அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

கங்குலியும், நேருவும்!


2005 இல் பாகிஸ்தான் தொடருக்கு பிந்தைய நிலையில் தாதா இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த சூழலில் அவரைப்பற்றி டெலிகிராப் இதழில் வெளிவந்த Ramachandra Guha வின் கட்டுரை.

வங்காளிகள் வெகுகாலமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களாக, மற்ற பகுதிகளில் இருந்து எதோ ஒரு வகையில் விலக்கப்பட்டவர்களாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக தங்களை உணர்ந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய ஆட்டம், அணித்தலைமையால் பல காலங்களாக வங்கம் சந்தித்த அவமானங்களுக்கு பெருமளவில் பழி தீர்த்திருக்கிறார் கங்குலி . கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தலைநகரம், மறைக்கப்பட்ட நேதாஜியின் வரலாறு,மத்திய அரசு தரும் நிதியில் காட்டப்படும் பாரபட்சம் முதலிய பல்வேறு அவமானங்கள், வருடக்கணக்காக ஏறிக்கொண்டே போகும் ஏளனங்கள் என அனைத்தையும் கங்குலியின் சதங்கள், வெற்றிகள் அடித்து நொறுக்கி ஆறுதல் தருகிறது. அந்த வலிமிகுந்த நினைவுகள் அவரின் ஆட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.

கங்குலியின் ரசிகர்களுக்கு அவர் இப்படியொரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு இருப்பது அவரின் மோசமான ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து உருவானது என்பதே இனிமையானதாக இருக்கிறது. கங்குலியை ஆஸ்திரேலியா அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு 1991 இல் தேர்வு செய்த பொழுது அவர் அரும்பு மீசை இளைஞனாக இருந்தார். அங்கே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி பெரிதாக ஜொலிக்காமல் போய் அணியை விட்டு நீக்கப்பட்டார். இன்னொரு போட்டியில் பன்னிரெண்டாவது வீரராக போனால் போகிறது என சேர்த்திருந்தார்கள். அவர் ட்ரேக்கள் தூக்குவது, தண்ணீர் பாட்டில்களை திறந்து கொடுப்பது ஆகியவற்றை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட போது ‘நான் பெஹலா எனும் பகுதியின் மகாராஜா’ என கம்பீரமாக அவமானத்தை மறைத்தபடி அவற்றை செய்ய மறுத்ததாக சொல்வார்கள்.

அந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு பிறகு கங்குலி ரஞ்சி போட்டிகளுக்கு திரும்பினார். இரண்டு வருடங்கள் கழித்து டெல்லி கோட்லா மைதானத்தில் அவர் அற்புதமான கவர் டிரைவ்களால் அசத்தியதையும், அரை சதம் கடந்த பின்னர் மட்டையால் பந்தை வேகமாக திருப்பி அடிக்க முயன்று போல்ட் ஆனதையும் காண நேர்ந்தது. அவருடைய ஆக்ரோஷம் அவரின் திறமைகளுக்கு நியாயம் செய்யாமல் போகும் என்று தோன்றியது. அதையே தேர்வுக்குழு உறுப்பினர்களும் வெகுகாலம் எண்ணினார்கள்.

1996 இல் ஆச்சரியகரமாக கங்குலி இங்கிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது தேர்வுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் ஜக்மோகன் டால்மியா அழுத்தம் கொடுத்ததாலே அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றும் முணுமுணுக்கப்பட்டது. அப்படி கிசுக்கப்பட்ட வதந்தி உண்மையென்றால் அந்த சலுகை எதிர்பாராத வெகுமதியை பெற்று தந்தது. கவுண்டி அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினார். டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பொழுது இரண்டு சதங்கள் அடித்து கலக்கினார். அந்த தொடரில் அவருடன் இணைந்து வெகுநேரம் பேட் செய்த ராகுல் திராவிட் “ஆஃப்சைடில் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் அவரின் பெயர் கங்குலி !” என்று அறிவித்தார். (இன்னொரு கடவுளும் இருந்தார் அவரின் பெயர் ஜாகிர் அப்பாஸ். அவர் ஆடிய காலத்தில் அதை திராவிட் பார்த்திருக்க வாய்ப்பில்லை )

அவர் எடுத்த ரன்கள்,அதை சேர்த்த விதம் ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான ஒரு வீரராக கங்குலியை நிலைநிறுத்தியது. ஆனால்,வெகுவிரைவில் அவர் ஒருநாள் போட்டிகளிலும் கலக்கி எடுத்தார். அவரும் சச்சினும் இணைந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் கலக்கி எடுத்த அந்த காலங்களில் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் போட்டிகளில் ஆஃப் சைட்டின் கடவுள் லெக்சைடிலும் மிரட்டி எடுத்தார். உலகின் மிகப்பெரிய ஆடுகளங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு எந்த ஒரு வீரரும் இப்படி அசட்டையாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில்லை.

கங்குலியின் எல்லா சதங்களிலும் மிக முக்கியமானது என்று நான் கருதுவது ப்ரிஸ்பேனில் அடித்த 2003-04 சுற்றுப்பயணத்தில் அடித்த 144 ரன்கள் தான். ஏற்கனவே அதற்கு முந்தைய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை துவம்சம் செய்திருந்த ஆஸ்திரேலியாவிடம் இந்த முறையும் சின்னாபின்னம் ஆவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அந்த போட்டியில் திராவிட் மற்றும் சச்சின் சீக்கிரம் நடையை கட்டியது போல கங்குலியும் ஆடியிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால், இரும்பு போன்ற உறுதியுடன் அன்றைக்கு கங்குலி ஆடினார். அவரின் இயல்பான ஆட்டம் அன்று வெளிப்படா விட்டாலும் அவர் ஆடிய ஆட்டம் மொத்தத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்து இந்திய அணிக்கு முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை தந்தது. அணி தொடர் முழுக்க போராடுவதற்கான உத்வேகத்தை அது தந்தது.

கங்குலியின் கிரிக்கெட் சாதனைகள் பெரும்பாலும் அவரின் பேட்டிங் சார்ந்தே இருக்கின்றன. ஆனால்,என்னைப்பொறுத்தவரை அவரின் மிக முக்கியமான பண்புநலன் அவர் எப்படி பந்து வீசுகிறார், எந்த மாதிரி பந்தை செலுத்துகிறார் என்பதில் இருக்கிறது எனக்கருதுகிறேன். வங்காளிகள் ஷுதே பேனர்ஜி காலத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சை அந்த அளவுக்கு ஆண்மை கொண்டதாக இல்லை என்றே இழிவாக கருதி வந்திருக்கிறார்கள். அவர்கள் புது பந்தை கச்சிதமாக, வேகமாக வீசி திணறடிக்கும் அற்புதமான கமல் பேனர்ஜி,மோண்டு பேனர்ஜியில் துவங்கி டி.எஸ்.முகர்ஜி,சமீர் சக்ரவர்த்தி,பருண் பர்மன்,சுப்ரதோ படேல் என்று அற்புதமான வரிசையை பரிசளித்தார்கள். சவுரவ் இந்த பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர். அதை தூக்கிப்பிடிப்பதையே அவர் விரும்புகிறார். அவர் உருவத்தில் பெரிய ஆள் இல்லை. ஆனால் வேகமாக பந்து வீச முயல்கிறார். கிரீஸ் நோக்கி இருபது சின்ன அடிகளில் ஓடி வந்து,கையை சூறாவளியாக சுழற்றி, மிதவேகத்துக்கு சற்றே குறைவாக பந்தை அவர் வீசுகிறார். அவர் உலகின் குடிமகன் போல பேட் செய்யலாம், ஆனால், ஒரு வங்காளியை போல அவர் பந்து வீசுகிறார். அவர் ஒரு வங்காளியாக அவரின் எண்ணற்ற சதங்களுக்கு நடுவே கல்கத்தா டெஸ்டில் 1998, ஆம் ஜவகல் ஸ்ரீநாத் அவர்களுடன் இணைந்து பந்து வீசிய தருணத்தில் எடுத்த இரண்டு விக்கெட்களை சாதனையாக நினைப்பார்.

வங்காளிகள் அவர்களின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு அவர் சேர்த்த பெருமைகளை பற்றி ஆனந்தப்படுகையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். வரலாற்றாசிரியன் மற்றும் கிரிக்கெட் காதலருக்கு கங்குலியின் இன்றைய நிலை ( 2005 ) ஜவகர்லால் நேருவின் 1957 நிலையை ஞாபகப்படுத்துகிறது. அப்போது இரண்டாவது முறையாக அவர் தேர்தலில் வென்றிருந்தார். மக்களின் பேரன்புக்கு உரியவராக இருந்தார். கட்சி மற்றும் ஆட்சியில் உச்சத்தில் இருந்தார். சர்வதேச சமூகம் அவரை பெரிதும் மதித்தது. அவரின் அரசியல் விமர்சகர்கள் அவரின் வீழ்ச்சியை கணித்தார்கள். அவரின் பொறுமையின்மை,விமர்சனத்தை திறந்த மனதோடு எதிர்கொள்ளாதது,தனக்கு பிடித்தவர்களை,தன்னோடு இணக்கமாக இயங்குபவர்களை மட்டும் தேர்வு செய்வது என்று நேரு செயல்பட்டது ஆகியவற்றை அவர்கள் குறை சொன்னார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் பிரதமர்கள் இல்லை. கங்குலி நேருவும் இல்லை. இருந்தாலும் ஒற்றுமைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. கங்குலியும் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை ஏற்கனவே முன்முடிவு செய்துவிட்ட, தனக்கு எதிரானவர்களிடம் இருந்தே வருவதாக பார்த்தார். அவர் தன்னுடைய சட்டையை (லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை உண்மையான விருப்பத்தோடே) இழந்தார் இது ஒரு சர்வதேச கேப்டன் அடிக்கடி செய்யக்கூடாதது. அவரும் அவருக்கான கிருஷ்ண மேனன்களை கொண்டிருக்கிறார் ; அவர்களை நீக்கவோ,ஒழுங்குபடுத்தவோ இவரும் விரும்பவில்லை.

