தமிழகத்தில் மேடைப்பேச்சு!


அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.

மேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.


சைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.
மேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உரையாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).

கல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”

Image result for பெரியார் மேடை

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.

Image result for அண்ணா பேச்சு

 

மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.

எம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.

Image result for அண்ணா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா? இல்லை. ஊழல் செய்தேனோ? இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

வைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.

Image result for வைகோ

தமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.

தவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.

திராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

பக்கங்கள்: 11௦
விலை: ரூபாய்.9௦

பெத்தவன் – பெருகி வழியும் குரூரம்


இமையம் அவர்களின் பெத்தவன் சிறுகதைப் பற்றி முதன்முதலில் தமிழ்ப்பெண் விலாசினி அக்காவுடன் உரையாடும் பொழுது தான் அறிய நேர்ந்தது. அவரின் ஓரிரு சிறுகதைகளை அதற்கு முன் வாசித்து இருக்கிறேன் என்றாலும் இந்தக் கதையை வாசிப்பது தள்ளிக்கொண்டே போனது.

ஒரு ரயில் பயணத்தின் பொழுது அந்தச் சிறுகதையைக் கையில் எடுத்தேன். நான் இமையம் அவர்கள் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவன். அவர் கதையில் சொல்லிச்செல்லும் எந்தச் சம்பவமும் எனக்குப் புதியது இல்லை. அந்த வன்மம், அடையாள வெறி ஆகியவற்றைக் கண்முன்னால் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். தர்மபுரி கொடூரத்தின் பொழுது பல ஊர்க்காரர்களை ப்ளாக் செய்கிற அளவுக்கு நிலைமை போனது.

இமையமின் பேனாவில் நாயக்கன்கொட்டாய் பகுதி எரிக்கப்படுவதும்,
ஜாதி அரக்கன் பல்வேறு குடும்பங்களைச் சிதைப்பதும், காதல் இந்த அனலில் பொசுங்கிப் போவதும் அந்நிகழ்வு நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே எழுத்தாக மாறிவிட்டது.
ஜாதி மீறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியை ஊரே சேர்ந்து காதில் விஷம் ஊற்றிக்கொள்வது , வேற்று ஜாதி ஆணோடு ஊரைவிட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்ட பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்கி அவளின் ஜாதி ஆண்கள் என்னும் பிணங்கள் கொல்வது என்று அத்தனை அக்கிரமங்களும் அதன் படபடப்புக் குன்றாமல் கதையில் வந்து சேர்ந்திருக்கிறது.

அப்பா-மகள் பாசம் என்கிற நெஞ்சை கனக்க வைக்கும் இழை கதையை இன்னமும் நெருக்கமானதாக மாற்றுகிறது. இரண்டு வருடங்களாக அப்பாவோடு ஒரு வார்த்தை பேசாத, ஒரு சொட்டுக்கண்ணீரை அத்தனை அடிகள் அடித்தும், முடியை வெட்டியும் சிந்தாத மகள் தன்னுடைய வீட்டில் மகளுக்குத் தட்டில் வைத்து இறுதி உணவை பிசைந்து சாப்பிட வைக்கையில் மண் போலச் சரம்சரமாக அவள் கண்ணில் கசியும் கண்ணீர் ஆதிக்கத்தின் வெம்மையைக் கடத்தும் செயலை செய்கிறது. “உன்கூடவே இருந்துடுறேன் அப்பா!” என்கிற பொழுது மகளிடம் தந்தை பேசும் கனங்கள் சில நொடிகளேனும் புத்தகத்தை மூடி வைக்காமல் இருக்க முடியவில்லை.

