போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?


போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது.
https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512

இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள்.
/ ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்

இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed-bose-your-war-cr…

அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார்.

முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை!

 

சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை.

ஆதாரங்களுக்கு காண்க:

https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/

கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp…

இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை.

இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se…

மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது.
போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 4


போஸ் ஹால்வெல் எனும் ஆங்கிலேய தளபதியின் சிலையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத் தினார். அதற்கு அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததும் உண்ணா நோன்பு இருந்தார். அரசு கொஞ்ச காலத்துக்குத் தண்டனையைத் தள்ளி வைப்பதாகச் சொல்லி உடல்நலம் மோசமடைந்து இருந்த நேதாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து லாகூருக்கு தப்பி, காபூல் சென்ற போஸ் அங்கிருந்து ரஷ்யா சென்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவி எமிலிக்கு பெர்லினில் இருந்து கடிதம் எழுதினார்.

நேருவும் காந்தியின் அழைப்பை ஏற்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். கிழக்கு ஆசியாவை கதிகலக்கி விட்டு ஜப்பான் எட்டும் தூரத்தில் நின்றுகொண்டு இருந்தபொழுது ராஜாஜி முதலிய தலைவர்கள் ஜப்பானிய தாக்குதலை அகிம்சை முறையில் எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று பர் தோலி தீர்மானம் இயற்றப்பட்டது. படேல், ராஜேந்திர பிரசாத் மட்டுமே அதற்கு எதிராக இருந்தார்கள். கட்சியின் எல்லாப் பதவியிலிருந்தும் காந்தி தன்னை விடுவித்துக்கொண்டார். நேரு இருபத்தி இரண்டு வருடங்களாக அகிம்சையில் உறுதி கொண்டிருக்கும் தான் இன்றைக்கு வேறு வழியில்லை என்றால், வன்முறையைக் கைக்கொள்வதைத் தவிர வழியில்லை என்று எழுதினார். காந்திக்கும், காங்கிரசுக்கும் வேறுபாடுகள் இல்லை என்று அழுத்திச் சொன்னார்.

காந்தி இந்த மாதிரியான சூழலில்தான் புகழ்பெற்ற ’நேரு தான் என்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசு. தண்ணீரை குச்சியைக் கொண்டு அடித்து விலக்க முடியாது. எங்களைப் பிரிப்பதும் அதைப்போலதான்… நான் போன பிறகு அவர் என்னுடைய மொழியைப் பேசுவார்.’ என்ற வாசகத்தை உறுதிபடச்சொன்னார்.

போஸ் ஜெர்மனியில் ஹிட்லரை சந்தித்தார். அயல்நாட்டில் இந்தியாவுக்கான அரசை உண்டாக்க வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையை ஹிட்லர் கவனிப்பதாகச் சொல்லியிருந்தார். ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரிப்பன்ட்ராப் உடன் நடந்த பேச்சுக்களில் அவர் காந்தியைக் குறிப்பிட்டபொழுது, ‘அவர் சமரசம் செய்துகொள்கிற வெள்ளையரின் முகத்தில் அறைந்தது போலக் கதவை மூடாத நபர்.’ என்று நேதாஜி சொன்னாலும், அயலுறவு மந்திரியோ காந்தியை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றார்.

இதே தருணத்தில் பெர்லினில் யூத இன ஒழிப்புத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. போஸ் எமிலியுடன் மண வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். இனக்கலப்புத் திருமணங்களுக்கு எதிராக இருந்த நாஜிக்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். போஸும் மறந்தும் நாஜிக்களின் அட்டூழியங்கள் பற்றியோ, ஜப்பானின் கடுமையான வன்முறைகள் பற்றி வாய்திறக்கவில்லை. இந்திய விடுதலை மட்டுமே அவரின் இலக்காக இருந்தது.

ஜெர்மனி சோவியத் ரஷ்யாவைத் தாக்கியது, ரூஸ்வெல்ட்- சர்ச்சில் இருவரும் இணைந்து, ‘சுயாட்சியும், இறையாண்மையும் அடிமைப்பட்ட மக்களுக்குத் திரும்பத் தரப்படும்.’ என்றவையும் ஜெர்மனிக்கு எதிரான மனப்போக்கை இந்தியாவில் உண்டாக்கும் என்பதை உணர்ந்தார். ஹிட்லரை ஒரு வழியாகச் சந்தித்த பொழுது நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானை சென்றடைந்து தன்னுடைய திட்டங்களை அவர் செயல்படுத்துவது சரியாக இருக்கும் என்று ஹிட்லர் பரிந்துரை செய்தார். போஸ் அதையே முன்னெடுத்தார்.

இந்தக் காலத்தில் நேரு மிகக்கடுமையாக இப்படிப் பேசினார், ‘ஹிட்லரும், ஜப்பானும் நரகத்துக்குப் போக வேண்டும். என்னுடைய வாழ்க்கையின் இறுதிவரை அவர்களுக்கு எதிராகப் போரிடுவேன். திரு. சுபாஸ் சந்திர போஸ், அவரின் படைகள் ஜப்பானோடு இந்தியாவுக்குள் நுழைந்தால் அவரையும் எதிர்ப்பேன். நல்லெண் ணத்தோடு போஸ் தவறாகச் செயல்படுகிறார். உலகின் மிக ஆதிக்கம் நிறைந்த சக்திகளுடன் அவர் இணைந் திருக்கிறார்.’ என்று பேட்டி அளித்தார்.

போஸ் ஜெர்மனியை விட்டு கிளம்ப முடிவு செய்தபொழுது அவரின் இரண்டு மாத மகளுக்கு முத்தங்கள் கொடுத்து பிரியா விடைபெற்றார். நாட்டுக்கான போராட்டம் அவர் முன்னால் பெரிதாக நின்றது. அடுத்து அம்மாவின் இறப்பு செய்தி வந்து சேர்ந்தபொழுதும் அதைப் பற்றிப் பெரிதாகக் காட்டிக்கொள்ளாமல் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார்.

கிரிப்ஸ் மிஷன் என்கிற பெயரில் சமரசம் பேச வந்த ஆங்கிலேய அமைச்சர் கிரிப்ஸ் பேச்சுக்குக் காங்கிரஸ் மற்றும் பிற ஆட்களுடன் பேசினாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. காந்தி அதை ‘பின்தேதி இடப்பட்ட காசோலை’ என்று அதை வர்ணித்தார். நேரு கிரிப்ஸ் அவர்களைச் சந்தித்து, ‘இப்படி விடுதலை என்பதைப் பற்றிப் பேசக்கூடத் தயாராக இல்லாத நீங்கள் எதற்கு வந்தீர்கள். அடுத்த விமானத்தில் உங்கள் நாட்டுக்குத் திரும்புங்கள்’ என்று கடுமையாகச் சொல்லிவிட்டு வந்தார்.

வேறு எந்த வெளிச்சமும் இல்லாத நிலையில் காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை அறிவித் தார். ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஜப்பான் பிரதமர், ‘எல்லா வகையிலும் போஸ் அவர்களின் போராட்டத்துக்கு உதவுவதாக’ அறிவித்தார். போஸ் ‘நாங்கள் கிழக்கு ஆசியாவில் இருந்து படை திரட்டிக்கொண்டு வருகிறோம். நீங்கள் நாட்டுக்குள் இருந்து கிளர்ச்சி செய்யுங் கள். இந்திய ராணுவமும் புரட்சியில் ஈடுபடட்டும்.’ என்று வானொலியில் அறைகூவல் விடுத்தார்.

போஸ் தன்னுடைய ராணுவத்தில் பெண்களுக்கு என்றொரு தனிப் பிரிவை உருவாக்கினார். சிங்கப்பூரில் வானொலியில் இருந்து ‘தேசப் பிதா காந்தியிடம் இந்திய விடுதலைக்கான புனிதப் போரில் உங்களின் நல்லெண்ணம், ஆதரவை நோக்குகிறோம்’ என்று பேசினார். போரில் வென்றால் ஆட்சியமைக்க காங்கிரஸ், காந்தி ஆகியோரின் உதவி தேவை என்று அவருக்குத் தெரியும். படைப்பிரிவுகளுக்குக் காந்தி, நேரு, ஆசாத் ஆகியோரின் பெயரை இட்டிருந்தார்.

பர்மாவை மட்டும் கைக்குள் வைத்துக்கொண்டால் போதும் என்று ஜப்பானிய ராணுவம் எண்ணிக்கொண்டு இருந்தபொழுது, இந்தியாவை உள்நாட்டுக் கிளர்ச்சியின் உதவியோடு கைப்பற்றுவோம் என்று போஸ் நம் பினார். இம்பால், கோஹிமா வீழ்ந்த பின்பு மழையாலும், விமானப் படை தாக்குதலாலும், ஜப்பானிய தளபதி தவறாகச் செயல்பட்டதாலும் தோல்வியைப் போஸின் படைகள் சந்தித்துப் பின்வாங்க நேரிட்டது. அப் பொழுதும் ஜான்சி ராணி படைப்பிரிவின் பெண்கள் பத்திரமாகத் தப்பிப்பதையும், மற்ற படை வீரர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு விமானத்தில் தைபேவில் ஏறிய போஸ் விமானம் வெடித்து இறந்ததாகச் சொல்லப்பட்டது.

செய்தி கேட்ட நேரு கண்ணீர்விட்டு அழுதார். ‘வீரம் மிகுந்த வீரர்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய எல்லாப் போராட்டங்களில் இருந்தும் சுபாஸ் தப்பிக்கொண்டார்.’ என்று கதறினார். கைது செய்யப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்களின் வழக்கு விசாரணை செங்கோட்டையில் நடந்தபொழுது இருபத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகு நேதாஜியின் கனவுப்படையின் வீரர்களைக் காக்க வழக்கறிஞர் உடை அணிந்தார் நேரு.

நேதாஜியின் மரணத்துக்குப் பிந்தைய பிறந்தநாளில் பேசிய நேரு, ‘நானும் அவரும் இருபத்தி ஐந்து ஆண்டுகள் இணைந்து விடுதலைப் போரில் பங்காற்றினோம். பேரன்பால் எங்கள் உறவு நிறைந்திருந்தது. என்னுடைய தம்பி அவர். எங்களுக்குள் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தது என்றாலும், விடுதலைக் காகப் போராடிய தீரமிகுந்த போராளி அவர்.’ என்று குறிப்பிட்டார். ஜப்பானிடம் சென்று சேர்ந்தாலும் தன் னுடைய தனித்துவம், விடுதலைச் சிந்தனையை இழக்காதவர் போஸ் என்றும் புகழாரம் சூட்டினார். காந்தி போஸின் ஐம்பதாவது பிறந்தநாளின்பொழுது, ‘சுபாஸ் என்னுடைய தொலைந்து போன மகன். அவர் வேறொரு கப்பலில் பயணம் செய்ய முடிவு செய்துவிட்டார்.’ என்றார். நேரு தன்னுடைய அத்தனை ஆண்டுகால நட்பில் ஒரு இடத்தில்கூடப் பொதுவெளியில் போஸை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது கிடையாது.

நேரு, போஸ் இருவரும் சோசியலிசப் பார்வை கொண்டவர்கள், கட்சியில் ஒரே சமயத்தில் உயரங்களைத் தொட்டவர்கள். பல்வேறு சமயங்களில் இணைந்து பணியாற்றியவர்கள். ஆனால், அவர்களைப் பிரிக்கிற புள்ளியாகக் காந்தியுடனான உறவு இருந்தது. போஸ், நேரு இருவரும் இணைந்து இந்திய அரசியலை தீர்மானிக்கலாம் என போஸ் எண்ணினார். நேரு காந்தியோடு கடுமையாக முரண்பட்டு அவரை விமர்சித் தாலும் எப்பொழுதும் அவரை விட்டு நீங்க மறுத்தார். மோதிலாலின் மரணத்துக்குப் பிறகு காந்தி அவருக் குத் தந்தையானார். காந்தி எரவாடா சிறையில் உண்ணாநோன்பு இருந்தபொழுதும், அவர் மரணமடைந்த பொழுதும் நேரு கேவிக் கேவி குழந்தையைப்போல அழுதார்.

போஸ் உணர்ச்சிகளை ஓரம் வைத்துவிட்டு தன்னுடைய அரசியல் மதிப்பீட்டில் காந்தியைக் கூர்மையாக அணுகினார். அவரை ‘பாபுஜி’ என்றுதான் போஸால் அழைக்க முடிந்தது. காந்தி மீது மரியாதை இருந்தாலும் அவர் மீது கடுமையான பார்வையும், தேவைப்படுகிற பொழுது முறித்துக்கொண்டு புரட்சி செய்கிற தைரியமும் போஸிடம் இருந்தது. நேரு அப்படிப்பட்டவராக இல்லை. அவர் காந்தியுடன் வெகுவாகப் பிணைக்கப்பட்டிருந்தார். அது அரசியலின் போக்கை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது.

