் ராணிக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அங்கே ஒரு பார்ட்டியில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டதும் அழுதும்,சிரித்தும் தன்னுடைய மனதில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டுகிற காட்சி அத்தனை கனமானது. அப்பொழுது சிரித்தாலும் “எல்லாவற்றையும் மதித்து மதித்தே நான் பழக்கப்பட்டு விட்டேன் ! தெரியுமா உனக்கு !” என்று ராணி கேட்கிற தருணம் பல்வேறு இந்தியப்பெண்களின் குரலாகவே ஒலிக்கிறது. அப்பொழுது சோகத்தோடு ஆடி முடிக்கும் ராணி ஊர் சுற்றப்போகிற இடங்களிலும் கசந்த காதல் நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. பாரீஸ் தோழியின் வாழ்க்கை முறை,அவளின் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வாழ்க்கை எல்லாமும் ராணியை கொஞ்சமாக இதப்படுத்துகின்றன. 

அங்கே இருந்து ஆம்ஸ்ட்ர்டாம் நகருக்கு போகிற ராணிக்கு மூன்று ஆண்கள் தங்கியிருக்கிற அறையில் தான் இடம் கிடைக்கிறது. முதல் நாள் வெளியே படுத்திருந்தாலும் அதற்கு பின்னர் நட்பான அவர்களோடு நெருங்கி விடுகிறாள். ஜப்பானிய டாக்காவும்,ரஷ்ய ஒலேக்சாண்டரும் அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் சிரிப்பு நமக்கும்,ராணிக்கும் கூட ஒட்டிக்கொள்கிறது. அந்த டாக்காவுக்குள் இருக்கும் சோகம் பின்னர் தெரிகிற பொழுது அவனை கட்டியணைத்து தேறுதல் சொல்லும் காட்சியில் பெண்ணின் அணைப்பு என்றால் காமம் மட்டுமே என்று எண்ணுபவர்கள் நிச்சயம் தங்களின் பார்வையை மாற்றிக்கொள்வார்கள். 

இத்தாலிய உணவுக்காரரின் உணவு பிடிக்கவில்லை என்று நேராக ராணி சொன்னதும் அவர் பணத்தை திருப்பித்தந்த பின்னர் சில கணங்களில் சந்திக்கிறார்கள். அவர் மீது சின்னதாக ஒரு க்ரஷ் உண்டாகிறது ராணிக்கு. அதன் இறுதித்தருணத்தில் என்ன நடந்தது என்பது மென்மையான ஹைக்கூ. அவள் கலந்து கொள்ளும் சமையல் போட்டியில் அவளின் பானி பூரி உண்டாகும் ரணகளங்களும் ரசிக்க வைக்கின்றன. அதற்கு பின்னர் காதலன் தேடிக்கொண்டு அங்கேயே வந்து சேர்கிறான். அவனை அனுப்பிவிட்டு மூன்று ஆண் நண்பர்களுடனான ராக் ஷோவை முடித்துவிட்டு எந்த கனமும் இல்லாமல் வாய்விட்டு ஆட்டம் போட்டு விடைபெறும் ராணி ஊர் திரும்புகிறாள். 

பெண்கள் சமைத்து விட்டு,சீரியல் பார்த்துவிட்டு,கிசுகிசு பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற பார்வை அவள் மீது மீண்டும் திணிக்கப்பட முயற்சி நடக்கிற பொழுது மோதிரத்தை கழட்டி காதலனின் கையில் கொடுத்துவிட்டு ஒரு மெல்லிய அணைப்பு மற்றும் புன்னகையோடு நன்றி மற்றும் ஸாரி சொல்லி இயல்பாக ராணி விடை பெற்றுவிட்டு வருகிற பொழுது கண்கள் நனைந்து போகிறது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இதைப்பார்த்த பின்னர் பெண்களின் உலகைப்பற்றிய பார்வை ஓரளவுக்காவது மாறும். (படத்தில் சிற்சில குறைகளும் உண்டு ! ஆனாலும்,அதை எழுத விருப்பமில்லை ).

 
 

கம்யூனிசம் தந்த காரல் மார்க்ஸ்


மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் நாளை .உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை .
போராட்டம்,வறுமை,வலிகள்,பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும்,பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில்
இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்


ஜெர்மனியில் மே – 5 -1818 இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற
அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது .

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை
போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஷேக்ஸ்பியர் கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு
நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார் .அவர்களின் காதல் பல
வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது -அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள்
எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின .எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார் .எல்லாவித
அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது ;இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி
காட்டாத மங்கை அவர் .எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை
ஒத்திருப்பதை கண்டார் .இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ் .

வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே
இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள் ;ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை
வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும்
தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை
-மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்
.

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;”பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை
!”என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த
மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது