
ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் எழுத்தில் ‘ஆணவக் கொலைகளின் காலம்’ நூலை வாசித்து முடித்தேன். பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் ஜாதி அரசியல் எப்படிப் பண்பாட்டு, மொழி, அரசியல் தளங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் குலைக்கிறது என்பதை நூல் வெறுப்பின்றிப் பதிவு செய்கிறது. என்னமோ அரசியல் கட்சிகளால் தான் ஆணவ கொலைகள் நடப்பதை போன்ற தோற்றம் உண்டாக்கப்படுகிறது. ஆனால் , மக்களிடையே நீக்கமற ஜாதியுணர்வு கலந்திருக்கிறது. அது பாம்பின் நாக்கைப் போலத் தேவைப்படும் பொழுது மட்டும் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஜாதி என்பது பண்பாட்டு அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் சூழலில், கோயில் நுழைவைத் தாண்டி கோயில் மரியாதை , தனிக்கோவில், நல்ல வீடு, வாகனங்கள் என்று பல்வேறு தளங்களில் தங்களுக்கான இடத்தைத் தலித்துகள் போராடிப் பெறுகிறார்கள். நவீன அரசியல் காரணமாக ஆட்சி நிர்வாகத்தில் கிராமங்கள் அளவில் இடம் கிடைப்பது நடக்கிறது. அங்கே அமர்ந்து விவாதித்து, பேசி, சண்டையிட்டு அரசியல் செய்கிறார்கள். தேர்தல் அரசியல் எண்ணிக்கை சார்ந்த ஒன்றாக இருப்பதால், பண்பாட்டுத் தளத்தில் ஜாதியை கையில் எடுத்துத் தேர்தலில் கொள்முதல் செய்வது தொடர்ந்து நிகழ்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று பல்வேறு காரணங்களால் இடப்பெயர்ச்சியும், மக்கள் தொடர்பும் நிகழ்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகும் வாய்ப்புகள் பெருகி காதல் அரும்புகிறது. பெண்ணுடலை சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஜாதி அமைப்புப் பதற்றம் கொள்கிறது. இயல்பாகச் சமூகத்தில் நிகழும்
இவற்றையும், கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுக்கு வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும் பதற்றத்தோடு அணுகுகின்றன ஆதிக்க ஜாதிகள். இந்த இயல்பான மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் எளிமையான எதிர்த்தரப்பாகத் தலித்துகளைக் கூட்டாகக் கட்டமைத்து வன்முறையைக் கைக்கொள்கிறார்கள். தலித்துகளைக் கொல்வதும் , தலித்தோடு காதல் பூண்ட தங்கள் ஜாதி பெண்ணைக் கொல்வதையும் செய்கிறார்கள்.
மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கலப்புத் திருமணத்துக்கு எதிரான பகிரங்க எதிர்ப்பை காடுவெட்டி குரு பதிவு செய்ததன் நீட்சியாகவே தர்மபுரியில் பல நூறு குடிசைகள் எரிக்கப்பட்டதைக் காணவேண்டும் என்கிறார் ஆசிரியர். கொங்கு வெள்ளாளர் அமைப்புகள் சில ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக உறுதி மொழி எடுத்ததோடு நில்லாமல், கலப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்யும்படி கோரின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க சொல்லி வன்னியர் அமைப்புகள், கொங்கு வேளாளர் பேரவைகள் , தேவர் அமைப்புகள் போராடுவது ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்கள் சார்ந்த அக்கறையின்மையின் அப்பட்டமான ஆதாரம்.
அண்ணல் அம்பேத்கர் ஜாதியமைப்பு குறித்த தன்னுடைய ஆய்வில் ஜாதி முறையின் தோற்றத்துக்கும், அதன் நீடிப்புக்கான காரணமாக அக மண முறையைச் சுட்டுகிறார். ஒத்த குழுவில் ஏற்படும் ஆண் -பெண் எண்ணிக்கையை ஒட்டி பெண்களின் மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை நடைமுறை, குழந்தை திருமணம், ஆண்களின் துறவு எனப் பல போக்குகளை நுண்மையாக விவரித்தார். ஜாதி அமைப்பை ஒழிக்கக் கலப்பு மணம் தான் வழி எனத் தான் நம்புவதாக அறிவித்தார்.
