அவர் ஒரு அற்புதம்-பிராங்க் சினாட்ரா !


வாழ்க்கை அடித்து நொறுக்குகிறதா ? எல்லாமே உங்களுக்கு எதிராக இருப்பதாக தோன்றுகிறதா ? பிராங்க் சினாட்ராவின் வாழ்க்கை கதை உங்களை நிச்சயம் உத்வேகப்படுத்தும். சிசிலியில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்திருந்த இவரின் பெற்றோர் இவருக்கு பரிசளித்தது கண்ணீர்,வறுமை,சோகம் மட்டுமே. தீயணைப்பு துறையில் இருந்த அப்பா வீட்டு பக்கம் வந்து இவர் பார்த்ததே இல்லை. அம்மாவோ சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்யும் மையத்தை நடத்தி வந்தார். அடிக்கடி அவர் ஜெயிலுக்கு போக தனிமை மட்டுமே இவருக்கு கிடைத்தது.

பள்ளியில் படிப்பே ஏறவில்லை ; மிகப்பெரிய ரவுடி என்கிற பட்டம் தான் வந்து சேர்ந்தது. ஐம்பது நாட்கள் கூட மொத்தமாக பள்ளிப்பக்கம் ஒதுங்காத அவர் செவிவழியாக கேட்ட இசைக்கோர்வைகளால் ஈர்க்கப்பட்டு பாட வந்தார் அவர். அவரின் குரல் இனிமையாக இல்லாமல் கரடு முரடாக இருந்தாலும் அதற்கென்று ரசிகர்கள் உண்டாகிப்போனார்கள். இசைக்குறிப்புகளை வாசிக்கவே முடியாது என்றாலும் அவர் பாடிய பாடல்கள் பல லட்சம் பேரை கட்டிப்போட்டன.

இசை என்பது மகிழ்விக்க மட்டுமில்லை என்று உறுதியாக உணர்ந்திருந்த
சினாட்ரா தன்னுடைய பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்டு,சுரண்டப்பட்ட கறுப்பின மக்களுக்காக பாடினார். ஒரு குறும்படத்தில் அவர்களின் வலிகளை சொல்லி அவர்களை ஏற்றுக்கொண்டு ஒருங்கிணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிற வகையில் நடித்தார். கோல்டன் க்ளோப் விருது வந்து சேர்ந்தது.

இரண்டு வருடங்கள் நடித்துவிட்டு இசைத்துறை பக்கம் வந்தால் கண்டுகொள்ள கூட ஆளில்லை. மேடையேறி பாடினால் ரசிகர்கள் பழைய சினாட்ரா இல்லை இவர் என்று கிளம்பினார்கள். தொண்டை நரம்பு அறுந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.டாக்டர்கள் சிகிச்சை செய்து ஒய்வு எடுக்க சொன்னார்கள். வருத்தம் தாங்காமல் கேஸ் அடுப்பை திறந்து கார்பன் மோனாக்சைட் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொள்ள முயன்று அதுவும் முடியாமல் கதறி அழுதார். சிலர் மட்டுமே நம்பிக்கை தர ஃபிரம் ஹியர் டு எட்டர்னிட்டி’ என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் கிடைத்தது.

உள்ளுக்குள் எல்லா மௌனத்தையும் தேக்கி இசையாக ஒரு வாய்ப்பு கிடைத்ததும் கொட்டினார் அவர். மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. அவர் பாடிய பாடல்கள் மீண்டும் ஹிட் ஆகின. கறுப்பின மக்களுக்காக அவர் பாடிய பாடலைக்கேட்டு மார்ட்டின் லூதர் கிங் கண்ணீர் விட்டு அழுதார். கிராமி விருதுகளை அள்ளிக்கொடுத்தார்கள். எழுபத்தி ஏழு வயதில் அவர் பாடிய பாடல்களைக்கூட இளைஞர்கள் கொண்டாடினார்கள். பத்துக்கும் மேற்பட்ட கிராமி விருதுகள்,மூன்று ஆஸ்கர்,மூன்று கோல்டன் க்ளோப் விருதுகளை பெற்ற அவர் அத்தனை சிக்கல்களில் இருந்து மீண்டு சாதித்தது பற்றி கேட்ட பொழுது ,”நான் பாடுகிற பொழுது நேர்மையாக இருந்தேன் ; நம்பினேன் ! மாயம் நிகழ்ந்தது !” என்றார்.