அரசாங்கத்தின் உளவுத்துறை கோப்புகளில் சில தற்போது வெளியாகி அதில் நேதாஜியின் அண்ணனான சரத் போஸ் அவர்களின் மகன்களான சிசிர் போஸ், அமியா போஸ் உளவு பார்க்கப்பட்டு இருப்பது வெளிப்பட்டு இருக்கிறது. அவர்களுக்குப் போஸின் மனைவி எமிலி தன்னுடைய குடும்பச்சூழல், பெண் குழந்தையை வளர்க்கப் பட்டபாடு ஆகியவை பற்றி எழுதிய கடிதங்களை உளவுத்துறை முன்னரே பிரித்துப் படித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இருபது வருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த உளவில் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்பதும் அடக்கம். இவை நேருவின் அனுமதி இல்லாமல் நடந்திருக்கச் சாத்தியமில்லை? ஏன் இப்படி நேரு நடந்து கொண்டார்?

இதற்கு இருவகையான விளக்கங்கள் தரலாம். அதற்கு முன்னர் போஸின் மரணத்தில் உள்ள முடிச்சுக் களைச் சுருக்கமாகக் காண வேண்டியிருக்கிறது. போஸ் இறந்துபோனதாக ஜப்பானிய அரசும், இந்திய அரசும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தாலும், போஸின் மரணத்தின்பொழுது காந்தி ‘என் மனதின் குரல் போஸ் இன்னமும் உயிரோடு இருப்பதாகவே சொல்கிறது!’ என்றார். சின்ஹா எனும் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியாவின் அயலுறவுத் துறை அதிகாரி கிளப்பிய சர்ச்சைகள், புயல்கள் வெகு பிரசித்தம்.

இந்திய அரசு அமைத்த ஷாநவாஸ் குழு போஸ் விமான விபத்தில் இறந்ததாகச் சொல்ல, அதை ஏற்க முடியாது என்றும், போஸ் எங்கோ தப்பிப்போயிருக்கிறார் அதை மறைக்க அரசு முனைகிறது என்கிற ரீதியில் போஸின் சகோதரரும் அக்குழுவின் உறுப்பினருமான சுரேஷ் போஸ் அந்த அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அடுத்து இந்திரா காந்தி காலத்தில் அமைக்கப்பட்ட ஜி.டி.கோசலா குழுவின் முன்னால் சின்ஹா தோன்றி வாக்குமூலம் அளித்தார். போஸ் சோவியத் ரஷ்யாவுக்குத் தப்பிப்போன தாகவும் அவர் ஸ்டாலி னின் சைபீரிய வதை முகாம்களில் கைதியாக இருப்பதாக ரஷ்ய உளவாளிகள் தனக்குத் தகவல் தந்ததாக அவர் வாக்குமூலம் தந்தார்.

குஸ்லோவ் எனும் இந்தியர்களுக்கு 1934. வரை பயிற்சியளித்த ரஷ்ய உளவாளி போஸ் யாகுட்ஸ்க் சிறையில் அறை எண். 450ல் அடைப்பட்டிருப்பதைச் சொன்னதாக அடித்துச் சொன்னார். மேலும் 1949-ல் துவங்கி ஜெர்மனி, ரஷ்யா என்று பல்வேறு நாடுகளுக்கு நேருவிடம் இருந்து பணம் பெற்றுப் பயணம் செய்து பல்வேறு தகவல்களைத் திரட்டிய அவர் ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் கார்ல் லியோனார்ட் எனும் ரஷ்யாவில் சுற்றிய உளவாளியும் போஸ் ரஷ்யாவில் இருப்பதாகச் சொன்னதையும் கமிஷன் முன்னர் சொன்னார்.

நேருவிடம் இதே விஷயத்தை எடுத்துச் சொல்லியபொழுது அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும், ரஷ்ய தூதுவராக இருந்த ராதாகிருஷ்ணன் இந்தச் சிக்கலை ‘மீண்டும் கிளப்பினால் உன் பதவிக்கு ஆபத்து!’ என்று அச்சுறுத்தியதாகச் சொன்ன சின்ஹா அடுத்துச் சொன்னது அதிர்ச்சி ரகம்.

1963-ல் போஸ் இறந்ததாகச் சொல்லப்படும் விபத்து நடந்த தைஹோகு ரன்வேயை பல்வேறு கோணங் களில், வகைகளில் படம்பிடித்தார். ஒரு அதிர்ச்சி தரும் விஷயத்தைக் கவனித்தார். போஸ் இறந்த பிறகு எடுக்கப்பட்ட படங்களில் எதிலும் பிரேமில் கீளுங் நதி தெரியவே இல்லை. ஆனால், விமானம் விழுந்த இடத்தைக் கீளுங் நதியில்லாமல் படம் பிடிக்கவே முடியாது என்று அவருக்கு உறுதியானது. கமிஷன் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் போஸ் விமான விபத்தில் இறந்தார் என்று அறிக்கை தந்தது.

அடுத்து அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் சொன்னது மேலும் தலைச்சுற்றலை கிளப்பியது. இச்சிரோ ஒகுரா எனும் ஜப்பானியா வீரரின் சாம்பல் தான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது, அது போஸின் சாம்பல் அல்ல. போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று கமிஷன் சொல்லியது. அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்க மறுத்து ஆறு ஆண்ட கால உழைப்பில் உருவான அறிக்கையை நிராகரித்து விட்டது.

இப்பொழுது நேரு விஷயத்துக்கு வருவோம். காவ், முல்லிக் என்று உளவுத்துறையின் பெருந்தலைகள் வழிகாட்டுதலில் சரத் போஸ் மகன்களான சிசிர் போஸ், அமியா போஸ் கண்காணிக்கப்பட்டு உள்ளார்கள். ஆனால், நேரு அரசால் சரத் சந்திர போஸ் கண்காணிக்கப்பட்டதாகக் காட்டும் ஆதாரங்கள் இல்லை. அவர் விடுதலைக்குப் பின்னர் இரு ஆண்டுகள் வாழவும் செய்தார். தூதுவர்களாக இவர்களுக்குப் பதவி தரவும் நேரு முன்வந்ததைச் சிசிர் போஸின் மகனே ஒப்புக்கொள்கிறார்.

நேரு நேரடியாக ஒரே ஒரு சமயத்தில் மட்டும் அமியா போஸ் பற்றி அயலுறவுத் தூதுவர் சுபிமல் தத்துக்குக் கடிதம் எழுதிக் கேட்கிறார். நவம்பர் 26, 1957, எழுதப்பட்ட அக்கடிதத்தில், ‘அமியா போஸ் ஜப்பான் செல்வ தாக என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். அவர் நம் தூதரகத்துக்குச் சென்றாரா? அந்த ரேகொஜி (போஸ் அஸ்தி இருப்பதாகச் சொல்லப்படும் ஆலயம்) சென்றாரா என்று அங்கே இருக்கும் உங்கள் தூதுவரிடம் விசாரித்துச் சொல்லுங்கள்.” என்று கேட்டுள்ளார். ‘இல்லை!’ என்பதே பதிலாக வந்துள்ளது. பல்வேறு இந்திய தேசிய ராணுவ வீரர்களை அவர் சந்தித்தது நேருவுக்குச் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கலாம் என்கிறார் அமியா போஸின் மகன் சுகாதா போஸ். போஸ் ஆய்வு பீரோவை நிறுவவே அவர்களைச் சந்தித்தார் என்று சொல்கிறார்கள்.

நேரு ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், ஜி.பி.பந்த், படேல் என்று வலதுசாரிகள் பலரை சமாளிக்க வேண்டியிருந் தது. போஸ் திரும்பி வந்திருந்தால் இருவரும் இணைந்து அவர்களைச் சந்தித்திருக்கக் கூடும் என்பது ஒரு வாய்ப்பு. இன்னொன்று நாம் முன்னரே பார்த்ததுபோல மிகவும் உணர்ச்சிகரமான, தனித்த செயல்பாட்டுப் போக்கை கொண்ட நேதாஜி நேருவை விட்டு நீங்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். அப்பொழுது அவர் பிரிந்து கிடந்த சோசியலிஸ்ட்கள், இடதுசாரிகள் அனைவரையும் இணைத்து நேருவை எதிர்கொண்டிருக் கலாம். அதிலும் நேருவைவிட எட்டு வருடங்கள் இளையவர் என்பதால் நேருவுக்குச் சரியான போட்டியாக அவர் இருந்திருக்கக் கூடும். ஸ்டாலினுடன் இணைந்து நேரு அவரைக் கொன்று இருக்கலாம் என்று சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை நம்ப முடியவில்லை.

காரணம் இந்திய அரசாங்கத்தின் மீதும், நேரு மீதும் அபிமானம் ஸ்டாலினுக்கு இல்லை. இந்திய கம்யூ னிஸ்ட்களை ஆயுதம் ஏந்தி இந்திய அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டியது ஸ்டாலின்தான். கம்யூனிஸ் ட்களை இரும்புக்கரம் கொண்டு நேரு அரசு ஒடுக்கியது. நேருவுக்கு ஸ்டாலினுடன் இணக்கமான உறவை விடச் சந்தேகமே அதிகம் இருந்திருக்கும் என்று கருத வேண்டியிருக்கிறது.

போஸ் பற்றி ஏதேனும் குறிப்புகள், செய்திகள் இவர்களுக்குக் கிடைக்கிறதா என்று நேரு அறிய விரும்பி யிருக்கலாம். நேருவுக்குப் போஸ் திரும்பி வருவதில் அச்சங்கள் இருந்திருக்கிறது என்பது சுரத்துள்ள வாதம். ஆனால், நேரு அவரின் வாரிசுகளைப் பார்த்தும் பயந்தார் என்பதைவிட, கம்யூனிஸ்ட் சார்பு கொண்டு அவர்கள் இயங்குகிறார்களோ என்கிற அச்சமும், இந்திய தேசிய ராணுவ வீரர்களைச் சந்தித்து மீண்டும் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்த முனைகிறார்களோ என்கிற சந்தேகமும் அரசுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.

ரஷ்யாவில் போஸை ஏதேனும் செய்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதுபோல, போஸின் ஆவணங் கள் அனைத்தையும் அரசு வெளிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபொழுது ,’அது மற்ற நாடு களுடனான உறவை பாதிக்கும்.’ என்று மோடி அரசு பதிலளித்துள்ளதை கவனிக்க வேண்டும்.

முகர்ஜி கமிஷன் முன் தாக்கல் செய்யப்பட்ட கோப்புகள் 12014/9/79-DIII(S&P); 12014/5/80-ISDIII ,S.14/1/88-T, S.21/51/76-T காணவில்லை என்று வேறு சொல்கிறது அரசு. இவை போஸ் எங்கே இருந்தார், அவர் விமான விபத்தில் இறந்தாரா என்பவை குறித்த விஷயங்கள் அடங்கிய கோப்புகள். போஸ் வாழ்ந்த காலத்திலும் வாழ்க்கைக்குப் பிறகும் மர்மங்களின் மன்னனாகத் திகழ்கிறார். அரசு போஸ் தொடர்பாக வைத்திருக்கும் 250 ப்ளஸ் கோப்புகளை விடுவித்தால் தெளிவு பிறக்கலாம். வேறென்ன சொல்ல?

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? – 3


போஸ் ஐரோப்பாவில் இருந்தபோது சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான வித்தல்பாய் படேலை கவனித்துக் கொண்டார். அங்கேயே மரணமடைந்த அவர், தன் சொத்துக்களில் பெரும்பங் கினை நாட்டு நலப்பணித் திட்டங்களுக்குச் செலவிடுமாறு போஸுக்கு எழுதி வைத்தார். வல்லபாய் படேல், ‘அந்தப் பணம் காங்கிரசின் ஒரு சிறப்புக் கமிட்டின் கீழ் வைக்கப்பட்டுச் செலவு செய்யப்பட வேண்டும்!’ என சொன்னதற்கு நேதாஜியும் ஒப்புக்கொண்டார்.

அதே சமயம், கமிட்டியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கோர்ட் படியேறினார்கள். இரண்டு முறையும் படேலே வழக்கில் வென்றிருந்தார்.

தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர விரும் புவதாக காந்தியிடம் போஸ் சொன்னார். மதவெறி மிகுந்த சூழ லில் நிலைமையைச் சீராக்க மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை தலைவராக ஆக்க விரும்புவதாக சொல்லிய காந்தி, செயற்குழுவையும் அதை ஏற்க வைத்தார்.

ஆனால் அபுல் கலாம் ஆசாத்,  போஸும் தானும் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைவராக விரும்ப வில்லை என்று விலகிக்கொண்டார். நேருவை அழைத்து தலைவர் தேர்தலில் நிற்க காந்தி அழைப்பு விடுக்க, அவர் போஸுக்கு எதிராக தான் நிறுத்தப்படுகிறோம் என உணர்ந்தவராக, போட்டியிட மறுத்தார்.

காந்தி யாரையும் கலந்தாலோசிக்காமல் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளர் ஆக்கினார். தாகூர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடம் போஸுக்கு ஆதரவு கேட்டுக் கடிதம் எழுதினார். அடுத்த ஜனவரியில் நடக்கும் தேர்தலுக்கு நவம்பரிலேயே கடிதம் எழுதிய தாகூரிடம் அந்தக் கேள்வி குறித்து பெரிதாக விவரிக்காத நேரு, ‘தலைவர் பதவிக்கு நீங்கள் அதீதமாக முக்கியத்துவம் தருகிறீர்கள். எந்த முக்கியமான திட்டமும்  கட்சித்தலைவரால் மட்டும் முடிவு செய்யப்படுவது இல்லை’ எனப் பதில் அனுப்பினார். காந்தியோ ‘வங்கத்தின் ஊழல் நிறைந்த அரசியலை சரி செய்வதில் போஸ் கவனம் செலுத்தட்டும்’ என்று பதில் அனுப்பினார்.

