வரிப்பணத்தில் படிப்பவர்கள் யோசிக்கலாமா?


என்னய்யா உங்க டிசைன்?

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். பிள்ளைகளை இடதுசாரிகள், போராளிகள் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள் என்று விமர்சித்த பொழுதெல்லாம் ‘அதுல என்ன இருக்கு?’ என்கிற ரீதியில் பதில்கள் இந்தியாவைக் குறைசொல்லி வந்தன. இட ஒதுக்கீட்டை முக்கியமான காரணமாக வேறு கைகாட்டினார்கள். அற்புதமான கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் நம்முடைய கல்விமுறை அடைந்த தோல்வியும் இப்படியொரு பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. அது இருக்கட்டும்.

பல கோடி மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு தேசபக்திக்குத் துரோகம் செய்யும்வகையில் காஷ்மீர் தீவிரவாதி ஒருவருக்கு ஆதரவாகக் களம்புகுந்து குழப்புகிற இவர்கள் எல்லாம் தேசபக்தர்களா என்று சான்றிதழ் கேட்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டுக்குப் போய் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்ற பலரை உங்களின் அடையாளமாக, முன்மாதிரியாக நிறுத்திய பொழுதெல்லாம் இந்தத் தேசபக்தி கருமம் எங்கே போய்த் தொலைந்தது? மகத்தான சிந்தனைகொண்ட, அறிவுப்புலத்தில் சிறந்த பல்வேறு எழுத்துக்கள், ஆய்வுகள், அறிவுஜீவிகள் JNU New Delhi-ல் இருந்தே எழுந்திருக்கிறார்கள். மக்கள் நலனுக்கான வெவ்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்குகொண்ட முதுகு எலும்புள்ள பல்கலைக்கழகம் அது. அங்கே இடதுசாரிகள் உண்டு என்பது உண்மை என்றாலும், தாராளவாதிகள், திறந்த மனதோடு சிந்திக்கும் எண்ணற்ற சிந்தனையாளர்களும் மேலெழுந்து வந்திருக்கிறார்கள். வருவார்கள்.

AFSPA சட்டத்தைக் கொண்டும், துப்பாக்கிகளைக் கொண்டும் காஷ்மீரை எதிர்கொண்டிருக்கும் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றா இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆசைப்பட்டிருப்பார்கள்? அப்சல் குருவை தூக்கில் இட்டது தவறு என்கிறவர்கள் தானே தேசத்துரோகிகள். அதைத்தான் ஆளும் பாஜக அரசின் கூட்டாளியான P.D.P. கட்சியும் சொல்கிறது? அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் யார்? பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷம் எழுப்புவதை ஏற்றுக்கொள்ளவே தேவையில்லை. ஆனால், நூறு பேர் போடும் கோஷத்தில் சுக்குநூறாக உடைந்து போகிற அளவுக்கு இந்திய தேசியம் வலிமையற்றதா என்ன?

உங்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு இப்படிச் செய்கிறார்களே. இதுவா தேசபக்தி எனக் கேட்கிற இதே மெட்ரோநகரவாசிகள் நாற்பது சதவிகிதம் என்கிற குறைவான அளவுக்குத் தேர்தல்களில் ஓட்டுப்போடுபவர்கள். உங்கள் வரிப்பணம் என்பது ஒன்றும் நீங்கள் யாருக்கோ போடும் பிச்சையில்லை. படிக்கிற நல்ல குடிமகன்களுக்கு மேலும் ஊக்கமளிப்பது உங்கள் வரிப்பணத்தைக் கொண்டு செய்யப்படும் ஒரு மகத்தான பணி. உங்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கிற சிந்தனை அற்றவர்களைத் தான் உருவாக்க வேண்டும் என்று கவலை கொள்ளாதீர்கள். எண்ணற்ற இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ‘ஐயோ! யாருக்குச் சமூகப்பொறுப்பு இருக்கு?’ என்று எப்பொழுதோ கதறி அரசியலை, சமூகத்தை ‘நூறு எழுச்சி மிகுந்த இளைஞர்கள’ திருத்த வேண்டும் என்று நரம்பு புடைத்தவர்கள் எங்கே?

உங்கள் வரிப்பணத்தில் தான் சாலைகள் போடப்படுகிறது. சட்ட, ஒழுங்கு காக்கப்படுகிறது. எல்லைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. அடிப்படை வசதிகள் ஓரளவுக்காவது கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. JNU பல்கலைக்குத் தரப்படும் வரிப்பணம் தேசபக்திக்கு பயன்படவில்லை என்று கதறும் நீங்கள் ஒரு லட்சம் கோடிக்கு மேலே வாராக்கடன்கள் இருப்பதற்குக் காரணமானவர்களை என்ன செய்வீர்கள்? சவுகரியமாக மக்களின் வரிப்பணத்தை நீங்கள் போற்றுகிற மகத்தான தலைவர்கள் அள்ளிக்கொள்கிற பொழுது உறங்கிக்கொண்டு இருப்பீர்கள் இல்லையா? அதிகாரிகள் லஞ்சத்தின் பெயரிலும், சிவப்பு நாடாக்குற்றத்தாலும் வரிப்பணத்தில் கொழிக்கிற பொழுது சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் தானே? வரிப்பணத்தில் செமையா வாழ்கிறவர்களைவிட்டுவிடலாம்.

நமக்கு ஒவ்வாத, நமக்குப் பிடித்த அரசுக்கு ஆகாத கருத்தை சொன்னால் உச்சி வெய்யிலில் ஒரு நாளில் கத்திவிட்டுப் போகக்கூடியவர்களைச் சாடலாம். காவல்துறையை விட்டு அமைதியாகப் போராடியவர்களைத் தேடிச்சிரிக்கலாம். பொருளாதாரத்தில் மேற்கைப் போல இங்கும் தாராளவாதம் வேண்டும் என்று கூவுகிறவர்கள், ஜனநாயகத்திலும் அதே தாராளவாதம் வேண்டும் என மறந்தும் கேட்காதீர்கள். ‘மக்கள் கேட்க விரும்பாதவற்றைச் சொல்வதுதான் ஜனநாயகம்.’ என்கிற வரிகள் நினைவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. கல்வியிற் சிறக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் என்னமோ உங்களின் காசில் படித்துக் கொழிக்கிறார்கள் என்று ஆணவம் கொள்ளாதீர்கள். அவர்களாவது பெரும்பாலும் இந்தியாவிலேயே இருக்கிறார்கள். எல்லாரும் ‘ஆமாம்சாமி!’ போடுவதற்கு இது ஒன்றும் உங்கள் வீடில்லை. அல்லது ஆர்.எஸ்.எஸ். சாஹா இல்லை. இது இந்தியா! ஓரமாக உட்கார்ந்து இரட்டை வேடம் வெளுக்காமல் கதறுங்கள்.

கன்னையா குமாரின் தேசத்துரோக பேச்சு!


வகர்லால் நேரு பல்கலையின் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் கன்னையா குமார், கடந்த வியாழனன்று அப்பல்கலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அடுத்த நாள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக பிரிவினைக் குற்றத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

வியாழன்று அவர் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் இது…

“காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். ஹரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத் சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரை சூட்டியுள்ளது.

எங்களுக்குத் தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை. நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாம் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும்.

நாங்கள் அண்ணல் அம்பேத்கர் மீது முழுப் பற்று வைத்திருக்கிறோம். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. இதை நாங்கள் சொல்வதன் அர்த்தம் அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவார்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித்தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்த தேசத்தின் சாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுமில்லை.

சாதியமைப்பால் ஏற்பட்ட கடும் அநீதியை சீர்செய்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசமைப்பு சட்டமும், அண்ணல் அம்பேத்கரும் பேசுகிறார்கள். அதே அண்ணல் அம்பேத்கர் தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கிறார். அவரே கருத்துரிமை குறித்தும் பேசுகிறார். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, நம்முடைய உரிமையை உயர்த்திப்பிடிக்க நாம் விரும்புகிறோம். நமக்கு எதிராகத் தங்களின் ஊடக நண்பர்களோடு இணைந்துகொண்டு ABVP பொய் பிரச்சாரத்தை நிகழ்த்தி வருகிறது.

நாம் கல்வி உதவித் தொகைக்காகப் போராடுவோம் என்று ABVP சொல்கிறது. ஸ்ம்ருதி இரானி கல்வி உதவித்தொகையை நிறுத்துவார். இவர்கள் போராடுவதாகச் சொல்வார்கள். நல்ல வேடிக்கை. இந்த அரசு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 17 சதவிகிதம் குறைத்துள்ளது.

நமக்கு விடுதிகள் கடந்த நான்கு வருடங்களாகக் கட்டப்படவில்லை. WIFI இணைப்பு தரப்படவில்லை. BHEL நிறுவனம் நம்முடைய பயணத்துக்குப் பரிசளித்த பேருந்துக்குப் பெட்ரோல் போட கூடப் பல்கலை நிர்வாகத்திடம் காசில்லை. சினிமா சூப்பர் ஸ்டார் போல,  ‘நாங்கள் விடுதிகளைக் கட்டிக் கொடுப்போம், WIFI இணைப்புத் தருவோம், உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்று ABVP-யினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

இவர்களின் உண்மையான சொரூபம்,  நாட்டின் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க அழைத்தால் அம்பலமாகி விடும். நாம் JNU மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்னைகளை எழுப்புகிறோம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன். ஆகவேதான் அவர்களின் சுப்ரமணிய சாமி, இங்கே ஜிஹாதிகள் வாழ்வதாக, நாம் வன்முறையைப் பரப்புவதாகச் சொல்கிறார்.

JNU வின் சார்பாக நான் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவர்களை நோக்கி சவால் விடுகிறேன். வன்முறையைப் பற்றி நேருக்கு நேர் விவாதம் புரிவோம். வெறிபிடித்த ABVP கோஷங்கள் குறித்துக் கேள்விகள் கேட்போம். ரத்தத்தில் திலகமிட வேண்டும் என்றும், துப்பாக்கிக் குண்டுகளில் ஆரத்தி எடுப்போம் என்றும் ஏன் கோஷம் போடுகிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்லவேண்டும். யாருடைய ரத்தம் சிந்த அவர்கள் விரும்புகிறார்கள்? ஆங்கிலேயரோடு கைகோர்த்துக் கொண்டு விடுதலைப் போராட்ட வீரர்களைச் சுட்டார்கள், ஏழைகள் பசிக்கு சோறு கேட்ட பொழுது அவர்களைத் துப்பாக்கி குண்டுகளால் மவுனமாக்கினார்கள். பசியுற்ற்வர்கள் உரிமைகளைக் கேட்ட பொழுது ஆயுதங்களால் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். முஸ்லீம்கள் மீது அவர்கள் குண்டுகள் பாய்ந்தன. பெண்கள் சம உரிமை கேட்ட பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கினார்கள்.

ஐந்து விரல்களும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறார்கள். சீதையைப் பின்பற்றிப் பெண்கள் அக்னி பரீட்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் எல்லாருக்கும் சம உரிமைகள் தருகிறது. மாணவன், தொழிலாளி, ஏழை. பணக்காரன், அம்பானி, அதானி எல்லாரும் சம உரிமை கொண்டவர்களே!. ‘பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும்’ என நாங்கள் குரல் கொடுத்தால், இந்திய கலாசாரத்தைச் சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்

நாம் சுரண்டலின் கலாசாரத்தை, சாதியின் கலாசாரத்தை, மனுநீதி, பிராமணியம் ஆகியவற்றின் கலாசாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாசாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினால், அவர்களுக்குக் கோபம் வருகிறது. அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என இருவரையும் வணங்கி, அவர்களைப் பற்றிப் பேசுவது அவர்களை உசுப்பேற்றுகிறது. மக்கள் அஸ்பஹூல்லா கான் எனும் தீரமிகுந்த விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசினால் கொதிக்கிறார்கள். இவற்றைப் பொறுக்கமுடியாமல் சதி செய்கிறார்கள். அவர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரிந்த கீழானவர்கள். என் மீது அவதூறு வழக்கு பதியும்படி அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாட்டை அடிமைப்படுத்திக் கொடுமை செய்த ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, இப்பொழுது தேசபக்தி சான்றிதழ் விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள்.

என்னுடைய அலைபேசியை நீங்கள் பாருங்கள். என் தாய், தங்கையைப் பற்றி நாக்கூசும் வசைகளை வீசுகிறார்கள். எந்தப் பாரதத்தாயை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதில் என்னுடைய தாய்க்கு இடமில்லை என்றால் உங்களின் பாரத மாதா பற்றிய கருத்தாக்கம் எனக்கு ஏற்புடையது இல்லை.

அங்கன்வாடியில் மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்னுடைய அம்மாவை இவர்கள் வசைபாடுகிறார்கள். ஏழைகளின் தாய்களை, தலித் விவசாயிகளைப் பாரதத் தாயின் அங்கமாகப் பார்க்காததை நினைத்து அவமானப்படுகிறேன். நான் இந்தத் தேசத்தின் தந்தைமாரை, தாய்மார்களை, சகோதரிகளை, ஏழை விவசாயிகளை, தலித்துகளை, பழங்குடியினரை, தொழிலாளிகளைப் போற்றுவேன். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றோ, ‘பகத் சிங் ஜிந்தாபாத்’, ‘சுகதேவ் ஜிந்தாபாத்’, ‘அஸ்பஹூல்லா கான் ஜிந்தாபாத்’ ‘பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்’ என்றோ முழங்க முடியுமா? என்று சவால் விடுகிறேன்.

அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வீரம் இருந்தால்,  அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை அவர்களும் எழுப்ப வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களில் ஜாதி முக்கியமானது. ஜாதி அமைப்பைப் பற்றிப் பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் எழுப்பினால் உங்களுக்கு இந்தத் தேசத்தின் மீது பக்தி இருக்கிறது என நான் நம்புகிறேன். இந்தத் தேசம் அப்பொழுதும் எப்பொழுதும் உங்களுடையதாக ஆகாது. ஒரு தேசம் அதன் மக்களால் ஆனது, உங்களின் தேசத்தில் ஏழைகள், பசித்த மக்கள் ஆகியோருக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒன்று தேசமே இல்லை.

நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மிக மோசமான காலத்தில் இருக்கிறோம் என்றேன். பாசிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டே வருகிறது. ஊடகமும் அதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. ஊடகம் எப்படிப் பேசவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து கதைகள் அனுப்படுகின்றன. காங்கிரஸ் எமெர்ஜென்சி காலத்தில் செய்த அதே வேலையை இப்பொழுது இவர்கள் செய்கிறார்கள்.

