கொரோனாவை எதிர்கொள்ள வரலாற்றிலிருந்து சில பாடங்கள் – முனைவர் ஸ்ரீநாத் ராகவன்


நான் இன்றைக்கு இந்தியா தன்னுடைய வரலாற்றில் இருந்து கொரோனா வைரஸ் கொள்ளை நோயை எப்படி எதிர்கொள்வது எனப் பாடம் படிக்கலாம் என்று உரையாற்ற இருக்கிறேன். இந்தியா பேரிடர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. இந்நோயை அரிதான ஒன்று, நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் ஒன்று என்றெல்லாம் வர்ணிப்பதை கண்டோம். இந்த நோயை பதினான்காம் நூற்றாண்டின் கருப்பு மரணங்கள், ஸ்பானிஷ் ப்ளூ, முதலாம் உலகப்போருக்கு அடுத்து தாக்கிய இன்ப்ளூயன்சா நோய்த் தொற்று ஆகியவற்றோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவும் 1918-19 ஆண்டுகாலத்தில் பாதிக்கப்பட்டது.

எனினும், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் இருந்து எளிமையான படிப்பினைகளை எடுத்துக் கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எங்களுடைய வரலாற்று ஆய்வு முறைகள், இரு வேறு நிகழ்வுகளை ஒப்பிடும் போது அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகின்றன. இந்த எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு, கடந்த காலங்களில் இந்தியா இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள், தேசிய அவசரநிலைகளை எதிர்கொண்ட விதத்தில் இருந்து பாடங்கள் படிக்க இயலும்.

நான் குறிப்பாக மூன்று வெவ்வேறு முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கவனப்படுத்த உள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், இவற்றில் இருந்து நாம் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற முடிகிறது. முதலாவதாக 1896-ல் இந்தியாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பிளேக் நோய் அடுத்த இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்ததைப்பற்றிப் பேசுவோம். அதற்கடுத்து 1918-19 காலத்தில் நிகழ்ந்த இன்ப்ளூயன்சா கொள்ளை நோய், இறுதியாக இரண்டாம் உலகப்போர் காலத்தை இந்தியா அணுகிய விதம், பல்வேறு விஷயங்களை அணிதிரட்டிய பாங்கு என்று பயணிப்போம்.

(புகைப்பட நன்றி: விகடன்)

முதலாவதாகப் பிளேக் நோயை எடுத்துக் கொள்வோம். இந்நோய் 1896 கடல் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இரண்டாண்டுகள் கழித்து, இந்நோயின் வீரியத்தைப் பிரிட்டீஷ் அரசாங்கம் உலகெங்கும் பரவியிருந்த தன்னுடைய வியாபாரத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்து கொண்டது. இந்தியாவின் பம்பாய் நகரங்களில் இருந்து கல்கத்தா, கராச்சி என்று பிளேக் நோய் படிப்படியாகப் பரவ ஆரம்பித்தது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அது பல்வேறு சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என்று கிளை பரப்பிக் கொண்டே சென்றது. 1901-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் கணக்குப்படி இரண்டரை லட்சம் மக்கள் இந்நோயால் மடிந்து போயிருந்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் பிளேக் நோயால் இறந்தார்கள். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பிளே காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டிருந்தது.

இந்தத் தொற்றுநோயின் வேகத்தைக் கண்டு திகைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் நோய் பரவ ஆரம்பித்த இரண்டாம் ஆண்டில் இருந்தே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. நோயாளிகள், கப்பல்கள், தொடர்வண்டிகளைச் சோதிப்பது, சிறைப்பிடிப்பது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளேக் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள். வீடுகள், பொதுச் சொத்துக்களைப் பிளேக் பாதிப்புக்கு ஆளான போது அழித்தார்கள். எல்லா வகையான யாத்திரைகள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாகக் கூடுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய கடுமையான, தீவிரமான நடவடிக்கைகள் இந்திய மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பின. குறிப்பாகப் பத்திரிகைகள் அரசின் போக்கை கடுமையாகச் சாடி எழுதின.

