எழுத்தாளர் பாமா கிறிஸ்துவ மடத்தில் கண்ணியாஸ்திரியாகப் போய் அங்கே இறைவனின் ஊழியர்களாக அவர்கள் சற்றுமில்லை என உணர்ந்து விலகிய கதையைச் சொல்கிறார். அவரின் நாவல் அந்தத் துன்பங்களை ‘கருக்கு’ எனும் தலைப்பில் பேச ஊர்க்காரர்கள் பலரும் அவரைத் திட்டவே, அடுத்த நாவலில் உண்மையைப் புனைவாக்கும் திறத்தை செம்மைப்படுத்தியுள்ளார்.
பெண்களுக்குப் புனிதம் என்று கருதப்படும் தாலி, திருமணம் ஆகியவற்றின் மீது மிகக்கூர்மையான விமர்சனங்களைப் பதிகிறார். தலித்துகளின் ஆதி தெய்வங்கள் அவர்களின் போராட்ட குணத்தைப் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக அருந்ததியர்கள் வழிபடும் வெறியன் என்கிற தெய்வம் செருப்பு போட்டுத் தெருவில் போகக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதி கட்டுப்பாட்டை எதிர்த்து உயிர்நீத்த ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த வீரனின் கதை. தனியாக இருப்பதால் மாலை வீட்டுக்கு வந்தபின்பு அருகில் இருப்பவர்களிடம் சில மணிநேரமாவது அருகில் இருப்பவர்களுடன் உரையாடி அவதூறாகப் பேசுவதைத் தவிர்ப்பதை சொல்கிறார். அப்படியும் தொடர்ந்து எழுத்தில் தன்னை நிறைத்துக்கொள்கிற சாதனையைச் செய்கிறார்.
எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் குடும்பம் என்கிற அமைப்புக்குள் ஜனநாயக ரீதியாகச் செயல்படுவது சாத்தியம் என்றும், உலகமயமாக்கல் முழுக்க வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்றல்ல அது நுட்பமான பன்முகச்சார்புநிலை, சோவியத் ரஷ்யாவுக்கு வால்பிடித்த காலம் போய் எல்லாருடனும் இணைந்து போகிற தருணம் என்று வர்ணிக்கிறார்.
கலாசாரம் என்கிற பெயரில் தலித்துகள், பெண்கள், திருநங்கைகள் ஒடுக்கப்படுவதாக ஷோபா சக்தி முகத்தில் அறைவதைப் போலச் சொல்கிறார். இந்தியாவுக்கு ஒரு அண்ணல் அம்பேத்கரும், தமிழகத்துக்கு ஒரு தந்தை பெரியாரும் கிடைத்ததைப் போல ஈழத்து தலித் மக்களுக்கு விடுதலை சாத்தியமாகவில்லை என்று வலியோடு சொல்லும் அவர் இதுவரை மூன்றே எம்.பிக்கள் தான் தலித்துகளில் இருந்து வந்துள்ளார்கள் என்பதையும், தமிழகத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டின் சாயல்கூட இல்லாமல் ஈழத்து ஜாதியம் பார்த்துக்கொள்கிறது. புலிகளிடம் கூட இந்த அணுகுமுறை இருந்ததில்லை என்கிறார். வெள்ளாள ஆதிக்கம் தான் பிரதானம் என்றாலும் அது பார்ப்பனியத்தையே பின்பற்றுகிறது என்கிறார் இவர்.
ஓஷோ நூல்களை மொழிபெயர்க்கும் இடதுசாரியான கவிஞர் புவியரசு நாத்திகம் பேசிய ஆன்மீகவாதி என்றும் ஓஷோவைப் புகழ்கிறார். காஸி நஸ்ருல் இஸ்லாம் எனும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கவிஞர் பெரும் புரட்சிக்காரர். ‘ உழைப்பவர் காலடி மண்ணெடுத்து திருநீறாகப் பூசிக்கொள்ள வேண்டும்.’ என்று அவர் பாடிச் சென்றிருக்கிறார். அவரின் நூலை மொழிபெயர்த்து சாகித்திய அகாதமி விருது பெற்றார் கவிஞர் புவியரசு.

எழுத்தாளர் ஜீவகாருண்யன் ஜெயகாந்தன் முற்போக்காக எழுதினாலும், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தை ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ எனச் சிறுகதை எழுதி எதிர்க்கிற அவரின் பிற்போக்கு போக்கையும் சுட்டுகிறார். இடதுசாரி இயக்கத்தின் இலக்கியப் பங்களிப்பு குறைந்து விட்டதையும், திராவிட இயக்கங்களில் இலக்கியமே தோன்றுவதில்லை என்பதையும், பிஜேபி மதம் சார்ந்த இலக்கியத்தை முன்வைப்பதையும் சொல்லி எழுதுவதையும், முறையாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதையும் சாதித்தால் வெறுப்பு சக்திகளிடம் இருந்து மக்களின் சிந்தனையை மீட்க முடியும் என முடிக்கிறார்.
நரிக்குறவ மாணவனைப் பள்ளியில் சேர்த்தது, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தது, மதுரையில் புத்தகக் கண்காட்சி நடத்தி சாதித்தது, அறிவொளி இயக்கத்தோடு இணைந்து இயங்கியது, கல்விக்கடன்களை விரைவாக வழங்கியது என்று உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் குறிப்பிடும் நெகிழவைக்கும் கதைகள் ஏராளம்.
திராவிட இயக்க பின்புலம் கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பல்முக ஆளுமை, ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. கல்வெட்டுகளைப் படித்தல், நாணயங்களைப் பற்றி ஆய்தல், வரலாற்றில் தீராத ஆர்வம், வைணவ இலக்கியங்களில் புலமை, பறவைகளை நோக்குதல் என்று அசரடிக்கிறார். நூலகங்களை மாற்ற அவர் எடுத்த முன்முயற்சிகளைப் பேசுகிறார். அவை இப்பொழுது தேங்கிப் போய்விட்டதை நினைத்து வருந்தவே முடிகிறது.
ஆதிக்க ஜாதியில் இருந்து வந்திருப்பினும் பெரியார் இயலுக்குப் பெருந்தொண்டாற்றி இருக்கும் வ.கீதா அவர்களின் நேர்முகம் பிரமிப்பானது. நிலப் பகிர்வு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தல், பொது வெளியில் இருந்து ஜாதியை வெளியேற்றல் ஆகியவற்றைச் சாதிக்காமல் போனதால் தலித்துகள் ஒடுக்கப்படுவது தொடர்வதால் பெரியார் அவர்களின் தாக்குதல் இலக்காகிப் போனதை சொல்கிறார். பச்சாதாபமோ, மேம்போக்கான உரிமைப் பேச்சு என்கிற அளவிலேயே தீண்டாமை, அந்நியமாதல் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம் என்கிறார். பெண்ணியம் சார்ந்து பலரை இணைத்துக்கொண்ட செயல்பட்ட, செயல்படும் அவர் எந்த இயக்கங்களும் பெண்களின் சிக்கல்களுக்குப் பெரும்பாலும் கவனம் தராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
வைதீகப் பின்னணியைக் கொண்ட அவரின் அப்பா குஜராத் படுகொலைகளுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் தானும் பங்குகொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். நாமம் அணிந்து காட்சியளிக்கும் தான் விழாவுக்கு வந்தால் உறுத்தலாக இருக்குமோ என்கிற ஐயம் அவருக்கு. பெண்களுக்கு எதிரான வன்முறை, அடக்குமுறையை ஜாதி, வர்க்கம் ஆகியவற்றைத் தாக்காமல் ஒழிக்க முடியாது என்கிறார்.
தன்னுடைய தலைவனைத் தெருவில் தேடுவதாகச் சொல்லும் கமல்ஹாசன் இயேசு, ராமானுஜர் நாத்திகர்கள் தான். பெரியார் தனக்கு முந்தைய பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி இன்னமும் பலபடிகள் முன்னே சென்றதால் அவரை மிகவும் பிடிக்கும் என்கிறார். திராவிட வேதம் என்று சொல்லி நாலாயிர திவ்ய பிரபந்தமும், விவிலியக் கதைகள் தேம்பாவணி மூலம் மக்களைச் சென்றடைய முயன்றதும் மதம் பரப்பும் சூழ்ச்சியே என்று போட்டு உடைக்கிறார். தான் இளம்வயதில் கிறிஸ்துவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதையும் சொல்கிறார். 376 டேக்குகள் எடுத்த சார்லி சாப்ளின் தன்னுடைய ஓயாத முயற்சிகளுக்கு உத்வேகம் என்று சொல்கிறார் கமல்.
சிவாஜியை தொடர்ந்து விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கமல் தன்னுடைய ஞானகுரு என்பது மக்களுக்காகத் தானே என்கிற கேள்விக்கு அவர் தரும் நெடிய பதில் அற்புதமானது. ‘பிசைவுக்கு இசைதல் என்பதைச் சிவாஜி மேற்கொண்டார்; அவர் சிந்திக்கலை என்று சொல்லமுடியாது. உள்ளே என்ன நினைச்சாரோ? வெளியே சொல்லாமல் இருந்தார். அவரைச் சுற்றி வழிபடும் பக்தர்களாக நிறைந்து போனார்கள். தங்கச் சுரங்கம் என்கிற படத்தில் எம்ஜிஆர் போலக் கண்ணாடி போட்டு ஆடிப்பாடி அவர் நடித்ததை, ‘இந்தக் கிணற்றில் நீங்க ஏன் விழுந்தீங்க?’ என்று கேட்டதற்குப் பொறுத்துக்கொண்டு, ‘அந்த மாதிரி கெணறு வரும், நீயும் விழுவே’ என்றார் சிவாஜி. அப்படி நான் விழுந்த கிணறுதான் சகலகலாவல்லவன்.’ என்கிறார்.