“இவன் பிள்ளையா இது அப்படின்னு பேரு வாங்கினதே இல்லை நானு. நீ இப்படிப் பண்ணிட்டே…” என்கிற பொழுது கூட மகள் செய்தது தவறென்று சொல்லாத அந்தப் பெத்தவன் ஊரின் வன்மம், கொலைவெறி, ஜாதித்திமிர் எல்லாவற்றையும் தாண்டி எப்படித் தன்னுடைய மகளைக் கரைசேர்க்கப் போகிறோம் என்கிற பதைபதைப்பில் இருக்கிற நகை, பணம் எல்லாவற்றையும் திரட்டிக்கொடுத்து, “எங்கேயாச்சும் வாத்தியாரா ஆகிடு புள்ள. இந்தப் பக்கம் வராதே!” என்கிற தொனியில் சொல்லி ஊரைவிட்டு கொண்டுபோய் விட்டுவிட்டு மனிதர்கள் என்கிற போர்வையில் திரியும் கொடூரர்கள் அருகே வருவதற்கு முன்பே நாயின் அருகாமையில் உயிர் விடுகையில் உங்கள் மனசாட்சியும் ஜாதியை விடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பெறும். பெற்றோர்களிடம் இந்தக் கதையை வாசிக்கக் கொடுக்க வேண்டும். இதைக் குறும்படமாக ஆக்கி தமிழகம் முழுக்கக் கொண்டு போக வேண்டும். இணையத்தில் வாசிக்க.. http://imayamannamalai.blogspot.in/2012_09_01_archive.html

பாரதி புத்தகாலயம்
விலை: 30.ரூபாய்

— with Imayam Annamalai.

கருக்கு – அறுக்கும் ஜாதியம் !


பாமாவின் கருக்கு நாவலை வாசித்து முடித்தேன். சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அவரின் வாழ்க்கை அனுபவங்கள் இலக்கியத்தரத்தோடு அமைந்து மனதை பனங்கருக்கு போல அறுக்கின்றன. மனிதத்தின் கரங்களைச் சாதியத்தின் கொடூரப்பற்கள் கொண்டு அறுக்கும் அநியாயங்கள் அடுக்கடுக்காகப் பதியப்பட்டு இருக்கிறது.

‘எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு. ரொம்பப் பெரிய முன்னேத்தமோ எதுவுமோ இல்லன்னாகூட அதோட அழக வெச்சுத்தான் அத ரொம்பப் பிடிக்கும் என்று ஆரம்பிக்கும் நாவலில் நாயக்கர்களிடம் எப்படி நிலங்கள் மிகுந்திருக்கின்றன, பறையர்களான தங்களின் அன்றாடப் பிழைப்பே எத்தனை வலியும், முதுகொடியும் சுரண்டலும் எப்படித் தொடர்ந்து வருத்துகின்றன என்பதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது சம்பவங்கள்.

பள்ளியில் தேங்காய் ஏறிப் பறிக்கும் விளையாட்டில் ஒரு முற்றாத தேங்காயை தெரியாமல் கீழே தள்ளிவிடப் பாமாவின் ஜாதிப்பெயர் சொல்லப்பட்டு நீங்கள் எல்லாம் திருடத்தான் செய்வீர்கள் என்று சொல்லப்படும் இடத்தில் இருந்து மடத்தில் கன்னியாஸ்திரி ஆகப்பணியாற்றிய காலம் வரை ஜாதி விடாது அறுத்துக்கொண்டே வந்திருக்கிறது. பேருந்தில் கூட ஆதிக்க ஜாதியினர் உடன் அமர மறுப்பது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாட்டிகளைக் கூட ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த குழந்தைகள் கூடப் பேர் சொல்லிக்கூப்பிடுவது, பஜ்ஜி பார்சலை தீட்டு ஆகிவிடக்கூடாது என்று நூல் பிடித்துக் கொண்டு வரச்சொல்வது, கல்லறையில் கூட இடம் தர மறுப்பது என்று அடுக்கடுக்காகத் துரத்தும் அநீதிகள் கண்முன்னால் எழுத்தாக நகர்கின்றன.

முன் கோவம், மத்தியான மசாலா, சொனப்பன்னி என்று பெயர் சொல்லி அழைப்பதன் ஊடாகவும் தாழ்துதலை நிகழ்த்தலையும், சாமி என்றிருக்கும் பெயரைச் சொல்லி அழைக்காமல் பட்டப்பெயரிட்டு இழிவுபடுத்தலையும்
பாமா வெகு இயல்பாகப் பதிகிறார். பணம் கொடுத்து விடுதியில் தின்றாலும், “இதுங்க வீட்டில தின்ன கொடுப்பினை இல்லாம இங்க எப்படித் தின்னு கொழுக்குது பாரு!” என்று ஜாதியைச் சுட்டி திட்டுதல் நிகழும் கணங்கள் சோற்றில் கூடவா இப்படி என்று அலற வைக்கிறது.