கட்டாயப்படுத்தித் தனிமைப்படுத்துவது, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பது, இன்னபிற தடுப்பு நடவடிக்கைகளை தேசிய தலைவர் திலகர் கண்டித்தார். புனேவில் இருந்து வெளிவந்த அவரின் கேசரி இதழில் அரசின் போக்கு விமர்சிக்கப்பட்டது. திலகர் உள்ளிட்ட தலைவர்கள் பிளேக் நோயை அரசு அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதேவேளையில், சர்வாதிகாரப்போக்கோடு, தான்தோன்றித்தனமாக எடுக்கப்படும் முடிவுகள் மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தி விடும் என்று கருதினார்கள். அவர்களின் அச்சம் சரியென்பதை நிறுவும் விதமாக நோய் ஏற்பட்ட 1896-ல் இருந்து அடுத்தடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவமனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. பிளேக் நோய்க்காக மக்களைப் பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள், கல்கத்தா, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. பிளேக் நோய் குறித்துப் பலதரப்பட்ட வதந்திகள் உலவ ஆரம்பித்தன. அரசின் அடக்குமுறையும், இந்த வதந்திகளும் கைகோர்த்துக் கொண்டன.

பிரிட்டீஷ் அரசாங்கம் பிளேக் நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதம் அரசாங்க அதிகாரம், பலம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி ஆகியவற்றின் போதாமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு வழியாகப் பிரிட்டிஷ் அரசு மக்களுக்குப் பெரும் இன்னல்களைத் தரும் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளை எடுக்கும் போது உள்ளூர் தலைவர்களின் உதவியை நாடினார்கள். அவர்களின் ஒத்துழைப்பு மக்களுக்கு இடரைத் தரும் நடவடிக்கைகளை அமல்படுத்தி அதன்மூலம் பெருமளவில் பிளேக் நோயை எதிர்க்க உதவியது.

நாம் பார்க்க இருப்பது 1918-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய இன்ப்ளூயன்சா கொள்ளை நோய். இந்தக் கொள்ளை நோய் தான் பல்வேறு வகைகளில் தற்போதைய COVID-19 நோய்ப் பரவலோடு ஒப்பிடத்தக்கது. இரண்டு தொற்றுகளும் உலகம் முழுக்கப் பரவின என்பதோடு இரண்டுமே ப்ளூ வகை நோய்த்தொற்றாகும். மேற்சொன்ன இன்ப்ளூயன்சா காய்ச்சலால் உலகம் முழுக்க ஐந்து கோடி மக்கள் இறந்தார்கள். இந்தியாவின் 1921 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இதில் 1.2 -1.3 கோடி மக்கள் இந்தியாவில் இறந்து போனார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் மரணங்களின் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள் தொகை ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் ஒரு கோடியே எழுபது லட்சம் முதல் 1 கோடியே எண்பது லட்சம் மக்கள் இந்தியாவில் மட்டும் ப்ளூ கொள்ளைநோயால் இறந்து போனார்கள் என்கிறது. அதாவது உலகத்தில் நிகழ்ந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டது.

இந்தக் கொள்ளை நோய் இந்தியாவை என்ன செய்தது என்பது குறித்துக் காத்திரமான வரலாற்று ஆய்வுக்காக இப்பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து நாம் பெறுவதற்குப் பல்வேறு பாடங்கள் உள்ளன என்றாலும் நான் ஒன்றே ஒன்றை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடம் போதுமான தரவுகள் இருக்கின்றன. இந்த நோய் எப்படி வெவ்வேறு பகுதிகள், தரப்பினரை வெவ்வேறு விதமாகப் பாதித்தது என்பதைக் காண்போம். முதல் உலகப்போரில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இறந்து போனவர்களை விட அதிகமாக 1.7-1.8 கோடி மக்கள் இந்நோயால் இந்தியாவில் இறந்து போனார்கள். இதில் பெரும்பாலான மரணங்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, மத்திய பகுதிகளில் நிகழ்ந்தன. அதிலும், இன்னும் நுணுகி பார்த்தால் உள்ளூர் அளவிலும் நோயின் தாக்கம் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தது.

