அம்பேத்கர் மற்றும் காந்தி-ஒரே இலக்கு கொண்ட இரண்டு எதிரிகள் !


அம்பேத்கர் மற்றும் காந்தி-ஒரே இலக்கு கொண்ட இரண்டு எதிரிகள்- Ramachandra Guha
இரண்டு முக்கியமான இந்தியர்கள் காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை எதிரேதிரானவையா அல்லது ஒன்றுக்கொன்று ஈடுசெய்து கொள்வையாக இருந்தனவா என்று ஆராய்வோம்.

இன்றைக்கு எதிரிகள் என்று முன்னிறுத்தப்படும் படேல் மற்றும் நேரு காங்கிரஸில் வாழ்நாள் முழுக்க சகாக்களாக இருந்தார்கள். ஆனால்,காந்தி மற்றும் அம்பேத்கர் ஒரே கட்சியில் உறுப்பினர்களாக எப்பொழுதும் இருந்ததில்லை. இருபதுகளில் அண்ணல் அம்பேத்கர் கல்வி கற்று திரும்புவதற்கு முன்னரே காந்தி காங்கிரஸ் முன்னின்று நடத்திய விடுதலைப்போரின் தலைமையை ஏற்றிருந்தார். காந்தியைச் சுற்றி ஒரு பெரிய ஒளிவட்டம் இருந்தது. அவரை பலரும் மகாத்மா என்று அழைத்தார்கள். ஆனால்,மறைந்த டி.ஆர்.நாகராஜ் எழுதியது போல காந்தியின் ராமனுக்கு அனுமனாகவோ,சுக்ரீவனாகவோ இருக்க மறுக்கிற சுயமரியாதை கொண்டவராக அம்பேத்கர் இருந்தார். அம்பேத்கர் தன்னுடைய சொந்த அரசியல் பாதையை காந்தி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு எதிராக சுதந்திரமாக அமைத்துக்கொண்டார். முப்பதுகள் முதல் நாற்பதுகள் வரை காந்தியை மிகக்காட்டமாக அம்பேத்கர் விமர்சித்தார். காந்தியின் ஹரிஜனங்களை முன்னேற்றுவது என்கிற பார்வை நாட்டாண்மை தனமாகவும்,ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கருணை காட்டும் செயலாகவும் அவர் பார்த்தார். காந்தி தீண்டாமைக் கறையை நீக்கி இந்துமதத்தை சுத்தப்படுத்த விரும்பினார். அம்பேத்கரோ ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை நிராகரித்தார். சமமான குடிமகன்களாக இந்து மதத்தை விட்டு மற்றொரு நம்பிக்கைக்கு தலித்துகள் மாறவேண்டும் என்று அவர் எண்ணினார்

அம்பேத்கர் மற்றும் காந்தி தங்களின் காலத்தில் நிச்சயமாக அரசியலில் எதிரெதிர் நிலையில் நின்றார்கள். அவர்களின் மரணத்துக்கு பிறகு அறுபது ஆண்டுகள் கழித்தும் நாம் அவர்கள் இருவரையும் அப்படியே காணவேண்டுமா ?? வலதுசாரி மற்றும் இடதுசாரி கருத்தியலில் நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் முன்னிறுத்துகிறார்கள்.

1996 இல் அருண் ஷோரி ஒரு நெடிய புத்தகத்தை அம்பேத்கரை’பொய் கடவுள்’ என்று நிராகரித்து எழுதினார்.
அதில் இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளை அம்பேத்கர் மீது அருண் ஷோரி வைக்கிறார். தேசியவாதிகள் பக்கம் சேராமல் அவர் ஆங்கிலேய அரசின் பக்கம் இணைந்தார் என்பது முதல் குற்றச்சாட்டு (வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற பொழுது அம்பேத்கர் வைஸ்ராயின் அதிகாரக்குழுவில் உறுப்பினராக இருந்தார் ),இரண்டாவதாக அவர் காந்தியை தீவிரமாக மற்றும் சமயங்களில் கடுமையான மொழியால் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்

அடுத்த இருபது வருடங்களுக்குள் அவரை ஒத்த இடதுசாரியான அருந்ததி ராய் ஒரு புத்தகம் அளவுக்கு பெரிய கட்டுரையில் காந்தியை பொய் மகாத்மா என்று நிராகரித்தார். காந்தி ஜாதி அமைப்பை நியாப்படுத்திய பழமைவாதி என்றும்,தன்னுடைய பார்வையை உறைபனி வேகத்தில் மிகப்பொறுமையாக அவர் மாற்றிக்கொண்டார் என்றும் சொன்னார். அருண் ஷோரி மற்றும் அருந்ததி ராய் இருவரும் வரலாற்றை கருப்பு வெள்ளையில் காண்கிறார்கள். அவர்களுக்கு நாயகர்கள் மற்றும் வில்லன்கள் மட்டுமே காணக்கிடைக்கிறார்கள்.

ஏன் அம்பேத்கர் ஆங்கிலேயர் பக்கம் நின்றார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர்கள் கடந்தகாலத்தில் தலித்துகளை ஒடுக்கியாண்டார்கள். விடுதலைப் பிறகு அவர்கள் கையில் அதிகாரம் வந்த பின்னும் அதையே அவர்கள் செய்திருக்க கூடும். ஆகவே தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயலாற்றிய சீர்திருத்தவாதிகள் ஜோதிபாய் புலே மற்றும் மூங்ராம் (பஞ்சாபின் ஆதி-தர்ம் இயக்கத்தின் தலைவர் ) ஆகியோர் ஆங்கிலேய அரசு காங்கிரசை விட குறைந்த தீமைகளை கொண்டது என்று நம்பினார்கள்

அருந்ததி ராயோ காந்தியின் கருத்துக்களில்  தனக்குத் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்தும்,அவர் சொன்னதை திரித்தும் குறிப்பிட்டு காந்தியை மெதுவாக எதிர்வினை ஆற்றியவராக காட்டுகிறார். கவனத்தோடு செயல்பட்ட அறிவுஜீவிகளான டெனிஸ் டால்டன்,மார்க் லிண்ட்லே,அனில் நவ்ரியா ஆகியோரு காட்டியபடி காந்தி சீராக ஜாதியமைப்பை விமர்சிப்பவராக மாறினார். ஆரம்பத்தில் அவர் தீண்டாமையை மட்டும் தாக்கினார்,அதன் பின்னர் சேர்ந்து பழகுதல்,கூட்டாக உணவு உண்ணுதல் ஆகியவற்றையும் தன்னுடைய ஆலய நுழைவுப் போராட்டங்களின் வழியாக அவர் வலியுறுத்தினார். மேலும் அவரின் ஆசிரமத்தில் தலித்துக்களை திருமணம் செய்துகொண்ட ஆதிக்க ஜாதியினரின் திருமணத்தை மட்டுமே தான் அங்கீகரிப்பேன் என்று சொல்லி சாதியமைப்பின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கினார்.

