காந்தியும், ராணுவமும்:


ராஜ்மோகன் காந்தியின் ‘FOUNDING FATHERS’ எனும் நூல் காந்தி, நேரு, அம்பேத்கர், படேல், போஸ் எனும் இந்தியாவின் மகத்தான தலைவர்கள் குறித்த பல்வேறு கேள்விகள், அவதூறுகள், சந்தேகங்கள் சார்ந்த தெளிவை தர முயல்கிறது. இதில் குறிப்பிட்ட சில தலைப்புகள் குறித்து மட்டும் இரு பாகங்களாக எழுத உள்ளேன்.
இந்த நூலின் முதல் பாகம் இரு முக்கியமான கேள்விகளை எடுத்துக் கொள்கிறது. காந்தியால் தான் இந்தியா சீனப்போரில் தோற்றது என்பது முதல் வாதம். இரண்டாவது காந்தி பிரிவினைக் காலத்தில் இஸ்லாமின் பெயரால் நடத்தப்பட்ட வன்முறையைச் சரியாக விமர்சிக்காமல் இருந்தார் என்பது இரண்டாவது வாதம். இவை இரண்டும் ஒரு சாதுவால் முன்வைக்கப்பட்டவை.
காந்தி எப்படி அகிம்சை முறையில் போராட வேண்டும் என்று சொல்லித் தந்தார். ஆனால், அவர் எப்படித் திருப்பித் தாக்குவது எனச் சொல்லித்தரவில்லை. மேலும், ஒரு ராணுவ வீரன் ‘போரில் எதிராளியைக் கொல்வது பாவம், அதனால் காற்றில் சுட்டேன்.’ என்று சீனப்போர் அனுபவத்தை அந்தச் சாதுவிடம் சொல்கிறான். காந்தியால் வந்த வினை தானே இது என்று அவர் ராஜ்மோகன் காந்தியிடம் கேட்கிறார்.
ப்ரூக்ஸ்-பகத் அறிக்கை இந்தியா சீனப்போரில் தோற்றதற்கான காரணங்களை விவரிக்கிறது. அதில் இந்தியா தன்னுடைய ராணுவ வலிமையைப் பெருக்காதது, உளவுத்துறை சீனா தன்னுடைய பகுதிகள் என்று சொன்னவற்றை நோக்கி முன்னேறினால் ஒன்றும் செய்யாது என்கிற ஐ.பி.யின் தவறான கணிப்பு ஆகியவற்றால் தான் இந்தியா தோற்றது என்கிறது.
காந்தி தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் ராணுவம் வேண்டாம் என்று சொன்னதில்லை. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஆக்கிரமிப்பாளர்கள் காஷ்மீரில் நுழைந்த பொழுது இந்திய ராணுவத்தை விமானத்தில் அனுப்பியதை மனதார ஆதரித்தவர் அவர். ‘ராணுவம் ஒரு தேசத்தின் வலிமையின் அளவுகோல் இல்லை’ என்பது அவரின் கருத்தாக இருந்தது. 6-7-1947 –ல் இந்தியா பாகிஸ்தான் ஒருவரை இன்னொருவர் தாக்குவார் என்று அஞ்சிக்கொண்டு ராணுவத்துக்கு மட்டுமே செலவழித்துக் கொண்டிருந்து கல்வி முதலிய அடிப்படைத் தேவைகளைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று காந்தி பேசியிருந்தார்.

அதே சமயம், பிரிவினையால் டெல்லியில் கலவரங்கள் மிகுந்த பொழுது ஆர்.எஸ்.எஸ் முதலிய பல்வேறு குழுக்களைச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று காந்தி கேட்டுக் கொண்டார். அதே சமயம், காவல்துறை அதைக் கவனித்துக் கொள்ளும் என்றே காந்தி சொன்னார்.
1899, 1906 வருடங்களில் ஆங்கிலேய அரசு தென் ஆப்ரிக்காவில் நிகழ்த்திய போர்களில் ஆம்புலன்ஸ் சேவை பிரிவுகளில் காந்தி இயங்கியிருக்கிறார். முதலாம் உலகப்போர் சமயத்தில் குஜராத்தின் கேடா பகுதியில் அவர் ஆங்கிலேய ராணுவத்துக்கு ஆள் திரட்டினார். முழு அமைதி விரும்பி என்று காந்தியை எண்ணுவது முட்டாள்தனம். வன்முறையால், அச்சத்தோடு அதைக் கையாள்வதன் மூலம் ஆங்கிலேய அரசை அசைத்துப் பார்க்க முடியாது என்கிற புரிதல் காந்திக்கு இருந்தது.

Image result for founding fathers rajmohan

19௦9-ல் வெவ்வேறு சம்பவங்களில் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியர்களால் கொல்லப்பட்டார்கள். காந்தி இந்தப் படுகொலைகளைக் கடுமையாகக் கண்டித்தார். “நாம் எப்படிப்பட்ட ஆட்சியை விரும்புகிறோம்? ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறை மிகுந்த ஆட்சிக்குப் பதிலாக இன்னொரு கொலைகாரர்களின் ஆட்சியை நோக்கி பயணிக்கிறோமா? கருப்போ, வெள்ளையோ கொலைகாரர்களின் ஆட்சியால் எந்தப் பயனும் இல்லை. சுயாட்சி என்பது கொலைகாரர்களை மாற்றுகிற ஒன்று அல்ல.’ என்று கடுமையாகக் காந்தி சாடி எழுதினார். ஆழமான புரிதல்கள் இல்லாத ஆயுதம் ஏந்தல் ஆபத்தானது என்பதே அவரின் புரிதல்.

பகத் சிங்கும், அவரின் தோழர்களும் ஆயுதமேந்தி போராடிய பொழுது, ‘அவர்களுடைய வீரம், தியாகம் ஆகியவற்றின் முன்னால் ஒருவர் தலைவணங்குவர். அர்கே சமயம், ஆயுதம் ஏந்தி போராடுவது வறுமையிலும், தெளிவான வழியும், புரிதலும் இல்லாத இந்நாட்டின் நொறுங்கிப் போன, அறிவற்ற மக்களை விடுவிக்குமா? ..ஒருவருக்கொருவர் கொன்று கொல்வது தான் நீதி பரிபாலனம் என்று எண்ணுகிறோமா?” என்று நவஜீவன் இதழில் காந்தி கண்டித்தார்.

காந்தி ராணுவத்துக்கோ, ஆயுதத்துக்கோ எதிரியில்ல. அரசுகள் பற்றியும், அவற்றின் ஒடுக்குமுறையும் பற்றியும் ஆழமான புரிதல் கொண்டவரே அவர். எனினும், வன்முறையைக் கையில் ஏந்துகிற பொழுது அரசுகள் அதை எளிதில் ஒடுக்குகிற வலிமையைப் பெற்று இருப்பதையும், வன்முறை உரையாடலுக்கான. உண்மையான மாற்றத்துக்கான திறப்பை அடைத்து விடுவதையும் உணர்ந்தவராக அவர் இருந்தார்.

