புரட்சி நாயகன் மால்கம் எக்ஸ் !


அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பெயர்களில் மார்டின் லூதர் கிங் அமைதி வழியில் போராடினால் வன்முறைக்கு திருப்பி அடித்தலே சரியான
பதிலடி என்று முழங்கி நின்றவர் மால்கம் எக்ஸ். மால்கம் லிட்டில் என்று பெயர் கொண்ட அவர் கறுப்பின குடும்பத்தில் பிறந்தார். அவரின் வீட்டை விட்டு அவர் வயிற்றில் இருக்கும் பொழுதே எப்படி நிறவெறியர்களால் வெளியேற்றப்பட்டார் என்பதை அம்மாவிடம் கதைகளாக கேட்டு கொதித்தார்.

மார்க்ஸ் கார்வே எனும் கறுப்பின உரிமைகளுக்கு போராடிய ஆளுமைக்கு ஆதரவாக அவரின் தந்தை இருந்தார். வெள்ளையின வெறியர் குழுவான ப்ளாக் லிஜியன்
அமைப்பை எதிர்த்து அவர் போராடினார் ; பேசினார். ஒரு நாள் அவர் படுகொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். பள்ளியில் டாப்பராக இருந்த மால்கம் எக்ஸ் வக்கீல் ஆகலாம் என்று கண்கள் விரிய தன்னுடைய கனவை ஆசிரியரிடம் சொன்ன
பொழுது ,”கேவலமான கருப்பினம் நீங்கள் ! அதெல்லாம் உங்களால் சாதிக்கக் முடியாது !” என்று கேவலப்படுத்தி அனுப்பினார். அதற்கு பின் அம்மாவும்
மனநல காப்பகம் பக்கம் ஒதுங்கிவிட,போதைப்பொருள் கடத்தல்,வேசைகளுடன் தொடர்பு,தெருச்சண்டைகள் என்று கழிந்தது அவரின் இளமைக்காலம்.

பின்னர் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பில் இணைந்தார். இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறினார். கறுப்பின பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தங்களின் பெயரை சூடுமாறு செய்திருந்தார்கள்
வெள்ளையர்கள். அந்த அடையாளத்தை துறந்து தங்களுடைய ஆப்ரிக்க அடையாளத்தை காட்டும் பொருட்டு தன்னுடைய லிட்டில் என்கிற பிற்சேர்க்கை பெயரை எக்ஸ்
என்று மாற்றிக்கொண்டார். எங்கெல்லாம் கறுப்பின மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் ஆயுதம் மூலம் பதில் சொன்னார் அவர். கறுப்பர்களுக்கு தனி கல்வி,பொருளாதாரம்,வாழ்க்கைமுறை,சமூகம் என்று
பேசினார் இவர். தன்னுடைய மக்களின் உரிமைக்காக பேசினார்.

“அவரால் ஒரு கலவரத்தை ஒரே சொல்லில் தடுக்கவும்,நடத்தவும் முடியும் !” என்று இதழ்கள் எழுதுகிற அளவுக்கு அவரின் தாக்கம் இருந்தது. நேஷன் ஆப்
இஸ்லாம் அமைப்பின் தலைவரே ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுவதை அறிந்து
அவருடன் முரண்பட்டார். கென்னடியின் படுகொலையின் பொழுது வினை விதைத்தன் வினை அறுப்பான் என்கிற ரீதியில் இவர் சொன்ன வாசகம் இன்னமும் சிக்கலை
அதிகப்படுத்த நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்புக்கும் இவருக்குமான தொடர்பு முடிவுற்றது. 

“தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது ” என்று உறுதிபட சொன்ன அவரை அமெரிக்காவில் ஐ.நா சபையில் பேச
வந்த பொழுது கறுப்பின மக்களின் பகுதியில் தங்கிய பிடல் காஸ்ட்ரோ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தங்களின் வாக்குகளை தெளிவாக பயன்படுத்த
வேண்டும் என்று வலியுறுத்தி ,”ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் !” என்று முழங்கினார் அவர். ஹஜ் யாத்திரை போய் அங்கே என்னை
என் நிறத்தால் வேறுபடுத்தாமல் சகோதரனாக மதிக்கிறார்கள் என்று மெய்சிலிர்த்தார்

இறுதியில் நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த மூவரால் பதினைந்து முறை சுடப்பட்டு அவர் இறந்தார். மார்டின் லூதர் கிங் அதைக்கேட்டு துடித்துப்போனார் ,”இது அப்பட்டமான படுகொலையே நன்றி வேறில்லை !” என்றுகதறி சொன்னார். அவரின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். “யாரும் விடுதலை,சமத்துவம்,நீதி ஆகியவற்றை உனக்கு
தரமுடியாது ! நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் !” என்று முழங்கிய அவரின் நினைவு தினம் மே பத்தொன்பது.

பிரிவினையில் கரைந்து போன பெண்களின் அலறல் !


ஊர்வசி புட்டாலியாவின் ,”THE OTHER SIDE OF SILENCE” நூலை பாதி தமிழிலும் மீதத்தை அந்த நூலின் வெம்மை தாங்காமல் ஆங்கிலத்திலும் படித்து முடித்தேன். வரலாறு என்பது என்னென்ன எந்தெந்த வருடத்தில் நடந்தது என்றும்,எவ்வளவு மக்கள் செத்தார்கள் என்கிற ரீதியிலேயே முடிந்து விடுகிறது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பத்து லட்சம் மக்கள் இறந்து போனதாக அறியப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை என்ன ? 
அவர்கள் எந்த மாதிரியான சிக்கல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள் என்று அறியும் ஒரு சிறிய முயற்சியே பிரிவினையால் தாக்கப்பட்ட எழுபது பேரிடம் நேர்முகம் செய்து உருவான இந்நூல் 

ஊர்வசியின் தாய் சுபத்ரா மற்றும் அவரின் சகோதரர் ரானா இருவரும் பிரிவினையால் பிரிந்து போகிறார்கள். ரானா பாகிஸ்தானில் இருக்கும் வீட்டை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே இருந்து கொள்கிறார். சுபத்ராவிடம் இருந்து அம்மாவை கூட்டிப்போனவர் அப்படியே அவருடனே அவரைப்போலவே இஸ்லாமிய மதத்துக்கு மாற்றி வைத்துக்கொள்கிறார். சுபத்ரா கேட்டும் தரமறுக்கிறார் அவர். அவரை வெகுகாலம் வரை தொடர்புகொள்ளவே விருப்பமில்லாமல் கழிகிறது.

ஊர்வசி அங்கே அவரைப்பார்க்க போன பொழுது அன்பாக அவரை எதிர்கொள்கிறார்கள் அவரின் அற்றுப்போன உறவுகள். மாமாவிடம் பேசுகிற பொழுது இஸ்லாமியனாக மாறினாலும் தன்னை ஒரு இந்து போலவே பார்த்து ஒதுக்கி வைத்திருப்பதையும் அவருக்கு எதிராக மகனே கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதையும் சொல்கிறார். அன்னையின் கல்லறை பக்கம் மீண்டும் போகிற தைரியம் அவருக்கு வந்ததா என்று ஊர்வசி கேட்க அவருக்கு அது இயலவில்லை என்றே கண்ணீர் வடிய சொல்கிறார். 

ஊர்வசியின் அம்மாவை பாகிஸ்தான் அழைத்து போனதும் அவருக்கு பிடித்த சீஸ் துண்டுகளை ப்ரிட்ஜில் இருந்து பலவருடம் கழித்து ரானா நீட்ட நெகிழ்ந்து போகிறார் அம்மா. என்றாலும் அவர்கள் வந்துபோனபின்னர் கெடுபிடிகள் காரணமாக தொடர்பற்று போகிறது. அம்மா மற்றும் பாட்டியின் கதைகளும்தான் !