சில ஊடக நண்பர்கள் நம்முடைய பல்கலைக் கழகம் மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில் இயங்குவதைச் சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையே. நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: ‘எதற்காகப் பல்கலைக் கழகங்கள்?’ ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தயவு தாட்சண்யமில்லாமல் பகுப்பாய்வு செய்யப் பல்கலைக்கழகங்கள் அவசியமானவை. தங்களின் கடமையிலிருந்து பல்கலைகள் தவறினால் ஒரு தேசம் உயிர்த்திருக்காது. ஒரு தேசம் ஏழைகளுக்காக இயங்கவில்லை என்றால் அது பணக்காரர்களின் சுரண்டல், கொள்ளைக்கான வேட்டைக்காடாக மாறிவிடும்.

மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை உள்வாங்காமல் ஒரு தேசம் உருவாக முடியாது. நாம் பகத் சிங்கின், அண்ணல் அம்பேத்கரின் கனவுகளுக்கு ஆதரவாக, உறுதியாக நிற்கிறோம். சம உரிமைக்காக, அனைவரும் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஆதரவாக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளின் போராட்டத்துக்காக ரோஹித் வெமுலா உயிர்விட நேர்ந்தது. சங்கபரிவாரத்தினரிடம் நேராகச் சொல்கிறோம், ‘உங்கள் அரசால் அவமானம்!’. ரோஹித் வெமுலாவுக்கு என்னென்ன அநீதிகளைச் செய்தீர்களோ அது எதையும் JNU-வில் நீங்கள் செய்ய முடியாது. ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். நாங்கள் கருத்துரிமைக்குத் தோள் கொடுப்போம்.

பாகிஸ்தான், வங்கதேசத்தை விடுத்து மற்ற எல்லா நாட்டு ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதநேயத்தை, இந்திய மனித நேயத்தை நாங்கள் துதிக்கிறோம். நாங்கள் மனிதத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டியுள்ளோம். இதுவே நம் முன்னால் உள்ள மிகப்பெரிய பிரச்னை. சாதியத்தின் உண்மை முகத்தை, மனுவின் முகத்தை, பிராமணியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த அயோக்கியமான முகங்களைத் தோலுரிக்க வேண்டும். நாம் உண்மையான விடுதலையை அடையவேண்டும். அந்த விடுதலை அரசமைப்பு சட்டத்தின் மூலம், நாடாளுமன்றத்தின் மூலமே சாத்தியம். அதை நாம் அடைந்தே தீருவோம்.

நம்முடைய எல்லா முரண்பாடுகளைத் தாண்டி நம்முடைய கருத்துரிமையை, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, இந்தத் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க வேண்டும் நண்பர்களே என வேண்டிக் கொள்கிறேன். நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்தும் இந்தச் சக்திகளை, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் இவற்றுக்கு எதிராக அணிதிரண்டு நாம் உறுதியோடு போராடவேண்டும்.

என்னுடைய உரையை முடிக்கும் முன்னால் ஒரு இறுதி வினா. யார் இந்த கசாப்? யார் இந்த அப்சல் குரு? உடம்பை குண்டுகளால் நிறைத்துக் கொண்டு கொலைத்தொழில் புரியும் இவர்கள் யார்? இந்த கேள்விகளைப் பல்கலைகளில் எழுப்பாவிட்டால் பல்கலைகளின் இருப்பில் அர்த்தமில்லை. நீதியை, வன்முறையை நாம் வரையறுக்காவிட்டால், எப்படி வன்முறையை நாம் எதிர்கொள்வது. வன்முறை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமில்லை, தலித்துகளுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுக்கும் JNU நிர்வாகம் நிகழ்த்துவதும் வன்முறையே ஆகும். இது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையாகும்.

நீதியைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது. பிராமணியம் தலித்துகளைக் கோயில்களுக்குள் விடவில்லை. அதுவே அன்றைய நீதி. அதனை நாம் கேள்வி கேட்டோம். இன்றைக்கு ABVP, ஆர்.எஸ்.எஸ். ஆகியோரின் நீதி, சுதந்திரம் நம்மை உள்ளடக்கிய நீதி இல்லை என்பதால் அதனைக் கேள்வி கேட்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உறுதி செய்யப்படும் பொழுது நாங்கள் உங்களின் விடுதலையை ஏற்கிறோம். எல்லாருக்கும் சம உரிமை வாய்க்கும் நாளில் அவர்களின் நீதியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நண்பர்களே இது ஒரு மோசமான சூழல். JNU மாணவர் கூட்டமைப்பு எப்பொழுதும் வன்முறையை, எந்த ஒரு தீவிரவாதியையும் , எந்தத் தீவிரவாத செயலையும் , எந்த இந்தியாவுக்கு எதிரான செயலையும் ஆதரித்தது இல்லை. பெயர் தெரியாதவர்களால் எழுப்பப்பட்ட ‘பாகிஸ்தான் வாழ்க!’ என்கிற கோஷத்தை நம்முடைய மாணவர் அமைப்புக் கடுமையாகக் கண்டிக்கிறது.

நான் உங்களிடம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பரகளே. அது JNU நிர்வாகம் மற்றும் ABVP பற்றியதாகும். ABVP தற்போது எழுப்பிய கோஷங்களைக் கவனித்தீர்களா? அவர்கள் நம்மைக் ‘கம்யூனிஸ்ட் நாய்கள்’,’ அப்சல் குருவின் நாய்கள்’, ‘ஜிஹாதிகளின் பிள்ளைகள்’ என்று அழைக்கிறார்கள். நமக்கு அரசமைப்புச் சட்டம்,  குடிமகன் என்கிற உரிமையை உறுதியளித்திருக்கும்பொழுது நம்முடைய பெற்றோரை நாய்கள் என அழைப்பது நம்முடைய அரசமைப்பு சட்ட உரிமை மீதான தாக்குதல் இல்லையா? இதை ABVP – JNU நிர்வாகம் ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன்.

JNU நிர்வாகம் யாருக்காக, யாருடன் இணைந்து கொண்டு, எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று அறிய விரும்புகிறோம். முதலில் கூட்டத்துக்கு அனுமதி தந்த பல்கலை நிர்வாகம்,  நாக்பூரில் இருந்து அழைப்பு வந்ததும் அலறி அடித்துக் கொண்டு அனுமதியை ரத்துச் செய்கிறது. முதலில் உதவித்தொகை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை ரத்துச் செய்வார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., ABVP நம் நாட்டை நடத்த விரும்பும் முறையாகும்.

ABVP ஆட்களைப் பற்றி ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக நான் கவலைகொள்கிறேன். FTII- ல் கஜேந்திர சவுகானை கொண்டுவந்ததைப் போல எல்லா நிறுவனங்களிலும் தங்களின் ஆட்களைக் கொண்டு நிரப்பலாம் என்று அவர்கள் குதிக்கிறார்கள். சவுகானை போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும் என்று கனவு காண்கிறார்கள். வேலை கிடைத்ததும் இந்தத் தேசபக்தி, பாரதமாதா ஆகியவற்றை அப்படியே மறந்துவிடுவார்கள். அவர்கள் எப்பொழுதும் மதிக்காத மூவர்ணக் கொடியை பற்றி என்ன சொல்வது? இப்படியே போனால் தங்களுடைய காவிக் கொடியை கூட அவர்கள் மறக்க நேரிடும்.

எப்படிப்பட்ட தேசபக்தியை அவர்கள் விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தன்னுடைய தொழிலாளிகளிடம் ஒழுங்காக நடந்துகொள்ளாத முதலாளி, விவசாயக் கூலிகளை மரியாதையோடு நடத்தாத நிலச்சுவான்தார், அதிகச் சம்பளம் பெரும் ஊடக தலைமை அதிகாரி,  தன்னுடைய நிருபர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தைத் தருவார் என்றால் இவையெல்லாம் எப்படித் தேசபக்தி ஆகும்?

அவர்களின் தேசபக்தி இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிவுற்று விடுகிறது. அதற்குப் பிறகு சாலையில் இறங்கி வம்பு செய்வார்கள். ஒரு டஜன் பழத்தை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஏழையைக் கொள்ளையடிப்பதாகச் சொல்லி,  முப்பது ரூபாய்க்கு ஒரு டஜன் பழத்தைக் கேட்பார்கள். ‘நீங்கள்தான் உண்மையான கொள்ளையர்கள்’ என அந்த வியாபாரி சொன்னால், உடனே அந்த ஏழையைத் தேசத் துரோகி என்று அறிவித்து விடுவார்கள். வசதிகள், பணம் ஆகியவற்றோடு தேசபக்தி துவங்கி முடிந்துவிடுகிறது. உண்மையிலேயே தேசபக்திதான் இவர்களைச் செலுத்துகிறதா என்று கேட்டேன். ‘என்ன செய்வது தோழா..? ஏற்கனவே இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருக்கிற மூன்று வருடத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.

நான் அவர்களைக் கேட்கிறேன். நாளைக்குத் தொடர்வண்டியில் நீங்கள் பயணிக்கிற பொழுது, ABVP ஐ சேர்ந்த நபர்கள் மாட்டுக் கறியை யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் JNU-வை சேர்ந்தவர் எனத் தெரிந்ததும் உங்களைத் தேசத்துரோகி என்று சொல்லி வெட்டிப் போட்டால் என்னாகும்? இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா எனக் கவலையோடு கேட்கிறேன்

அந்த ஆபத்தை உணர்ந்திருப்பதால்தான் #JNUShutdown கோஷத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய பதற்றமான சூழலின் இறுதியில், தாங்கள் JNU-வில்தான் கல்வி கற்கவேண்டும் என்று உணர்கிறார்கள்.

அதனால் JNU-வின் சக தோழர்களே மார்ச்சில் தேர்தல் வருகிறது. அப்பொழுது ஓம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு ABVP ஆட்கள் ஓட்டுக் கேட்க வருவார்கள். அவர்களிடம் கேளுங்கள்: ‘நாங்கள் ஜிஹாதிகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், எங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் நீங்களும் தேசத் துரோகிகள் ஆகிவிட மாட்டீர்களா?’ எனக் கேள்வி கேளுங்கள். அப்பொழுது அவர்கள்,  ‘உங்களில் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்கள்’ என்பார்கள். பின் ஏன் இதை மீடியாவிடம் அவர்கள் சொல்லக்கூடாது என்றும், அவர்களின் துணை வேந்தர், பதிவாளரும் ஏன் அதை ஊடகங்களிடம் சொல்லவில்லை என்றும் எதிர்கேள்வி கேளுங்கள்.

அவர்களிடம் அந்தச் சில நபர்களும், தாங்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போடவில்லை எனச் சொல்வதாகவும், அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்துங்கள். அவர்கள்,  ‘ஏன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி தரப்பட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டு ஜனநயாக உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டது?’ என்றே கேட்கிறார்கள் எனத் தெரிவியுங்கள். ஒரு ஜனநாயக போராட்டம் நடைபெறுகிறது என்றால், அதில் உறுதியாக அந்தச் சிலபேர் நிற்பதாக அவர்களுக்குச் சொல்லுங்கள்.

அவர்களுக்கு இவை எதுவும், எப்பொழுதும் புரியப்போவதில்லை. ஆனால், குறுகிய கால அழைப்பில் இங்கே பெருமளவில் கூடிய நீங்கள் பிரச்னையைப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வளாகம் முழுக்கச் சென்று ABVP,  தேசத்தையும் JNU-வையும் பிளவுபடுத்துகிறது என மாணவர்களிடம் சொல்லுங்கள். அதை நடக்க விடமாட்டோம்.

ஜெய் பீம்! செவ்வணக்கம்! ”

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஷூ பாலீஷ் போடச்சொன்ன பிரபஞ்சன், ஜெயலலிதாவை போற்றிய கருணாநிதி!


கேள்விகள் என்கிற ஞாநி அவர்கள் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலை வாசித்து முடித்தேன். கமலில் துவங்கி அக்கினிபுத்திரன் வரை பதினாறு ஆளுமைகளின் பேட்டிகள் இதில் உண்டு. அசோகமித்திரன், சோ ஆகியோரிடம் இரு வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நான்கு நேர்காணல்களும் இந்நூலில் இருக்கின்றன. எண்பத்தி இரண்டில் துவங்கி இருபது வருட காலங்களில் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் என்பதால் பல்வேறு காலங்களைப் பதிவு செய்யும் ஆவணமாக நூல் தோன்றுகிறது.
 
பிறர் கவனிக்க வேண்டும் என்பதற்காக நாட்டியம் கற்க ஆரம்பித்த கமல், அதை பலரும் கவனிக்க மாட்டார்கள் என்று உணர்ந்ததும் இயக்குனராக முயற்சித்து பின்னர் நடிகராக தன்னுடைய பயணத்தைத் தொடர்கிறார். சினிமாவில் தொட்டு நடிக்க மாட்டேன், முத்தம் கொடுக்க மாட்டேன் என்பது தொழில் தர்மத்துக்கு எதிரானது என்று சொல்கிற கமல், தன்னுடைய உடம்பைக் காட்டி நடிப்பதை நியாயமே என்கிறார். ஒரு வகையான கவர்ச்சி ஆண், பெண் உடலின் மீது இருக்கிறது. இவற்றின் மீது நிறைய பிரமை இருக்கிறது. இவை உடைய எல்லாவற்றையும் காட்டுங்கள். ஒரு பெண்ணின் உடம்பை, முலைகளை காட்டுங்கள். அவள் நடந்து போவதை, ஏணியில் ஏறுவதை, ஆணைப் போல ஆபிஸ் போவதைக் காட்டுங்கள். அடுத்து அவளுக்கு மூளை இருப்பதை காட்டவேண்டும் என்கிறார் கமல்.
 
ஆத்திகர்கள் கடைசியாகக் கேட்பது, ‘சரி, நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். நாத்திக நண்பன் சொன்னான், ‘ இருந்து விட்டுப் போகட்டும். நான் அதை பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திதான். ஆனால், நாம் விளக்கு கம்பத்தை எல்லாம் கும்பிடுவதில்லை.’ என்று நண்பன் சொன்னதை சொல்கிறார்.
ரஜ்னி கோத்தாரி எனும் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் அறிஞரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்
சுவையானது. காங்கிரசில் விடுதலைக்குப் பின்னர் அதிகாரத்தை கிராமப்புற பணக்காரர்களும், நடுத்தர விவசாயிகளும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஏழைகளுக்கான அரசில்லை என்பது உணரப்பட்ட பொழுது வெறுப்பு ஓட்டுக்களை மாற்று அணிகளுக்கு வழங்கத் துவங்கியது. ஆனால், இந்திரா ஏழைகளின் காவலராக தன்னைக் காட்டிக்கொண்டு அரசியலில் பொருளாதார பார்வையை முன்னிறுத்தினார். அவர் அதை பெரும்பாலும் ஓட்டு வாங்கும் கோஷமாக மட்டுமே மாற்றியதோடு, கட்சிக்குள் தனக்கு எதிராக இருக்கும் தலைவர்கள், குழுக்களை ஒழித்துக்கட்டினார். அதிகாரம் முழுவதும் அதிகாரிகள் வசம் போய்ச்சேர்ந்தது.
 
