‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

‘Jhund’ – சுவர்களைத் தகர்த்தெறியும் கலை


நாகராஜ் மஞ்சுளேவின் ‘Jhund’ திரைப்படத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். நாக்பூரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை ‘கால்பந்து’ எப்படி மாற்றுகிறது என்கிற ஒரு வரிக்கதையாக இப்படத்தை கடந்துவிட முடியாது. அமிதாப் பச்சன் பேராசிரியர் விஜய் வேடத்தில் இன்னுமொரு  ‘மீட்பர்’ வந்து ஈடேற்றும் படமும் அல்ல. இவற்றைத்தாண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை நுண்மையான திரைமொழியில் நாகராஜ் தருகிறார். 


இப்படத்தின் உச்சத்தருணம் ‘தோற்கப்பிறந்தவர்கள்’ பெரும் வெற்றியைப் பெறுவதாக இல்லை. அது முதல் பாதியிலேயே நிகழ்ந்து விடுகிறது. அதற்கடுத்து வறுமை, அநீதி, சாதி, சமூகப்புறக்கணிப்பு, அரசாங்க ஒதுக்கல், ஏளனம் ஆகியவற்றால் ஆன சுவர்களைக் கடந்தேறும் பயணமே பல்வகை கதைகளால் கண் நிறைக்கிறது. அசலான மனிதர்கள் அவர்களாகவே திரையில் மின்னுகிறார்கள்.  கொண்டாட்டமும், கழிவிரக்கம் கோராத கம்பீரமும் அவர்களின் தொனி, பண்பு, வாழ்வினில் ஒளிர்கிறது. 


ஆவணப்படங்களாக, புள்ளிவிவரங்களாக மட்டுமே கடக்கக்கூடிய ஆதிக்க சாதி, ‘படித்த’, ‘மேம்பட்ட’ பொதுபுத்தியிடம் இப்பெருங்கூட்டம் யாசகம் எந்த மறுக்கிறது. இருக்கிறானா, செத்தானா என கவலைப்படாமல் ஆவண ஆதாரங்களில் மட்டுமே குடிமக்களை அளவிடும் அதிகார வர்க்கத்தை எள்ளி நகையாடியபடியே எதிர்கொள்கிறது. ‘உங்களின் பாரதம் கம்பிகளால், அநீதிகளால், புறக்கணிப்புகளால் ஆனது. எங்களுடையதே அசலான, உண்மையான திறமைமிக்க பாரதம். ‘ என நரம்புபுடைக்க வீரவசனங்கள் இல்லாமலே கடத்தப்படுகிறது. ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என அத்தனை அழகியலோடு, நெகிழ வைக்கும் தருணங்களின் வழியே நெக்குருக வைக்கிறார்கள். 


இத்திரைப்படம் நாம் பொதுவாக பார்க்கும் விளையாட்டுப் படங்களில் இருநது வேறுபட்டது. நாமும் பாபாசாகேப்பின் நீல வண்ணம் மின்னும் நாக்பூர் மண்ணிற்கு பயணமாகிறோம். பதைபதைப்பில் பங்குகொள்கிறோம். வண்ண உடை அணிந்து போர்க்களத்தில் விழாக்கோலம் பூணுகையில் சிரித்து இணைகிறோம். ‘என் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் நான் யாருடைய பரிதாபத்துக்குரியவனாக இருக்க விரும்பவில்லை’ எனும் அண்ணல் அம்பேத்கரின் வரிகள் திரைக்காவியமாக மாறுகிறது. கழிசடைகள் அல்ல கனவுக்காட்டாறு நாங்கள எனும் கனவு அனுபவம். சென்னையில் ‘Inox’ ல் மட்டும் subtitles உடன் காணக்கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள். 

தண்ணீர் மத்தன் தினங்கள்


ஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும்? Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.
 
சப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள் புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.
Image result for thanneer mathan dinangal;
 
அந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.
 
இசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே?

உயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை


கடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள்? மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.

‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நிற்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.

‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.

*spoilers ahead*
பள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.

ஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.

டப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.

பார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.

டப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே துணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.

இரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).

நம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.

இரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

Gully Boy – ‘தெருவோர கீதங்களின் நாயகன்’


 

Gully boy​ திரைப்படம் தேவதைக்கதை தான். மும்பையின் குடிசைப்பகுதியில் பிறந்து வளரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் இசைக்கனவுகள் என்னாகின என்பதை ‘rap’ பின்னணியில் சொல்லியிருக்கிறார் Zoya Akhtar​. கவித்துவ வரிகளும், ‘rap’ இசையும் படம் முழுக்க வந்து நம்மை துல்லியமாக விவரிக்க முடியாத அனுபவத்திற்குள் தள்ளுகின்றது.

ரன்வீர், ஆலியா இருவரும் வெவ்வேறு வகையில் திரையில் நம்மை ஆட்கொள்கிறார்கள். கனவுக்கும், உண்மைக்கும் இடையே அல்லாடும் பாத்திரத்தில் தயங்கி, தயங்கி ரன்வீர் பொருந்தி கொள்கிறார். வேகமும், மிகைத்த பிரியமும் மிக்க அவருடைய காதலியாக ஆலியா ரசிக்க வைக்கிறார். அவரின் அசட்டையான நடிப்பும், அதட்டும் உடல்மொழியும் அத்தனை அழகு.

‘குனிந்தே இருப்பது தான் நம்முடைய விதி’ என்கிற தந்தையும், அதனை இல்லையென்று மறுதலிக்கிற மகனும் உரையாடிக்கொள்ளும் காட்சி திரைப்படத்தின் உச்சம் எனலாம். அது கனவுக்கும், வீட்டின் நிலைக்கும் இடையே அல்லாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.

இசையால் மட்டுமே இப்படத்தில் போர்கள் நடக்கின்றன. வன்முறை என்பதைக் குடும்பம் மட்டுமே இதில் கையாள்கிறது. இக்கதையில் வரும் பெண்கள் தங்களின் ஆதங்கத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிற கணங்கள் சிறப்பானவை. ‘உடலுறவில் என்னை நீ திருப்திப்படுத்தல. அதான் இன்னொருத்தி’ என்கிற கணவனிடம், ‘ஆமாம் உனக்கு என்னைக்குத்தான் எப்படி என்ன தொடணும்னு தெரிஞ்சுருக்கு’ என்று மனைவி இரைகிறாள். கணவன் மிரண்டுபோய் நிற்கிறான்.

Image may contain: 1 person, text

குடிசைக்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அடையவே முடியாது என்று நம்புகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகள் எத்தனிக்கிற போது பலநூறு அஸ்தமனங்களைக் கண்ணுற்ற அவநம்பிக்கையோடு வாழத்த மறுக்கிறார்கள். திருமணமும், வயிற்றுப்பாடும் அச்சுறுத்தும் இஸ்லாமிய பெண்ணும், ஆணும் அமைதியாகவே இவற்றை எப்படி வெல்கிறார்கள் என்பதைத் திரைக்கதை சுவாரசியமாக விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக உன்னுடைய வாழ்க்கையை நீயே எழுதிப்பாடு என்கிற வரிகளும், ‘உன் உணர்வுகளை நீ பாட அஞ்சுகிறாய் என்றால் நான் மட்டும் ஏன் அதனை உச்சரிக்க வேண்டும் நண்பனே.’ எனும் கேள்வியும் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது.

இந்தக் கதையின் இசையும், அசலான ‘rap’ கலைஞர்களும் பெரும்பலம் என்றால், இந்திக்கே உரிய கமர்ஷியல் கதை சொல்லல் பின்னடைவு. தற்காலத்தின் வன்முறை, ஒதுக்கல், வெறுப்பு ஆகியவற்றையும், ஏற்றத்தாழ்வுகள் எப்படிச் சக மனிதரின் கண்ணீரை துடைக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் இசையோடு இழைத்துத் தந்திருக்கிறார் ஜோயா அக்தர். ‘நமக்கான காலம் வரும்’ என்கிற வரி தான் படத்தின் கருப்பொருளும், கதை சொல்லலும். ‘நீ ஒரு கலைஞன்’ என்று கண்கள் நிறையச் சொல்லும் பெண்ணின் லட்சியவாதம் நம்மையும் சற்றே வருடும் படம் ‘gully boy’.

மூன்று பில்போர்ட்களோடு ஒரு கொலையாளியை தேடுவது எப்படி?


நீதி என்பது எளியவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. படியேறவே முடியாதவர்கள், போராடி களைத்தவர்கள், தோள் சாயக்கூட ஆளில்லாதவர்கள் எப்படி போராடுகிறார்கள்? வெறுப்பு மட்டும் தான் காயப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களை செலுத்துகிறதா? Three billboards in Ebbings  திரைப்படம் இந்த கேள்விகளை தாங்கி மறக்க முடியாத திரை அனுபவத்தை தருகிறது.

மில்ட்ரெட் எனும் பெண்ணுடைய மகள் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறாள். பல மாதங்கள் ஆகியும் வழக்கில் துளி கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. மூன்றே பில் போர்ட்களில் விளம்பர வாசகங்களை எழுதுவதாக காட்டிக்கொண்டு காவல்துறையை எள்ளி நகையாடுகிறார் மில்ட்ரெட். குறிப்பாக கணைய புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமை காவல் அதிகாரியை குறிவைத்து தாக்குகிறது ஒரு பில்போர்ட்.
Image result for three billboards outside ebbing
இனவெறி கொண்ட, வன்முறையை தோன்றுகிற போதெல்லாம் ஏவும் காவலன் ராக்வெல் கொதிக்கிறான். மில்ட்ரெட்டுடன் வேலை பார்க்கிற பெண், விளம்பர நிறுவன இளைஞன் என பலரையும் தொல்லை செய்கிறான். முகத்தில் சற்று கூட இரக்கத்தின் சாயல் படியாத மில்ட்ரெட் வீடு தேடி  வந்த ஒரு மானிடம் மனம் விட்டு பேசுகிற கணம் அற்புதமானது. இறை நம்பிக்கையில்லாமல், மகள் முற்றாக இறந்து போனாள் என உணர்ந்தாலும் மகளின் மரணத்திற்கு நியாயம் தேடி ஓய மறுக்கிற மில்ட்ரெடின் அன்பு ததும்ப அக்கணத்தில் வெளிப்படுகிறது.
தலைமை காவல் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார். அவர் மில்ட்ரெட், ராக்வெல், தன்னுடைய மனைவி என பலருக்கும் கடிதங்கள் வரைகிறார். மில்ட்ரெட் மகளை கொன்றவனை கண்டுபிடிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறார். விளம்பர பலகை வைத்து தன்னை கூனிக்குறுக வைத்த
மில்ட்ரெட்டை நுண்மையாக பழிவாங்கியதை தெரியப்படுத்துகிறார். ராக்வெல் பில்போர்ட்டை வரைந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனான வெல்பியை அடித்து துவைத்து பணியிழக்கிறான். அவன் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியின்  கடிதத்தை படிக்கிறான். ‘வெறுப்பது எதையும் சாதிக்க உதவாது. அன்பு செய்யப்பழகு. அது உன்னை மகத்தான துப்பறிவாளனாய் ஆக்கும்’ என்கிறது. மில்ட்ரெட்டால் பற்றியெரியும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ராக்வெல் அவளுடைய மகளின் வழக்கு கோப்பை காப்பாற்றுகிறான்.
Image result for three billboards outside ebbing
முகம் முழுக்க மூடப்பட்டு தீக்காயங்களோடு மருத்துவமனை போகிறான் ராக்வெல். அங்கே இவனால் அடிபட்ட வெல்பி, ராக்வெல் எனத்தெரியாமல் கனிவோடு நம்பிக்கை ஊட்டுகிறான். கரிசனம் ததும்ப ஆரஞ்சு சாறு அருந்த உதவ முனைகிறான். கண்ணீர் வழிய ‘மன்னித்துவிடு வெல்பி’ என்கிறான் ராக்வெல். அவனென தெரிந்த பின்பும், ‘அழாதே. உப்புநீர் காயத்தை இன்னும் கூட்டிவிடும்’ என கவலை கொள்கிறான் வெல்பி. இன்னமும் அக்கறையோடு உதவுகிறான்.
ராக்வெல் மில்ட்ரெட்டின் மகளின் கொலையாளியை தேடி பயணிக்கிறான். சில தடயங்கள் கிடைக்கின்றன. மில்ட்ரெட்டின் வாழ்க்கையில் நம்பிக்கை பூக்கிறது. அடுத்து என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.
நீதி நாடுபவர்களை அடக்கும் அதிகார வர்க்கம், நீதிக்கான சிறுமுயற்சியும் சமூகத்தால் நிர்மூலமாக்கப்படுவதை சொல்லாமல் சொல்லும் பற்றியெரியும் பில்போர்ட்கள், வெறுப்புகள், கசடுகள் தாண்டி மனித மேன்மை நாடுபவர்கள், மன்னித்தலுக்கும், பழிவாங்கலுக்கும் இடையே அல்லாடுபவர்கள், புன்னகைக்க மறைந்த இழப்புகளின் வடுக்கள் தாங்கியவர்களின் உலகம் என அத்தனை நெருக்கமான திரைப்படம்.
Image result for three billboards outside ebbing

