புரட்சி நாயகன் மால்கம் எக்ஸ் !


அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பெயர்களில் மார்டின் லூதர் கிங் அமைதி வழியில் போராடினால் வன்முறைக்கு திருப்பி அடித்தலே சரியான
பதிலடி என்று முழங்கி நின்றவர் மால்கம் எக்ஸ். மால்கம் லிட்டில் என்று பெயர் கொண்ட அவர் கறுப்பின குடும்பத்தில் பிறந்தார். அவரின் வீட்டை விட்டு அவர் வயிற்றில் இருக்கும் பொழுதே எப்படி நிறவெறியர்களால் வெளியேற்றப்பட்டார் என்பதை அம்மாவிடம் கதைகளாக கேட்டு கொதித்தார்.

மார்க்ஸ் கார்வே எனும் கறுப்பின உரிமைகளுக்கு போராடிய ஆளுமைக்கு ஆதரவாக அவரின் தந்தை இருந்தார். வெள்ளையின வெறியர் குழுவான ப்ளாக் லிஜியன்
அமைப்பை எதிர்த்து அவர் போராடினார் ; பேசினார். ஒரு நாள் அவர் படுகொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். பள்ளியில் டாப்பராக இருந்த மால்கம் எக்ஸ் வக்கீல் ஆகலாம் என்று கண்கள் விரிய தன்னுடைய கனவை ஆசிரியரிடம் சொன்ன
பொழுது ,”கேவலமான கருப்பினம் நீங்கள் ! அதெல்லாம் உங்களால் சாதிக்கக் முடியாது !” என்று கேவலப்படுத்தி அனுப்பினார். அதற்கு பின் அம்மாவும்
மனநல காப்பகம் பக்கம் ஒதுங்கிவிட,போதைப்பொருள் கடத்தல்,வேசைகளுடன் தொடர்பு,தெருச்சண்டைகள் என்று கழிந்தது அவரின் இளமைக்காலம்.

பின்னர் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பில் இணைந்தார். இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறினார். கறுப்பின பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தங்களின் பெயரை சூடுமாறு செய்திருந்தார்கள்
வெள்ளையர்கள். அந்த அடையாளத்தை துறந்து தங்களுடைய ஆப்ரிக்க அடையாளத்தை காட்டும் பொருட்டு தன்னுடைய லிட்டில் என்கிற பிற்சேர்க்கை பெயரை எக்ஸ்
என்று மாற்றிக்கொண்டார். எங்கெல்லாம் கறுப்பின மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் ஆயுதம் மூலம் பதில் சொன்னார் அவர். கறுப்பர்களுக்கு தனி கல்வி,பொருளாதாரம்,வாழ்க்கைமுறை,சமூகம் என்று
பேசினார் இவர். தன்னுடைய மக்களின் உரிமைக்காக பேசினார்.

“அவரால் ஒரு கலவரத்தை ஒரே சொல்லில் தடுக்கவும்,நடத்தவும் முடியும் !” என்று இதழ்கள் எழுதுகிற அளவுக்கு அவரின் தாக்கம் இருந்தது. நேஷன் ஆப்
இஸ்லாம் அமைப்பின் தலைவரே ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவதை அறிந்து
அவருடன் முரண்பட்டார். கென்னடியின் படுகொலையின் பொழுது வினை விதைத்தன் வினை அறுப்பான் என்கிற ரீதியில் இவர் சொன்ன வாசகம் இன்னமும் சிக்கலை
அதிகப்படுத்த நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்புக்கும் இவருக்குமான தொடர்பு முடிவுற்றது. 

“தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது ” என்று உறுதிபட சொன்ன அவரை அமெரிக்காவில் ஐ.நா சபையில் பேச
வந்த பொழுது கறுப்பின மக்களின் பகுதியில் தங்கிய பிடல் காஸ்ட்ரோ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தங்களின் வாக்குகளை தெளிவாக பயன்படுத்த
வேண்டும் என்று வலியுறுத்தி ,”ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் !” என்று முழங்கினார் அவர். ஹஜ் யாத்திரை போய் அங்கே என்னை
என் நிறத்தால் வேறுபடுத்தாமல் சகோதரனாக மதிக்கிறார்கள் என்று மெய்சிலிர்த்தார்

இறுதியில் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த மூவரால் பதினைந்து முறை சுடப்பட்டு அவர் இறந்தார். மார்டின் லூதர் கிங் அதைக்கேட்டு துடித்துப்போனார் ,”இது அப்பட்டமான படுகொலையே நன்றி வேறில்லை !” என்றுகதறி சொன்னார். அவரின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். “யாரும் விடுதலை,சமத்துவம்,நீதி ஆகியவற்றை உனக்கு
தரமுடியாது ! நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் !” என்று முழங்கிய அவரின் நினைவு தினம் மே பத்தொன்பது.