அரிசிச்சோறு என்பது அரிதாகக் கிடைக்கிற ஒன்றாகி குருநாக்கஞ்சி, கருவாட்டுத்தண்ணி என்று பசிபோக்க முடியாமல் கழியும் காலங்களைக் கூடச் சட்டென்று சொல்லிவிட்டு அடுத்தச் சங்கதிக்குள் அவரால் நுழைந்துவிட முடிகிறது. நம்மால் தான் தாங்கமுடியவில்லை. பள்ளிக்கூட வாசனைக்குப் பதிலா தீப்பெட்டி மருந்து வாசனை தா பிள்ளைகளுக்குக் கிடைச்ச கெதி. வவுத்து பாட்டுக்கே பெரும்பாடா இருக்கையில எங்குட்டு கூடிப் படிக்க முடியும்?’ என்று கேட்கையில் தான் எத்தனை கனம்?

ஜாதி வேற்றுமைகள் எப்படிப் பிள்ளைகளின் விளையாட்டைக் கூடப் பாதிக்கின்றது என்பதைப் பொண்ட நுண்மையான பதிவுகள் நாவலில் கடந்து செல்கின்றன. கிறிஸ்துவக் கன்னியாஸ்திரியாகி சேவை செய்யலாம், வறுமையான வாழ்க்கை வாழலாம் என்று போகையில் அங்கே பெருத்த அதிர்ச்சிகள் அவருக்குக் காத்திருக்கின்றன. ஆடம்பரமும், போலித்தனமும் மிகுந்திருப்பதையும், ஜாதியம் அங்கேயும் தலைவிரித்து ஆடுவதும், பணக்கார பிள்ளைகளுக்காக மட்டுமே திறக்கிற கதவுகள் கொண்ட கல்விக்கூடங்கள் என்று அவை அமைந்திருப்பது அவரை வாட்டி எடுக்கின்றன.

“கடவுள் அன்பு, இரக்கம், சாந்தம் கொண்டவர். பாவங்களை மன்னிப்பவர், பொறுமையானவர், மென்மையானவர், தாழ்ச்சி, கீழ்படிதல் உள்ளவர் என்று சொல்லித்தரும் கிறிஸ்துவ மடங்கள் அவர் நீதி, நேர்மை மிகுந்தவர், அநீதி கண்டு பொங்குபவர், போலித்தனத்தை எதிர்ப்பவர், ஏற்றத்தாழ்வு காட்டாதவர் என்பதை எப்பொழுதும் சொல்லித்தருவதே இல்லை.” என்று அரற்றித்தீர்க்கும் பாமா அதைவிட்டு விலகிய பின்பு வாழ்க்கை ஜீவனத்துக்கே கஷ்டம் என்ற சூழலிலும் தான் சமமானவள் என்கிற எண்ணத்தின் உண்மையும், தேடலும் செலுத்துவது நாவலின் மூலம் கடத்தப்பட்டு இருக்கிறது.

கருக்கு
பக்கங்கள்:116
காலச்சுவடு கிளாசிக் வெளியீடு
விலை: 100

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் – நூல் அறிமுகம்


ஜி.நாகராஜனின் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறுகதைகளோடு வசித்துவிட்டு வந்தேன். எல்லா வகையான புனித பிம்பங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு மகத்தான சல்லிப்பயலான மனிதனின் அக இருட்டுக்குள் வெகு இயல்பான பயணம் கூட்டிப் போகிற அவரின் கதைகளைப் பாலியல் கதைகள் என்று சிலர் கடந்திருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். நிச்சயமாக இல்லை என்பதைப் படிக்கிற பொழுது உணர்வீர்கள்.