போஸ் ஜனவரி 21-ல் கட்சியில் இளவரசர்களுடன் சமரசம் செய்து கொண்டு, கூட்டமைப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் உள்ள வலதுசாரிகள் தன்னுடைய தேர்வை எதிர்ப்பதாக அறிக்கை விட்டார். இதை மறுத்து செயற்குழுவின் ஏழு உறுப்பினர்கள் அறிக்கை விடுமாறு காந்தி அறிவுறுத்தியதன் பெயரில்,  படேல் மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். யாரும் கூட்டமைப்புக்கு ஆதரவாக இல்லை என்று போஸின் குற்றச்சாட்டை மறுத்தார்.

அந்தக் கூட்டறிக்கையில் நேருவை கையொப்பமிட சொன்ன பொழுது நேரு அதற்கு மறுத்துவிட்டார். காந்தி இந்தச் செயலால் தான் வருத்தமுற்று இருப்பதாக நேருவிடம் தெரிவித்தார்.

போஸ் நேருவிடம் ஆதரவு கோரினார். நேருவோ,’நான் தலைவர் பதவியை அர்த்தமற்ற ஒன்றாக நினைக்க வில்லை. போட்டியிட்டு தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவதிலும் எனக்கு ஒன்றும் வேறுபாடில்லை. எந்தெந்த கொள்கைகளில் முரண்பாடு உள்ளது என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். கூட்டமைப்பு விஷயம் பற்றி மட்டுமே நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். அதில் மற்ற தலைவர்களும் உங்களுடைய கருத்தை கொண்டிருப்ப தாக தெரிகிறது. சர்வதேச அளவில் நிலைமை மோசமாக இருக்கிற பொழுது இப்படிப் பிரச்சினையைக் கிளப்பியிருக்க வேண்டியதில்லை.’ என்று பல்வேறு பரிமாற்றங்களில் தெரியப்படுத்தினார்.

படேல், ராஜேந்திர பிரசாத் முதலியோரும் தாங்கள் கூட்ட மைப்புக்கு எப்பொழுதும் ஆதரவாக இல்லை என்று அறிக் கை விட்டார்கள். அடுத்தடுத்து போஸ் மூன்று அறிக்கை கள் வெளியிட்டார். இவை எதிலும் கூட்டமைப்புக்கு வலதுசாரிகள் எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் தரவில்லை. 29/1/1939 அன்று நடைபெற்ற தேர்தலில் போஸ் 1580-1377 என்கிற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

காந்தி, ‘இது என்னுடைய சொந்த தோல்வி. போஸ் நாட்டுக்கு ஒன்றும் எதிரியில்லை. அவர் நாட்டுக்காக எண்ணற்ற இன்னல்களை சந்தித்துள்ளார். போஸ் தன்னுடைய திட்டங்களே மிகவும் முற்போக்கானதாக, தீரமிகுந்ததாக இருப்பதாக எண்ணுகிறார்’ என்று கருத்து தெரிவித்தார்.

போஸ்,இந்த அறிக்கையால் தான் பெரிதும் காயமுற்று இருப்பதாவும், கடந்த காலங்களில் காந்தியுடன் முரண் பட்டாலும் மற்ற எல்லாரின் நம்பிக்கையைப் பெற்று இந்தியாவின் மிக உயர்ந்த மனிதரின் நம்பிக்கையைப் பெறாவிட்டால் அது துன்பகரமானது.’ என்று அறிக் கை விடுத்தார்.

தாகூரின் பல்கலையில் போஸும், நேருவும் சந்தித்தார்கள். ‘நாம் இடதுசாரிகள், வலதுசாரிகள், கூட்ட மைப்பு ஆகியவற்றைப் பற்றிப் போஸ் தலைவராக இருந்த காலத்தில் விவாதிக்கவில்லையே?’ எனக் கேட்டதோடு, ‘கடுமையான மொழி, பழைய காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசுவது இடதுசாரிகளின் பண்பல்ல. கூட்டமைப்பு தான் போஸின் சிக்கல் என்றால் அதைச் செயற்குழுவில் விவாதித்திருக்கலாம். விடுதலையை அடைய ஒரு கெடுவை கூடப் போஸ் நிர்ணயிக்கலாம். என்றாலும், தான் இதையெல்லாம் ரசிக்கவில்லை’ என்றும் போஸிடம் சொன்னதாக அவர்களின் கடிதங்களில் இருந்து புலப்படுகிறது.

காந்தியிடமும் நேரு அரசியலில் கவனம் செலுத்துவதை செய்யுங்கள், தனிப்பட்ட நபர்களைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள் என்றார். நேருவை செயற்குழுவை விட்டு விலகச்சொல்லி காந்தி கேட்ட பொழுது அதற்குத் திடமாக நேரு மறுத்தார். ‘எல்லோரின் நியாயங்களைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்…’ என்று பதில் சொன்னார்.

போஸ் உடல்நலமில்லாமல் இருந்ததால் செயற்குழு தள்ளிப் போன சூழலில் 12 பேர் கொண்ட செயற்குழு பதவியை விட்டு காந்தியின் வழிகாட்டலில் பதவி விலகியது. நேரு இவர்களோடு இணைந்து பதவி விலகவில்லை. அதே சமயம் போஸின் பக்கமும் சேருவதற்கு போதுமான நியாயங்கள் இருப்பதாக எண்ணவில்லை. தனியாகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

வார்தாவை நோக்கி கிளம்பிய 12 பேரும் நேருவை காரில் ஏற்றிக்கொள்ளாத அளவுக்குக் கசப்பு வளர்ந்திருந்தது. ‘தீவிரத்தன்மையில் இயங்குவதில் தவறில்லை. அதே சமயம், ஆதிக்க மனோபாவத்தோடு அதை இணைப்பது ஆபத்து. இந்தத் தீவிரமான புரட்சி செயலில் ஈடுபடுகிறோம் என்கிற பெயரில் மக்களை மயக்குவது கூடாது….ஐரோப்பாவின் நிலைமையை யோசிக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதை உணரவேண்டும்.’ என்றும் எழுதினார்.

‘நேரு நீங்கள் பதவி விலகி விட்டீர்களா?’ என்று போஸ் கடிதம் எழுதிய பொழுது, ‘நான் அவர்களுடன் இணைந்து ராஜினாமா செய்து சிக்கலை அதிகப்படுத்த எண்ணவில்லை. தற்பொழுது செயற்குழுவை கூட்டும் சிற்றெண் கூட இல்லாத நிலையில் நான் உங்களுக்குப் பெரிய அளவில் உதவ முடியும் என்று தோன்றவில்லை.’ என்று எழுதினார்.

திரிபுரியில் ஒரு போருக்கு போஸும், மற்றவர்களும் தயாராகி இருந்தார்கள். காந்தி ராஜ்காட்டில் உண்ணா விரதம் இருந்து கொண்டிருந்தார். போஸ் பக்கம் நின்று அவரைத் தலைவர் ஆக்கிய சோசியலிஸ்ட்கள் காந்தியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் நிலைமையை நோக்கி சூழல் போவதைக் கண்டார்கள். எல்லா இடதுசாரிகளும் தன்னை ஆதரிப்பார்கள் என்று போஸ் உறுதியாக நம்பினார். போஸுக்கு எதிரான தீர்மானத்தோடு ‘வலதுசாரிகள்’ என்று போஸ் குறிப்பிட்டவர்கள் தயாரான பொழுது காங்கிரஸ் சோசியலிச கட்சி வாக்கெடுப்பில் இருந்து விலகிக்கொண்டது.

‘இடதுசாரிகள் வளதுசாரிகளோடு முரண்படுகிறார்கள் என்பதற்காகக் கட்சியைப் பிளவுபடுத்துகிற அளவுக் குச் செயல்பட முடியாது. நாட்டின் தலையெழுத்தை தனித்துத் தீர்மானிக்கும் ஆற்றல் இடதுசாரிகளுக்கு மட்டுமில்லை.’ என்று சோசியலிச தலைவர் லோகியா குறிப்பிட்டார்.

பந்த் கொண்டு வந்த தீர்மானம் செயற்குழுவின் மீது நம்பிக்கையை உறுதி செய்ததோடு போஸ் காந்தியின் விருப்பப்படி செயற்குழுவை நியமிக்க கேட்டுக்கொண்டது. அந்தத் தீர்மானத்தைத் தயாரித்த ராஜாஜி. ‘காந்தி செலுத்தும் படகு ஒன்றும், போஸ் செலுத்தும் ஓட்டை விழுந்த படகு ஒன்றும் எங்கள் முன் உள்ளது. போஸ் தன்னுடைய படகோடு காந்தியின் படகை இணைக்கச் சொல்கிறார். இரண்டும் மூழ்கிப் போகும்.’ என்று கடுமையாகப் பேசினார்.

தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வரிகளைக் கொஞ்சம் மாற்றினால் சமர சமாகப் போய் விடலாம் என்று சரத் போஸ் கேட்டுக்கொண்டும் எதுவும் மாறவில்லை.போஸ் நேரு தன் னைக் கைவிட்டதே இப்படி ஆனதற்கு முக்கியக் காரணம் என்று கொதித்துப் போனார். மிகக்கடுமையான சொற்களால் கோபம் கொப்பளிக்க நேருவுக்குக் கடிதம் எழுதினார்.

‘ எனக்கு எதிராக பெரிய அளவிலான வெறுப்பை நீங்கள் வளர்த்துக்கொண்டீர்கள் என்று தெரிகிறது. எனக்கு எதிரான எல்லாக் கருத்துகளையும் எடுத்துக் கொள்கிறீர்கள். எனக்குச் சாதகமாக இருக்கும் எல்லாவற்றை யும் தயவின்றி நிராகரிக்கிறீர்கள்’ என்றும், ‘நீங்கள் அரசியலில் எனக்கு மூத்த அண்ணன் என்று உறுதியாக நம்பித்தான் அறிவுரைகள் பெற்றேன். நீங்கள் உங்கள் அறிவுரைகளில் தெளிவில்லாமல், எனக்கு எந்த உறுதியும் தராமலே இறுதிவரை இருந்தீர்கள்.’ என்றும் எழுதிவிட்டு இறுதியாக கடிதத்தில், ‘நீங்கள் இப்படி நடந்து கொண்டது உங்கள் தகுதிக்கு உகந்தது இல்லை. ‘ என்று பொங்கினார்.

நேரு போஸின் திறந்த மடலுக்கு நன்றி சொன்னதோடு இப்பொழுதும் போஸுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குறைகளைத் தான் நன்கு உணர்ந்திருப்பதாகவும், அவற் றோடு கூடிய அதிர்ஷ்டமற்றவன் என்பதால் தன்னை மன்னிக்கும்படியும் நேரு கேட்டுக்கொண்டார்.

போஸ், இதே காலத்தில் ஒரு செயற்குழுவை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருந்தார். ஏழு, ஏழு என்று இருபக்க மும் ஆட்களை இணைத்து செயற்குழுவை அமைக்கப் படேலிடம் கேட்டார். காந்தியிடம் உதவி கேட்ட பொழுது, ‘நான் கணக்கிலேயே வரமாட்டேன். நீங்கள் பலரும் இணைந்த குழுவை அமைத்தால் நீங்கள் நினைத்ததைச் செய்ய முடியாது. காந்தியவாதிகள் என்று அழைக்கப்ப டும் அவர்கள் உள்ளே வந்தால் உங்களின் செயல்பாடு களை முடக்கிவிடுவார்கள்.’ என்று அச்சுறுத்தும் தொனி யில் பேசினார்.

‘இப்பொழுது நாம் பிரிந்தால் ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படும். இப்பொழுது முழு விடுதலைக்கான பெரும் போராட்டத்தை முன்னெடுத் தால் பதினெட்டு மாதங்களில் விடுதலை உறுதி.’ காந்தி இதனோடு உடன்பட மறுத்தார். அவருக்குப் போஸ் சொல்வது அமைதி வழி யிலான போராட்டம் இல்லையென்று நன்றாகத் தெரியும். நேரு காந்தி, போஸ் இருவரையும் சந்தித்துச் சமாதானமாகச் செல்லும்படியும், காந்தி வழிகாட்டட்டும் என்றும் சமரசத்தைச் சாதிக்க முயன்றார்.

காந்தியோ சற்றும் நகராமல், போஸ் தன்னுடைய செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றுவிட்டார். தனக்குக் கட்சியின் பெரும்பான்மை காந்தியின் பின் நின்று எதிர்ப்பதை உணர்ந்த போஸ் வேறு வழியில்லாமல் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

நேரு, போஸ் தன்னுடைய பதவி விலகலைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். கட்சியின் மற்ற இடதுசாரி அமைப்புகளை அதில் இணைக்கலாம் என்று பார்த்தார். ஆனால், அவை இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக மட்டும் போஸ் அவர்களைக் கட்சிக்குள் நியமித்தன.

