தன்னைத்திட்டியபடி என்னைக்கடிதலும் முன்னை முறைத்து பின்னே கலங்கலும் நாளைக்கான பிரியங்களை நேற்றே ஈந்துவிட்டேன் என எட்டிச்சிரிக்கும் நச்சுக்கோப்பை விளிம்பு முத்தம் நீ


இசையாக வலிக்கிறது அவள் சொற்கள்
முணுமுணுப்பாக கடக்கிறது பார்வை எச்சங்கள்
கடக்க மறுத்து காலருகே படுத்துக்கொண்டு
நிழல் போல கால் வருடி படுத்திருக்கிறது நினைவு நாய்


கிழிந்த பக்கங்களை
அப்படியே வைத்து வாசித்து கொண்டிருக்கிறேன்
அறுந்து போன கயிறோடு
ஊஞ்சலில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறேன்
பெயர்ந்துபோன பொழுதுகளை நிரந்தரமானவை என கூவிக்கொண்டிருக்கிறேன்
மீந்துபோன மவுனத்தொடு
உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன்
தூர்ந்துபோன மண்ணோடு நெகிழி கொண்டு
வன்முறை செய்கிறேன்
பூக்களுக்கு குண்டுகளின் மூலம் உரமிடுகிறேன்
பாருங்கள் தேசியம்,இறையாண்மை,ஜனநாயகம் எல்லாம் எளியவனுக்கு
நீதிதரும் என ஓயாமல் முணுமுணுக்கிறேன்
எல்லாம் நடக்கும்…காலம் கைகொட்டி சிரிக்கும்


ராட்டின சத்தங்கள்
கயிறுதிரிப்பு ஜதிகள்
காற்றின் குழல்வழி மொழிகள்
நேற்றின் மரணித்த இசைவிளிம்புகள்
மழைவானின் பிரசவ முனகல்கள்
மழலையின் ஏகாந்தபாஷை
யாவும் கேட்கிறது
தெருவோரம் ஹாரன் அடித்து முதுகின் மீது
வண்டியேறி மரணதேவன் உயிர் நரம்பை மீட்டி
மூச்செடுக்கும் நாதநொடியில்


புத்தனின் முத்தங்கள் தேடிப்போனேன்
பெருக்கிய சாலையின் ரத்தமலர்கள்
கூடையில் ஏந்தி
போதி மரத்துக்கு நீராகும் என்று
ஓலமும்,அழுகையும் சேர்த்த நீர்க்குடுவை
தாங்கி கடக்கையில்
சிட்டுக்குருவிகள் குண்டுகள் தாங்கி மரிக்கின்றன
அமைதியை கடலில் நுரையாக
சுழல விட்டு இரைகிறது காலக்காற்று
சிலுவையில் புத்தன் அறையப்பட்டு
சிரிப்பைச்சிந்தி ஆசீர்வதிக்கிறான்
வன்முறை தேசத்தில் !