‘தி போஸ்ட்’ – நடுங்க வைக்கும் கணங்களிலும் நியாயம் பேசுவது எப்படி?


‘ இன்றைய இதழியல் நாளைய வரலாற்றின் முதல் வரைவு’
(திரைப்படத்தை முழுமையாக ரசிக்க விரும்புவர்கள் தவிர்த்து விடவும். Spoilers Ahead)

‘ஒரு மோசமான கட்டுரையை  வெளியிட்டதற்காக  அடித்து நொறுக்கப்பட்டால் தவறொன்றுமில்லை. ஆனால், இந்தக் கட்டுரையை வெளியிட்டால் அழித்து ஒழித்து விடுவார்களோ என அஞ்சிக்கொண்டு இருப்பதை ஏற்கவே முடியாது’ – வாஷிங்டன் போஸ்ட் மேனாள் ஆசிரியர் பென் பிராட்லி

Image result for the post

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில், மெரில் ஸ்ட்ரீப், தாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தி போஸ்ட்’ திரைப்படத்தைக் கண்டேன். வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்க வீரர்கள் சிக்கிக்கொண்டு இறப்பதோடு திரைப்படம் துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கா வெல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்னாராவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது. இந்த உண்மை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தாலும், போரில் வெற்றி பெற்று விடுவோம், இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று போரை தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ரகசிய அறிக்கையான அதை நியூ யார்க் டைம்ஸ் இதழ் நிருபர் பெறுகிறார்.
இதே காலகட்டத்தில், வாஷிங்க்டன் போஸ்ட் செய்தித்தாள் பங்குச்சந்தைக்குள் நுழைய முடிவெடுக்கிறது. தன்னுடைய கணவரின் தற்கொலைக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைக் கட்டாயத்தால் ஏற்றுக்கொண்ட கேத்தரின் கிரகாம் பங்குகள் எந்தளவுக்கு லாபம் பெற்றுத்தரும் எனத் தவிக்கிறார். தரமான இதழியலின் மூலம் லாபம் ஈட்டலாம் என்று அவர் நம்புகிறார். நிக்ஸனின் குடும்ப நிகழ்வு குறித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் கோபமுற்று, வேறொரு நிருபரை அனுப்புங்கள், இல்லையேல் செய்திதாளுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதியில்லை என்று தகவல் அவரிடம் சொல்லப்படுகிறது. அதை ஆசிரியர் பென் பிராட்லியிடம் சொல்கிறார் கேத். அவரோ ‘நீங்கள் வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியீட்டாளர் மட்டுமே. முதலாளி இல்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

Related image

 