இந்திரா அதிகாரம் செலுத்தியவர் என்பது உண்மையில் இல்லை, அவருக்கு அதிகாரம் என்பதே இல்லாமல் போனதால் தான் தொடர்ந்து அதிகாரத்தை நிறுவ அவர் முயன்றார். குண்டுராவ்கள், அந்துலேக்கள் ஆகியோரின் ஆட்சியாகவே அவரின் ஊழல் ஆட்சி பரிணமித்தது. குண்டர்களை ஒருங்கிணைப்பதையே சஞ்சய் காந்தி செய்தார். மைய அரசியலில் ஈடுபடும் இடதுசாரிகளை இந்திரா அயலுறவு கொள்கையில் ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டும், தேசிய இனங்களின் போராட்டத்தை எதிர்க்க அவர்களைத் தூண்டுவதன் மூலமும் சாதிக்கிறார் என்பதை கோத்தாரி சுட்டிக்காட்டுகிறார்.
 
மேலும், நக்சலைட் முதலிய மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதை இடதுசாரிகள் செய்யவில்லை. அமைச்சராக இல்லாத எம்பிக்கள், எம்.எல்ஏக்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களாக உள்ளார்கள். சுயாட்சியை பரவலாக்க வேண்டியது தற்போதைய தேவை என்கிறார். வன்முறை என்பது வழிமுறையாக இருக்க முடியாது, அது குறிப்பிட்ட கணத்தில் பதில் வன்முறையாக எழக்கூடும் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகிறார்.
 
சரத் ஜோஷி, சரண் சிங் ஆகியோர் சொன்ன விவசாய சிக்கல்கள் உண்மையில் அவர்களின் குரலை பிரதிபலிக்கவில்லை. விவசாயிகளின் ஆதரவை முழுமையாக பெறுவது அரசியல் அதிகாரத்தை பெற உதவும் என்றும் பரிந்துரைக்கிறார் கோத்தாரி. இந்து மதத்தின் காவலன் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு மேற்கின் சர்ச் போலவே இருக்கிறது என்று கச்சிதமாக குறிப்பிடுகிறார் கோத்தாரி. தமிழகத்தில் இந்துத்வா பல்லைக் காண்பிக்க காரணம் நடுத்தர ஜாதிகளுக்கே திராவிட இயக்கம் பயனளித்தது. அதோடு பிராமணிய எதிர்ப்பு என்பதை அதீதமாக செய்து அதை பிராமண எதிர்ப்பாக மாற்றிவிட்டார்கள்.
 
கோமல் சுவாமிநாதன் சபாக்களால் நாடகங்கள் சீரழிகின்றன என்கிற தன்னுடைய ஆனந்த விகடன் அட்டைப்பட பேட்டியால் சபாக்கள் தன்னுடைய நாடகங்களை மேடையேற்ற அனுமதி மறுத்ததை சொல்கிறார். அதேசமயம், தமிழ் அடையாளத்தில் குறைகள் இருந்தாலும் அப்படியொன்று இருப்பதை மக்களுக்கு தேவர் மகன் போன்ற முயற்சிகளின் மூலம் காட்டவேண்டும், அதை விமர்சிப்பதை செய்வது இன்னமும் சாத்தியமாகும் என்கிறார்.
 
வெறும் யாரும் வேலை தரவில்லை, தானும் வேலையை கேட்டுப் பெறும் சாமர்த்தியம் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும் அசோகமித்திரன், சாவி கணையாழியில் எழுதுவதை விடுத்தது தினமணிக் கதிரில் மட்டும் எழுதினால் வேலை தருவதாக சொன்னதை ஏற்க மறுத்ததை நினைவுகூர்கிறார். எழுத்தாளனின் அகங்காரம் தவிர்த்த எழுத்தே இருக்கவேண்டும், கதாபாத்திரமாக நான் வருவதற்கும், அகங்காரம் கொண்ட எழுத்தாக இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. க.நா.சு., தாஸ்தாவெஸ்கி முதலியோர் நான் என்பதை எழுத்தில் தவிர்த்தவர்கள். டால்ஸ்டாய், சுந்தரராமசாமி எழுத்தில் அதை தவிர்க்க முடியாதவர்கள் என்கிறார்.
கரைந்த நிழல்கள் கதையை ஐந்தாறு நாட்களில் வேறு மாதிரி நா.பாவின் அவசரத்துக்கு மாற்றி எழுதியதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறார்.
 
அலங்காரமான நடையை விடுத்து, இயல்பாக சார்பில்லாமல் எழுதுவதே தன்னுடைய பாணி என்கிறார் அசோகமித்திரன். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துக்களின் மீது கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறார். புதுமைப்பித்தனின் கிண்டல் மனிதநேயம் சார்ந்தது அல்ல. ஜெயகாந்தனிடம் பொறுமையின்மை, எல்லாவற்றையும், எல்லாவற்றைப்பற்றியும் சொல்லிவிட வேண்டும் என்கிற வேகம் இருக்கிறது. கருத்து முக்கியமாகி பாத்திர வார்ப்பு, நிகழ்ச்சி சித்தரிப்பு பின்தங்கி விடுகின்றன. அவரின் பிற்கால எழுத்துக்கள் மேலும் சிறப்புடையவையாக தனக்கு பட்டதாக அசோகமித்திரன் சொல்கிறார்.
 
சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்; உலக இலக்கியத்துக்கான நிகரான படைப்பு என்கிற அசோகமித்திரன் பிற தற்கால படைப்புகளை அப்படி ஏற்க மறுக்கிறார். காந்தி ஒரு பிற்போக்குவாதி, ஜாதியவாதி என்று சொல்பவர்கள் இருக்க அவர் எல்லோரையும் முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினார், அவரே தனக்குப் பிடித்த அரசியல்வாதி என்கிறார் அசோகமித்திரன். இங்கே இருக்கும் சாதிகள் எதோ ஒரு வகையில் இன்னொரு சாதிக்கு ஆதரவு தரும் என்கிறார் அசோகமித்திரன். ஒரு பிச்சைக்காரனை ஐம்பது பேர் போடா என்றாலும் ஒருவர் சோறு போடும் சிறப்பு மிகுந்தது நம்முடைய சமுதாயம் என்கிறார் அவர். இதை அவரின் நகைச்சுவை என்பதா இல்லை மனதரிசனம் என்பதா என்று தெரியவில்லை.
 
சிட்டி சுந்தரராஜன் திராவிட இயக்கம் தமிழ் வளர்ப்பில் மிக முக்கியமான பங்காற்றியதாக பதிவு செய்கிறார். அண்ணா, கலைஞர் ஆகியோர் நல்ல எழுத்துக்களை தந்தார்கள். மேலும், பராசக்தி படத்துக்குப் பிறகே தமிழில் உரையாடல் போக்கு மாறியது என்பதை செமினார் இதழில் பதிகிறார். ரா.பி.சேதுப்பிள்ளை, வையாப்புரிபிள்ளை முதலிய பிராமணர் அல்லாத சிறந்த தமிழறிஞர்களை மணிக்கொடி குழு கண்டுகொள்ளவில்லை என சிட்டி வாக்குமூலம் தருகிறார்.
 
புதுமைப்பித்தன் தழுவல் கதைகளை தன்னுடைய பெயரில் வெளியிட்டுக் கொண்டதில்லை. அப்படி வெளியிட்டது பதிப்பாளர்கள் தான் என்று நேர்மையாக சொல்கிறார். ஆனந்த விகடனில் இயங்கிய கல்கிக்கும், மணிக்கொடி குழுவினருக்கும் ஒத்துவராது என்பதை சொல்கிறார். அதனால் காந்திய வழியில் இயங்கிய மணிக்கொடி குழுவினர் தியாக பூமி படத்தை இருட்டடிப்பு செய்தார்கள். கல்கிக்கோ ஐம்பத்தி இரண்டாயிரம் பிரதிகள் ஆனந்த விகடன் விற்றாலும் ராஜாஜி முதலியவர்கள் மணிக்கொடியை படிப்பதும், தன்னுடைய பணிகள் கணக்கில் கொள்ளப்படாததும் வருத்தம் தந்தது.
 
கோவை ஞானி, அ.மார்க்ஸ் முதலியோர் தற்காலத்தில் தன்னை ஈர்த்த விமர்சகர்கள் என்று மனமார ஒப்புக்கொள்கிறார். தீவிரமாக வைதீகத்துக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர் போல தோன்றும் அவர் ஆலய நுழைவை எதிர்த்த காஞ்சி சங்கராச்சாரியாரை பற்றி பரமாத்மா என்கிற நூலை ஆங்கிலத்தில் எழுதியதை குறித்து கேட்கப்படுகிறது. காந்தியிடம் முப்பதில் தான் ஒரு நிறுவனத்தின் தலைவராக எதுவும் இது சார்ந்து செய்வதற்கில்லை என்று கைவிரித்தது உண்மை என்றாலும், அவரை ஒரு புனிதராக அணுகாமல் மனிதராக இந்த நூலில் அணுகியிருப்பதாக சொல்கிறார்.
 
 
சோவின் நேர்முகம் எதற்கு இரண்டு என்று தோன்றுகிற அளவுக்கு தரமற்று இருந்தன. பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது, அவர்களை யார் அடக்கி வைக்கிறார், ஆண்கள் சமையல் செய்வது தான் சமநீதியா, என்னை ஆணாதிக்கவாதி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். பெண்கள் விடுதலை பெறவேண்டும், ஆண்கள் அதை தடுக்கிறார்கள் என்பது சுத்த நான்சென்ஸ் என்று கடைந்து எடுத்த முட்டாள் போல பேசுகிறார். பாபர் மசூதி இடிப்பதைத் தூண்டிவிட்ட அத்வானியை, இந்து-முஸ்லீம் வெறுப்பை தீவிரமாக விதைத்த அவரை அவர் ரொம்ப நல்லவர், நான் சொல்லுறேன் கேட்டுக்கோங்க என்கிற பாணியில் உண்மைக்கு புறம்பாக, அயோக்கியமாக பேசுகிறார்.
சிவாஜியின் ஓவர் ஆக்டிங் கதையும், இவருக்கு தனியாக நடித்து காண்பித்ததும் இந்த நேர்முகத்தில் இருந்தே புகழ்பெற்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பந்தயம் கட்டி பத்திரிக்கை ஆரம்பித்தது, அதற்கு ஆனந்த விகடன் முழு ஆதரவு தந்தது என்று பல்வேறு கதைகளை சொல்கிறார். நாடகம் நடத்தி எந்த வருமானமும் பார்த்ததில்லை என்கிறார் சோ.
 
கலைஞர் கருணாநிதி குணா மொழிசார்ந்து முதலமைச்சராக இருந்தவர்களை நிராகரிப்பதை ஏற்க முடியாது என்று மொழி வெறிக்கு எதிராக பேசுகிறார். ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம் என்று கேட்கிற பொழுது எப்பொழுதும் இருக்கும் நடிப்புத் திறன் என்கிறார். தமிழ்வழியில் கல்லூரிப் படிப்பை முழுக்க நடத்த முயன்ற பொழுது மாணவர்கள் கடும் எதிர்ப்பை கிளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தினார்கள். காமராஜரும் அதற்கு ஆதரவு தந்தார் என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஏ.எல்.முதலியார் தலைமையில் ம.பொ.சி., குன்னக்குடி அடிகளார் ஆகியோர் கொண்ட குழு மாணவர்களின் முடிவுக்கே இதனைவிட வேண்டும் என்றதில் தமிழ் வழிக்கல்விக்கு முற்றும் போடப்பட்டது.
 
பழ நெடுமாறன் அவர்கள் இந்திய தேசியத்தில் இருந்து தமிழ் தேசியம் நோக்கிப் பயணித்த கதையை சுவைபட சொல்கிறார். இந்தித் திணிப்பு காலத்துக்கு பின்னர் அவர் அரசியலில் நுழையக்கூடும் என்று பச்சையப்பாவுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைக்கு அனுப்பினால் அங்கும் அரசியலே செய்ய நேர்ந்தது. காமராஜர் மாணவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கிறார். அவரின் ஆசியோடு கட்சியில் இணைந்தார். எம்ஜிஆர் இந்திராவுடன் சேர்ந்துகொள்ளுமாறு பழ நெடுமாறனிடம் சொன்ன பொழுது, ‘நீங்கள் ஏன் திமுகவுடன் சேரக்கூடாது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.
 
தன்னுடைய தமிழர் தேசிய இயக்கத்தின் மூலம் காவிரிக்கு நதிநீர் மன்றத்தின் மூலம் தீர்வு, பெரியார் பிரச்சனை குறித்து கவனம் ஆகியவற்றை எண்பதுகளில் ஏற்படுத்தியுள்ளார். தனி ஈழத்தை விரும்பாவிட்டாலும் ஜி.பார்த்தசாரதி அனெக்ஸ்-சி எனும் பிரிவின் மூலம் கூட்டாட்சியை கிட்டத்தட்ட கொண்டுவரும் சூழலில் பதவியை விட்டு ராஜீவால் மாற்றப்பட்டார். அதனோடு நில்லாமல் வெங்கடேஸ்வரன் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பதவியை விடுமாறு ராஜீவ் செய்தார்.
இதனை எல்லாம் நேர்மையாக சொல்லும் பழ நெடுமாறன், ராஜீவ் காந்தி கொலையில் புலிகளுக்கு கையில்லை என்று அடித்து பேசுகிறார். அதனோடு நில்லாமல் புலிகள் ஆட்சிப்பகுதியில் மரண தண்டனை இருப்பதை சொல்லிவிட்டு, தமிழகத்தில் தூக்கு தண்டனை இருக்கக்கூடாது என்று முரண்பாடாக பேசுகிறார். வங்கத்தில் தனிதேசம் கேட்டு ஃபசூல் என்பவரும், விடுதலைக்குப் பின்னர் சுஹ்ரவர்த்தியும் மொழி சார்ந்து தனி நாட்டை கேட்டிருக்கும் வரலாற்றை பதிவு செய்கிறார். அறுபத்தி ஆறு வயதில் இதய நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ராஜ்குமாரை மீட்க பல மைல்கள் நடந்தே பேச்சு வார்த்தை நடத்தியதையும் இயல்பாக சொல்கிறார். ஜனநாயகத்தின் மீதும், வன்முறையை துறந்த பாதையையுமே விரும்புவதாக சொல்கிறார்.
 