தமயந்தி சாகல் என்கிற பிரிவினையின் பொழுது உறவுகளை விட்டு நீங்கி திருமணமே செய்துகொள்ளாமல் பல்வேறு சமூக பணிகள் செய்தவர் தன்னுடைய கதையை பதிவு செய்கிறார். பெண்கள் பாலியல் ரீதியான் வன்முறைக்கு உள்ளான பிறகு அவர்களின் கருக்கலைப்பை சஃபாயா என்கிற பெயரில் அரசே செய்ததையும்,அவர்களின் மறுவாழ்வுக்கு அமைக்கப்பட்ட குழுவில் தமயந்தி தலைவர் ஆவதையும் நாடகம் போல சொல்லிக்கொண்டு வருகிறார். 

அரசாங்க பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சிகள் வழங்க வழிகள் செய்திருந்தது. அந்த பயிற்சிகள் மட்டுமே முகாமை விட்டு வெளியே போனதும் போதாது என்று தமயந்தி நினைக்கிறார். ஆகவே,அவர்கள் எல்லாருக்கும் இருக்கிற பெண்களை கொண்டு கல்வி போதிக்கிறார். கல்வித்துறை தேர்வெழுத அரசு அதிகாரியின் கையெழுத்து வேண்டும் என்கிற சூழலில் போய் நிற்கிறார். எல்லாரின் வயதும் முப்பத்தைந்துக்குள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கக் முடியும் என்று சட்டம் பேசுகிறார் அவர். “இவர்களின் சரியான வயதை சொல்லுங்கள் ; நான் அதையே பதிவு செய்கிறேன். நமக்கு அது தெரியாது. பல் போன,நரை விழுந்த இவர்களுக்காக கடவுளின் கையெழுத்தை போடுங்கள் !” என்று அழுத்தமாக தமயந்தி சொல்ல அனுமதி கிடைக்கிறது. எல்லா பெண்களும் தேர்வில் வெல்கிறார்கள் 

அரசாங்கங்கள் பிரிவினையின் வன்முறைகள் முடிந்ததும் நாட்டின் இருபுறமும் எப்படி இரு மதங்களின் பெண்களும் கடத்தப்பட்டிருப்பார்கள் என்று உணர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. அந்த குழுவில் இருக்கும் பெண்கள் பாகிஸ்தான் நோக்கி போய் வேலைக்காரி போல,தெருவில் விற்பனை செய்பவள் போல எங்கெங்கே பெண்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை மீட்டு வருவார்கள். ஆனால்,பல பெண்களால் திரும்ப வர விருப்பமில்லாத அல்லது வரமுடியாத சூழலே இருந்தது. அவர்களை அவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது ஒருபுறம்,இந்த புதிய உறவுடன் ஒரு நெருக்கமும் சிலருக்கு உண்டாகி இருந்தது. பலபேர் கருவுற்று வேறு இருந்தார்கள். ஆனாலும்,கட்டாயமாக பெண்கள் நாடு மாற்றப்பட்டார்கள். பதினாறு வயது நிறைந்த பிரிவினை காலத்தில் பாதிக்கப்பட்ட ஆண்மகன் தான் விரும்புகிறவாறு யாருடனும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன அரசு அதே உரிமையை பெண்களுக்கு தரவில்லை. 

நேற்றுவரை ஒன்றுக்குள் ஒன்றாக பழகிக்கொண்டு இருந்த மக்கள் ஒரே நாளில் மதத்தின் பெயரால் பிரிந்து கொண்டு வெட்டிக்கொண்டு இறந்தார்கள். தங்கள் வீட்டு பெண்கள் இன்னொரு மதத்தின் ஆணால் வன்புணர்வுக்கோ,கொல்லுதலுக்கோ,அவமானப்படுத்தலுக்கோ உள்ளாவதற்கு பதிலாக தாங்களே கொல்வதை பல இடங்களில் செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கைகள் நடுங்க அப்பாவால் வெட்ட முடியாமல் போக மகள் தலைகுனிந்து நன்றாக வெட்ட ஒத்துழைக்கிறாள். ஒரே கிணற்றில் நீர் அருந்திவிட்டு தங்கள் முன்னால் வருகிறோம் என்று மாற்று மதத்து ஆளிடம் சொல்லிவிட்டு கிணற்றில் குதித்து பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டும் இருக்கிறார்கள். அந்த பெண்களைப்பற்றி பெருமையாக பேசும் ஆண்கள் அதில் தப்பிய பெண்களை பற்றி வாயையே திறக்காமல் அமைதியாகவே கடக்கிறார்கள் !