கட்சியின் உறுப்பினர்கள் தனிப்பட்ட சத்தியாகிரகங்களில் ஈடுபடக்கூடாது, அந்தந்த மாகாணத்தில் இருக்கும் அரசுகள் மாகாண காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளை மதிக்க வேண்டாம் என்று போஸுக்கு அஞ்சி காங்கிரஸ் அறிவுறுத்தியது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பம்பாயில் போஸ் போராட்டம் அறிவித்தார். கட்சியை விட்டு மூன்று ஆண்டுகள் போஸ் நீக்கப்பட்டார். ‘இப்பொழுதும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் வலதுசாரி சக்திகள் பலம்பெற்று இருப்பதையே என்னை நீக்கியது காட்டுகிறது.’ என்று எழுதினார்.

மேலும், நேருவோ ‘பார்வர்ட் ப்ளாக் கட்சி திறந்த வகையான பண்பு கொண்டதாக இருக்கிறது. பாசிசச சக்திகள், சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் நுழைந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று தயாராக இருக்கி றீர்களா போஸ்? இப்படித்தான் ஐரோப்பாவிலும் மாறுவேடம் பூண்டு பாசிச சக்திகள் வெற்றி பெற்றன.’ என்று அச்சம் தெரிவித்த பொழுது, ‘என் கட்சியில் எந்தச் சந்தர்ப்பவாதம், பாசிசம் ஆகிய வற்றை நேரு கண்டார்? முயலுடன் இணைந்து ஓடுவதாகக் காட்டிக்கொண்டு வேட்டை நாயுடன் இணைந்து வேட்டை யாடுபவர்களை என்ன சொல்வது?

இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு வளதுசாரிகளோடு இணைந்து பணியாற்றும் நபர்கள் எங்களைப் பாசிஸ்ட்கள் என்கி றார்கள்… கட்சிக்குள் இருக்கும் பாசிசத்தை எதிர்க்க முடியாதவர் கள்…அவர்களோடு கூட்டமாக இணைந்து விடுவது. இல்லையேல் ரகசியமாக அவர்களின் திட்டங்களில் பங்குகொள்வது, தீர்மானங் களைத் தயாரிப்பது…’ என்று ‘நம்மை விமர்சிப்பவர்கள்’ என்கிற கட்டுரையில் எழுதினார்.

நேரு பொறுமையாக, ‘நான் உங்களைப் பாசிஸ்ட் என்றோ, சந்தர்ப் பவாதி என்றோ சொல்லவில்லை. கட்சிக்குள் அப்படிப்பட்ட சக்தி கள் ஊடுருவிவிடும் என்று தான் அச்சம் தெரிவித்தேன். சோசிய லிசம் பேசிவிட்டு பாசிச சக்திகள் ஆட்சியைப் பிடித்த காட்சிகள் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட தாக்குதல்களை நான் எப்பொழு தும் விரும்பவதில்லை….நம்முடைய கொள்கைகள் சார்ந்து விமர் சனங்கள் இருந்தால் நன்றாக இருக்கும், தனிப்பட்ட நபர்களைப் பற்றித் தாக்கிப் பேசவேண்டாமே!’ கடிதம் எழுதினார்.

தன்னுடைய அண்ணன் மகன் அமியா போஸுக்கு எழுதிய கடிதத் தில், ‘ எனக்கு நேருவை விட அதிகத் தீங்கு இழைத்தவர்கள் யாரு மில்லை. என்னை ஆதரித்து இருந்தால் பெரும்பான்மை பெற்றிருப்பேன். அவர் நடுநிலைமை கொண்டி ருந்தால் கூட நான் பெரும்பான்மை பெற்றிருப்பேன். திரிபுரியில் எனக்கு எதிராகப் பழைய தலைவர்களுடன் இணைந்து கொண்டார். அந்த 12 பேரைவிடநேருவின் பிரச்சாரம் எனக்கு அதிகத் தீங்கை விளைவித்தது.’ என்று எழுதினார்.

நேருவோ, ‘நான் போஸ் பக்கம் அப்பொழுது நிற்காமல் போனது உண்மைதான்!’ என்று பின்னர் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டார். அதே சமயம், நேரு பழைய குழுவுடன் இணையவில்லை என்பதும் அவர் தனித்தே ராஜினாமா செய்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். கிருஷ்ண மேனனுக்கு அந்த வருட ஏப்ரலில் எழுதிய கடிதத்தில். ‘நான் பின்னிருந்து எல்லாவற்றையும் ஆட்டுவிப்பதாகப் போஸ் எண்ணு கிறார். நான் போஸுக்கு எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.’ என்று கடிதம் எழுதினார்.

இதற்குப் பின்னும் தன்னை வந்து சந்திக்கும்படி போஸ் நேருவை அழைத்தார். ‘நீங்கள் அழைத்தால் நான் முடியாது என்று சொல்லமாட்டேன்.’ என்று நேரு பதில் அனுப்பினார். போஸ் தன்னைச் சோசியலிசத் தலைவர்கள் கைவிட்டது, சில தவறான யுக்திகள் தோல்வி தந்ததாக உறுதியாக நம்பினார். ஆங்கிலேய அரசை வீழ்த்த ஜெர்மனி தான் சரியான தேர்வு. ‘ஏகாதிபத்தியம், பாசிசம் இரண்டையும் எதிர்க்க வேண்டும். வாய்ப்பிருந்தால் கொஞ்சம் பாசிசத்தோடு சமரசமாகப் போகலாம்’ என்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் போஸ் குறிப்பிட்டார்.

ஜெர்மனி போலந்து மீது தாக்குதலோடு இரண்டாம் உலகப் போரை துவங்கி வைக்க இந்தியாவின் அரசியல் சூழலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. காந்தி லண்டன் மாநகரம் தாக்கப்பட்டதில் கண்ணீர் வடித்தார். காந்தி மேலும், வைஸ்ராய் லிங்க்லித்தோவை சந்தித்துத் தன்னுடைய சொந்த அனுதாபத்தைப் பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்களுக்குத் தெரிவித்துக்கொண்டார்.

நேருவோ பாசிசத்தின் மீதான அதே கடுமையான பார்வையை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மீது நேரு கொண்டிருந்தார். ஐரோப்பாவை பாசிசம் என்ன செய்கிறதோ, அதை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு செய்கி றது. எந்த ஜனநாயகம், சமத்துவம், சுய நிர்ணயம் ஆகியவற்றுக்காகப் போராடுவதாகச் சொல்கிறீர்களோ அதை எங்களுக்கும் தாருங்கள்.’ என்று அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உலகப்போர் ஆரம்பித்த ஒரு வாரத்தில் வார்தாவில் கூடியது. அதற்குச் சிறப்பு அழைப்பாளராகப் போஸ் அழைக்கப்பட்டிருந்தார். நேருவுக்கும், அவருக்குமான இறுதி சந்திப்பு அதுதான் என்று இருவருக்குமே தெரியாது. போஸ் பெரிய ஒத்துழையாமைப் போரை நிகழ்த்தி ஆங்கிலே யரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லியதை காங்கிரஸ் ஏற்கவில்லை. பாசிசம், நாசிசம் இரண்டை யும் கடுமையாக எதிர்த்த நேரு ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவிற்கு விடுதலை வழங்கும் என்கிற கருத்தை முன்வைத்தார்.

போஸ் இதைப் பார்த்துக் கடுமையாகக் கடுப்பானார். ‘யாரை எதிர்த்து போராடுகிறார்கள்’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘நம்மை ஆங்கிலேய அரசாங்கம் எட்டி உதைத்தாலும் அவர்களின் காலை நாம் நக்கிக் கொண்டு இருப்போம்.’ என்று கொதித்தார். ஆங்கிலேய அரசு கொஞ்சமும் இறங்கி வராத சூழலில் காங்கிரஸ் அமைச்சரவைப் பதவிகளை விட்டு விலகியது. இருப் பினும், அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு அரசு மதிக்கத்தக்க ஒப்பந்தத் துக்கு வருவோம் என்று நம்புவதாகச் செயற்குழு தீர்மா னம் போட்டது.

நேரு மனதளவில் தனியராக உணர்ந்தார். காந்தி இதை உணர்ந்து, ‘நேரு நீ என் மீது கொண்டிருக்கும் அன்பும், மதிப்பும் அப்படியே இருந்தாலும் வெளிப்புறப் பார்வை யில் இருக்கும் முரண்பாடுகள் அதிகரித்து உள்ளதாகத் தெரிகிறது.’ என்று கடிதம் எழுதினார். ஓய்வு பெறவும் முடியாது; நடக்கின்ற செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பும் ஏற்க முடியாது’ என்றவர் துயரத்தின் பள்ளத்தாக்கில் விழுந்திருப்பதாக உணர்ந்தார்.

லெனின், முசோலினி போல போஸ் சாகசங்கள் செய்து விடுதலை பெற விரும்பினார். இருந்தாலும் 1940-ல் காந்தியை இறுதி முறையாகச் சந்தித்தார். அந்தக் கூட்டத்தால் எந்த பயனும் விளையவில்லை. போஸ் மீதான தடையைக் காங்கிரஸ் நீக்கிக்கொள்ள வேண்டும் என்று காந்திக்கு தாகூர் கடிதம் எழுதினார்.

‘ஜெர்மனியைப் பற்றி ஒரு வார்த்தை’ என்கிற கட்டுரையில், ‘என் அன்பு ரோஜாப் பூவைப் போல மென்மை யானது. அதே சமயம் நான் கடுமையானவனாக நடந்து கொள்ள முடியும்…. சுபாஸ் பாபு எனும் மகனை நான் பெற்றிருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்தேன். தற்பொழுது நான் என் மரியாதையில் இருந்து வீழ்ந்து விட் டேன்.’என்று எழுதியவர், ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ சுபாஸ் ஒரு வழிதவறிய மகனாக நடந்து கொள்கிறார். அவர் தன்னுடைய கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 2


நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபொழுது போஸ் அயல் நாட்டில் இருந்தார். இருவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த மோதிலால் நேருவின் மரணம் குறித்து, போஸ் அந்தக் கடிதங்களில் எங்கேயும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் இறந்துபோன மோதிலால் நேருவை, மார்ச் மாதத்தில் இறந்துபோனார் என்று தன்னுடைய சுயசரிதையில் தவறாகப் பதிவு செய்கிறார் போஸ்.

பாசிசத்தின் கட்டுப்பாடு, போஸை இந்தக் காலத்திலேயே ஈர்க்க ஆரம்பித்திருந்தது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை வர்ணிக்கிற பொழுது, ‘பாரீஸ் நகரம் நோக்கி எல்பாவில் இருந்து நெப்போலியன் புறப்பட்டது போல, ரோமை நோக்கி முசோலினி புறப்பட்டது போல’ தண்டி யாத்திரை இருந்ததாக வர்ணிக்கிறார். இந்தப் பாசிச பாசம் இறுதிவரை போஸிடம் தொடரவே செய்தது.

உப்பு சத்தியாகிரகத்தை காந்தி திரும்பப்பெற்றது, போஸ் மற்றும் வித்தல்பாய் படேல் ஆகியோரை கடுமையாகக் கடுப்பேற்றியது. ஆஸ்திரியாவில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டவர்கள், ‘மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவராகத் தோல்வியடைந்துவிட்டார் என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். காங்கிரஸ் இயக்கத்தை புரட்சிகரமான பாணியில் மாற்றும் புதிய தத்துவம், முறை தேவைப்படுகிறது. இதைச் சாதிக்க தலைமை மாற்றம் தேவை. மேலும் தீவிரவாதத்தன்மை கொண்டதாக ஒத்துழையாமை மாறவேண்டும்…’ என்று நீண்டது அந்த அறிக்கை.

நேருவோ இந்தியாவில் காந்திக்கு அருகில் இருந்தார். வெகு வெறுமையாக உணர்ந்த நேரு, காதியை விற்றல், கைத்தறி நெய்தல், தையல் ஆகிய சமூகப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என்று காந்தி அழைத்ததில் அதிர்ந்துபோனார். அந்தக்காலகட்டத்தில் ‘இதுவா நாம் பின்பற்ற வேண்டிய அரசியல் செயல்திட்டம்? நானும், காந்தியும் வெகுதூரம் விலகிவிட்டோம். என்னையும், அவரையும் பிணைத்திருந்த எல்லா இழைகளும் அறுந்துவிட்டது. குத்தப்பட்ட வலியால் துடிக்கிறேன்’ என்று சொன்ன நேரு, காந்தியோடு வெளியுலகில் பிணைந்திருந்தாலும் மனதளவில் விலகிக்கொண்டு இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் தனி வாக்காளர் தொகுதி விஷயத்தில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார். நேரு கலங்கிப் போனார். தன்னுடைய பதினைந்து வயது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் மொத்தமாக ஆடிப்போயிருக்கிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. மோசமான செய்தி வந்திருக்கிறது. பாபு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார். நான் இனிமேல் அவரைப் பார்க்கவே மாட்டேனோ? இனிமேல் யாரிடம் போய் நான் சந்தேகம், அறிவுரை கேட்பேன். காயப்பட்டு இருக்கிறபொழுது, சோகமுற்று நிற்கிறபொழுது யாரிடம் அன்பான தேறுதலைப் பெறுவேன்?’ என்று புலம்பித் தள்ளினார்.

