‘Jhund’ – சுவர்களைத் தகர்த்தெறியும் கலை


நாகராஜ் மஞ்சுளேவின் ‘Jhund’ திரைப்படத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். நாக்பூரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை ‘கால்பந்து’ எப்படி மாற்றுகிறது என்கிற ஒரு வரிக்கதையாக இப்படத்தை கடந்துவிட முடியாது. அமிதாப் பச்சன் பேராசிரியர் விஜய் வேடத்தில் இன்னுமொரு  ‘மீட்பர்’ வந்து ஈடேற்றும் படமும் அல்ல. இவற்றைத்தாண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை நுண்மையான திரைமொழியில் நாகராஜ் தருகிறார். 


இப்படத்தின் உச்சத்தருணம் ‘தோற்கப்பிறந்தவர்கள்’ பெரும் வெற்றியைப் பெறுவதாக இல்லை. அது முதல் பாதியிலேயே நிகழ்ந்து விடுகிறது. அதற்கடுத்து வறுமை, அநீதி, சாதி, சமூகப்புறக்கணிப்பு, அரசாங்க ஒதுக்கல், ஏளனம் ஆகியவற்றால் ஆன சுவர்களைக் கடந்தேறும் பயணமே பல்வகை கதைகளால் கண் நிறைக்கிறது. அசலான மனிதர்கள் அவர்களாகவே திரையில் மின்னுகிறார்கள்.  கொண்டாட்டமும், கழிவிரக்கம் கோராத கம்பீரமும் அவர்களின் தொனி, பண்பு, வாழ்வினில் ஒளிர்கிறது. 


ஆவணப்படங்களாக, புள்ளிவிவரங்களாக மட்டுமே கடக்கக்கூடிய ஆதிக்க சாதி, ‘படித்த’, ‘மேம்பட்ட’ பொதுபுத்தியிடம் இப்பெருங்கூட்டம் யாசகம் எந்த மறுக்கிறது. இருக்கிறானா, செத்தானா என கவலைப்படாமல் ஆவண ஆதாரங்களில் மட்டுமே குடிமக்களை அளவிடும் அதிகார வர்க்கத்தை எள்ளி நகையாடியபடியே எதிர்கொள்கிறது. ‘உங்களின் பாரதம் கம்பிகளால், அநீதிகளால், புறக்கணிப்புகளால் ஆனது. எங்களுடையதே அசலான, உண்மையான திறமைமிக்க பாரதம். ‘ என நரம்புபுடைக்க வீரவசனங்கள் இல்லாமலே கடத்தப்படுகிறது. ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என அத்தனை அழகியலோடு, நெகிழ வைக்கும் தருணங்களின் வழியே நெக்குருக வைக்கிறார்கள். 


இத்திரைப்படம் நாம் பொதுவாக பார்க்கும் விளையாட்டுப் படங்களில் இருநது வேறுபட்டது. நாமும் பாபாசாகேப்பின் நீல வண்ணம் மின்னும் நாக்பூர் மண்ணிற்கு பயணமாகிறோம். பதைபதைப்பில் பங்குகொள்கிறோம். வண்ண உடை அணிந்து போர்க்களத்தில் விழாக்கோலம் பூணுகையில் சிரித்து இணைகிறோம். ‘என் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் நான் யாருடைய பரிதாபத்துக்குரியவனாக இருக்க விரும்பவில்லை’ எனும் அண்ணல் அம்பேத்கரின் வரிகள் திரைக்காவியமாக மாறுகிறது. கழிசடைகள் அல்ல கனவுக்காட்டாறு நாங்கள எனும் கனவு அனுபவம். சென்னையில் ‘Inox’ ல் மட்டும் subtitles உடன் காணக்கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள்.