என் தந்தை பாலையா


இந்தியக் கிராமங்கள் குடியரசுக்கு முழுக்க எதிரானவை. இவை ஆதிக்க ஜாதியினரால் ஆதிக்க ஜாதியினருக்கு நடத்தப்படும் குடியரசு. இங்கே தீண்டப்படாத மக்களுக்கு இடமில்லை. அங்கே தீண்டப்படாதோரால் காத்திருக்கவும், சேவகம் செய்யவும், அடங்கிப் போகவும் மட்டுமே முடியும். இங்கே ஜனநாயகத்துக்கு இடமில்லை. சமத்துவத்துக்கு, விடுதலைக்கு, சகோதரத்துவத்துக்கு இடமே இல்லை.’-அண்ணல் அம்பேத்கர்

‘My Father Baliah’ எனும் நூலை வாசித்து முடித்தேன்.. ‘ஒரு ஊரில் ஒரு தலித் இருந்தார்’ என்று ஒரு கதை துவங்கினால் எப்படி இருக்கும்? ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியை மூன்று தலைமுறை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் Y.B.சத்தியநாராயணா. தொடர்வண்டிகள் என்பது ஆங்கிலேயரின் காலனியத்தை, பஞ்சத்தை, வறுமையை பரப்பியது என்பது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசின் கருத்தாக இருந்தது. எனினும், அது தலித்துகளின் வாழ்க்கையில் விடுதலையை, வளர்ச்சியை தருவதாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பை கோரிய ரயில்வே துறை பணிகளை செய்ய ஆதிக்க சாதியினர் தயாராக இல்லாத நிலையில் தலித்துகள் அவற்றை வேலை வாய்ப்புக்கான வழியாகவும், கிராமத்தின் கொடுமையான ஜாதி அமைப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பாகவும் பார்த்தார்கள். அப்படி வெளியேறிய நரசய்யா குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் கல்வியால் முன்னேறிய கதை தான் இந்த நூலில் விரிகிறது.
நூலில் முதல் காட்சியே அதிர வைக்கிறது. கூட யாரும் துணைக்கு இல்லாமல் தெலங்கானாவின் வங்கபள்ளி கிராமத்தில் தன்னுடைய மனைவியின் பிணத்தை சுமந்தபடி நரசய்யா தன்னுடைய மகனோடு கண்ணீர் வழிய நடக்கிறார். மதிகா எனப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பிணத்தை தீண்டக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். ஊரில் வீடுகளும் மனுவின் மனு சாஸ்திரம் படியே இருந்தன. மேற்கிலிருந்து கிழக்காக காற்று வீசும் என்பதால் மதிகாக்களின் வீடுகளில் வீசும் காற்று தங்கள் வீட்டை நெருங்கக்கூடாது என்று பிராமணர்களின் வீடுகள் மேற்கு திசையில் கட்டப்பட்டிருக்கும்.

வெலமா எனப்படும் இடைநிலை சாதியை சேர்ந்த நிலச்சுவான்தார்கள் மதிகா பெண்களை தோன்றும் போதெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிஜாமுக்கு வரி வசூலிக்கும் பொறுப்பில் இருந்த இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களை கசக்கிப் பிழிவதோடு தீண்டாமையை விடாமல் கடைபிடித்தார்கள்.

Image may contain: text
தன்னுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு நரசய்யா ரயில்வேவில் பாய்ண்ட்ஸ்மேன் பணியில் சேர்ந்தார். ரயில் தண்டவாளங்களில் நூறு கிலோவுக்கு மேலே இருக்கும் சங்கிலிகளை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடி ரயில் பெட்டிகளை இணைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். சில காலம் உழைப்புக்குப் பிறகு, செகந்திரபாத்துக்கு நரசையாவின் குடும்பம் மாறியது அவரின் மகன் பாலையாவுக்கு கல்வியைத் தந்தது.
பாலையாவும் ரயில்வேவில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தினார். இரவு பத்து மணிக்கு தூங்க வைத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பிவிட்டு அவர்களை படிக்க வைத்தார். தான் பள்ளிக்கல்வியைத் தாண்டாவிட்டாலும் மகன்கள் கல்லூரி செல்ல வேண்டும் என்று ஊக்குவித்தார். ரயில்வேவில் கால் கடுக்க, தோள் ஓய வேலை பார்த்த பின்பு வயல்வெளிகளில் வேலை பார்த்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.

ஒரே குடும்பத்தில் இருந்து எழுபதுகளில் மூன்று பேராசிரியர்கள் எழுந்தார்கள். முனைவர் பட்டம் பெற்று பல உயர்ந்த மாணவர்களை உருவாக்கினார்கள். மதிகா குடும்பத்தின் முதல் ஜாதி மறுப்புத் திருமணம் பாலையாவின் திறந்த மனதால் நடைபெற்றது.

தலித் என்கிற அடையாளத்தை மறைக்க வேண்டிய தருணங்கள் வலி தருபவை. கல்லூரி அறிவிப்புப் பலகையில் உதவித் தொகை பெறும் பெயர் இடம் பெற்றால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என ஓடோடிப் போய் க்ளார்க்கிடம் கெஞ்சுவது. ஆசிரியராக பாலையாவின் மகன் வேலை பார்க்க போன ஊரில் மதிகா என சொன்னால் வீடு கிடைக்காது என்பதால் ஜாதியை மாற்றிச் சொல்வது. பெயரின் பின்னால் இருக்கும் ஐயா என்பது தலித் என்பதைக் காட்டிக் கொடுத்தபடி இருந்ததால் பெயரை ஆசிரியரே மாற்றுவது என்று சமூகத்தின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

Image result for y b satyanarayana

வேதியியல் பேராசிரியராக பாலையாவின் மகன் சத்தியா உயர்கிறார். அவர் பணியாற்றிய கல்லூரியில் முப்பத்தி மூன்று வயதில் அவரின் திறனால் முதல்வர் பதவி வந்து சேர்கிறது. தன்னுடைய பெருந்தன்மை மூலமும், நிர்வாகத்திறமை மூலமும், மதிகா எனச் சொல்லித் திட்டியவர்களை கூட அரவணைத்துக் கொள்கிறார். கல்வியின் அடுக்குகளும், கடும் உழைப்பும் எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல் எழுப்பும் என்பதற்கு பாலையா எடுத்துக்காட்டாக கல்வியை ஆயுதமாக்கி சாதித்தார்.