பிரபஞ்சன் அவர்கள் பதின்ம வயதில் காதல் பூண்டு ஒரு பெண்ணுக்கு கடிதம் எழுதுகிறார். அவளின் மீதான தன்னுடைய உணர்வுகளை பாதி சொல்வதற்குள் நாற்பது பக்கங்களை கடிதம் தொட்டிருக்கிறது. அப்பாவின் கையில் அது மாட்டிய பொழுது நல்லவனவற்றை பற்றி எழுது என அவர் தந்த உற்சாகம் இவரை செலுத்துகிறது., மாயகோவ்ஸ்கி போல கவிதை எழுதுவதாக தன்னை தூண்டிவிட்டவரை பற்றி நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.
 
மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பொழுது, ஷூ பாலீஷ் போட்டு ஆதிக்க ஜாதியினர் அந்த இட ஒதுக்கீடு வந்தால் தாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று போராடிய பொழுது, ‘இதுவரை ஒரே ஜாதி ஷூவுக்கு பாலீஷ் போட்டது. இப்பொழுது நீங்கள் போட்டால் என்ன? இரண்டாயிரம் வருடங்களாக அவர்கள் செய்ததை இப்பொழுது நீங்கள் செய்தால் என்ன ஷூ பாலீஷ் ஆகாதா?’ என்று சூடாக எழுதியிருக்கிறார். பங்கரப்பா காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்த பொழுது நூறு வண்டிகளில் எல்லையை அடைந்து போராடுவோம் என்ற பொழுது ராமதாசுக்கு தான் ஆதரவு தந்ததையும், பின்னர் அவரின் ஜாதி அரசியலால் அதனை விளக்கிக்கொண்டதையும் நேர்மையோடு பதிவு செய்கிறார்.
தமிழே தெரியாமல் பாலக்காட்டு பிராமணர், சிந்தி பெண் ஆகியோருக்கு மகனாக பிறந்த தன்னுடைய கதையை அஜித் இயல்பாக சொல்கிறார். கார் ரேஸ், கார்மென்ட் தொழில் என அனைத்திலும் தோல்வி அடைந்து கடன்கள் அடைக்க சினிமாவில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டிருந்ததை ஒப்புக்கொள்கிறார். அப்பா நீ ஒரு எஸ்கேப்பிஸ்ட் என உசுப்பேற்றியதால் படங்களைப் பார்த்து நடிக்க தன்னால் முடிந்தது என்கிற அஜீத் தமிழ் உச்சரிப்பை பள்ளிக்காலங்களில் கற்காமல் சினிமாவுக்காக கற்று மாறியதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டதையும் சொல்கிறார். ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் ரசிகர்கள் தங்களின் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
அன்னம் வெளியீடு
பக்கங்கள்: 216

கடவுள் தொடங்கிய இடம்- அ.முத்துலிங்கத்தின் மனிதம் நிரம்பிய உலகம்


அ.முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம் நாவலை ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுது வாசிக்கவில்லை. நூலாக வந்து வெகுநாட்கள் பரணிலேயே கிடந்தது. சிறுகதையில் அற்புதமான உணர்வுகளை, நிசப்தத்தைக் கடத்தியவர் நாவல் வடிவத்தில் கோட்டை விட்டிருப்பாரோ என்கிற அச்சமே காரணம்.

நிஷாந் எனும் ஈழத்தமிழ் இளைஞன் பதினொரு ஆண்டுகளைக் கடந்தபின்பு தன்னை அகதியாக ஏற்கும் ஒரு மண்ணை இறுதியாகக் கண்டறிவதே களம். ஐந்து கோடி அகதிகளின் வலியை பல்வேறு கதைகளின் மூலம் கடத்தி விடுகிறார் ஆசிரியர். சொல்லியதை விட, சொல்லாமல் விட்டு இடைவெளிகளை நம்மை நிரப்ப வைத்து ஆசிரியர் ஒரு தவிப்பான நிலையை நோக்குத் தள்ளுகிறார்.

மாஸ்கோ நகரத்தை நோக்கி இயக்கத்தில் சேர விரும்பியதால் அனுப்பப்படும் நாயகன் விமானம் கிளம்புவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளுடைய வசீகரம், கம்பீரம் ஆகியவை பற்றி வர்ணனைகள் ஒரு காதல் அத்தியாயமோ என்று எண்ண வைக்கிறது. அந்தப் பெண்ணை அதிகாரிகள் விசாரித்து விட்டு, தூக்கிக் கொண்டு போகையில் ‘நானில்லை, நானில்லை’ என அவள் கதறும் கணத்தில் எத்தனையோ நினைவுகள் நம்மை மோதி அதிரடிக்கின்றன. முத்துலிங்கம் அவளைப் பற்றி ஒரு வரி இப்படி எழுதுகிறார், ‘அவள் கண்களில் எத்தனை நம்பிக்கை தெரிந்தது?’

இயக்கத்தில் சேர்ந்த தன்னுடைய மாணவர்களைப் பற்றிப் பேசும் ஆசிரியர் ‘மரணத்துக்கு அஞ்சாமல் இருந்துவிட்டால் பரிணாம வளர்ச்சியே இருக்காது’ அறிவுரீதியாகச் சொல்லிவிட்டு, ‘நாங்கள் சாவுலகத்துக்குப் பயணப்படவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம். அவ்வளவுதான்’ என்கிறார் ஆழமாக.

சிங்கள பேரினவாத வன்முறையை இப்படிக் கடத்துகிறார் ஆசிரியர். ‘ரொஹான் என்கிற சிங்கள பொடியனைப் பற்றி விசாரித்ததில் அவன் பெயர் இன்னமும் பிரபலமாக இருந்தது. விசாகா பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளி மாணவியை இவன் பலாத்காரம் செய்த இடத்தில பிடிபட்டுவிட்டான்.’ கொள்ளையில் ஈடுபட்ட பத்மராசன் எனும் பாத்திரம், ராணுவ பாதுகாப்பு அமைச்சரைக் கொன்ற தமிழ்ப் பொடியன்கள் என்று அன்று நிலவிய சூழலின் சிக்கலை கண்முன் நிறுத்துகிறார். அந்த இளைஞர்கள் தப்பி விமானத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கழுத்தில் நச்சுக்குப்பி இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறது. ‘ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?’ என வாழ்வின் நம்பிக்கை தொலைத்துவிட்ட எல்லாரிடமும் கேட்கிறது ஒரு குரல்.

கிரேக்க நாடகம், பாக் லண்டனின் நாவல், மைக்ரோக்ராப்டர் பறவை என்று ஆங்காங்கே கதைகளும், தகவல்களும் கதைப்போக்கை சுவைப்படுத்துகின்றன. க்யூபா போய்ச் சேர்ந்த மாஸ்டர் ஒருவர், நோபல் பரிசைப் பெற்ற, ‘கிழவனும், கடலும்’ நாவலை இங்கேயிருந்து தான் எழுதினார். அவர் உட்கார்ந்து எழுதிய வீடு கிட்டத்தில் தான் இருக்கிறது. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கவேவில்லை.’ என ஏக்கம் ததும்ப எழுதுகிறார்.

ஒரு பதினேழு வயது தமிழ் இளைஞன் ஒருவன், அடுத்துக் கனடா போவது எப்படி எனத்தவித்துக் கொண்டிருக்கும் மாஸ்டரிடம் தன்னுடைய போர்டிங் அட்டையைத் தந்து ‘அண்ணை நீங்கள் தயங்காமல் ஏறிப்போங்கள்.’ என்கிறான். அதற்குப் பின் அவன் எப்படி வருவான் எனச்சொல்லும் வழி சுவையானது.
சந்திரா மாமி கணவனை இழந்து பறவைகளின் குரலைக் கேட்டு அகதி வாழ்க்கை சீக்கிரம் ஒரு புள்ளியை எட்டும் என நம்புகிறவர். விலங்குப் பண்ணையில் எலி நல்லதா, கெட்டதா எனப் புரியாமல் இரு பக்கமும் வாக்களிக்கும் நாய், பூனை போலத் தன்னுடைய வாழ்க்கையில் தவிப்பவர். சிக்கட்டி பாடுகிறது எனும் அவர் எல்லை தாண்டி தப்பித்துப் போகையில் விபத்தில் சிக்கி மரணத்தை எதிர்கொள்ளும் சூழலில், ‘லூன் நீர்ப்பறவை வலசை முடிந்து திரும்பிவிட்டது. இதுதான் நாள்’ என்கையில் எல்லாரும் பறவைகள் தானோ என்று சோகம் கம்முகிறது.

லாரா என்கிற ரஷ்ய பெண்ணிடம் பூண்ட காதல் வெகுசீக்கிரமே கைநழுவி போய்த் தற்கொலை எண்ணத்தில் நிற்கிறான் நிஷாந். அப்பொழுது கொலை செய்துவிட்டு துப்பாக்கியோடு அமர்ந்திருக்கும் ஒரு முதியவன் இப்படிக் கேட்கிறான், ‘கியெவ் நகரத்தில் அழகான ஒரு தேவாலயம் உள்ளது., அங்கே தொங்கும் சரவிளக்குகள் நான்கு டன் எடை கொண்டவை. அதன் அழகை ரசித்தாயா?’ எனக்கேட்கிறார். ‘நான் அகதி ஐயா! நாடில்லாதவன்’ என்று நிஷாந் சொல்கையில் ‘நாடில்லாதவன் காதலிக்கலாம் ரசிக்கக்கூடாதா? ரசிப்பதற்கு நாடு தேவை இல்லை. வியப்படைய அறிவு தேவையில்லை..’ என்று சாகத்துடிக்கும் எல்லாருக்கும் சேர்த்து வைத்துப் பேசுகிறார்.


நாவலின் உச்சமான பகுதியும், உணர்வுப்பூர்வமான தருணமும் அகல்யா எனும் நாயகி வரும் கணங்கள் தான். ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே வரும் அவளின் ஊடாகப் பெண்ணின் ஆழமான மனத்தைக் கடத்துகிறார் முத்துலிங்கம். தன்னுடைய கணவனை விட்டு வானம்பாடி பிடிக்கும் மனிதனிடம் சென்று திரும்பும் அகவ்யா எனும் பெண் கணவனை விட்டு நீங்க முடிவு செய்கிறாள். அவளின் கதை செகாவின் எழுத்தில் வருவதை ரஷ்யப்பெண்மணி ஒருவர் சொல்கிறார்.
மிருகசிருஷம் நட்சத்திரக் கூட்டம் சாட்சியாகக் காதலை உறுதிப்படுத்தும் அகல்யா, ரோமன் எழுத்துக்கள் பதித்த கடிகாரத்தை நாயகனுடன் இணைத்து வாங்கிக் காலத்தைக் காதலோடு கடக்கிறாள்.

\ வில்லைப் பற்றுவது போல என வரும் ‘வில்லக விரலின் பொருந்தி’ என்பதைப் போலத் தன்னைப் பற்றச்சொல்கிறாள்.
அவர்களுக்கிடையே நடக்கும் கலப்பை முத்துலிங்கம் வித்தியாசமான மொழிநடையில் இயந்திரத்தனமாகத் தருவதாகத் தோன்றியது. அந்த அகல்யா அகவ்யா போல ஆகும் கணத்தில் எண்ணற்ற கதைகள் இப்படித்தானே என்று மருகத்தான் முடிகிறது. அவள் அனுப்பிவைக்கும் முன்னூறு டாலரில் ‘நான் நினைவில் வெச்சா மறக்கமாட்டேன்’ என்கிற அவளின் வரி நகைமுரணாக எதிரொலிக்கிறது.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் கொலை செய்தவர்கள் மீது கூட வெறுப்பு வராத வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போலப் புஷ்பநாதன் கொலை செய்த பொழுது அவரை வெறுக்க முடியவில்லை. அனுதாபமே ஏற்படும் வகையில் காட்சி அமைகிறது. ரஷ்ய பெண்ணுடன் சண்டையிட்டு, பயந்து ஓடிவரும் அவரை நிஷாந் காத்த பின்னர் ‘நான் வீர சைவ வேளாளர்’ என அவர் இரைவதில் தெறிக்கும் வீரம் எல்லா ஜாதிப்பெருமையையும் எள்ளி நகையாடி மிளிர்கிறது. அதே புஷ்பநாதன் ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையை நோக்கிப் போகையில் நிஷாந்திடம் கிட் காட் வாங்கித் தன்னுடைய மகளுக்கு அனுப்பச்சொல்கிறார். மூன்று வயதில் பார்த்த மகளை இருபது வருடங்கள் பார்க்காமல் வலியைத் தேக்கிக்கொண்டு அவளுக்குச் சாக்லேட் வாங்கித்தரும் துடிக்கும் அந்தத் தவிப்பு பல லட்சம் அப்பாக்களுக்கும் உரியதுதானே?

மாஜிஸ்திரேட் ஒருவரின் வாயிலாக டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்டு, சுரண்டிய கதை கண்முன்னால் விரிகிறது. அவரின் மூதாதையர் மயில்வாகனம் என்கிற நல்ல புரவலரை மக்களின் பசியைப் போக்கிய பொழுது சிறையில் அடைத்ததற்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தற்போது இரு நாடுகளில் அகதியாகப் பணித்து டச்சு அரசிடம் கில்டர் காசுகளை வசூலிக்கும் மாஜிஸ்திரேட் நிலை என்னானது என்பது நம்முடைய அனுமானத்துக்கே விடப்படுகிறது.

நிஷாந் உட்பட அகதிகள் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து இருக்கிற கொஞ்ச காசில் ஏதோ அருந்துகிறார்கள். கடையைத் துடைக்கும் மூதாட்டி அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்கிறாள். காட்டிக்கொடுத்து விடுவாரோ என்று வேகமாக விரையும் அவர்களைத் பின்தொடர்ந்து வரும் அவரின் பையில் பழங்களும், நீரும் இவர்களுக்காக இருக்கிறது. அன்னைமாரின் அடிவயிற்றில் பிள்ளைகளின் பசியைப் போக்க எரியும் தீ கண்டங்களைக் கடந்தும் ஒரே மாதிரிதான் என்பது பெல்ஜியத்தில் நிகழும் இக்காட்சியால் புலப்படுகிறது.