உஷா சுப்ரமணியன் அடையாளம் தொலைத்து, நகரங்களை நோக்கி தலித்துகள் நகரவேண்டும், அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று சொன்னாலும் இட ஒதுக்கீடு, தொழிலாளர் போராட்டங்கள், பெண்ணியம் ஆகியவற்றுக்கு எதிரான எழுத்துக்களை இயல்பான ஒன்றைப் பதிகிறேன் என்று பதிந்திருப்பது புலனாகிறது. காஞ்சி பெரியவரைப் பற்றி அவர் சொல்பவை அதிர்ச்சி ரகம். கைம்பெண் ஆன தன்னுடைய பாட்டியை முடி வைத்திருக்கிறார் என்று பார்க்க மறுத்தவர் அவர் என்று போட்டு உடைக்கிறார். ஒரு அமைச்சர் தலித் என்பதற்காக அவருக்கும் இவருக்கும் இடையே தொட்டி வைத்து மாட்டை அருந்தச் செய்து பரிகாரம் செய்து பார்த்தார் என்பது கடும் கோபத்தை மதப் பீடங்களின் மீது உண்டாக்குகிறது.
மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் மொழி வெறுப்பு என்பது தேவையில்லை, எல்லா மொழிகளையும் கற்கலாம் என்று சொல்லி தானும் ஏழு மொழிகளைக் கற்றிருப்பதைக் குறிக்கிறார். எனினும் மலையாள மக்களின் எழுத்தை மட்டும் மொழிபெயர்க்க காரணம் கேட்டதற்கு, அவர்களின் பண்பாடு, வாழ்க்கை தனக்குத் தெளிவாகத் தெரிவதால் அவர்களின் எழுத்தை மொழிபெயர்ப்பது நியாயம் செய்வது என்கிறார். தகழியின் எழுத்துக்காகக் குட்ட்நாடன் பகுதி வட்டார வழக்கையும், விஷக்கன்னி மொழிபெயர்ப்புக்கு வயநாடு மக்களின் வட்டார வழக்கையும் தெளிந்திருக்கிறார்.
கேரளாவில் முப்பது சதவிகிதம் அளவுக்கு அரையம் (ராயல்டி) வழங்கப்படுகிறது என்பதையும், அங்கே பல்வேறு வகையான நூல்கள் பெரும் வரவேற்பை பெறுவதாகவும் கூறுகிறார். நாற்பத்தி நான்கு வருடங்களில் முப்பத்தி நான்கே நூல்களை மொழிபெயர்த்திருக்கும் அவர் தனக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்த பொழுது மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வந்த விவசாயியின் கரங்களைக் குலுக்கிக் கொண்டது நெகிழ்வோடு சொல்கிறார்.
எழுத்தாளர் சு.வெங்கடேசன் தன்னுடைய காவல் கோட்டம் நாவல் ஜாதியம், பழம்பெருமை ஆகியவற்றை மீட்டெடுக்கிறது என்பதை மறுதலிக்கிறார். குடிக்காவலும், கோட்டையும் நிறைந்த ஒரே ஊர் மதுரை, அப்பகுதி மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறையான குற்றப்பரம்பரை சட்டத்தைப் பற்றிப் பதிந்திருப்பதாகவும், கள்ளம் பற்றி எக்கச்சக்கமானவற்றைப் பேசாமல் விட்டிருப்பதைச் சொல்கிறார். திருச்செங்கோட்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு இருந்த இரண்டு பங்கு நிலத்தை இந்துத்வா சக்திகள் கைப்பற்ற முனைந்திருக்கின்றன. அப்பொழுது இடதுசாரிகள் எளிய மக்களோடு கைகோர்த்தார்கள். குன்னக்குடி அடிகளார், ‘பட்டையும், கொட்டையும் போட்ட எல்லாரையும் சேர்த்துக்கோ’ என்று சொல்லி ஆதரவுக்கரம் நீட்டி மதவாத சக்திகளைப் பல்லாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு விரட்டியிருக்கிறார்கள்.
நிறைவான நூல் இது.
அகநி வெளியீடு
பக்கங்கள்: 240
விலை: ரூபாய். 150
அ.வெண்ணிலா