ஓரிரு எளிய மக்கள் ஏன் பாகிஸ்தான் உருவானது என்று சொல்லும் காரணங்கள் கவனிக்கத்தக்கவை ,”ஒரு இஸ்லாமியன் நம்மை சமமாக நடத்தினான். நாமோ அவனுக்கு தனி பாத்திரத்தில் தான் உணவு தந்தோம். அவனை வீட்டுக்குள் விடவே யோசித்தோம் !”,”வெள்ளைக்காரன் நம்மைவிட்டு நீங்குவதற்கு முன் நமக்குள் முன்னே இல்லாத பிரிவினையை உண்டு செய்துவிடுவதில் வென்றிருக்கிறான் !”. மற்ற மதத்தினர் என்று மட்டுமில்லை அந்த ஊரை சேர்ந்த ஆண்களுமே தங்கள் மத பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கி இருப்பதும் நேர்முகங்களில் தெரிய வருகிறது ! 

பிரிவினையால் பிறந்த,பிரிந்த குழந்தைகளின் நிலைமையும் பரிதாபம். இந்தியாவில் தூய்மை கெட்டுவிட்டதாக சொல்லி அந்த பிள்ளைகள் ஆசிரமதுக்கோ அல்லது அரசாங்க பொறுப்பிலோ விடப்பட்டார்கள். அப்படிப்பட்ட பல பிள்ளைகளை அடையாள சீட்டோடு விமானத்தில் கூடைகளில் ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள். இந்து,முஸ்லீம்,சீக்கியர் சிக்கல் என்றே பிரிவினையை பார்க்கும் நம்மில் பலரும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையென்ன என்று பார்ப்பதில்லை. 

ராமேஸ்வரி நேரு கிடைத்த நாற்பத்தி ஐந்து லட்ச பஞ்சாபின் நிலத்தில் ஐந்து சதவிகிதமாவது தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் விவசாய கூலிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்க கடிதம் வரைகிறார். காண்டேகர் பிரிவினைக்கு பிந்திய அமைச்சரவையில் தங்களுக்கு இடமே இல்லாத பொழுது தங்களின் கவலைகள் எங்கே கண்டுகொள்ளப்படும் என்று ஆதங்கப்படுகிறார். பல இடங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு என்று தெரிந்தால் அவர்களை தொடாமலே தீண்டாமையை வன்முறை காலத்திலும் கடைப்பிடித்து இருக்கிறார்கள் ! தங்களுக்கு என்று அச்சுதஸ்தான் கேட்டிருக்கிறார்கள் இம்மக்கள். 

இந்தியாவில் தான் தீண்டாமை இருக்கிறது ; பாகிஸ்தான் போகலாம் என்று போன மக்கள் அங்கிருந்து கப்பல் மூலம் வெளிநாடு போக கிளம்ப மலம் அள்ள இன்ன பிற கடுமையான உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய ஆளில்லை என்கிற சூழல் உண்டாக லாகூரில் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் கடல் கடந்து போவது தடை செய்யப்பட்டு அவர்கள் வாழ்வுக்கு சிக்கலை உண்டு செய்கிறார்கள் !
இம்மக்களை பற்றியாவது விரிவான பதிவுகள் பிரிவினை காலத்தில் காணக்கிடைக்கிறது. எந்த மதத்தில் பிறந்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் பற்றி யாருமே [பேசவில்லை என்பது தான் கசப்பான முரண்

தினாநகர் எனும் ஊரில் அந்த ஊர் பாகிஸ்தானுக்கு எனறு சொன்னதும் முஸ்லீம்கள் இந்துக்களை கொல்கிறார்கள். பின்னர் சில மணிநேரம் கழித்து தவறான தகவல் அந்த ஊர் இந்தியாவுக்கு என்று அறிந்ததும் இந்துக்கள் முஸ்லீம்களை கொல்கிறார்கள். அதிகாரம் கைமாறும் பொழுது வன்முறையும் கைமாறியிருக்கிறது.