உத்திர பிரதேசம் அப்போது ஐக்கிய மாகாணங்கள் என்று அறியப்பட்டிருந்தது. இப்பகுதியில் ஆயிரத்துக்கு இருபது பேர் நோயால் பீடிக்கப்பாட்டார்கள். ஆக்ராவில் மட்டும் பத்திற்கு ஏழு பேர் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானார்கள். வயதை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால் பம்பாய் மாகாணத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் இருபது முதல் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் (42%). கரோனா நோய்த்தொற்று வயதானவர்களிடம் அதிகம் காணப்படுவதில் இருந்து இது மாறுபட்டு நிற்கிறது. அன்றைய ப்ளூ தொற்றில் பம்பாய் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 20% மட்டுமே. பொதுவாக இன்ப்ளூயன்சா நோயால் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படும் போது, ஏன் இந்தத் தடவை மட்டும் இளையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு விடைதர முடியாமல் ஆய்வாளர்கள் இன்றுவரை திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நோயின் தாக்கம் பாலின அடிப்படையிலும் மாறுபட்டது. பம்பாய் மாகாணத்தில் அதிகமான இறப்புகள் நிகழ்ந்த இருபது -நாற்பது வயதினரில் ஆண்களை விடப் பெண்களின் மரண அளவு 12-14% கூடுதலாக இருந்தது. கொள்ளை நோய்க்காலங்களில் கூடப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத் தலைப்பட்டதோடு, குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் கூடுதலாக இறந்து போனார்கள். வர்க்க, சாதி அடிப்படையிலும் மரண அளவுகள் மாறுபட்டன. ஏழைகளும், கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்களும் அதிகளவில் இறந்து போனார்கள். அவர்களின் வாழிடங்கள் போதுமான சுகாதாரம் இன்றி இருந்தன என்பதோடு அவர்கள் சிறிய இடத்திற்குள் பல பேர் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையில் இருந்தார்கள். பலர் திறந்தவெளியில் தூங்க வேண்டிய அளவுக்கு வறுமை ஆட்டிப்படைத்தது. அவர்களிடையே மனித தொடர்பு அதிகமாக இருந்தது நோயை வேகமாகப் பரப்பியது.

இது போதாது என்று பம்பாய் மாகாணத்தில் ப்ளூ நோயோடு பஞ்சமும் கைகோர்த்துக் கொண்டது. கொள்ளை நோயால் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. தொழிலாளர் தட்டுப்பாட்டால் உணவு உற்பத்தியானது 1917-ஐ ஒப்பிடும் போது அடுத்தாண்டு இருபது சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பம்பாய் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பஞ்சம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்க வேண்டியிருந்தது. இதனால் உணவுத் தட்டுப்பாட்டோடு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி மேற்சொன்ன மரணங்களுக்கு வழிவகுத்தது. இந்நோயை போலவே கொரோனா வைரஸ் கொள்ளைநோயின் தாக்கமும் பல தரப்பட்ட மக்களிடையே வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனைக் கணக்கில் கொண்டு அரசாங்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இறுதியாக, இன்னொரு நோய்த்தொற்று/கொள்ளை நோய் குறித்து நான் பேசப்போவதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்துக்குச் செல்ல இருக்கிறோம். கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் போரோடு உருவகப்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராகப் போரில் இருக்கும் நாம் மக்களை, நம்முடைய ஆற்றல் வளங்களைத் திரட்டி அதற்கு எதிராகப் போரிட வேண்டும் என்று பேசப்படுகிறது.

இந்தியா இரண்டாம் உலகப்போரின் போது எப்படிப் பல தளங்களில் அணி திரட்டியது என்பது நமக்கு வழிகாட்டியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. இடர் சூழ்ந்த காலத்தில் அப்போதைய அரசு இந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்களோடு கைகோர்த்துக் கொண்டு இயங்கியது. எப்படி அரசு அணிதிட்டியது என்பதற்கு மோசமான பக்கமும் உண்டு. அது ஒரு புறம் என்றால், ஜப்பானுடன் போர் வலுத்த 1942 ஐ ஒட்டிய காலத்தில் இந்திய அரசு அமைப்புரீதியாகப் பல்வேறு புதுமைகளைப் புரிந்தது. பல்வேறு கமிட்டிகள், குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் சில அறிவுரை வழங்குவதாக இருந்தன. வேறு சில அதிகாரமிக்கவையாகவும் திகழ்ந்தன. இந்தக் குழுக்களில் வர்த்தகத் தலைவர்கள், குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், பல்துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தக் குழுக்களில் இடம் பிடித்தார்கள். இந்தக் கமிட்டிகள், குழுக்கள் அரசாங்கத்தின் வெவ்வேறு உறுப்புகளோடு இணைந்து இயங்கின. இந்த அரசாங்க உறுப்புகள் போர்க்காலத்தில் இந்திய பொருளாதாரத்தைத் துடிப்போடும்,முனைப்பாகவும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.