இதை கிட்டி குர்திக்கு எழுதிய கடிதத்தில் போஸ் கச்சிதமாகப் படம் பிடிக்கிறார் இப்படி- ’அவரின் மூளை ஒரு பக்கம் இழுக்கிறது, இதயம் வேறொரு திசையில் இழுக்கிறது. அவரின் இதயம் எப்பொழுதும் காந்தியுடன்தான் இருக்கிறது’

போஸ் ஐரோப்பாவில் இருந்த காலத்தில், இருமுறை முசோலினியை சந்தித்தார். ‘பிக் பாஸ்’ என்று அன்போடு முசோலினியைக் கொண்டாடிய நேதாஜி, அவரிடம் ‘நான் சீர்திருத்த முறையைவிட புரட்சிப் பாதையையே விரும்புகிறேன்’ என்று வாக்குமூலம் கொடுத்தார். அதை நோக்கி பயணப்படும் திட்டத்தை வகுக்குமாறு முசோலினி வழிகாட்டினார்.

1933-ல் லண்டனில் நடந்த மூன்றாவது இந்திய அரசியல் மாநாட்டில் பேசிய போஸ், ‘காந்திய முறையால் தீர்வு கிடைக்காது. அது சமரசம் செய்துகொள்கிறது. சமரசம் இல்லாத தீவிரவாதமே தீர்வு. அகிம்சையை நம்பாத, ஆட்சியைப் பிடிக்கும் கட்சி ஒன்றை உருவாக்கப்போகிறேன்… சோவியத் ரஷ்யா போன்ற மாதிரியைக் கொண்டு இந்தியா இயங்கும். அங்கே முதலாளிகளுக்கு இடமில்லை’ என்று முழங்கினார்.

ஜெர்மனிக்கு போஸ் பயணம் போனபொழுது, எப்படியாவது ஹிட்லரை சந்தித்துவிட துடித்தார். குறைந்தபட்சம் கெப்பல்ஸ் உடனான சந்திப்பு நிகழ்ந்துவிட்டால்கூட போதும் என்று அவர் எண்ணினார். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை தான் பேசினால் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்று போஸ் நம்பினார். அவர் முனிச் நகரில் நடந்தபொழுது அவர் மீது கற்களை வீசி, ‘கருப்பன்!’ என்று குழந்தைகள் வசைபாடின. ஒரு கட்டத்துக்கு மேல், ஜெர்மானியர்கள் தங்களுடைய இனத்தூய்மைக் கொள்கையை விடமாட்டார்கள் என்று உணர்ந்த போஸ், ‘நீங்கள் உங்கள் இனவெறிக்கொள்கையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இந்தியர்கள் பற்றிய கீழான பார்வையை மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள்.’ என்று ஜெர்மானிய அகாதமியின் இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.

‘இந்திய தேசாந்திரி’ எனும் தன்னுடைய சுயசரிதையை எழுதுவதற்கு உதவ, யாரையேனும் தேடிக்கொண்டு இருந்த போஸ் தன்னைவிட பதிமூன்று வயது இளைய எமிலியை சந்தித்தார். திறமை, அழகு, ஆங்கிலப்புலமை மிகுந்த எமிலியிடம் மனதை பறிகொடுத்தார். தானே காதல் அத்தியாயத்தை துவக்கினார்.

போஸின் அப்பா இறந்துபோக, கண்ணீரோடு வந்து தந்தையின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார். பின்னர் ஐரோப்பா திரும்பினார். இந்த ஐரோப்பா திரும்பும் காலத்தில் மீண்டும் முசோலினியை சந்தித்து தன்னுடைய சுயசரிதையான, ‘இந்திய தேசாந்திரி’ நூலை முசோலினிக்குப் போஸ் பரிசாகக் கொடுத்தார்.

இன்னொருபுறம் நேருவின் மனைவி தன்னுடைய வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் நின்றுகொண்டு இருந்தார். மேற்கத்திய பாணியிலான வாழ்க்கைமுறை கொண்ட நேருவின் குடும்பத்தில், கமலா வெகுகாலம் ஒட்ட முடியாமல், ஆங்கிலம் பேசத்தெரியாமல் சிரமப்பட்டார். இது ஒருபுறம் என்றால், உணர்வுப்பூர்வமாக எதையும் மனைவியிடம் வெளிப்படுத்த தெரியாத நேரு, இன்னொருபக்கம் படுத்தி எடுத்தார்.

‘எதுவாக இருந்தாலும் என்னோடு உறவில் இருக்கும் இன்னொரு நபரே விஷயத்தை துவங்க வேண்டும்’ என்று சொந்த வாழ்க்கையில் ஆசைப்படுவதை நேரு சொல்லியிருக்கிறார். கமலா, காசநோயாலும், கருக்கலைப்புகளாலும் உடல்நலம் குன்றிப் போராடிக்கொண்டிருந்தார். அவரை ஐரோப்பாவில் வைத்து மருத்துவம் பார்க்க நேரு கிளம்பிச் சென்றபொழுது, அங்கே போஸ் உடனிருந்து உதவிகள் செய்தார்.

மனைவி மரணப்படுக்கையில் இருந்தபொழுதும், எப்படி கடவுளின் மீது இவள் இன்னமும் பற்றோடு இருக்கிறாள் என்று ஆச்சரியப்பட்டார் நேரு. கமலா இறந்த பிறகு வெளிவந்த தன்னுடைய சுயசரிதையை அவருக்கு அர்ப்பணம் செய்தார். கமலாவின் இறுதிச்சடங்கில் லாசானே நகரில் போஸும் கலந்து கொண் டார் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

போஸ் இப்பொழுது நேருவுடன் இணைந்து பெரிய விஷயங்கள் செய்ய முடியும் என்று எண்ணினார். ‘காந் தியுடன் உங்கள் அளவுக்கு நெருக்கமானவர் யாருமில்லை. உங்களைப் பகைத்துக்கொள்ளும் எதையும் அவர் செய்ய மாட்டார்’ என்று நேருவுக்கு எழுதினார். இந்தியா திரும்பினால் ஆங்கிலேய அரசு கைது செய் யும் என்கிற சூழலில் என்ன செய்யலாம் என்று நேருவிடமே ஆலோசனை கேட்டார். முதலில் நேரு இந் தியாவுக்கு வரவேண்டாம் என்று அறிவுரை தந்தாலும், பின்னர் காந்தி முதலியோரின் வழிகாட்டுதலில் போஸை இந்தியாவுக்கு திரும்புமாறு அழைத்தார்.

எமிலியை பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் போஸ் காதல் தீயால் வெம்பினார். ‘பனிப்பாறையும் உருகும். இந்தியாவில், என் வாழ்க்கை சிறையில் கழியலாம். நான் சுட்டோ, தூக்கிலிடப்பட் டோ கொல்லப்படலாம். எப்படி இருந்தாலும் உன்னையே எண்ணிக்கொண்டு இருப்பேன். உன் காதலை அமைதியாக நினைத்து ஏங்குவேன். உன்னை மீண்டும் பார்ப்பேனா என்று தெரியாது. நீ எப்பொழுதும் என் மனம், எண்ணங்கள், கனவுகளில் வாழ்கிறாய். விதி நம்மை இந்தப் பிறவியில் பிரித்தால் நாம் அடுத்தப் பிறவியில் இணைவோம்.

நமக்குள் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா? என் தேசம், மக்கள், கலாசாரம், பழக்கங்கள், தட்பவெட்பம் எல்லாம் மாறுபட்டது என்றாலும், ஒரு கணத்தில் நாடுகளைப் பிரிக்கும் இவற்றை மறந்துவிட்டேன். நான் உனக்குள் இருக்கும் பெண்ணை நேசிக்கிறேன். உனக்குள் இருக்கும் ஆன்மாவை நேசிக்கிறேன்’ என்று எழுதிய காதல் கடிதத்தை அழித்துவிடுமாறு எமிலியிடம் சொன்னார். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. (சுகாதா போஸ் எழுதிய போஸின் வாழ்க்கை வரலாறு).

இருவரும் தாங்கள் காதலில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் பன்மையில் தங்களை அழைத்துக்கொண்டார்கள். பாக்ஸிங் நாள் அன்று போஸ் எமிலியை ரகசியமாக மணந்து கொண்டார். எந்தக் கடிதத்திலும் எமிலியைக் கடிந்து கொள்ளாத போஸ், வேறு புத்தகங்களை இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்குமாறு எமிலி கேட்டபொழுது மட்டும், ‘இருக்கின்ற புத்தகங்களை முதலில் படித்து முடி!’ என்று கோபிக்கிறார்.

போஸ் 1936-ல் இந்தியா திரும்பியபொழுது நேரு மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்கப்பட் டிருந்தார். போஸ் கைது செய்யப்பட்டதும் இந்தியா முழுக்க ‘சுபாஸ் போஸ்’ தினம் அனுசரிக்க நேரு அழைப்பு விடுத்தார். நேருவிடம்கூட தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி போஸ் மூச்சு விடவில்லை. முசோலினி பற்றி பெருமிதமாக எழுதிக்கொண்டிருந்த போஸ், நேருவிடம் கம்யூனிச புத்தகங்களைக் கடன் கேட்டார். ‘போஸுக்கு தான் ஒரு முசோலினி என்று உள்ளுக்குள் நினைப்பு’ என்று தன்னுடைய நாட்குறிப்பில் குறித்திருக்கிறார் நேரு.

கம்யூனிசம், பாசிசம் இரண்டையும் கவனத்தில் கொண்ட போஸ் பாசிசம் மீது பற்றுகொண்டவராக இருந் தார். ஏன் இந்தியாவில் கம்யூனிசம் எடுபடாமல் போகலாம் என்பதற்கு காரணங்களை அடுக்கியவர், பாசிசம் மீது அப்படி எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆஸ்திரியாவில் அவர் தங்கியிருந்தபொழுது மிகக் கடுமையான நுரம்பெர்க் சட்டங்கள் யூதர்கள் மீது பாய்ச்சப்பட்டன.

‘யூத செல்வாக்கை ஒழிக்கவே நாஜிக்கள் முயல்கிறார்கள் என்று எண்ணுகிறேன்’ என்று எளிமையாக அத்தனை கொடூரங்களையும் அவர் கடக்கிறார். நேரு காங்கிரஸ் செயற்குழுவில் யூத அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க நாம் முயல வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தபொழுது, ‘வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவான, யதார்த்த புரிதல் இல்லாமல் நேரு இப்படியெல்லாம் தீர்மானம் கொண்டுவருகிறார்.’ என்று வருத்தப்பட்டார்.

போஸ் தன்னுடைய சுயசரிதையில், ‘தொடர் எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சியாக மாறும். காந்தி ஒரு சீர்திருத்தவாதி, விடுதலை வாங்கித்தரும் தலைவர் இல்லை.’ எனவும், ‘இந்திய நாகரீகம், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் சமூக-அரசியல் இயக்கங்களின் தாக்கங்களை உள்வாங்கித் தன்னுடைய வளர்ச்சியை அமைத்துக்கொள்ளும் திட்டத்தைப் போருக்கு பிந்தைய தன்னுடைய செயல்திட்டமாகவும் முன்வைக்கிறார். போஸின் சுயசரிதை இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

நேருவின் சுயசரிதை சிறையிலேயே எழுதப்பட்டது. அதில் மேற்கு, கிழக்கின் சங்கமமாக தான் இருப்பதையும், மேற்கின் ரசனையை விடமுடியாமல் இந்திய மனதை புரிந்துகொள்ள முடியாமல் துன்புறுவதைக் குறித்துப் பதிவு செய்கிறார். தன்னிடம் எல்லையற்ற அன்புகொண்ட மக்கள் எப்படி மதத்தின் மீது இத்தனை பற்றுகொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை எனவும், ஆனாலும், அது எண்ணற்ற இன்னலுற்ற மனங்களுக்கு நிம்மதியைத் தருகிறது.’ என்றும் பதிகிறார். மார்க்சியம் மீதும், சோசியலிசம் மீதும் அவருக்கு இருக்கும் மரியாதையும் நூலில் வெளிப்படுகிறது.

நேருவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க காந்தி விரும்பினார். 1936-ல் முள்கிரீடத்தை மீண்டும் ஏற்க சம்மதமா என்று நேருவைக் கேட்டார். மேலும், ‘நேரு எந்தக் கொள்கை, தத்துவங்களுக்காக நிற்கிறாரோ அவற்றுக்கு நேர்மையாக அவர் இருக்கலாம்’ என்று உறுதியும் தந்தார். மனைவியின் மரணத்தில் வருந்திக் கொண்டிருந்த நேரு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதம் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் இருந்தபொழுது கம்யூனிச தலைவர் ரஜினி பாமி தத்தை சந்தித்திருந்த நேரு அவரிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க உதவுவதாக உறுதி தந்தார். அவர் மனமெல்லாம் பொதுவுடைமை தாக்கம் நிறைந்திருந்தது.

