ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட கதை


ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று .(மார்ச் பதினைந்து ) .சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும்,மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர் . உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது . 

சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார்,பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார் ;பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார். 

ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்,எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். 
ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். 

போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட,நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான் 

அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது

செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள் ;அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .

எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை !


அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளை வாசித்து இருக்கிறீர்களா ? பெரிதாக வாசகனை துன்புறுத்தாமல் இயல்பான நடையில் கச்சிதமான மொழிநடையில் எண்ணற்ற உலகங்களுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிழியப்பட்ட கதைகளின் மூலம் கூட்டிப்போகும் அவரின் கதைகளில் வன்முறை பெரிதாக இருக்காது. மனிதர்கள் மட்டுமே வியாபித்து இருப்பார்கள். அவரின் நேர்முகங்களின் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அவரின் சிறுகதைகள் தரும் வித்தியாசமான உணர்வை அவரின் நேர்முகங்களும் தருகின்றன. அப்படியே கட்டிப்போடுகிற அதே லாவகம் பேட்டிகளிலும் புலப்படுகிறது. பேட்டியில் என்னை ஈர்த்த சில மட்டுமே இங்கே :

அவரின் கதைகளில் பெரும்பாலும் அம்மாவைப்பற்றி குறிப்புகள் காணப்படாமல் இருப்பதற்கான பதில் ஜெமோவுடனான நேர்முகத்தில் கிடைக்கிறது. சிறுவனாக இருந்த காலத்தில் அம்மாவிடம் பத்து சதம் கேட்டு இவர் நிற்கிறார். கூரையில் கயிறு கட்டி தொங்கிக்கொண்டு இருந்த அவர் ஆஸ்துமாவால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு சாண் தலை கீழே போகிற அளவுக்கு மோசமான நிலையில் இருந்திருக்கிறார். இவர் அந்த சூழலிலும் அசராமல் நிற்கவே பத்து சதத்தை கொடுத்து “போ” என்கிறார் அம்மா. அது தான் இவரிடம் அவர் பேசிய கடைசி வார்த்தை !

எழுத்தாளர்களை அவர்களின் பழக்கங்கள் கொண்டு வாசிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிற பரிந்துரைக்கு பாரதி கஞ்சா பழக்கம் உள்ளவர்,ஜெவ்ரி ஆர்ச்சர் நான்கு வருடம் பொய் சொன்னதற்காக சிறை போய் வந்தவர்,பிரெஞ்சின் எழுத்து பிதாமகர் ஜீன் ஜெனே குடிகாரர்,திருடர்,ஜெயில்வாசி-அதற்காக வாசிக்காமல் இருப்பீர்களா என்று கேட்கிறார். 
கடிகாரத்தை உருளோஸ் என்று தன் பகுதியில் குறிப்பிடுவதை மொழி நடையில் கடத்த மறுக்கிற அவர் ஒரு சுவையான சங்கதியை சொல்கிறார் உடன் மீன் என்று நண்பர் ஒருவர் அடிக்கடி குறிப்பாராம். எதோ புது வகையான மீன் என்று நினைத்தால் ப்ரெஷ்ஷாக கிடைக்கும் மீனைத்தான் அப்படி அழைக்கிறார்கள் அவர்கள் என்று சொல்கிறார். என்றாலும் பாட்டில் என்பதை ஈழ பாணியில் போத்தல் என்பதையும்,கொசுவை நுளம்பு என்பதையும்,பேசுதலை கதைத்தல் என்றும் எழுத்தில் மாறாமல் குறிப்பதையும் பதிவு செய்கிறார்.