குறிப்பாக, இன்றைக்குக் கிட்டத்தட்ட களத்தில் தென்படாத ஒரு முயற்சி அப்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகப்போர் துவங்கிய இரண்டு ஆண்டுகள் வரை கூட இந்தியாவிடம் மெஷின் கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை. அதற்குமுன்பு வரை எல்லா மெஷின் கருவிகளையும் வெளியில் இருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம், உலகப்போர் வேகமெடுத்த காலத்தில் அரசு வெவ்வேறு குழுக்கள், கமிட்டிகளோடு சேர்ந்து இயங்கி ஐந்து நிறுவனங்களை மெஷின் கருவிகள் தயாரிக்கக் கண்டறிந்தது. அவற்றிற்கு நிதியுதவி, தர வழிகாட்டுதல், விலை நிர்ணயம் ஆகியவற்றில் வழிகாட்டப்பட்டது. மேலும், அவற்றிடம் இருந்து அரசு கருவிகளைக் கொள்முதல் செய்யும் என்றும் உறுதி தரப்பட்டது.

எண்ணி பதினான்கே மாதங்களில் 1942-43 காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெஷின் கருவிகள் உற்பத்தியில் இந்தியாவில் ஈடுபடத் துவங்கியிருந்தன. இது போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் அதற்கடுத்த காலத்திலும் இந்திய தொழில் நிறுவனங்கள், தொழில்மயமாக்கலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், போர்க்காலத்தில் அரசு எப்படிப் போக்குவரத்தை முறையாக ஒருங்கிணைத்து அத்தியாவசிய சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்தது என்பதும் நம்மை ஈர்க்கிற ஒன்று. பல்வேறு நீர்வழி போக்குவரத்துகள் ஏற்படுத்தப்பட்டன. சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தனியார்வசம் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்க முயற்சிகள் தனியாரோடு ஒருங்கிணைந்து முனைப்பாகச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் இங்கிருந்து பெற இயலும்.

இப்போது உலகப்போரின் எச்சரிக்கையூட்டும் பக்கத்திற்குச் செல்வோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வங்கத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டதைப் பலரும் அறிவோம். அதிகம் அறியப்படாத இன்னொரு பஞ்சம் திருவிதாங்கூர் பகுதியில் ஏற்பட்டது. அன்றும், இன்றும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பெருமளவில் இடம்பெயர்கிற சூழலில் நமக்கான படிப்பினைகள் இப்பஞ்சங்களில் பொதிந்து இருக்கின்றன. இந்த இரண்டு பஞ்சங்களிலும் உணவுத் தட்டுப்பாடு என்பது பஞ்சத்திற்கு முதன்மையான காரணம் அல்ல. உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் பல்வேறு விநியோக சங்கிலிகள் அறுந்து போயின என்பது உண்மை. ஆனால், அடிப்படையான பிரச்சனை இந்திய ஏழைகளின் வாங்கும் திறன் பெருமளவில் வீழ்ந்தது என்பதிலேயே இருந்தது. அதுவும் போர்க்காலத்தில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்த பின்னணியில் இதனைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

நாம் இன்று வேறுபட்ட சூழலில் இருக்கிறோம். உலகப்போர் காலத்தில் மக்களைத்திரட்டிபோர் புரிய முயன்றது அரசு. இப்போது மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வைத்து அதன்மூலம் நோய் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால், ஏழைகளின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது, குறையும், வங்க, திருவிதாங்கூர் பஞ்சங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது தான். போர், பேரிடர் காலத்து நடவடிக்கைகள், அணிதிரட்டல்களால் ஏழை எளியவர்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும். அத்தகைய சூழலில் அவர்களின் வாங்கும் திறனை பேணிப்பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொல்வதைப் போல அவர்களுக்கு உரிய கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இவற்றின் மூலமே இந்தப் பேரிடரில் இருந்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் நாம் வெளியேற இயலும்.