கனகலிங்கம் என்கிற பாத்திரப்படைப்பு சுவாரசியமானது. தங்கைக்குக் கல்வீடு கட்டித்தரவேண்டும் என்று அவர் கனடாவில் நாதஸ்வரம் ஊதப்போவதாகச் சொல்கிறார். வோட்கா அருந்தி அவர் மிகக்கடுமையான ஆம்ஸ்டர்டாமை விமானத்தில் கடக்கும் கணம் பதைபதைப்பைத் தருவது. சகுந்தலா எனும் பெண்மணி சோக உருவாகப் பிள்ளைகளைக் காணக்காத்து கிடக்கிறார். அவரைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கும் நிஷாந்துடன் போகும் அவர் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுது அவனைக்காட்டிக் கொடுக்காமல் சிறைபுகும் காட்சி பெண்களின் உலகம் எவ்வளவு உணர்ச்சிகளால் ஆனது என்பதை மேலும் துலக்கமாக உணரவைக்கிறது.

சபா என்கிற சபாநாயகம் ஒரு மதிப்பெண்ணில் முதலிடத்தைத் தவறவிடவே அவரைக் கனடாவுக்கு மருத்துவராக அனுப்பி வைக்கும் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போதை மருந்து கடத்த உதவி இலங்கையில் முதல் பக்கச்செய்தியாக மாறிப்போகிறார் சபா. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நம்பிய தந்தைக்காக இங்கே வந்து இரண்டு மில்லியன் தட்டுக்களைக் கழுவி தன்னுடைய கடன்களை அடைத்ததைச் சலனமில்லாமல் சபா சொல்கிறார்.

‘அதைப் பார்த்த என் அப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? ஒரு மார்க் தவறியதால் கனடா புறப்பட்ட மகனா இவன் என எப்படியெல்லாம் தவித்திருப்பார். செய்தியை நம்பமுடியாமல் பத்திரிக்கையைக் கையில் பிடித்தபடி, குழந்தையில் என்னைக் கூப்பிடும் ‘சபுக்குட்டி, சபுக்குட்டி என்கிற பெயரை உச்சரித்துக்கொண்டு ரோட்டு ரோட்டாக அலைந்தார் என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். அவரைச் சமாதானம் செய்யவோ, அவரிடம் மன்னிப்பு கேட்கவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் அவர் இறந்துபோனார்.’ எனச் சபா அரற்றுகிற கணம் மதிப்பெண்ணில், உலகியல் வெற்றி அளவுகோல்களில் பிள்ளைகளை அளக்கும் பெற்றோர்களின் மனக்கனவுகளின் மீது தீவிரமான கேள்விகளை முன்வைக்கிறது.

கடவுள் தொடங்கிய இடம் நாவல் பல்வேறு கதைகளை வீசிக்கொண்டு நகரும் ஒரு பெரும்பயணம். மூன்று கண்டங்களின் ஊடாகப் பயணிக்கும் இந்தக்கதையில் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே புலப்படுகிறார்கள். ஐந்து கோடி அகதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் மூலம் அ.முத்துலிங்கம் ஒரு மகத்தான மனிதம் ததும்பும், வெறுப்பைத் தாண்டிய நம்பிக்கையை விதைக்கும் உலகத்தைக் கண்முன் சமைக்கிறார்.

பக்கங்கள்: 270
விகடன் பிரசுரம்
விலை: 155

— with Appadurai Muttulingam.

சுகுமார் சென்னும், நாலரை கோடியும், இந்திய ஜனநாயகமும்!


 

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொழுது அந்த ஒரு கேள்வி இயல்பாக வந்திருந்தது. யார் தேர்தலை நடத்துவது. அந்தந்த மாநிலத்தில் இருக்கும் அரசுகள், கவர்னர் ஆகியோர் இணைந்து தேர்தல்களை நடத்துவர் என்று வரைவுச்சட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், இறுதிச் சட்டத்தை அம்பேத்கர் அரசமைப்பு குழுவின் முன்னால் தாக்கல் செய்யும்பொழுது ஒரு அதிரடித் திருத்தம் முன்வைக்கப்பட்டது. அண்ணல் சொன்ன திருத்தும் இதுதான். மத்திய தேர்தல் ஆணையம் ஒன்று இந்தியாவின் தேர்தல்களை நடத்தும் பொறுப்பை ஏற்றுநடத்தும். மாநில அரசுகள் கலாசார ரீதியாக, மொழி ரீதியாகப் பிற மக்களைத் தேர்தல்களில் வாக்களிக்க விடாமல் தடுக்கக்கூடிய அநீதியை தவிர்க்க இப்படியொரு முடிவு என்று அறிவித்தார்.

உலகம் முழுக்க அதற்கு முன்புவரை தேர்தல் ஜனநாயகம் மேற்கில் உள்ள நாடுகளிலேயே அமலில் இருந்தது. பெண்கள், சொத்து இல்லாதவர்கள், பட்டம் பெற்றிராதவர்கள், கறுப்பினத்தவர்கள் என்று பல்வேறு தரப்பினரை பாகுபாடு காட்டி பல்வேறு அரசுகள் தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்தன. இந்தியாவில் பதினாறு சதவிகித மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள். ஆங்கிலேயர் சொத்து, கல்வி ஆகியவற்றை வாக்களிக்கும் தகுதிகளாகக் காலனிய இந்தியாவில் முன்னிறுத்திய பொழுது இந்தியக் குடியரசு வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை என்று அடித்து ஆடியது.

Voters queuing

இரண்டு வருடங்களில் மக்கள் பிரதிநித்துவச் சட்டம் இயற்றப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்ட தொகுதி வரையறை, தேர்தலில் வேட்பாளர் நிற்க தகுதிகள், தகுதி இழப்புக்கான காரணங்கள், வாக்காளர் பட்டியல் உருவாக்கம் ஆகியவை வரையறுக்கப்பட்டன. நேரு தேர்தல் ஆணையராகச் சுகுமார்சென்னை அழைத்து வந்திருந்தார். வங்காளத்தைச் சேர்ந்த சென் வெள்ளையர் காலத்தில் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்தவர். கணக்கில் தங்கப்பதக்கம் பெற்றவர். வங்கத்தின் முதல் தலைமைச் செயலாளர் ஆன அவரைத் தற்காலிகமாகத் தேர்தல் ஆணையராக அனுப்பியிருந்தார்கள்

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துமாறு நேரு கேட்டுக்கொண்டார். சென் பொறுமையாகவே காரியங்கள் நடக்கும் என்று உறுதியாக இருந்தார். காரணம் எளிமையானது. பலதரப்பட்ட மக்களைக்கொண்ட, பல்வேறு நிலப்பரப்பை கொண்ட தேசத்தின் தேர்தலை கச்சிதமாகக் குறைகள் பெரிதாக இல்லாமல் நடத்த வேண்டும் என்கிற சிரத்தையே அந்தப் பொறுமையில் தொனித்தது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடுக்கப்பட்டது. தன்னுடைய பெயரை சொல்ல மறுத்து இன்னாரின் மனைவி, மகள் என்று பெயரைக் கொடுத்த இருபத்தி எட்டு லட்சம் பெண்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து சுகுமார் சென் தயவே இல்லாமல் நீக்கினார்.

 

தேர்தல் களத்தில் நேருவின் காங்கிரஸ் மட்டும் நிற்கவில்லை. புரட்சி செய்ய முயன்று அது நசுக்கப்பட்ட நிலையில் இடதுசாரிகள் களம்புகுந்து இருந்தார்கள். வலதுசாரியான ஜனசங்கம், அம்பேத்கரின் பட்டியல் ஜாதியினர் கூட்டமைப்பு., கிருபாளினியின் கிசான் மஸ்தூர் கட்சி, முஸ்லீம் லீக், அகாலி தளம் என்று பல்வேறு கட்சிகள் களத்தில் முஷ்டி முறுக்கின. As
18,000 வேட்பாளர்கள் 4,412 இடங்களில் களத்தில் நின்றார்கள். சட்டசபை, மக்களவை இரண்டுக்கும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தல் இது என்பதால் தான் இவ்வளவு பெரிய எண்ணிக்கை.

சுகுமார் சென் சின்னங்களை மக்கள் அடிக்கடி பார்ப்பவற்றில் இருந்து தேர்வு செய்தார். பல வண்ணங்களில் பெட்டிகளை வாங்கினார். அவை ஒவ்வொன்றின் மீதும் ஒரு கட்சியின் சின்னத்தை ஒட்டினார். அந்தந்த வாக்குப்பெட்டியில் ஒரு வாக்குச்சீட்டை போட்டால் போதுமானது. கால், கைகள் அற்ற வாக்காளருக்கு எங்கே மை வைக்க வேண்டும் என்பதைக்கூடச் சுகுமார் சென் விதிகளில் வரையறுத்து இருந்தார் என்று விக்ரம் சேத் பதிவு செய்கிறார்.

நேருவுக்கு உள்ளுக்குள் ஜனநாயகத்தை நிறுவனமயப்படுத்த வேண்டும் என்கிற கவலை குடிகொண்டு இருந்தது. இந்தியாவில் 25,000 மைல்களைக் கார், விமானம், படகுப்போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் அடைந்து மக்கள் தொகையில் பத்தில் ஒருவரை சந்தித்துத் தேர்தலில் வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார். ஏழரை லட்சம் துண்டு பிரசுரங்கள் காங்கிரஸ் பிராச்சாரக் குழுவால் மட்டும் அச்சடிக்கப்பட்டது. விடாமல் பிரச்சாரம் செய்தாலும் கல்வியறிவு இல்லாத மக்கள் ஜனநாயகத்தின் அருமையைத் தேர்தல் பிரச்சார இரைச்சலில் உணர்ந்து வாக்களிப்பார்களா என்கிற சந்தேகத்தை யுனெஸ்கோ கூட்டத்தில் நேரு வெளிப்படுத்தினார்.

 

தேர்தல்கள் 1951-52 நடந்தது. 1,96,084 வாக்குச்சாவடிகள் இந்தியாவின் மூலைமுடுக்குகள் வரை அமைக்கப்பட்டது. பெண்களுக்கு என்று மட்டும் 27,527 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 17,32,12,343 அதில்10,59,50,083 மக்கள் ஓட்டளித்திருந்தார்கள். பழங்குடியின மக்கள் வில், அம்புகளோடு வாக்களித்தார்கள். ஒரு வாக்குச்சாவடியில் யானை, சிறுத்தை ஆகியன விஜயம் செய்தன. மதுரையில் நூற்றி பத்து வயது முதியவர் வாக்களிக்க வந்திருந்தார். அசாமில் ஒரு தொண்ணூறு வயது இஸ்லாமிய முதியவர் நேருவுக்கு வாக்களிக்க முடியாது என்பதால் வாக்களிக்காமல் சென்றார். சட்டமன்ற வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, நாடாளுமன்ற வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகும் பொழுது மரணத்தைத் தழுவினார் மகாராஷ்டிர முதியவர் ஒருவர்.

 

தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் நாற்பத்தி ஐந்து சதவிகித ஓட்டுக்களை அள்ளியது. மற்றவர்கள் மீத ஓட்டுக்களைப் பெற்றது மக்களின் தேர்வு வேறுபட்டதாக இருந்தது என்பதைக்காட்டியது. என்றாலும், காங்கிரஸ் எழுபத்தி நான்கு சதவிகித இடங்களை அள்ளியது. மூன்று மாநிலங்களில் அதனால் அறுதிப்பெரும்பான்மை பெறமுடியவில்லை. இருபத்தி எட்டு மந்திரிகள் தோற்றுப்போயிருந்தார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய சோதனை என்று சுகுமார் சென் கூறிய தேர்தலில் இந்தியா வெற்றியை பெற்றிருந்தது. மாபெரும் சூதாட்டம் ஜனநாயகத்தின் வெற்றியாக முடிந்திருந்தது. அந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட முப்பத்தி ஐந்து லட்சம் பெட்டிகளை அடுத்தத் தேர்தலுக்குச் சேமித்து நான்கரை கோடியை மிச்சப்படுத்தினார் சுகுமார்சென். அவரின் பெயரால் ஒரே ஒரு சாலை மட்டும் மேற்கு வங்கத்தில் இருக்கிறது. வரலாறு வித்தியாசமானது.

இன்று இந்தியாவின் முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.

‘இப்பலாம் யாரு சார் ஜாதி பாக்குறா?’


இப்பலாம் யாரு சார் ஜாதி பாக்குறா?’

சமூகஊடகங்களின் வருகைக்குப் பிறகு முதல்முறையாக ஜாதி என்பது எண்ணற்ற மக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக இப்பொழுது மாறியுள்ளது. ஜாதி, ஜாதி சார்ந்த அநீதிகள், சலுகைகள் குறித்துச் சூடான விவாதங்கள் Facebook, Twitter, Quora, Reddit, Instagram என்று எங்கும் நடக்கிறது. ஜாதி பற்றிய இந்த உரையாடல் ஒரு அறிவிற் சிறந்த ரோஹித் வெமுலா எனும் இளைஞனின் மரணத்துக்குப் பிறகே நடக்கிறது என்பது இதயத்தைப் பிசைகிறது. எனினும், இந்த உரையாடல் பல காலத்துக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். நீங்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேராத ஒருவர் என்றால் ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்தப் பதிவை படித்துவிட்டு இந்த விவாதங்களில் ஆழமாக இறங்குங்கள். ரெடி?

1. ஜாதியே இல்லை என்கிறீர்களா?:
நீங்கள் ஜாதி சார்ந்த பாகுபாட்டை, வன்முறையை, தீண்டாமையைச் சந்திக்காவிட்டால் அப்படி எதுவும் சமூகத்தில் இல்லை என்று எளிமையாக எண்ணிக்கொள்ளக்கூடும். ஆனால், பல லட்சம் தலித்துகளுக்கு அது அன்றாடம் நடக்கின்ற ஒன்றாகும். எனவே. ‘ஜாதி எல்லாம் போன தலைமுறையோடு போச்சு!’ என்றோ, ‘இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா’ என்றோ குரல் எழுப்புவதற்கு முன்னால் கொஞ்சம் அந்தப் பாகுபாட்டைச் சந்தித்த தலித்துகளின் கதைகளைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

2. ஜாதியை புரிந்து கொள்ளுங்கள்:

ஜாதி சார்ந்த ஒடுக்குமுறைகள் குறித்து அறிய நீங்கள் முயலுங்கள்/ நம்முடைய பாடப்புத்தகங்கள் இவை குறித்துப் போதுமான அளவுக்குபேசுவதில்லை. ஏன் இடஒதுக்கீடு, கோட்டாமுறை தேவைப்படுகிறது என்று புரிந்துகொள்ள முயலுங்கள். ஏன் சில ஜாதிகளின் பெயர்கள் இப்பொழுதும் வசைச்சொல்லாக உபயோகிக்கப்படுகிறது என்றும், இந்த ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட உளவியல் வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். அண்ணல் அம்பேத்கரின் Annihilation of Caste, சமீபத்தில் வெளிவந்த Hatred in the Belly நூல் ஆகியவற்றில் துவங்கலாம்.dalitdiscrimination.tumblr.com தளத்தை அவசியம் அவ்வப்பொழுது பாருங்கள்.

3. உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்:
ஜாதி அமைப்புகள் தனிக்காட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் இயங்கவில்லை. ஒருவர் அநியாயமாக ஒடுக்கப்படுகிறார் என்றால், அது உங்களைப் போன்ற தலித் அல்லாதவேறொருவருக்குப் பயனைத் தருகிறது என்று உணருங்கள். கல்வி, சொத்து ஆகியவற்றைத் தொடர்ந்து பெற்ற உங்களின் முன்னோர்களின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல் வந்து சேர்ந்திருக்கின்றது, வரலாறு நெடுக நீங்கள் அனுபவித்த இந்த அம்சங்கள் இன்றும் மிகக்கடுமையாகத் தலித்துகளுக்கு மறுக்கப்படுகின்றது. உங்களுக்கான வாய்ப்புகள் நீங்கள் ஒன்றை செய்ததாலோ, செய்யாததலோ வந்துவிடவில்லை. உங்களுக்குப் பரம்பரையாகத் தொடரும் வாய்ப்புகளும், தலித்துகளுக்கு வெகுகாலமாகத் தொடரும் ஒடுக்குமுறையும் தொடர்ந்து வந்து சேர்ந்திருக்கின்றன. நீங்கள் அதன் இருப்பை மாற்றமுடியாது என்றாலும், அப்படியொரு அநீதி இருப்பதை ஏற்றுக்கொள்ள நிச்சயம் முடியும்.

. 4. உங்களைப் பற்றித் தனிப்பட்ட தாக்குதல் இல்லை:

உங்களை யாரும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. நீங்கள் ஜாதிய மனப்பான்மை கொண்டவர் இல்லையென்றால், ஜாதி சார்ந்த முன்முடிவுகள் உங்களுக்கு இல்லையெனின், ஜாதியின் சிக்கலான செயல்பாட்டை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் விதிவிலக்கு, பொதுவிதி அல்ல.#NotAllUpperCastes என்று சொல்லிக்கொள்வது இந்தபிரச்சனையில் இருந்து தேவையற்று திசைதிருப்பும் போக்காகும். ஒரு கார் ஒரு நபரை இடித்துக் கொல்கிறது என்கிற பொழுது நீங்களோ, மற்ற எல்லா ஓட்டுனர்களும் கொல்வதில்லை என்று நீங்கள் கதறுகிறீர்கள். காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு உயிரை உங்களுக்கு அனுதாபம் தேடும் மும்முரமான பணியில் சாகடித்து விட்டீர்கள் எனச் சொல்லலாம்

5. தலித் அடையாளம் உங்களைக் காயப்படுத்த அல்ல:

தலித் அடையாளம் வெகுகாலமாக அவமானகரமாகப் பார்க்கப்பட்டு, படிப்படியாகப் பெருமையான ஒன்றாக மாறிவருகிறது. தலித் பெருமை உங்களைக் காயப்படுத்த பேசப்படவில்லை, அது எங்களின் நிலையை அடிக்கடிநினைவுபடுத்திக்கொள்ளப் பயன்படுகிறது மீண்டும் சொல்கிறேன், இது உங்களைப் பற்றி அல்ல, எங்களைப் பற்றியது.

6. நீங்கள் ஜாதியற்றவர் இல்லை:

எரியும் நெருப்பில் பிறர் நடக்க, நீங்கள் மலர்மெத்தையின் மீது நடப்பதைப் போலதான் நான் ஜாதியே பார்ப்பதில்லை என்பதும். உங்களுடைய முன்னோர்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை, பல்கலைக்கழகங்கள் அவர்களின் கடைசிப் பெயருக்காகவோ, அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்காகவோ கல்வி நிலையங்களை விட்டு தூக்கிஎ றியப்படவில்லை. பலலட்சம் தலித்துகள் இன்னமும் இப்படிப்பட்ட கொடிய யதார்த்தத்தோடு தான் வாழ்கிறார்கள். ஜாதியில்லை என்று நீங்கள் சொல்கிற அதே தருணத்தில் எண்ணற்றோர் அதே ஜாதி அடையாளத்துக்காகக் கொடும் அடக்குமுறை, வன்முறைகளைச் சந்திக்கிறார்கள். அந்த அடையாளத்தை அவர்கள் விட விரும்பினாலும் சமூகம் அனுமதிப்பதில்லை. முன்முடிவுகள் அவர்களைத் தொடர்ந்துவேட்டையாடி, வன்முறையால் மண்டியிட வைக்கிறது. உங்களின் ஜாதியும், எங்களின் ஜாதியும் உயிரோடுதான் இருக்கின்றன. அப்படியொன்று இல்லவே இல்லை என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருள்வதைப் போலத்தான்.

7. கருணையுள்ளவர் இல்லை நீங்கள் என உணருங்கள்:
உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், தலித்துகள் மீதான அடக்குமுறைகளை அங்கீகரிப்பது என்பதால் நீங்கள் யாருக்கும் எந்த அனுகூலமும் செய்யவில்லை, ஜாதி பற்றிய உரையாடலில் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள் அவ்வளவுதான். பொதுநலனில் அக்கறையுள்ள., தேசபக்தரான ஒரு குடிமகனாக இந்தவரலாற்றைத் தெரிந்து கொள்வது உங்களுடைய கடமை. நீங்கள் தலித்துகளோடு ஜாதி சார்ந்த உரையாடல் நிகழ்த்துவதால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஜாதி பற்றிய சிக்கலான உரையாடலை புரிந்துகொள்வதால் நீங்கள் மேலானவர் என்று எண்ணுவதே ‘ஜாதியப்பார்வை’ தான். உங்களின் கருணையான அணுகுமுறையை விட எங்களைச் சமமாக நடத்துவதையே நாங்கள் விரும்புகிறோம்.


ஒரு செழிப்பான சூழலில் இருந்துகொண்டு ‘ஐயோ பாவம்’ என்று உச் கொட்டுவதும் உங்களுக்கான வாய்ப்புகளுக்கு ஒரு எடுத்துகாட்டு தான்/
8. உங்கள் பிறப்பை குறை சொல்லவில்லை:
ஆதிக்க ஜாதியினர் பெற்றிருக்கும் வாய்ப்புகள் குறித்துப் பேசுவது நிகழும் பொழுது, ‘நான் முடிவு செய்யமுடியாதஎன் பிறப்பை வைத்துக் குறை சொல்லாதீர்கள்.’ எனச் சொல்லாதீர்கள். உங்களின் பிறப்பை யாரும் குறை சொல்லவில்லை, எங்களுக்குக் கிடைக்காத பல கிடைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி நீங்கள் என்று சுட்டிக்காட்டுகிறோம். தற்போதைய உரையாடல் வாய்ப்புகள், முன்முடிவுகள் பற்றிய ஒன்று மட்டுமே அன்றி அது தனிப்பட்ட நபர்களைப் பற்றியது அல்ல

9. கோபத்தைக் கேள்வி கேட்கவும்:
பகுத்தறிவான ஒரு கருத்து உங்கள் முன் வைக்கப்படுகின்ற பொழுது நீங்கள் தொடர்ந்து கொதித்துப் போகிறீர்கள் என்றால், இப்பொழுதாவது ‘ஏன்?’ எனக் கேட்டுக்கொள்ளுங்கள். உங்களைவிடக் கீழானவர் என்று நினைத்த ஒருவர் உங்களுக்குச் சமமாகப் பேசுவதால் அப்படி அருவருப்பு தோன்றுகிறதோ. குறிப்பு: இப்படித்தான் முன்முடிவும் காட்சியளிக்கும்.

எனினும், இந்த அர்த்தமுள்ள விவாதத்துக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் மேற்சொன்ன எதுவும் உங்களுக்குப் பொருந்தாது. மேலும், உங்களை யாரும் பொருட்படுத்தவும் இல்லை. – Yashica Dutt

மூலம்: http://www.huffingtonpost.in/yashica-dutt-/so-you-want-to-meaningful_b_9129308.html
தமிழில்: பூ.கொ. சரவணன்

 

நாமசூத்திரர்கள் இயக்கம்!


சேகர் பண்டோபாத்தியாயா நவீன இந்தியாவின் மிகமுக்கியமான வரலாற்று ஆசிரியர்களில் முதன்மையானவர். ஜவகர்லால் நேரு பல்கலையைச் சேர்ந்த மார்க்சிய பேராசிரியர்கள் குழு இந்திய விடுதலைப் போரை பெருமளவில் காங்கிரசை மையப்படுத்தி எழுதினார்கள். ரனஜித் குஹா, டேவிட் ஹார்டிமான், சுமித் சர்க்கார் முதலியோர் விளிம்புநிலை மக்களைக் கொண்டு நவீன இந்திய வரலாற்றைக் கட்டமைத்தார்கள். சேகர் பண்டோபாத்தியாயா இரு குழுவையும் சாராமல், அதேசமயம் விளிம்புநிலை, காங்கிரஸ், கவனத்தில் கொள்ளப்படாத பிற மக்கள் இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்து அவர் தன்னுடைய நூல்களைக் கட்டமைத்தார். அவரின் நாமசூத்திரர்கள் இயக்கம் நூலும் இப்படிப்பட்ட வங்கத்தில் ஜாதியத்துக்கு எதிராக எழுந்த மிகமுக்கியமான ஒரு மக்கள் புரட்சியைக் கண் முன் நிறுத்துகிறது.

காங்கிரஸ் ஆங்கிலேய அரசை எதிர்த்தது என்பதால் ஆங்கிலேய அரசோடு இணக்கமாக இருந்தவர்கள் தேசத்துரோகிகள் என்கிற பார்வை முன்வைக்கப்படுகிறது. இதில் ஒருசாரார் மீதான குற்றச்சாட்டு உண்மைதான் எனினும், எண்ணற்ற விளிம்புநிலை மக்கள் வர்ணாசிரம ஒடுக்குமுறையைத் தாண்டி முன்னேற ஆங்கிலேய ஆட்சியே உதவியது. மேற்கத்திய கல்வி முறை, தொழில்மயமாக்கம், வர்ணாசிரம அடிமை முறை சாராத முறைகளில் தங்களுக்கான தொழிலை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள், இந்தியாவை ஒருங்கிணைத்த ஒரே அரசு ஆகியன அவர்களுக்கான வெளியை, வாய்ப்புகளை வழங்கின..

 

கிழக்கு வங்கத்தின் கழிமுகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் சண்டாளர்கள் என்று அறியப்பட்ட மக்கள். அவர்கள் ஜாதிய அடுக்கில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டார்கள். வங்கத்தின் கழிமுகத்தில் மீனவர்களாக, பரிசல்காரர்களாக இருந்த இவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விவசாய நிலங்கள் அதிகமானதால் விவசாயத்தில் பங்குபெறும் வாய்ப்பு உண்டானது. எனினும், அவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாகவே வயிற்றுப் பிழைப்பை மேற்கொள்ள நேரிட்டது.

வங்கத்தின் பாகர்கஞ்ச், தெற்கு பாரித்பூர், குல்னா, செஸ்ஸோர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருந்தார்கள் இம்மக்கள். தொல்குடியான இவர்கள் வர்ணாசிரம முறையில் சிக்கி சண்டாளர்கள் என்று அறியப்பட்டார்கள். முடிவெட்டுபவர்கள், துணி வெளுப்பவர்கள் கூட அவர்களுக்குச் சேவகம் செய்ய மறுக்கிற அளவுக்குக் கடைநிலையில் வைத்துப் பார்க்கப்பட்டார்கள். இவர்களுக்குச் சடங்குங்கள் செய்ய என்று தனியாகச் சண்டாள பிராமணர்கள் என்றொரு இழிவாகக் கருதப்படும் பிரிவு ஒன்று ஏற்பட்டது. சாதியக் கொடுமை தாங்காமல் எண்ணற்றோர் கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தைத் தழுவவதும் இப்பிரிவில்
நடைபெற்றது.

1911 கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இம்மக்களில் 77.9 சதவிகிதம் பேர் விவசாயக் குடிகளாக இருந்தார்கள். அவர்களில் ஐந்து சதவிகிதத்தினரை தவிர்த்து மற்றையோர் எல்லாம் அடிமை விவசாயிகளாக இருந்தார்கள். சணல் வியாபாரம் ஓரளவுக்கு வருமானம் ஈட்டித்தந்தது. ஆங்கில அரசின் கீழ் பலர் கல்வி கற்றார்கள். தங்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகள் இடையே ஜாதி வேறுபாடு பாராட்டக்கூடாது என்று முடிவெடுத்தார்கள் எனினும் அது நடைமுறைக்குப் பெரும்பாலும் வரவில்லை.

1872-ல் சண்டாளர் இயக்கம் வலுவாக எழுந்து நின்றது. கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களின் தாக்கத்தோடு, இயற்கை வழிபாடான கர்த்தபஜாஸ் இயக்கமும் சமூக நீதிக்கு போராட அவர்களுக்குத் தூண்டுகோலானது. தங்களை விலக்கி வைக்கும் பத்ரோலக் முதலிய ஆதிக்க ஜாதிகளுக்கு எந்தச் சேவையும் செய்யக்கூடாது என்று தீர்மானம் இயற்றினார்கள். நான்கு மாதங்களில் இயக்கம் மிகப்பெரிய சமூகப் புறக்கணிப்பு இயக்கமாக எழுந்து நின்றது. பின்னர்ப் படிப்படியாகத் தன்னுடைய ஆதரவை இழந்தது.

ஹரிசந் தாகூர் எனும் இப்பிரிவை சேர்ந்தவர் ‘மதுவா’ எனும் வைணவப்பிரிவை உருவாக்கினார். ஜாதி வேறுபாடுகள் அற்றதாக அந்த வைணவப்பிரிவை உருவாக்கி அதில் தன் மக்களை அவர் இணைத்தார். ஆதிக்க ஜாதி இந்துக்கள் அந்தப் பிரிவை நிராகரித்தார்கள். ஹரிச்சந்தின் மகன் குருசந்த் அடுத்து களத்துக்கு வந்தார். சமூகச் சீர்திருத்த இயக்கமாக மதுவா இயக்கத்தைக் கட்டமைத்தார். பெருமாளே ஒரு கடவுள் எனச் சொல்லப்பட்டு, கூட்டு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. சுய கற்றல், வருவாய் ஈட்டுதல், பொறுப்புணர்வு ஆகிய மூன்று கொள்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேல் எழுப்புதல் கூட்டங்கள் இம்மக்களால் கூட்டப்பட்டுப் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சண்டாளர்கள் என்கிற தங்களை அழைப்பதை மாற்றி, ‘நாமசூத்திரர்கள்’ என அழைக்க வேண்டும் என்று கோரினார்கள். மேலும், இருபத்தி இரண்டு சதவிகிதம் என்கிற அளவுக்கு நிலவிய குழந்தைத் திருமணம் குறைக்கப்படவும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. கல்வி கற்பிப்பதும் அரசின் உதவியோடு நடக்க ஆரம்பித்தது. இந்திய விடுதலைப் போரை செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்த தேசியவாதிகள் முந்தைய காலம் பொற்காலம், தற்காலம் கொடியது என்று சொல்லிக்கொண்டிருக்க நாமசூத்திரர்களின் இதழான ‘பாதுகா’ ‘இந்து சமூகத்தை இந்து அரசர்கள் ஆட்சி செய்த பொழுது தூங்கிக் கொண்டு இருந்தோம். மனிதரின் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆங்கிலேயரின் கருணையால் நீண்ட உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டோம்.’ என எழுதியது.

