இந்தியாவில் கூட்டணி அரசியல் என்கிற அறிமுக நூலை வாசித்து முடித்தேன். கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலையற்ற ஆட்சியைத் தருகின்றன என்றும், அவை நிர்வாகத்தைச் சீர்குலைக்கின்றன எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நூல் கூட்டணி அரசியலின் நீள,அகலங்களைத் தொட்டுக்காட்டுகிறது.
விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாகவே இருந்தது. அதைவிட்டு ஏழைகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் அன்னியப்பட்டு நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த காந்தி வானவில் கூட்டமைப்பை போலக் காங்கிரசை உருவாக்கினார். பலதரப்பட்டவர்கள் காங்கிரசில் இருந்தபடியே இயங்க முடியும் என்கிற சூழலை விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தது. காந்தி, நேரு ஆகியோர் தேசியம் என்கிற சொல்லாடலை அதிகமாகவோ, அழுத்தியோ சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் ஐரோப்பிய பாணியில் இந்தியா என்கிற தேசத்தை ஒற்றைப்படையான தேசியத்தைக் கொண்டு கட்டமைத்து விடமுடியாது என்கிற புரிதல் இருந்ததே ஆகும்.
இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும் பல்வேறு தரப்பினரின் விருப்பங்கள், கவலைகள், கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் எழுந்தது..
கூட்டாட்சி என்பது வெறுமனே அதிகார அதிகரிப்பு என்பதை மட்டும் இலக்காகக் கொண்டு அமைகின்றனவா, அல்லது கருத்தியல் காரணங்களும் உண்டா என்று இந்திய அளவில் பார்த்தால் சிக்கலான ஒரு பதிலே கிடைக்கிறது. சோசியலிச பாதையில் சென்றதாகச் சொல்லிக்கொண்ட காங்கிரஸ் இடதுசாரிகளோடு தன்னை இணைத்துக் காட்டிக்கொண்டதில்லை என்பதையும், இந்துத்வா என்று கோஷமிட்டாலும் ஆட்சியமைக்கக் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அதனைத் தள்ளிவைக்கப் பாஜக தயங்கியதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இடதுசாரிகள் மட்டும் மேற்கு வங்கத்தில் மார்க்சியம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்திருந்தார்கள் எனலாம்.
ராம் மனோகர் லோகியா தான் காங்கிரசுக்கு எதிரான பலரையும் இணைத்துக் கொள்ளும் கூட்டணியை அமைக்க அடித்தளமிட்டார். எப்படி இடதுசாரிகளான சோசியலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரோடு ஜனசங்கத்தினர் இணைந்து பணியாற்ற முடியும் என்கிற வினா எழுப்பப்பட்ட பொழுது, ‘தீவிர இடதுசாரியான கிருஷ்ண மேனன், தீவிர வலதுசாரியான எஸ்.கே.பாட்டீல் ஆகிய இருவரும் ஒரே காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்ற பொழுது இது ஏன் சாத்தியப்படக்கூடாது?’ என்று அவர் வினவினார்.
லோகியாவின் முயற்சிகள் பலனைத் தந்தன. 67-க்கு பிந்தைய தேர்தல்கள் காங்கிரஸ் பல்வேறு மக்களின் விருப்பங்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் கட்சி என்கிற இடத்தை இழந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டின. அந்தாண்டு மிகவும் மெல்லிய பெரும்பான்மையை மத்தியில் காங்கிரஸ் பெற்றது என்றாலும் ஒன்பது மாநிலங்களில் ஆட்சியை இழந்திருந்தது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த ஆட்சிகள் நிலைக்கவில்லை என்பது தனிக்கதை.
லோகியாவின் அடியொற்றி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆண் பெண் சமத்துவம், நிற, ஜாதி ரீதியான வேறுபாட்டை ஒழித்தல், அழிவைத் தரும் ஆயுதங்கள் எதிர்ப்பு, காலனியாதிக்கம்,. அந்நிய ஆட்சி எதிர்ப்பு முதலிய ஏழு கொள்கைகளைக் கொண்டு சப்தக்ரந்தி என்கிற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலைக்குப் பின்னர்ப் பல்வேறு தரப்பினரும் இந்திரா எதிர்ப்பு என்கிற புள்ளியிலும், ஜனநாயக மீட்பு ஆகியவற்றுக்காகவும் ஜனதா கட்சியின் கீழ் ஒன்றுசேர்ந்தார்கள். ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். ஜனதா கட்சி இரண்டிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்கிற சிக்கலில் ஆட்சியை மொரார்ஜி தேசாய் இழக்க நேரிட்டது.