நேரு அடுத்த வருடமே ஒய்வு பெற்றிருந்தால் அவர் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த ராஜதந்திரியாக நினைவுகூரப்பட்டு இருப்பார். கங்குலி பாகிஸ்தான் அணியை அவர்கள் மண்ணிலேயே சாய்த்த தொடருக்கு பின்னர் தலைமைப்பொறுப்பை விடுத்து இருந்தால் இந்தியாவின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக அவர் கேள்வியே இல்லாமல் விடை பெற்றிருப்பார். ஆனால்,அப்போது அப்படி விலக தான் மிகவும் இளைஞனாக இருப்பதாக அவர் உணர்ந்திருப்பார். இந்த கட்டுரை எழுதப்பட்ட கணத்தில் அவரே இந்தியாவை வழிநடத்த தலைசிறந்த தேர்வாக இருக்கிறார் (2005) கூடுதல் சுமையை திராவிட் தலையில் சுமத்துவதும் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. (கேப்டன் பொறுப்பு சச்சின் எனும் அற்புதமான பேட்ஸ்மானுக்கு என்ன செய்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம் ). கங்குலி தன் மீதான விமர்சனங்களை இன்னமும் திறந்த மனதோடு அணுகலாம்,அவர் முப்பதுகளின் தவறான பக்கத்தில் இருப்பதால் இந்த தருணத்தில் தலைமைப்பொறுப்பை விடுத்து நகர்வது நல்லது. அவரின் வயது, அனுபவம், நிலைமை ஆகியவை அதையே கோருகிறது. மிகச்சரியான கணத்தில் இம்முடிவை எடுப்பது அவரை ‘கிரிக்கெட்டின் ராஜதந்திரி’ என்று உணரவைக்கும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

சொல்லித்தீராத சுட்டி விகடன்  நினைவுகள் 


சுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு தன்னுடைய இறுதி அச்சிதழை வெளியிட்டுள்ளது. தமிழ் படிக்க ஆரம்பித்த காலத்தில் தங்கமலர், சுட்டி விகடன், கோகுலம், அம்புலி மாமா என்றே எங்களுடைய உலகம் செழித்து இருந்தது. அதுவும் சுட்டி விகடனின் கிரியேசன்ஸ் செய்வதற்காகவே அதனைப் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறவர்களாக நண்பர்கள் பலர் இருந்தோம்.

Image result for சுட்டி விகடன் 

வழ வழ தாளில் காமிக்ஸ், அறிவியல், கதைகள், பொது அறிவு என்று வண்ணங்களில் எங்கள் பால்யத்தை அது நிறைத்தது. அதில் எழுதிய பலரின் பெயரை தலைகீழாகத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இன்றுவரை சொல்ல இயலும். ‘மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்’ எழுதிய வள்ளி டீச்சர் யார்? அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார்? கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா? மின்னியைக் கொன்றுவிடு என்று மாதாமாதம் மாயக்கதை சொல்லும் ரமேஷ் வைத்யா யார் என்றே எனக்கான வினாக்கள் இருந்திருக்கின்றன. முதல்முறையாக வெற்றியின் பரவசமும், தோல்வியின் கசப்பும் ஒருங்கே விகடன் நடத்திய போட்டிகளிலேயே கிடைத்தன.

எப்படி எழுதுவது என்று எனக்குக் கல்லூரி வரும் வரை தெரியாது. ராகுல் காந்தி கல்லூரிக்கு வருகிறார், அவரோடு உரையாட வகுப்புவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலை விகடன் வேல்ஸ் சாரிடம் சொன்னேன். அவர் அங்கே நடப்பதை கட்டுரையாக்கி தரச்சொன்னார். எதோ காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இருபத்தி ஐந்து பக்கத்தில் நடந்ததைத் தள்ளாடுகிற மொழிநடையில் எழுதிக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். எனினும், என்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த கட்டுரை சுட்டி விகடனில் வெளிவந்தது. அச்சில் என் பெயரை வெகு நாட்களுக்குப் பின்னர்ப் பார்த்த அந்தப் பரவசத்தைச் சுட்டி விகடன் பல நூறு குழந்தைகளுக்கு இறுதி வரை பரிசளித்த வண்ணம் இருந்தது.

நான் எழுதப் பழகுவதற்குக் கற்றுத் தந்த கண்டிப்புகள் இல்லாத பள்ளியாகச் சுட்டி விகடனே இருந்தது. திரைப்படம், ஆளுமைகள், வரலாறு, விளையாட்டு, மொழியாக்கம் என்று எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அத்தனையையும் செய் என்று ஊக்குவிக்கிற களமாகச் சுட்டி விகடன் இருந்தது. என் எழுத்துகளை ஒலிக்கோர்வையாக இரண்டாண்டுகள் ஒலிக்க விட்டு அழகு பார்த்த அன்னை மடியும் சுட்டி விகடனே. மேற்கோள்கள் வேண்டும், ஆளுமைகள் குறித்த சிறு குறிப்புகள் வேண்டும் என்று எதைக்கேட்டாலும் எழுதித் தருகிற ஒரே இதழாகச் சுட்டி விகடன் மட்டுமே இருந்தது. அதன் லேஅவுட்களில் கட்டப்பட்ட சிரத்தை பலரின் கண்களில் படாமல் போயிருக்கும். புதிது புதிதாகப் பல்வேறு முயற்சிகளை அது எடுத்த வண்ணம் இருந்தாலும் அச்சு விற்பனையும், லாப நோக்கமும் அதன் ஆயுளை முடித்து வைப்பது கசப்பைத் தருகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அதிலும் கணேசன் சார், யுவராஜன் சார், சரா அண்ணன், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் ஆகியோர் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். FA பக்கங்கள் கல்வியோடு கூடிய கலகலப்பான வகுப்பறைக் கனவை நெருங்க முயற்சித்தது. பல்வேறு அரசுப்பள்ளிகளின் அன்புத் தோழனாகச் சுட்டி விகடன் இருந்தது என்பது மிகையில்லை. இன்றைய அதிவேக உலகத்தில் வளரிளம் பருவத்தினரை தமிழ் கொண்டு கட்டிப்போடுவதில் உள்ள சவால் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் ஒரு காலத்திற்குப் பிறகு செய்தித் தாள்களின் இணைப்பிதழ்கள், சிறிய குழுக்களின் முயற்சிகள் தவிர்த்துப் பெரிதாக எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை என்பது பெருந்துயர்.

திடீரென்று எப்போதோ படித்த சுட்டி விகடனின் கதைகள் கனவுகளில் சிரிக்கும். குட்டன் பாட்ரிஸ் அக்லினாவை தேடிக்கொண்டு சமீபத்தில் யுவராஜன் சாரை அலைபேசியில் அழைத்தேன். அதனைத் தேடிக்கொண்டு போன பயணம் ஏறத்தாழ பத்தாண்டு காலச் சுட்டி விகடனின் பக்கங்களைப் புரட்ட வைத்தது. ஒரு ஆறு மணிநேரத்தை அரைக்கணம் போலத் தொலைக்கிற பயணத்தை அந்தத் தேடல் பரிசளித்தது. சார்லியும், சாக்லேட் பாக்டரியும் எனும் பாஸ்கர் சக்தி அண்ணனின் மொழியாக்கத்தின் எளிமையும், கொண்டாட்டமும் நாவின் நுனியில் தேங்கி நிற்கிறது. ஆயிஷா நடராசனின் அறிவியல் எழுத்து துவங்கி மருதன் அண்ணனின் புனைவு போன்ற வரலாற்று எழுத்துகள் வரை எல்லாமே இனி நினைவலைகள் மட்டும் தான்.

கோகுலம் நின்றுபோன சில மாதங்களுக்குள் சுட்டி விகடனும் விடைபெறுவது தமிழ் சார்ந்த குழந்தைகள் வாசிப்பின் பேரிழப்பு எனலாம். தொடுதிரைகள் மிகுந்துவிட்ட நம் காலத்தில் குழந்தைகளுக்குக் காணொளிகளும், வீடியோ கேம்சும் தரும் பரவசத்தை வாசிப்பின் மூலம் ஊட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை. தன்னுடைய எல்லைகளுக்குள் வாசிப்பின்பத்தை வாரி வழங்கிய இரு சிறுவர் சுடர்கள் அணைந்து போவது அரைப்பக்க அஞ்சலியாகக் கூட இல்லாமல் போகும் அவலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
படபடப்பும், குறைகளும், அவசரமும் மிகுந்த ஒரு கிராமத்து சிறுவனை அடைகாத்து, அவனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்த பெரும் நம்பிக்கையின் மரணம் என்னென்னவோ செய்கிறது.

சுட்டி விகடனின் முகப்பு வாசகமாக இருந்த ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்பதையே எம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் முகப்பு வாசகமாகத் தேர்வு செய்தோம். உயிர்த்தமிழை பயிர் செய்யக் குழந்தைகளின் உலகை வாசிப்பால் நிறைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஹர்ஷா போக்லே காட்டும் விளையாட்டு வழி வாழ்க்கை


அனிதா போக்லேவும் அவருடைய கணவரான ஹர்ஷா போக்லேவும் இணைந்து எழுதிய ‘The Winning Way’ நூல் குறித்துச் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு அறிமுகம் எழுதினேன். அதன் பிரதியை எங்கும் நான் பாதுகாத்து வைக்கவில்லை. இப்போது அதே நூலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வாசித்தேன். விளையாட்டின் வழியாக மேலாண்மை என்பது தான் நூலின் மையம். அதைக் கடத்துவது இந்தப் பதிவின் நோக்கமில்லை. நூலின் சுவையான சிதறல்கள் மட்டும் இங்கே:

வீரம் என்பது அச்சப்படாததை போல நடிப்பது:

ஆடுகளத்தில் எதிராளிக்கு கிலி கொடுத்துக் கொண்டிருப்பது முக்கியமானது. ஜெப்ரி பாய்காட் எதிரணி வீரர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்த அடுத்தக் கணம் களத்தில் இருப்பார். ‘பயந்துட்டான் மாப்ளே’ என்று எதிரணி நினைத்து விட்டால் இன்னமும் வேகமாகப் பாய்வார்கள்.