நாமசூத்திரர்கள் தங்களுக்கான அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். நிதி வசூலித்து அதைத் தங்களின் மேம்பாட்டுக்கு செலவழித்தார்கள். ஒரு கைப்பிடி அரிசி பெற்று உணவிடவும் செய்தார்கள். சடங்குகள் செய்யவும் ஆட்களைப் பெற்றார்கள். கல்விக்கூடங்களை அமைத்தார்கள். குழந்தைத் திருமணத்தை எதிர்த்துப் பேசினார்கள். இப்படி அவர்களின் சீர்திருத்தங்கள் விரிவடைந்தன.
1906-ல் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். அஸ்வினி குமார் தத் தலைமையிலான சுதேசி பந்தோபத் சமிதி நிவாரணங்களை வழங்கியது என்றாலும் அது பெரும்பாலும் பத்ரோலக் விவசாயிகளுக்கே சென்றது.

கிறிஸ்துவ மிஷனரிக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உதவிகள் செய்தன. பள்ளிகள் கல்விக்காக இயங்கின. மருந்தகம் துவங்கப்பட்டது. கைம்பெண் இல்லமும் துவங்கப்பட்டது. பல நாமசூத்திரர்கள் மதம் மாறுவதும் நிகழ்ந்தது.
1905-ல் நிகழ்ந்த வங்கப்பிரிவினை விடுதலைப் போரில் தீவிரம் செலுத்திய வங்கத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த எண்ணியது என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. அது ஆதிக்க ஜாதிகளான பிராமணர்கள், பத்ரோலக்கள், பைடியாஸ் பிடியில் நடந்த ‘வகுப்பு ஆட்சியை’ அழிக்க முயன்றது என்கிறார் ரிச்சர்ட் குரோன். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிகழ்ந்த இந்தப் பிரிவினையைக் கவனமாக நோக்கினார்கள் நாமசூத்திரர்கள்.

நாமசூத்திரர்களின் ஆதரவைப் பெற்றுவிட வங்கப்பிரிவினையை ஒட்டி எழுந்த சுதேசி இயக்கம் முயன்றது. மலிவான விலையில் ஆடைகளோ, பொருட்களோ சுதேசிகளிடம் இருந்து கிடைக்காத சூழலில் நாமசூத்திரர்கள் அந்நிய பொருட்களையே வறுமையால் பயன்படுத்தினார்கள். அரசும் லிவர்பூல் உப்பை அவர்களுக்கு இலவசமாக வழங்கியது. பண உதவி செய்து சில இடங்களில் நாமசூத்திரர்கள் ஆதரவை சுதேசி இயக்கத்தினர் பெற்றார்கள். பரீசலில் நடந்த கூட்டத்தில் வண்ணார், நாவிதர் முதலியோர் நாமசூத்திரர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம் தங்களின் கையால் உணவு, தண்ணீர் வாங்கி உயர்சாதியினர் தீண்டாமையைக் கைவிட வேண்டும் என்ற நாமசூத்திரர்களின் முக்கியக் கோரிக்கை பற்றி மூச்சுகூட விடவில்லை சுதேசி பந்தாப் சமிதி இயக்கத்தினர் நடத்திய அக்கூட்டம். ஒடுக்கப்பட்ட பிற மக்களின் மீது நாமசூத்திரர்களை மதிக்கும் பணியைத் திணித்தது.

நாமசூத்திரர்கள் அரசின் பக்கம் பிரிவினையின் பொழுது பெருமளவில் இஸ்லாமியார்களுடன் தங்களைச் சுரண்டிய நிலச்சுவான்தார்களுக்கு எதிராகக் கைகோர்த்தார்கள். கடும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. டாக்கா பகுதியில் ஒரு பெண்ணின் ஆடையைக் களைந்து சோதனை செய்கிற கொடுமை நிகழ்ந்தது. செருப்படியும் தரப்படும் அநியாயமும் நடந்தது. 1911-ல் நடைபெற்ற மக்கள் தொகை பொதுக் கணக்கெடுப்பில் சண்டாளர் என்கிற சொல் நீக்கப்பட்டு, ‘நாமசூத்திரர்கள்’ என்றே தங்களை இம்மக்கள் முழுக்கப் பதிந்து கொண்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களான அவர்கள் பிற்படுத்தப்பட்டோராகக் கருதப்படுவது நிகழ்ந்தது.

மூன்று இடங்களில் நாமசூத்திரர், இஸ்லாமியர் இடையே கலவரங்கள் ஏற்பட்டன.. இரண்டு இடங்களில் சாதாரண மோதல் பெரும் சச்சரவாக உருவெடுத்தது. சில்ஹெட்டில் மட்டும் பலகாலமாக இருந்த பகைமை கலவரக மாறியது. இதைத் தேசியவாத இயக்கம் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. ‘பசு-இந்து-முசல்மான்’ எனப் பெயரிடப்பட்ட துண்டறிக்கை நாமசூத்திரர்கள்-இஸ்லாமியர்கள் ஆகியோரிடையே பகைமையை மேலும் கூட்டப்பார்த்தது. பிரம்ம சமாஜம் ஒடுக்கப்பட்டோர் உதவி மிஷனை நாமசூத்திரர்கள் பகுதியில் துவங்கி சேவைகள் செய்தது. என்றாலும், அது மிஷனரிகள் அளவுக்குப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டிருக்கவில்லை.

1916-ல் கோகலே கட்டாயத் தொடக்கக்கல்வி திட்டத்தை அமல்படுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்த பொழுது அது தங்களை மேம்படுத்தும் என்பதால் நாமசூத்திரர்கள் தங்களின் ஆதரவை வழங்கினார்கள். சனதான இந்துக்கள் நடத்திய இதழ்கள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனினும், இதற்குப் பிறகும் நாமசூத்திரர்களின் ஆதரவை தேசிய இயக்கம் முழுமையாகப் பெறமுடியவில்லை. ஹரிசந்த் எனும் அவர்களின் தலைவரை ஆங்கிலேய அரசு கவுரவித்தது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்தும் அவர்கள் விலகியே இருந்தார்கள்.

அப்பணசாமி மொழிபெயர்ப்பில் இந்நூல் சிறப்பாகப் புலம் வெளியீடாக வந்துள்ளது. அருமையான வரலாற்றுப்பதிவு. 1911-க்கு முன்னர் நடந்த நாமசூத்திர பெண்ணின் மீதான வன்முறைக்கு அப்பொழுது இந்திய அரசியல் களத்துக்கே வந்திராத காந்தியின் அகிம்சையைக் காரணம் காட்டுகிறார் மொழிபெயர்ப்பாளர். சிறப்பான மொழிபெயர்ப்பில் உறுத்தலான தருணம் இது. பொறுப்புடன் எழுதியிருக்கலாம்.

பக்கங்கள்: 64
விலை: 50

‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை – யோகேந்திர யாதவ்


பிப்ரவரி 1, 2016 அன்று
நடந்த பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் முதல் நினைவுச் சொற்பொழிவில் அரசியல் அறிவியல் அறிஞர் யோகேந்திர யாதவ் ‘சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை’ என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மொழிபெயர்ப்பு இது.

எனக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களுக்கும் இடையே இருந்த உறவு தனித்துவமானது. அவர் மார்க்சியராகவும் , நான் லோஹியாவாதியாகவும் இருவேறுபட்ட அணுகுமுறையில் இயங்கினோம். இன்றைக்கு இரண்டுக்கும் இந்தத் தாராளமயமாக்கப்பட்ட சூழலில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கா விட்டாலும் அப்பொழுது அவை தனித்த அணுகுமுறைகளாகவே இருந்தன. பின்னர் எங்களுக்குள் எப்படி ஒரு அற்புதமான பிணைப்பு உண்டானது என்றால் ஜாதியைக் குறித்துத் தொடர்ந்து நாங்கள் சிந்தித்து வந்தோம் என்பதனால் இருக்கலாம். ஜாதியை எதிர்கொள்வதில் அவர் எப்பொழுதும் விருப்பமுள்ளவராக இருந்தார். ஜாதி மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அதனோடு இணைந்து பங்காற்றும் மற்ற கூறுகள் கவனம் பெறாத பொழுது அவற்றையும் கருத்தில் கொள்வதைப் பேராசிரியர். எம்.எஸ்.எஸ். பாண்டியன் தொடர்ந்து செய்தார். அவரின் எம்.ஜி.ஆர். குறித்த ‘The Image Trap’ நூல் எப்படிப் பிம்பம் உற்பத்தி செய்யப்பட்டு, அது உருமாற்றம் அடைகிறது என்பதைப் பிரமாதமாக விளக்கும் நூல். இப்பொழுது நரேந்திர மோடி வெற்றி பெற்றதையும் அந்த நூலைக் கொண்டு புரிந்து கொள்ள இயலும்.
yogendra yadav
NCERT பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த கேலிச்சித்திரம் சார்ந்து எழுந்த சிக்கலை அடுத்து என்ன இறுதித் தீர்ப்பு எழுதுவது என முடிவு செய்துவிட்டு அமைக்கப்பட்ட குழுவில் பேராசிரியர். எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அவர்களும் உறுப்பினராக இருந்தார். அந்த விசாரணைக் குழுவில் வளைந்து கொடுக்கும் தன்மையற்ற பாண்டியனை ஏன் சேர்த்தார்கள் என்று புரியவில்லை. முறையான கேள்விகளை எங்களை நோக்கி அடுக்கிய பாண்டியன் அவர்கள் இறுதியில் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து மாறுபட்டு ஒரு மறுதலிப்புக் குறிப்பை எழுதினார். இந்தியாவில் அரசியலுக்கும், அறிவுபுலத்துக்கும் இடையே உள்ள உறவை குறித்து வருங்காலத்தில் வரலாறு எழுதப்படும் பொழுது பாண்டியன் அவர்களின் அந்தக் குறிப்பு அறிவுப் புலத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்

. சமூக நீதி என்பது உலகளவில் பரந்துப்பட்ட பொருளில் வழங்கப்படுகிறது என்றாலும் இந்தியாவில் பெரும்பாலும் அது ஜாதி சார்ந்த நீதியையே குறிக்கப் பயன்படுகின்றன. சமூக நீதிக்கான இயக்கங்கள் இட ஒதுக்கீட்டை குறிவைத்து இயங்கி இருக்கின்றன. சமூக நீதிக்கான செயல்திட்டங்கள் என்பதும் ஜாதி சார்ந்த ஒன்றாகவே இயங்குகின்றன. சமூக நீதி அரசியல் குறித்த மீள்சிந்தனை என்கிற இந்தத் தலைப்பை ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி காண்பதன் அவசியத்தை நான் பேச விரும்புகிறேன்.

ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜாதி சார்ந்த அநீதி என்பது எவ்வளவு தீவிரமாக இயங்குகிறது என்பதைக் கண்டோம். ஜாதிக் கொடுமைகள் இன்றும் தொடர்வதைப் பலர் ஏற்றுக்கொள்ளவும் ஹைதராபாத் பல்கலையில் நடந்த நியாயமற்ற நிகழ்வுகள் வழிகோலின. இந்த நிகழ்ச்சி நமக்கு எதை நினைவுபடுத்துகிறது என்று யோசியுங்கள். நவீன அமைப்புகளில் ஜாதி எவ்வளவு ஆழமாகத் தன்னுடைய கொடுங்கரங்களைப் பரப்பியிருக்கிறது என்பதன் நினைவூட்டல் இந்த மரணம். ஜாதிக் கொடுமைகள் உச்சபட்சமாக உள்ள இடங்களில் பெரும்பாலும் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த புகார்கள் பதியப்படுவதில்லை. எங்கு இந்த அணுகுமுறைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ, அங்கிருந்து தான் இந்த மாதிரியான விஷயங்கள் வெளிப்படுகின்றன. மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்ட துடிப்பு மிகுந்த மாணவர்களை ஹைதரபாத் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. ஜாதி சார்ந்த அநீதி இழைப்பு குறித்த நுண்ணிய, அதிகளவிலான புரிதல் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளது.

mss pandiyan


ரோஹித் வெமுலாவின் மரணமும், அதற்கடுத்து நடந்த நிகழ்வுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். பட்டியல் ஜாதியைச் சேர்ந்த ஒருவராக ரோஹித் வெமுலா இல்லை என நிறுவ முயன்றார்கள். அதனைச் சார்ந்து ஜாதி வன்முறைக்கான எல்லையாகப் பட்டியல் ஜாதி சான்றிதழை அவர்கள் நிர்ணயிக்கப் பார்த்தார்கள். ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரோ, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களோ ஜாதி வன்முறைக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் நம்பவைக்க முயன்றார்கள். முதலில் ரோஹித் வெமுலாவுக்கு நிகழ்ந்த அநியாயத்தை இல்லையென்று மறுத்தார்கள், அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியா தன்னுடைய பெருமைமிகுந்த மகனை இழந்துவிட்டது’ என்று ஆழ்ந்த வருத்தம் தோன்ற கண்ணீர் வடித்தார். இவை இரண்டும் ஒரே சமயத்தில் நாடகம் போல இணைந்து நிகழ்த்தப்பட்டன. இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு வடிவத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம்.

முதலில் ஜாதி சார்ந்த வன்முறையே இல்லை என்று மறுப்பது, பின்னர் அந்த நிகழ்வையே களமாக்கி போராடுவது, அதற்குப் பின்னர் ஜாதி சார்ந்த வன்முறைகள் குறித்த நீண்ட அம்னீசியாவுக்குள் போவது வழக்கமாக இருக்கிறது. அப்படி இந்தமுறை நடக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். அப்படி அம்னீசியாவுக்குள் சென்று விடும் சமூகம் என்கிற சோகமான தீர்ப்பை நான் முன்முடிவோடு எழுத விரும்பவில்லை. இருந்தாலும், கடந்தகாலம் எப்படியிருந்தது என நினைவூட்ட விரும்புகிறேன்.

