வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்


ஷேக் முஜூபூர் ரஹ்மான் பிறந்த தினமின்று .(மார்ச் பதினேழு ( மொழி சார்ந்த ஒரு அரசியல் ஒரு நாட்டை உருவாக்கிய வரலாறு இவரின் வங்கதேசத்துக்கு உண்டு .அடிப்படையில் ஜின்னாவின் பாகிஸ்தான் முஸ்லீம் லீகில் இணைந்து இருந்தவர் சுக்ரவர்த்தி .அவர் வங்கத்தில் பிரிவினையின் பொழுது நடந்த படுகொலைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய ஊழல் பேர்வழி ;காந்தியுடன் இணைந்து நடந்து அமைதியை அவரே நிலைநாட்ட வேண்டிவந்தது வலி
மிகுந்த வரலாறு .அவர் ஜின்னாவின் மறைவுக்கு பின் கிழக்கு பாகிஸ்தானின் வங்க மொழி பேசும் மக்களுக்கு உருவான அவாமி முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தார் .கிழக்கு பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்ததால் வங்கத்தை
இரண்டாக பிளந்து உருவாக்கப்பட்டது .எனினும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஆகாத பிள்ளை போலவே அப்பகுதி நடத்தப்பட்டது ;அப்பகுதியில் வங்க மொழியே
பரவலாக பேசப்பட்டது ;உருது மொழி பேசிய மேற்கு பாகிஸ்தான் அன்பர்கள் இவர்களை மட்டமாக பார்த்தனர் 

தேசிய மொழியாகவே உருது மட்டுமே முதலில்
இருந்தது .1956 இல் போராட்டத்துக்கு பின்னே தான் வங்காளம் தேசிய மொழி ஆனது .இதற்கிடையே சுக்ரவர்த்தி மறைந்து ,அவாமி முஸ்லீம் லீக் கட்சிக்கு முஜுபூர் ரஹ்மான் தலைவர் ஆனார் .பாதி பரப்பளவு கொண்டிருந்த பொழுதும் வரி,விவசாயம்,தொழிற்துறை எல்லாவற்றிலும் மிகக்குறைந்த உதவிகளே கிழக்கு
பாகிஸ்தானுக்கு செய்யப்பட்டது .

க்ளைமாக்ஸ் காட்சி 1970-71
பொதுத்தேர்தலில் வந்தது .மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 160 கிழக்கு பாகிஸ்தான் தொகுதிகளையும் அவாமி லீக் வென்றது ;பூட்டோவின் கட்சி மேற்கு பாகிஸ்தானில் என்பத்தி ஒரு தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது .பஞ்சம்
வேறு ஏற்பட்டு மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள் .ஆனால், பூட்டோ ஆட்சியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என அவர் அடம் பிடித்தார் ;ஜனாதிபதி யாஹியா கானும் அதையே சொல்ல கடுப்பானார் ரஹ்மான் .

போராட்டங்கள் கிழக்கு பாகிஸ்தானில் வலுத்தன ;இவர் கைது செய்யப்பட்டார் .ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தார்கள் மக்கள் ;ராணுவம் புகுந்தது -பலர் கொல்லப்பட்டனர் . இந்தியாவிற்குள் பலர் அகதிகளாக நுழைந்தனர் ;இந்திய ராணுவம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் முக்தி வாகினி படைகள் இணைந்து பாகிஸ்தானை தோற்கடித்தன ,பூட்டோ பாகிஸ்தானின் ஜனாதிபதியாகி இருந்தார் .முதலில் மறுத்தாலும் பின் ரஹ்மானை விடுதலை செய்தார் .வங்கதேசம் உருவானது ;அமர்
சோனா பங்களா எனும் தாகூரின் கீதம் அவர்களின் தேசிய கீதம் ஆனது வங்கத்தின் ஜனாதிபதியானார் இவர் .