வி.பி.சிங் காலத்தில் ஒருபுறம் இடதுசாரிகள், இன்னொருபக்கம் பாஜக ஆகிய இருவரும் வெளியில் இருந்து ஆதரவு தர அவர் ஆட்சியமைத்தார். அடுத்துக் காங்கிரஸ் ஆதரவில் தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனார்கள். இந்த இரண்டு ஆட்சிகளும் காங்கிரசின் ஆதரவு விலக்கலால் கவிழ்ந்தன. பல்வேறு கட்சியினரை இணைத்துக் கொண்டு பாஜக தன்னுடைய தீவிர வலதுசாரி முகத்தைத் துறந்து தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் இடதுசாரிகளின் ‘மதவெறி சக்திகளை’ ஆட்சிக்கு வராமல் தடுக்கும் இலக்கால் காங்கிரஸ் ஆட்சிக்கட்டில் ஏறியது. அடுத்தத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணியினர் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்றது நிகழ்ந்தது.
1967 தேர்தலில் தான் எண்ணற்ற கூட்டணி ஆட்சிகள் மாநில அளவில் சாத்தியமானது. தமிழகத்தில் மட்டும் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் கூட்டணி ஆட்சி இங்கே ஏற்படவில்லை. முக்கியமான சில மாநிலங்களில் எப்படிக் கூட்டணி ஆட்சி இயங்கியது என்று காண்பது சுவையாக இருக்கக்கூடும்.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் சிபிஐ(எம்) கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்தார்கள். சிபிஐ, பார்வர்ட் ப்ளாக், புரட்சிகரச் சோசியலிச கட்சி ஆகியவற்றோடு காங்கிரஸ் கட்சியை விட்டு விளங்கி பங்ளா கட்சியைத் துவக்கிய எம்.எல்.ஏக்கள் என்று கலவையான கூட்டணியாக அந்த ஆட்சி இருந்தது. அஜோய் முகர்ஜி தலைமையிலான அரசு சிறப்பான நீர்ப்பாசனம், நிலப்பகிர்வு, கல்லூரிகளில் இடப்பெருக்கம், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தல் என்று பல தளங்களில் சிறப்பாக இயங்கினாலும் எண்ணற்ற உட்கட்சி பூசல்களும், கூட்டணிப் பிளவுகளும் இருந்தன. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிரிந்து போய்ப் பி.சி.கோஷ் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்தார். மூன்றே மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது.
உத்திர பிரதேசம்:
காங்கிரசின் வீழ்ச்சியைச் சோசியலிஸ்ட்கள், ஜனசங்கத்தினர் இங்கே பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், அறுதிப்பெரும்பான்மைக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஒத்துவராதே எனத் தயங்கினாலும் பீகாரில் இடதுசாரிகள், ஜனசங்கம் இணைந்து மகாமாயா பிரசாத் சிங்கை முதல்வர் ஆக்கியதைப் போல உத்திர பிரதேசத்தில் காலம் கனிந்தது.
காங்கிரசை பிளவுபடுத்திக் கொண்டு ஜன் காங்கிரஸ் என்கிற கட்சியைத் துவங்கிய சரண் சிங் அதனோடு ஜனசங்கம், சம்யுக்தா சோசியலிச கட்சி, சுதந்திரா, இடதுசாரிகள், ஜனநாயக கட்சி, சுயேட்சைகள் என்று அனைவரையும் இணைத்து சம்யுக்தா வித்யாக் தளம் என்கிற பெயரில் கூட்டணி அமைத்தார். உத்திர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். கூட்டணி என்பதன் உண்மையான பொருள் இங்கேதான் வெளிப்பட்டது. பிற கட்சியினரையும் ஆட்சியில் இணைத்துக்கொண்டதோடு, அக்கட்சியின் தலைவர்களே யார் அமைச்சராக வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையையும் தந்தார்.
