இது சான்றிதழ்களின் காலம்


ஒவ்வொரு தெருவிலும், உரையாடலிலும் ஒவ்வொன்று கிடைக்கும்
தேசபக்திக்கு ஒன்று
தேசவிரோதிக்கு இன்னொன்று
பக்கத்து நாட்டுக்கு போக மற்றொன்று
குரல் கொடுக்க சில
கேள்விகள் கேட்டால் சில
மாநில முதல்வராக மற்றொன்று
சாலையில் சத்தம் எழுப்பினால் இன்னொன்று
வந்தேறி பட்டயம் சூட்ட பலபேர் வருவார்கள்
அடர்சிவப்பாய் ரத்தம் இருப்பவர்களே ‘செந்தமிழர்கள்’ என்பார்கள்
அடர் என்பது அண்ணனின் விழுதுகள் எனவும் சொல்வார்கள்
இனத்துரோகி பட்டம் இனாமாக இன்முகத்தோடு தருவார்கள்
குழப்பங்களை கேட்டால் குயுக்தி என்று குமைவார்கள்
கொடுமைகள் பேசினால் கொடும்பாவிகள் கனவுகளில் எரிப்பார்கள்
கேள்விகள் கேட்டால் அடிவருடி என அழகாய் அழைப்பார்கள்
வீட்டில் மாட்டிக்கொள்ள இடமில்லாமல் ஆளை மறைக்கும் அளவுக்கு சான்றிதழ்கள்

பின்குறிப்பு:
கண்ணை மூடு, கருத்துகள் சொன்னால் கேள்விகளால் போர் தொடு
கண்டவனை கருத்தால் சுடு, கடக்கிறவனை எல்லாம் கடுப்போடு அளவெடு
சான்றிதழ் பணிக்கு சரியானவன் நீ தான். – பூ.கொ.சரவணன்