இந்த புத்தகத்தில் காதலும், துரோகமும் உண்டு. நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. போனவர்கள் திரும்பவே திரும்பாத பிரிவுகள் உண்டு. சாதியைக் கடந்து சக மனிதர்களாக பிள்ளைகளை பார்க்கும் நம்பிக்கை தரும் மனிதர்கள் உண்டு. உச்சத்துக்கு போனாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணரவே உணராத கற்றவர்கள் உண்டு. மதிகா மக்களின் திருமணங்கள், கலாசாரம், தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றிய சுவையான குறிப்புகள் உண்டு. பாலையா எனும் ஒற்றை மனிதனின் கதை மட்டுமல்ல இது. ஒரு சமூகம் தன்னைத் தானே பிரதிபலிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர இட ஒதுக்கீடும், கல்வியும், நகர வாழ்வும் தரும் வாய்ப்புகளை உணரவும் வைக்கும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

HARPER COLLINS வெளியீடு
பக்கங்கள்: 211
விலை: 35௦

அண்ணா குறித்து ஒரு விவாதம்


அண்ணா குறித்து ஒரு விவாதம். அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அண்ணா குறித்த எனது ஆங்கிலப் பதிவில் சில கேள்விகளை எழுப்பினார். என்னளவில் பதில் தந்தேன். அந்த கேள்வி-பதில்கள் இவை:

1. 1967 திமுக வெற்றியில் எம்ஜியாரின் பங்கு என்ன? அவர் மருத்துவமனையில் கழுத்தில் மாவுக்கட்டுடன் இருந்தப் புகைப்படத்தை வைத்தே திமுக பெரு வெற்றியை சம்பாதித்தது.

அண்ணாவின் வீச்சு எம்ஜிஆரையும் கடந்த ஒன்று. காமராஜர் தலைவர், அண்ணா வழிகாட்டி என எம்ஜிஆர் பேசிய உடனே வந்த திரைப்படம் பெருந்தோல்வி. இது எம்ஜிஆரின் ஈர்ப்பை குறைத்து மதிப்பிடுவது அல்ல. அண்ணாவுக்கு கூடிய கூட்டத்தில் பாதி கூட எம்ஜிஆருக்கு கூடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கடும்தோல்வியை அவர் ஆட்சி சந்தித்து இருந்தது. அண்ணாவின் கவர்ச்சியை தனதாக்கிக் கொண்ட சாதுரியம் எம்ஜிஆரிடம் இருந்தது. எகா கொடி, அண்ணாயிசம்

2. சினிமா கவர்ச்சியை தமிழக அரசியலில் வேரூன்ற வைத்தது அண்ணாதுரை தானே?

திரைப்பட நடிகர்களை அழைத்து வருவது அண்ணா ஆரம்பித்து வைத்தது அல்ல. அது காங்கிரசின் சத்யமூர்த்தி போட்ட விதை. சினிமா ஆட்கள் மீது கவர்ச்சி இன்னமும் அதிகம். எனினும் சில கேள்விகள். தமிழர்களின் தேர்தல் முடிவுகளை சினிமா கவர்ச்சி முடிவு செய்கிறது என்றால் கடந்த 30 வருடங்களில் ஏன் சினிமா நடிகர்கள் தேர்தல் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை. ஜெ தன் சினிமா நடிகை அடையாளம் துறந்தே சாதித்தார். தமிழர்கள் கைலாசபதியின் வரிகளில் கொண்டாட்ட மனப்பான்மை கொண்டவர்கள். உடனே ரஜினி வாய்ஸ் என்று சொல்லாதீர்கள். சிரித்துவிடுவேன்.

3. ஜெயகாந்தனின் இரங்கள் உரையில் அவர் மிக முக்கியமான விமர்சனங்களை முன் வைத்தார். எல்லோரும் அதில் இருந்த சில வரிகளுக்காக அவ்வுரையை வெறுத்தனர். ஆனால் அவர் வினர்சனங்களுக்கு பதிலில்லை.

ஜெயகாந்தனிடம் ஒரு பெரும் திராவிட இயக்க வெறுப்பு இருந்தது. அவர் பிராமணியத்தின் அடக்குமுறையை உணர்ந்து பேசியதாக எனக்குத் தோன்றவில்லை. அவர் காமராசரின் அணுக்கச்சீடர். நானூறு தமிழக இளைஞர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த (உத்தரவே காமராசர் ஆசீர்வாதத்தில் தரப்பட்டது என்பார்கள்) காமராசரை குறித்து விமர்சித்தாரா? இந்திராவின் அவசரநிலையை தூக்கிப்பிடித்தவர் அவர். ஆக அவர் ஒரு தாராளவாதி என நான் கருதவில்லை. Yale பல்கலை கவுரவப்பட்டம் தந்த அண்ணா, பல ஆழமான சிந்தனைகள் கொண்ட அண்ணா (அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளைப் படியுங்கள்) மூடர் என்கிற தொனியில் பேசுவது வெறுப்பு மிகுந்த ஒன்று என்றே எண்ணுகிறேன். காமராசருக்கு கிடைத்த துதிபாடிகள் மு.க.வின் ஆட்சியால் அண்ணாவுக்கு இல்லாமல் போனார்கள்.

4. கண்ணதாசனின் ‘வனவாசம்’ புத்தகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விமர்சனங்களை வைத்ததே. அவற்றுக்கும் பதில் இல்லையே (பொதுவில் சொல்கிறேன்)

கண்ணதாசனின் பேச்சு பல சமயங்களில் நேற்று பேசியது இன்றைக்கு செல்லாது தொனியிலானது. கண்ணதாசனின் சொந்த அனுபவங்கள் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் விமர்சனத்துக்கு ஒப்பாகாது. அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற தட்டையான புரிதலோடு எழுதிய அவரின் இந்த விமர்சனங்கள் சொந்த அனுபவம் என்றே சொல்வேன்.

5. இன்று நாம் காணும் கலாசார தற்பெருமை பண்பு அவரின் கைங்கர்யம் தானே?

கலாசார பெருமை அடையாளங்கள் தாண்டி ஒரு சமூகத்தை இணைக்கிறது. இந்திஸ்தானாக தமிழகம் ஆகாமல் தடுத்தது நீங்கள் வெறுக்கும் தமிழ்ப்பற்று தான். அதன் அரசியலை, நியாயத்தை அறிய Passions of the Tongue உதவும். பொங்கலை வெகுமக்கள் விழாவாக மாற்றியது திராவிட இயக்கம். குறளை, சங்க இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தது அண்ணா. கலாச்சார பெருமை அண்ணாவுக்கும் முன்னும் சாதி, மதம், மொழி என்கிற பெயரில் இருந்தது. பெனடிக்ட் ஆன்டர்சன் சொல்வதைப்போன்ற Imagined communities ஆக மேடைப்பேச்சு படிப்பகங்கள் நாடகங்கள் மூலம் அண்ணா இல்லாத திராவிட அடையாளத்தை ஒருங்கிணைத்து சாதித்தார்.

6. ‘ஆரிய மாயை’ கோல்வால்கர் வகை வெறுப்பு அரசியல் தானே?

