தனிப்பட்ட நீட் வெற்றிகளை கொண்டாடாமல் விமர்சிக்கலாமா?


ஜீவித் குமார் அவர்களின் நீட் வெற்றி பெருமைக்குரியது. வாழ்த்தும், பேரன்பும். எளிய பின்னணி கொண்ட அரசுப்பள்ளி மாணவர் மருத்துவராகும் தருணம் மகிழ்ச்சிக்குரியது.

இப்போது சிலவற்றைத் தெளிவாக உரையாடுவோம். குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.

கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?

நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.

நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை.

செயற்கரிய சேவைகள் புரிந்த மருத்துவர் சுனிதி சாலமன்


மருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)

மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.

எம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்சுக்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான?’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.

ஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.

அடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.

இரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

(சுனிதி சாலமன்-நிர்மலா செல்லப்பன்)

தமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.

தான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, மரண பயம் சூழ்ந்திருந்தது.

சுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.

ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி! என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா?” என்று கணவரை ஏற்க வைத்தார்.

அந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்கள் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

இது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.

‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன?’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.

ஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :

“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.

பொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’

சுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.

உதவியவை:
1. https://yrgcare.org/paying-tribute-to-late-dr-suniti-solomon-on-her-78th-birth-anniversary/
2. https://www.newyorker.com/news/news-desk/postscript-suniti-solomon-aids-researcher

3. https://www.thehindu.com/sci-tech/health/world-aids-day-how-dr-suniti-solomons-flexibility-shaped-indias-aids-crisis/article7936732.ece

4. https://www.livemint.com/Leisure/0BndFwDSQojGe71oE8lFVK/Freedom-to-live-with-HIV–Suniti-Solomon.html

5. www.bbc.com/news/magazine-37183012

6. https://www.thebetterindia.com/76774/suniti-solomon-doctor-hiv-aids-india/

7. HIV/AIDS in News- Journalists as Catalysts UNDP
8. https://www.netflix.com/in/title/80238021?source=35
9. https://yrgcare.org/wp-content/uploads/2015/10/HIV_in_India.pdf

புகைப்பட நன்றி: YRG CARE.