கண்டுபிடித்தது எப்படி ?


கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ் அவர்கள் எழுதிய கண்டுபிடித்தது எப்படி பாகம் 2 ஐ வாசித்து முடித்தேன். மின்னியல் துறையின் முன்னோடிகள் பற்றி இத்தனை சுவாரசியமான,எளிமையான நூல் இதற்கு முன் நான் வாசித்ததில்லை. எழுதப்பட்டிருப்பது அறிவியல் நூல் தான் என்றாலும் அதன் ஊடாக தன்னம்பிக்கை,அடக்கம் ததும்பும் சம்பவங்கள்,ஓயாத உழைப்பை வலியுறுத்தும் சம்பவங்கள் இயல்பாக நூலில் காணக்கிடைக்கின்றன. நூலில் இருந்து சில சுவையான தகவல்கள் இங்கே :

மிகவும் சிக்கலான மின் அமைப்புகள் எல்லாவற்றையும் எளிய முறையில் வரைந்து காட்டிவிடும் சர்க்யூட்டை உலகுக்கு தந்தவர் கிர்ச்சாஃப். விண்கலமே ஆனாலும் அது நேர்த்தியாக இயங்குமா என்பதை பகுத்தறிய உதவுகிற அற்புதம் அவர் உருவாக்கிய அந்த கட்டமைப்பு. 

மின்னழுத்தத்தை கண்டுபிடித்த வோல்ட்டா தவளைகளில் மின்சாரம் ஓடுகிறது என்று சொன்ன கால்வானோவின் கூற்றை பொய்யாக்கும் பொருட்டு களமிறங்கி தனி பேட்டரி உருவாக்கினார். மின்சாரம் சார்ந்த ஆய்வுப்பணிகள் மீத்தேன் வாயு மற்றும் இக்னிஷன் உண்டாவதற்கான விதிகள் ஆகியவற்றை அவரால் கண்டறிய முடிந்திருக்கிறது. 
மின்னழுத்தம்,மின்னெதிர்ப்பு,மின் ஓட்டம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை சமன்பாட்டை மிகக்குறைவான ஆய்வுக்கருவிகளோடு எட்டாண்டு கால உழைப்பில் உருவாக்கித்தந்திருக்கிறார் ஓம். அவரின் கண்டுபிடிப்பை முதலில் அறிவியல் உலகம் அவரால் கணித ரீதியாக நிரூபிக்க அவரால் முடியாமல் போனதால் ஏற்க மறுத்தாலும் பின்னர் மிக உயரிய கோப்லே விருதை வழங்கியது. 

கூலூம்ப் காந்த ஊசியைக்கொண்டு வெற்றிகரமாக பயணிப்பதை உறுதிசெய்த அதே கணம்,காந்த சக்தியும் மின்சக்தியும் வெவ்வேறு இல்லை என்று அடித்து ஆரம்பகாலங்களிலேயே சொன்னவர். லாப்லஸ் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர். அவரின் பங்களிப்பில் வானியல் கோட்பாடுகள் இயக்கங்கள் எல்லாவற்றையும் கணிதத்தை கொண்டு விளக்கும் கணித வானியல் பிரிவு உண்டானது ; காலத்தை சார்ந்து இயங்கும் இயக்கங்களை பகுத்தறிவது சாத்தியமானது. கருந்துளை பற்றி முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே குறித்தவர் அவர் ! 
வெகுகால உழைப்புக்கு பின்னர் காந்தவியலும்,மின்னியலும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்தவை என்றாய்ந்து அறிந்த ஆம்பியர் அதை உலகுக்கு சொல்லிவிட்டு ஆனாலும் எனக்கு முன்னரே இதைப்பற்றி குறிப்பிட்ட பாரடேவுக்கு தான் இதைக்கண்டறிந்த பெருமை சேரும் என்று அறிவித்து வியக்க வைத்தார். அவர் தந்ததே மின்இயக்கவியல் துறை. 

புத்தக பைண்டிங் செய்யும் வேலையில் வறுமையால் ஈடுபட்டு அங்கே வரும் நூல்களை படித்து அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பாரடே மின் பகுப்பை உலகுக்கு தந்தார். மின் பகுப்பு கோட்பாடுகள் தந்தார். மின்னோட்டத்தை சுற்றி காந்த அலைகள் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதை பாரடே நிரூபிக்க எடுத்துக்கொண்ட ஆண்டுகள் அதிகமில்லை-இருபத்தி ஏழு ! உலகின் முதல் ஜெனரேட்டரும் அவர் தந்ததே.