ஜெயகாந்தன் எழுதிய அக்கினி பிரவேசம் கதையை இவரும் மாற்றி எழுதியிருக்கிறார். மகளின் கருவை கலைக்கச் சொல்லி பேசிக்கொண்டு இருக்கும் அன்னையிடம், “நான் எதுவும் தப்பு பண்ணலைன்னு சொன்னே அம்மா. ஆனா, என் மனசு திடமா இருந்தா இப்படி நடந்திருக்காது இல்லையா?” என்று மகள் கேட்டதும் அந்தத் தலைப்பை விட்டு அப்படியே எதுவும் நடக்காதது போலப் பேச்சை மாற்றுகிறாள் அவள். ஊரில் நடக்காதா ஒன்று, கடந்து கூட்டிப் போக வேண்டும் மகளை என்கிற பரிதவிப்பை எந்த விவரணையும் இல்லாமல் கடத்தியிருக்கிறார்.

போலியும், அசலும் கதையில் உள்ளாடையை ரகசியமாக அணிந்து பார்க்கும் பாட்டி, சம்பாத்தியம் கதையில் சொந்த மகளைத் தன்னுடைய இச்சைக்கு ஆட்படுத்தும தந்தை, மகளையும் சவுகரிய வாழ்க்கைக்குப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திப் பின்னர்த் திருமணம் செய்து கொடுக்கும் தாய் என்று உண்மைக்கு வெகு அருகில் கதைகள் அமைகின்றன.

துக்க விசாரணை கதையில் ஐந்து கொன்னோரியே நோயால் பாதிக்கப்பட்ட அக்கா விபத்து ஒன்றில் இறந்துபோன சூழலில் தங்கைக்கு ஆறுதல் சொல்லப் போகிறான் நாயகன். அவள் அக்காவின் மரணத்தைப் பற்றிப் புலம்பி அழுகிறாள். அவளின் ஆடை விலகி இருக்கிறது. பத்து ரூபாயை அவள் கையில் திணிக்கிறேன். “மாடிக்குப் போகலாம் வாங்க!” என்று அவள் அழைப்பதோடு கதை முடிகிறது.

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் கதை சிறந்த பேய்க்கதைகளில் ஒன்றாகும் தகுதி கொண்டது. நிமிஷக் கதைகளில் பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணைப் பேட்டி எடுக்கிறார் ஒரு எழுத்தாளர். அதை இப்படி விவரிக்கிறார், “கொடுமையிலும் கொடுமை, கொடுமையைக் கொடுமை என்று புரிந்து கொள்ளாதது தான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர் கண்ணீரைப் பிதுக்கி எடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.”

ஜி.நாகராஜன் மணக்கும், இனிமையான அனுபவங்கள் தரும் கதைகளோடு உங்களை வரவேற்பதில்லை. ஆனால், இந்த உலகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்கிற உண்மையை எதிர்கொள்ள அவசியம் வாசியுங்கள்.

டெர்லின் ஷர்ட்டும், எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர் உள்ளிட்ட சிறுகதைகள்

காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்:152
விலை:135
தொகுப்பாசிரியர் : சுரேஷ்குமார இந்திரஜித்

7.83 ஹெர்ட்ஸ் – தவறவிடக் கூடாத நாவல்!


7.83 ஹெர்ட்ஸ் நாவலை வாசித்து முடித்தேன். ஆசிரியரின் முந்தைய நாவலை இன்னமும் வாசிக்காததால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயல்பாக வாசிக்கப் புகுந்தேன். கடுமையான உழைப்பில் விறுவிறுப்பான ஒரு நாவலை ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர்.

ஓநாய்கள் மீதான நம்முடைய பார்வை இந்த நாவலைப் படித்து முடிக்கையில் கண்டிப்பாக மாறும். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் எப்படி வன்முறையை வெவ்வேறு நாடுகளில அறிவியல் தொழில்நுட்பங்களின் மூலம் வன்முறையைத் தூண்டி விடுகின்றன என்பதை நாவலை வாசிக்கிற பொழுது அறிந்து அதிர்ந்து போவீர்கள்.

அறிவியல் புனைகதை என்றாலும் அதிலும் மனதைவிட்டு அகலாத பாத்திரமாக வேதநாயகத்தை ஆசிரியர் மண்ணின் மணத்தோடு படைத்து கைகட்டி அவர் சொல்லும் கதைகளைக் கேட்க வைக்கிறார். கதையின் எந்தச் சரடையும் இங்கே சொல்லி கதை வாசிப்பதன் சுவாரசியத்தை மட்டுப்படுத்த விரும்பவில்லை.