ஆப்ரிக்காவில் நெடுங்காலம் இருந்த ஆசிரியர் அம்மக்களைப்பற்றி சொல்பவை எல்லாமே தனித்தனி சிறுகதைக்கான சங்கதிகள் ! அம்மக்கள் இந்தியர்கள் பிணங்களை எரிப்பதை பார்த்து அஞ்சுகிறார்கள். இப்படியா உங்களின் உறவுகளை துன்புறுத்துவீர்கள் என்று கேட்பார்களாம் அவர்கள். காரணம் அங்கே பிணங்களை நான்கு நாட்கள் வைத்திருந்து எல்லாரும் பார்த்தபின்னர் உடம்பின் ஒரு பகுதியை வெட்டி தின்று தங்களின் மூத்தோர் உயிரோடு கலந்துவிட்டனர் என்பார்கள் ! கற்பு என்கிற ஒரு அம்சமே அவர்களுக்கு விளங்குவதில்லை. திருமணத்துக்கு முன்னர் கர்ப்பவதியாகி பிள்ளை பெற்ற பெண் நல்ல உடல்நிலையில் இருக்கிறார் என்று அவரை திருமணம் செய்ய போட்டிகள் அதிகம். வர்க்க பேதம் பெரிதாக அங்கே இருப்பதில்லை. வேலிகள் தோட்டங்களுக்கு போடுவதில்லை. ஒருவர் பராமரிக்கிற மரத்தின் குலையை இன்னொரு நபர் வெட்டிக்கொண்டு போவார். இயற்கையின் வளங்கள் பொது என்பது அவர்களின் எண்ணம் ! வேலை செய்யும் பொழுது மட்டும் ஆடை அணிந்து கொண்ட பெண்கள் திறந்த மேனியோடு போஸ் தருவதே சவுகரியமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். 

எழுதுவதை முப்பது ஆண்டுகள் விடுத்திருந்தது பற்றி பேசுகிற அவர் தன் வீட்டில் எழுத்தாளன் ஆனால் வருமானம் ஈட்ட முடியாது என்று சொன்னது இன்னமும் உண்மையாகவே இருப்பது மனதை அரிக்கிறது என்று பதிவிடுகிறார். பாரதி வறுமையில் இறந்தது,புதுமைப்பித்தன் இறுதிக்கடிதத்தில் நூறு ரூபாய் கடன் கேட்பதில் தொடங்கி இன்றும் வறுமை எழுத்தாளர்கள் மட்டத்தில் நீள்கிறது என்று கனத்தோடு சொல்கிறார். விவாதமும்,விமர்சனமும் கல்கி மற்றும் புதுமைப்பித்தன் இடையே நடந்த ‘பத்தாயிரம் அடி வேண்டுமா’விவாதம் போல இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். 

எழுத்தாளன் சுவையான சம்பவங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கிறான் என்பதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறார் பெஸ்மொஸ்கிஸ் எனும் கனடிய எழுத்தாளர் OVULATION THERMOMETER ஒன்றை பழைய சாமான்கள் விற்கும் கடையில் பார்க்கிறார். கருமுட்டை வெப்பநிலை உச்சம் அடையும் பொழுது வெளியே வரும். அந்த தெர்மாமீட்டரில் உடல் உறவு கொண்ட குறிப்புகள்,வெப்பநிலை அளவுகள் எல்லாம் அழிக்காமலே விற்பனைக்கு வந்திருக்கிறது !

அனுபவம் படைக்க முக்கியம் என்றாலும் அமெரிக்கா போகாமலே காஃப்கா அமெரிக்கா நாவல் படைத்ததும்,தேயிலை தோட்ட தொழிலாளர்களை காணாமலே துன்பக்கேணி தந்த புதுமைப்பித்தன் பற்றி பேசும் ஆசிரியர் அதே சமயம் கவனமும் அவசியம் என்கிறார். ஷேக்ஸ்பியர் சீஸர் நாடகத்தில் ஓரிடத்தில் அவர் கால மணிக்கூண்டு ஞாபகத்தில் ,”மணி எட்டு அடித்துவிட்டது !” என்று எழுதிவிடுகிறார். 