மூன்று அடிப்படை வண்ணங்கள கொண்டு புகைப்படத்தில் எண்ணற்ற வண்ணங்களை கொண்டுவர முடியும் என்று நிரூபித்த மாக்ஸ்வெல் சனிக்கோள் வளையம் தூசால் ஆனது என்று பெரிதாக அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே சொன்னார் இவர். 
மின் காந்த அலைகளையும்,அவற்றின் பண்புகளையும் அறுதியிட்டு கண்டறிந்த ஹெர்ட்ஸ் அதைக்கொண்டு மேக்ஸ்வெல் சொன்ன சமன்பாடுகளில் போதிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தார். என்றாலும் ,தன்னுடைய உழைப்பை ஓரமாக வைத்துவிட்டு ,”இதெல்லாம் மேக்ஸ்வெல் எனும் மாமேதையின் சாதனைகள். அதை மீண்டும் இவை நிரூபிக்கின்றன. நான் செய்திருப்பது ஒரு சிறு துளியே !” என்று தன்னடக்கமாக சொன்னார். 

மாறுமின்சாரத்தை வெகுதூரம் கொண்டு போகிற அற்புதத்தை மின்னழுத்த மாற்றத்தின் மூலம் சாதித்த டெஸ்லா வெகுகாலத்துக்கு முன்னரே எக்ஸ் ரேவை கண்டுபிடித்து இருந்தார். இறக்கைகள் அற்ற மின் காற்றாடிகள்,ரேடார்,வானொலி என்று சகலமும் கண்டறிந்த டெஸ்லா தன்னை எங்கேயும் முன்னிறுத்தி கொள்ளாமல் பொருள் ரீதியாக இயங்காமல் அறிவியல் மக்களுக்கே என்பதில் உறுதியாக இருந்தார். 

அணுக்கள் வாயுக்களில் உள்ளன என்றும் வாயுக்களின் செயல்பாட்டை பற்றி போல்ட்ஸ்மேன் மாறா எண்ணை தந்த போல்ட்ஸ்மேனின் ஆய்வுகள் அவர் காலத்தில் நிராகரிக்கப்பட்டன. அவற்றை கேலி பேசினார்கள். தற்கொலை முயற்சிகளில் பல சமயம் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும் வெகுகாலம் கழித்து அவர் சொன்னவை அத்தனையும் சரி எட்ன்று அறிவியல் உலகம் ஆய்ந்து கொண்டாடியது. 

திபெத்திய சாது பியாசி சிர்ரஸ் என்கிற நட்சத்திரம் வானில் தோன்றுவதையும் அது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பது சார்ந்தும் குறிப்புகளை தொலைநோக்கியை கொண்டு கண்டு உலகுக்கு சொல்லிவந்தார். காஸ் எனும் கணிதத்தின் உச்சபட்ச மேதை வானை நோக்காமல் வெறும் சமன்பாடுகளின் மூலமே காணாமல் போன அந்த நட்ச்சத்திரம் இங்கே தான் தோன்றும் என்று துல்லியமாக சொன்ன பொழுது சாது வியந்து எப்படி மேலே பார்க்காமலே உங்களால் சொல்ல முடிந்தது என்று கேட்ட பொழுது த தன்னுடைய தலையை தடவிக்காண்பித்து எல்லாம் இங்கே இருக்கிறது என்றாராம் ! காஸ் எத்தனையோ மகத்தான பங்களிப்புகளை உலகுக்கு தந்திருந்தாலும் எதையும் தன் யாருக்கும் சொல்லித்தராமல் போகவே அறிவியல் உலகில் அவருக்கு பின் அவரின் எண்ணங்களை,வழிமுறைகளை கடத்த பெரிய வழி இல்லாமல் போனது ! 

சிலிகான்,செலெனியம்,சிரியம்,லித்தியம்,வெனடியம் கண்டறியா காரணமான பெர்செலியஸ் எல்லா தனிமங்களும் ஹைட்ரஜனால் ஆனவை என்கிற நம்பிக்கையை தகர்த்தார். தனிமங்களுக்கு குறியீடுகள் தந்ததும் அவரே. கரிம பொருட்களை தனித்து பிரித்து காண்பித்தார் அவர். புரதம் என்கிற சொல்லை தந்ததும் அவரே, 
சாராயம் காய்ச்ச தந்தை கட்டாயப்படுத்தி கொண்டிருந்த காலத்தில் வெப்பம் சார்ந்த அற்புதமான ஆய்வுகளை செய்தவர் ஜூல். மின்சாரம் பாய்கிற பொழுது கருவி சூடாகிறது என்பதை சமன்பாடுகளோடு தந்த மேதை அவர். 

ஒலியின் திசைவேகம்,மைக்ரோபோன்,மின்சாரம் பாயும் வேகம்,ஒளியியலின் அதிகபட்ச பங்களிப்பான ஸ்பெக்ட்ரோமீட்டர்,பைனாகுலர் எல்லாமும் தந்த மாமேதை வீட்ஸ்டோன் ! அவரின் தந்தி பதியும் முறையையே மோர்ஸ் மேலும் மேம்படுத்தினார்.