எதிர்த்து நின்ற மார்டின் லூதர் !


பிப்ரவரி 18: ப்ரோட்டஸ்ட்ன்ட் என்கிற பிரிவை உருவாக்கிய மார்டின் லூதர் நினைவு தின சிறப்பு பகிர்வு
 
Posted Date : 08:14 (18/02/2014)Last updated : 08:14 (18/02/2014)

மார்டின் லூதர் எனும் கிறிஸ்துவ மதத்தில் ப்ரோட்டஸ்ட்ன்ட் என்கிற புதிய பிரிவை உருவாக்கிய ஆளுமை நினைவு  நாள் இன்று. இவரும் ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஆக இருந்தவரே. இவர் காலத்தில் போப்பின் வருமானம் மிகப்பெரிய செல்வச்சீமான்களின் வருமானத்தை விட அதிகமாக இருந்தது. இந்த தருணத்தில் இவர் நாட்டில் இருந்து பணம் திரட்டுவதன் மூலம் ரோமில் உள்ள பீட்டர் சதுக்கத்தை கட்டமைக்க போப் ஆள் அனுப்பி வைத்தார்.

பாவங்கள் செய்தவர்கள் பணம் செலுத்தி பாவ மன்னிப்பு கேட்பதன் மூலம் தங்களின் பாவங்களை கழுவி கொள்ளலாம் என போப் சொன்னதை கடுமையாக சாடினார் . அதோடு அதிக பணம் வைத்திருக்கும் போப் எதற்கு ஏழை மக்களின் பணத்தை சுரண்ட வேண்டும் எனக்கேள்வி எழுப்பினார். அதைச்சார்ந்து போராடினார். ஆனால், பணத்தில் கொழுத்திருந்த மதப்பீடங்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

இவர் பிரிந்து சென்று புதியதொரு பிரிவாக ப்ரோட்டஸ்டன்ட் என்கிற பெயரில் தோற்றுவித்தார். இறைவனின் போதனைகள் அடங்கிய பைபிளே மிக உயர்ந்த மற்றும் பின்பற்ற வேண்டிய அம்சம் என்றும் போப்பின் பின் அணிவகுக்க வேண்டியதில்லை என்பது இவரின் முக்கியமான அறிவிப்பு. அத்தோடு நில்லாமல் லத்தீனில் இருந்த பைபிளின் பழைய ஆகமத்தையும்,கிரேக்கத்தில் இருந்த புதிய ஆகமத்தையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து மக்கள் மொழியில் மத கருத்துக்களை பரப்பினார் . ஜெர்மன் மொழியும் இவரின் மதப்பிரிவும் வேகமாக வளர்ந்தன.

விவசாய தொழிலாளர்கள் இவருடைய போதனைகளை முன்னிறுத்தி தங்களின் போராட்டத்துக்கான உத்வேகத்தை பெற்றார்கள். ஆனால்,அவர்களின் போராட்டத்தை நிராகரித்த மார்டின் லூதர் அவர்களின் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதை ஆதரித்தார்.

பாதிரியார்கள் மணந்து கொள்ளக்கூடாது என்கிற விதியை உடைத்து எறிந்து மணந்து கொண்டார் .இவரின் இறுதிகாலத்தில் இவர் யூதர்கள் மீதான எதிர்ப்பை தூண்டி விட்டு அவர்களை நாட்டை விட்டே அனுப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார் என்பது கசப்பான உண்மை ; கிறிஸ்துவை கொல்வதற்கு காரணமானவர்கள் அவர்கள் என்பதை ,அதற்கு முக்கியமான காரணமாக சொன்னார் அவர்களை துரோகிகள் எனவும் அழைத்தார்.