காக்கா முட்டை- தமிழர்கள் கொண்டாட வேண்டிய மகத்தான படைப்பு


காக்கா முட்டை படத்தைச் சங்கம் திரையரங்கில் பார்த்த அந்த 105 நிமிடங்களும் அழகானவை. கலைப்படைப்பு பொது மக்களின் வரவேற்பை பெறாது என்பதை அடித்து நொறுக்கியிருக்கிறது இப்படம் என்பதை அவ்வப்பொழுது எழுந்த ஆரவாரமும், இறுதியில் ஒலித்துக்கொண்டே இருந்த கைதட்டலும் உறுதிப்படுத்தின.

பெயர் தெரியாத எத்தனையோ சிறுவர்கள் பள்ளிப்பக்கம் எட்டிப்பார்க்க முடிவதே இல்லை. உலகில் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நம்முடையது! அப்படிப்பட்ட இரு சிறுவர்களின் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையும், அது சார்ந்த பயணமும் தான் காக்கா முட்டை கதை. இறுதிவரை சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையின் உண்மையான பெயர் சொல்லப்படவே இல்லை.

சென்னை வாழ்க்கையில் கிராமத்து பையனாக இருந்துவிட்டு நுழைந்த நான் ஒரு பீட்சா துண்டை என் கல்லூரி வாழ்க்கை காலத்தில் சாப்பிட்டதே இல்லை. விலை அதிகமான உணவகங்களில் போய்ச் சாப்பிட கல்விக்கடனில் படித்த எனக்குத் தைரியம் வந்தது கிடையாது.

லீ மெரிடியன் ஹோட்டலுக்கு என்னுடைய நெருங்கிய நண்பன் அறையில் உறங்கிக்கொண்டு இருந்த என்னை அப்படியே ஷார்ட்ஸ், சாயம் போன டி-ஷர்ட்டோடு சாப்பிட அழைத்துப்போனான். ஓட்டல் பாதுகாவலர் நான் அணிந்திருந்த ஆடைகளோடு உள்ளே நுழைய முடியாது என்று திடமாக மறுத்து அனுப்பி வைத்தார். என் நண்பன் தன்னிடம் பணம் இருக்கிறது, சாப்பிடத்தான் வந்திருக்கிறோம் என்றது அவர் காதுகளை எட்டவேயில்லை. நான்,”முன்னவே வேணாம்னு சொன்னேனே மச்சி!” என்று சலித்துக்கொண்டேன்.

உலகமயமாக்கல் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் படம் காட்டிச்செல்லும் கணங்கள் அத்தனை நுண்மையானவை. தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த மைதானம் கைப்பற்றப்பட்டு அதன் மரங்கள் பீட்சா கடை வருவதற்குச் சாய்க்கப்படுவதற்குக் குழந்தைகள் கைதட்டுவது குழந்தைகளை மட்டுமே சொல்வதாகப் படவில்லை.

மீடியாக்களின் சில நொடிகள் கண்ணீர் விடும் போலி மாய்மாலங்கள், செய்தியை சுட்டு சொந்த சரக்கு போலப் பிரம்மாண்டம் காட்டி பரிமாறும் யுக்தி, பரபரப்புத் தருணங்களில் மட்டும் தலைகாட்டி ஊதிப் பெரிதாக்கும் வழிகள் இயல்பான அங்கதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்ப்ரெஸ் அவென்யு முதலிய மால்களில் எத்தனை அழுக்கு உடை அணிந்த, ஏழ்மை மிக்க மக்களைக் காண்கிறோம்? வளர்ச்சி என்பது ஒரு பக்கம் மட்டும் நிறைத்தால் அது வீக்கமில்லையா என்கிற கேள்விகளை வசனங்கள் இயல்பாக எழுப்புகின்றன. சென்னைத்தமிழ் செறிவாகத் திரையில் கடத்தப்பட்டு இருக்கிறது.

A still from the film அரசியல், ஊடகம், நடுத்தர மக்கள், மேட்டுக்குடி என்று அத்தனை பேரின் மீதும் அப்படியொரு மென்மையான சாடல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. காக்கா முட்டைகளின் அம்மாவாக அசர வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்  சொல்வது போல, “உங்களை கை நீட்டி அடிக்கக்கூடாதுன்னு பாலிசி வெச்சிருக்கேன்.” என்ற வசனம் இயக்குனர் தனக்குத் தானே போட்டுக்கொண்ட மெல்லிய கோடாக படுகிறது.

மேட்டுக்குடியின் வாழ்க்கையைப் பிரதி போட்டு விடத்துடித்து மற்றவற்றை மறந்து அங்கே போய்ச் சேர்கையில் அது ஒன்றுமில்லை என்று உணர்வை பலரும் பெற்றிருந்தாலும் அதைத் திரையில் நச்சென்று சொன்ன கணத்தில் அரங்கமே விசில்கள், கைதட்டல்களால் நிறைந்தது. கதையில் யாவரும் வெகு இயல்பாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எத்தனையோ கொண்டாட்டங்கள், கவனிப்புக்கு பிறகு அந்தச் சேரி குழந்தைகள் மீண்டும் அதே வாழ்க்கைக்குத் திரும்புவதாக முடியும் காக்கா முட்டையின் கதை பல கோடி தம்பி, தங்கைகளின் வாழ்க்கை யதார்த்தம் என்பதை உணர்ந்துவிட்டு வீட்டில் அமர்ந்து காட்சிகளை அசைபோடுங்கள். சிரித்த கணங்களில் சிந்தியிருக்க வேண்டிய கண்ணீர் பற்றிப் புரியும். தமிழின் திரை வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களுக்கான மகத்தான படைப்பு காக்கா முட்டை. இதை நெஞ்சாரத் தழுவி வரவேற்பது தமிழர்களின் பெருங்கடமை. இயக்குனர் மணிகண்டனுக்கும், குழுவினருக்கும் மனம் நிறைந்த முத்தங்களும், வாழ்த்துகளும். இந்தக் கட்டுரையை அடித்து முடிக்கையில் பீட்சா விளம்பரம் ஆன்லைனில் சிரிக்கிறது  நல்லா வருவீங்க!