தேவதைக்கதைகள்


வானத்தின் பரப்பில் 
கால்களை நிலைநிறுத்தி 
சம்மணமிட்டு சிரிக்கிறாள் 
கொஞ்சம் வானவில்லின் கிளைகளில் 
ஒய்யாரமாக பால்ய கீதங்களை தொங்க விடுகிறாள் 

அள்ளி நடுவகிட்டின் பாதையில் 
முத்தங்களின் கனகனப்பை 
நைச்சியமாக பின்னலில் மெத்தனமாக 
நழுவ விடுகிறாள் 
நறுக்கென்று தெறிக்கும் 
முறுக்கல்களில்
மோதல்கழுவி கண்ணை கசக்குகிறாள் 
இதயத்தின் அறுந்த கம்பிகளில் 
வலைபின்னல் பின்னி 
நெகிழ்வு குழந்தையை தாலாட்டுகிறாள் 
என்னமோ என கதவடைத்து 
கட்டிலை தனியாக தேய்த்து உறங்கிப்போகிறார் 
அப்பா..
புரிந்தும் புரியாத 
அம்மாவின் உலகம் ஊடான 
குறுக்கத்தெருவின் 
நெருக்க பயணம் 
தங்கைக்கு இப்பொழுது என புலம்பிப்புரண்டு படுக்கிறான் 
குட்டிப்பையன் 
தேவதைக்கதைகள் இவைதான் 
நீங்களும் போய் உங்கள் வீட்டில் காற்றோடு இதை 
சொல்லுங்கள்…
சிரிக்கிறதா சுவர்கள் ?

கடைசி பெஞ்சுகளின் உலகம்


முட்டாள்களின் உலகம் என அதற்கு 
பெயர் வைத்து உள்ளார்கள் புத்தகமேதாவிகள் 
பொய் பேசுபவர்களின் கிடங்கு என 
புண்ணிய ஆத்மாக்கள் முணுமுணுக்கிறார்கள் 

கீதங்கள் கேட்காத மௌன பூமி என 
இசைக்கவிஞர்கள் புலம்புகிறார்கள் 
கொஞ்சம் நிதானிக்க 
இவர்களில் யாரேனும் என்றால் கிளம்புங்கள் 
அன்றேல் 
படியுங்கள் 
சாய்ந்த பெஞ்சு கவலைகள் 
இல்லாத அவர்களை நேசித்ததாக சொல்கிறது 
பென்சிலும்,பேனாவும் 
என்றைக்கும் எங்களைத்தொடாமல் 
பேணினார்கள் என மெச்சுகிறது 
எச்சில் காற்றே படாமல் 
வைத்து அழகு பார்த்தார்கள் என 
சிலிர்க்கின்றன புத்தகங்கள் 
கேள்விகள் கேட்கிற பொழுது 
ஞானியை போல மௌனம் காத்ததாக 
அறையின் பல்லிகள் சொல்கின்றன 
படித்தவர்களின் பொய்களுக்கு புலப்படாத 
இவ்வுலகில் ஊஞ்சலாடிய கடைசி பெஞ்சு நண்பனை 
தொலைத்துவிட்டதாக கல்லூரியும் ,பள்ளியும் அழுகிறது 
கேட்கிறதா உங்களுக்கு அதன் தீனக்குரல் ?

இபிகோவும்,கடவுளின் மண்டியிடலும்


 

கோபத்தின் சாயல்கள் 
வன்மத்தின் படரல்கள் 
ஏமாற்றலின் மிச்சங்கள் 

இல்லாத 
உலகத்தின் பூட்டை பூட்டி 
தன் புன்னகை 
சொட்டலில் 
கட்டிவைத்து இருக்கும் 
வாண்டுவிடம் 
சாவி களவாடப்போன திருடனிடம் 
,”பழமா,?”என் விரல் மடக்கி 
கேட்கிறான் குறும்பன் ;
திருடனை காணவில்லை அன்றோடு 
என்கிறார்கள் காவலர்கள் 

கிழிந்த ஆடை 
மண் தரை 
பசித்த வயிறு 
கொஞ்சம் சிரிப்பு 
கொஞ்சம் சிணுங்கல்
பொம்மை வீடு 
புத்தனின் போதிமரம் 
இங்கே தான் பதியம் செய்யப்பட்டு இருக்கிறது 

அவர்கள் உலகின் முந்தைய 
கவலைகள் கேட்டு இருக்கிறீர்களா நீங்கள் ?
வானவில்லுக்கு கருப்பு கலர் கொடுக்கணும்
ஜுரம் அடிக்கும் பொம்மையை கவனிக்கணும் 
கொஞ்சம் அடம்பிடித்து அம்மா மடியில் எச்சில் ஒழுக தூங்கணும் 

போயிற்று அவை ப்ளே ஸ்கூலிலும்,வீடியோ கேமிலும் 
குழந்தைகளின் பால்யத்துக்குள்
ஊடுருவல் புரியும் நமக்கெல்லாம் 
என்ன இபிகோ ?
கேட்டு சொல்லுங்கள் !

