அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

ஆலிஸின் அற்புத உலகின் அங்கிள் கரோல்


கதை கேட்பது எல்லாருக்கும் பிடித்த விஷயம் இல்லையா ?அதிலும் நமக்கு ரொம்பவே பிடித்த ஒரு கதை ,கேட்க கேட்க சலிப்பே தராத அந்த கதை தான் 150 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கபோகிறது .எந்த கதை அது? வாட்ச் கட்டி கொண்டு ஓடும் முயல் ,சீட்டு கட்டு சிப்பாய்கள்,,கிடு கிடு பள்ளங்கள் ,பேசும் மிருகங்கள் ,கண்ணீரில் உண்டாகும் வெள்ளம் …இப்போது ஞாபகம் வந்துடுச்சா?நம்ம செல்ல தோழி ஆலிஸின் அற்புத உலகமே தான் அது … இந்த கதையை எழுதிய லூயிஸ் கரோல் பிறந்த நாள் ஜனவரி இருபத்தி ஏழு 

. லூயிஸ் கரோல் ஒரு தேவலாயத்தில் பாதிரியாராக இருந்தார் . அவர் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலையில் கணித விரிவுரையாளராக இருந்து இருக்கிறார். அவர் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை .ஆனால் குட்டீஸ் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை . 

அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி கதை சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார் கரோல் . அதிலும் ஆலிஸ் லிடெல் என்கிற சுட்டி அவருக்கு ரொம்பவே செல்லம். ஆலிஸ் மற்றும், அவளின் இரு சகோதரிகள் என மூவரையும் ஒரு குட்டி படகில் உட்கார வைத்து அழகான ஆற்றில் அப்படியே சவாரி செய்வார் அவர். இரண்டரை மணிநேரம் படகில் போகிற பொழுது ஆலிஸ் ஏகத்துக்கும் படுத்தி எடுத்த விடுவாள் .

ஆலிஸின் வார்த்தைகளிலே அதை கேட்போம், “எப்போதும் வெயில் சுள்ளென அடிக்கிற மதிய வேளையில் தான் எங்கள் பயணம் இருக்கும். அங்கிளை கதை சொல்ல சொல்லி நச்சரிப்போம் .அவரும் விதவிதமாக சொல்வார் . நாங்கள் கண்கள் விரிய கேட்டுகொண்டே இருக்கும் பொழுது ,”இன்னைக்கு இது போதும்…வீட்டை நெருங்கி விட்டோம் என முடித்து விடுவார். 

அப்படி முடிக்கிற இடம் ரொம்பவே சுவாரசியமான கட்டமாக இருக்கும் .ஆனால் பின் மீண்டும் அதை கேட்கலாம் என அடுத்த சவாரியில் முயன்றால் தூங்குகிற மாதிரி நடித்து ஏமாற்றி விடுவார் .எழுப்பினால் எழுந்திருக்கவே மாட்டார் !ஆனால் கதைகள் மாறி கொண்டே இருக்கும் .”என்கிறாள்

கரோல் ஆலிஸ் இன் அற்புத உலகம் கதையை முதலில் சொல்கிற தருணங்களில் அதை நூலாக ஆக்க வேண்டும் என நினைக்கவில்லை . ஆலிஸ் அக்கதைகளை எழுதித்தர சொல்ல கிறிஸ்துமஸ் பரிசாக அவற்றை தொகுத்து தந்தார் . கணித பேராசிரியரான இவரின் கதையில் வரும் வரிகளே சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீன் உருவாக்க ஊக்கம் தந்ததாம் . 

நல்ல கவிஞர் ,புகைப்பட நிபுணர் என பல முகம் இருந்தாலும்,குழந்தைகளின் கதைசொல்லியாக அவர் பெருமைப்பட்டார் ,”ஆலிஸின் கனவுகளின் தோளின் மீது ஏறிக்கொண்டு நான் கதை சொன்னேன் .அது மறையும் சூரியன் போல அன்றன்றைக்கு மறைந்து போகும் .”என சொன்ன அவரின் பிறந்தநாள்