அது மேற்கிந்திய அணியுடனான போட்டி. எதிரணி பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் கவாஸ்கரின் மண்டையைப் பதம் பார்த்தது. எதிரில் இருந்து மொகிந்தர் அமர்நாத்துக்கே வலிக்கிற அளவுக்குச் சத்தம் கேட்டது. ‘ஒன்றுமில்லை. பந்தை போடு’ என்று சைகை காட்டினர் கவாஸ்கர். தண்ணீர் கொண்டு வந்த கிரண் மோரே, தலையைத் தடவி ‘ரொம்ப வலிக்கலையே’ எனக்கேட்டார். அப்படி ஒரு முறை முறைத்தார் சுனில் கவாஸ்கர். வலிக்கிறது என்று காட்டுவது எதிராளிக்கு வல்லமை தந்துவிடும் என்பது அவரின் பார்வை. 

Image may contain: 2 people, people smiling, text

ராகுல் திராவிட் 1998-99 காலத்தில் கென்யா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துகளை விரட்ட கே பார்க்க கூடத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார். சதங்களை விரட்டுவது என்கிற சூத்திரம் அவர் முன்னால் நின்றது. ஆனால், திராவிட் அதை நிராகரித்தார். ‘Result Goals ஐ விட performance Goals முக்கியம்.’ என்று முடிவு கட்டினார். அதாவது ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக ஆடவேண்டும். சதங்களைத் துரத்துகிற பாணி வேண்டாம். அது இந்தியாவின் மிகச்சிறந்த பினிஷராகத் திராவிடை மாற்றியது. எலிப்பந்தயங்களில் ஓடுகிறவர்கள் கவனிக்க வேண்டியது இது.

ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்குத் திராவிட் சரிப்பட மாட்டார் என்று பலர் கருதினார்கள். அவரின் தடுப்பாட்டம் செல்லாது என்பது பலரின் கணிப்பாக இருந்தது. திராவிட் துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்குவார். விக்கெட்கள் விழாமல் பார்த்து கொள்வார். ஓரளவுக்கு அடித்தளம் இடப்பட்டதும் விக்கெட்டை தாரைவார்த்து விட்டு நடையைக் கட்டுவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலக்கி எடுத்தது. 

Image result for dravid first test match

எதைக்கண்டும் பிரமிக்காதே:

1976-ம் வருடம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 403 என்கிற இலக்கு குறிக்கப்பட்டு இருந்தது. அதை இந்திய அணி துரத்தினால் துவம்சம் என்றே பலர் எண்ணினார்கள். நான்கே விக்கெட்களை இழந்து அணி அந்த இமாலய இலக்கை எட்டியது. எப்படி எனச் சுனில் கவாஸ்கரிடம் கேட்டார்கள். ‘அவ்வளவு பெரிய இலக்கை எல்லாம் கண்முன் கொண்டுவரவில்லை. ஆட்டம் ஆரம்பிக்கிற போது இப்போதைக்கு அவுட் ஆகாமல் ஆடுவோம் என்று முடிவு செய்து கொண்டோம். காலை வேளை கடந்ததும், எப்படியோ தப்பித்து விட்டோம், முட்டாள்தனமாக ஆடாமல் மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பார்த்துக் கொள்வோம் எண்பது அடுத்த இலக்கு. அன்றைய ஆட்டம் முடிகிற நிலைமை வந்ததும், நாளைக்கு ஆடுவதே முக்கியம் என்று தடுப்பாட்டம். இப்படித்தான் வெற்றி பெற்றோம்.’ என்றார். 

Image result for sunil gavaskar

ஹோப்பார்ட் நகரில் ஒருநாள் போட்டி. இந்திய அணிக்கு நாற்பது ஓவர்களில் 321 இலக்கு. தலை மேல் கைவைத்து உட்கார்ந்து இருக்க வேண்டிய அணி. இப்படிக் கோலி யோசித்தார், ‘இரண்டாகப் பிரித்துக் கொண்டால் 160 ரன்களை ஒவ்வொரு இருபது ஓவருக்கும் அடிக்க வேண்டும். இதைத்தானே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் செய்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.’ அப்படியே ஆடி அன்று அணி இலக்கை எட்டி இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 434 ரன்களை அடித்து இருந்தது. காலிஸ் அறைக்குள் வந்தார். ‘இந்தப் பிட்ச், தட்வெட்பத்தில் இவர்கள் அடித்திருக்கும் ரன்கள் போதாது. என்னைக்கேட்டால் அவர்களால் இன்னமும் 15 ரன்களை அடித்திருக்க முடியும். ஸோ, ஈஸி பாய்ஸ்.’ என்று இயல்பாகப் பேசினார். அணி அடித்து நொறுக்கியது. பிரமிப்பவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.

முடியாது எனச் சொல்லாதே:

ஸ்டீவ் வாக் தன்னுடைய அணியைப் பார்த்தார். இந்த அணி அடுத்தப் பத்து ஆண்டுகள் உலகக் கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஸ்டீவ் வாக் எளிமையான இலக்கு ஒன்றை வைத்துக் கொண்டார். உலககோப்பைக்குச் சில மாதங்களே இருந்த சூழலில் அதற்கு முந்தைய தொடரை ‘NO REGRETS TOUR’ எனப்பெயரிட்டார். அணியின் அத்தனை வீரர்களும் செய்கிற அனைத்தையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அணியின் கூட்டத்தில் கூடத் தங்களின் முழுப் பங்களிப்பை தரவேண்டும். தோற்றாலும் பரவாயில்லை, நான் இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று யாரும் வருத்தப்படக்கூடாது. இவ்வளவுதான் அவர் அணிக்கு போட்டுகொடுத்த பாதை. அணி உலககோப்பையைத் தூக்கியது, கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

ஆஸ்திரேலிய அணி இந்திய தொடருக்கு வந்திருந்தது. பயிற்சி போட்டியில் வார்னே around the wicket வரவில்லை என்பதைச் சச்சின் கவனித்தார். அந்தப் பாணியில் பல நூறு பந்துகளை வீச செய்து
அடித்துப் பயிற்சி செய்தார். டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய முதல் பந்தே around the wicket. எல்லைகோட்டுக்குப் பறந்தது. சச்சின் எவ்வளவு எளிமையாக அடித்து விட்டார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள் 🙂

இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதுகிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடர் 1989-ல் நடைபெற்றது. இம்ரான் கான் தொடர்ந்து தன்னுடைய அணியினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இடத்தில் கூட இந்திய அணியைப் பற்றிப் பெருமையாக ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும், மீண்டும் உற்சாகபடுத்தியே எதிரணியை அசரடித்தார்.

தியாகங்கள் செய்தாலே சிகரங்கள் கிட்டும்:

அது 2014. சாய்னா பாட்மிட்டன் விளையாட்டுக்கு ஒரு கும்பிடு போட்டு விடலாம் என்கிற அளவுக்குத் தோல்விகளும், சோர்வும் துரத்தியது. அப்போது இறுதியாக ஒரு முறை என்று முடிவு செய்து கொண்டார். சொகுசான ஹைதராபாத் வாழ்க்கையை விட முடிவு செய்தார். பயிற்சியாளரை மாற்றினார். ஒரு எளிய அறையில் பெங்களூரில் தங்கிக்கொண்டு பிசாசை போலப் பயிற்சி செய்தார். உலக நம்பர் 1 ஆனார். இந்திய ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் என்று வெற்றிகள் குவிந்தன. உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை எட்டினார். 

Image result for saina nehwal

வெற்றிகள் வெகுசீக்கிரம் வேண்டாம்:
அப்போது பீட் சாம்பர்ஸ்க்கு வயது 19. யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். உலகமே திரும்பி பார்த்தது. அடுத்த வருடம் மண்ணைக் கவ்வினார். கண்ணீர்விட்டு அழுவார் என்று பார்த்தால், ‘இது நன்மைக்கே’ என்றார் அவர். காரணம் எளிமையானது, வெகு சீக்கிரமே வெல்ல ஆரம்பித்தால் தலைக்கனம் கூடும், தவறுகள் புரியாது, தனித்து வெகுகாலம் ஜொலிக்க முடியாது. ஒரு அதிர்ச்சி ஓராயிரம் நன்மைகளைத் தரும். 

Image result for pete sampras

சாதாரணமானவை சாதிப்பதை சாய்க்கலாம்:

ஆஸ்திரேலிய அணி வெற்றியின் கோட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால், லக்ஷ்மன்-இஷாந்த் ஜோடியை தாக்கி பிரிக்காமல், தற்காப்பின் மூலம் தகர்க்கலாம் எனக் கனவு கண்டது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த அவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துப் போனார்கள்.

உலகக் கோப்பைக்கான அணியை வார்த்துக் கொண்டிருந்தார் இம்ரான்கான். ஒரு வீரரை அதிரடியாக ஆடிவிட்டு வா என்று அனுப்பியிருந்தார். அவரோ விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பெவிலியனுக்குத் திரும்பியதும், இம்ரான்கான் எல்லாருக்கும் விழும்படி சொன்னார், ‘இனிமேல் நீ எப்போதே பாகிஸ்தான் அணிக்குள் இடம் பிடிக்க மாட்டாய்.’ நான் சொல்வதைக் கேட்காவிட்டால் பேக்கப் என்பதை அந்த ஒற்றை நிகழ்வு அணிக்கு உணர்த்தியது.

தோல்விகள் பெருகினாலும் தனித்த வெற்றிகளே தேவை:

எக்கச்சக்க வெற்றிகள் வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. உண்மையில் பல்வேறு தோல்விகளுக்கு நடுவேயே சிற்சில வெற்றிகள் சாத்தியம். அந்த வெற்றிகள் மகத்தானதாக இருக்க வேண்டும். திராவிட் சச்சின் இணைந்து 615 முறை பார்ட்னர்ஷிப் போட்டு இருக்கிறார்கள். ஐம்பது ரன்களைக் கடந்த போட்டிகளே நல்ல போட்டிகள் என்று அளவுகோல் வைத்துக் கொண்டால் இந்த இணை அதைச் சாதிக்கத் தவறிய போட்டிகள் 397. ஆனால், 218 போட்டிகளில் ஐம்பது ரன்களைக் கடந்த போதெல்லாம் கலக்கி எடுத்து காலத்துக்கும் நினைவில் நிற்கிற வெற்றிகளைப் பெற்றார்கள். 

