நீட் தேர்விற்கு வெளியூர் சென்று வர என்ன கேடு எனக்கேட்டவர்களுக்கு ஒரு கடிதம்…


மாடமாளிகைகளில் இருந்து கொண்டு வெளியூருக்கு சென்றுவர என்ன கேடு என்று கேட்காதீர்கள். உங்கள் மேட்டிமைப்பார்வைகளுக்கு ஆயிரமாயிரம் வந்தனங்கள். எத்தனையோ தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். பாதிக்கு பாதி மருத்துவ மாணவிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். கேரளா மட்டுமே நம்மைவிட அதிகப் பெண் மருத்துவர்களை விகிதாசாரப்படி கொண்டிருக்கிறது.

ஐஐடி தேர்வுகளை நிறையப் பெண்கள் எழுத முடியாமல் போகத் தேர்வு மையங்கள் வெகுதூரம் தள்ளியிருப்பது காரணம் என ஆய்வுகள் நிறுவுகின்றன. அண்ணா பல்கலை கலந்தாய்வுக்கு வர காசில்லாமல் தன் மகனை வண்டியேற்றி தனியாக அனுப்பும் குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். தனியாகச் சென்னை வரை அனுப்ப வேண்டுமா என அஞ்சிக்கொண்டு ஊர் பக்கமாகவே பெண்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பலர் இங்குண்டு. வீட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் தங்கள் மகள்/மகனின் கல்வியில் மட்டுமே கொட்டிவிட்டுக் காத்திருக்கும் ஆயிரம் குடும்பங்கள் இங்குண்டு. திருமணம் தவிர்த்து பிள்ளையின் படிப்புக்காக அடமானம் போகும் தங்க நகைகள் எங்கள் அன்னைகளின் கழுத்தை மீண்டும் ஏறாத கதைகள் ஆயிரம் உண்டு.

சென்னையில் சேர வந்த காலத்தில் ஒரு நாள் கூடுதலாகத் தங்க எங்கே போவது என அஞ்சி கொசுக்கடிகள் இடையே அண்ணா பல்கலை வளாகத்திலேயே அச்சத்தோடு அப்பாவோடு தூங்கிய மாணவன் நான். என்னைப்போல இங்கே வெளியே சொல்லாதவர்கள் பலருண்டு. கல்வி என்கிற ஒரே பற்றுக்கோல் மட்டுமே இந்தத் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மைக்கான சொத்து, நம்பிக்கை. அதைத்தகர்க்கும் முயற்சிகளை இச்சமூகம் ஒருங்கே எதிர்கொள்ளும். மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்காத செம்பகம் துரைராஜனும், அரசமைப்புச் சட்டம் இயற்றிய குழுவின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமியும் மருத்துவப்படிப்புக்கான கதவுகளை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மூட முயன்ற வரலாறு அரங்கேறி 65 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.

பல்வேறு வகையான உளவியல் தாக்குதல்கள். எதிர்காலம் குறித்த கவலைகள். வெளியூர் போய் நீட் எழுதியே ஆக வேண்டுமா எனத் தேர்வு எழுதுவதைக் கைவிட்ட பிள்ளைகளை அறிவேன். யாரிடமும் உதவி பெற தயங்குபவர்களும் இங்கு இருக்கிறார்கள். சம வாய்ப்புள்ள தேர்வாக இது எங்கே நடக்கிறது. மாதவிடாய் காலங்களில் தேர்வெழுத இத்தனை தூரம் போகிற பெண்களின் அவலக்குரல்கள் யார் காதுகளிலும் விழுமா? புது ஊரில் பயமும், நடுக்கமும் தாண்டி எழுதுவது சாத்தியப்படுமா? எம் பெண்களின் பயணம் ஒற்றை ஆளாகச் சென்னை மருத்துவக்கல்லூரியில் பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகச் சமராடிய முத்துலட்சுமியில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. அது ஓயாது.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சேவை இட ஒதுக்கீடு மறுப்பால் 31% காலியிடங்கள் அதிகரித்துள்ளன. காத்திரமான, பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய மக்களுக்கான மருத்துவக்கட்டமைப்பு உடைகிறது. என்னவோ.

இச்சமூகம் இதைக்கடந்து வரும் என இரு நாட்களில் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. எம் தமிழ்ச்சமூகம் கல்வி என வருகிற போது எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஒன்று திரள்கிறது. கண்ணீர் துடைக்க, தோள் கொடுக்கச் சித்தமாக இருக்கிறது. அன்புத்தம்பி, தங்கைகள் அஞ்சாமல் இந்த இன்னல்களை எதிர்கொள்ளப் பெற்றோரும், உற்றோரும் துணையாய் இருங்கள்.