பங்குச்சந்தையில் வாஷிங்டன் போஸ்ட் நுழைந்த கணத்தில், நியூயார்க் டைம்ஸ் இதழ் முதல் செய்திக்கட்டுரையை வெளியிடுகிறது. நாடே அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்கிறது. அந்த அறிக்கையை எப்படியாவது கைப்பற்றி விட வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் துடிக்கிறார். அறிக்கையின் சில பக்கங்கள் எப்படியோ அவரின் இருக்கைக்கு வந்து சேர்கிறது. ஆனால், அதே பக்கங்கள் நியூயார்க் டை  ம்ஸிடமும் இருப்பது தெரிந்து ஏமாறுகிறார்.
தேசப்பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் செயல்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டோடு நிக்சன் அரசு நீதிமன்ற படியேறுகிறது. நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இதே கட்டத்தில், அந்த ரகசிய அறிக்கை வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்குக் கிடைக்கிறது. இருப்பது ஏழே மணிநேரம் தான், நாற்பத்தி ஏழு பகுதிகள் கொண்ட அறிக்கையின் நான்காயிரம் பக்கங்கள் பக்க  எண்கள் இல்லாமல் ஆசிரியர்கள் கைக்குக் கிடைக்கிறது. நாளை செய்தித்தாள் இந்த அறிக்கையை  பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்கிறது ஆசிரியர் குழு.

 

ஆனால், செய்திதாளின் வழக்கறிஞர்கள் இது தற்கொலைக்குச் சமமானது என்கிறார்கள். இன்னொரு செய்தித்தாளுக்குத் தடை உத்தரவு இருக்கிற போது, அதே அறிக்கையை நாம் வெளியிட்டால் நம்முடைய செய்தித்தாள் தடை செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், பங்குச்சந்தையில் நுழைய இருக்கிற காலத்தில் இந்த முடிவு முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க செய்து நிறுவனத்தை மூடவைக்கலாம் எனவும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் பயப்படுகிறார்கள்.

Image result for the post
மென்மையான அணுகுமுறை கொண்டவராக அறியப்படும் கேத்தரினிடம் இந்த அறிக்கை குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று இதர நிர்வாகிகள் சொல்கிறார்கள். பங்குச்சந்தையில் நிறுவனம் நுழைய இருக்கும் கணத்தில், தன்னுடைய கணவர், தந்தை ஆகியோர் கட்டிக்காத்த நிறுவனத்தை நிர்மூலமாக்கிய பழி தன்னைச் சேர வேண்டுமா என்று அவர் தவிக்கிறார். செய்தித்தாளின் ஆசிரியரான பென் ‘இந்த  அறிக்கை கிடைத்தும் வாஷிங்டன் போஸ்ட்  அரசாங்கத்துக்குப் பயந்து கொண்டு வெளியிடாமல் போனது என்று தெரிந்தால் ஊர் நம்மைக் கேவலமாகப் பார்க்காதா? நம்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அழிந்து போகும்’ என்று சொல்கிறார்.

Image result for the post

 

 

 

அரை மனதோடு, கேத்தரின் ‘தயவு செய்து  வெளியிடுங்கள்’ என்று குரல் நடுங்க சொல்கிறார். அந்தக் கணத்தில் இன்னொரு அதிர்ச்சியான எச்சரிக்கை வந்து சேர்கிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையைப் பெற்ற அதே நபரிடம் இருந்து, வாஷிங்டன் போஸ்ட்டும் அறிக்கையைப் பெற்றிருந்தால் கிரிமினல் குற்றத்துக்காகக் கேத்தரின் சிறைக்குப் போக நேரிடும் என்பதே அந்த எச்சரிக்கை.
அதே சமயம், தேசத்துக்காக, அதன் பல கோடி மக்களுக்கு எப்போதும் நேர்மையோடு இருப்பதும், இதழியல் அறத்தை காப்பதும் தங்களுடைய லட்சியம் என்பதும் கண்முன் நிழலாடுகிறது. ‘கட்டுரைகளை வெளியிடுங்கள். மற்றதை பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் கேத்தரின். இதழின் இதர நிர்வாகிகள் உறைந்து போகிறார்கள். அடுத்த நாள் செய்தித்தாள் முழுக்கப் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்று பல ஆயிரம் பக்க அறிக்கையின் சாரத்தை வெளியிடுகிறார்கள். நீதிமன்ற வாசலுக்கு இழுக்கப்படுகிறது வாஷிங்டன் போஸ்ட். அடுத்த நாள் எல்லாச் செய்தித்தாள்களும் அதே செய்தியை தாங்களும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மறுபதிப்புச் செய்கின்றன.
நீதிமன்றத்தில் வியட்நாம் போரில் உறவுகளை நிற்கவைத்துவிட்டு தவிக்கும் அரசாங்கத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கேத்தரினிடம் சொல்கிறார், ‘இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று நன்றியோடு சொல்கிறார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகையில் அறிக்கையை முதலில் கண்டுபிடித்த நியூயார்க் டைம்ஸ் அங்கத்தினர் பேட்டி தருகிறார்கள். அறத்தின் பக்கமும், பேச்சுரிமையின் பக்கமும் நின்ற கம்பீரத்தோடு அமைதியாகக் கேத்தரின் நடக்கிறார். அவரின் கண்களில் தெரியும் நிம்மதியும், சுற்றியிருப்பவர்களின் வாஞ்சை மிகுந்த பார்வையும் நெகிழவைக்கும் பெருங்கணம்.