எழுத்தாளன் தன் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போனாலே அவன் நல்ல எழுத்தாளன் இல்லையென்று அர்த்தமில்லை என்று சொல்லி ஷேக்ஸ்பியர்,கம்பர் அவர்கள் காலத்தில் கண்டுகொள்ளப்படாததை சொல்கிறார். ஹக்கில்பெரி பின் நூலை மார்க் ட்வைன் எழுதிய பொழுது போஸ்டன் நூலகத்துக்குள் அந்நூல் நுழையக்கூடாது என்று சொன்னார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ் உலிசஸ் நூலை எழுதிய பொழுது இங்கிலாந்தும்,அமெரிக்காவும் தடை செய்திருந்தன. 

“ஐஸக் டென்னிசனுக்கு நோபல் பரிசு தராமல் எனக்கு தந்திருக்கக்கூடாது !”என்று பெருமிதமாக சொல்கிறார் எர்னெஸ்ட் ஹெமிங்க்வே. டென்னிசனின் அவுட் ஆஃப் ஆப்ரிக்கா நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்து பாதியிலேயே மொழிபெயர்த்து அப்படியே நிறுத்திவிட்டாராம் அ.முத்துலிங்கம் ! தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நல்ல இலக்கியங்களை மொழி பெயர்க்கும் ஆட்கள் இல்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறார். ரஷ்ய எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இருவர் அதற்காக இருநூறு வருடத்துக்கு முந்திய ஆங்கிலத்தை பயன்படுத்துகிற அளவுக்கு உழைத்ததை சொல்லும் அவர் எழுபது வருடகாலமே ஆயுள் உள்ள துருக்கிய மொழிக்கு நல்ல மொழி பெயர்ப்பால் நோபல் பரிசு கிட்டுகிறது. முப்பது லட்சம் சொச்சம் மக்கள் பேசும் அல்பேனிய எழுத்து பிரெஞ்சில் இருந்து ஆங்கிலம் நகர்ந்து புக்கர் வெல்கிறது என்றால் அதற்கிணையான படைப்புகள் கொண்ட தமிழும் சாதிக்க முடியும் என்கிறார். 

ஏ.கே.ராமானுஜனின் புறநானூறு,அகநானூறு மொழிபெயர்ப்பை படித்து சிலிர்த்த அமெரிக்கர் “இவை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டவையா ?” என்று ஆச்சரியப்பட்டாராம். கம்பரை விட மேலானவர் இல்லை உமர் கய்யாம் ; அவருக்கு பிளிட்ஸ்ஜெரால்ட் போல நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும் என்று அழுத்தி பதிவு செய்கிறார். 

பெண்களை இலக்கியவாதிகள் பெரும்பாலும் மதிக்காத சூழல் நிலவுவதை சொல்கிறவர் ஒரு சுவையான சம்பவத்தை சொல்கிறார். சார்த்தர் பூவாரை திருமணம் செய்திருந்தார். பூவாரும்,சார்த்தரும் திருமண பந்தத்தில் இருந்தாலும் தனித்தனி காதலர்கள் கொண்டிருந்தார்கள். ஆல்பர்ட் காம்யூவிடம் சார்த்தர் பேசுகிற பொழுது,”உங்களுக்கு விருப்பமிருந்தால் பூவாரை படுக்கைக்கு அழைக்கலாம் !” என்றிருக்கிறார். பூவார் யாருடன் படுக்கவேண்டும் என்று தீர்மானிக்க சார்த்தர் யார் ? அங்கேயே பெண் சுதந்திரம் செத்துவிட்டது என்கிறார். 

சூடான் நாட்டில் மிகத்தூய அராபிக் மொழியே பயன்பாட்டில் இருக்கிறது என்றும் அங்கே எந்த ஆங்கில சொல்லும் பயன்பாட்டில் இல்லை என்பதை ஆச்சரியத்தோடு பதியும் முத்துலிங்கம் சென்னையில் ‘உப்பு,உப்பு’ என்று உணவகத்தில் கேட்ட பொழுது யாரும் தெரியாத மாதிரி விழித்ததை கண்டு ,’சால்ட் !’ என்று கேட்டுப்பெற்றதை வலியோடு சொல்கிறார். புது சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்கிற அவர் leftover என்பதற்கு சரியான பதம் சங்கப்பாடலில் வரும் மிச்சில் என்று சொல்லி ரசிக்கவைக்கிறார். 