இந்த நூலில் எக்கச்சக்க அறிவியல் சங்கதிகள் பேசப்பட்டு இருந்தாலும் அவை துளிகூட அலுப்புத் தராமல் கடத்தப்பட்டதில் இருக்கிறது ஆசிரியரின் வெற்றி. அதே சமயம் உணர்வுப்பூர்வமான தருணங்கள் வருகிற பொழுது நாவலின் வேகத்தை மட்டுப்படுத்தும் என்று எண்ணியோ என்னவோ வேகவேகமாகக் கடந்துவிடுகிறார்.

அவசியம் வாசியுங்கள்!

7.83 ஹெர்ட்ஸ்
க.சுதாகர்
வம்சி புக்ஸ்
228 பக்கங்கள்
விலை: 200

இரண்டாவது ஆப்பிள்-ஸ்டீவ் ஜாப்ஸ் சாதித்த கதை


Slv Moorthy அவர்கள் எழுதியிருந்த இரண்டாவது ஆப்பிள் என்கிற ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய புத்தகத்தை படித்து முடித்தேன். டெக் உலகின் மன்னர் என்று நாமெல்லாம் அறியும் அவரின் குறைகளோடு இணைத்தே அவரின் வாழ்க்கையை பேசுகிற வகையில் இந்த நூல் ஈர்க்கிறது. அவரை பெற்றவர்கள் திருமணத்துக்கு முந்தைய உறவில் பிறந்தவர் என்பதாலும்,தந்தை வேறு நாட்டவர் என்பதாலும் பிள்ளையை ஆதரவற்றோர் விடுதியில் விட்டு விட்டு நகர்ந்தார்கள். இது வாழ்க்கையின் முதல் நிராகரிப்பு ; அடுத்து முதன்முதலில் தத்தெடுக்க வந்தவர் பெண் குழந்தை தான் வேண்டும் என்று அடம் பிடித்தது அடுத்த நிராகரிப்பு. ஆனால் அவரை ஜாப்ஸ் தம்பதி தத்தெடுத்த பின்பு அவரிடம் “உன்னை உன் பெற்றோர் விட்டுவிட்டு போய் விட்டார்கள் !” என்று மென்மையாக சொன்னாலும் உண்மை அவரை சுடவே செய்தது. 

அதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்ட குறும்புக்கார சிறுவனான ஸ்டீவ்வின் வகுப்பில் அவருக்கு அமைந்த ஆசிரியர் இமோஜின் ஏதேனும் சாதித்தால் பரிசுகள் கொடுத்து ஊக்குவித்து அவரின் வால்தனத்தை சீர்படுத்தினார். “அவர் இல்லாமல் போயிருந்தால் நான் ரவுடியாக ஆகியிருப்பேன் !” என்று ஸ்டீவ் பிற்காலத்தில் குறிக்கிற அளவுக்கு அந்த ஆசிரியரின் தாக்கம் அவரின் வாழ்க்கையில் இருந்தது. போன் நிறுவனங்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு இருவருக்குள் பேசிக்கொள்ள உதவும் ப்ளூ பாக்ஸ் கருவியை இளம் வயதில் தயாரித்த பொழுது அதை நாற்பது டாலரில் தயாரித்து நூற்றி ஐம்பது டாலரில் விற்கிற மார்க்கெடிங் யுத்தி அவரிடம் இருந்தது. “நல்ல தரமான பொருளை தருகிறோம் ; எதற்கு விலையில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். எனக்கு போட்டி நானே தான் !”என்பது அவரின் தாரக மந்திரமாக இருந்தது. 

வெறும் மூன்றே மூன்று கணினிகளை தயாரித்து விட்டு சான் பிரான்சிஸ்கோ பொருட்காட்சியில் நாளைக்கு கண்காட்சி என்றால் முதல்நாள் இரவு வரை எதுவுமே செய்யாமல் திரை போட்டு மூடி ஆர்வத்தை கிளப்பிவிட்டு இரவோடு இரவாக இழைத்து விட்டு பல்வேறு காலி பெட்டிகளை கம்பீரமாக அடுக்கி வைத்து நிறைய கணினிகள் தயார் என்று நம்ப வைத்து ஒரு ஆரம்ப கால கம்பெனிக்கு ஐநூறு ஆர்டர்களை பிடித்ததும் அவரின் சாமர்த்தியமே !