ஜாதி மறுப்புத் திருமணம் என்பது என்பது தமிழகத்தில் நூற்றாண்டு கண்டுவிட்ட ஒன்றாகும். முதலில் ஜாதி மறுப்புத் திருமணங்களாக ஆரம்பித்த இவை தற்போது வெறும் சடங்கு, புரோகிதர் ஒழித்த திருமணங்களாக ஜாதிக்குள் நடக்கிற அளவுக்குச் சுருங்கிவிட்டது. திராவிட இயக்கம் கலப்புத் திருமணத்தை அழுத்திப் பேசினாலும் அதன் ஆதாரவாளர்களாகத் திகழ்ந்த ஆதிக்க ஜாதியினர் அவற்றைச் சட்டை செய்யவில்லை. தங்களை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக் கொள்ளும் ஆதிக்க ஜாதிகள், இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மட்டும் வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட பொழுது திமுகத் திராவிடமா, தமிழனா என்று விவாதித்து அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கி கொண்டது. அதிமுகவோ நிவாரண நிதியை கொடுத்துவிட்டு மவுனம் காத்துக் கொண்டது, தமிழ் அடையாளம் என்பதன் கீழ் தங்களுடைய கள வேறுபாடுகளைப் புறக்கணித்துவிட்டு ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கூடினார்கள். திரைப்படப் பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்று இயங்கிய இவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் களத்தில் இறங்கி பணியாற்றவில்லை. தலித்துகளின் நியாயமான கோபங்கள் மீது எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஆர்ப்பாட்ட அரசியலைத் தாண்டி ஜாதி அமைப்பை எதிர்கொள்வதில் சுணக்கம் கொண்டுள்ளது. தமிழால் இணைந்து போராடலாம் என்று கணக்கு போட்ட இருவரும் முகத்தில் அறையும் சிக்கலைகளைத் தொட்டு அது சார்ந்து இயங்கி இருக்கலாம். ஆகவே இதனைத் ‘தமிழ்த் தின்ற சாதி’ என்று ஸ்டாலின் ராஜாங்கம் அழைக்கிறார்.

திராவிட அடையாள அரசியலில் தலித்துகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தில் அவர்களுக்கான இடத்தை மறுக்கும் அரசியலை திராவிட இயக்கங்கள் மேற்கொள்கின்றன. தலித் இயக்கங்களின் எழுச்சி திராவிட இயக்கங்களின் போதாமையால் மட்டும் எழுந்தவை அல்ல, திராவிடக் கட்சிகளின் அடையாளமும், அரசியலும் ஜாதிமயமானதாக ஆனதற்கு எதிராக எழுந்த கலகமே தலித் இயக்கங்கள். எனினும், அவை சமூக விரோத இயக்கங்கள் [போல இன்றைய அரசியல் களத்தில் ஆதிக்க ஜாதி அரசியலால் முத்திரை குத்தப்படுகிறார்கள். ராமதாஸ் என்கிற ஒற்றை அரசியல்வாதி மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசுவதைப் போன்ற தோற்றத்தை உண்டு செய்து, பிராமணர்களை மட்டும் சாடிவிட்டுத் தலித்துகள் மீது வன்முறையை, அடக்குமுறையை ஏவும் தமிழகத்து இடைநிலை சாதிகள் குறித்து மூச்சுகூட விடாமல் இருக்கின்றன திராவிட இயக்கங்கள். ஓட்டுக்கள் போய்விடும் என்கிற வாக்குவங்கி அரசியல் இதனைச் செலுத்துகிறது.
தலித்துகளும், திராவிட இயக்கமும் கொள்வதே இயற்கை கூட்டணி என்கிறார் கி.வீரமணி. ஆனால், எம் எல்.ஏ , எம்பி ஆகிய அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, அரசு சார்ந்த திட்டங்கள். பொது ஏலம் , அரசு மூலதனம் ஆகியவை பெரும்பான்மை சாதியினருக்கு உரியதாக ஆக்கப்பட்டு விட்டதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் பிறக்காத உத்திர பிரதேசத்தில் தலித் முதல்வராக முடிகிறது, தமிழகத்தில் முடியவில்லை என்றுகூடச் சொல்ல முடியவில்லை என்று திருமாவளவன் வருத்தப்படுகிற அளவுக்குத் தமிழகத்தின் நிலை உள்ளது.