வங்கதேசம் தனி நாடாக உருவானதும் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் விடுதலை
செய்யப்பட்டார் ;அந்நாட்டின் பிரதமர் ஆனார் இவர் ;படிப்படியாக சட்டத்தை திருத்தி நாட்டின் நிரந்தர தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார் ;ஒரு கட்சி
ஆட்சிமுறையை கொண்டு வந்து நான்கே நான்கு அரசு இதழ்களை தவிர மற்ற எல்லா இதழ்களையும் தடை செய்தார் .சாதாரண மக்களிடம் இருக்கும் ஆயுதங்களை
கைப்பற்ற ஜட்டியோ ராக்கி வாஹினி என்கிற படைப்பிரிவை உருவாக்கினர் .அது மக்களை பல துன்பத்துக்கு உள்ளாக்கியது

.ராணுவ வீரர்கள் இவரைக்கொல்ல திட்டமிட்டார்கள் ;இது ஏற்கனவே 1971 போரில் தன் போர்க்கப்பலை அனுப்பி மிரட்டியும் வங்கதேசம் உருவானதால் இவரை தீர்த்து கட்ட அமெரிக்காவின் சி ஐ ஏ போட்ட திட்டம் என சொல்வோரும் உள்ளனர் .எதுவாகினும் இவரைக்கொல்வதற்கு பல மேஜர்கள் தயாரானார்கள் .நான்கு பிரிவாக கொலைகாரர்கள் பிரிந்து கொண்டார்கள் .ஆகஸ்ட் 15,1975 அன்று இவரின் வீட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் படையை உள்ளே விட்டனர் ; இவரின் மகன் வீட்டின் வரவேற்பறையில் கொல்லப்பட்டார் ;முஜிபை வீடு மாடியில் பார்த்தார்கள் ,”பதவியை விட்டு இறங்குங்கள் !”என காலக்கெடு கொடுத்தார்கள்
.

ராணுவ உளவுத்துறை தலைவர் ஜமீலை போனில் அழைத்தார் இவர் ;அவர் வந்ததும் அவர் வீரர்களை வெளியேற சொன்னார் ;முடியாது என்பதை துப்பாக்கி மொழியில் சொன்னார்கள் ;அவரும் கொல்லப்பட்டார் .”என் மகனோடு தான் வருவேன்” என இவர் சொல்லிய பொழுதே இவரை சுட்டுகொன்றார்கள் .பிற குடும்ப உறுப்பினர்களும் குழுக்களால் கொல்லபட்டார்கள் .இவரின் இரண்டு மகள்கள் மட்டும் மேற்கு ஜெர்மனியில் இருந்ததால் தப்பித்தார்கள் .படைகளையும் தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தனர் ;முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டார்கள் .இவரின் அமைச்சரவை சக முஸ்தாக் அஹமத் பதவியை ஏற்றுகொண்டார் ; கொன்றவர்கள் முக்கியமான பதவி உயர்வுகளை பெற்றனர் . பின் இவர்களும் இன்னொரு ராணுவ புரட்சியில் பதவி இழந்தார்கள் .இழப்பெதிர் காப்பு சட்டம் போட்டு இவர்கள் மீது வழக்கு போடாமல் முஸ்டாக் காப்பாற்றினார்

பின் 1996 இல் முஜீபின் மகளே ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது ;வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் கொண்டுவரப்பட்டார்கள் .20 பேரில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .;பல்வேறு இழுபறிகள் உண்டாகின ;எல்லாம் முடிந்து 2010 இல் முஜிபுரின் ரத்தத்தை நிலத்துக்கு வழங்கியவர்களின் தலையை தூக்கு கயிறு தழுவிக்கொண்டது .

பெனாசிர் பூட்டோ-கிழக்கின் மகள் கொல்லப்பட்ட நாள் இன்று


பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்ட தினம் டிசம்பர் இருபத்தி ஏழு . பூட்டோ எனும் பாகிஸ்தான் பிரதமரின் மகள் அவர் .தந்தை வளர்த்த கிடா ஜியா உல் ஹக் அவரை கொலைக்குற்றம் தூக்கில் போட்டு அவரின் குடும்பத்தினரையும் வீட்டு காவலில் வைத்து இருந்தான் .பல நாடுகளின் வற்புறுத்தலுக்கு பின் 1984 இல் அவர்களை விடுதலை செய்தான் .