கடவுள் மண்டியிட்டு மன்னிப்பு 
கேட்கிறார் எதிர்வீட்டு 
குட்டிமாவின் கோபத்துக்கு 
ஒழுங்காக சிட்டுக்குருவியை 
சோறுண்ண அனுப்புவதாக 
சொல்லிவிட்டு செய்யாததற்கு 
பிஞ்சு விரல்களால் கொட்டு வாங்க சித்தம் என்கிறார் !


‘சுட்டிங்கன்னா சும்மா குறும்புகள் பண்ண மட்டும் அல்ல… சிலிர்க்க வைக்கும் செயல்கள் செய்யவும் முடியும்’ என உலகுக்கு உரக்கச் சொன்ன நான்கு சுட்டிகளின் கதை இதோ உங்களுக்காக…

ஜான்சன்: அது, அழகான தென் ஆப்ரிக்கா நகரின் ஒரு சின்ன ஊர். பல வண்ண மிமோசா மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பள்ளியை ஆர்வம் பொங்க பார்த்தபடியே நுழைந்தான் குட்டி ஜான்சன். உடன் வந்த கெயில் ஆன்ட்டி, அவனை மடியில் உட்காரவைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சொன்னார்… ”இவன் அம்மா கொடூரமான வியாதிக்கு  பலியாயிட்டாங்க. அப்பாவின் முகம் கூட இவனுக்குத் தெரியாது. நீங்கதான் பள்ளியில் சேர்த்துக்கணும்” என அவர் கெஞ்சுவதைப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான் ஜான்சன்.

அவன் அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்டது எச்.ஐ.வி தொற்று வியாதி. பள்ளிகளில் இடம் கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனாலும்,  ‘சாதிக்கப் பிறந்தவன் நீ’ என்று சொல்லி வளர்த்தார் கெயில். எட்டாவது வயதில் ஜான்சனின் உடம்பு  நோயினால் வலி பின்னி எடுக்க, உலக எய்ட்ஸ் மாநாட்டில் பேசிய வரிகள் கேட்பவரின் கண்களைக் கண்ணீரால் நிரப்பின.

”எங்கள் மீது பரிவு காட்டி ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களுக்கும் கை, கால்கள் உள்ளன. உங்களின் தேவையே எங்களுக்கும் தேவை. எங்களை ஒதுக்கா  தீர்கள்” என்றான்.

அதோடு நில்லாமல், இந்த நோயின் பிடியில் சிக்கிக்கொண்ட பல தாய்மார் களைப் பராமரிக்க, ஓர் இல்லத்தைக் கட்டவேண்டும் என, உலகம் எங்கும் சென்று நிதி திரட்டினான். இன்று, ஜோகனஸ்பர்க் நகரில் அந்த இல்லம் கம்பீரமாக உள்ளது. நெல்சன் மண்டேலா, ”வாழ்வின் போராட்டக் குணத்துக்கான சின்னம் ஜான்சன்” என ஜான்சனைப் புகழ்ந்தார். ‘நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்’ எனும் புகழ்பெற்ற ஜான்சனின் வரிகள் இன்னமும் பாடலாய் ஒலிக்கிறது. அவனின் மரணத்துக்குப் பின், ‘உலகக் குழந்தைகள் சமாதான விருது’ ஜான்சனுக்கு வழங்கப் பட்டது!


ஹெக்டர் பீட்டர்சன்: தென் ஆப்ரிக்காவில், கறுப்பின மக்களை, வெள்ளை அரசாங்கம் அடக்கி ஆண்டது. அவர்களுக்கு உணவு, நீர், இடம் என எல்லாவற்றிலும் சிறிதளவே தந்துவிட்டு, மீதத்தை அபகரித்தது. மொழித் திணிப்பும் நடந்தது. அங்கே பல மொழி பேசுபவர்கள் இருந்தார்கள். அரசாங்கமோ… ‘எல்லோரும் ஆங்கிலம் மற்றும் ஆப்ரிக்கான்ஸ் மொழிகளில் மட்டுமே படிக்க வேண்டும்’ என்றது. பனிரெண்டே வயதான பீட்டர்சன், இந்த விஷயத்துக்காக சாலையில் பல மாணவர்களோடு அமைதியாக நின்று போராடினான். அப்போது, திடீர் என வெடிச் சத்தம்… பொத்தென்று விழுந்தான் பீட்டர்சன். ஆம்! அவனை ராணுவ குண்டு துளைத்தது. இன்னொரு சிறுவன், பீட்டர்சனைக் காப்பாற்ற தூக்கிக்கொண்டு ஓடினான். அந்தப் புகைப்படக் காட்சி, போராட்டத் துக்கான சின்னமாக மாறியது. ‘அன்று அவன் உடம்பில் இருந்து சத்தம் இல்லாமல் பிரிந்த மூச்சுக் காற்றுதான், இன்று எங்களுக்கு சுதந்திரக் காற்றாக மாறி இருக்கிறது’. என்கிறார்கள் தென் ஆப்பிரிக்கர்கள்!