Image result for sachin

புல்லேலா கோபிசந்த் சீனர்களைப் பாட்மிட்டன் போட்டியில் சந்திக்கிறார். அவர்களை எதிர்ப்பது கடினம். காட்டுமிராண்டிகள், நம்மைவிடச் சில அடிகள் கூடுதல் உயரம். நான்கு முதல் ஏழு புள்ளிகள் அவரையே உன்னால் பெற முடியும் என்றெல்லாம் பலரும் அச்சுறுத்தினார்கள். கோபிசந்த் எளிமையாக இப்படிப் பார்த்தார், ‘எப்படியும் ஏழு புள்ளிகள் தான் பெற முடியும் என்கிறீர்கள். நான் முழுதாக அடித்து ஆடிவிடுகிறேன். தோற்றாலும் துவண்டுபோய்த் தோற்க கூடாது.’ அந்தக் கோப்பையைத் தன்வசமாக்கி கொண்டு தான் அந்தப் போராட்டக்காரர் இந்தியா திரும்பினார். தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அவர் சொல்வது, ‘நீங்களாக உங்கள் இயல்புக்கு ஆடுங்கள். எப்போதாவது தலையிடுகிறேன். பயிற்சிகள் உங்களின் போரட்டகுணத்தை மழுங்கடிக்கக் கூடாது.’ போர்க்குணம் மறந்து போர்க்கலை புத்தகங்களைப் புரட்டுவது பயன்தராது.

தலைவா நீ தனித்து நட:

அணித் தலைவருக்குச் சொகுசான பிசினஸ் கிளாஸ் இருக்கை தரப்படும். அதிகமாகக் களைத்துப் போயிருக்கும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த இடத்தைத் தருவது தோனியின் வழக்கம். சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை உணர்த்தும் வெளிப்பாடு அது.

அது உலககோப்பை முதல் சுற்று. பாகிஸ்தான் தோல்விகளை மட்டுமே பெற்றுக்கொண்டு இருந்தது. அடுத்தப் போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் நடையைக் கட்ட வேண்டும். அணியின் மேலாளர் இன்திகாப் ஆலம் பாகிஸ்தான் போவதற்குப் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டார். இம்ரான் சொன்னார், ‘உலககோப்பையை நாம் ஜெயிக்கிறோம். என்னைக் கேட்காமல் எதையாவது செய்தீர்கள் அவ்வளவுதான்.’ அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார்கள்.

அரையிறுதிக்கு முந்தைய நாள். இன்சமாம் உல் ஹக் ‘நான் ஊருக்கே போறேன். எனக்கு விளையாடவே வரலை.’ என்று கதறினார். இத்தனைக்கும் உலககோப்பைக்கு முன்னால் இம்ரான் கான், ‘இந்த உலககோப்பையில் மற்ற அணியினரின் பந்து வீச்சை இன்சி பதம் பார்ப்பார்.’ என்று அத்தனை நம்பிக்கையாகப் பேசியிருந்தார். அவர் இன்சமாமை பார்த்து இப்படிச் சொன்னார், ‘உன்னை முல்தானில் இருந்து ஆக்லாந்து அழைத்து வந்தது நன்றாக ஆடுவாய் என்று தான். நாளை என் நம்பிக்கையைக் காப்பாற்றுவாய். போ.’ அப்படித்தான் நடந்தது. அணி உலககோப்பையை முத்தமிட்டது. 

Image result for imran khan

கங்குலிக்கு இந்திய அணி பூனைக்குட்டிகள் போலப் பதுங்காமல் புலி போலப் பாயவேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருந்தது. யுவராஜ், ஹர்பஜன், பதான் என்று பல புதியவர்களைக் கண்டெடுத்து வளர்த்து அணியைத் திடப்படுத்தினார். ஒரு முக்கியமான போட்டியில் முதலில் பந்து பதானிடம் தரப்பட்டது.. தாறுமாறாகப் பந்தை அவர் வீசுகிறார். கங்குலி ஓடிவந்தார். திட்டுவார் என எதிர்பார்த்தால், ‘நான் உன்னை வெகுவாக நம்புகிறேன். நீ இயல்பாக இரு. இத்தனை பதற்றம் தேவையே இல்லை நண்பா!’ என்று தட்டிக்கொடுத்து விட்டுப் போனார். அடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.

The Winning Way 2.0: Learnings From Sport for Managers

304 பக்கங்கள்
விலை: 299

 — with Harsha Bhogle.

பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.

இதயந்தொடும் இறுதிச்சுற்று!


நான் புலியோடு மல்யுத்தம் புரிந்தேன். திமிங்கலத்தோடு பெரும்போர் நிகழ்த்தினேன். மின்னலை கைவிலங்கிட்டேன். இடியை சிறைக்குள் தள்ளினேன். கடந்த வாரம், பாறையைக் கொன்றேன், மலையை மருத்துவமனைக்கு அனுப்பினேன். மருந்தையும் நோயுற வைக்கும் நிலையானவன் நான்!’-முகமது அலி.

இறுதிச்சுற்றுத் திரைப்படத்தை வாழ்க்கையில் முதல்முறையாகக் கடைசிக்காட்சியில் போய்ப் பார்த்தேன். குத்துச்சண்டையும், துரோகம், அன்பு, அரசியல் என்று கலவையான கமர்ஷியல் கதையின் நாயகன் மாதவன் என்றாலும், திரையை மதி என்கிற பெயரோடு வாழ்ந்திருக்கும் ரித்திகா சிங் தான் அசகாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறார். தன்னுடைய அக்கா லக்ஷ்மிக்கு ஆதரவாகத் தீர்ப்பு தராத நடுவரை போட்டுப் பொளப்பதில் துவங்கும் கதாபாத்திரத்தின் வசீகரம் கடைசிவரை நீடிப்பதே ஆச்சரியம்.
பெண் இயக்குனர் படம் என்பதால் பெண்ணியமும், உணர்ச்சிகரமான காட்சிகளும் தத்தளிக்க வைத்து விடுமோ என்று பயம் இருந்தால் முதல் பாதியில் அதை அடித்து நொறுக்குகிறார் சுதா கொங்குரா. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ எனப் பாரதி பாடிய வாழ்க்கையை மதியின் மூலம் ரசனையோடு செதுக்கி சாதித்திருக்கிறார்.

சென்னையின் மீனவப்பகுதியின் வறுமை, அதைத் தொடர்ந்து மாஸ்டர் தரும் ஐநூறு ரூபாயை கொண்டு எப்படிக் குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவது என்று ஆசையும், கனவும் பரபரக்க மதி பேசும் இடத்தில் இறுகிப்போன சோகம் மென்மையாகத் தாக்குகிறது. மாஸ்டரும், மதியும் உரையாடும் உச்சமான தருணங்களில் வசனம் குறைவாகவே மாதவனுக்குத் திட்டமிட்டுத் தரப்பட்டிருக்கிறது. விறைப்பான பார்வை, எல்லாரையும் எடுத்து எறிந்து பேசும் மொழி, ஆட்டத்துக்காக அர்ப்பணிப்பு என்று மாதவன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

காதல் வயப்பட்டு அதைக்கடத்தி ஏற்காத பொழுதும் கூட அழகியலோடு அசால்ட்டாகக் கடக்கும் கணத்தில் ரித்திகா கைதட்டல்களை வாரிக்கொள்கிறார். தொடர்ந்து ஒரு கட்டம் வரை தங்கையைக் குத்துச்சண்டை பக்கம் போகவிடக் கூடாது என்று பாடுபடும் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார் ஒரு கணத்தில் உடைந்து அழும் புள்ளியில் கனவுகளுடன் விளையாட்டுக்குள் வரும் அத்தனை நாயகிகளின் வலியும் அந்தக் கண்ணீரில் கரைந்து வழிகிறது.
கோல் படத்தில் தொடர்ந்து மகனை நிராகரிக்கும் தந்தை மதுக்கடையில் கண்கள் நிறைய மகனின் ஆட்டத்தைப் பார்க்கும் காட்சி, பாக் மில்கா பாக் படத்தில் ரேடியோவை ட்யூன் செய்யும் காட்சி ஆகிய இரண்டையும் ‘எனக்கா பிறந்தே நீ’ எனக் கடிந்து கொள்ளும் மகளின் கம்பீர ஆட்டத்தைத் திருட்டுக் கேபிளில் காணத் துடிக்கும் தந்தையின் துடிப்பு நினைவுபடுத்துகிறது.

காதல், குத்துச்சண்டை என்கிற இரு புள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நோக்கி முள் நகர்ந்தாலும் இது அனைவருக்குமான படமாக இருக்காது என்பதை உணர்ந்த இயக்குனர் இரு தரப்பையும் திருப்தி செய்யும் வண்ணம் இறுதிக்காட்சியை வைத்திருக்கிறார். குத்துச்சண்டையின் நுணுக்கங்களை விலாவாரியாகச் சொல்லி அலுக்க வைக்காமல் காட்சிகளின் மூலம் வெம்மையைக் கடத்தியிருப்பது நேர்த்தி.
இந்திய விளையாட்டுத் துறையில் புரையோடி போய்விட்ட அரசியலையும், கிரிக்கெட்டோடு மட்டும் குடித்தனம் நடத்தும் இந்திய கொண்டாட்ட மனத்தையும் இப்படம் உலுக்குகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை பெரும்பாலும் அசத்தினாலும் இறுதி கட்டங்களில் அடர்த்தியற்றுக் கடுப்பேற்றுகிறது.