வரலாற்றாசிரியர் A.J.P. டெய்லர் வரலாற்றில் இருந்து நாம் எப்படிப் புதிதாகத் தவறுகள் செய்யலாம் என்று மட்டுமே கற்றுக்கொள்ள இயலும் என்று சொன்னார். இந்தளவிற்கு வரலாற்றை அவநம்பிக்கையோடு அணுக வேண்டியதில்லை. வரலாற்றில் இருந்து அதுவும் குறிப்பாக இந்தியா வரலாற்றில் இருந்து நல்ல, மோசமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள இயலும். இத்தகைய சவாலான காலங்களில் எப்படி அரசின் கொள்கைகள், செயல்முடிவுகள் எச்சரிக்கையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் வரலாறு திகழக்கூடும்.

வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நேரு காலத்து இந்தியா, வங்கப்போர், இரண்டாம் உலகப்போரின் வரலாறு என அவரின் ஆய்வுகள் பரந்துபட்டவை. இந்த உரை Carnegie Endowment க்காக நிகழ்த்தப்பட்டது.

புகைப்பட நன்றி: தி இந்து

தமிழில்: பூ.கொ.சரவணன்

கொரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள…


என்னுடைய ஆசிரியர் மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்கள் இல்லையென்கிற எண்ணம் வாட்டுகிறது. அவருடைய வகுப்புகளில் நான் நேரடியாகப் பயிலவில்லை என்றாலும், பயிற்சி மருத்துவர் காலத்திலிருந்து அவரோடு நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய வீட்டிற்குச் சென்று காரசாரமாக விவாதிப்பது வழக்கம். மதியம் சூடான அறுசுவை உணவு எல்லையற்ற அன்போடு மேடத்தால் பரிமாறப்படுகையில் கதகதப்புக் கவிந்திருப்பதாக உணர்வேன்.

சி.என்.டியிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கவனம் செலுத்தி படிப்பது, கற்றதை மனங்கொள்ளும் வகையில் கற்பிப்பது, நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, ஆகச்சிறந்த பராமரிப்பைத் தருவது எனப்பல. அவர் தவறெனக் கருதிய அணு ஆயுதம், அதிகார மையங்கள் என அனைத்தையும் தொடர்ந்து எதிர்த்து இயங்கினார். மேலும் உலகச் சுகாதார நிறுவனம் காசநோய்க்கு அறிவுறுத்திய DOT சிகிச்சை முறையையும் எதிர்த்தார். அவரின் இத்தகைய போராட்டங்களில் நானும் தோள் கொடுத்திருக்கிறேன். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்போடு ஒதுக்கி, அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்ட காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ளப் பெரும் மையமொன்றை இந்தியாவில் உருவாக்கினார். ஒவ்வொரு ஹெச்ஐவி நோயாளியையும் அரவணைத்து, ஆறுதல்படுத்துவார். அவர் அடிப்படையில் ஹெச்ஐவி நிபுணர் கிடையாது. ஹெச்ஐவியில் தேர்ச்சிமிக்க “சிறப்பு மருத்துவர்கள்” நோயாளிகளை வெறுத்தொதுக்கிய போது, தானே முயன்று ஹெச்ஐவி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். அவர் நோயாளிகளைப் பரிசோதித்து, நோயை அறியும் பாங்கின் கச்சிதத்தை நான் இன்னும் எட்டவில்லை.

நான் திசைமாறி எதைஎதையோ பேசுகிறேன். மிகச்சிறந்த மருத்துவ மாணவராக அவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் மேற்படிப்புக்குத் தேர்வு செய்திருக்கலாம் (அப்போது பலரும் இருதயவியல் மருத்துவராக முண்டியடித்தார்கள்). ஆனால், இவரோ பல லட்சம் மக்களின் உயிர் குடித்துக்கொண்டிருந்த காசநோயினை எதிர்த்துப் போராட முடிவெடுத்தார். அப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் வண்ணம் நுரையீரல் மருத்துவம் பயின்றார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் பணியாற்றப் போயிருக்கலாம். அவர் இந்தியாவிற்குத் திரும்ப வந்து, அரசு மருத்துவராக இயங்கினார்.

