உயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை


கடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள்? மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.

‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நிற்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.

‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.

*spoilers ahead*
பள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.

ஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.

டப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.

பார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.

டப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே துணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.

இரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).

நம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.

இரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.