அலெக்ஸாண்ட்ரா ஸ்காட்: அந்தச் சுட்டிப் பெண்ணால் ஓடி ஆடி விளையாட முடியாது. மற்றவர்களின் உதவி இல்லாமல்  எந்தச் செயலையும் செய்ய முடியாது. காரணம்… ‘Neurobalstoma’ என்கிற ஒரு வகையான நரம்புப் புற்றுநோய் அவளை ஒரு வயதில் தாக்கியது. அந்தச் சுட்டிக்கு எலுமிச்சை ஜூஸ் என்றால் அலாதி விருப்பம். அவளின் தாய், தந்தையிடம் எப்போதும் உற்சாகமாகப் பேசியபடியே இருக்கும் அவளுக்கு, உடம்பு முழுவதும் ஊசிகள் போடப்பட்டன. பல இடங்களில் கத்தியால் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அப்போது எல்லாம், எல்லை இல்லாத மனோ தைரியம் காட்டிய அந்தச் சுட்டிக்கு, ஒரு சிந்தனை தோன்றியது.

‘தனக்கு செலவு செய்ய பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், இதேபோல் பாதிக்கப்பட்ட எத்தனையோ குழந்தைகளுக்கு நாம் உதவ என்ன செய்யலாம்?’ என யோசித்தாள். தன் பெற்றோரை ஒரு எலுமிச்சை ஜூஸ் கடை ஆரம்பித்துத் தரச் சொன்னாள். அதில்  கிடைக்கும் வருமானம் அனைத்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுட்டி களுக்குப் பயன்படுத்தப் போவதாக  அறிவித்தாள். அதன் மூலம், ஒரு வருடத்தில் பத்து லட்சம் டாலர் பணம் திரண்டது. அதைப் பார்க்க அலெக்ஸாண்ட்ரா உயிருடன் இல்லை. எட்டு வயதில் இறந்து விட்டாள். ஆனால், அவளின் அந்த எலுமிச்சை ஜூஸ் கடையில் வரும் வருமானம் இன்றும் கேன்சரால் வாடும் சுட்டிகளுக்கு ஆதரவு தருகின்றது!


 

இக்பால் மாஷி: அந்தக் குட்டிப் பையனின் பெயர், இக்பால் மாஷி. பிறந்த சில தினங்களில்… தந்தை, குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அம்மா, வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்துவந்தார். அவரால் தன் மகனைக் காப்பாற்ற முடியாத நிலை… ஐநூறு ரூபாய்க்கு அவனை ஒரு கம்பள விரிப்புகள் தயாரிக்கும் முதலாளிக்கு விற்றுவிட்டார். அங்கே, இக்பால் தினமும் 14 மணி நேரம் வேலை பார்த்தான். எப்போதாவதுதான் சாப்பாடு. தூங்கினாலோ, சோர்ந்து போனாலோ சாட்டையால் அடிப்பார் கள். இப்படியே நான்கு வயதில் இருந்து வளர்க்கப்பட்டு வந்தான்.

 

ஒரு நாள், சிறுவர்களோடு சேர்ந்து தப்பித்து ஓடி, ஙிலிலிதி எனும் அமைப்பின் மூலம் விடுதலை பெற்றான். அப்போது, இக்பாலின் வயது பனிரெண்டு. ஆனால், ஆறு வயது சிறுவன் போலவே காட்சி அளித்தான். அப்படி என்றால், அவனுக்கு நடந்த கொடுமைகளை ஊகித்துக் கொள்ளுங்கள்.

அவன் உலகம் முழுக்க சுற்றினான். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ஆதரவு திரட்டினான். கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில், இக்பால் முயற்சி யால் பாகிஸ்தானில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3000. அவன் பேசிய நாட்டில் எல்லாம் மக்கள் குவிந்தார்கள். அவனின் பிரபலமான வாசகம், ‘குண்டுகளால் எங்கள் கனவைச் சாகடிக்க முடியாது’

கடைசியில் இக்பால், தன் 13-வது வயதில் துப்பாக்கிக் குண்டுக்கே பலியானான். ஆனாலும், அவனின் கனவு அழியவில்லை. இக்பாலுக்கு வழங்கப்பட்ட ‘ரீபோக் மனித உரிமைகள் விருது’ மற்றும் ‘உலக உரிமைக்கான குழந்தைகள் விருது’ ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட பணம் எல்லாம்… இன்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்காகப் பயன்படுகிறது.