அவருக்கே காசநோய் ஏற்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்தது. ஒரு முறை கடுமையான காசநோய் தாக்குதலால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். இப்படி அவருக்குக் காசநோய் வருவதைக் குறித்து அக்கறையோடு உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டினேன். தான் ஒப்புக்கொடுத்துக் கொண்ட சேவையில் இப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்குமென நன்றாகத்தெரியும் என ஒன்றும் நடக்காததைப் போலப் பேசினார். அவர் இத்தனைக்கும் பிறகும், தன் நோயாளிகளின் மீதான அக்கறையை விடுத்ததே இல்லை. அவர் மீண்டெழுந்து ஏழை காசநோயாளிகள்/ஹெச்ஐவி நோயாளிகளை அதே வேகத்தோடு கவனித்துக்கொண்டார். நோய்த்தொற்றுகள் அவரின் ஊக்கத்தைக் குலைக்க இயலவில்லை.

நான் ஏராளமான இளைய சி.என்.தெய்வநாயகங்களைக் காண்கிறேன். பெரும் தீரம், உத்வேகத்தோடு அவர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுகிறார்கள். தங்களிடம் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுப் பெண் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கிறார்கள். இத்தனை இளைய சி.என்.டிக்களுக்கும் தலைவணங்குகிறேன். நாம் துவளாமல் போராடுவோம். உங்களின் பணியே நம் பெருஞ்சொத்து. இந்த உலகின் அத்தனை புதிய சி.என்.தெய்வநாயகங்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துகள். – மருத்துவர். அமலோற்பவநாதன் ஜோசப்

முதன்மைப் பதிவு: https://www.facebook.com/1486394836/posts/10216832061182282/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

கொரோனா வைரஸ் குறித்து அச்சமா?


கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி-பதில்கள் : ஜாக்வின் சாம் பால், மூத்த உறைவிட மருத்துவர், சி.எம்.சி., வேலூர்

1. கொரோனா வைரஸ் எந்தளவிற்கு உயிர்கொல்லி நோய்?
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 3% பேர் இறக்கிறார்கள். எனினும், கரோனாவால் பாதிக்கப்படும் முதியோர்களில் இந்த மரண விகிதம் 15% வரை உள்ளது.

2.எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவும்?
சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூன்று பேருக்கு நோய்த்தொற்றை பரப்புகிறார். எனினும், கொரோனா வைரஸ் அதி விரைவாக பல்கிப் பெருகுவதால், கொரோனா வைரஸ் நம்மை தொற்றியிருக்கிறது என்று தெரிவதற்குள் பலருக்கும் நோயை பரப்பி இருப்போம்.

3. மேலே சொன்னதை எல்லாம் பார்த்தால், கொரோனா ஒன்றும் அத்தனை மோசமான வைரஸ் போல தெரியவில்லையே?

நம் நாட்டில் குறிப்பிட்ட அளவு மருத்துவ வசதிகளும், சுகாதார வளங்களும் மட்டுமே உள்ளன. இதனை நம்பியே பல கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்முடைய மருத்துவமனைகளை நோயாளிகளால் நிரப்பிக் கொண்டிருந்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடிவிடும்.

4. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்னென்ன?
*காய்ச்சல்
*இருமல்/ஜலதோஷம்
*மூச்சு விட திணறுதல்
*அசதி
*அரிதாக வயிற்றுப்போக்கு

5. மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள அனைவரும் மருத்துவனைக்கு ஓட வேண்டுமா?

இல்லை. கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் போய் நின்றால் எளிதாக நோய்த் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ள முதியோர், ஏழைகள், நோய் எதிர்ப்பு சக்தியற்றோர் முதலியோருக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவிவிடும்.