இந்தத் திரைப்படம் எப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்பதை KHADOOS எனும் இந்தப் படத்தின் தலைப்பை பற்றித் திராவிட் சொன்ன வரிகள் சிறப்பாகச் சொல்லக்கூடும்: KHADOOS என்கிற சொல்லை எப்படி மொழிபெயர்ப்பது? அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?’ அந்த ஒரு சொல் ஒரு திரைப்படமாய் மிரட்டுகிறது. திரையில் போய்ப் பாருங்கள்!

— with R Madhavan andRitika Singh.

‘wall’வாங்கு வாழும் வார்த்தைகள்!


 

Rahul Dravid அவர்களின் உரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே:
ஓய்வு பெற்ற பொழுது திராவிட் பேசியது
கிரிக்கெட் குறித்த என்னுடைய அணுகுமுறை பொதுவாக எளிமையானது. அணிக்காக முழு அர்ப்பணிப்பையும் தருவது; கண்ணியத்தோடு ஆடுவது, ஆட்டத்தின் ஆன்மாவை காப்பது ஆகியவையே அவை. இவற்றில் சிலவற்றையேனும் நான் இறுதிவரை மேற்கொண்டேன் என்று நம்புகிறேன். நான் சமயங்களில் தோற்றிருக்கிறேன், ஆனால், எப்பொழுதும் முயல்வதை நிறுத்தியதே இல்லை. அதனால் தான் நான் சோகத்தோடு விடைபெற்றாலும் பெருமிதத்தோடும் கொடுக்கிறேன்! –பிசிசிஐ விழாவில் அணி குறித்தும். தன்னை உத்வேகப்படுத்தியவர்கள் குறித்தும் திராவிட் குறிப்பிட்டது:

சமயங்களில் சில வீரர்கள் மிகப்பெரும் சாதனைகளைத் தங்களின் உழைப்பு, தியாகம் ஆகியவற்றால் அடைகிறார்கள். ஆனால், அவர்கள் அதிர்ஷ்டம் உடையவர்களாகவும் உள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்கள் என்று நீங்கள் எண்களைக் கொண்டேனும் கருதாத பலருடன் நான் விளையாடி இருக்கிறேன். ஆனால், என்னுடைய பார்வையில் இந்த விளையாட்டை என்னுடைய ஆடிய அனைவரும், வெற்றிப் பெறவேண்டும் என்று போராடிய அனைவரும், வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தோடு தங்களாலான அனைத்தையும் தந்த அனைவருமே நாயகர்கள் தான். உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து ஓயாமல் உழைத்தும் தாங்கள் விரும்பியது கிடைக்காமல் போனாலும், மீண்டும், மீண்டும் துவளாது போராடும் உங்களைக் காண்பதே எனக்கு உத்வேகத்தை எப்பொழுதும் தந்தது… இந்திய கிரிக்கெட் அணியின் அங்கமாக இருப்பதை நான் நிச்சயம் மிஸ் செய்வேன். அதை மட்டுமல்ல வெகுகாலம் நம்மிடையே இருந்த பரஸ்பர நம்பிக்கை, நட்பு, குறும்பாக ஒருவரை ஒருவரை வாரிக்கொண்ட கணங்கள், அந்த ஓயாத தேடல் எல்லாவற்றின் இன்மையையும் ஆழமாக உணர்வேன்…ஆனால், தாளமிடவைக்கும் இசை என்னோடு இருக்கும் என எண்ணுகிறேன்.

பிராட்மான் நினைவு சொற்பொழிவில் தனக்கும். பிராட்மானுக்கும் இடையேயான தொடர்பு குறித்து:

அவரும் என்னைப் போலவே மூன்றாவதாகக் களமிறங்கும் மட்டையாளர். அது மிக, மிகக்கடினமான பணியாகும்.

நாங்கள் தான் கிரிக்கெட்டின் அரசர்களுக்கான வழிப்பாதையைச் செப்பனிட்டு, எளிமையாக்கி தருகிறோம். என்னைவிடப் பிராட்மான் அதனை அதிக வெற்றி, அலாதியான பாணியோடு செய்தார். அவர் பல்வேறு பந்து வீச்சாளர்களைச் சிதறடித்து, இருக்கையின் நுனிக்கே பார்வையாளர்களைக் கொண்டுசென்றார். நான் எவ்வளவு நேரம் ஆடினாலும். மக்கள் சலிப்புற்று உறங்கப்போய்விடும் வாய்ப்புகளே அதிகம். என்றாலும், இப்படிப்பட்ட ஒரு இடத்தில் நெடுங்காலம் ஆடியதே பெருமைதான். அதன் அளவுகோல் என்பது தான் மிகச்சேர்ந்த மட்டையாளருக்கான அளவுகோல் என்று நான் அறிவேன். அது போதும் எனக்கு!


பிட்ஸ் பிலானி பட்டமளிப்பு விழாவில் பேசிய ‘காத்திருப்பு’ பற்றிய உரை:
என் தலைமையாசிரியர் என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னைக் கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். “நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள் ; நாங்கள் அவன் கல்வியைப் பார்த்துக்கொள்கிறோம் “என்றார் அவர்.தேர்வுகளுக்கு என் நண்பர்களின் குறிப்புகள் தான் உதவும் ; அதை அவசர அவசரமாகப் படித்துவிட்டு தேர்வுகளை எழுதினேன் நான். தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டு தான் இருந்தேன். டென்னிஸ் பந்தை பதினைந்து கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சிறப்பாக எதிர்கொள்ள என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின் கேப்டனாக ஆகியிருந்தேன். சிறந்த பந்துவீச்சுகளைச் சந்தித்துச் சிறப்பாகவே ஆடினேன் . ஆனாலும் நான் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் தான் ஆடிக்கொண்டு இருந்தேன் நான். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி எழுதிக்கொண்டேன்,
“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”(“God’s delays are not God’s denials.” ).

திரும்பிப்பார்க்கிற பொழுது அந்த ஐந்து வருடம் அப்படி இருந்திருக்காவிட்டால் இப்பொழுது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது என்பதே உண்மை என்று உணர்கிறேன். இதுவே என்னை வார்னே,முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொள்ளச் செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சி தான் அக்ரம்,மெக்ராத்,டொனால்ட் என எல்லாரையும் ஆடக்கடினமான பிட்ச்களில் கம்பீரமாகச் சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிற பொழுது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்தி சொல்வேன். ஒரு செடியின் கதை உங்களை ஈர்க்கப்போகிறது இப்பொழுது …

ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர் விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு செடி முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும் அது. ஒரே நாளில் 39 அங்குலம் கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதைக் கண்களால் பார்க்க முடியும் அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது ? அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாகப் பெருவளர்ச்சிக்கு அது தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னைக் காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அது ஐந்து வருடம்,ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன் . அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை,ஆர்வம்,என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றைச் சோதித்தது என்றே சொல்வேன் – ராகுல் திராவிடின் BITS Pilani பட்டமளிப்பு உரையில் இருந்து ஒரு பகுதி

“கடவுளின் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை !”((“God’s delays are not God’s denials.” ).

திலீப் சர்தேசாய் நினைவுச் சொற்பொழிவில் பேசியதன் சுருக்கம்:

என்னுடைய கிரிக்கெட் காதல் என் தந்தை என்னிடம் சொன்ன கிரிக்கெட் சாகசங்களில் இருந்தே துவங்கியது. சுனில் கவாஸ்கர் இருபத்தி ஒரு வயதில் தெளிவான ஆட்டம், கச்சிதமான நுட்பம், நேரான மட்டைப்பிடிப்பு ஆகியவற்றோடு தன்னுடைய முதல் தொடரிலேயே நான்கு சதங்கள், மூன்று அரைச் சதங்களை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்ததை அவர் கண்கள் மின்ன சொல்வார்.

எனக்கு ஒரு தாராப்பூர் கிடைத்ததைப் போலச் சச்சினுக்கு ராம்காந்த் அச்ரேகர் இருந்தார். சச்சினை தன்னுடைய பைக்கின் பின்புறம் வைத்துக்கொண்டு அவரை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் ஆடவைத்த கதை எல்லாம் எங்களுக்குள் சற்று பொறாமையை உண்டு செய்தன. இவர்கள் எல்லாம் எதையும் கைமாறாக எதிர்பார்க்கவில்லை என்பதே ஆச்சரியம் தருகிறது. பெங்களூரில் ஒட்டுமொத்த வலைப்பயிற்சியின் பொழுதும் நின்றுகொண்டு, ஓடிக்கொண்டு, கிரீசை தாண்டி காலை வைக்கும் பந்துவீச்சாளரின் தலைமுடியை பற்றும் பாசாக்கார துரைசாமியை காணலாம். அவருக்கு வயது அதிகமில்லை, எண்பது தான்! நாற்பது வருடங்களாக டெல்லியில் கிரிக்கெட்டை ஒரு தவமாகப் பயிற்றுவித்து வரும் தரக் சிங்கை நினைத்துப் பார்க்கிறேன்.

எங்கள் காலத்தில் வீரர்களிடையே இருந்த உறவை சொல்லியே ஆகவேண்டும். இருபத்தி இரண்டு மணிநேரம் கழிப்பறைக்கு அருகில் ரிசர்வ் செய்யப்படாத இருக்கைகளில் ரயில் பயணங்களை அணியினரோடு மேற்கொண்டு இருக்கிறேன். கர்நாடக ரஞ்சி அணி இரண்டாம் வகுப்பு தொடர்வண்டிப் பெட்டியில் பயணிக்கும். எங்களிடம் ஐபாட்கள், ப்ளே ஸ்டேஷன்கள், பிறரிடம் பேசாமல் இருக்கச் செய்யும் வாக்மேன்கள் இல்லை. சீட்டு விளையாட்டு, டம்ப்ஷாரட்ஸ், இன்றைக்கு நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத பாடல்களால் நிறைந்த பயணங்கள் அவை.

எண்ணற்ற மூத்தவர்களிடம் இப்படிப்பட்ட ரயில் பயணங்களில் நாங்கள் பல்வேறு பாடங்களைப் பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ஒரு புது நுட்பமும், பாணியும் புரிந்திருக்கும். ..மும்பை ஆட்டக்காரர்களை ‘khadoos’ என்பார்கள். அதை எப்படி மொழிபெயர்ப்பது? அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?