ஆதிக்க ஜாதியினர் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டை சீர்திருத்துவது, மேம்படுத்துவது என்பது அதன் பொருளல்ல, இட ஒதுக்கீட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். சமூக நீதி தற்போது அடைந்திருக்கும் இடம் சமூக நீதி அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது. அறுபதுகளில் தெற்கில் எழுந்த சமூக நீதி இயக்கங்கள் எண்பதுகள், தொன்னூறுகளில் வடக்கிலும் பரவியது. மத்திய பிரதேசம் போன்ற ஆதிக்கச் சாதியினரே முதல்வரான மாநிலங்களில் தற்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக ஆகமுடிகிறது. நரேந்திர மோடி தன்னுடைய அடையாளங்களில் ஒன்றாகத் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதை முன்வைப்பதையும் காணலாம்.

பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்தியாவில் ஓடிஸா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் வெற்றியை அடைந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சி என்பது முந்தைய பத்ரோலக் எனும் ஆதிக்க ஜாதியினரின் ஆட்சியின் நீட்சியாகவே இருக்கின்றது. கேரளாவில் ஏற்கனவே இருந்த வலுவான பிற்படுத்தப்பட்டோர் அரசியலை இடதுசாரிகள் தொடரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார்கள். மற்றபடி சமூக நீதி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்பு வெகு, வெகு குறைவு.

 

நாடாளுமன்றத்தில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு என்று ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டசபை இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் செய்கின்றன. பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான வன்முறை தடுப்பு மசோதா துளி எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாக நிறைவேறியது. இவ்வாறு பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் பற்றி அரசியலில் எதிர்க்கருத்து வைக்கத் தயங்குகிற அளவுக்கு அவை புனிதப் பசுவாகச் சமூக நீதி அரசியலால் மாறியிருக்கின்றன. என்றாலும், சமூக நீதி அரசியல் என்பது ஒரு முட்டுச்சந்தை அடைந்து விட்டது என்று வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.
பிற்படுத்தப்பட்டோர் சமூகநீதி அரசியல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, அதன் வழியான அரசியல் அதிகாரத்தை அடைந்து உள்ளது.ஆனால் அதன் இயக்கத்தளம் வெகுவாகச் சுருங்கி சுயசாதி நலன் என்ற அளவில் ஒடுங்கி விட்டது.

சமூகத்தில் பெருமளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுத்தர இந்த இயக்கங்கள் போராடி வெற்றி பெற்றன. அந்த வெற்றிக்கு அவர்களே பலியாகி விட்டார்கள். தெற்கில் மேல்தட்டினராக இருந்த பார்ப்பனர்களின் இடத்தைப் பார்ப்பனர் அல்லாதோர் கைப்பற்றினார்கள். வடக்கில் இப்படி ஆழமான வெற்றி பீகாரில் மட்டுமே ஓரளவுக்குச் சாத்தியமானது. தற்போது இந்தச் சமூக நீதி அரசியல் தேக்கமடைந்து விட்டது. இட ஒதுக்கீடு என்பது தற்போது விகிதாசாரத்தில் பெருமளவில் சுருங்கிவரும் பொதுத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

மேல் சாதியினர் , பிற்படுத்தப்பட்டோரில் மேல்தட்டினர், பட்டியலினத்தவரில் வளர்ச்சியை அடைந்துவிட்ட மேல்தட்டினர் ஆகியோருக்கு கீழே இதர பிற்படுத்தப்பட்டோரில் சேவை சாதியினரும் , கைவினைஞர் சாதியினரும் வைக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அடுத்தே ஒடுக்கப்பட்ட பட்டியல் வகுப்பைச் சேர்ந்த அடித்தட்டினர் வருவார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. இது குறித்து உறுதியான தரவுகள் என்னிடம் இல்லை. எனினும், இந்தக் கருத்தை உங்கள் முன் நான் சமர்ப்பிக்கிறேன். இதை அறிஞர்கள் ஆய்வு செய்து இதன் சரித்தன்மையை உறுதிப்படுத்தலாம். சமூகநீதி அரசியலின் போதாமையை/ தோல்வியை இந்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியின்மை அடையாளப்படுத்துகிறது.

கடந்த காலங்களில் ஜாதி பாகுபாடு இல்லவே இல்லை என்று நிராகரிக்கும் பாணி இருந்தது. தற்போது இருக்கிற ஒரே பாகுபாடு ஜாதி பாகுபாடு, அதனைத் தீர்க்கும் ஒரே வழிமுறை இட ஒதுக்கீடு என்று பெருமளவில் கருதப்படுகிறது. நாம் நான்கு முக்கியமான சமூகநீதி மறுக்கப்படும் தளங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும். ஜாதி, வர்க்கம், பாலினம், கிராம-நகரப் பாகுபாடு ஆகிய இந்நான்கும் இணைந்தே பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன. இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாலே அதனைக் கண்மூடித்தனமாக எதிர்க்கிற செயலையே செய்கிறோம். நாம் பொருளாதார ரீதியாக மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தை நிராகரிக்கும் அதேசமயம், இட ஒதுக்கீட்டை மேலும் செம்மைப்படுத்த வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.

cartoon

இந்தத் தைரியமான அரசியலை முதலில் முன்னெடுப்பவர்கள் ஓரளவுக்கு ஓட்டுக்களை இழந்தாலும், பின்னர்ச் செல்வாக்கை மீட்பார்கள். அனைவருக்காகவும் பேசுவதைச் சமூக நீதிக் காவலர்கள் செய்ய வேண்டும். இந்தியாவின் பிரதமராக ஆசைப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாருக்குமான தலைவராக ஆசைப்படுவதேயில்லை. தெளிவான திட்டமிடல், பலதரப்பட்ட பிரிவினரையும் கருத்தில் கொண்டு தீர்வுகள் தருவது, உறுதியான நிலைப்பாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஆதிக்க சக்திகள் என்று சொல்கிற கட்சிகளுக்கு மாற்று எனச் சொல்லிக்கொள்ளும் இவர்களின் தேர்தல் அறிக்கை, பொருளாதாரத் திட்டங்கள், கொள்கை முடிவுகள் எப்படி ஆதிக்க சக்திகளிடம் இருந்து மாறுபட்டு உள்ளன எனப் பார்த்தால் பெரிய வேறுபாடில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை.

முதலில் தன்னுடைய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்கள் பாடுபடுவதன் நியாயம் நன்றாகப் புரிகிறது. அதேசமயம், நீடித்து மக்களின் மதிப்பை பெற அனைவருக்காகவும் இயங்கும் அரசியலை கைக்கொள்ள வேண்டும். ஜனநாயகமயமாக்கல் தங்களை வந்தடையவில்லை என்று சொல்லி களம் புகுந்த இக்கட்சிகளில் உட்கட்சி ஜனநாயகம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். பலகாலமாக மாநிலவாரியாக, சாதிவாரியாக, மொழிவாரியாகப் பிளவுபட்டு இயங்கிய இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்படி அவை ஒன்றுபட யோசிப்பதால் காங்கிரஸ் கடந்த காலங்களில் செயல்பட்டது போல ஆதிக்க ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பகுதி, பட்டியல் சாதியினரில் ஓரளவுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொண்டு பாஜக ஆட்சியைப் பல இடங்களில் பிடிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை நேரடியாக ஆதிக்க ஜாதி அரசியல் சக்திகள் தொடர்பு கொண்டு தங்களின் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்டோர் கூட்டணி என்பதே தற்போது சாத்தியமற்றுப் போய் அவர்களுக்குள் பகைமை மட்டுமே நிலவுவது போன்ற சூழல் காணப்படுகிறது. எனவே, பிளவை சீர்செய்து ஒன்றுபட்டுப் பலதரப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை பல தளங்களில் பேசவேண்டிய முக்கியமான கட்டம் இது.

ரோஹித் வெமுலாவின் கடிதம் வித்தியாசமான, அழகான கடிதம். யாரையும் குறை சொல்ல ரோஹித் மறுக்கிறான். யார் முன்னும் தன்னைச் சிறியவனாக உணரவும், கடும் வன்மத்தை வெளிப்படுத்தவும் அவன் அக்கடிதத்தில் மறுக்கிறான். என்னை அழியா நம்பிக்கை கொண்டவன் என்று கூட நீங்கள் அழைக்கலாம், என்றாலும் இதனைச் சொல்கிறேன். ரோஹித் வெமுலாவின் மரணம் பலதரப்பட்ட மக்களை ஜாதி அநீதிக்கு எதிராக ஒன்று திரட்டியுள்ளது. இதுவரை இதனைப் பற்றி மூச்சு விடாதவர்களைப் பேச வைத்திருக்கிறது. பெரிய, ஆழமான, தொலைநோக்குக் கொண்ட சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அயராமல் செயல்படுவதே நாம் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் மகத்தான சமர்ப்பணம்.

இதயந்தொடும் இறுதிச்சுற்று!


நான் புலியோடு மல்யுத்தம் புரிந்தேன். திமிங்கலத்தோடு பெரும்போர் நிகழ்த்தினேன். மின்னலை கைவிலங்கிட்டேன். இடியை சிறைக்குள் தள்ளினேன். கடந்த வாரம், பாறையைக் கொன்றேன், மலையை மருத்துவமனைக்கு அனுப்பினேன். மருந்தையும் நோயுற வைக்கும் நிலையானவன் நான்!’-முகமது அலி.

இறுதிச்சுற்றுத் திரைப்படத்தை வாழ்க்கையில் முதல்முறையாகக் கடைசிக்காட்சியில் போய்ப் பார்த்தேன். குத்துச்சண்டையும், துரோகம், அன்பு, அரசியல் என்று கலவையான கமர்ஷியல் கதையின் நாயகன் மாதவன் என்றாலும், திரையை மதி என்கிற பெயரோடு வாழ்ந்திருக்கும் ரித்திகா சிங் தான் அசகாயமாகக் கைப்பற்றிக் கொள்கிறார். தன்னுடைய அக்கா லக்ஷ்மிக்கு ஆதரவாகத் தீர்ப்பு தராத நடுவரை போட்டுப் பொளப்பதில் துவங்கும் கதாபாத்திரத்தின் வசீகரம் கடைசிவரை நீடிப்பதே ஆச்சரியம்.
பெண் இயக்குனர் படம் என்பதால் பெண்ணியமும், உணர்ச்சிகரமான காட்சிகளும் தத்தளிக்க வைத்து விடுமோ என்று பயம் இருந்தால் முதல் பாதியில் அதை அடித்து நொறுக்குகிறார் சுதா கொங்குரா. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ எனப் பாரதி பாடிய வாழ்க்கையை மதியின் மூலம் ரசனையோடு செதுக்கி சாதித்திருக்கிறார்.

சென்னையின் மீனவப்பகுதியின் வறுமை, அதைத் தொடர்ந்து மாஸ்டர் தரும் ஐநூறு ரூபாயை கொண்டு எப்படிக் குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றுவது என்று ஆசையும், கனவும் பரபரக்க மதி பேசும் இடத்தில் இறுகிப்போன சோகம் மென்மையாகத் தாக்குகிறது. மாஸ்டரும், மதியும் உரையாடும் உச்சமான தருணங்களில் வசனம் குறைவாகவே மாதவனுக்குத் திட்டமிட்டுத் தரப்பட்டிருக்கிறது. விறைப்பான பார்வை, எல்லாரையும் எடுத்து எறிந்து பேசும் மொழி, ஆட்டத்துக்காக அர்ப்பணிப்பு என்று மாதவன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

காதல் வயப்பட்டு அதைக்கடத்தி ஏற்காத பொழுதும் கூட அழகியலோடு அசால்ட்டாகக் கடக்கும் கணத்தில் ரித்திகா கைதட்டல்களை வாரிக்கொள்கிறார். தொடர்ந்து ஒரு கட்டம் வரை தங்கையைக் குத்துச்சண்டை பக்கம் போகவிடக் கூடாது என்று பாடுபடும் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார் ஒரு கணத்தில் உடைந்து அழும் புள்ளியில் கனவுகளுடன் விளையாட்டுக்குள் வரும் அத்தனை நாயகிகளின் வலியும் அந்தக் கண்ணீரில் கரைந்து வழிகிறது.
கோல் படத்தில் தொடர்ந்து மகனை நிராகரிக்கும் தந்தை மதுக்கடையில் கண்கள் நிறைய மகனின் ஆட்டத்தைப் பார்க்கும் காட்சி, பாக் மில்கா பாக் படத்தில் ரேடியோவை ட்யூன் செய்யும் காட்சி ஆகிய இரண்டையும் ‘எனக்கா பிறந்தே நீ’ எனக் கடிந்து கொள்ளும் மகளின் கம்பீர ஆட்டத்தைத் திருட்டுக் கேபிளில் காணத் துடிக்கும் தந்தையின் துடிப்பு நினைவுபடுத்துகிறது.

காதல், குத்துச்சண்டை என்கிற இரு புள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நோக்கி முள் நகர்ந்தாலும் இது அனைவருக்குமான படமாக இருக்காது என்பதை உணர்ந்த இயக்குனர் இரு தரப்பையும் திருப்தி செய்யும் வண்ணம் இறுதிக்காட்சியை வைத்திருக்கிறார். குத்துச்சண்டையின் நுணுக்கங்களை விலாவாரியாகச் சொல்லி அலுக்க வைக்காமல் காட்சிகளின் மூலம் வெம்மையைக் கடத்தியிருப்பது நேர்த்தி.
இந்திய விளையாட்டுத் துறையில் புரையோடி போய்விட்ட அரசியலையும், கிரிக்கெட்டோடு மட்டும் குடித்தனம் நடத்தும் இந்திய கொண்டாட்ட மனத்தையும் இப்படம் உலுக்குகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை பெரும்பாலும் அசத்தினாலும் இறுதி கட்டங்களில் அடர்த்தியற்றுக் கடுப்பேற்றுகிறது.

இந்தத் திரைப்படம் எப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்பதை KHADOOS எனும் இந்தப் படத்தின் தலைப்பை பற்றித் திராவிட் சொன்ன வரிகள் சிறப்பாகச் சொல்லக்கூடும்: KHADOOS என்கிற சொல்லை எப்படி மொழிபெயர்ப்பது? அழுத்தமானவர்கள்? விடாக்கண்டர்கள்? தலைவணங்காதவர்கள்? சலிக்காதவர்கள்? அல்லது இவற்றுக்கு இடைப்பட்ட ஒரு சொல்? இல்லை இவை அனைத்தையும் இணைத்த ஒரு சொல்?’ அந்த ஒரு சொல் ஒரு திரைப்படமாய் மிரட்டுகிறது. திரையில் போய்ப் பாருங்கள்!

— with R Madhavan andRitika Singh.