பல நாள் குளிக்காமல்,ஒழுங்காக தலை சீவாமல்,சவரம் செய்யாமல்,இரண்டே இரண்டு வகையான மனிதர்கள் தான் உண்டு அதி புத்திசாலிகள்,அடிமுட்டாள்கள் என்று வகை பிரித்தே வேலை பார்த்த அவருடன் நிறைய பேர் வேலை பார்க்க முடியாமல் ஓடினார்கள்.பீஸ் கொடுக்க காசில்லாமல் இருந்த சூழலிலும் வகுப்புக்குள் அனுமதித்த ஆசிரியரால் கற்றுக்கொண்ட காளிக்ராபி வகுப்புகள் அவற்றின் கேட்ஜெட்களின் எழுத்துரு வடிவமைப்பில் பெருமளவில் உதவின. 

ஜெராக்ஸ் நிறுவனத்தின் Graphical user interfaceமற்றும் மவுஸ் ஆகிய இரண்டு கண்டுபிடிப்புகளை இவரும்,பில் கேட்ஸும் சுட்டுக்கொண்டு போய் இன்னமும் மேம்படுத்தினார்கள். இவர் ஜெராக்ஸ் நிறுவனம் பயன்படுத்தி இருந்த மூன்று பட்டன்களை நீக்கியதோடு நில்லாமல் கூடவே முன்னூறு டாலர் செலவான மவுசை பதினைந்து டாலரில் கச்சிதமாக வடிவமைத்து கலக்கினார். 

மெக்கிண்டோஷ் கணினிகளை உருவாக்கிய பொழுது அதில் உண்டான வெப்பம் மற்றும் குறைவான சேமிப்பு வசதி அதை தோல்விக்கு தள்ளியது. இவரை லிசா திட்டத்தில் இருந்து டம்மியான தலைவர் பதவி கொடுத்து கழட்டியவர்கள் பின்னர் வேறொரு கம்பெனிக்கு நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு தொழில்நுட்ப உதவிகள் தந்து செயல்பட்டிருந்தாலும் பேக்கப் செய்தார்கள். அதை பெப்சி நிறுவனத்தில் இருந்து சர்க்கரை தண்ணீரை விற்றுக்கொண்டே இருக்காதீர்கள் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அழைத்து வந்த ஸ்கல்லியே செய்து முடித்தார். நெக்ஸ்ட்,பிக்ஸார் என்று தன்னுடைய பயணத்தை அமைத்துக்கொண்டாலும் அவற்றின் விற்பனை தோல்வியே கண்டது. ஆப்பிள் நிறுவனம் இறங்குமுகத்தில் இருந்ததும் மீண்டும் அழைக்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு பங்கை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தவர் நாற்பத்தி இரண்டு கணினி வகைகளில் முப்பத்தி எட்டை மூட்டை கட்டினார். சிப் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு நிறுவனங்களிடம் பேரம் பேசி விலையை குறைத்தார். பல பேரை தயவு பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பினார். வைரியான பில்கேட்ஸ் அவர்களை தயாரிப்பில் உதவ அழைத்தார். 

அடுத்து பாடல்களை தன்னுடைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள மியூசிக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு iTunesமூலம் கொள்ளை லாபம் சம்பாதித்தார். iStoreகளை துவங்கி அங்கே கணினியை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒருவர் பயன்படுத்தி பார்க்கலாம் என்பதோடு ஜீனியஸ் என்று ஒரு ஆளை நியமித்து அவர்களின் சந்தேகம் மட்டுமே தீர்க்கிற பணியை கொடுத்து அதையும் பெருத்த ஹிட் ஆக்கினார். அவர் உருவாக்கிய செல்களில் ஸ்க்ரூ கூட தெரியக்கூடாது,கண்ணாடியில் கேஸிங் இருக்க வேண்டும் என்று இழைத்து கீபோர்ட் இல்லாமல் செல்போன்களை கொண்டு வந்து துவம்சம் செய்தார். 