தீண்டாமையை நீக்க காந்தி நடத்திய இயக்கம் வலுவற்றதாக இன்றைய இடதுசாரிகளுக்கு தோன்றலாம். ஆனால்,அவர் காலத்தில் அதுவே மிகவும் தைரியம் மிகுந்த செயலாக கருதப்பட்டது. இந்து பழமைவாதத்தின் மையத்தை அது தாக்கியது

சங்கரச்சாரியர்கள்  சமஸ்க்ருதத்தை ஒரளவுக்கு தெரிந்துகொண்ட ஒரு சாதாரண பனியா இந்து மதத்தின் நூல்களில் கட்டாயமாக சொல்லப்பட்ட தீண்டாமையை எதிர்ப்பதா என்று கோபப்பட்டார்கள். காலனிய அதிகாரிகளுக்கு எழுதிய விண்ணப்பத்தில் காந்தியை இந்து மதத்தை விட்டு நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். 1933-34, இல் காந்தி தீண்டாமையை எதிர்த்து பயணம் போன பொழுது இந்து மகாசபை உறுப்பினர்கள் புனேவில் அவருக்கு கருப்பு கொடி காட்டியதோடு நில்லாமல்,மலத்தை முகத்தில் எறிந்தார்கள். ஜூன் 1934 இல் காந்தி மீது கொலை முயற்சியும்  நடைபெற்றது

காந்தியின் இயக்கம் அவர் கட்சியிலேயே வரவேற்பை பெறாமல் இருந்தது. படேல்,நேரு,போஸ் ஆகியோர் காந்தி சமூக சீர்திருத்தத்தை ஓரத்தில் வைத்துவிட்டு முதலில் நாட்டு விடுதலைக்கு போராட வேண்டும் என்று எண்ணினார்கள்

இந்த முரண்பாடுகளுக்கு பின்னரும் நேரு மற்றும் படேலை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் இருக்குமாறு ஒத்துக்கொள்ள வைக்கும் பணியை காந்தி கச்சிதமாக செய்தார். விடுதலை தேசத்துக்கு வந்ததே அன்றி,காங்கிரசுக்கு மட்டுமானதில்லை அது என்று தெளிவுபடுத்தினார். கட்சி வேறுபாடுகளை கடந்து திறமையின்  அடிப்படையில் முதல் அமைச்சரவை அமைய வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. இவ்வாறுதான் அம்பேத்கர் சட்ட அமைச்சர் ஆனார்.

காந்தி-அம்பேத்கர் உறவைப்பற்றி தெளிவான மற்றும் அறிவுப்பூர்வமான ஒரு நூலை தேடுபவர்கள் டி.ஆர்.நாகராஜின் பற்றியெரியும் பாதங்களை வாசிக்க வேண்டும். இன்றைய காலத்தில் காந்தி மற்றும் அம்பேத்கரின் பார்வையை இணைக்க வேண்டிய அவசரத்தேவை இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார். அது முழுக்க சரி. சமூக சீர்திருத்தம் நிகழ எழுச்சி  மேல் மற்றும் கீழ் ஆகிய இருபக்கங்களில் இருந்தும் நிகழவேண்டும். குற்றஉணர்ச்சிக்கு உள்ளன லிங்கன் பிரெடெரிக் டக்ளஸ் முதலியோரின் விமர்சனங்களை காது கொடுத்து கேட்காமல் போயிருந்தால் அடிமைமுறை நீக்கப்பட்டு இருக்காது. சிவில் உரிமைகள் சட்டமாக லிண்டன் ஜான்சன் மார்டின் லூதர் கிங்கின் அறச்சக்தி மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஏற்காமல் போயிருந்தால் மாறியிருக்காது. தங்கள் வாழ்நாள் அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் இன்றைய வரலாற்று புள்ளியில் அவர்கள் அருவருக்கத்தக்க சமூக அமைப்பை குலைப்பதில் இணையான பணியை செய்தார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

காந்தி அளவுக்கு எந்த உயர்ஜாதி இந்துவும் தீண்டாமையை கேள்விக்குள்ளாக்கவில்லை. தலித்துகளில் இருந்து எழுந்த மிகப்பெரும் தலைவர் அம்பேத்கர் அவர்கள் தான். சட்டம் தீண்டாமையை நீக்கினாலும் இன்னமும் அக்கொடுமை இந்தியாவின் பல்வேறு பாகங்களில் தொடர்கிறது. இக்கொடுமைகளை ஒழிக்க நாம் காந்தி மற்றும் அம்பேத்கர் இருவரிடம் இருந்தும் பாடங்களைப் பெற வேண்டும்

மூலம் :

http://www.hindustantimes.com/…/they…/article1-1278935.aspx…

தமிழில் : பூ.கொ.சரவணன்

பில்லியன் டாலர் இழந்து பிள்ளைகளை காத்த ஜோனஸ் சால்க் !


போலியோ தடுப்புமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு
? எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி தாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.

முதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு
கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க வைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும்
வேகப்படுத்தியது.

உலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும்
பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.

பிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆய்வுக்கு தேவையான தூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க்
பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில் கொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே
மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.


யாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்புமருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து
கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில் இந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.

சால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி
உடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். ஆனால்,அது மக்களுக்கு பயன்படட்டும் என்று அவர் அதை ஏற்க மறுத்தார்.

அவர் புகழ் வெளிச்சத்தை எப்பொழுதும் வெறுத்தார். தொடர்ந்து தனிமையில் மக்களின் நலனுக்காக ஆய்வுகள் செய்வதே போதும் என்று விரும்பினார். ஆனால்,அவர் விமானத்தில் பயணம் செய்தால் அதை விமான நிறுவனம் அறிவிக்கும். உடன் பயணம் செய்பவர்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள். ஹோட்டல்களில் எளிய அறையில் தங்க போனால் அங்கே ஆகச்சிறந்த ரூமை அவருக்கு தந்து நோகடிப்பார்கள்.அவர் இந்த மஞ்சள் வெளிச்சத்தை முழுக்க வெறுத்தார்.

எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். மருத்துவம் மற்றும் மருந்துகள் மக்களின் நலனுக்கு பயன்படுவதே லாபத்தைவிட முக்கியம் என்பது அவரின் உயிரித்தத்துவம். அவரின் வழியில் வாய்வழி போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கண்டுபிடித்த ஆல்பர்ட் சபினும் எந்த காப்புரிமையும் பெறவில்லை. சில பில்லியன் டாலர்களை பல கோடி மக்களை காக்க இழந்த மருத்துவ மனிதநேயர் ஜோனஸ் சால்க்கிடம் “ஏன் நீங்கள் காப்புரிமை செய்யவில்லை ?” என்று கேட்கப்பட்ட பொழுது ,சால்க் என்ன சொன்னார் தெரியுமா ? “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா ? சொல்லுங்கள் ?”. அவரின் பிறந்தநாள் நூற்றாண்டு இன்று

மைக்கேல் டெல் – கணினியுலக மகாராஜா


மைக்கேல் டெல் உலக அளவில் கணினித் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் DELL நிறுவனத்தை உருவாக்கியவர். மூன்றாவது கிரேடில் இருக்கிற பொழுது சீக்கிரமாக டிப்ளோமா படிப்பில் சேருங்கள் என்று வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு எத்தனை வருடங்கள் தான் பள்ளியிலேயே காலம் தள்ளுவது என்று விண்ணப்பம் போட்டார். அந்தப் படிப்பைத் தந்த நிறுவனத்தைச் சேர்ந்த பெண்மணி வீட்டுக்கு வந்து விண்ணப்பம் போட்ட நபரை பார்க்க ,”மிஸ்டர்.மைக்கேல் டெல் இருக்கிறாரா ?” என்று டெல்லின் அம்மாவிடம் கேட்க எட்டு வயது பையன் குளித்து விட்டு துண்டோடு வந்து நின்றதை பார்த்து அசந்து தான் போயிருப்பாள்.

ஸ்டாம்ப்கள் சேகரிப்பில் இளம்வயதில் ஆர்வம் கொண்டிருந்த டெல் அதற்கு மார்க்கெட் இருப்பதைப் பார்த்தார். பத்து வயதுக்குள் தரகர்களை நம்பாமல் தானே விளம்பரம் கொடுத்து அவர் ஈட்டிய வருமானம் இரண்டாயிரம் டாலர்கள். ஹாஸ்டன் போஸ்ட் செய்தித்தாளுக்கு ஆள் பிடிக்கும் முகவராகப் பள்ளியில் இருந்த காலத்தில் ஒரு விஷயத்தை டெல் கவனித்தார். அந்தப் பத்திரிக்கையைப் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் மற்றும் புது வீடு மாறியவர்கள் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதே அது. திருமணங்களைப் பதிவு செய்யும் கவுண்டி கோர்ட்ஹவுசில் போய் அப்படிப் புதிதாகத் திருமணமானவர்களின் பட்டியலை பெற்றுக்கொண்டும்,அடமானம் அதிகமாகி வீடுகளை விற்கிறவர்களின் பட்டியலை நிதி நிறுவனங்களின் பலகைகளில் இருந்து பெற்றும் அவர்களை இலக்கு வைத்து இயங்கி பள்ளி ஆசிரியரை விட வருட வருமானத்தில் அதிகம் ஈட்டும் மாயத்தை அவர் அடைந்தார்.