Related image
உச்சநீதிமன்றம் 6-3 என்று கருத்துரிமையைத் தூக்கிப்பிடிக்கிறது. என் தந்தை சொல்வார், ‘இன்றைய இதழியல் என்பது நாளைய வரலாற்றின் முதல் வரைவு’ என்று கேத்தரின் ஆசிரியர் பென்னிடம் சொல்வதோடு திரைப்படம் முடிகிறது. இதழியல் என்பது எளிய மக்களின் குரலை எதிரொலிப்பதாக, அதிகார பீடங்களுக்கு அடங்கிப் போகாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் திரைப்படம் கம்பீரமாகக் கடத்துகிறது. வெளிச்சத்தில் வீரர்களாகவும், இருட்டில் அதிகாரத்தோடு உறவாடுபவர்களாக இருப்பதில்லை உண்மையான ஊடக அறம் என்று சொல்லாமல் சொல்கிறது ‘The Post’. திரையில் கண்டிப்பாகப் பாருங்கள்.

 

(இதழாசிரியர் பென் பிராட்லி, உரிமையாளர் கேத்தரீன் உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது என்கிற செய்தியை ஆனந்தமாக படிக்கிறார்கள். புகைப்பட நன்றி:  Getty Images)

 

அறம் திரைப்படம் பேசும் அரசியல்


அறம் திரைப்படத்தின் அதிர்வுகள் அகல்வதற்கு முன்பு இப்பதிவை எழுதுகிறேன். அரசியலமைப்பின் அறம் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். (‘Constitutional morality’ குறித்த அறிமுகத்திற்குக் காண்க http://www.india-seminar.com/2010/615/615_pratap_bhanu_mehta.htm) ஆனால், அரசும், ஆள்வோரும், அதிகாரிகளும் கடைக்கோடி மக்களின் கண்ணீரை துடைப்பதை எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதைக் கூராய்வு செய்கிறது அறம் திரைப்படம்.
சமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் கேபினட் செயலாளர் T.S.R.சுப்ரமணியம் இந்தியாவில் உயிர்கள் போவது இயல்பான ஒன்று, நீண்ட காலத்தில் பணமதிப்பு நீக்கத்தால் வரும் பயன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பேட்டி தந்திருந்தார். மனித உயிர்கள் இந்த நாட்டில் எத்தனை மலிவானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்படத்தைக் காண்கையில் உணர்ந்து உறைந்து போவோம். போர்வெல் மரணங்கள் திரையில் ஏற்படுத்தும் பதைபதைப்புச் செய்தித்தாளில் மலக்குழியில் விழுந்து இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் ஏன் நமக்கு ஏற்படுவதில்லை எனப் படம் பார்க்கையில் தோன்றியது.
மக்களிடம் வாக்கு கேட்க வருகையிலே தெரியாத தூரம் ஏன் அவர்களின் கண்ணீரை போக்க முனையும் போது தப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்கள் மக்களின் நலன் சார்ந்ததாக, அரசியலமைப்பின் கனவுகளைக் காப்பதாக இல்லாமல் ஏன் வழி தவறுகின்றன? மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும்? அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது? தங்களைத் தவிக்க விடும் தேசத்தின் மீது பக்தி கொள்ளக் கடைக்கோடி மக்களுக்கு என்ன தேவை?
Image result for அறம்
சொகுசு வாகனங்களில் செல்வோரின் பிள்ளைகளின் கல்வி குறித்தும், அன்றாட வாழ்க்கை குறித்தும் பெரிதும் கவலைப்படும் அதிகார வர்க்கம் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கும் வாழ்வும், கனவுகளும் உண்டென உணராமலேயே ஏன் காலந்தள்ளுகிறது? அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா? வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே? சமத்துவமின்மையின் வன்முறையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படிப் பல கேள்விகளைப் பதைபதைப்பு மிக்கக் கதை சொல்லலின் மூலம் அறம் சாதித்திருக்கிறது. இயக்குனர் கோபிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாராவுக்குப் பூங்கொத்து.
அதிகாரிகளை முழுக்க நல்லவர்கள் போலவும், அரசியல்வாதிகள் தவறுகளின் முழு உருவம் போலவும் இருமை இந்தக் கதை சொல்லலில் கடத்தப்படுகிறது. அது அப்படியில்லை என்பதை உணர வைக்காமல் போகையில் அரசியல் சார்ந்த அணிதிரட்டல், சக மனிதருக்கான சம மதிப்பு, மரியாதை என்கிற கனவு பொன்னுலகக் கனவாகவே நின்று விடும். அரசியலில் தான் ஆழமான மாற்றங்களுக்கான வித்து இருக்கிறது என உணர வைக்கிற அறம் அனைவரும் காணவேண்டிய படம்.