தன்னுடைய மகளுக்கு தான் தகப்பனில்லை என்று முதலில் அடம் பிடித்தாலும் பின்னர் ஏற்றுக்கொண்டு அவருக்கு உதவிகள் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் இறக்கிற தருவாயில் கூட ,”ஓ வாவ் ! ஓ வாவ் !” என்று அழகியலோடு விடை பெற்றார் என்பதோடு நூல் முடிகிற பொழுது நமக்கும் ஒரு வாவ் போடத்தோன்றுகிறது. 

விலை : 75
vikatan பிரசுரம் 

ஆசிரியர் : எஸ்.எல்.வி மூர்த்தி 
பக்கங்கள் : 152
http://books.vikatan.com/index.php?bid=1948

கலிலியோ மண்டியிடவில்லை-நூல் அறிமுகம்


கலிலியோ மண்டியிடவில்லை :
அறிவியல் சார்ந்தவர்கள் இலக்கியத்திலோ,இசையிலோ,சினிமாவிலோ ஆர்வம் கொண்டிருக்க கூடாது என்பது நம்முடைய பொதுவான எண்ணமாக இருக்கிறது. அதை இயல்பாக மறுவாசிப்பு செய்யும் கட்டுரைத்தொகுப்பு தான் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கலிலியோ மண்டியிடவில்லை கட்டுரைத்தொகுப்பு. அறியாத அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கையும் இணைத்தே இந்நூல் பதிவு செய்கிறது. 

எந்த மத பீடத்துக்கு எதிராக பூமி சூரியனை சுற்றி வருகிறது என்று கலிலியோ எழுதினாரோ அதே மத பீடத்தில் தான் வறுமை காரணமாக தன்னுடைய மகளை கன்னியாஸ்திரி ஆக அனுப்பினார் என்பது வலிமிகுந்த வரலாறு. அங்கே இருந்து தன்னைச்சுற்றி நடக்கும் கொடுமைகளை மகள் எழுதுவதை ஒரு கட்டுரை பதிகிறது. நானோதொழில்நுட்பத்துக்கான விதையை தன்னுடைய பேச்சின் மூலம் போட்ட நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் பெயின்மானின் காதல் வாழ்க்கை என்னவோ செய்கிறது. ஆர்லைன் எனும் தன்னுடைய காதலிக்கு இருந்த காசநோயால் அவரை முத்தமிடவோ,பிள்ளை பெற்றுக்கொள்ளவோ முடியாது என்று மருத்துவர்கள் சொன்ன பின்னும் தீராக்காதலோடு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். மனைவி இறந்த பின்னும் சோகம் தாளாமல் கடிதங்களை எழுதுகிறார் ,”இன்றைக்கு உனக்கு பொருந்தும் ஒரு அழகான கவுனை கடையில் கண்டேன் ! அதை நீ அணிந்து பார்க்க முடியவில்லை என்னால் !” என்று அவர் இறந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கடிதம் எழுதி குமைகிறார் அவர். 

கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் தன்னுடைய பரிணாமக்கொள்கையை வெளியிடாமலே இருந்த டார்வின் தன்னுடைய மகள் இறந்து போனதும் கடவுளுடனான போராட்டத்தை முடித்துக்கொண்டு அந்த தாள்களை புத்தகம் ஆக்குகிறார். காஸ் பகுத்தறிவே பெரிய கடவுள் என்கிறார். தாஸ்த்தோவோயேஸ்கியின் தீவிர ரசிகராக ஐன்ஸ்டீன் இருந்திருக்கிறார் ; அவரின் கவித்துவமான,பிரபஞ்சத்தை ,அறிவியலை எல்லாம் எழுத்தில் கொண்டு வந்த நடைக்கு எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் ரசிகர்கள் !