1988 இல் நடந்த தேர்தலில் பெனசிர் பூட்டோ வென்றார் .அதன் மூலம் ஒரு இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார் .ஜியா ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டங்கள் அவரை பாடுபடுத்தின .ஜனாதிபதியின் அதிகாரம் அளவற்று இருந்தது . அதை குறைக்க சட்டமியற்ற முயல அவரின் ஆட்சியை அவர் கலைத்தார் . நவாஸ் ஷரிப் ஆட்சிக்கு வந்தார் ;அவரும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முயல அவரின் ஆட்சியையும் கவிழ்ந்தது .ஆனால் இரண்டு பேரும் கைகோர்த்து ஜனாதிபதியையும் சேர்த்து பதவியை விட்டு இறக்கினார்கள் .

மீண்டும் ஜெயித்து பூட்டோ பதவிக்கு வந்தார் ;இந்த முறை லெஹாரி என அரசியல் வாடை இல்லாத நபரை ஜனாதிபதி ஆக்கினார் ;மூன்று ஆண்டுகள் ஓடின .கணவர் ,குடும்பம் என ஊழல் தலைவிரித்து ஆடியது ;எதிரிகளை அடக்க அதிகாரங்களை கட்டவிழ்த்து விட்டார் . ஆட்சியை லெஹாரி கலைத்தார் .பின் பல்வேறு ஊழல் வழக்குகள் நாட்டை விட்டு அவரை வெளியேற செய்தன .

முஷாரப் நவாஸ் அவர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதும் நாடு திரும்பினார் .கராச்சியில் அவரை கொல்ல முயன்ற பொழுது நூலிழையில் தப்பினார் .பின் ராவல்பிண்டியில் பேச வந்தார் ;அவர் மீது துப்பாக்கியால் சுட்டார்கள் ;தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது .அவரின் மண்டை காரின் மேல்பகுதியில் மோதி ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் மரணமடைந்தார் என பின் வந்த விசாரணைகள் சொல்லின .ஒழுங்காக பாதுகாப்பு கொடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என முணுமுணுப்பு எழுந்தது .தேர்தல் வந்தது ;இவரின் மரணம் தந்த அலை அவர் கட்சியை ஜெயிக்க வைத்தது

பூட்டோவின் பெருங்கதை இது !


ஜுல்பிகர் அலி பூட்டோ தன்னுடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்த தினம் இன்று. பூட்டோ அரசியல் களத்தில் அடித்து ஆடியவர் ; அந்த அதிரடியின் இறுதியில் தானே மரணத்தை தழுவியது எதிர்பாராத திருப்பம். பூட்டோவின் தந்தை ஜூனாகாதின் திவானாக இருந்தவர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் பாகிஸ்தானுக்கு அப்பகுதியை தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு முதலில் வென்றார் அவர். பின்னர் இந்திய ராணுவம் நுழைந்து ஓட்டெடுப்பு நடத்தி இந்தியாவின் பகுதியானது அது என்பது தனிக்கதைபூட்டோ அமெரிக்காவில் படித்துவிட்டு,இங்கிலாந்தில் பாரீஸ்டர் பட்டம் பெற்று நாடு திரும்பினார். அயுப் கான் ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை பிடித்ததும் இவரை இளவயதிலேயே அமைச்சர் ஆக்கினார். சீன்ப்போரில் இந்தியா தோற்றதும் சீனாவை நோக்கி நட்ப்புக்கரம் நீட்டினார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பூட்டோ. காஷ்மீரில் பிடித்திருந்த பகுதிகள் சிலவற்றை சீனாவுக்கு வார்த்துவிட்டு இந்தியாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு தந்திரமாக அழைத்தார்.

இந்தியா குஜராத்தின் கட்ச் மீதான எல்லை சிக்கலில் அடக்கி வாசித்ததை கண்டதும் ஆபரேசன் கிப்ரல்டார் என்கிற பெயரில் பாய்ந்தார். பாகிஸ்தானின் பகுதிகளுக்குள் புகுந்து இந்திய ராணுவம் கலக்கி எடுத்தது. சாஸ்திரி தாஸ்கண்டுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்போனார். கோசிஜின்,அயுப் மற்றும் பூட்டோ சேர்ந்து கொண்டு இந்தியா போர்க்கைதிகளை விடுவிக்க வேண்டும் கைப்பற்றிய கார்கில் உள்ளிட்ட பகுதிகளை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி சாதித்தார்கள் பூட்டோவின் ராஜதந்திரம் தான் இதற்கு முக்கிய காரணம் என்றே சொல்லவேண்டும். அடுத்து அயுப் கானுடன் சிக்கல் ஏற்பட்டு பதவியை துறந்தார் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை தொடங்கினார். யஹியா கான் அதிபராக ஆகி இருந்தார்.