19 அம்ச குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவித்தார்கள். நில வரியை நீக்குவது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், உணவு தானியங்கள், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று பட்டியல் நீண்டது. நில வரியை நீக்க வேண்டும் என்கிற லோகியாவின் அழுதத்தை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று சரண் சிங் ஏற்க மறுத்தார். அதனோடு இந்துத்வா அரசியலை முன்னெடுப்பதாக ஜனசங்கத்தைக் கூட்டணியின் பிறகட்சியினர் விமர்சித்தார்கள். எல்லாமும் முட்டிக்கொண்டு சரண்சிங்கின் ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்தது.
மத்திய பிரதேசம்:
மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில் கூட்டணி ஆட்சிகள் ஏற்பட்டு ஐந்தாண்டை இங்கே நிறைவு செய்தன. முதல் இரண்டும் சம்யுக்தா வித்யாக் தளம் தலைமையிலும், மூன்றாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக அமைந்தது.
ஹரியானா:
இடைநிலை சாதியினர் குறிப்பிடத்தகுந்த சக்தியாக மாறிவருகிறார்கள் என்பதன் அடையாளமாக ஹரியானாவின் அரசியல் போக்கு இருந்தது. பகத் தயாள் சர்மா, ராவ் பிரேந்திர சிங் என்கிற இரு கோஷ்டியாகக் காங்கிரஸ் பிரிந்து கிடந்தது. இருவரும் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள். சர்மா முதல்வராக ஆன அடுத்த நாளே தன்னுடைய ஆதரவாளர்கள் பலர் தோற்க அவரே காரணம் என்று கறுவிக்கொண்டு பதினான்கு எம்.எல்.ஏக்களோடு கட்சியைவிட்டு வெளியேறினார் பிரேந்திர சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தது.
காங்கிரஸ் கட்சியில் ஜாட் வகுப்பை சேர்ந்த பன்சி லால் சர்மாவுக்குப் பதிலாகக் கட்சியின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். பன்சி லால் ஆதரவோடு சர்மா காங்கிரஸ் தலைவராகவாது ஆகலாம் எனப் பார்த்தார். அதற்கும் வழியில்லை எனக் கைவிரித்தார் பன்சிலால். ஆதிக்க ஜாதியினர், இடைநிலை ஜாதியினர் இருவரையும் இணைத்துக் கூட்டணி அமைத்த பன்சிலால் முதல்வர் ஆனார். அவருக்கு ஜனசங்கம் வெளியில் இருந்து ஆதரவு தந்தது.
கேரளா:
கேரளாவில் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஈழவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாயர்கள் என்று நான்கு பிரிவினரும் குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியோடு இருந்தார்கள். சிபிஐ, முஸ்லீம் லீக் ஆகியோரோடு கூட்டணி அமைத்து அறுபத்தி எழில் நம்பூதிர்பாட் ஆட்சி நடத்தினார். கூட்டுக் கலந்தாலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பங்கள், பல்வேறு கட்சிகளின் விருப்பங்கள், சமூகக் குழுக்களின் விருப்பங்கள் மோதிக்கொள்ளச் சிக்கலானது.ஒரு பல்கலையை முஸ்லீம்கள் அதிகமுள்ள கோழிகோடில் முஸ்லீம் லீக் பெற்றதோடு, தனியான மாவட்டமாக முஸ்லீம்கள் அதிகமுள்ள மலப்புரத்தை பெற்றது. இதை அயோக்கியமான அரசியல் என்று சிபிஐ விமர்சித்தது.
நிர்வாகம் என்பதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குச் சீர்கேடும், சண்டையும் ஊழலும் பெருகிற்று. ஊழல்வாதிகளான அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நம்பூதிரிபாட்டுக்கு அழுத்தம் தந்தது முஸ்லீம் லீக். ‘முடியாது, வேண்டுமென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கொள்ளுங்கள்!’ என நம்பூதிரிபாட் சொன்னதைச் செய்து காண்பித்தார்கள் எதிர்க்கட்சிகள். ஏழு கட்சிகளோடு கூட்டணி அமைத்து அடுத்தத் தேர்தலை அவர் சந்தித்தார் என்றாலும் ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த வரலாற்றைக் கொண்டிருந்த உள்ளூர் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்று அசத்தியது.