“எந்த ஊர் ?” என்று கேட்டால் ,”இப்பவா ,அப்பவா ?” என்று கேட்கிற அளவுக்கு நாற்பது ஆண்டுகளை கடந்தும் பலரை பிரிவினை பிடுங்கி தின்கிறது. பல பெண்கள் சொன்ன கதைகளை அதற்கு முன் யாருமே காது கொடுத்து கேட்கவில்லை. மிருதுளா சாராபாய்,கமல்பென் படேல்,அனீஸ் கித்வாய் என பிரிவினை காலத்தில் நலப்பணி ஆற்றிய பெண்களும் அதிகம். ஆனாலும்,அட்டியா ஹூசைன் எனும் எழுத்தாளர் பிரிவினைக்கு பின்னர் அதைப்பற்றி எழுதவே முடியவில்லை என்று எழுதுவதை நிறுத்திக்கொண்டது போலதான் பல பெண்கள் தங்களின் சோகத்தை புதைத்து கொண்டார்கள். 

ஆண்டர்சன் மற்றும் ஜாக் எனும் இரு ஆய்வாளர்கள் சொல்வது போல இந்த பெண்களால் தங்களின் சோகங்களை,வலிகளை ஆணாதிக்க மனப்போக்கை உள்வாங்கிய படியால் சொல்ல முடியாது. அவர்களின் மவுனத்தில் ஆயிரம் விஷயங்கள் பொதிந்து இருக்கின்றன. அவற்றையும் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும் ! 

ஒரு சுவையான சம்பவத்தோடு நூல் முடிகிறது. ஹர்கிஷன் தாஸ் பேடி எனும் அறிஞர் தன்னுடைய வடிவியல் குறிப்புகளை தன்னுடைய பாகிஸ்தான் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதை எடுக்க காவல் துறையிடம் கெஞ்சிய பொழுது அவர்கள் அனுமதிக்கவில்லை. சவுத்ரி லத்தீப் எனும் இஸ்லாமியர் அவரின் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு இந்த அறையில் இந்த பெட்டியில் அந்த குறிப்புகள் இருக்கிறது ; எடுத்து அனுப்புங்கள் என்று கடிதம் எழுதிய பேடி ,”எப்படி நான் இஸ்லாமியர்களோடு சகோதரனாக இருந்தேன் என்பதையும் அண்டை வீட்டு இஸ்லாமியரின் வீட்டை எப்படி கலவரங்களின் பொழுது காத்தேன் என்றும் கேட்டுபாருங்கள் !” என்றும் குறிப்பு அனுப்புகிறார். எல்லா குறிப்புகளும் அழகாக வந்து சேர்கிறது. அவர்களின் கடிதமொன்றில் ,” நாம் நம்மின் நட்பை அப்படியே கைக்கொண்டு இருந்தால் கலவரங்கள் வந்திருக்காதே ! கடவுளின் திட்டங்கள் வேறு ! மதத்தின் பெயரால் இவை நிகழ்ந்தது தான் வருத்தமானது ! எந்த மதமும் ரத்தம் சிந்துவதை ஆதரிக்கவில்லையே !”என்று முடிகிறது. 

அமைதி மட்டும் மாண்ட்டோவின் கதையில் வரும் தோல் தேக் சிங் போல யாருமற்று பெண்களின் மனதில் உறைந்து,இறந்துகொண்டு அலறிக்கொண்டு இருக்கிறது ! இந்நூலை தமிழில் கே.ஜி.ஜவர்லால் விறுவிறுப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். 
ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடு 
விலை,பக்கங்கள் :450,371
தமிழில் : கிழக்கு பதிப்பகம் 
விலை : 350,250