நேரு தலைவர் ஆவதைத் தடுக்க காந்தியுடன் போராடிப் பார்த்தார் ராஜாஜி. அவர் அசையவில்லை. நேரு தலைவர் ஆனதும். தன்னுடைய உரையை ‘காம்ரேட்ஸ்!’ என்று சொல்லி ஆரம்பித்தார், ‘இந்திய அரசு சட்டம், 1935-ன்படி நாம் பதவியேற்பதில் தவறில்லை. அதே சமயம் அரசியலமைப்பு குழுவை உருவாக்க நாம் உறுதிபெற வேண்டும்.. காங்கிரஸ் மக்கள் பெருந்திரளுக்கான கட்சி, அது தன்னுடைய நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கைவிட வேண்டும்.

சோசியலிசம்தான் நம்முடைய எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு தரும். மேற்கு சோசியலிசத்தால், கிழக்கு தேசியத்தால் நிரம்பியிருக்கிறது. ஏகாதிபத்தியம், பாசிசம் இரண்டும் முதலாளித்துவத்தின் வெவ்வேறு முகங்கள். இரண்டையும் நாம் எதிர்ப்போம்.’ என்றெல்லாம் பேசினார்.

அவருடைய தீர்மானங்கள் கட்சியின் செயற்குழுவில் தோற்கடிக் கப்பட்டன. அவரின் சோசியலிசம் சார்ந்த கருத்துக்களை ஏற்க மறுத்து படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி முதலியோர் தங்கள் பதவிகளை காந்தி யின் வழிகாட்டுதலில் ராஜினாமா செய்தார் கள். பின்னர் காந்தியின் வழிகாட்டுதலில் ராஜினாமாவை மாற் றிக்கொண்டு தாங்கள் ஏன் நேருவின் தீர்மானத்தை ஏற்க மறுக் கிறோம் என்று கடிதம் கொடுத்தார்கள். பிர்லா முதலிய இருபத்தி யொரு முதலாளிகள் நேருவைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றி னார்கள்.

எதுவும் மோசமாக நடக்காமல் காந்தி பார்த்துக்கொள்ள வேண் டும் என்று கேட்டுக்கொண்டார் பிர்லா. காந்தியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். நேரு சொன்னவற் றையோ, சோசியலிசத்தையோ, புரட்சிகரமான செயல்திட்டங் களையோ கட்சி செயல்படுத்தாது என்பதை செயற்குழு தெளிவு படுத்தியது. நேரு ‘நான் மானமற்றவனாக உணர்கிறேன்…’ என்று நொந்துபோய் எழுதினார். ஆனால், அப்பா, மனைவி இருவரையும் இழந்துவிட்டு நின்றுகொண்டிருந்த நேரு, காந்தியை விட்டு விலக முடியாமல் இருந்தார். ‘நாங்கள் கருத்தியல் ரீதியாகக் கடல் அளவுக்கு முரண்பட் டாலும் இப்பொழுது மனதளவில் முன் எப்பொழுதையும்விட நெருக்கமாக உணர்கிறோம்…’ என்று அகதா ஹாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி குறிப்பிட்டார்.

நேரு இப்படி மனதளவில் பெரிய போராட்டத்தில் இருந்தபொழுது போஸ் ஆங்கிலேய அரசால் சிறையி லேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் நிற்பது என்று முடிவாகி இருந்தது. கட்சி வெற்றி பெற்ற தும் இந்திய அரசு சட்டத்துக்கு என்னென்ன இடைஞ்சல்கள் உண்டு செய்ய முடியுமோ அத்தனையையும் செய்ய வேண் டும் என்பது நேருவின் உறுதியான எண்ணமாக இருந்தது. தேர்தல் அறிக்கையை நேரு தயாரித்தபொழுது அதில் சோசியலிசம் என்கிற வார்த்தையை எங்கும் பயன் படுத்தவில்லை. ‘மன்னர்கூட தவறு செய்யலாம், செயற்குழு தவறு செய்யாது’ என்று வஞ்சப்புகழ்ச்சியாக நேரு குறிப்பிட்டார்.

‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்’ என்று குறிப்பிட்டார். தனிநபர் உரிமைகள், அரசியல் கைதிகளின் விடு விப்பு, விவசாயிகள், அரசு அமைப்புகள் ஆகியவற்றைச் சீர்செய்தல் ஆகியன முக்கியக் குறிக்கோள் களாகக் குறிப்பிடப்பட்டன. சோசியலிஸ்ட்கள், வலதுசாரிகள் என்று சகலரும் இந்தத் தீர்மானத்தால் பெரிதும் திருப்தி அடைந்தார்கள். எல்லாரும் இணைந்து தேர்தல் களம் கண்டார்கள்.

நேரு சுழன்று சூறாவளி போலப் பிரசாரம் செய்தார். மூன்று கோடி வாக்காளர் களில் பெரும்பாலானோரை சென்றடைந்தார். மக்கள் பெருந் திரளாக அவருக்கு ஆதரவு நல்கினார்கள். ஆறு மாகாணங்களில் தனிப் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், மூன்று மாகாணங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அமைச்சரவையில் கட்சி பங்கேற்கக் கூடாது என்று நேரு கருதியதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. நேரு மாய்ந்து, மாய்ந்து எப்படியெல்லாம் அரசை செயல்படவிடாமல் தடுக்கலாம் என்கிற ரீதியில் எழுதி யிருந்தவற்றை அப்படியே வாசித்துவிட்டு, அதைக் காலி செய்வது போல காந்தி இறுதியாக ஒரு பத்தியை சேர்த்து, பதவியில் அமர விரும்பியவர்களுக்குச் சாதகமாக காரியத்தை முடித்தார். பதினெட்டு மாகாணத் தில் பதிமூன்று மாகாணங்கள் பதவியில் அமர்வதில் ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.என்.ராயை சந்தித்துப் படுக்கையில் விழுந்து அழுதுவிடுவது போலக் காட்சியளித்தார் நேரு. ‘நான் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்’ என்று அரற்றினார். அதோடு பெரிதாகக் கட்சித் தலைவராகத் தன்னுடைய பணிகளில் மனம் ஒப்பாமல் ஐரோப்பா நோக்கிப் பயணமானார்.

அடுத்த ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தை கொல்கத்தாவில் நடத்த போஸ் அழைப்பு விடுத்தார். அவரையே காங்கிரசின் அடுத்தத் தலைவராக ஆக்குவது என்று காந்தி முடிவு செய்தார். போஸ் தன்னுடைய உரையில், ’காந்தியின் அகிம்சை வழியில்தான் நாம் விடுதலை பெறவேண்டும்.

அது தீவிரமான போராட்ட முறை என்று அழைப்பதுதான் சரி. அதே சமயம் அந்தப் போராட்ட முறை சற்றும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும். நம்முடைய ஆட்சியில் எல்லா சிறுபான்மையினரும் எந்த ஆபத் தைப் பற்றிய கவலையும் இல்லாமல் சிறப்பாக வாழ முடியும். இந்தியும், உருதுவும் இணைந்த ஒரு மொழி யே நம்முடைய இணைப்பு மொழியாக வேண்டும்…’ என்றெல்லாம் பேசியவர் ‘தொழில்மயமாக்கல் பல் வேறு சிக்கல்களைக் கொண்டிருக்கிறது என்றாலும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துக்கு நாம் போக முடியாது.’ என்று சொன்ன இடத்தில் மட்டும்தான் காந்தியை நேரடியாக தாக்கினார்.

மற்றபடி மிகவும் அமைதியான ஒரு உரையாகவே அது அமைந்திருந்தது. நேரு போஸுக்கு ஒரு வருடம் கழித்து இதைப்பற்றி எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் செயற்குழுவின் பார்வையோடு ஒத்துப்போவதை போலவே பேசினீர்கள். வழிகாட்டும் தலைவரைப்போல அல்லாமல் ஒரு சபா நாயகர் போலத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருந் தது.’ என்றார்.

நேரு ஐரோப்பாவில் கிளமண்ட் அட்லி முதலிய லேபர் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி அதிகார மாற்றத்தை நிகழ்த்துவார்கள் என்பது குறித்து விவாதித்தார். நேரு ஐரோப்பாவில் இருந் தபொழுது ஒருமுறைகூட போஸ் கடிதம் எழுதவில்லை. இந்தியாவுக்குத் திரும்பியதும், ‘நலமா நேரு?’ என்று உடனே கடிதம் எழுதினார்.

தேசிய திட்ட கமிட்டியை ஏற்படுத்திய போஸ் அதன் தலைவராக நேருவை நியமித்தார். பொதுச்செயலாளர் பதவி முதலிய எதுவும் வேண்டாம் என்று கடுப்போடு ஒதுங்கியிருந்த நேருவுக்கு, மீண்டும் பணியாற்ற இது உத்வேகம் தந்தது. ஆனால், இங்கேயும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. காமத் என்கிற ஐ.சி.எஸ். அதிகாரி தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு இந்த கமிட்டி யின் உறுப்பினர் ஆகியிருந்தார். கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பொதுவெளியில் விமர்சனங்களை அவர் முன்வைக்க, கடுமையாகக் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது.

காமத்தை நியமித்த கட்சித் தலைவர் போஸிடம் பிரச்னையைக் கொண்டுசென்றார் நேரு. நேருவுக்கு மட் டும் தனிப்பட்ட முறையில் பிடிக்காமல் போய்த்தான் இப்படிக் கோருகிறார் என்று போஸ் எண்ணிக் கொண் டார். பின்னர் தனியாகப் பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பித்தபொழுது அதற்கு காமத் பொதுச்செயலாளர் ஆனார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

நேரு, நேதாஜி – அரசியல் எதிரிகளா? – 1


நேரு – நேதாஜி: ஒற்றுமையும் வேற்றுமையும்…

வஹர்லால் நேரு, நேதாஜியை உளவு பார்த்தார் என்கிற விஷயம் உளவுத்துறையின் கோப்புகள் மூலம் சமீபத்தில் வெளிப்பட்டது. ‘நேரு, நேதாஜியை கொன்றுவிட்டார்!’ என்கிற அளவுக்கு சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் இருவரின் உறவு எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய அரசியலில் இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் நண்பர்களா? எQதிரிகளா? வரலாறு என்ன சொல்கிறது? என்பதை இந்த மினி தொடரில் பார்க்கலாம்….

நேருவுக்கும், நேதாஜிக்கும் சில பல ஒற்றுமைகள் இளமைக்காலம் முதலே இருந்து வந்தது. இருவரும் ஆங்கிலேய ஆட்சியின் மிக முக்கிய நகரங்களில் பிறக்காமல் முறையே அலகாபாத், கட்டாக்கில் பிறந்து வளர்ந்தார்கள். இருவரின் அப்பாக்களும் வழக்கறிஞர்கள், இருவரும் மேற்படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றார்கள்.

நேரு தியாசபிகல் இயக்கத்தால் ( Theosophical Society ) ஈர்க்கப்பட்ட சூழலில், நேதாஜி ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டார். குருக்களிடம் யோகா கற்றுக்கொண்டார். விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரின் மனிதகுலத்துக்கான சேவை,  தியாகம் மற்றும்  சிந்தனைகளால் கவரப்பட்டார்.

பள்ளி, கல்லூரி காலத்தில் படிப்பில் பெரிய அளவில் நேரு ஜொலிக்கவில்லை. நேதாஜியோ மெட்ரிகுலேசன் தேர்வில் பல்கலை அளவில் இரண்டாம் இடம் பெற்றார். சாந்திப்பூரில் ராமகிருஷ்ணரின் கருத்துக்களால் தாக்கம் பெற்ற இளைஞர்கள் இணைந்து கேம்ப் ஒன்று நடத்தியபொழுது, அதில் காவியுடை அணிந்து பல்வேறு விவாதங்களில் போஸ் பங்குகொண்டார். சங்கரரின் அத்வைதம் அவரில் தாக்கம் செலுத்தினாலும், அது ஏற்புடையதாக அவருக்கு இருக்கவில்லை. ‘முள் போல என்னை அக்கருத்துக்கள் உறுத்திக்கொண்டு இருந்தன. அந்தத் தத்துவத்தை விட்டு முழுவதும் விலக முடியவில்லை. அதற்கு மாற்றைத் தேடிக்கொண்டு இருந்தேன்.’ என்று புலம்பிய அவருக்கு ஆறுதலாக அரவிந்தரின் கருத்துக்கள் நிம்மதி தந்தன. அன்னை தேசத்துக்கு சேவையாற்ற எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறலாம் என்கிற எண்ணம் அவரின் மனதில் அரவிந்தரின் எழுத்துக்களால் ஆழப்பதிந்தது.

வங்கத்தின் மாநிலக்கல்லூரியில் போஸ் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஒட்டன் எனும் பேராசிரியர் மாணவர்களை அடித்ததாகக் கேள்விப்பட்டார். முதல்வரிடம் போய் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் போஸ். வகுப்புக்கு வெளியே சத்தம் போட்ட மாணவர்களைக் கைகளால் தள்ளினேன் என்று ஒட்டன் விளக்கம் தந்துவிட்டு, மன்னிப்பு கோர மறுத்தார். கல்லூரியில் போஸ் ஒரு ஸ்ட்ரைக்கை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். அடுத்து வந்த வகுப்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட பத்து மாணவர்களை வகுப்பை விட்டு ஒட்டன் வெளியேற்றினார். மீண்டும் ஒரு வேதியியல் மாணவனை ஒட்டன் அடித்துவிட்டார் என்கிற விஷயம் கேள்விப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் குழு அவரைத் தாக்கியது.