தேர்தல் வந்தது . முஜுபிர் ரஹ்மான் தலைமையில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் திரண்டிருந்தார்கள். வங்க மொழி பேசிய அவர்களை இரண்டாம் தர குடிமக்கள் போலவே அரசு நடத்தி வந்திருந்தது. கூடவே பதவிகள்,வரிப்பகிர்வு,வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஒன்றுமே இல்லாமல் ஆக்கி இருந்தார்கள். தேர்தலில் பெரும்பான்மையை அள்ளி இருந்தது ரஹ்மானின் கட்சி. ஆட்சியை அமைக்க கூடாது அவர்கள் என்று முஷ்டி முறுக்கினார் பூட்டோ. ஏற்கனவே ஒரு போருக்கு காரணமான அவர் இந்த முறையும் அப்படி ஒரு சூழலுக்கு நாட்டை நகர்த்தினார். எண்ணற்ற மக்கள் கிழக்கு பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்கள்.. லட்சக்கனக்கனோர் அகதியாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். போர் மேகம் எழுந்து வங்கதேசம் உருவானது. அப்பொழுதும் சிறையில் இருந்த ரஹ்மானை சந்தித்து இன்னமும் போர் முடியவில்லை ஐம்பதாயிரம் டாலர் மற்றும் ஜனாதிபதி பதவி தருவதாக பேரம் பேசினார் பூட்டோ.

இவரே போருக்கு பின்னர் நாட்டின் தலைமைபொறுப்புக்கு வந்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வந்து பிரதமருக்கு அதிகாரங்களை அதிகப்படுத்தினார் அவர். மீண்டும் தன்னுடைய தந்திரத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை இந்தியாவிடம் இருந்து மீட்டுக்கொண்டு போய் இந்திராவிடம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார். அணு ஆயுத திட்டத்தை வேகமாக முன்னெடுத்து “புல்லை தின்றாவது இந்தியாவைப்போல அணு குண்டு வெடிப்போம் !” என்று சபதம் செய்தார். ஆனால் அகமதியா மதப்பிரிவை இஸ்லாமில் சேராது என்று சொன்னதில் அப்துஸ் சலாம் நாட்டைவிட்டு வெளியேறியது ஒரு பின்னடைவாக இருந்தது. சீனாவின் உதவியில் அக்கனவு நிஜமானது. பல்வேறு துறைகளை தேசியமயமாக்கி இருந்தார் பூட்டோ

மீண்டும் தேர்தல் வந்த பொழுது எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலில் நின்றன. இருந்தாலும் வென்றார் இவர் ; தேர்தலே மோசடி என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாடு கொதிநிலையில் இருந்தது. ஜியா உல் ஹக் எனும் தளபதி ஆட்சியை கைப்பற்றினார். அகமது ராசா கஸ்துரி எனும் அரசியல் எதிரியை தீர்த்துக்கட்ட முயற்சி செய்து அவரின் குடும்பத்தை பூட்டோ கொன்றார் என குற்றச்சாட்டை வைத்து கோர்ட்டுக்கு போனது வழக்கு. ஆதாரங்கள் இல்லை என்று தள்ளுபடி செய்த நீதிபதி அனுப்பப்பட்டு மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தூக்கு விதிக்கப்பட்டது இவருக்கு.

சுப்ரீம் கோர்ட் வரை போயும் இவரை காப்பாற்ற முடியவில்லை. ஜியாவிடம் கருணை மனுக்கள் ஆயிரக்கணக்கில் இவருக்காக குவிந்தும் மரண வாசலை தொட்டார் இவர். “நான் அந்த தவறை செய்யவில்லை என்று என் இறைவனுக்கு தெரியும் !” என்று சொன்ன பூட்டோ அதற்கு முன் செய்த தவறுகளைப்பற்றி என்ன இறைவன் நினைத்திருப்பார் என்று உள்ளுக்குள் நினைத்திருக்கலாம் !

இதெல்லாம் இந்திய ராஜதந்திரம் !