வீட்டில் ஆப்பிள் கணினியை அவருக்கு வாங்கித்தந்த பொழுது அதைப் பிரித்துச் சேர்த்துக் கற்றுக்கொண்டார். கணினிகளை எப்படி வடிவமைப்பது என்று நடந்த பயிற்சி பட்டறையில் சேர்ந்தும் தன்னுடைய ஆர்வத்தைப் பெருக்கிக்கொண்ட அவர் இரண்டு அம்சங்களைக் கவனித்தார்-கணினிகளைத் தரகர்கள் கொள்ளை லாபத்தில் விற்கிறார்கள்,மேலும்,கணினியை வாங்கும் நுகர்வோருக்குப் பெரிதாக எந்த உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்படுவதே இல்லை என்பது தான் அது. டெக்சாஸ் பல்கலையில் பையனுக்குச் சீட் கிடைத்திருந்தது. அங்கே கணினி உதிரி பாகங்களை வாங்கி அதைக்கொண்டு கணினியை மேம்படுத்தி விற்கிற வேலையில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார் டெல். கல்லூரி பக்கம் எட்டிப்பார்ப்பது எப்பொழுதாவது தான் என்கிற அளவுக்குத் தொழிலில் மூழ்கிப்போயிருந்தார். ஒரு நாள் பெற்றோர் மகனை சோதனை செய்ய அறைக்கு வந்த பொழுது நண்பனின் பாத்ரூம் திரைக்குப் பின்னால் எல்லாக் கணினிகளையும் ஒளித்து வைத்துப் பெருமூச்சுவிட்டார். அதற்குப் பின்னர் ஆறு மாதகாலம் விடுப்பெடுத்துக் கொண்டு மீண்டும் வந்து பட்டப்படிப்பில் சேரலாம் என்கிற கல்லூரியின் விதியை பயன்படுத்திக்கொண்டு கணினிகளைத் தயாரிக்கும் டெல் நிறுவனத்தை வெறும் ஆயிரம் டாலர் முதலீட்டில் துவங்கினார். அவரின் கனவு மிகவும் எளிமையானது,”ஐ.பி.எம்மை விடப் பெரிய நிறுவனமாக என்னுடையதை மாற்ற வேண்டும்.”

ஸ்டாம்ப் விற்றல்,ஹாஸ்டன் போஸ்ட் செய்தித்தாளை கொண்டு சேர்த்த அனுபவம் ஆகியவற்றில் கற்றுக்கொண்டு இடைத்தரகர்களை நீக்கி நேரடியாகச் சேவை தருவது என்பதை இங்கே அமல்படுத்தினார். வாடிக்கையாளர்களின் குறைகள் காது கொடுத்துக் கேட்கப்பட்டுத் தீர்வுகள் தரப்பட்டன. அதற்கேற்ப இன்வென்ட்ரி எனப்படும் அடுத்தடுத்த தயாரிப்புகளுக்குத் தேவையான ஸ்டாக் வைத்துக்கொல்லப்பட்டது. மூன்றே நபர்கள் இருக்கையில் அமர்ந்து ஸ்க்ரூ திருகி கணினிகளைத் தயாரிக்க ஆரம்பித்ததில் தான் அந்தப் பயணம் துவங்கியது.

தரகர்கள் இல்லாமல் நேரடியாகத் தானே இறங்கி கணினிகளை விற்க ஆரம்பித்தது புதிய முயற்சி என்றால் அதனால் கணினியின் விலையையும் குறைவாகக் கொடுக்க முடிந்தது. ஐ.பி.எம்.க்கு ஏற்ற கணினிகளையும் தயாரித்து அப்பொழுதிருந்த சந்தையைப் பிடிக்க ஆரம்பித்தார். அதிவேக கணினிகளைக் குறைந்த விலையில் இவரின் நிறுவனம் தர ஆரம்பிக்கப் போட்டி நிறுவனங்களும் தங்களின் விலையைக் குறைக்க வேண்டியது.

நேரடியாக வாடிக்கையாளரை சென்றடைகிற பொழுது சேவைத்திறன் குறையும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது. அதை மாற்ற மூன்று லட்சம் அழைப்புகளைப் போன்,நேரடிச் சந்திப்பு,இணையம் ஆகியவற்றின் மூலம் பெற்று உடனடியாக அவற்றை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகள்,குறைகள்,விருப்பங்கள்,கவலைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப சரியானவற்றைத் தருவதை முடிவு செய்தது பெரிய வெற்றியை தந்தது. “அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிய அவர்களையே கேளுங்கள் !” என்பது டெல் தந்த புதிய தாரக மந்திரம்
பிரிட்டனில் நுழைய முடிவு செய்து நேரடி மாதிரியோடு போய்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நின்றால் இருந்த இருபத்தி இரண்டு நிருபர்களில் ஒரே ஒருவரை தவிர மற்ற அனைவரும் இந்தத் திட்டம் இங்கே செல்லாது என்றார்கள். “நீங்கள் வீட்டுக்கு போங்க பாஸ் !” என்றுவிட்டு இறங்கி அடித்தார்கள். அங்கே நம்பர் ஒன் நிறுவனம் ஆனார்கள\. அந்தந்த நாட்டின் கலாசாரத் தேவைகளுக்கு ஏற்ப தங்களின் சேவையை மாற்றியமைத்துக் கொண்டார்கள். ஜெர்மனி என்றால் நேரடியாக அழைக்காமல் முதலில் பேக்ஸ் மூலம் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுப் பின்னர்க் களம் புகுந்து கலக்குவது-இப்படி !

திடீரென்று நன்றாகப் போய்க்கொண்டு இருந்த நிறுவன செயல்பாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. முதல் முறையாக நஷ்டம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்று பார்த்தால் இன்வென்ட்ரி முறையில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. திடீரெண்டு உதிரி பாகங்களின் விலை வீழ்ந்தது ; ஓவராக இருப்பு வைத்திருந்து வீழ்ச்சி சுழற்சியில் சிக்கிக்கொண்டார்கள். போதாது என்று அடிக்கடி மாறும் தொழில்நுட்பம் ஏற்கனவே இருந்த உதிரிபாகங்களின் தேவையை முழுவதும் காலி செய்திருந்தது. உட்கார்ந்து யோசித்து உடனடியாகச் செயலாற்றினார்கள். ஒரு வாரத்துக்கு மட்டும் ஸ்டாக் வைத்துக்கொள்வது அதுவும் கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்பவே ஸ்டாக் வைத்துக்கொள்வது என்று இறங்கி அடித்தார்கள். நூற்றி நாற்பது நிறுவனங்களிடம் வாங்கிக்கொண்டு இருந்த உதிரி பாகங்களை வெறும் நாற்பது நிறுவனங்களிடம் வாங்குவது என்று சிக்கல்களைக் குறைத்து இயங்கினார்கள். ஆய்வுகளை முடுக்கினார்கள். இருப்பை மிக மோசமாக நிர்வகித்த நிறுவனம் என்கிற பெயரில் இருந்து இருப்பைக் கச்சிதமாகக் கவனிக்கும் நம்பர்.ஒன் நிறுவனம் என்று பெயர் வந்து சேர்ந்தது.