பைபோகல் லென்ஸ்,சிறுநீர் கழிக்க துன்பப்படும் மக்களுக்கு உதவும் கேதீட்டர்,கப்பலின் நீர்புகா அறைகள்,இடிதாங்கி என்று எண்ணற்றவை தந்தவர் பெஞ்சமின் பிராங்கிளின். 
அலுமினியம் தங்கத்துக்கும் மேலே விலைமதிப்பு கொண்டிருந்த காலத்தில் முறையில் கிரியோலைட்-அலுமினியம் ப்ளோரைட் கலவையுடன் அலுமினியம் ஆக்சைட் தூளை கலந்து கரைத்து மின்பகுப்புக்கு உள்ளாக்கி அலுமினியம் உற்பத்தியை பலமடங்கு அதிகப்படுத்தி மலிவு விலை பொருளாக அதை மாற்றிய சாதனை சார்லஸ் மார்ட்டின் ஹால் அவர்களுக்கு உரியது ! 

விகடன் பிரசுரம் 
விலை : ரூபாய் எழுபது (இரண்டாம் பதிப்பு )

இடிதாங்கி தந்த பெஞ்சமின் பிராங்க்ளின் !


பெஞ்சமின் பிராங்க்ளின் -ஆங்கிலேயரின் ஆளுகையில் அமெரிக்கா இருந்த காலத்தில் எளிமையான பதினேழு பிள்ளைகள் கொண்ட சோப்பு தயாரிப்பவரின் வீட்டில் பத்தாவது பிள்ளையாக பிறந்தார் இவர் .இவரின் அப்பா இவரை பாதிரியார் ஆக்க விரும்பினார் ;இவரின் குடும்பச்சூழல் இவரை ஓராண்டிற்கு மேல் பள்ளியில் படிக்க விடவில்லை 

அதனால் இவரின் அண்ணனின் அச்சுக்கூடத்தில் இணைந்து வேலை பார்த்து தானே படித்து கற்றுக்கொண்டார் .அண்ணனின் பத்திர்க்கையில் பெண்களின் உரிமைகளை ஆதரித்து ஏகத்துக்கும் புனைப்பெயரில் எழுதினார் ; அண்ணன் நடத்திய பத்திரிகையில் பல பேரை பெஞ்சமின் பிராங்க்ளின் விமர்சித்ததால் அண்ணன் சிறை போய் மீண்டு வந்தார் ;இவர் தான் அதற்கு காரணம் என இவரை கொடுமைப்படுத்த இவர் வீட்டை விட்டு ஓடிப்போனார் . 

எங்கெங்கோ அலைந்து,பல துன்பங்களுக்கு பிறகு தானே ஒரு பத்திரிகையை தொடங்கினார், முதன்முதலில் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியது இவர் தான் ,கேலிச்சித்திரங்களையும் சேர்த்துக்கொண்டார் . முதன்முதலில் அமெரிக்காவில் தீ விபத்துகளில் இருந்து மக்களை காக்க ஒரு நிறுவனத்தை தொடக்கினார் ; காப்பீடு என்பதை செயல்படுத்தியவரும் இவரே .

கொட்டுகிற மழையில் பட்டம் விட்ட பொழுது ,ஒரு அதிர்வை அவர் உடம்பில் உணர்ந்தார் . பட்டம் விடுகிற பொழுது அதிலிருந்த உலோக கம்பி மழையில் நனையும் பொழுது மின்னலில் இருந்து வரும் மின்சாரத்தை கடத்துகிறது என்று உணர்ந்தார்; அதை வைத்து கட்டிடங்களை இடியில் இருந்து இடிதாங்கிகளின் மூலம் காக்கலாம் எனவும் ,கூர்மையான முனைகள் இருந்தால் இடியின் பொழுது கடத்தப்படும் மின்சாரத்தை அந்த கூர்மையான கம்பியே வாங்கிக்கொள்ளும் என சொன்னார் . அதனால் பல கட்டிடங்கள் இடி தாக்குதலில் இருந்து தப்பித்தன .

முதன்முதலில் சந்தா கட்டி நூலகத்தில் சேரும் முறையை கொண்டு வந்ததும் இவரே ; இவரின் கண்டுபிடிப்பை வைத்தே மால்துசின் பிரபலமான மக்கள் தொகை கொள்கை உருவானது. அமெரிக்காவின் விடுதலை பிரகடனத்தை ஜெபர்சன் உடன் இணைந்து தயாரித்தது இவரே .எத்தனையோ கண்டுப்பிடிப்புகளை அவர் கண்டறிந்திருந்தாலும் எதற்கும் காப்புரிமை பெற்றதில்லை -எல்லாமும் மக்களுக்கு போய் சேரவேண்டும் அதற்கு என் காப்புரிமைகள் தடையாக இருக்க கூடாது என பெருந்தன்மையாக சொன்னார்.அத்தகு மாமனிதரின் பிறந்த நாள் இன்று