கோக்கோ – கனவைத் துரத்துங்கள், குடும்பத்தையும் கவனியுங்கள்!


கோக்கோ’ திரைப்படத்தை முதல் முறை பார்த்துவிட்டுக் கண்கள் பனிக்க வெளியே வந்தேன். குடும்பத்தின் பல்வேறு பாடுகளில் பெரும்பாலும் பங்கேற்காத என் கடந்த கால வாழ்க்கை அப்படிப்பட்ட அனுபவத்திற்குக் காரணமோ எனத்தோன்றியது. இரண்டாவது முறை இன்று அப்படத்தை மீண்டும் பார்த்த பின்பு மீண்டுமொரு முறை நெகிழ்ந்தேன்.

இசைக்கனவுகளைத் துரத்தும் சிறுவன் மிகைல். அவனுடைய குடும்பம் காலணி தயாரிப்பில் பெயர் பெற்றது. அவனுடைய எள்ளு தாத்தா இசை நாடி குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். அதனால் அக்குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இசை வெறுக்கப்படுகிறது. இந்நிலையில் மிகைலுக்கு ஏற்படும் மாய அனுபவங்கள் அவனை இறந்தவர்களின் பூமிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே இசைக்கும், குடும்பத்திற்கும் இடையே அவன் உயிர் சிக்கிக்கொள்கிறது.

Image result for coco movie

கனவுகளை விடாமல் துரத்துவதா? குடும்பத்தொழிலில் தோய்ந்து தொலைந்துபோவதா என்கிற தள்ளாட்டத்தில் மிகைல் வாடிப்போகிறான். இசை பெருகி, கனவுகள் கைகூடி வரும் நிலையில் அவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கனவுகளைத் துரத்துகையில் சகலமும் மறந்து போகிறோம்.பிரியம் வழிய இமை சோர, கண்ணீர் வழிய நினைவுகளோடு நிறையும் உறவுகளின் காத்திருப்பை மறத்தல் தகாது எனக் கோக்கோ அத்தனை நெகிழ்வாகக் கடத்துகிறது.

படத்தில் பல்வேறு ஸ்பானிஷ், ஆங்கிலம் கலந்த பாடல்கள். அவை மெக்சிகோவுக்கே அழைத்துச் செல்கின்றன. வலுவான கதையும், உற்சாகமான இசையும், கனவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான போராட்டமும் ஒரு பரவச அனுபவமாகக் கோக்கோவை மாற்றுகின்றன. குழந்தைகள், பெற்றோர்கள், கூடுகள் நொறுக்கி வானை நாடும் இளைஞர்கள் யாவரும் கண்டு நெகிழ வேண்டிய அழகிய படம் கோக்கோ.