ஆரியர் உசத்தி என அன்னிபெசண்ட் கிளம்பியதற்கு எதிர்வினை தானே திராவிட இயக்கம்? ஒரு புரட்டை இன்னொரு புரட்டு எதிர்கொண்டது. அண்ணா உண்மையில் பிராமண வெறுப்பை மட்டுப்படுத்தினார். நாத்திகவாதம் நீக்கி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். பிராமணர் எதிரியல்ல பிராமணியம் எதிரி என்றார் (அவர் காலத்தில் அது பெருமளவு உண்மையே) யோகேந்திர யாதவ் கவனப்படுத்துவதை போல காங்கிரஸ் இந்தி பகுதியில் பிராமணர்கள் ஆதிக்கத்தில் நேருவின் ஆட்சிக்காலத்திலும் கட்டுண்டிருந்தது. அண்ணா பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்றார். ரஜினி கோத்தாரி குறிப்பிடுவதைப்போல வெகுமக்கள் தேர்தல் அரசியலில் வெறுப்பானது சனநாயகமயமாகி ஆக்கப்பூர்வமானவற்றை சாதிக்கிறது. அண்ணா அவ்வாறு பிரிவினை பேசியவர்களை மையநீரோட்டத்தில் இணைத்தார். அண்ணாவுக்கு அம்பேத்கருக்கு ஏற்பட்டது போல ஒரு நல்ல வரலாற்றாளர் கிட்டவில்லை. அதுவரை அண்ணா யாருமற்று தனியாக நிற்பார். மு.க. குடும்பம் அரசியலை விட்டு விலகினால் மட்டும் தான் அண்ணா குறித்த புரிதல் மேம்படுமோ என்னவோ? அண்ணாவுக்கு பிந்தையவர்களின் பாவம் அண்ணாவைச் சேர்கிறது.

குடும்ப அமைப்பு உருவாக்கும் கொடூரர்கள் – ஆஷிஸ் நந்தி


பெங்களூரில் கொடூரத்தை நிகழ்த்திய ஆண்கள் ‘பொறுப்பான’ மகன்களாகத் தங்களுடைய கடமையைச் செவ்வனே செய்தார்கள்.

MassmolestationBangalore-696x403.jpg
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இல்லை. ஆனால், சில அம்சங்கள் நம்முடைய சமூகம், வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு மட்டுமே உரியவை. இந்திய குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் விலை மதிக்க முடியாத சொத்துக்களாகப் போற்றப்படுகிறார்கள், அதேசமயம், ஆண் பிள்ளைகள் மீது ஒரு வகையான அழுத்தமும் குடும்பங்களால் சுமத்தப்படுகிறது. இப்பொழுதெல்லாம் ஆண் பிள்ளைகள் கடுமையாக விரட்டப்படுகிறார்கள். ‘சிங்கக்குட்டிடா’ என்று ஆண்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன. என்றாலும், குடும்பத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, பொறுப்புகளைத் தோளில் தாங்க அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். யாரோ ஒருவர் எது நல்ல, பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கை எனக் கருதுகிறாரோ அதைத் தான் வாழவேண்டிய கட்டாயத்துக்கு ஆண் பிள்ளைகள் தள்ளப்படுகிறார்கள்.

ஆண்கள் தொழில்நுட்ப, தொழில்முறை படிப்புகளை நோக்கி தள்ளப்படுகிற விதம் அச்சம் தருகிற ஒன்றாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கல்கத்தாவில் இளம்வயதிலேயே தேசிய அளவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். இளம் நட்சத்திரமான அவன் ஒழுங்காகப் பயிற்சி செய்யவில்லை என்பதற்காகச் சொந்த தந்தையால் அடித்தே கொல்லப்பட்ட செய்தியை நீங்கள் வாசித்திருக்கலாம்.

பெண்கள் வேறுவிதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அதேசமயம், இப்படி எதற்கு ஓடுகிறோம், எங்கே போகிறோம் என்கிற இலக்கற்ற எலி பந்தயத்துக்குள் வெகு சீக்கிரமாக, கருணையின்றி அவர்கள் தள்ளப்படுவதில்லை. இப்படிப்பட்ட அழுத்தங்கள் சுமத்தப்படாமல் இருப்பதால் பல்வேறு துறைகளில் அவர்கள் கலக்கி எடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் மீது எக்கச்சக்க பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் சுமத்தப்படாமல் இருப்பதால் படைப்பாற்றல், புத்தாக்கம் நிறைந்தவர்களாக அவர்கள் அசத்த முடிகிறது. அந்த வகையில் அவர்கள் விடுதலை மிக்கவர்களாக, சமூகத்தின் அழுத்தங்களில் அவ்வளவாக ஆட்படாதவர்களாக இருக்கிறார்கள்.

இப்படி அளவில்லாத கனவுகள் கொண்ட பெற்றோர்கள், அதனால் பிள்ளைகள் மீது கொட்டப்படும் அழுத்தம், எலி பந்தயத்தில் ஓடுவது ஆகியவற்றுக்கும், பெங்களூரில் ஒரு பெண்ணைக் கூட்டமாக ஆண்கள் பலத்காரம் செய்ய முயன்றதைப் போன்ற நிகழ்வுகளுக்குத் தொடர்பிருக்கலாம். கூட்டத்தில் அடையாளம் தெரியாது என்கிற தைரியத்தில், இந்த ‘இளவரசர்கள்’ மனநிலைப் பிறழ்ந்த பேரரசர்கள் போலக் கொடூரத்தை அரங்கேற்றினார்கள். அவர்களின் குடும்பம், சமூகம் ஆகியவை அவர்களை வேகம் மிகுந்தவர்களாக, எப்படியேனும் வேண்டியதை அடைய வேண்டும் என வெறி கொண்டவர்களாக, அதீத ஆண்மை மிக்கவர்களாக, அஞ்சாநெஞ்சர்களாக இருக்க வேண்டும் எனப் போதிக்கின்றன. அவர்களின் நண்பர்களும் அதையே அழுத்திச் சொல்கிறார்கள். ஒரு மனநிலை பிறழ்ந்த மிருகமாக அவர்கள் உருமாறும் பொழுது அது தவறு என்கிற அற உறுத்தலோ, நியாய உணர்வோ அவர்களுக்குள் ஊற்றெடுத்து காமவெறியைத் தடுக்கவில்லை. அவர்களின் வளர்ப்பிலோ, சமூகத்திலோ அறம், நியாய உணர்வு காணப்படவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப் பெங்களூரு சம்பவத்தை மறந்துவிட்டு யோசிப்போம். இந்தியாவின் சில பகுதிகளில் பெண் சிசுக்கொலைகள், பெண்களை மோசமாக நடத்துவது ஆகியவற்றால் ஆண்-பெண் பாலின விகிதம் மோசமானதாக இருக்கிறது. இப்படி ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அந்தச் சமூகங்களில் அதிகமாக இருப்பதால், திருமணம் செய்துகொள்ளப் பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது என்பது ஒருபுறம். இன்னொரு பக்கம், அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி உறவுகள் குறைகின்றன. ஆண்கள் வளர்கிற பொழுது ஆண்-பெண் உறவின் பன்மைத்தன்மையை, நுண்மையைத் தரிசிக்கும் பேற்றினை இழக்கிறார்கள்.