எண்பதுகளில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே முறைய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் கூட்டணிகள் அமைத்து தேர்தலை கேரளாவில் எதிர்கொண்டன. இன்னுமொரு முக்கியமான விஷயம் எண்பதுகளில் இருந்து மதவாத கட்சி என்று சொல்லி முஸ்லீம் லீகை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது.
இந்த 67-70 வரையிலான காலத்தில் இந்தியாவில் சுமார் எண்ணூறு எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவினார்கள். அவர்களில் 155 பேர் அமைச்சர்களாக ஆனார்கள் என்பது எப்படிப்பட்ட கொதிப்பான அரசியல் களமாக இக்காலம் இருந்தது என்பதைக் காட்டும். எப்படியேனும் பதவியில் இருக்கவேண்டும் என்று தாவிக்கொண்டே இருக்கும் ஆட்களைக் குறிக்க ‘ஆயா ராம், காயா ராம்’ என்கிற நையாண்டி சொல்லாடல் உண்டானது.
மூன்றாவது அணி:
பாஜகவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து அமைத்த மாற்று அணியை மூன்றாவது அணி என்று குறிக்கலாம். எண்பத்தி எட்டில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் தேசிய முன்னணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்தன. இந்த முன்னணி மூன்று படிகளில் வளர்ச்சி அடைந்தது என்கிறார் பிபன் சந்திரா. முதல் கட்டத்தில் இடது, வலது என்று அல்லாமல் ‘சென்டர்’ வகையைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. அதற்குப் பிறகு இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.
பாஜக, இடதுசாரிகளோடு தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டதோடு, பாஜகவோடு எண்பத்தி ஐந்து சதவிகித இடங்களில் நேரடிப் போட்டியை தேசிய முன்னணியினர் தவிர்த்தார்கள். அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனாலும் இடது, வலது என்று இருதரப்பின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, வாராவாரம் இருசாராரையும் சந்தித்து ஆட்சியை நடத்தினார் வி.பி.சிங். பாஜகவை தேசிய முன்னணிக்குள் கொண்டு வராதது, இடதுசாரிகள், பாஜக இரண்டையும் அமைச்சரவையில் சேர்க்காதது ஆகியன வி.பி.சிங் செய்த தவறுகள் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தெரிவித்தார். தேவி லாலின் மகன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுப் பதவி துறக்க அவரும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. சந்திரசேகர் தனக்கு ஆட்சிக்கட்டில் வந்து சேராதா என ஏங்கினார். அத்வானியின் ரத யாத்திரை வி.பி.சிங்கின் ஆட்சியை முடித்துவைத்தது.
வி.பி.சிங் கூட்டணியினர் யாரையும் கலந்தாலோசிக்காமல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார். அதற்குப் பின் வெவ்வேறு கணக்குகள் இருந்தன. ஆதிக்க ஜாதியினரே அதிகாரப் புள்ளிகளாக இருக்கும் காங்கிரஸ், பாஜக இரண்டும் மண்டல் கமிஷனை விரும்பாவிட்டாலும் அப்பட்டமாக எதிர்க்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். இந்துத்வா அரசியலை முன்னெடுத்து சொல்லும் அத்வானியை எதிர்கொள்வது, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அள்ளுவது, கிராமவாசிகள்-நகரவாசிகள் என்கிற அரசியலை கலவரமாக்க முயன்றுகொண்டிருந்த தேவிலாலின் திட்டத்தைப் பிசுபிசுக்க வைப்பது ஆகியவே அக்கணக்குகள்.
மேலும், ஆதிக்க ஜாதியினர் வசமிருக்கும் ஜனநாயக மையங்களின் கட்டுப்பாட்டை நகர்த்தும் பணியைச் செய்யும் காலம் வந்துவிட்டது என்றும் வி.பி.சிங்குக்குத் தெரியும். தேசிய அளவிலான எழுச்சி என்று சொல்லாவிட்டாலும் அது பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் இடைநிலை ஜாதியினரை வலுப்படுத்தியதோடு ஆட்சிப்பீடம் நோக்கி செலுத்தியது. மேலும், தேசிய வளர்ச்சி கவுன்சில், அனைத்து மாநில கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டன.