போஸ் அந்தக் கூட்டத்தில் இருந்ததாகப் பிரச்னை ஆனது. அவரைப் பல்கலைக்கழகக் குழு விசாரித்தது. ‘மாணவர்கள் செய்ததை நியாயப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் அதை நோக்கி கடுமையாகத் தூண்டப்பட்டார்கள்!’ என்று சொன்ன போஸ், வேறு எந்த மாணவரையும் காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டார். போஸ் இந்தச் சம்பவத்தில் நேரடியாகப் பங்கு கொண்டாரா என்று இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. எனினும், போஸ் தன் மீது பழியைப் போட்டுக்கொண்டு மற்றவர்களைக் காப்பாற்றினார் என்பதும், அவருடைய கல்வி அதனால் தடைப்பட்டது என்பதும் உண்மை.

ஏழு மாதகாலப் பயிற்சியில், மிகக்கடினமான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் நான்காம் இடம் பெற்றார் போஸ். தன்னுடைய ஆன்மாவுக்கு விரோதமாக ஆங்கிலேயருக்கு கீழே வேலை பார்ப்பதை விரும்பவில்லை. சிவில் சர்வீஸ் பணிகளில் சேராமலே இருக்க அவர் முடிவு செய்தார். நேரு இதே காலத்தில் கல்லூரியில் படிப்பை படித்து முடித்தார், அவருக்கு இந்திய அரசியலின் மாற்றங்கள் தெரிந்திருந்தன. ஆனால், போஸின் இளமைக்காலத்தில் ஏற்பட்டது போன்ற துணிகர நிகழ்வுகள் நேருவின் வாழ்க்கையில் நடந்திருக்கவில்லை.

போஸ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான பார்வை கொண்டவராக இருந்தாலும் இளமைக்காலத்தில் இருந்தே ராணுவத்தின் மீது தீராத காதல் அவருக்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைபெற செய்வதில் முக்கியப் பங்காற்றிய அவர்களின் ராணுவத்தின் வங்காளிகள் படைப்பிரிவு 49ல் சேர முயன்று, பார்வைக்குறைபாட்டால் நிராகரிக்கப்பட்டார். அடுத்து ஸ்காட்டிஷ் கிறிஸ்துவக் கல்லூரியில் பயிலும்பொழுது, இந்திய உள்நாட்டு ராணுவத்தில் இணைந்தார். கேம்ப்ரிட்ஜில் கல்வி பயில சென்றபொழுது, பல்கலை அலுவலர் பயிற்சிப் படையில் சேர விண்ணப்பித்தார். ராணுவத்தில் இருந்த கட்டுப்பாடு தன்னை மிகவும் கவர்ந்ததாக போஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவுக்குத் திரும்பிய நேரு, லக்னோவில் காந்தியை 1916-ல் காண்கிறார். முதலில் அவர் மீது பெரிய அபிமானம் நேருவுக்கு ஏற்படவில்லை. ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றிய நேரு, ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். காந்தியின் வழியில் போராடி சிறை புகவும் தான் தயாராக இருப்பதாக மோதிலாலிடம், ஜவகர்லால் நேரு சொல்ல… அவரோ காந்தியிடம் சொல்லி, பையனின் வேகத்தைக் குறைக்குமாறு செய்தார். பிரதாப்கர் மாவட்டத்தில் பாபா ராமச்சந்திர எனும் சாதுவின் தலைமையில் நடந்து கொண்டிருந்த விவசாயிகளின் போராட்டத்தின் மீது வன்முறையை ஆங்கிலேய அரசு கையாண்டு இருந்தது. அங்கே வருமாறு நேருவுக்கு அழைப்பு வந்தது. அங்கே கிராமங்களின் வழியாகப் போனபொழுதுதான் நிஜ இந்தியா அவரின் முகத்தில் அறைந்தது. துப்பாக்கிச் சூட்டை காவல் அதிகாரிகள் நடத்திய பிறகு, விவசாயிகள் முன்னால் உரையாற்றியபொழுது, அந்த எளியவர்கள் உறுதியாக அமர்ந்திருந்தது அவருக்கு ஆச்சரியம் தந்தது. ‘வன்முறைக்கு ஆதரவாக நான் பேசிவிடுவேனோ என்று அஞ்சிக்கொண்டிருக்கையில் அவர்கள் காட்டிய உறுதி ஆச்சரியப்படுத்தியது. அவர்களின் மனதில் அகிம்சை ஆழப் பதிந்திருப்பதை நேரடியாக உணர்ந்தேன் ’ என்று ஜனவரி 22, 1921-ல் ‘தி இண்டிபெண்டன்ட்’ இதழில் குறிப்பிடுகிற நேருவுக்கு, அகிம்சை மீதான பிடிப்பு ஏற்படக் காரணமானது இதுவே.

போஸ் தன்னுடைய இருபத்தி மூன்றாவது வயதில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபொழுது, காந்தியைப் பார்க்க லண்டனில் இருந்து பம்பாய் வந்த நாளிலேயே சென்றார். ‘எப்படி ஒத்துழையாமை இயக்கம் நடைபெறும், வரிக் கொடாமை எப்படி விடுதலை பெற்றுத்தரும், எப்படி இதனால் ஒரே வருடத்தில் விடுதலை கிடைக்கும்’ என்று கேள்விகளை வீசினார். முதல் கேள்வியைத் தவிர மற்ற கேள்விகளுக்குக் காந்தியின் பதில்கள் அவருக்குத் திருப்தி தரவில்லை. காந்தியின் அறிவுரையின் பேரில் அவர் கொல்கத்தாவில் சந்தித்த சித்தரஞ்சன் தாஸ் தான் அவருக்கு மேலும் ஈர்ப்பைத் தருகிறவராக இருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அங்கமாக வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணித்தபொழுது, கொல்கத்தாவில் நடந்த புறக்கணிப்புப் போராட்டத்தை, போஸ் தலைமையேற்று நடத்தினார். அப்போராட்டம் வெற்றி பெற்றது.

அலகாபாத்திலும், ஐக்கிய மாகாணத்திலும் போராட்டத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் நேரு ஈடுபட்டார். அந்நியக் கடை எதிர்ப்பை கான்பூர், அலகாபாத், லக்னோ என்று பல நகர்களில் முன்னெடுத்தார். போஸ், நேரு என்று பலரும் கைது செய்யப்பட்ட சூழலில், வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிப்பதை காங்கிரஸ் கைவிட்டால் அனைத்து கைதிகளையும் விடுவிப்பதாகவும், வட்ட மேசை மாநாட்டை நடத்தி இந்தியாவின் வருங்கால அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கலாம் என்றும் ஆங்கிலேய அரசு பேரம் பேசியது. சித்தரஞ்சன் தாஸ் இதை ஏற்க வேண்டும் என்று கருதினார். காந்தியோ இப்படிச் சமரசம் தேவையில்லை என நிராகரித்தார். போஸ்,  காந்தி மிகப்பெரும் தவறு செய்துவிட்டதாகக் கருதினார்.

செளரி சௌரா சம்பவத்தில் 21 காவலர்கள், மக்களால் அடக்குமுறை தாங்காமல் கொல்லப்பட்டபொழுது, யாரையும் கேட்காமல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ரத்து செய்தது… போஸ், நேரு இருவரையும் கொதிக்கச் செய்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் இணைந்து ஆரம்பித்து இருந்த சுயராஜ்யக்கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதனைப் போஸ் ஆதரிக்க, நேருவோ அதிலிருந்து ஒதுங்கி நின்றார். கொல்கத்தா நகர மேயர் ஆனதும் சித்தரஞ்சன் தாஸ் தலைமை செயல் அதிகாரியாக நேதாஜியை நியமித்தார். எண்ணற்ற முஸ்லீம்கள் நகரசபையில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள், அதைக் காந்தியும் வரவேற்றார்.

ஆனாலும், இரண்டு உறுத்தல்கள் இந்த ஆட்சிக்காலத்தில் இருந்தன. ரஜத் ரே அவர்களின் ‘Urban roots of Indian nationalism: pressure groups and conflict of interests in calcutta city politics, 1875-1939’ என்ற நூல் இவற்றை விரிவாகப் பேசுகிறது. சுயராஜ்ய ஆட்சியில் 12,75,000 ரூபாய் அளவுக்கான ஒப்பந்தம் மெஸ்ஸர்ஸ் கர் நிறுவனத்துக்குத் தரப்பட்டது. பதிலுக்கு 75,000 ரூபாய் கட்சி நிதியாக சுயராஜ்யக் கட்சிக்குத் தரப்பட்டது. கூடவே, அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்துக்குப் போய்விட்டு வரும் வழிச்செலவுக்கான சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் 63 பேருக்கான செலவுத்தொகை 3,600 ரூபாயை அதே நிறுவனம் கவனித்துக்கொண்டது. இவை எதற்கும் போஸ் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. அவருக்கு இவை முழுமையாகத் தெரியாது என்று சந்தேகத்தின் பலனை தரலாம். அடுத்தது இன்னமும் சிக்கலானது. போஸின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு B.N.சஸ்மல் எனும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் போட்டியிட்டார். அவரைத் தேர்தலில் தோற்கடிக்கச் சுயராஜ்ய கட்சியினர், அவரின் ஜாதியைச் சொல்லி வசை பரப்பி பிரசாரம் செய்தார்கள். போஸ் இதைக்குறித்து மூச்சு விடவில்லை. வெற்றிக்கான பாதையில் இவையெல்லாம் சகஜம் என்று இருந்திருக்கலாம்.

போஸ் போல்ஷ்விக் பிரசாரக்காரர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, ஆங்கிலேய அரசு கைதுசெய்து பர்மா சிறையில் அடைத்தது. சித்தரஞ்சன் தாஸ் இந்தக் காலத்தில் உடல்நலக்குறைவால் இறந்து போயிருந்தார். பர்மாவில் துர்கா பூஜை கொண்டாட அரசு வசதிகள் செய்துதரவில்லை  என்று பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் போஸ். பதினெட்டு மாதங்கள் சிறைத்தண்டனை முடிந்த பிறகு, அலகாபாத் நகரசபையின் தலைவரானார் நேரு. அங்கே ஒரு அதிகாரியை தவறாக வாய்மொழி உத்தரவில் ராஜினாமா செய்யச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்டுத் தன்னைச் சபை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

1927-ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய நேரு, அடுத்தாண்டு நடந்த மெட்ராஸ் காங்கிரஸ் கூட்டத்தில் ‘இந்திய மக்களின் இலக்குப் பூரணச் சுதந்திரம்.’ என்று தீர்மானம் போடவைத்தார். காந்தி முதலிய பிற தலைவர்கள் டொமினியன் அந்தஸ்தை தற்போதைக்கு போராடி பெற்றால் போதும் என்று நம்பினர். ஆனால், நேரு இப்படித் தீர்மானம் கொண்டு வந்தபொழுது செயற்குழுவின் உறுப்பினரான காந்தி, அதன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ‘இத்தீர்மானம் ஒரு சோககரமான நிகழ்வு’ எனச் சொல்ல, நேரு, ‘நிறையப் பேரின் ஆதரவு என்னுடைய தீர்மானத்துக்கு உள்ளது. காந்தியின் தலைமை தயக்கமும், செயல்திறன் அற்றதாகவும் உள்ளது.’ என்று குறிப்பிட்டார். ‘இந்த மோதலை பொதுவெளியில் வெளிப்படுத்துங்கள்!’ என்று நேருவிடம் காந்தி சொல்ல, கலங்கிப்போனார் நேரு. ‘நான் தவறுகள் செய்கிற குழந்தையாக இருந்தாலும் உங்களின் அரசியல் குழந்தைதானே?’ என்று கேட்டு இணக்கமானார்.

போஸ், நேரு இருவரும் இந்த மெட்ராஸ் கூட்டத்தில்தான் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ஆக்கப்பட்டார்கள். டொமினியன் அந்தஸ்தை நோக்கி நகர்வதாகக் காங்கிரஸ் கட்சித் தீர்மானம் போட்டது நேருவுக்கு அதிர்ச்சி தந்தது. போஸோ, ‘கட்சியில் இடதுசாரிகளின் கை ஓங்கியிருப்பதே மகிழ்ச்சிகரமானது. நேரு தன்னைச் சோசியலிஸ்ட் என்று அழைத்துக்கொண்டது மகிழ்ச்சிகரமானது. இது இடதுசாரிகளின் கரத்தை கட்சிக்குள் வலுப்படுத்தி உள்ளது..’ என்றார். இருவருமே டொமினியன் அந்தஸ்து என்கிற அறிவிப்பு பிடிக்கவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகக் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு மகிழ்ச்சி தருவதை விட, எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு இந்திய விடுதலை லீகை ஆரம்பிக்கலாம் எனக் கூடிப் பேசி முடிவு செய்தார்கள்.