பாலிவுட் படங்களில் காட்டப்படுவதைப் போல ஒரு பெண்ணைத் தன்னுடைய காமவெறி தீர நாயகன் தொல்லைகள் கொடுத்து, ஈவ் டீசிங் செய்த பின்னர் நாயகிக்கு அவன் மீது காதல் மலர்வது எல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை. இப்படிப்பட்ட வெகுமக்கள் கலாசாரம் உண்மையான வாழ்க்கை அனுபவங்களுக்கு மாற்றாக முடியாது.

போட்டிகள் நிறைந்த நடுத்தர வர்க்க கலாசாரத்தில் ஆண் பிள்ளைகள் எல்லா வகையான அற மதிப்பீடுகளையும் கபட நாடகங்கள் என்று எண்ண கற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பாடத்தை அவர்கள் வெளியுலக அனுபவங்களில் இருந்து மட்டும் கற்பதில்லை, அவர்களின் குடும்பத்து பெரியவர்களின் செயல்களில் இருந்தும் இந்தப் படிப்பினையைப் பெறுகிறார்கள். பழைய நம்பிக்கைகள், அற அமைப்புகள் சரிந்து, பேரிகை முழங்க வலம் வரும் புதிய அறங்கள் ஒழுங்காக வடிவம் பெறாத நிலையில் இப்படிப்பட்ட குழப்பங்கள் நிகழவே செய்யும். பல்வேறு மரபான சமூகங்கள் இயங்கும் நவீன துறைகளில், பரிசு-தண்டனை, சட்டம்-ஒழுங்கு அமலாக்கம் ஆகியவை எல்லாவகையான குற்றங்களையும் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு அமைப்புகள் கச்சிதமாக இருக்கின்றன எனும் நம்பிக்கை இருக்கிறது. தங்களுடைய மனசாட்சியின் படி மக்கள் நியாயமான முடிவுகளை எடுக்க முடியும் என்பதையே அவர்கள் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள்.

அதேநேரத்தில், இளைஞர்கள் அரசியல்வாதிகளை, அதிகார வர்க்கத்தை, ஆசிரியர்களை முன்மாதிரியாகக் காண முடியாத சூழலில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் கறைபடிந்த தங்களின் கடந்த காலங்களை மறைத்துக் கொண்டு போலியான பொழிப்புரைகள் புரிகிறார்கள் என அவர்களுக்குப் புரிகிறது. சட்ட திட்டங்கள் எல்லாத் துறைகளிலும் மீறப்படுகின்றன. மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்ததைப் போலப் பட்டங்களைப் பணம் கொடுத்து வாங்க முடிகிறது. ஆசிரியர்கள், துணை வேந்தர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் அறநெறிப்படி இயங்கவேண்டும் என்பதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளும் பொழுது, நீதி போதனைகளை மாணவர்களுக்கு வழங்கி என்ன பயன்?

பாடத்திட்டங்களை மாற்றி என்ன ஆகிவிடும்? தந்தை ஓட்டுனர் உரிமம் பெறாத தன்னுடைய மகனிடம் மகிழுந்தின் சாவியைத் தருகிறார், அவன் அதைக் கண்மூடித்தனமாக ஒட்டிக்கொண்டு போய் யாரையோ கொல்கிறான். தவறுக்கு அடிப்படைக் காரணமாக இருந்த தந்தை எப்படி நியாய உணர்வு ததும்பத் தன்னுடைய மகனை காட்டிக் கொடுப்பார் என நம்ப முடியும்? குற்றத்தை மறைத்து, தண்டனையில் இருந்து மகனை காக்கிற கயமையையே அவர் மேற்கொள்வார்.

ashis-nandy22.jpg
ஆஷிஸ் நந்தி

இறுதியாக, ஒரு சில வார்த்தைகள். இந்தச் சிக்கலான கேள்விக்கு எளிய விடை இல்லை. இந்தச் சிக்கலுக்கான தீர்வின் முதல் படி வேர்களைப் பற்றிய புரிதல் வேண்டும். எனினும், இந்தியாவில் அடிப்படைக் காரணங்களைப் பற்றி யாருக்கும் புரிதல் இல்லை என்று வசைபாடுவது வாடிக்கையாகி விட்டது. ராணுவம் போன்ற கட்டுக்கோப்பும், சட்டம்-ஒழுங்கு சிக்கலாக எல்லாப் பிரச்சினைகளையும் பார்ப்பதும் துரிதமாக, சிறப்பான தீர்வுகளைத் தரும் என்கிற முட்டாள்தனமான நம்பிக்கை நம்முடைய திட்டங்களை வகுக்கும் மேட்டிமைக் குடியிடம் நிரம்பியிருக்கிறது.

உடனடித் தீர்வுகள் பெருந்தோல்வியைச் சந்திப்பதை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். கிழக்கு இந்தியாவில் எழுபதுகளில் நக்சல் இயக்கத்தை நசுக்கியதுடன் தொல்லை ஒழிந்தது என நாம் கனவு கண்டோம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாற்பது ஆண்டுகள் கழித்து, ‘நம்முடைய உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் நக்சல் இயக்கம்.’ எனத் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சொல்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. இதற்குக் காரணம் கடந்த எழுபது வருடங்களில் நாம் பழங்குடியினரை மோசமாக நடத்தியதன் விளைவே நக்சல் இயக்கம் என்பதை உணரத் தவறியதுதான். ஆகவே, நாம் தற்போதைய பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொண்டு, தீர்வுகளைத் தேட வேண்டும். இல்லை என்றால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தீர்வு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பேட்டி: சதீஷ் பத்மநாபன்

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இந்தப் பேட்டி அவுட்லுக் வார இதழின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.)

ஏன் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்கள் இன்றும் தேவைப்படுகின்றன ? – விக்ரம் ராகவன்


மிடுக்காக ஆடை அணிந்த ஒரு ஐரோப்பியர் சென்னைப் பல்கலையின் கடற்கரையோரம் இருந்த வளாகத்துக்குள் ஆகஸ்ட் 1951-ல் நுழைந்தார். பிறப்பால் ஆஸ்திரிய-ஹங்கேரியரான சார்லஸ் ஹென்றி அலெக்சாண்ட்ரோவிஜ், லண்டனை சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர். சென்னைப் பல்கலையில் புதிதாகத் துவங்கப்பட்ட சர்வதேச மற்றும் அரசமைப்புச் சட்டத்துறையின் தலைவர் பொறுப்பேற்க அவர் பணி அமர்த்தப்பட்டு இருந்தார். வாட்டி வதைக்கும் வெயிலையும் தாண்டி, அயராது உழைத்த அலெக்சாண்டரோவிஜ் தன்னுடைய துறையை முன்னணி ஆய்வு மையமாக மாற்றிக் காட்டினார்.