நல்ல லாபம் வருகிறது,பில்லியன் டாலர் நிறுவனம் ஆகிவிட்டோம் என்று டெல் முடங்கிவிடவில்லை. ‘வளர் அல்லது இறந்து போ !’ என்கிற மந்திரத்தோடு pc கணினிகள் பக்கம் நுழைந்தார். டெஸ்க்டாப் தயாரித்தவர்கள் இதை வடிவமைக்கப் போய்ச் சொதப்பினார்கள். ஆப்பிளில் இருந்து வந்த ஜான் மெடிகா மற்ற எல்லா pc க்களும் தேறாது என்று சொல்லி latitude xp க்கு மட்டும் டிக் அடித்தார். வலியோடு மற்ற மாதிரிகளை மூட்டை கட்டிவிட்டு இதில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். அப்பொழுது சோனி கொண்டு வந்திருந்த அதிகப் பேட்டரி காலத்தைத் தரக்கூடிய லித்தியம் பேட்டரிக்களை நம்பி சேர்த்தார் டெல். இரண்டு மணிநேரம் கூடச் சார்ஜ் தாங்காத pc க்கள் இருந்த காலத்தில் விமானத்தில் நிருபர்களை ஏற்றி தங்களின் pc க்களைத் தந்து ஐந்தரை மணிநேரம் பயணம் செய்ய விட்டார்கள். அப்பொழுதும் அப்படியே ஆனில் இருந்த கணினி அடுத்த நாள் தலைப்பு செய்தி ஆனது.

சர்வர்கள் மார்கெட் தன்னுடைய போட்டியாளர்களின் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலான லாபத்தைத் தருவதை டெல் கண்டார். அதில் இறங்க முடிவு செய்தார். குறைந்த விலை,அதிக தரம்,நேரடி சேவை என்று கலந்து கட்டி அடித்ததில் மற்ற நிறுவனங்கள் அலறி அடித்துக்கொண்டு விலையை இருபது சதவிகிதம் குறைக்க வேண்டியது ஆகிற்று. இவர்கள் முதல் இரண்டு இடங்களை இயல்பாக அடைந்தார்கள். இணையத்தில் முதலில் தடம் பதித்த ஹார்ட்வேர் நிறுவனம் இவர்கள் தான். அங்கே தொடர்ந்து தீவிரமாகப் பிசினஸ் செய்ய ஆரம்பித்தார்கள். இணையம் வந்த காலத்திலேயே தங்களின் இணைய முகவரியை தீவிரமாகப் பிரபலப்படுத்தினார்கள். உடனுக்குடன் சாட் செய்து சிக்கலை தீர்க்கும் முறையைக் கொண்டு வந்து நல்ல பெயர் சம்பாதித்து மில்லியன்களை அள்ளினார்கள். அவ்வப்பொழுது மக்களின் பல்ஸை அவர்களோடு கலந்தும்,இந்த சாட்களில் பேசியும் அறிந்துகொள்வதை டெல் தொடர்ந்து செய்கிறார்.

டெல் ஆயிரம் டாலரில் துவங்கி உலகின் அதிசய நிறுவனங்களில் ஒன்றாக இன்றும் பீடுநடை போடுகிறது
( DIRECT FROM DELL நூலின் சாரம் இது )

images (1)

என் தலைவர் சூப்பர் மச்சி!


நாயக வழிபாடு ஒன்றும் நமக்கு புதிதில்லை. காந்தியம் என்று ஒரு தனித்த சித்தாந்தம் இல்லை ; என் கருத்துக்களை விட உங்களின் மனசாட்சிக்கு சரியென்று பட்டதை செய்யுங்கள் என்ற காந்தியை,அரசின்மைவாதியான அவரை அரசாங்கத்தின் முகமாக ஆக்கி அவரின் உண்மைக்கொள்கைகளை விட்டு வெகு தூரம் நகர்ந்து வந்துவிட்டோம்

‘சீசரைப் போல அதிகாரம்,புகழ் நேருவின் தலையில் ஏறுகிறது. இது நல்லதற்கில்லை !’ என்று எழுதிய நேருவை சிலையாக அவர் காலத்திலேயே உலவ விட்டார்கள். எல்லா வகையான நாயக வழிபாட்டையும் அடித்து நொறுக்கிய பெரியாரையும் கடவுள் போல ஆக்கி வைத்திருக்கிறோம். பெரும்பாலும் ஏதேனும் விமர்சனங்கள் வைத்தால் அதுவும் உண்டென்று சொல்லாமல் கடுமையாக எதிர்கொள்ளப்படுவோம். ‘நம் நாட்டிற்கு நாயக வழிபாடு மிகப்பெரிய ஆபத்து !’ என்ற அண்ணல் அம்பேத்கர் பெயரிலேயே தினத்தைக் கொண்டாடிக்கொண்டு அவரின் சொத்துக்களை கூட ஒழுங்காக பராமரிக்காமல் விட்டிருக்கிறார்கள். அவரையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒருவராகவே கட்டமைத்திருக்கிறோம்.

அவர்கள் அப்படி செய்ய சொன்னார்களா ? என்கிற கேள்வி நியாயமானது. ஆனால்,அவர்கள் இப்படியாக ஒரு அடையாளமாக மட்டுமே பெரும்பாலான சமயங்களில் முடக்கப்படுவதை கவனிக்க வேண்டி இருக்கிறது. உன்னதமான நோக்கங்களோடு இயங்கிய அவர்கள் சிந்தனையை உள்வாங்கி சீர்தூக்கி முன்னகராமல் அப்படியே நின்றுவிடுவது அறிவுச்சூழலில் நடக்கிறது என்பது வருத்தம் தருவது என்றால்

தற்போதைய பெரும்பாலும் ஜனநாயகத்தன்மை துறந்த தலைவர்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பீடத்தலைவர்களாக இங்கேயிருக்கும் சூழலில் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அப்பாவித் தமிழனும்,படித்த தமிழக குடிமகனும் சினிமா நாயகனுக்கு பாலபிஷேகம் துவங்கி சிலை வைத்தல் வரை நீள்கிறான். கொண்டாட்டங்கள் என்பது தவறில்லை,கடவுள் போலவும்,களங்கமற்றவராகவும்,புனிதமான தெய்வம் போல மாற்றப்படுவது இங்கே சத்தமில்லாமல் நடப்பதை கவலையோடு கவனிக்க வேண்டும்.

நமக்கு ஒரு தலைவன் தேவையாக இருக்கிறான் என்று மட்டும் இதை நிறுத்திவைக்க முடியாது. தன்னளவில் ஈர்ப்பை சுற்றியிருக்கிறவர்களிடம் உண்டு செய்ய முடியாத நிலையில் ஒரு மாய நாயகனின் ரசிகனாக முன்னிறுத்திக்கொண்டு கனவுலகில் மிதக்கிற உளவியல் சிக்கலை கவலையோடு அணுக வேண்டும். ‘அவரிடம் இவை முதலிய குறைகள் உண்டு’ என்று சொன்னால் ‘அதெல்லாம் வேணாம். எனக்கு ரொம்ப பிடிக்கும். போதும்.’என்பது கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருள்வது போலத்தான்.

யாரோ ஒரு நாயகன் நமக்கு தேவை என்பதைத் தாண்டி நம்முடைய பகுத்தறிவை, சுயத்தை, பயனற்றவற்றை செய்யாமை ஆகியவற்றை நோக்கி எப்பொழுது நகர்வோமோ

சிவராம காரந்த் எனும் எழுத்துலக இயக்கம் !