ஒரே ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாமல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷனுக்கு எதிரான போரட்டத்தை, லக்னோவில் ஐம்பாதாயிரம் நபர்கள் கொண்ட குழுவை முன்னடத்தி நேரு சாதித்தார். காவல் துறை அவர் மீது தாக்குதலை நிகழ்த்தியது. வங்கத்தில் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தை போஸ் முன்னின்று நடத்தினார். அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தைப் போஸ் முன்னெடுத்தார். அது முற்றிலும் பலனைத் தராது என்பது காந்தியின் கருத்து.

அடுத்து போஸ் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்குகொண்டார். கம்யூனிஸ்ட்களின் சதி என்று அரசால் முத்திரை குத்தப்பட்டு, பல பேர் குற்றஞ்சாட்டப்பட்ட அவ்வழக்கில் நேருவும், போஸும் இணைந்து செயல்பட்டார்கள். குற்றவாளிகள் என்று அரசால் கூறப்பட்டவர்களுக்காக இருவரும் ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். ஆனாலும், இடதுசாரிகள் இவர்கள் இருவரையும் பெரிய இடத்தில் வைக்கவில்லை.

கொல்கத்தாவில் 1928-ல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மோதிலால் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டொமினியன் அந்தஸ்து என்பதையே மூத்த தலைவர்கள் வலியுறுத்த, போஸ் அதை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்தார். காந்தியை முப்பத்தி ஒரு வயது இளைஞர் ஒருவர் எதிர்க்கிற மாயம் அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. நேருவும் போஸ் பக்கம் நியாயம் இருப்பதாக உணர்ந்து அவரை ஆதரித்தார். ‘தலைவர்கள் மீது அன்பு, மரியாதை, நேசம் ஆகியவை கொண்டிருப்பதும், கொண்ட கொள்கைக்கு மதிப்பு தருவதும் வெவ்வேறு!’ என்று சூடாகத் தன்னுடைய தீர்மான உரையை முடித்தார். தீர்மானம் 973-1350 என்கிற வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நேதாஜி எனும் வீரர் !


கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார்.

மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,”ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !” என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அதில் நான்காம் இடம் பெற்ற போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு கீழே வேலை பார்க்க விருப்பமில்லை என்பது ஒரு புறம் இன்னொரு  புறம் ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருந்தது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசபந்து சித்தரஞ்சன் தாஸை சந்தித்தார். அவரின் முதன்மை சீடரானார். கல்கத்தாவின் மேயராக சித்தரஞ்சன் தாஸ் ஆனதும் போஸ் அதன் தலைமை நிர்வாக அலுவலராக கலக்கி எடுத்தார்.

சித்தரஞ்சன் தாஸின் மறைவுக்கு பின்னர் சுயராஜ்ய கட்சி வங்கத்தில் யுகந்தார் மற்றும் அனுஷிலன் என்கிற இரண்டு புரட்சிகர அமைப்புகளாக பிரிந்து கொண்டன. அதில் நேதாஜி யுகந்தார் அமைப்பில் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தார். டே என்கிற ஆங்கிலேய அதிகாரி சார்லஸ் டேகர்ட் எனும் கொடுமைக்கார காவல்துறை கமிஷனருக்கு பதிலாக தவறுதலாக கொல்லப்பட போஸ் முதலிய பலர் கைது செய்யப்பட்டார்கள். அவரை நாடு கடத்தியது ஆங்கிலேய அரசு. உடல்நிலை சரியில்லாமல் போகவே பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் போஸ்.

சைமன் கமிஷனில் இந்தியர் ஒருவரும் இல்லாமல் போனதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட பல்வேறு ஊர்களுக்கு போஸ் மற்றும் ஜவகர்லால் நேரு பயணித்தார்கள். இளைஞர்களின் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.

ஜவகர்லால் நேரு காங்கிரசின் ஆங்கிலேய அரசு டொமினியன் அந்தஸ்து கொடுத்தால் போதும் என்கிற கோரிக்கையை முழு சுதந்திரம் என்று ஆக்கவேண்டும் என வலியுறுத்தினார். அதை போஸ் ஆதரித்தார்.   உப்பு சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். அப்பொழுது காந்தியடிகள் இர்வினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு போராட்டத்தை நிறுத்தியதும்,பகத் சிங் தூக்கு தண்டனை விவகாரத்தில் இன்னமும் முனைப்பாக காந்தி செயலாற்றி காப்பற்றியிருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஐரோப்பாவில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “காந்தி அரசியல் தலைவராக தோல்வியடைந்து விட்டார் ; தீவிரப்போக்கு கொண்ட புதிய சித்தாந்தம்,வழிமுறைகள் கொண்ட அமைப்பாக காங்கிரஸ் புதிய தலைவரோடு எழ வேண்டும் !” என்று குறித்தார்.

1938 ஆம் வருடம் போஸ் காங்கிரசின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ” எல்லாமும் வேண்டும் ; இல்லை எதுவுமே வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை !” என்று பதவியேற்றதும் முழக்கமிட்டார் அவர். அவருக்கு நேதாஜி என்கிற பட்டத்தை சாந்தி நிகேதனில் விழா எடுத்து தாகூர் வழங்கினார். நேதாஜி என்றால் வணங்கத்தகுந்த தலைவர் என்று அர்த்தம். அடுத்த வருடம் சிக்கல்கள் அவருக்கு காத்திருந்தன.

காந்தி நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தினார். போஸ் தேர்தலில் தமிழக காங்கிரசாரின் பெருத்த ஆதரவோடு  1,580-1,377 என்கிற விகிதத்தில் வென்றார் ! “சீதாராமையாவின் தோல்வி அவருடையது என்பதை விட என்னுடையது என்பதே சரியாக இருக்கும் !” என்று காந்தி குறித்தார். போஸ் பூரண விடுதலையை நோக்கி நாம் நகர் வேண்டும் ,இன்னமும் தீவிரமாக இயங்க வேண்டும் என்று சொன்னார். அப்பொழுது தேர்தலில் நின்று ஆட்சிக்கு வருவதில் பிற தலைவர்கள் முனைப்பாக இருப்பதை பார்த்து அவர்களை எல்லாம் வலதுசாரிகள் என்று போஸ் குறித்தார். “நீங்கள் ஒரு இடதுசாரி தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்ப மறுக்கிறீர்கள் ! உங்களுக்கும் அரசுக்கும் இடையேயான சமரசத்தில் நான் முள் போல இருப்பேன் என்று கருதுகிறீர்கள் !” என்றார். போஸின் நெருங்கிய நண்பரான நேரு கூட இப்படி பொதுவாக வலதுசாரிகள் என்று குறித்ததற்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்து கடிதம் எழுதினார்.

ஜி.பி.பந்த் பழைய செயற்குழுவின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது என்று தீர்மானத்தை கொண்டு வந்தார். அது பெருத்த ஆதரவோடு வெற்றி பெற்றது. ஆனால்,காந்தி  போஸ் விரும்புகிற செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றார். போஸ் ,”காந்தியார் போராட்டத்துக்கு தலைமை தாங்கட்டும் ! ஆனால்,இடதுசாரிகள் மற்றும் நான் வகுத்திருக்கும் சித்தாந்தம் மற்றும் வழிமுறைகளை அவர் கைக்கொள்ளட்டும் !” என கோரினார்.

காந்தி போஸ் தலைமையேற்று அவரின் வழிமுறையில் போராட்டத்தை நடத்தட்டும் என்று அறிவிக்க அதற்கு காங்கிரஸ் கட்சியில் ஆதரவில்லாத சூழல் உண்டானது. போஸ் வெறுத்துப்போய் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை துவங்கினார். அனைத்திந்திய போராட்டதத்துக்கு அனைவரும் வாருங்கள் என்று அவர் குரல் கொடுக்க கட்சியை விட்டு அவரை நீக்கினார்கள்.

போஸ் மனம் நொந்து போனார். வேறு வழியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவரை அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது.  சத்தமேயில்லாமல் தப்பிப்போனார். அவரின் வீட்டை அரசு ஏலம் விட்டதும் அதை யாருமே ஏலம் எடுக்க முன்வராததும் தனி அத்தியாயம். பெஷாவர் நகருக்குள் நுழைந்து அங்கிருந்து ஆப்கானுக்குள் நுழைந்தார். ரஷ்யாவின் வழியாக இத்தாலி போகலாம் என்று திட்டமிட்டு இருந்த போஸ் ஹிட்லர் அழைக்கிறார் என்பதை அறிந்து அவரை சந்திக்க மாஸ்கோவில் இருந்து ஜெர்மனி போய் சேர்ந்தார். எழுபத்தி ஒரு நாட்களில் அவர் செய்த இந்த சாகசத்தை ‘Great Escape ‘  என்று ஆச்சரியத்தோடு பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஹிட்லர் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆள தகுதியற்றவர்கள் என்றார். அதற்கு போஸ் ஆட்சேபத்தை பதிவு செய்தார். ஹிட்லர் போஸுக்கு ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரில் உதவுவதாக உத்தரவாதம் தந்தார், ஆனால்,எந்த உதவியும் கிட்டாமல் போனது.

ஜப்பான் போனார் நேதாஜி. ராஷ் பிஹாரி போஸ் உருவாக்கி செயலற்று போயிருந்த இந்திய தேசிய ராணுவத்துக்கு உயிர் தந்தார். போரில் பிடிக்கப்பட்ட இந்திய வீரர்களை கொண்டு படையை கட்டமைத்தார். பெண்களையும் போர்ப்படையில் இணைத்துக்கொண்டார்.

“ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் “என்று முழங்கினார். அக்டோபர் இருபத்தி ஒன்றில் சுதந்திர இந்தியாவுக்கான அறிவிப்பை சிங்கப்பூரில் வெளியிட்டார் போஸ். அங்கே இருந்து வானொலியில் ,”தேசப்பிதா காந்தியடிகளிடம் எங்களின் போராட்டத்துக்கு ஆசீர்வாதம் கோருகிறேன் !” என்று பண்போடு சொன்னார். காந்தி போஸ் அவர்களை ,”தேசபக்தர்களுள் இளவரசர் !” என்று பூரித்தார். டிசம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி இந்திய தேசிய அரசின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்தி கொண்டார். தேசியக்கொடியை ஏற்றினார். அவரை ஜெர்மனி, ஜப்பான், சீனா, இத்தாலி நாடுகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தாமான் மற்றும் நிகோபார் தீவுகள் இவர் பொறுப்பில் விடப்பட்டதும் அவற்றுக்கு ‘ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் ‘ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயரிட்டார்.

பர்மாவில் இருந்து மொய்ராங் என்கிற மணிப்பூரின் பகுதியை இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றியது. நாகலாந்து அடுத்து வீழ்ந்தது. தென்மேற்கு பருவ மழை போரின் போக்கை திருப்பியது. தகவல் துண்டிப்பு,ஒழுங்காக ஆயுதங்கள் வந்து சேராமை எல்லாம் தோல்வியை நோக்கி படையை தள்ளியது. போஸ் ஜப்பானின் உதவியோடு மீண்டு வந்து போராடலாம் என்று முடிவு செய்து கொண்டு சிங்கப்பூர் வரை சென்று அங்கிருந்து சைகோன் போனார். சைகோனில் இருந்து மன்ச்சூரியா நோக்கி இருவர் மட்டும் போகக்கூடிய குண்டு வீச்சு விமானத்தில் தோழர் , தோழர் ஹபீப்புடன்  ஏறினார். தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. பத்துக்கும் மேற்பட்ட கமிஷன்கள் வந்தும் அவரின் மரணம் குறித்த மர்மம் அப்படியே இருக்கிறது.

நேதாஜிக்கு சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உண்டு என்பது ஒரு பரவலான வாதம். அவரை ஹிட்லர் இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரி என்று அழைத்த பொழுது அதை கடுமையாக ஆட்சேபித்தார் அவர். ஆங் சானின் விடுதலைக்காக போராடிய புரட்சி படைகளை ஒடுக்க ஜப்பான் உதவி கேட்ட பொழுது கூலிப்படையாக செயல்படாது இந்திய தேசிய ராணுவம் என்று மறுத்த போஸ் ஜப்பானின் பிரதமர் இந்தியாவின் விடுதலைக்கு பின்னர் போஸ் எல்லாமுமாக இருப்பார் என்கிற வாதத்தையும் நிராகரித்தார்.

“ஒரு தனி மனிதன் ஒரு சிந்தனைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்யலாம். ஆனால்,அவன் இறப்புக்கு பின்னர் அந்த சிந்தனை பல்லாயிரம் உயிர்களில் மீண்டும் மறுபிறப்பெடுக்கும். இப்படித்தான் பரிணாமத்தின் சக்கரம் நகர்கிறது ; ஒரு தேசத்தின் சிந்தனையும்,கனவுகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன !” என்று முழங்கிய அசல் வீரர் போஸ் இந்தியர்களிடையே வீர எழுச்சியையும்,தன்னம்பிக்கையும் விதைத்து அடிமையின் உடம்பில் வலிமைகள் ஏற்றினார் அவர் என்றால் அது மிகையில்லை.