இந்தச் சொல்லை மொழிபெயர்க்க முடியாதது போல, ஒரு பிள்ளை இந்தச் சொல் குறிப்பதைப் போல மாற நாம் பாடம் நடத்த முடியாது. அதை இதற்கு முன் ஆடிய அனைத்து மும்பை ஆட்டக்காரர்களின் ‘khadoos’ தன்மையைப் பற்றிப் பகிர்வதாலே சாத்தியம். இரு வகையான பந்து வீச்சாளர்களை இடது, வலது என்று மாறி மாறி பேட்டிங் செய்து எதிர்கொண்ட சுனில் கவாஸ்கரின் சாகசத்தைக் கட்டுரைகளும், ஸ்கோர்கார்டுகளும் சொல்லிவிடாது. பேட்டிங்கில் அளப்பரிய திறனை வாய்மொழி பாரம்பரியம் மூலம் ஒரு இளைஞன் கேட்டறியும் பொழுதே இதனைப் பெறமுடியும்.

வாசு ப்ரஞ்சாபே எனும் மும்பையின் கிரிக்கெட் கதைசொல்லி ஹனீப் முகமது பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பிராபோர்ன் மைதானத்தில் ஹனீப் மட்டையால் முன்னோக்கி வந்து செய்யும் தடுப்பின் அற்புதமான சப்தம் சர்ச்கேட் வரை எதிரொலிக்கும். அதைக் கேட்டதும் அப்படிப்பட்ட தடுப்புக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

சர்தேசாய் இறக்கின்ற நாள் அன்றுகூட லெக்ஸ்டெம்ப் நோக்கி வரும் ஷார்ட் பாலை எப்படி நான் எதிர்கொள்வது என்று சிசிர் ஹட்டங்காடியிடம் மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடியே பேசிக்கொண்டிருந்தார் என்று எண்ணுகிற பொழுது விதியோடு ஒரு போர் நடக்கிற பொழுதும் கிரிக்கெட் அவரின் ரத்தத்தை உசுப்பேற்றிக்கொண்டிருந்தது என்று சொல்லத்தோன்றுகிறது.

இந்த வாய்மொழிக் கதைகளில் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், அறிவின் சேமிப்புக் கிடங்குகள் எல்லாம் இணைந்து நம்முடைய கிரிக்கெட்டின் அடையாளத்தைத் தருகின்றன…இந்தியாவின் வண்ணமயமான கிரிக்கெட் கதை இன்னமும் எழுதப்படுகிறது…அதை மேலும் வளப்படுத்துங்கள்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

தோனியின் மவுனமான வெற்றி!


தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி,  அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு, பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது.

இலங்கையுடனான தொடரில்தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது. டெஸ்ட் போட்டியும் பூமெத்தையாக அமையவில்லை. ஐந்து விக்கெட்டுக்களை 109 ரன்களுக்கு அணி இழந்திருந்த சூழலில், ‘தோனி ஆடிவிட்டு வா!’ என்று அனுப்பி வைத்தார்கள். மலைகளின் மீது ஏறி, ஏறி உரமேறி இருந்த கால்கள் சளைக்காமல் அன்று கைகளோடு இணைந்து போராடியது. முப்பது ரன்கள் அடித்திருந்த தோனிதான் கடைசி ஆளாக நடையைக் கட்டியிருந்தார்.

விட்டேனா, தீர்க்கிறேனா பார் என்று பாகிஸ்தான் கொக்கரித்துக் கொண்டிருந்த பைசலாபாத் டெஸ்டில், பாலோ ஆனைத் தவிர்க்கவே நூறுக்கும் மேலே ரன் அடிக்க வேண்டிய சூழல். சிரித்தபடி, ஆளைக் கொல்கிற அளவுக்கு அழுத்தம் இருந்தாலும் ‘எல்லாம் ஆல்ரைட்!’ என்கிற அதே முகபாவனையோடு வெறும் 93 பந்துகளில் சதமடித்து அணியைத் தோனி கரைசேர்த்தபொழுதுதான் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

பதினொரு தையல்களோடு கும்ப்ளே கிரிக்கெட் வாழ்க்கை போதும் என்று கையசைத்து விடைபெற்ற பொழுது, எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அணித்தலைமை தோனி வசம் வந்திருந்தது. வெற்றியைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதுபோல அணி அடித்து ஆடியது.

கிரேக் சேப்பல் உண்டாக்கிவிட்டுப் போயிருந்த சீனியர்கள் வெளியே போங்கள் கோஷத்துக்கு முடிவுகட்டி, “எல்லாரும் முக்கியம் பாஸ்!” என்று தோனி அமைதியாக ஒருங்கிணைத்துக் கொண்டே போனதில் அணி முதலிடத்தை நோக்கி முன்னேறியது. இலங்கையுடனான தொடரில் அமைதியாக இரண்டு சதங்கள் அடித்துக் கூல் கேப்டன் கைகொடுக்க, அணி நம்பர் ஒன்னாக ஒன்றரை ஆண்டுகள் கோலோச்சியது. கிறிஸ்டன் அப்பொழுது ஏற்பட்ட உணர்வை இப்படிச் சொன்னார், “தோனி மட்டும் உடன் வருவார் என்றால்போருக்குக் கூடப்போகத் தயார்.”

தோல்வியில் இருந்து அணியைக் காக்க பேட்டிங் செய்வது, அசராமல் விக்கெட் கீப்பிங் செய்து ஸ்டம்பிங், கேட்சுகள் அள்ளுவது, ஏழாவது விக்கெட்டாக வந்தாலும் சதமடிப்பது எல்லாமும் செய்து முடித்த பின்பு, “நான் ஒன்னுமே பண்ணலைப்பா!” என்கிற மாதிரியான அந்தப் பாவனையில் தான் எத்தனை வசீகரம்?

உச்சத்துக்குப் பிறகு உன்னைக் கீழே தள்ளும் உலகம் என்பது போல வெளிநாட்டுக்குத் தலைமை தாங்கி போன போட்டிகளில் எல்லாம் அடித்துத் துவைத்தார்கள். தொடர்ந்து எட்டுத் தோல்விகள் வந்து சேர்ந்த பொழுது தோனியை காய்ச்சி எடுத்தார்கள். புதிய அணியை நிர்மாணிக்கிறபொழுது நிலநடுக்கங்கள் எழத்தான் செய்யும் என்று அவருக்குத் தெரியும். சொந்த மண்ணில் தோல்வியைச் சுவைக்காத அணி இங்கிலாந்திடம் தொடரையே இழந்த பொழுது தோனி தோற்றுவிட்டார் என்று முடிவுரை எழுதினார்கள்.

அண்ணன் ஆஸ்திரேலியாவை அன்போடு அவர் வரவேற்றார். நாற்பது வருடங்களில் முழுவதும் தோற்கடிக்கப்பட்ட வரலாறு இல்லாத அந்த அணியை 4-0 என்று துவைத்துத் தொங்கவிட்டார்கள். தோனி எப்பொழுதும் போல ஓரமாக நின்றுகொண்டார். வெளிநாட்டு மண்களில் அதிகபட்ச தோல்விகளைப் பெற்ற தலைவர் என்று விமர்சிக்கப்படுகிற தோனி மிக அதிகபட்ச டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றிருக்கிறார் என்பதையும், வெற்றி சதவிகிதம் 45 என்று இருப்பதையும் இணைத்தே பேசவேண்டும். அடுத்த இடத்தில் இருக்கும் கங்குலி தலைமையில் ஆடிய இந்திய அணி 42.9 % வெற்றிகளைச் சுவைத்திருக்கிறது.

இன்னம் ஆறு விக்கெட்டுகளைக் கழற்றி இருந்தால் முன்னூறு கைப்பற்றல்கள், கூடவே 124 ரன்கள் அடித்திருந்தால் ஐயாயிரம் ரன்களைத் தொட்டிருக்கலாம் என்கிற சூழலில், “போதும்!” என்று விடை பெறுகிற தோனியின் இலக்கு உலகக்கோப்பை என்பது அவரை ஆழமாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும்.

சச்சின், உலகமயமாக்கல் இந்தியாவில் நுழைந்த சூழலில், பல்வேறு வன்முறைகள், வலிகளுக்கு நடுவே தன் ஆட்டத்தின் மூலம் ஆறுதல் தந்தார் என்றால், “நான் இருக்கிறேன் பார்!” என்று அறிவித்துக்கொண்டு இருக்காமல் அர்ப்பணிப்போடு செயல்படுவதும் வெற்றிகளைத் தரும் என்று தோனி அறியச் செய்தார்.

அணியை அமைதியான ஆளுமையால் இறுகப் பிணைத்து வெற்றிகளைப் பெறமுடியும் என்கிற பாடத்தைத் தோனி நடத்தினார். நடுத்தரக் குடும்பத்தில் இருந்து மென்மையான புன்னகை, தீர்க்கமான ஆட்டத்தின் மூலம் உன்னதங்களை அடைய முடியும் என்கிற நம்பிக்கையையும் அவர் சேர்த்தே தந்துவிட்டுப் போயிருக்கிறார்.

நான்கு ஓவர்கள், நான்கு விக்கெட்கள் மீதமிருந்த நிலையில், வருடம் முடிகிற தருணத்தில் வரலாறு ஒன்றையும் முடித்துக்கொள்வது ஆர்ப்பரிப்பு இல்லாமல் பாயும் சூரியக்கதிர் போன்ற தோனிக்கு எளிமையான விஷயமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு அப்படியிருக்காது. வெற்றிகளின்பொழுது ஓரமாக ஒரு ஸ்டம்ப்பை மட்டும் ஏந்திக்கொண்டு போகும் அவர் தற்பொழுது எல்லாரின் இதயங்களையும் எடுத்துக்கொண்டு மவுனமாகவே போகிறார். அறிவிப்பை அவர் சார்பாக நம்மையே அறிவிக்க வைத்திருப்பதில் இருக்கிறது அவரின் மவுனமான வெற்றி.