சிவராம் காரந்த் கன்னட எழுத்துலகின் மகத்தான ஆளுமைகளில் ஒருவர். இயக்கமாகவே தன்னை அமைத்துக்கொண்ட அவரின் வாழ்க்கையில் இருந்து பத்து முத்துக்கள்:

கர்நாடகாவின் சாலிகிராமாவில் பிறந்த அவர் பள்ளிக்காலத்தில் கர்நாடகாவின் பண்டைய கலைவடிவமான யட்சகானத்தை ஆசிரியரிடம் கற்றார். தாகூரின் சாந்தி நிகேதனில் சேர தன் தந்தையை கேட்டுகொண்டார். அவர் அனுமதி தராமல் போகவே தன் சொந்த மாநிலத்திலேயே கல்லூரிக் கல்வி பயின்றார்

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு கல்லூரிப் படிப்பை பாதியில் துறந்தார். கதர் ஆடைகளை தானே நெய்து விற்றார். காசி,பிராயக் முதலிய இடங்களில் எப்படி ஆன்மிகம் என்கிற பெயரில் சாமியார்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்பதை பார்த்து மனம் வெறுத்து சமூக சீர்திருத்தம் பக்கம் மனதை திருப்பினார்

பின்னர் நாடகங்கள்,நாவல்கள் ஆகியன எழுத ஆரம்பித்தார். அவரின்  முதல் நாவலான சோமாவின் மேளம் நாவல் தலித் ஒருவர் நிலத்தைக் கூட தன்னுடையது ஆக்க முடியாமல் துன்பப்படுவதை பற்றி பேசியது. மொத்தமாக அவர் எழுதிய நாவல்களின் எண்ணிக்கை மட்டும் நாற்பத்தைந்து !

குழந்தைகளுக்கு என்று கன்னடத்தில் ஏதேனும் கலைக்களஞ்சியம் இருக்குமா என்று தேடிப்பார்த்த பொழுது எதுவும் கண்ணில் படாமல் போகவே அவரே தீவிரமாக ஆய்வு செய்து பால பிரபஞ்சா என்கிற கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். அதற்கு ஹெப்பர் என்பவரைக் கொண்டு ஒவியங்கள் வரைய வைத்து தானே புகைப்படங்கள் எடுத்து நூலை முடித்தார். ஜெர்மனி வரை நூலை அனுப்பி செம்மைப்படுத்தி குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை மாற்றினார்.

அரசின் கட்டிடக்கலை பற்றிய புத்தகம் திருப்தி தராமல் இருக்கவே அதைப்பற்றியும் ஆய்வுகள் செய்து அற்புதமான நூல் ஒன்றை உருவாக்கினார். மூத்தோருக்கான அறிவியல் கலைக்களஞ்சியத்தையும் நான்கு பாகங்களில் எழுதி பிரமிக்க வைத்தார். சட்டக்கலை நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்த்தார். அடிக்கடி பயணம் போய் பழங்குடியின மக்கள்,கிராம மக்களின் பண்பாடுகள் ஆகியவற்றை அவர் புரிந்து கொண்டார்.

யட்சகானா என்கிற கலை வடிவத்தை ஒற்றை ஆளாக அழிவிலிருந்து மீட்டு கர்நாடகா முழுக்க அவர் பிரபலப்படுத்தினார். அதன் நாட்டார் மரபை மீட்டெடுத்தார். பாலே முதலிய நடன முறைகளை அதில் அறிமுகப்படுத்தி சோதனைகள் செய்தார். தொலைந்து போன பழைய ராகங்கள்,இசைக்கருவிகளை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

அவரின் சுயசரிதை ‘வேடிக்கை மனதின் பத்து முகங்கள்’ என்கிற தலைப்பில் வெளியானது. “பிறர் தங்களின் பேனாவால் என்னைக் கொல்வதற்கு பதிலாக நானே என்னை கொன்று கொள்கிறேன்.” என்றார் அவர்

தீவிரமான சூழலியல் போராளி. காடுகள் மற்றும் மலைத்தோட்டங்களை காக்கும் போராட்டங்களை முதலிலும் பின்னர் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தார்.  ராணி பென்னூர் எனும் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்கள் நடந்த பொழுது அவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் செய்தார்.

உத்தர கர்நாடகத்தில் பெட்தி நதியின் மீது எழ இருந்த நீர்மின் திட்டத்தை  எதிர்த்து பெரிய இயக்கமொன்றுக்கு தலைமை தாங்கினார். அணு சக்திக்கு எதிராக தீவிரமாக வாழ்நாள் முழுக்க இயங்கியவர். செர்நோபில் நிகழ்வுக்கு பிறகு கர்நாடகத்தில் அணு உலை எழாமல் இருக்கவும் செய்தார். இந்திய சுற்றுச்சூழலை பற்றிய முதல் மக்கள் அறிக்கையை உருவாக்கினார்

அவருக்கு ஞானபீட விருது,சாகித்திய அகாதமி விருது முதலியவை வழங்கப்பட்டன. அவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அதை இந்திரா நெருக்கடி நிலையை கொண்டு வந்து திருப்பி தந்துவிட்டு கம்பீரமாக வெளிவந்தார். தன்னுடைய தொண்ணூற்றி ஐந்தாவது வயதிலும் பறவைகள் பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.

அவர் தான் அன்னிபெசன்ட் !


அன்னிபெசன்ட் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர் என்றாலும் மனதால்,உணர்வுகளால் இந்தியராக உணர்ந்த விடுதலைப்போரின் போராட்டப் பெண்மணி.
அன்னிபெசன்ட் லண்டனில் பிறந்தவர். இளம்வயதிலேயே தந்தையை இழந்த பின்பு அவரின் அம்மாவின் தோழி எலன் மாரியாட் அவரை வளர்த்தார். பின்னர் பிராங்க் பெசன்ட் என்கிற பாதிரியாரை திருமணம் செய்துகொண்டார்

மத நம்பிக்கைகள் அவரைவிட்டு போக ஆரம்பித்தன. கணவரை விட்டுப்பிரிந்தார். பாபியன் எனப்படும் சிந்தனைகள் மூலம் புரட்சியை படிப்படியாக சாதிக்கும் இயக்கத்தில் ஆர்வம் மிகுந்தது. பின்னர் சார்லஸ் பிராட்லா எனும் எம்.பி.யுடன் இணைந்து பெண்களுக்கு வாக்குரிமை,தொழிலாளர் நலன் மேம்பாடு,மக்கள் தொகை கட்டுப்பாடு என்று இயங்கினார்

ப்ரைன்ட் மற்றும் மே பகுதி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்களுக்கு அதிக ஊதியம்,ஒழுங்கான இருப்பிட வசதி ஆகியவற்றை போராட்டங்களின் மூலம் பெற்றுத்தந்தார். இந்தியத்தத்துவங்களின் மீது ப்ளாவட்ஸ்கி அம்மையாரின் புத்தகமான The Secret Doctrine to review நூலை படித்து ஏற்பட்ட ஈர்ப்பால் தியாசபி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

இந்தியா வந்தவர் நாற்பது ஆண்டுகள் இங்கேயே தங்கி சமூகச் சீர்திருத்தம் மற்றும் விடுதலைப்போர் ஆகியவற்றில் பங்குபெற்றார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை வாரணாசியில் துவங்கினார்.
ஹோம் ரூல் இயக்கத்தை மகாராஷ்டிரா,கர்நாடகா,பீரார்,மத்திய மாகாணங்களில் திலகர் தலைமையிலான குழு முன்னெடுக்க இந்தியாவின் மற்ற பகுதிகளில் அன்னிபெசன்ட் அவர்களின் தலைமையிலான போராட்டக்குழு சுயாட்சிக்காக போராடியது

அருண்டேல்,சி.பி.ராமசுவாமி அய்யர்,பி.பி.வாடியா முதலிய தளபதிகள் ஹோம் ரூல் இயக்கத்தை அன்னிபெசன்ட் சார்பாக அடையாரைத் தலைமையகமாக கொண்டு முன்னெடுத்தார்கள். மூன்று லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வெற்றிகரமாக விநியோகிக்க ப்பட்டன
அன்னிபெசன்ட் அவர்களை ஆங்கிலேய அரசு ஜூன் 1917 இல் கைது செய்தது. நாடு முழுக்க போராட்டம் தீவிரமடைந்தது. மாளவியா,ஜின்னா,சுரேந்திரநாத் பேனர்ஜி முதலியோர் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இந்தியாவுக்கான ஆங்கிலேய அரசின் செயலாளர் மாண்டேகு இப்படி எழுதினார் ,”சிவன் தன்னுடைய மனைவியை ஐம்பத்தி இரண்டு துண்டுகளாக வீசினார். மீண்டும் ஐம்பத்தி இரண்டு மனைவிகளாக உருப்பெற்று இருந்தார்கள். அது போலவே அன்னிபெசன்ட் உருவெடுத்து நிற்கிறார் !”