ஆறு வருடங்கள் கழித்து அலெக்சாண்ட்ரோவிஜ் ஒரு சிறிய தனிக்கட்டுரையை ‘இந்தியாவில் ஏற்பட்ட அரசமைப்பு சட்ட வளர்ச்சிகள்’ என்ற தலைப்பில் எழுதினார். அரசமைப்பு வழக்குகள் குறித்த தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்ட அரசமைப்பு நிர்ணய மன்ற விவாதங்களைக் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். விலைமதிப்பில்லாத வழிகாட்டுதலை இந்த விவாதங்கள் வழங்கும் என்றும், அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது பிழையாகும் என்றார். அரசமைப்புச் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகளை இந்த விவாதங்கள் இட்டு நிரப்பும்; சட்டமியற்றும் குழுவுக்கும் (சட்டசபை, நாடாளுமன்றம்), நீதித்துறைக்கும் இடையே உள்ள மோதலை மட்டுப்படுத்தும்; அரசைமப்பு சட்ட திருத்தங்களுக்கான தேவையைக் குறைக்கும்; மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தைத் தகவமைக்கும் என்று அவர் வாதிட்டார்.

அப்பொழுது இருந்த நடைமுறையை அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் சிந்தனைகள் கேள்விக்கு உள்ளாக்கின. சட்டமியற்றும் அவைகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளைக் கொண்டு ஒரு சட்டத்தை பொருள் கொள்வதைச் செய்ய இந்திய நீதிபதிகள் தொடர்ந்து மறுத்து வந்தார்கள். உச்ச நீதிமன்றம் இந்தக் கொள்கையை அரசமைப்பு சட்டத்துக்கே நீட்டித்தது. அரசியல் நிர்ணய சபையின் விவாதங்கள் பல்வேறு பாகங்களாக வெளிவந்தன என்றாலும் அவற்றைக் கொண்டு அரசமைப்புச் சட்டம் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியது. அரசமைப்புச் சட்டத்தைப் பொருள் கொள்வதில் அதில் உள்ள வார்த்தைகள், வாக்கியங்கள் மட்டுமே பயன்படும் என்பது அவர்கள் வந்தடைந்த முடிவாகும்.

12.jpg
எனினும், எல்லாரும் இந்தப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. சில நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தில் எழும் குழப்பங்களைத் தீர்க்க அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் பல்வேறு குழுக்களின் அறிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அரசமைப்பு சட்ட விவாதங்கள் எவை என்பதைப் பற்றிய புரிதலை இப்படிப்பட்ட செயல்கள் விரிவுபடுத்தின. அரசமைப்பு சட்ட நிர்ணய சபை உரைகளைத் தாண்டிய கமிட்டிகளின் அறிக்கைகளையும் உள்ளடக்கியதாக அரசமைப்பு சட்ட நிர்ணய விவாதங்கள் மாறின. எனினும், அரசமைப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளில் இந்த அறிக்கைகள் வெகு குறைவாகவே பயன்படுத்தப்பட்டன

முக்கியத்துவம் வாய்ந்த 1973-ன் கேசவானந்த பாரதி வழக்குக்குப் பின்னர் நீதித்துறையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களைக் கருத்தில் கொள்வதையும், மேற்கோள் காட்டுவதையும் செய்தார்கள். எனினும், இப்படிப்பட்ட மாற்றத்துக்கான முதல் வித்தான அலெக்சாண்ட்ரோவிஜ் எந்த அங்கீகாரத்தையும் அதற்காகப் பெறவில்லை. 1961 –ல் அலெக்சாண்ட்ரோவிஜ் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தன்னுடைய கவனத்தை வேறு தலைப்புகள் பக்கம் திருப்பினார். அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்குக் கொஞ்ச காலத்துக்கு முன்னால் ஒரு அமெரிக்க இளைஞர் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் ஆளுமைகள், அரசியல், செயல்முறைகள் ஆகியவை குறித்துக் கிரான்வில் ஆஸ்டின் என்கிற அந்த இளைஞரின் ஆய்வு கருத்தில் கொண்டது. அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் சிறு நூலே அவர் முதலில் வாசித்த நூல்களில் ஒன்று. தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் பல்வேறு மேற்கோள்களை அலெக்சாண்ட்ரோவிஜ்ஜின் நூலில் இருந்து கிரான்வில் ஆஸ்டின் பயன்படுத்தியிருந்தார். அந்த முனைவர் பட்ட ஆய்வு ‘Indian Constitution: Cornerstone Of A Nation’ எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. இந்த நூல் வெளிவந்த அதே சமயத்தில் இந்திய பொது நிர்வாக மையம் இந்திய அரசமைப்பு சட்ட உருவாக்கம் குறித்த ஐந்து பாகங்களை வெளியிட்டது. இதில் கமிட்டிகளின் நடவடிக்கைகள், அறிக்கைகள், நிர்ணய சபையின் கோப்புகளின் மாதிரி வரைவுகள் ஆகியன சேர்க்கப்பட்டு இருந்தன.

8FL_AUSTIN1_jpg_2011199g.jpg
கிரான்வில் ஆஸ்டின்

இதற்குச் சில காலம் கழித்து ஆங்கிலேய அரசாங்கம், Transfer Of Power என்கிற தலைப்பில் பன்னிரண்டு பாகங்களில் அதிகார மாற்றம் குறித்த பல்வேறு கோப்புகளை வெளியிட்டது. இந்தத் தலையணை அளவுள்ள கோப்புகள் நிர்ணய சபையின் ஆரம்பகாலங்கள் குறித்துப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. எனினும், சட்டத்துறையைச் சாராதவர்கள் பெரும்பாலும் இந்தத் தொகுப்புகள் குறித்து அறிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்தாலும் அந்தத் தொகுப்புகள் வாசிக்கக் கிடைப்பதில்லை. உயர்நீதிமன்றங்கள், வழக்கறிஞர் கூட்டமைப்புகள் தவிர்த்து பெரும்பாலான நூலகங்களில் முழுத் தொகுப்புகள் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்புகள் குறிப்பிட்ட சிலரே அணுகும் வகையில் நூலகத்தின் கட்டுப்பாடுகள் இருக்கும். வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா அரசமைப்பு நிர்ணய சபையின் முழு விவாதங்களையும் அமெரிக்காவின் ஸ்டாண்ட்போர்ட் பல்கலை நூலகத்திலேயே வாசிக்க முடிந்தது. எப்படிப்பட்ட புத்தகங்களையும் தேடித் தந்துவிடும் அவரின் டெல்லி புத்தகக் கடைக்காரரால் கூட இந்த விவாதங்களைக் கண்டடைய முடியவில்லை.

