ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூல நாவல் அறிமுகம்


ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தின் மூலமான் Q & A நூலை வாசித்து முடித்தேன். ஏழ்மை,புறக்கணிப்பு,பாலியல் வக்கிரங்கள் என்று பலவற்றை பார்த்து வளரும் சிறுவன் ஒருவன் ஒரு மிகப்பெரிய குவிஸ் போட்டியில் எப்படி வெல்கிறான் என்பதை விறுவிறு நடையில் சொல்கிற நாவல் இது. பன்னிரெண்டு கேள்விகளில் நூறு கோடியை வென்று அவன் சாதித்ததும் அவனின் வீட்டுக்குள் அவன் ஏமாற்றி இருப்பான் என்று எண்ணி போலீஸ் நுழைகிறது. அப்பொழுது அவனைக்காப்பாற்ற வரும் பெண் யார் என்பது கடைசிகட்ட திருப்பம் !

தன்னுடைய நண்பன் நம்பும் நடிகரின் இன்னொரு முகத்தை திரையரங்கில் பார்ப்பதால் ஒரு விடை,எதிர் வீட்டின் முகம் தெரியாத சகோதரியை அவரின் வானியல் துறை வல்லுனரான அப்பா பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதை கண்டதால் அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடியதோடு இழையும் இன்னொரு விடை,கண்ணை பறித்து பிச்சை எடுக்க விட முயலும் இடத்தால் இன்னொரு விடை,எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய நபரான டைலர் வாழ்க்கையால் கிடைக்கும் இன்னொரு விடை என்று அவனின் வாழ்க்கை சம்பவங்களை கோர்த்து அவன் விடை சொல்வதற்கான காரணங்களை நம்பும் வகையில் நாவலை நகர்த்துகிறார் ஆசிரியர். 

தொடர்வண்டியில் கொள்ளையனை சுட்டுக்கொன்று விடும் நாயகன் அங்கே தன்னை காதல் பொங்க பார்க்கும் பெண்ணை தவிர்க்கும் கணம் ஆகட்டும்,நீலிமா எனும் நடிகையின் வீட்டுக்குள் இரவில் நுழையும் ரசிகனுடன் நிகழும் சம்பவமாகட்டும்,லஜ்வந்தி எனும் வேலைக்காரி திருடப்போகும் பொழுது கூட காட்டும் விசுவாசம் ஆகட்டும்,சொந்த மகனை கள்ள உறவில் பிறந்ததால் தெருவில் விடும் ராணி ஆகட்டும்,துறவு வாழ்க்கையில் இருப்பதாக காட்டிக்கொண்டு ஓரின சேர்க்கையில் ஈடுபடும் பாதிரியார்,திருமண பந்தத்தில் இருக்கும் இன்னொரு பாதிரியார் என்று கலவையான மனிதர்கள் மற்றும் சம்பவங்கள். 

பல லட்சம் பணம் கிடைத்த பின்னும் அதை ஒரு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை காப்பாற்ற கொடுக்கும் நாயகன் பாலியல் தொழிலாளியாக இருக்கும் நீதாவின் மீது காதல் கொள்வதும்,அவளுக்கு நடந்த அநியாயம் கண்டு கொதிப்பதும் அவர்கள் காதல் கைகூடியதா என்றும் அறிய நாவலை வாசியுங்கள். போட்டியில் அசோக் குமார் எனும் தொகுப்பாளருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அதையும் நாவலைப்படித்து அறிந்து கொள்ளுங்கள். 

இந்நூல் தமிழில் விகடன் பிரசுர வெளியீடாக வந்திருக்கிறது. 
ஆங்கில மூலம் : விகாஸ் ஸ்வரூப் 
தமிழில் :ஐஷ்வர்யன்
விலை : நூற்றி இருபது 
பக்கங்கள் : 368