காங்கிரஸ்-முஸ்லீம் லீக் ஒற்றுமையை சாதிப்பதிலும் முக்கிய பங்காற்றினார் அன்னிபெசன்ட். 1918 இல் மதனப்பள்ளி கல்லூரியை ஆந்திராவில் துவங்கினார். பெண்கள் கல்லூரியையும் துவங்கிய அவர் கல்வியை வளர்ப்பதிலும் பங்காற்றினார். காங்கிரசில் மிதவாதிகளோடு இணைந்து பணியாற்றுகிற அற்புதத்தையும் அவரும்,திலகரும் ஏற்படுத்தினார்கள் காங்கிரஸ் இயக்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற சிறப்பும் அவருக்கே உரியது. சிறையில் இருந்து மீண்டதும் புகழின் உச்சத்தில் அவர் இருந்த பொழுது திலகரின் பரிந்துரைப்படி அப்பதவி அவருக்கு வழங்கப்பட்டது

காந்தியின் போராட்ட முறைகளோடு முரண்பட்டார். சட்டரீதியாகவே ஆங்கிலேய அரசை எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. ஆன்மீகத்தில் மூழ்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை மீட்பர் என்றும்,புத்தரின் அவதாரம் என்றும் அவர் அறிவித்தார். ஆனால்,அவரின் இறப்புக்கு பின்னர் அவற்றையெல்லாம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார்

சினிமாவை முதன்முதலில் தந்த லூமியர் சகோதரர்கள்


சலனப்படத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் லூமியர் சகோதரர்கள். . அப்பா ஆன்டோனியோ லூமியர் லியோன் நகரத்தின் சிறந்த ஓவியர். அப்பொழுது பிரபலமாகிக் கொண்டிருந்த புகைப்படத்தயாரிப்புக்கு அவர் வந்து சேர்ந்திருந்தார். அவரின் பிள்ளைகள் அகஸ்டஸ் மற்றும் லூயிஸ் தொழில்நுட்ப பாடம் படித்துவிட்டு அவருக்கு தொழிலில் உதவ வந்தார்கள்

புகைப்படச்சுருளை வேகமாக டெவலப் செய்ய உதவும் உலர் தட்டை பதினேழு வயதில் லூயிஸ் உருவாக்கியது பெருத்த திருப்பமாக அமைந்தது. கோடிக்கணக்கான தட்டுக்களை தயாரித்து வருமானம் அள்ளினார்கள்.

ஆன்டோனியோ எடிசன் அவர்கள் உருவாக்கியிருந்த கைனடோஸ்கோப் திரையிடலுக்குப் போயிருந்தார். அதில் ஒரு ஓட்டை வழியாக காட்சியைப் பார்க்க வேண்டும். ஆர்வம் மேலிட தன் மகன்களிடம் திரும்பி வந்தவர் அதே போல ஒரு படத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிற வகையில் உருவாக்க வேண்டும் என்றார்

எடிசனின் கைனடோஸ்கோப்பில் பிரேம்கள் அதிகம் என்பதால் சத்தம் அதிகமாக உண்டானது. கேமிராவும் பெரிது. அதில் வெவ்வேறு கருவிகள் தனித்து இயக்கப்பட்டதால் காட்சியும் தெளிவாக அமையவில்லை.காஸ்ட்லியாக வேறு இருந்தது . ஒரே ஒருவர் மட்டுமே ஒரு சமயத்தில் பார்க்க முடியும். எல்லாக்கருவிகளையும் ஒரே இடத்துக்குள் இணைத்து லூமியர் சகோதரர்கள் சாதித்தார்கள். பிரேம்களின் எண்ணிக்கையை பன்னிரண்டு முதல் பதினாறு குறைத்து இரைச்சலை பெருமளவில் நீக்கினார்கள் . இடம்விட்டு இடம் கொண்டு போவது சுலபமாக இருந்தது.

முதல் சலனப்படம் 1895 இல் Cinématographe என்கிற கருவியின் மூலம் ப்ராஜக்ட் செய்யப்பட்டு மக்களுக்கு கிராண்ட் கேப் என்கிற இடத்தில் பாரீஸில் காட்டப்பட்டது. லூமியர் ஆலையை விட்டு மக்கள் வெளியேறுவது தான் உலகின் முதல் சலனப்படம் !

பல்வேறு காட்சிகளை சிறு சிறு படங்களாக எடுத்தார்கள். ஆனால்,தாங்கள் புதிய ஒரு புரட்சியை துவங்கி வைத்திருக்கிறோம் என்று அவர்கள் எண்ணவில்லை. மக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு காட்சிகளை காண்பித்தார்கள் . ஐரோப்பா மற்றும் ஆசியக்கண்டம் என்று அவர்கள் பயணம் செய்து தங்களின் படங்களை திரையிட்டுக் காண்பித்தார்கள். ப்ரூசல்ஸ்,லண்டன்,நியூ யார்க் நகரங்களில் நான்கே மாதத்தில் படம் திரையிட அரங்குகளைத் திறந்தார்கள். சலனப்படங்களை திரையில் அவர்கள் காண்பித்த உத்வேகத்தில் பலர் படமெடுக்க கிளம்பினார்கள்

உலகம் முழுக்க இருந்து காட்சிகளை படம்பிடித்துக் கொண்டு வர 1896 ஆம் ஆண்டிலேயே பலருக்கு பயிற்சி தந்து அனுப்பினார்கள். அப்படி பிடிக்கப்பட்ட காட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. தொடர்வண்டியின் வருகை,கடுமையாக உழைக்கும் கொல்லன்,குழந்தைக்கு உணவூட்டுவது,அணிவகுப்பு செய்யும் வீரர்கள்,தோட்டக்காரர் மீது தண்ணீர் பாய்ச்சி குறும்பு செய்யும் சிறுவன் அப்படிக்காட்டப்பட்ட சில காட்சிகள்

உலகின் முதல் டாக்குமெண்டரிக்களும் அவர்கள் எடுத்ததே. லியான் நகரத்து தீயணைப்புத் துறைக்காக ஒரு நான்கு படம் எடுத்துக்கொடுத்தார்கள். வண்ணப் புகைப்படங்கள் உருவாக்கம்,ஆட்டோ க்ரோம் தொழில்நுட்ப உருவாக்கம்,மக்களுக்கு பயன்படும் மருத்துவ ஆய்வுகள் ஆகியவற்றிலும் லூமியர் சகோதரர்கள் அவர்கள் ஈடுபட்டார்கள்

டெஸ்மான்ட் டுடு -மனிதம் பொங்கிய மகத்தான வாழ்க்கை


டெஸ்மான்ட் டுடு அன்பு வழியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்த பாதிரியார். மனதை நெகிழவைக்கும் அவரின் வாழ்க்கை இது :

தென் ஆப்ரிக்காவின் கிளேர்க்ஸ்டோர்ப் நகரில் ஜச்சரியா டுடு மற்றும் அலேட்டாவுக்கு மகனாகப் பிறந்தார். அப்பா ஆசிரியர்,அம்மா கண் பார்வையற்றோர் பள்ளியில் சுத்தப்படுத்தும் மற்றும் சமையல் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவராக டுடு விரும்பினார்,குடும்பச்சூழலால் பணம் போதாமல் அப்பாவைப் போல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து படித்தார்.