கவாஸ்கர் சொன்ன அந்த வரிகள்தான் அடுத்த உலகக்கோப்பையில் தோனியிடம் நாமும் கேட்கிறோம் , “எனக்கு இன்றைக்குச் சாவு என்றால், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த இறுதி சிக்ஸரை மீண்டுமொரு முறை பார்த்துவிட்டு சாகவேண்டும்.” நூறு கோடி பேரின் பெரும்பாலான நம்பிக்கைகளை மெய்ப்பித்த நீங்கள் இதையும் மீண்டுமொரு முறை செய்து முடிப்பீர்கள்.

சகாப்தங்கள் முடிவதில்லை !

கொண்டாடப்படாத நாயகன் காலிஸ் !


நம்மை சுற்றி ஒருவர் மிகப்பெரிய விஷயங்களை சத்தமே இல்லாமல் செய்து கொண்டிருப்பார். அவர் அப்படி சாதிக்கிற பொழுது கூடவே இன்னொருவர் அதைவிட கொஞ்சம் கூடுதலான பணியை செய்திருப்பார், இறுதியில் இந்த முதல் நபர் கவனத்துக்கு வராமலே போய்விடுவார். அந்த இரண்டாவது நபருக்கான இடத்தை நிறைய பேர் மாறிமாறி பெற்றுக்கொண்டே இருப்பார்கள். எப்பொழுதுமே தன் வேலையை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செய்யும் அந்த முதல் ஆள் மட்டும் மாறியிருக்க மாட்டார். அவர் ஒரு நாள் போதும் சாமி என்று கிளம்புகிற அன்று தான் அவர் எப்படிப்பட்ட மகத்தான அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் என்று புரியும். காலிஸ் தான் அந்த நாயகன். லாரா,சச்சின்,பாண்டிங்,திராவிட் முதலிய வீரர்கள் ஆடிய காலத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் கலக்கிய இவர் இறுதியில் ஓடி முடிக்கிற பொழுது அவர்கள் மூவரை விட டெஸ்டில் அதிக சராசரி உடையவராக இருந்தார் ! 

மழையால் பாதிக்கப்பட்ட அவர் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் பன்னிரெண்டு பந்துகளை சந்தித்து வெறும் ஒரு ரன் அடித்த காலிஸ் அடுத்த ஐந்து டெஸ்ட்களில் எட்டு ரன்கள் என்கிற சராசரியையே கொண்டிருந்தார். நடுவில் ஒரு மூன்று விக்கெட் மட்டும் கழட்டினார். இந்த பையன் தேறமாட்டான் என்று முடிவு கட்டிவிட்டார்கள் கிரிக்கெட் மேதைகள். தோல்வியின் விளிம்பில் பாக்ஸர் டெஸ்ட் போட்டியில் மெல்பர்னில் அணி நின்று கொண்டிருந்த பொழுது கடைசி நாள் ஒற்றை ஆளாக மெக்ராத் மற்றும் வார்னே முதலியோரை சமாளித்து ஆடி சதமடித்து போட்டியை டிரா செய்த பொழுது தான் அசந்து போனார்கள். 

ஸ்லிப்பில் கச்சிதமாக கேட்ச் பிடிப்பது ஆகட்டும்,பீல்டிங்கில் பாய்ந்து பிடிப்பது ஆகட்டும் காலிஸ் கலக்கி எடுப்பார். எதிரணியை முன்னணி பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்யமுடியவில்லையா ? காலிஸ் அழைக்கப்படுவார். பந்தை முன்னாடி வந்தோ,பின்னோக்கி நகர்ந்தோ அடிக்க முடியாத மாதிரி கச்சிதமாக லைனில் பந்து அவரால் வீசப்பட்டு ரன்கள் கட்டுப்படும். முன்னணி பந்துவீச்சாளர்கள் வந்து விக்கெட்களை கழட்டுவார்கள். இவர் தனக்கு கொடுக்கப்பட்ட காரியத்தை செய்து முடித்த திருப்தியோடு நிற்பார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் ஆட்டம் இரண்டில் பத்தாயிரம் ப்ளஸ் ரன்கள் கூடவே இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த ஒரே வீரர் காலிஸ் மட்டும்தான். ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்தாலும் அதற்கான எந்த சுவடும் அவரிடம் தெரியவே தெரியாது. 

காலிஸ் ஏதேனும் போட்டியில் சதம் அடித்தால் அந்த போட்டியில் தென் ஆப்ரிக்க தோற்பது அரிதிலும் அரிதாகத்தான் நிகழும். நாற்பத்தி ஐந்து முறை டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கும் காலிஸ் அவ்வாறு சதம் அடித்த முப்பது தருணங்களில் அவரைவிட அதிகமான ஸ்கோர் வேறொருவரால் அடிக்கப்பட்டு இருக்கும். காலிஸ் கவனிக்கப்படாமல் போவார். 

இந்தியாவுடன் கேப்டவுனில் நடந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் தொடரை முதல் முறை கைப்பற்றி சரித்திரம் படைக்க காத்துக்கொண்டு இருந்தது. காலிஸ் உடைந்த விலா எலும்போடு இறுதி நாளில் 109 ரன்கள் அடித்து வெற்றியை தடுத்தார். அது போதாது என்று தன்னுடைய இறுதி டெஸ்ட் போட்டியில் சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அப்பொழுதும் எப்பொழுதும் போல மெல்லிய சிரிப்பு என்ன கூடுதலாக நின்றபடி மரியாதை செலுத்தும் சகாக்கள் மற்றும் ரசிகர்களுக்காக சில துளிக்கண்ணீர். 

அற்புதமாக பந்துவீசி,பேட்டிங் செய்து விறுவிறுப்பாக பீல்டிங் செய்யும் காலிஸ் அவ்வளவாக காயமடைய மாட்டார். அடுத்த உலகக்கோப்பையிலாவது அணிக்கு கோப்பை பெற்றுத்தந்துவிட வேண்டும் என்று ஆசையோடு காத்துக்கொண்டு இருந்த அவர் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் வரிசையாக .0,1 மற்றும் 4 என்று ஸ்கோர்கள் வரவே போதும் இதோடு என்று முடிவு செய்துகொண்டார். “உலகக்கோப்பை என்பது எட்ட முடியாத பாலம் என்று எனக்கு புரிந்துவிட்டது. விடைபெறுகிறேன் !”என்று கிரிக்கெட் கண்ட ஆகச்சிறந்த ஆல்ரவுண்டர் தன்னடக்கத்தோடு விடை பெற்றுக்கொண்டார். மிகப்பெரிய அளவில் கோப்பைகளை வெல்லாத சொதப்பல் அணியாக இருக்கும் தென் ஆப்ரிக்கா வென்ற வில்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் காலிஸ் வீழ்த்திய விக்கெட்கள் ஐந்து ! 

தென் ஆப்ரிக்கா என்கிற அணியை உச்சத்தில் வைக்க காரணமாக இருந்த அவரின் அடுத்த இலக்கு என்ன என்று கேட்ட பொழுது ,”கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீண்டும் ஐ.பி.எல் கோப்பை வெல்ல உதவ வேண்டும் !” என்றார். லாரா சொன்ன வரிகளை விட சிறந்த சமர்ப்பணம் இருக்க முடியாது :”என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள யாரேனும் ஒருவரை பேட்டிங் செய்ய வைக்க வேண்டுமென்றால் நான் திராவிட் அல்லது காலிசையே தேர்வு செய்வேன் !”. தன்னை பத்தொன்பது வருடங்களாக ஆட்டத்தை தவிர வேறெங்கும் வெளிப்படுத்திக்கொள்ள மறுத்த அற்புதம் அவர்.

கங்குலி எனும் சகாப்தம்


2005 இல் பாகிஸ்தான் தொடருக்கு பிந்தைய நிலையில் தாதா இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த சூழலில் அவரைப்பற்றி டெலிகிராப் இதழில் வெளிவந்த Ramachandra Guha கட்டுரை. (http://www.telegraphindia.com/1050108/asp/opinion/story_4224998.asp)

வங்காளிகள் வெகுகாலமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களாக, இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து எதோ ஒரு வகையில் தனித்தோ அல்லது விலக்கப்பட்டோ தாங்கள் இருந்து வருவதாக உணர்ந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய ஆட்டம் மற்றும் அணியால் பல காலங்களாக வங்கம் சந்தித்த அவமானங்களுக்கு பெருமளவில் பழி தீர்த்திருக்கிறார் கங்குலி எனும் கிரிக்கெட் வீரர். டெல்லிக்கு மாற்றப்பட்ட தலைநகரம்,மறைக்கப்பட்ட நேதாஜியின் வரலாறு,மத்திய அரசு தரும் நிதியில் காட்டப்படும் பாரபட்சம் முதலிய பல்வேறு அவமானங்கள், வருடக்கணக்காக ஏறிக்கொண்டே போன ஏளனங்கள் எல்லாமும் சவுரவின் சதங்கள் மற்றும் வெற்றிகளில் காணாமல் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. 

கங்குலியின் ரசிகர்களுக்கு அவர் இப்படியொரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு இருப்பது அவரின் மோசமான ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து உருவானது என்பதே இனிமையானதாக இருக்கிறது. கங்குலியை ஆஸ்திரேலியா அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு 1991 இல் தேர்வு செய்த பொழுது அவர் மிகவும் இளைஞனாக இருந்தார். அங்கே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி பெரிதாக சோபிக்காமல் போய் அவர் அணியை விட்டு நீக்கப்பட்டார். இன்னொரு போட்டியில் பன்னிரெண்டாவது வீரராக அவர் இருக்க வைக்கப்பட்டார். அவர் ட்ரேக்கள் தூக்குவது மற்றும் பாட்டில்களை திறந்து கொடுப்பது ஆகியவற்றை செய்ய பெஹலா எனும் பகுதியின் மகராஜா என்று அழைக்கப்பட்டவர் என்பதால் எதிர்த்ததாக சொல்வார்கள்.