நான் சட்டக்கல்லூரிக்குள் நுழைந்த பொழுது அங்கு விவாதங்களின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தன. அங்கு எப்படி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என விளக்கும் தொகுதிகளோ, அதிகார மாற்றம் குறித்த தொகுப்புகளோ கிடைக்கவில்லை. விவாதங்களின் பக்கங்களை யாரும் கிழித்துக் கொண்டு போயிருக்கவில்லை. ஏனெனில், அந்த விவாதங்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக, எங்களின் பேராசிரியர்களே அரசமைப்புச் சட்டங்களைப் புரிந்து கொள்ள இந்த விவாதங்களைச் சார்ந்திருப்பது என்பது ‘கற்காலத்து பாணி’ என நகையாடினார்கள். இந்த மனப்போக்கு சில காலத்துக்கு முன்னர்வரை பெரும்பாலும் நிலவி வந்தது.

எனினும், இப்பொழுது நிலைமை மாறி வருகிறது. நாடுமுழுக்கத் தங்களின் திட்டப்பணிகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு மாணவர்கள் இந்த விவாதங்களை நாடுகிறார்கள். சட்டக்கல்லூரிகளில் மட்டுமல்லாமல், சமூக அறிவியல் துறைகளிலும் அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பாடமாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சாதாரணக் குடிமக்கள் கூட இந்த விவாதங்களைத் தீவிரமாக வாசிப்பவர்களாக மாறி உள்ளார்கள். ஏன் இப்படி நடக்கிறது?

முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு, அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள் பரவலாகக் கிடைக்கின்றன. இந்தத் தொகுப்புகள் வெகுகாலமாக அச்சில் இல்லாமல் இருந்தன. 2௦௦௦ வருடத்தில் மக்களவை இந்த விவாதங்களைத் தரமான தாளில் அச்சிட்டதோடு, முழுத் தொகுப்பையும் தன்னுடைய தளத்தில் பதிவேற்றம் செய்தது. நான்கு வருடங்கள் கழித்து மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வெளியிடப்பட்டது. சமீபத்தில் Centre for Law and Policy Research நிறுவனம் எளிதாகப் பயன்படுத்தகூடிய அரசமைப்பு சட்ட விவாத இணையதளம் ஒன்றை பயன்பாட்டுக்கு விட்டது.

இரண்டாவதாக, டாக்டர் அம்பேத்கர் குறித்துச் சமீப காலங்களில் எழுந்த ஆர்வமும் நிர்ணய சபையின் மீது ஈர்ப்பை கூட்டியது. எண்பதுகள் வரை அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கரின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவின் மகத்தான தலைவர்கள் எனும் வரையறை காந்தி, நேருவைத் தாண்டி விரிவடைந்த பொழுது அறிவிற்சிறந்த சிந்தனையாளர்கள், பொதுமக்கள் அம்பேத்கர், அரசமைப்பு சட்ட உருவாக்க செயல்முறைகள் ஆகியவற்றின் மீது மேலும் ஆர்வம் காட்டினார்கள்.

baba_2 copy_2.png

அரசமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களைக் கண்டும், காணாத அறிஞர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. தற்போது, நவீன இந்திய வரலாற்றுக்கு அரசமைப்பு சட்ட விவாதங்களின் முக்கியத்துவத்தை எண்ணற்ற வரலாற்று ஆசிரியர்கள், அரசியல் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள். ராமச்சந்திர குஹாவின் பெரும் படைப்பான, இந்தியா காந்திக்குப் பிறகு நூலில் ஒரு தனி அத்தியாயமே அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஷெபாலி ஜா, ரோச்சனா பாஜ்பாய். நீரஜா ஜெயல், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் அரசமைப்பு சட்ட நிர்ணய சபை குறித்துப் பலதரப்பட்ட செறிந்த பார்வைகளை முன்வைத்து உள்ளார்கள். இந்த அறிவுப்புல ஆர்வம் தற்போது பள்ளிக்கல்வி வரை ஊடுருவி இருக்கிறது. NCERT-ன் புதிய குடிமையியல், ஆட்சி நிர்வாகம் சார்ந்த பாடப்புத்தகங்களில் அரசமைப்பு சட்ட விவாதங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இவை இந்த விவாதங்களின் மீதான பொதுமக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தவே செய்யும்.

இப்பொழுது இந்தக் கட்டுரையின் மையமான இந்த விவாதங்கள் ஏன் தற்போதும் தேவைப்படுகின்றன என்பதற்குத் திரும்புவோம். நம்முடைய குடியரசு எப்படி எழுந்தது என உணர்வதற்கான தகவல் கருவூலமாக இந்த விவாதங்கள் திகழ்கின்றன. இந்திய குடியரசின் பெரும்பயணம் நம் அனைவரையும் குடிமக்கள் என்று அழைத்துப் பொதுவான அரசியல் அடையாளத்தைத் தருகிறது. அந்தப் பெரும்பயணத்தின் கடந்து வந்த பாதையில் மீண்டும் நடைபோட இவை உதவுகின்றன

இந்த விவாதங்கள் நம்முடைய தேசத்தை உருவாக்கிய பெருந்தலைவர்கள் குறித்துப் பெருமளவில் தெரிந்து கொள்ள உதவுகின்றன. இந்த விவாதங்களில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் முரண்படுகிற கருத்தாக்க நம்பிக்கைகள், அரசியல் சார்புகள் கொண்டவர்களாக இருந்தார்கள். எனினும் பிரிட்டிஷ் ஆட்சியின் இடிபாடுகளில் இருந்து ஒரு நவீன அரசமைப்புக் கொண்ட குடியரசை இவர்களே கட்டி எழுப்பினார்கள். இந்த மகத்தான பணியை மிகவும் சவாலான சூழ்நிலையில் அவர்கள் சாதித்தார்கள். டெல்லி பிரிவினைக்குப் பிறகு பற்றி எரிந்து கொண்டிருந்தது. அகதிகள் நாட்டுக்குள் வெள்ளம்போல வந்து கொண்டிருந்தார்கள். இந்தியா பாகிஸ்தானோடு போரிட்டது. காந்தி கொல்லப்பட்டார். இவை எவற்றாலும் அசராமல், அரசமைப்பு சட்ட நிர்ணய சபை தன்னுடைய கடமையை நிறைவேற்றியது.