உங்களுக்கு இந்திய அரசாங்கத்தை பிடிக்கவே பிடிக்காதா ? இந்தியாவை அமெரிக்க கைக்கூலி என்று திட்டுபவரா ? இந்தியாவுக்கு ராஜதந்திரம் என்று உண்மையில் இருக்கிறதா ? உங்களின் அத்தனை கேள்விகளுக்கும் இந்தியாவின் ராஜதந்திர அரசியலின் வரலாற்றோடு கொஞ்சம் சீனா,வியட்நாம்,கொரியா நாடுகளின் வரலாறு என்று அசரவைக்கும் நூல் தான் . இதை எழுதியவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவர் என்பது நூலின் ஆழத்திலும்,வாதங்களிலும் தெளிவாக தெரிகிறது

தொடர்ந்து இந்தியா என்பது பிற நாடுகளை எதிர்க்காத வருபவர்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை உள்ள தேசம் என்றே இன்றைய சூழலிலும் சொல்லி வருகிறோம். புஷ்யமித்ர சுங்கா கிரேக்க மன்னனை வென்றிருக்கிறார். சோழ மன்னர்கள் கடல் கடந்து நாடுகளை வென்றிருக்கிறார்கள். கனிஷ்கர் இந்தியாவை விட வெளிப்பகுதிகளில் தான் அதிக பகுதிகளை வென்றிருந்தார். சாணக்கியர நேரான யுத்தம்,ராஜதந்திர யுத்தம்,சூதின் மூலம் வெல்லுதல்,அமைதி வழியின் மூலம் சாதித்தல் என்று வழிகாட்டுகிறார். அவருக்கு இணையாக வள்ளுவரும் வரையறைகள் வகுத்திருக்கிறார். அதை ஆசிரியர் நூலில் குறிக்கிறார்

ஆங்கிலேயர்கள் துரோகத்தின் மூலம் சண்டையே போடாமல் பிளாசி யுத்தத்தை லஞ்சம்,துரோகம் ஆகியவற்றின் மூலம் வெல்வதை சொல்லித்தருகிறார்கள். நேருவை அமெரிக்காவுடன் சேர்ந்திருக்கலாம் என்று இன்றைக்கு இயல்பாக சொல்லிவிடுகிறோம். நேரு காலத்தில் அமெரிக்காவிடம் சோற்றுக்கு வழியில்லை கோதுமை கொடுங்கள் என்று விடுதலை காலத்தில் கேட்ட பொழுது கொடுக்க மறுத்து வேடிக்கை பார்த்திருக்கிறது அமெரிக்கா. பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை என்று வேறு வேலை பார்த்து வைக்க இந்தியாவை அலைக்கழித்திருக்கிறது.

சீனாவின் பகுதியாக ஒரு இரண்டு வருடங்களை தவிர எப்பொழுதும் இல்லாத திபெத்தை சீனா தாக்கிய பொழுது நேரு அதைக்கண்டுகொள்ளாமல் இருந்து வரலாற்று பிழை செய்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் கொல்லப்பட்டு ஐ.நா. வில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் வந்த பொழுது அமைதி வழியில் தீர்க்கும் என்று அபத்தமாக பேசி சொதப்பியது இந்தியா. திபெத்தில் போர் நடந்த பொழுது சீன ராணுவத்துக்கு அரிசி,பெட்ரோல் இந்திய எல்லையில் இருந்து போனது வேறு நடந்தது !

சீனாவும்,நாமும் சகோதரர்கள் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் நேரு. ஆங்கிலேயர் காலத்தில் கட்டாயப்படுத்தி போடப்பட்டு இருந்த எல்லையை மாற்றிக்கொள்ளலாம் என்று சீனா கூப்பிட்டது. என்றாலும் நேரு அசட்டையாகவே இருந்தார். சீனாவை சகோதரர் என்று அவர்தான் அழைத்தார். அங்கே இருந்த இதழ்கள் அவரை அமெரிக்காவின் கையாள் என்று பல காலம் சொல்லிக்கொண்டே இருந்தன. நேருவை திட்டி எழுத மாவோ அனுமதி வேறு கொடுத்திருக்கிறார். இந்தியாவோ சீனாவுக்கு ஐ.நாவின் அங்கீகாரம் வேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு இருந்தது. இருபது கிலோமீட்டர் உள்ளே போய் ஆசை காட்டினார்கள் சீனர்கள்,பாய்ந்து போன இந்தியாவை துவம்சம் செய்தது சீனா.

