ரம்மியமான ராணி !


Queen The Film பார்த்தேன். திரையரங்குக்கு போய் பார்க்கும் முதல் இந்தி படம் என்பதால் சப் டைட்டிலோடு பார்க்க இன்றைக்கு போனேன். திடீரென்று காதலனின் முடிவால் நின்று போகிறது திருமணம். நாயகி ஹனிமூனுக்காக போகவேண்டிய இடங்களுக்கு தனியே போவதற்கு முடிவு செய்து கொண்டு கிளம்புகிறாள். சாலையைக்கூட ஒழுங்காக கடக்க தெரியாத,கட்டுப்பெட்டியாகவே இருந்து பழகிவிட்ட ராணி எனும் நாயகி பாரீஸ்,ஆம்ஸ்ட்ர்டாம் என்று நகரங்களில் சுற்றித்திரிகிற பொழுது அவள் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறாள். அவர்கள் தருகிற உணர்வுகள்,ஏற்படுகிற அனுபவங்கள்,உறவுகள் எல்லாமும் அவளை மாற்றிப்போடுகின்றன. இதுதான் கதையின் அவுட்லைன். 

விஜயலட்சுமி எனும் பாரீஸ் ஹோட்டலில் பணியாற்றும் பெண்ணுடன் தான் முதலில் ராணிக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அங்கே ஒரு பார்ட்டியில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டதும் அழுதும்,சிரித்தும் தன்னுடைய மனதில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டுகிற காட்சி அத்தனை கனமானது. அப்பொழுது சிரித்தாலும் “எல்லாவற்றையும் மதித்து மதித்தே நான் பழக்கப்பட்டு விட்டேன் ! தெரியுமா உனக்கு !” என்று ராணி கேட்கிற தருணம் பல்வேறு இந்தியப்பெண்களின் குரலாகவே ஒலிக்கிறது. அப்பொழுது சோகத்தோடு ஆடி முடிக்கும் ராணி ஊர் சுற்றப்போகிற இடங்களிலும் கசந்த காதல் நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. பாரீஸ் தோழியின் வாழ்க்கை முறை,அவளின் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வாழ்க்கை எல்லாமும் ராணியை கொஞ்சமாக இதப்படுத்துகின்றன. 

அங்கே இருந்து ஆம்ஸ்ட்ர்டாம் நகருக்கு போகிற ராணிக்கு மூன்று ஆண்கள் தங்கியிருக்கிற அறையில் தான் இடம் கிடைக்கிறது. முதல் நாள் வெளியே படுத்திருந்தாலும் அதற்கு பின்னர் நட்பான அவர்களோடு நெருங்கி விடுகிறாள். ஜப்பானிய டாக்காவும்,ரஷ்ய ஒலேக்சாண்டரும் அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் சிரிப்பு நமக்கும்,ராணிக்கும் கூட ஒட்டிக்கொள்கிறது. அந்த டாக்காவுக்குள் இருக்கும் சோகம் பின்னர் தெரிகிற பொழுது அவனை கட்டியணைத்து தேறுதல் சொல்லும் காட்சியில் பெண்ணின் அணைப்பு என்றால் காமம் மட்டுமே என்று எண்ணுபவர்கள் நிச்சயம் தங்களின் பார்வையை மாற்றிக்கொள்வார்கள். 

இத்தாலிய உணவுக்காரரின் உணவு பிடிக்கவில்லை என்று நேராக ராணி சொன்னதும் அவர் பணத்தை திருப்பித்தந்த பின்னர் சில கணங்களில் சந்திக்கிறார்கள். அவர் மீது சின்னதாக ஒரு க்ரஷ் உண்டாகிறது ராணிக்கு. அதன் இறுதித்தருணத்தில் என்ன நடந்தது என்பது மென்மையான ஹைக்கூ. அவள் கலந்து கொள்ளும் சமையல் போட்டியில் அவளின் பானி பூரி உண்டாகும் ரணகளங்களும் ரசிக்க வைக்கின்றன. அதற்கு பின்னர் காதலன் தேடிக்கொண்டு அங்கேயே வந்து சேர்கிறான். அவனை அனுப்பிவிட்டு மூன்று ஆண் நண்பர்களுடனான ராக் ஷோவை முடித்துவிட்டு எந்த கனமும் இல்லாமல் வாய்விட்டு ஆட்டம் போட்டு விடைபெறும் ராணி ஊர் திரும்புகிறாள். 

பெண்கள் சமைத்து விட்டு,சீரியல் பார்த்துவிட்டு,கிசுகிசு பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற பார்வை அவள் மீது மீண்டும் திணிக்கப்பட முயற்சி நடக்கிற பொழுது மோதிரத்தை கழட்டி காதலனின் கையில் கொடுத்துவிட்டு ஒரு மெல்லிய அணைப்பு மற்றும் புன்னகையோடு நன்றி மற்றும் ஸாரி சொல்லி இயல்பாக ராணி விடை பெற்றுவிட்டு வருகிற பொழுது கண்கள் நனைந்து போகிறது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இதைப்பார்த்த பின்னர் பெண்களின் உலகைப்பற்றிய பார்வை ஓரளவுக்காவது மாறும். (படத்தில் சிற்சில குறைகளும் உண்டு ! ஆனாலும்,அதை எழுத விருப்பமில்லை ).