இரண்டு லட்சம் விதை ரகங்களை உலகம் முழுக்க இருந்து சேகரித்த நிகோலா வாவிலோவ் கம்யூனிஸ்ட் எதிரி என்று தவறாக ஸ்டாலின் படைகளால் சந்தேகிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சோபி ஜெர்மைன் என்கிற ஈபில் டவர் எழக்காரணமான பெண் அவர் காலத்தில் அவர் பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்டார். வேலை எதுவும் இல்லாத பெண் என்றே அவரை அன்றைய அரசாங்க ஏடுகள் குறிக்கின்றன. சந்திரசேகர் எனும் நோபல் தமிழர் இசை மற்றும் இலக்கிய ரசிகர் அவர் ஷேக்ஸ்பியர்,நியூட்டன் மற்றும் பீத்தோவன் என்றொரு கட்டுரை கூட எழுதியிருக்கிறார்.

உயிர்மை வெளியீடு

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூல நாவல் அறிமுகம்


ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தின் மூலமான் Q & A நூலை வாசித்து முடித்தேன். ஏழ்மை,புறக்கணிப்பு,பாலியல் வக்கிரங்கள் என்று பலவற்றை பார்த்து வளரும் சிறுவன் ஒருவன் ஒரு மிகப்பெரிய குவிஸ் போட்டியில் எப்படி வெல்கிறான் என்பதை விறுவிறு நடையில் சொல்கிற நாவல் இது. பன்னிரெண்டு கேள்விகளில் நூறு கோடியை வென்று அவன் சாதித்ததும் அவனின் வீட்டுக்குள் அவன் ஏமாற்றி இருப்பான் என்று எண்ணி போலீஸ் நுழைகிறது. அப்பொழுது அவனைக்காப்பாற்ற வரும் பெண் யார் என்பது கடைசிகட்ட திருப்பம் !

தன்னுடைய நண்பன் நம்பும் நடிகரின் இன்னொரு முகத்தை திரையரங்கில் பார்ப்பதால் ஒரு விடை,எதிர் வீட்டின் முகம் தெரியாத சகோதரியை அவரின் வானியல் துறை வல்லுனரான அப்பா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதை கண்டதால் அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடியதோடு இழையும் இன்னொரு விடை,கண்ணை பறித்து பிச்சை எடுக்க விட முயலும் இடத்தால் இன்னொரு விடை,எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய நபரான டைலர் வாழ்க்கையால் கிடைக்கும் இன்னொரு விடை என்று அவனின் வாழ்க்கை சம்பவங்களை கோர்த்து அவன் விடை சொல்வதற்கான காரணங்களை நம்பும் வகையில் நாவலை நகர்த்துகிறார் ஆசிரியர். 

தொடர்வண்டியில் கொள்ளையனை சுட்டுக்கொன்று விடும் நாயகன் அங்கே தன்னை காதல் பொங்க பார்க்கும் பெண்ணை தவிர்க்கும் கணம் ஆகட்டும்,நீலிமா எனும் நடிகையின் வீட்டுக்குள் இரவில் நுழையும் ரசிகனுடன் நிகழும் சம்பவமாகட்டும்,லஜ்வந்தி எனும் வேலைக்காரி திருடப்போகும் பொழுது கூட காட்டும் விசுவாசம் ஆகட்டும்,சொந்த மகனை கள்ள உறவில் பிறந்ததால் தெருவில் விடும் ராணி ஆகட்டும்,துறவு வாழ்க்கையில் இருப்பதாக காட்டிக்கொண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபடும் பாதிரியார்,திருமண பந்தத்தில் இருக்கும் இன்னொரு பாதிரியார் என்று கலவையான மனிதர்கள் மற்றும் சம்பவங்கள். 

பல லட்சம் பணம் கிடைத்த பின்னும் அதை ஒரு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை காப்பாற்ற கொடுக்கும் நாயகன் பாலியல் தொழிலாளியாக இருக்கும் நீதாவின் மீது காதல் கொள்வதும்,அவளுக்கு நடந்த அநியாயம் கண்டு கொதிப்பதும் அவர்கள் காதல் கைகூடியதா என்றும் அறிய நாவலை வாசியுங்கள். போட்டியில் அசோக் குமார் எனும் தொகுப்பாளருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதையும் நாவலைப்படித்து அறிந்து கொள்ளுங்கள். 

இந்நூல் தமிழில் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கிறது. 
ஆங்கில மூலம் : விகாஸ் ஸ்வரூப் 
தமிழில் :ஐஷ்வர்யன்
விலை : நூற்றி இருபது 
பக்கங்கள் : 368