ஜாதியமைப்பு ‘அண்டாமை-காணாமை’ எனும் அளவுகோல்களைக் கடந்து நவீன அரசியலில் அதிகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்கும் ஒன்றாக உள்ளது. ஆதிக்க ஜாதிகளுக்கு இருக்கும் உள்ளூர் அதிகாரம், பணபலம் ஆகியவை தேர்தலில் வாக்குகளை அள்ளித் தருகிறது. சமூக இயங்குமுறையில் ஊடுருவிவிட்ட இதனைக் குறித்துப் பேசாமல், விமர்சிக்காமல், எதிர்கொள்ளாமல் மாற்றம் என்பது சாத்தியமில்லை.
கலப்புத் திருமணங்களைத் தீவிரமாகச் சமூக, அரசியல் தளங்களில் முன்னெடுப்பது இல்லை. ஜாதி ஒழிக என்கிற கோஷங்கள் எழுகிற அதே சமயம், ஜாதி வன்முறையைத் தூக்கிப்பிடிக்கும் காரணிகளை எதிர்கொள்வது கூட்டுச் செயலாக நிகழ்வதே இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினராக இருபதாம் நூற்றான்டுக்கு முன்னர் வரை இருந்த நாடார்கள் கள்ளர்கள் உடன் இணைந்து கொண்டு கண்டதேவி தேரை வடம் பிடித்து இழுக்கத் தலித்துகளை அனுமதிக்காததைச் சுட்டும் ஆசிரியர் ஜாதி எப்படித் தன்னுடைய கொடுங்கரங்களைத் தலித்துகள் மீது செலுத்திக் கொண்டே இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நாடக காதல் புரிகிறார்கள்,வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் முதலிய குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைக்கிறார். அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது அவரின் துறை எடுத்த கணக்கெடுப்பின் படியே இந்தியாவில் கலப்புத் திருமணங்கள் குறைவாக இருக்கும் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இடப்பெயர்வு, நவீனம் ஆகியவற்றால் காதல் திருமணங்கள் பெருகியிருப்பதை வசதியாக மறைக்கும் போக்கு இது. மேலும், கட்டப்பஞ்சாயத்து என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. தானும் தங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் இடத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு சில இடங்களில் பெற்றிருப்பதன் அறிகுறி அது என்கிறார் ஆசிரியர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்துப் பெரியளவில் அறிதல் இல்லாமலே தலித்துகள் உள்ளார்கள், மேலும், குறைந்த அளவிலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். என்றாலும், ஓரளவுக்கேனும் ஆதிக்க ஜாதியினரை அச்சுறுத்தும் சட்டமாக இது இருப்பதாலேயே அதனை நீக்க போராடுகிறார்கள் என்கிறார்.
ஆணவக் கொலைகள் எங்கள் மாநிலத்தில் நடக்கின்றன என்று இருபத்தி ஒரு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அப்படியொன்று நடக்கவில்லை என்று சட்டசபையிலும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு பிடிவாதம் பிடித்தது. ஆணவக் கொலைகளை, ஜாதி அரசியலை கண்டிக்கும் வாய்ப்பாக இருந்தும் திமுகத் தலைவர் கருணாநிதி அதைச் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே அறிக்கை விட்டார்.
வன்முறையை வெவ்வேறு வடிவங்களில் கைக்கொள்ளும் யுவராஜ் முதல் பல்வேறு இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் நாயகர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் பிராமணரின் அதிகாரத்தை எதிர்த்து கிளர்ந்த திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ‘பிராமணியத்துக்குத் துணை போகும்’ என்று மட்டும் கூறிக்கொண்டு எதிர்கொள்வது தமிழகத்தின் சமூக நீதிக்கு நல்லதல்ல என்பது நூலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.
மிக முக்கியமான நூல். அவசியம் வாங்கிப் படியுங்கள்
ஆணவக் கொலைகளின் காலம்
ஸ்டாலின் ராஜாங்கம்
காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்: 190
விலை: 175