இந்த விவாதங்கள் அடிக்கடி எழும் பல்வேறு சர்ச்சைகளைத் தீர்க்க உதவும். எடுத்துக்காட்டாக, இந்தியாவிற்கு நாடாளுமன்ற ஆட்சிமுறை தேவையா, குடியரசுத் தலைவரின் ஆட்சிமுறை தேவையா? நீதிபதிகளே நீதித்துறையின் பதவிகளை நிரப்பலாமா? முதலிய பல்வேறு விவாதங்களில் ஒரு தெளிவு பிறக்க இவை உதவும். இந்த விவாதங்கள் அரசமைப்பு சட்ட திருத்தங்கள் புலப்படுத்தாத அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளின் வடிவம், உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவும்.

tryst_with_destiny.jpg

இறுதியாக, கடந்த காலத்தின் வெளிச்சத்தில் நிகழ்காலத்தின் சவால்களை எதிர்கொள்ள முடியும். அரசமைப்பு சட்ட நிர்ணய சபை எதிர்பாராத, கனவிலும் கருதாத சிக்கல்களில் ஒரு முடிவெடுக்க அவை உதவும். எடுத்துக்காட்டாக நாற்பதுகளில் சமூக வலைத்தளங்கள் என்பவை பயன்பாட்டில் இல்லை. இவற்றில் கருத்துரிமையைத் தணிக்கை செய்யலாமா என்கிற இன்றைய விவாதத்தைக் கருத்துச் சுதந்திரம் சார்ந்து அரசமைப்புச் சபை மேற்கொண்ட விவாதங்களின் வெளிச்சத்தில் அணுகலாம். அவர்கள் எல்லையில்லா உறுதியோடு கருத்துரிமைக்கு வாதிட்டது இன்றைய சட்ட, செயல்திட்ட வடிவமைப்பாளர்களுக்குப் பாடமாகும்

எந்த வரலாற்று ஆவணத்தைப் போலவும் அரசமைப்பு சட்ட நிர்ணய சபை விவாதங்களை அவற்றின் காலத்தோடு பொருத்தி கவனமாக அணுகவேண்டும். அரசமைப்பு சட்ட நிர்ணய சபை விவாதங்கள் குறித்து நான் ஆய்வு மேற்கொள்கையில் சில நடைமுறைகளைக் கையாள்கிறேன்.

முதலாவதாக அரசமைப்பு சட்ட நிர்ணய சபையினரின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விவாதங்களை மட்டும் நம்புவது சரியன்று. இந்தத் தொகுப்புகள் அரசமைப்பு சட்டத்தின் மூன்று வரைவுகளின் பொழுது நடந்த வாய்மொழி விவாதங்களின் எழுத்து வடிவமாகும். இவை சமயங்களில் குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் மவுனம் காப்பதையோ, அல்லது தவறாக வழிகாட்டுவதையோ செய்கின்றன. ஷ்யாம் பெனகலின் சம்விதான் தொலைக்காட்சி தொடர் காட்டுவதைப் போலப் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் விவாத அவைக்கு வெளியே பேசி முடிவு செய்யப்பட்டன. அரசமைப்பு சட்ட உருவாக்கம் சார்ந்த மற்ற தொகுப்புகள், வாய்மொழி வரலாறுகள் ஆகியவற்றைச் சார்ந்து முழுமையான நிலையைப் பெற முயல வேண்டும்.

இரண்டாவதாக, இந்தியா தன்னுடைய உருவாக்கம் சார்ந்த மிகப்பெரும் கோப்புகளைக் கொண்டுள்ளது. இந்தக் கடல் போன்ற கோப்புகள் நிர்ணய சபையின் இறுதி தேர்வுகள் குறித்துப் பலதரப்பட்ட, முற்றிலும் முரண்பாடான வர்ணனைகளை வழங்கக்கூடும். அப்படிப்பட்ட சூழலிலும், முற்றிலும் மாறுபடுகிற இரண்டு வர்ணனைகளைக் கலந்துகட்டி ஒரு முடிவுக்கு நாம் வருவது கூடாது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான வாசிப்புகள் இந்த விவாதங்களின் ஆழம், தேவை ஆகியவற்றைக் கூட்டவே செய்கின்றன.

மூன்றாவதாகத் தேர்ந்தெடுத்த மேற்கோள்கள், சில உரைகள் ஆகியவற்றைக் கொண்டு அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டைக் கண்டறிவது சவாலான ஒன்று. இது குறிப்பாகச் சிக்கலான மதச்சார்பின்மை, சொத்துரிமை, மொழி சார்ந்த விவாதங்களுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, மதம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குகொண்டனர். ஜேம்ஸ் சிரியங்கண்டத் புலப்படுத்துவது போல இந்த விவாதங்களில் அசரவைக்கும் பலதரப்பட்ட கருத்துக்கள் பிரவாகம் எடுத்தன.

இறுதியாக, அமெரிக்காவில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர்களின் தேசத் தந்தைகளைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஜேம்ஸ் மாடிஸன், அலெக்சாண்டர் ஹாமில்டன், தாமஸ் ஜெப்ஃபர்சன் முதலியோர் GPS, காலங்கடந்த கருக்கலைப்புகள், வன்முறை மிகுந்த வீடியோ கேம்ஸ்கள் குறித்து என்ன சொல்லியிருப்பார்கள் என்று கவலை கொள்கிறார்கள். பழமையில் ஊறிய TEA PARTY இருநூறு வருடங்களுக்கு முன்னால் எப்படிப்பட்ட நம்பிக்கைகளோடு தேசத் தந்தைகள் சட்டத்தை வார்த்தார்களோ அப்படியே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருக்கிறது.

மனதளவில் பரந்த சிந்தனை கொண்ட அலெக்சாண்ட்ரோவிட்ஜ் இந்த வகையான நூதனக் காட்சிகளைக் கண்டிருந்தால் அதிர்ந்திருப்பார். அவரும், அரசமைப்பு சட்ட நிர்ணய சபையின் விவாதங்களை வரலாற்றின் கண்ணாடி கொண்டு அணுகி புரிந்து கொள்ளவேண்டும் என்றார். எனினும், அவரின் மைய நோக்கம் அந்த ஆவணம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே ஆகும். அலெக்சாண்ட்ரோவிட்ஜ் அமெரிக்காவை போலத் தன்னுடைய தேசத்தை உருவாக்கிய தலைவர்களைக் கண்மூடித்தனமாக வழிபடும் அமெரிக்க பாணியைக் கடுமையாகச் சாடியிருப்பார். இந்தியா தன்னுடைய அரசமைப்பை அதன் விவாதங்களின் வழியாக உணர எந்த பழமையில்  தோய்ந்த கட்சியும் தேவையில்லை.

– Vikram Raghavan

AAEAAQAAAAAAAAj8AAAAJGVlZjc5NWI5LTNmNzAtNDJjYi1hMzkwLTA5MDkzMGRlNDUxZA.jpg

இக்கட்டுரையின் ஆசிரியர் விக்ரம் ராகவன் சட்டத்துறை வல்லுநர். இந்திய குடியரசின் உருவாக்கம் குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

http://www.livemint.com/Opinion/mLactWgKWt6iKosuEyBNMI/Why-do-our-constitutional-debates-matter.html

இக்கட்டுரை LIVEMINT செய்தித்தாளின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டது.