அந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கு பிறகு கங்குலி ராஞ்சி போட்டிகளுக்கு திரும்பினார். இரண்டு வருடங்கள் கழித்து டெல்லி கோட்லா மைதானத்தில் அவர் அற்புதமான கவர் டிரைவ்கள் அடித்து ஐம்பது ரன்கள் அடித்து அதற்கு பின்னர் மட்டையால் பந்தை வேகமாக திருப்பி அடிக்க முயன்று போல்ட் ஆனதை கான நேர்ந்தது. அவருடைய ஆக்ரோசம் அவரின் திறமைகளுக்கு நியாயம் செய்யாமல் போகும் என்று தோன்றியது. அதையே தேர்வுக்குழு உறுப்பினர்களும் வெகுகாலம் எண்ணினார்கள்.

1996 இல் ஆச்சரியகரமாக கங்குலி இங்கிலாந்து அணியுடனான சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்பொழுது தேர்வுக்குழு உறுப்பினர்கள் அவரை தேர்வு செய்ய விரும்பவில்லை என்றும் ஜக்மோகன் டால்மியா அழுத்தம் கொடுத்ததாலே அவர் தேர்வு செய்யப்பட்டார் என்றும் முணுமுணுக்கப்பட்டது. அப்படி கிசுக்கப்பட்ட வதந்தி உண்மையென்றால் அந்த சலுகை எதிர்பாராத வெகுமதியை தந்தது. கவுண்டி அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடினார். டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பொழுது இரண்டு சதங்கள் அடித்து கலக்கினார். அந்த தொடரில் அவருடன் இணைந்து வெகுநேரம் பேட் செய்த ராகுல் திராவிட் “ஆப்சைடில் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார் அவரின் பெயர் கங்குலி !” என்று அறிவித்தார். (இன்னொரு கடவுளும் இருந்தார் அவரின் பெயர் ஜாகிர் அப்பாஸ். அவர் ஆடிய காலத்தில் அதை திராவிட் பார்த்திருக்க வாய்ப்பில்லை )

அவர் எடுத்த ரன்கள்,அதை சேர்த்த விதம் ஆகியவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான ஒரு வீரராக அவரை நிலைநிறுத்தியது. ஆனால்,வெகுவிரைவில் அவர் ஒருநாள் போட்டிகளிலும் கலக்கி எடுத்தார். அவரும் சச்சினும் இணைந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் கலக்கி எடுத்த அந்த காலங்களில் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் போட்டிகளில் ஆப் சைட்டின் கடவுள் லெக்சைடிலும் மிரட்டி எடுத்தார். உலகின் மிகப்பெரிய ஆடுகளங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு எந்த ஒரு வீரரும் இப்படி அசட்டையாக பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில்லை.

கங்குலியின் எல்லா சதங்களிலும் மிக முக்கியமானது என்று நான் கருதுவது ப்ரிஸ்பேனில் அடித்த 2003-04 சுற்றுப்பயணத்தில் அடித்த 144 ரன்கள் தான். ஏற்கனவே அதற்கு முந்தைய சுற்றுப்பயணத்தில் அப்படியே அணியை துவம்சம் செய்திருந்த ஆஸ்திரேலியாவிடம் இந்த முறையும் சின்னாபின்னம் ஆவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அந்த போட்டியில் திராவிட் மற்றும் சச்சின் சீக்கிரம் நடையை கட்டியது போல கங்குலியும் ஆடியிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால், இரும்பு போன்ற உறுதியுடன் அன்றைக்கு கங்குலி ஆடினார். இயல்பான ஆட்டம் அன்ச்று வெளிப்படா விட்டாலும் அவர் ஆடிய ஆட்டம் மொத்தத்தில் பெரிய தாக்கத்தை உண்டு செய்து இந்திய அணிக்கு முதல் இன்னிங்க்ஸ் முன்னிலை தந்தது. அணி தொடர் முழுக்க போராடுவதற்கான உத்வேகத்தை அது தந்தது.

கங்குலியின் கிரிக்கெட் சாதனைகள் பெரும்பாலும் அவரின் பேட்டிங் சார்ந்தே இருக்கின்றன. ஆனால்,என்னைப்பொறுத்தவரை அவரின் மிக முக்கியமான பண்புநலன் அவர் எப்படி மற்றும் என்ன பந்து வீசுகிறார் என்பது தான். ஷுதே பேனர்ஜி காலத்தில் இருந்தே வங்காளிகள் சுழற்பந்து வீச்சை அந்த அளவுக்கு ஆண்மை கொண்டதாக இல்லை என்றே வங்காளிகள் இழிவாக கருதி வந்திருக்கிறார்கள். அவர்கள் புது பந்தை கச்சிதமாக வீசி திணறடிக்கும் அற்புதமான கமல் பேனர்ஜி,மோண்டு பேனர்ஜியில் துவங்கி டி.எஸ்.முகர்ஜி,சமீர் சக்ரவர்த்தி,பருண் பர்மன்,சுப்ரதோ படேல் என்று அற்புதமான வரிசையை பரிசளித்தார்கள். சவுரவ் இந்த பாரம்பரியத்தை நன்கு உணர்ந்தவர். அதை தூக்கிப்பிடிப்பதையே அவர் விரும்புகிறார். அவர் உருவத்தில் பெரிய ஆள் இல்லை. ஆனால் வேகமாக பந்து வீச முயல்கிறார். கிரீஸ் நோக்கி இருபது சின்ன அடிகளில் ஓடி வந்து,கையை சூறாவளியாக சுழற்றி.மிதவேகத்துக்கு சற்றே குறைவாக பந்தை அவர் வீசுகிறார். அவர் உலகின் குடிமகன் போல பேட் செய்யலாம்,ஆனால்,ஒரு வங்காளியை போல அவர் பந்து வீசுகிறார். அவர் ஒரு வங்காளியாக அவரின் எண்ணற்ற சத்தங்களுக்கு நடுவே கல்கத்தா டெஸ்டில் 1998, ஆம் ஜவகல் ஸ்ரீநாத் அவர்களுடன் இணைந்து பந்து வீசிய தருணத்தில் எடுத்த இரண்டு விக்கெட்களை சாதனையாக நினைப்பார்

வங்காளிகள் அவர்களின் ஒட்டுமொத்த சுயமரியாதைக்கு அவர் சேர்த்த பெருமைகளை பற்றி ஆனந்தப்படுகையில் இந்த பெருமனிதர் வாழ்வின் திருப்புமுனையில் நிற்பதாக தோன்றுகிறது. வரலாற்றாசிரியன் மற்றும் கிரிக்கெட் காதலருக்கு கங்குலியின் இன்றைய நிலை ( 2005 ) ஜவகர்லால் நேரு 1957. நிலையை ஞாபகப்படுத்துகிறது. அப்பொழுது இரண்டாவது முறையாக அவர் தேர்தலில் வென்றிருந்தார். மக்களின் நேசத்துக்கு உரியவராக இருந்தார். கட்சி மற்றும் ஆட்சியில் உச்சத்தில் இருந்தார். சர்வதேச சமூகம் அவரை பெரிதும் மதித்தது. அவரின் அரசியல் விமர்சகர்கள் அவரின் வீழ்ச்சியை கணித்தார்கள். அவரின் பொறுமையின்மை,விமர்சனத்தை திறந்த மனதோடு எதிர்கொள்ளாதது,தங்கு பிடித்தவர்களை,தன்னோடு ஒத்துப்போவோரை மட்டும் தேர்வு செய்வது என்று செயல்பட்டது ஆகியவற்றை அவர்கள் குறை சொன்னார்கள்,

கிரிக்கெட் வீரர்கள் பிரதமர்கள் இல்லை. கங்குலி நேருவும் இல்லை. இருந்தாலும் ஒற்றுமைகள் ஆச்சரியப்படுத்துகின்றன. கங்குலியும் தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை ஏற்கனவே முன்முடிவு செய்துவிட்ட அல்லது தனக்கு எதிரானவர்களிடம் இருந்தே வருவதாக பார்த்தார். அவர் தன்னுடைய சட்டையை (லார்ட்ஸ் மைதானத்தில் ஒருமுறை உண்மையாகவே மற்றும் விருப்பத்தோடே) இழந்தார் இது ஒரு சர்வதேச கேப்டன் அடிக்கடி செய்யக்கூடாதது. அவரும் அவருக்கான கிருஷ்ண மேனன்களை கொண்டிருக்கிறார் ; அவர்களை நீக்கவோ,ஒழுங்குபடுத்தவோ இவரும் விரும்பவில்லை.

நேரு அடுத்த வருடமே ஒய்வு பெற்றிருந்தால் அவர் கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த ராஜதந்திரியாக நினைவுகூரப்பட்டு இருப்பார். கங்குலி பாகிஸ்தான் அணியை அவர்கள் மண்ணிலேயே சாய்த்த தொடருக்கு பின்னர் தலைமைப்பொறுப்பை விடுத்து இருந்தால் இந்தியாவின் மிக வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக அவர் கேள்வியே இல்லாமல் விடை பெற்றிருப்பார். ஆனால்,அப்பொழுது அப்படி விலக தான் மிகவும் இளைஞனாக இருப்பதாக அவர் உணர்ந்திருப்பார். இந்த கட்டுரை எழுதப்பட்ட கணத்தில் அவரே இந்தியாவை வழிநடத்த தலைசிறந்த தேர்வாக இருக்கிறார் (2005) கூடுதல் சுமையை திராவிட் தலையில் சுமத்துவதும் எந்தளவுக்கு சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. (கேப்டன் பொறுப்பு சச்சின் எனும் அற்புதமான பேட்ஸ்மானுக்கு என்ன செய்தது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம் ). கங்குலி தன் மீதான விமர்சனங்களை இன்னமும் திறந்த மனதோடு அணுகலாம்,அவர் முப்பதுகளின் தவறான பக்கத்தில் இருப்பதால் இந்த தருணத்தில் தலைமைப்பொறுப்பை விடுத்து நகர்வது அவரின் வயது,அனுபவம்,நிலை ஆகியவை அவரின் இந்த விளையாட்டின் ராஜதந்திரி என்று உணரவைக்கும்.