ஆறு வருடத்துக்குப் பிறகு மீண்டும் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டதாகச் சொல்லிக்கொண்ட ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதிகம் பிரபலமாக இல்லாத தேவ கவுடாவை பிரதமர் ஆக்கியது அக்கூட்டணி. காங்கிரசின் அழுத்தமும் காரணம். இடதுசாரிகள் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்கும் பொருட்டுப் பெரும்பாலும் எதிர்த்துவந்த காங்கிரசுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தந்தார்கள்.
அடுத்தத் தேர்தலில் அதுவரை தன்னோடு கருத்தியல் ரீதியாக ஒத்துப்போன சிவசேனா முதலிய கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்பதில் இருந்து இறங்கி வந்து திமுக, தெலுங்கு தேசம் முதலிய பல்வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்த பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. எந்தச் சிக்கலுமில்லாமல் ஆட்சி நடக்கத் தன்னுடைய தீவிர இந்துத்வ கொள்கைகளை அக்கட்சி ஓரமாக வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் ஒத்துழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய வழிகோலியது.
குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு வருடங்களுக்கு முன்னர்ப் பஞ்ச்மாரியில் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற தன்னுடைய தீர்மானத்தைத் தூக்கி வீசிவிட்டு கூட்டணி ஆட்சிக்கு தயார் என அறிவித்தது காங்கிரஸ். அதிமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை முறிந்து திமுகவோடு அது கைகோர்த்தது. ஆந்திராவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்ததோடு, தமிழகத்தில் கிடைத்த முழு வெற்றி காங்கிரசை இடதுசாரிகளின் மதவெறி சக்தி எதிர்ப்புக் கொள்கையால் கிடைத்த ஆதரவு ஆட்சிக்கட்டில் ஏற்றியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் ஆதரவை விளக்கிக் கொள்ளக் காரணமானாலும், நல்ல ஒரு ஆட்சியைத் தருவதற்கு இடதுசாரிகளின் மேற்பார்வை, ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியன பயன்பட்டன.
அடுத்தத் தேர்தலில் தன்னுடைய பாரம்பரிய ஓட்டு வங்கியான நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க ஜாதியினர், நகர்ப்புற மக்கள் ஆகியோரிடம் தன்னுடைய செல்வாக்கை பாஜக காக்கத் தவறியது, ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த ஐந்து வருடங்கள் ஆகியன காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தன. இடதுசாரிகள் தான் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். கூட்டணி ஆட்சி தான் இனிமேல் இந்தியாவின் தலைவிதி என்று கருதப்பட்ட சூழலில் வளர்ச்சி, புது நம்பிக்கை, மிதவாத மதவாதம் ஆகியவற்றை இணைத்து மோடி தனிப்பெரும்பான்மையை முப்பது வருடங்கள் கழித்துப் பெற்றுக் காட்டினார். கூட்டணி அரசியல் இன்னமும் புரிபடாத புதிர்தான்!
இந்தக் கூட்டணி ஆட்சிகள் முழுக்க இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவை என்கிற வாதம் சரியல்ல. காங்கிரஸ் பல்வேறு மொழியினர், ஜாதியினர் ஆகியோரின் அச்சங்கள், தேவைகள் குறித்துப் பெரிதாகச் செவிமடுக்காத சூழலில் தான் பிராந்தியக் கட்சிகள் செல்வாக்கு பெற்றன. கூட்டாட்சி தத்துவம் இவற்றால் பெருமளவில் பலம் பெற்றது என்பதும், 356 சட்டப்பிரிவு கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது குறைந்ததும், பிரிவினைவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் நிர்வாகத்தில் செம்மையாக ஈடுபடும் ஜனநாயக பரவலும் சாத்தியமானது என்பதிலேயே இந்தியா மாதிரியான பன்முகத்தன்மையும், வேறுபாடுகளும் நிரம்பிய நாட்டுக்கு கூட்டணி ஆட்சியின் அவசியத்தை, தேவையை உணரலாம்.
ஆசிரியர்: BIDYUT CHAKRABARTY
OUP வெளியீடு
விலை: 295
பக்கங்கள்: 214