அப்பொழுதைய சூழலில் இந்தியாவை காஷ்மீர் சிக்கலில் தீர்வு காணச்சொல்லி வலியுறுத்தினார்கள் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தலைவர்கள். பூட்டோ சீனாவுக்கு காஷ்மீரின் பகுதியை தாரைவார்த்து விட்டு “வாங்க பேசலாம் !” என்று கிண்டலடித்தார். இந்தியா அசராமல் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது. மீண்டும் நடந்த போரில் காஷ்மீரில் மூன்று முக்கியப்பகுதிகளை வென்ற பொழுதும் சோவியத் ரஷ்யாவின் வற்புறுத்தல் காரணமாக அதை இழந்துவிட்டு கிளம்பி வந்திருக்கிறோம். சீனாவோ ஜப்பானுடன் அமைதி என்றதும் பிரதமரை பதவியை விட்டு விலக்கினால் மட்டுமே பேசுவோம் என்கிற அளவுக்கு தன்னிலையில் தெளிவாக இருந்திருக்கிறது. நாம் அமைதியை காப்பதில் நாமே முன்னணியில் இருக்க வேண்டும் என்று சறுக்கி உள்ளோம்

மீண்டும் இந்திரா காலத்திலும் போர் நிறுத்தக்கோட்டை கட்டுப்பாட்டு கோட்டாக ஆக்குவதாக உறுதி மட்டும் கொடுத்துவிட்டு வங்கப்போரில் சரணடைந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை அள்ளிக்கொண்டு போன பிறகு பூட்டோ பெப்பே காட்டி இருக்கிறார். அதிகம் நம்புவதும்,ஜனநாயகத்தை பாகிஸ்தானில் காப்பதும் நம்முடைய கடமை என்று கண்ணீர் வடித்து காலியாகி உள்ளோம்

இலங்கை சிக்கலில் நேராக இயங்கிகொண்டு இருந்த இந்திராவுக்கு ஜி.பார்த்தசாரதி எனும் அறிவார்ந்த அதிகாரியின் வழிகாட்டுதல் இருந்தது. ராஜீவ் அவரை தூக்கி விட்டு ரொமேஷ் பண்டாரியை கொண்டு வந்தார். பண்டாரி எந்த அளவுக்கு விவரம் என்றால் ,”இந்தக்கடிதத்தை செல்வநாயகம் அவர்களிடம் கொடுங்கள் !” ,”சார் ! அவர் இறந்து இருபது வருஷமாச்சே !” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழ மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் உதவப்போன அதே இந்தியப்படையை ஜெயவர்த்தனா கேட்டார் என்பதற்காக ராணுவ தலைமை,வெளியுறவு அதிகாரிகள்,அமைச்சரவை என்று யாரையும் கேட்காமல் ராஜீவ் அவசர அவசரமாக களமிறக்கி பெரிய தவறுக்கு வழிவகுத்தார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் அவர்களின் எதிர் குழுக்களிடம் ராவால் தரப்பட்டது இன்னமும் நிலையை சிக்கலாக்கியது. இதே போலத்தான் ஆக்ரா சந்திப்பிலும் வெளியுறவு அதிகாரிகளிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் இயங்கி தோல்வியில் முடிய வழிவகுத்து இருக்கிறார்கள்.

சீனாவின் முக்கிய ஆளுமை இந்தியாவுக்கு வருகிற பொழுதெல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசாக தொழில்நுட்பம்,அணுகுண்டு,ஆயுதங்கள் என்று அனுப்பி வைக்கிறது சீனா. வியட்நாமுக்கு ஊக்கம் தருதல்,அமெரிக்காவுடன் இன்னமும் நெருக்கமானாலும் நம் தேசத்தவரின் நலனை காத்தல்,பாகிஸ்தானுடன் இன்னமும் தைரியமான போக்கு,ஒசாமாவை அமெரிக்கா போட்டதைப்போல தாவூத்தை இந்தியா போட்டுத்தள்ளுதல் என்று நூல் தரும் ஐடியாக்கள் சுவாரசியமானவை

ஆசிரியர் : K.P.ஃபேபியன்
மொத்த பக்கங்கள் : 260
விலை : 595