6. பின் யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

கீழ்க்கண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லலாம்:
*மூச்சு விட முடியாதவர்கள்
*நெஞ்சு வலி உள்ளவர்கள்
*கடும் சுரம் அடிப்பவர்கள்
*அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்
*நெடுங்காலமாக இதய/சிறுநீரக/நுரையீரல்/கல்லீரல் நோயால் அவதிப்படுபவர்கள்

7. கொரோனாவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

*கைகளை நன்றாக கழுவ வேண்டும். பிற நபர்களுக்கு அருகே போவதற்கு முன்போ, அவர்களை தொட நேர்ந்ததற்கு பின்போ கண்டிப்பாக முறையாக கைகளை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை தேய்த்து கழுவவும்.
* ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளி இருக்கட்டும்.
* தும்மலோ, இருமலோ வந்தால் உங்கள் தோள்பட்டை அல்லது முழங்கையில் இருமுங்கள். இது உங்களுக்கு வசதியாக இல்லையென்றால் டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.

நாம் பீதியடைய வேண்டுமா? இல்லை.
நாம் கவனமாக இருக்க வேண்டுமா? மிக மிக கவனமாக இருந்தே ஆகவேண்டும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

‘நீங்கள் வீட்டிற்குள் படம் பார்த்துக் கொண்டிருந்தால், உலகத்தைக் கொரோனாவிடம் இருந்து காப்பாற்ற முடியும்’


சிகாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்கள் துறையில் இணைப்பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவர் எமிலி லாங்டன் ‘ஏன் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், ஊரடங்கு உத்தரவை ஏன் அனைவரும் பின்பற்ற வேண்டும்’ என்பதைப் பற்றி எழுச்சிமிகு உரையொன்றை ஆற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம்:

அனைவருக்கும் வணக்கம்.

நம் ஊரிலும், உலகம் முழுக்கவும் பெரும்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும், ஆதரவையும் உரித்தாக்குகிறேன். இத்தகைய கொள்ளை நோய் வைரஸின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருக்க முயன்றிருக்கிறோம். எனினும், நம்மை புத்தம் புதிய வைரஸ் ஒன்று முற்றுகையிட்டு இருக்கிறது. இதனைப்பற்றி நமக்குப் பெரிதாக எதுவுமே தெரியாது. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள நம்மிடம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. ஒவ்வொரு நாளும் தடுப்பு நடவடிக்கை பற்றிய வழிகாட்டுதல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு வாய்ப்பு என்பதே இங்கே இல்லவே இல்லை.
…..
இந்த வைரஸ் ஈவிரக்கமற்றது. அது உங்களைத் தாக்கியிருக்கிறது என்று தெரிவதற்குள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கிறது. சாதாரணச் சளி, காய்ச்சல் தான் என்று உங்களை அது ஏமாற்றுகிறது. நம்மில் பலருக்கு கூட ஒரு சாதாரணச் சளி, காய்ச்சலுக்கு எதற்கு இத்தனை கூப்பாடு என்று தோன்றலாம். இதற்குப் போய் ஏன் பள்ளிகளை மூடுகிறார்கள். உணவகங்களுக்குப் பூட்டு போடுகிறார்கள் என்று குழப்பமாக இருக்கலாம்.

இது போதாது என்று மிச்சம் மீதி இருக்கும் உங்களுடைய விலைமதிப்பற்ற சுதந்திரத்தையும் இந்த வைரஸ் காவு கேட்கிறது. ஆனால், உண்மையான சிக்கல் இந்த நோய்த்தாக்குதலில் இருந்து தப்பப்போகும் 80% மக்களைப்பற்றியது அல்ல. மீதமுள்ள 20% நோயாளிகள், குறிப்பாக வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்கள், பிற உடல்நலக்குறைவுகளால் அவதிப்படுபவர்கள் பற்றி நாம் பெருமளவில் கவலைப்பட வேண்டும். அவர்களுக்குக் கூடுதலாக ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், உயிர்காக்கும் சிகிச்சை தேவைப்படும்.

நம் நாட்டிலும், உலகம் முழுக்கவும் மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் பல நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், எல்லாரையும் ஒரே வேளையில் கவனித்துக் கொள்ள முடியாது. நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாவிட்டால், நம் நோயாளிகளுக்குத் தேவைப்படும் கவனிப்பை நம்மால் தர முடியாது.

Continue reading