எழுத்தில் பின்நவீனம்,முன்நவீனம் என்று பார்ப்பதை விட உண்மையை சொல்லும் வகையில் எழுதுவதாக சொல்கிற அ.முத்துலிங்கம் எதை வார்த்தை பிரயோகத்தில் தவிர்ப்பது என்பதில் மிகக்கவனமாக இருப்பதாகவும் குறிக்கிறார். நான்காவது சிறுவனுக்கும் புரிகிற வார்த்தைகளை கொண்டு தன்னுடைய மொழியை கட்டமைத்திருக்கும் அவர் ஏன் ஈழ போராட்டங்களை பற்றி தன்னுடைய சிறுகதைகளில் பதிவது குறைவாக இருக்கிறது என்கிற கேள்விக்கு தரும் பதில் அழுத்தமானது. 

தமிழ் மொழிக்கு தனிநாடு வேண்டும் என்று அவர் சொல்லும் வாதங்கள் கவனிக்கத்தக்கவை. ஏசு காலத்தில் பேசப்பட்ட அராமிக் மொழி மற்றும் ஹீப்ரு மொழியில் யூதர்களின் இஸ்ரேல் நாட்டால் இரண்டாவது மொழி உயிர்த்திருக்கிறது. ஏசு பேசிய அராமிக் உயிர் பெறவே இல்லை. ஐஸ்லாந்து மக்கள் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியை சில லட்சம் பேரே பேசுகிறார்கள். அவர்கள் அரசு அம்மொழியை சிறப்பாக வளர்க்கிறது. எட்டு கோடி மக்கள் பேசுகிற ஒரு மொழிக்கு தனிநாடில்லை என்பதை மேற்கத்திய நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். தமிழ் அழியவே அழியாது என்பதை உறுதிசெய்ய அதற்கு ஒரு நாடு வேண்டும் என்று பதிகிறார். 

யாழ்ப்பாணத்தின் ,கிணறு,கொக்குவில்லின் நினைவுகள்,அழிந்து போன ரயில் பாதை எல்லாமும் மீண்டும் கிடைக்காது என்பதை அவர் வலியோடு பதிகிற இடத்தில் அத்தனை கனமும் நெஞ்சில் ஏறிக்கொள்கிறது. அகிலனின் 
‘கடைசி நாள் 
கரைக்கு வந்தோம் 
அலை மட்டும் திரும்பிப்போயிற்று 
கவிதையின் ஓசை இன்னமும் போகவில்லை என்று சிலாகிக்கிறார் ! அவரின் நேர்முகங்கள் தந்திருக்கும் ஓசையும்,கதைகளும்,கரிசனமும் ஓயப்போவதில்லை. 
கயல் கவின் வெளியீடு 
நூற்றி இருபது ரூபாய்
நூற்றி நாற்பத்தி நான்கு பக்கங்கள்

பார்வை போனாலும் பாடிய மில்டன் !


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம் கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர் ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள் வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள்.

சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து,இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.

நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார். கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள்.

“பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ,கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு,இருட்டு,இருட்டு மட்டுமே !” என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார்.

இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.
“வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு
என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம்
பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு
“எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?” என்று கேட்கிறேன் நான்
முணுமுணுப்போடு
பதில் வருகிறது
“இறைவன் இதை செய்யவில்லை.
மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன.
சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல் உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே கொண்டாடும் அவனை !”

“நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !” என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன். மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன்,பார்வை,பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு ஒன்றைத்தொடங்கினார் கெல்லர்.

மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :

அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்

பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன

எது அது எனும் கேள்விகள் தவிர்த்து

மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது…

நீ போய்விட்டாய்

பெருங்கடலும்,கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன

நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன

வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான,விரகம் தரும் ஒன்று நடக்கிறது

எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது

பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது,அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் !