கறுப்பின மக்களை தொடர்ந்து ஒதுக்குகிற,சுரண்டுகிற மனோபாவம் வெள்ளையர்கள் மத்தியில் நிலவி வந்தது. அவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருந்த டெஸ்மான்ட் டுடுவுக்கு சோபியாடவுனில் கறுப்பின மக்களின் சேரிகளில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ட்ரெவர் ஹட்டல்ஸ்டான் டுடுவின் அம்மாவுக்கு தன்னுடைய கேப்பை கழட்டி வணக்கம் செலுத்தியது மரியாதை தெரிந்த மனிதர்கள் வெள்ளையர்கள் நடுவிலும் இருப்பார்கள் என்பதை உணர்ந்தார்.

ட்ரெவர் போலவே தானும் பாதிரியார் ஆக உறுதி பூண்டார். பள்ளிகளில் வரலாறு மற்றும் ஆங்கிலம் நடத்திக்கொண்டிருந்த டுடு பண்டு கல்விச்சட்டங்களின் மூலம் கறுப்பின பிள்ளைகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு,மோசமான கட்டிடங்கள்,குறைந்த ஆசிரியர்கள் என்று பாரபட்சம் காட்டும் போக்கை கடைபிடிக்கவே இறையியல் படிக்க இங்கிலாந்து போனார்.

தென் ஆப்ரிக்காவில் பாதிரியராக வாழ்க்கையை மீண்டும் துவங்கியவர் எல்லா சர்ச்சுக்களின் தலைமை பாதிரியார் ஆனார். அந்தப் பொறுப்பில் இருந்தபடி நிறவெறிச் செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்தார்.

சொவேடோ எனும் இடத்தில் பத்தாயிரம் கறுப்பினப் பிள்ளைகள் பாரபட்சமாக நடத்தப்படுவதை எதிர்த்து போராடினார்கள். போலீஸ் துப்பாக்கியால் 500 பிள்ளைகளைச் சுட்டுத்தள்ளியது.ரத்தம் கொதித்த டுடு, மக்களுக்குச் சொன்னார்: “நாம் கண்டிப்பாக வெல்வோம். அதில் சந்தேகமில்லை. உண்மையை பொய்யோ, வெளிச்சத்தை இருளோ, வாழ்வை மரணமோ வெல்ல முடியாது. அன்போடு காத்திருப்போம்.”

லீ நோமலஜியோ என்கிற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இஸ்ரேலால் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் பற்றி விசாரிக்க ஐநாவால் அனுப்பட்ட குழுவுக்கு இவரே பொறுப்பேற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளுக்கு ஒரு யோசனையும் சொன்னார். எங்களை நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களின் முதலீடுகளை எங்களின் அறவழிப் போருக்கு ஆதரவாக, திரும்பப்பெறுங்கள் என்பதுதான் அது. இந்த முதலீடுகளை நிறுத்திக்கொள்வதால் தங்கள் மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் அது ஒரு அற்புதமான நோக்கத்துக்கான இழப்பு என்று அவர் சொன்னார். “அப்படியே!” என்று பல நாடுகள் செயல்பட்டன. தென் ஆப்பிரிக்கா ஸ்தம்பித்தது. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

மண்டேலா ஆயுதம் ஏந்தியபொழுது அதை விமர்சிக்கவில்லை இவர். போராளிகளின் பாதைகள் வேறு என்பது அவரின் கருத்து. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபரானபோது அவரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வரலாற்று தருணம் இவருக்கு வாய்த்தது. “இப்பொழுது நான் இறந்தால் அதைவிட பொருத்தமாக எதுவும் இருக்காது. இந்த கணத்துக்காகத் தானே நாம் தீர்க்கமாக போராடினோம்!” என்று அவர் கரகரக்க சொன்னார்.

தலாய் லாமாவுக்கு தென் ஆப்ரிக்க அரசாங்கம் விசா தர மறுத்த பொழுது அதை கடுமையாக விமர்சித்து சீனாவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி ப்ளேயர் இருவரையும் போர்க்குற்றங்களுக்கு விசாரிக்க வேண்டும் என்றும் முழங்கினார்

டுடு இப்பொழுதும் எய்ட்ஸ், காசநோய் ஒழிப்பு ,வறுமை ஒழிப்பு,பாலின சமத்துவம், ஓரின சேர்க்கையாளர்களின் மீதான தவறான பார்வைகளை மாற்றுதல்,மாற்றுப்பாலினத்தவருக்கு ஆதரவாக செயல்பாடுகள் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

” நீங்கள் எலியின் வாலை தன் காலால் மிதித்து கொண்டிருக்கும் யானையை
தட்டிக்கேட்காமல் நடுநிலைமை காப்பதாக சொன்னால் உங்களின் நடுநிலைமையை எலி
பாராட்டாது.” என்கிற வரிகள் காலத்துக்கும் பொருந்துவது. அவரின்
பிறந்தநாள் இன்று

டெஸ்மான்ட் டுடு -மனிதம் பொங்கிய மகத்தான வாழ்க்கை


டெஸ்மான்ட் டுடு அன்பு வழியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்த பாதிரியார். மனதை நெகிழவைக்கும் அவரின் வாழ்க்கை இது :

தென் ஆப்ரிக்காவின் கிளேர்க்ஸ்டோர்ப் நகரில் ஜச்சரியா டுடு மற்றும் அலேட்டாவுக்கு மகனாகப் பிறந்தார். அப்பா ஆசிரியர்,அம்மா கண் பார்வையற்றோர் பள்ளியில் சுத்தப்படுத்தும் மற்றும் சமையல் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தார். மருத்துவராக டுடு விரும்பினார்,குடும்பச்சூழலால் பணம் போதாமல் அப்பாவைப் போல ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து படித்தார்.

கறுப்பின மக்களை தொடர்ந்து ஒதுக்குகிற,சுரண்டுகிற மனோபாவம் வெள்ளையர்கள் மத்தியில் நிலவி வந்தது. அவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருந்த டெஸ்மான்ட் டுடுவுக்கு சோபியாடவுனில் கறுப்பின மக்களின் சேரிகளில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ட்ரெவர் ஹட்டல்ஸ்டான் டுடுவின் அம்மாவுக்கு தன்னுடைய கேப்பை கழட்டி வணக்கம் செலுத்தியது மரியாதை தெரிந்த மனிதர்கள் வெள்ளையர்கள் நடுவிலும் இருப்பார்கள் என்பதை உணர்ந்தார்.

ட்ரெவர் போலவே தானும் பாதிரியார் ஆக உறுதி பூண்டார். பள்ளிகளில் வரலாறு மற்றும் ஆங்கிலம் நடத்திக்கொண்டிருந்த டுடு பண்டு கல்விச்சட்டங்களின் மூலம் கறுப்பின பிள்ளைகளுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு,மோசமான கட்டிடங்கள்,குறைந்த ஆசிரியர்கள் என்று பாரபட்சம் காட்டும் போக்கை கடைபிடிக்கவே இறையியல் படிக்க இங்கிலாந்து போனார்.

தென் ஆப்ரிக்காவில் பாதிரியராக வாழ்க்கையை மீண்டும் துவங்கியவர் எல்லா சர்ச்சுக்களின் தலைமை பாதிரியார் ஆனார். அந்தப் பொறுப்பில் இருந்தபடி நிறவெறிச் செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்தார்.

சொவேடோ எனும் இடத்தில் பத்தாயிரம் கறுப்பினப் பிள்ளைகள் பாரபட்சமாக நடத்தப்படுவதை எதிர்த்து போராடினார்கள். போலீஸ் துப்பாக்கியால் 500 பிள்ளைகளைச் சுட்டுத்தள்ளியது.ரத்தம் கொதித்த டுடு, மக்களுக்குச் சொன்னார்: “நாம் கண்டிப்பாக வெல்வோம். அதில் சந்தேகமில்லை. உண்மையை பொய்யோ, வெளிச்சத்தை இருளோ, வாழ்வை மரணமோ வெல்ல முடியாது. அன்போடு காத்திருப்போம்.”

லீ நோமலஜியோ என்கிற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இஸ்ரேலால் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் பற்றி விசாரிக்க ஐநாவால் அனுப்பட்ட குழுவுக்கு இவரே பொறுப்பேற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளுக்கு ஒரு யோசனையும் சொன்னார். எங்களை நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களின் முதலீடுகளை எங்களின் அறவழிப் போருக்கு ஆதரவாக, திரும்பப்பெறுங்கள் என்பதுதான் அது. இந்த முதலீடுகளை நிறுத்திக்கொள்வதால் தங்கள் மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றாலும் அது ஒரு அற்புதமான நோக்கத்துக்கான இழப்பு என்று அவர் சொன்னார். “அப்படியே!” என்று பல நாடுகள் செயல்பட்டன. தென் ஆப்பிரிக்கா ஸ்தம்பித்தது. அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

மண்டேலா ஆயுதம் ஏந்தியபொழுது அதை விமர்சிக்கவில்லை இவர். போராளிகளின் பாதைகள் வேறு என்பது அவரின் கருத்து. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அதிபரானபோது அவரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வரலாற்று தருணம் இவருக்கு வாய்த்தது. “இப்பொழுது நான் இறந்தால் அதைவிட பொருத்தமாக எதுவும் இருக்காது. இந்த கணத்துக்காகத் தானே நாம் தீர்க்கமாக போராடினோம்!” என்று அவர் கரகரக்க சொன்னார்.

தலாய் லாமாவுக்கு தென் ஆப்ரிக்க அரசாங்கம் விசா தர மறுத்த பொழுது அதை கடுமையாக விமர்சித்து சீனாவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி ப்ளேயர் இருவரையும் போர்க்குற்றங்களுக்கு விசாரிக்க வேண்டும் என்றும் முழங்கினார்

டுடு இப்பொழுதும் எய்ட்ஸ், காசநோய் ஒழிப்பு ,வறுமை ஒழிப்பு,பாலின சமத்துவம், ஓரின சேர்க்கையாளர்களின் மீதான தவறான பார்வைகளை மாற்றுதல்,மாற்றுப்பாலினத்தவருக்கு ஆதரவாக செயல்பாடுகள் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

” நீங்கள் எலியின் வாலை தன் காலால் மிதித்து கொண்டிருக்கும் யானையை
தட்டிக்கேட்காமல் நடுநிலைமை காப்பதாக சொன்னால் உங்களின் நடுநிலைமையை எலி
பாராட்டாது.” என்கிற வரிகள் காலத்துக்கும் பொருந்துவது. அவரின்
பிறந்தநாள் இன்று

பக்தவத்சலம்- சர்ச்சையும்,சாதனையும் கலந்த வாழ்க்கை !


நாசரேத்பேட்டையில் பிறந்தார் பக்தவத்சலம். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர் சட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் விடுதலைப்போரில் பங்கு கொண்டார். காப்பீட்டு கம்பெனி ஒன்றின் செயலராக தொழில் செய்தாலும் பின்னர் விடுதலைப்போரில் முதலில் ஹோம் ரூல் இயக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் கலந்து கொண்டு காயமுற்றார்.

விடுதலை தினத்தைக் கொண்டாடி ஆறு மாத சிறைத்தண்டனையை 1932 இல் பெற்றார். மேலும் 1940, 1942 ஆகிய ஆண்டுகளில் கைதுசெய்யப்பட்டார். மூன்றாம் முறை கைதானபோது ம.பியின் அம்ரோட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் காமராஜர், வி.வி.கிரி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.

தெய்வ பக்தி அதிகம் கொண்டவர். மாதாமாதம் திருப்பதி போய் தரிசனம் செய்துவிட்டு வருவார். ஓய்வு நேரங்களில் உடனிருக்கும் சிறிய நோட்டில் ஸ்ரீ ராமஜெயம் எழுதுவார். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, எழுதக்கூடியவர். நேரந்தவறாதவர். தெலுங்கு, இந்தி, சமஸ்கிருத மொழிகளையும் கற்றிருந்தார்.

விடுதலைக்குப் பின்னர் ஓமந்தூரார் அமைச்சரவையில் பொதுப்பணி துறை அமைச்சரானார். காமராஜர் தமிழகத்தில் காமராஜர் முதல்வர் பதவியை விட்டு விலகி கட்சியின் தேசியத்தலைவர் ஆனார். தமிழகத்தில் முதல்வர் பொறுப்பு பக்தவத்சலத்திடம் வந்து சேர்ந்தது. அவரே தமிழகத்தை ஆண்ட கடைசி காங்கிரஸ் முதல்வர் என்கிற பெருமைக்குரியவர்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தலைவர் கோல்வால்க்கர் விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில் நினைவுப்பாறை அமைக்க ஏக்நாத் ரானடே தலைமையில் குழு அமைத்த பொழுது அதனை கடுமையாக எதிர்த்தார். பின்னர் முந்நூறுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டபடியால் அவர் அந்த திட்டத்தை இறுதியில் ஏற்றுக்கொண்டார்

பெண் கல்விக்கான தேசிய கவுன்சில் பெண் கல்வியில் முன்னேற்றம் கொண்டு வர செய்ய வேண்டியன குறித்து பரிந்துரை தர இவரையே தலைவராக 1963 யில் நியமித்தது. அக்குழுவின் சார்பாக இருபாலர் கல்வி,கிராமப்புற பெண்களின் கல்வி பயிற்சிக்கு முன்னுரிமை,காணொளிக்காட்சிகளின் மூலம் கல்வி புகட்டல் திருமணமான பெண்களை பகுதி நேரமாக பாடம் நடத்த பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகிவற்றை பரிந்துரைத்தார். ஒன்றாக இருந்த பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி இரண்டையும் பிரித்து, தனித்தனி இயக்ககத்தை உருவாக்கியவரும் அவரே.

இந்தியை தமிழகத்தில் திணிக்கிற வகையில் மத்திய அரசு செயல்பட போராட்டங்கள் வெடித்தன. மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. நிலைமை கைமீறிப்போக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. எழுபது மாணவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் சொல்லின. ஆனால்,ஐநூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா பக்தவத்சலம் அரசு உறுதியாக செயல்பட்டு போராட்டத்தை அடக்குவதாக சொன்னது.

உணவுத்தட்டுப்பாடு தமிழகத்தில் ஆட்சிக்காலத்தில் பெருகியது. சாஸ்திரி அரசின் இரவில் உணவகங்கள் திறக்கக்கூடாது என்கிற ஆணையை அப்படியே நிறைவேற்றியதும் மக்களிடையே கொந்தளிப்பைக் கொண்டு வந்தது. உணவுப் பொருட்களின் விலை எகிறி நின்றது. தேர்தல் காலத்தில் ,’பக்தவச்சலம் அண்ணாச்சி ! அரிசி விலை என்னாச்சி !’ என்று எதிர்க்கட்சிகள் கோஷம் போட்டன

அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பெரிய அதிர்ச்சியாக பூவராகவனைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் தோற்றிருந்தார்கள். பக்தவத்சலம் தன்னுடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராஜரத்தினம் என்கிற தி.மு.க. வேட்பாளரிடம் 8926 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் அந்த தேர்தலுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து படிப்படியாக விலகிக்கொண்டார். திமுகவின் ஆட்சியமைப்பை விஷக்கிருமிகள் பரவ ஆரம்பித்துவிட்டன என்று அறிவித்தார்.

புகழ் பெற்ற சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் இவரின் மகள்,முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இவரின் பேத்தியார். எண்பத்தி ஒன்பது வயதில் அவர் மரணமடைந்த பிறகு காமராஜரின் நினைவகம் இருக்கும் காந்தி மண்டபத்தில் அருகில் அடக்கம் செய்யப்பட்டார்